Wednesday, August 11

11:24 AM
46

எனது இந்த கண்டனம் பதிவுலகில் மத உணர்வுகளை  கண்டபடி கூறுபோட்டு விளாசி தள்ளும் சிலருக்காக.... 

மதம் என்ற வார்த்தை வேண்டாம்...சமயம் என்றே சொல்லுங்க என்றே சிலர் கூறுவர்.
எனக்கு மதம் என்பதே சரியாக தோன்றுகிறது. கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கு நாத்திக மதமும், இருக்கிறது என்று வாதம் புரிபவர்களுக்கு ஆன்மீக மதமும் பிடித்து இருக்கிறது என்பதால் மதம் என்று சொல்வது ரொம்ப சரியே.

மதம் பிடித்த யானை எது சரி எது தவறு என்று உணராமல் தன் பாகனையே மிதித்து கொல்லும். அப்படியேதான் இந்த இரண்டு (நாத்தீகம், ஆன்மிகம் ) மதம்  பிடித்தவர்களும் இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

உங்களின் கருத்துக்களை சரி என்று புரிய வைப்பதற்காக ஏன் மற்றவர்களின் நம்பிக்கையை குறை சொல்ல வேண்டும்....?? கடவுளை வைத்து மனிதனை பிரிக்காதீர்கள். அவரவர் நம்பிக்கை அவரவருக்கு.

அறியாமை

கடவுளை மறுத்தவர் என்ற உதாரணத்துக்கு எல்லோரும் கைகாட்டுவது தந்தை பெரியார் அவர்களை தான்.  அவரும் கடவுளின் பெயரால்  நடக்கும் மூடநம்பிக்கையை தான் அதிகம் சாடினார்... கடவுளையும் மூட நம்பிக்கையையும் ஒன்றாக போட்டு குழப்பி கொள்ளாதீர்கள்.

ஆதி காலத்தில் சுட்டெரிக்கும் சூரியனை பார்த்து மிரண்டவர்கள் அதை சக்தி , கடவுள் என்று வழிபட்டனர்.  நெருப்பை, மரத்தை, கல்லை என்று விருப்பம்போல் வணங்கினர். ஆனால் இன்றும் சில வழக்கங்கள் தொடர்ந்து கொண்டு இருப்பது தான் வேதனை.  (ரோட்டின் ஓரத்தில் இருக்கும் மைல்கல்லையும் வணங்கும் அளவில் தான் அறியாமை இருக்கிறது, பாதி புதைந்த அளவில் இருக்கும் ஒரு ஆட்டு கல்லில் கூட மஞ்சளையும் குங்குமத்தையும் வைத்து ஒரு மஞ்சள்  துணியை சுற்றி வைத்து இருப்பதையும் பார்த்து இருக்கிறேன்.)

எங்கள் ஊருக்கு பக்கத்தில் ஒதுக்கு புறமாய் இருக்கும் ஒரு கல் குவாரியில் இருக்கும் ஒரு வேப்பமரத்தில் ஒரு நாள் வெள்ளை நிறத்தில் திரவம் சுரந்து இருக்கிறது.  இதை கேள்வி பட்ட கொஞ்ச நேரத்தில் அந்த காட்டு பகுதி முழுக்க மக்கள் கூட்டம், அந்த மரத்தை மஞ்சள் , குங்குமத்தால் அலங்கரித்து ஒரே வேண்டுதல்கள் தான். 

என்னதான்  வேண்டும் இந்த மக்களுக்கு ....?? எதை தேடி அங்கே ஓடினார்கள் ....?? அங்கே போனதால் எதை அடைந்தார்கள்....?? ஒன்றுமே புரியவில்லை....??!!

அவர்களின் பக்தி பரவசத்தின் முன் விவரம் தெரிந்த  ஒருத்தர் " இது கடவுள் இல்லைங்க, மரத்தினுள் நடக்கும் சில வேதிவினை மாற்றத்தால் இந்த வெண்மை திரவம் சுரக்கிறது , இரண்டு, மூணு நாளில் வருவது நின்றுவிடும் " என்று சொல்கிறார் என்று வைத்து கொள்வோம், அவ்வளவு தான் அவர் உடம்பை பதம் பார்த்து விடுவார்கள். (இப்போது பால் வருவது நின்றுவிட்டது...ஆனால் அதை சொல்லி பணம் பார்த்தவர், இன்றும் பணம் பார்த்து கொண்டுதான் இருக்கிறார். )
    
இது மூடத்தனம், கடவுளின் பெயரால்  நடக்கும் இந்த அறியாமையை களைய தான் நாம் முற்படவேண்டுமே தவிர, கடவுளை பழிப்பது சரி இல்லை.  மதத்தை இழிவு  படுத்துவதை ஊக்குவிக்க கூடாது.

அனைத்து மதத்திலும் நம்பிக்கை , மூட நம்பிக்கை என்பது சரி விகிதத்தில் தான் இருக்கிறது.....இதில் மாற்று கருத்து இல்லை....  எனக்கு தெரிந்த ஒன்றை இங்கே சொல்லி இருக்கிறேன்...அவ்வளவே.
  
கடவுளை மறுப்பவர்கள், ஏன் மறுக்கிறோம் என்பதற்கு வலுவான காரணத்தை கூறி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் அதை விடுத்து தேவை அற்ற வீண் விவாதங்களை பேசி மத நம்பிக்கை உள்ளவர்களின் மன உணர்வை குத்தி கிளறி நெருப்பு மூட்டி அதில் குளிர்  காயாதீர்கள்...

கடவுளை முழு மனதுடன் விசுவாசத்துடன் தேடுபவர்களே கடவுளை உணருகிறார்கள்.  உங்களால் தேடி அடைய முடியவில்லை  என்பதற்காக அப்படி  ஒன்று இல்லை என்று ஆகிவிடுமா...?? ஒன்று நீங்கள் சரியாக தேடவில்லை அல்லது தேட முயற்சி எடுக்க வில்லை என்று தானே அர்த்தம்.......பழம் கைக்கு எட்டவில்லை  என்பதற்காக இந்த பழம் புளிக்கும் என்று குறை சொல்லி நழுவும் நரியை போல் இருக்காதீர்கள்.....

கடவுள் என்ன செய்வார்...??

அன்பை போதித்த புத்தரை வணங்குகிற இலங்கையில் தான் மனித உயிர்கள் ஈவு இரக்கம் இன்றி பந்தாடபடுகின்றன....என்பதற்காக புத்தரை பழிக்க முடியுமா? பிற உயிர்களிடத்தும் சகோதர  பாசம் காட்டுங்கள் என்று வலியுறித்திய முகமது நபி அவர்களை பின்பற்றுகிற பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தான் தீவிரவாதம் தலைவிரித்து ஆடுகிறது என்பதற்காக அவரை பழிக்க முடியுமா ?? பைபிளை படிக்கிறவர்கள் தான் ஈரானில் பிற மதத்தவர்களை கொன்று குவித்தார்கள்....நம்மையும் அடிமைபடுத்தி உயிர்களை கொன்று வதைத்தார்கள். அவர்களை இப்படி செய்ய சொல்லி ஏசுநாதர் எங்கே சொன்னார்....??

இப்படி மனித உருவில்  மிருகங்கள் செய்யும் கொடுமைகளுக்கு கடவுளை குறை சொல்வது எவ்வளவு மடத்தனமோ அந்த அளவு மடத்தனம் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களை பழிப்பதும்...

'கடவுள் பெயரால்' அல்லது 'அந்த பெயரை வைத்துகொண்டு வியாபாரம் செய்பவர்களை',  மனிதனை 'கடவுள்' என்று சொல்லி கொண்டு அலைபவர்களை அலட்சிய படுத்துங்கள், மூட நம்பிக்கையில் உழலுபவர்களை அவர்களுக்கு புரியும் படி எடுத்து சொல்லுங்கள்.  மனிதத்தை போதியுங்கள் ...சக மனிதர்களை அன்பால் வசபடுத்த பாருங்கள். மூட நம்பிக்கையை சுட்டி காட்டுகிறேன் என்று மனிதர்களின் நம்பிக்கையை எள்ளி நகையாடாதீர்கள். 

எத்தனை பெரியார்   வந்தாலும் உங்களை திருத்த முடியாது என்று வீராவேசமா வசனம் பேசின விவேக், வாஸ்து படி தன் வீட்டை மாற்றியமைத்தார் என்பது உங்களுக்கு தெரியுமா? எல்லாம் அறியாமையால் வரும் பயம் தான் காரணம்...கடவுள் மேல் இருக்கும் பக்தி இல்லை. 

நம்மை மீறிய ஒரு சக்தி நம்மை வழி நடத்து கிறது என்று எண்ணி பாருங்கள்..நமக்குள் ஒரு தைரியம் வரும்.....!  அச்சம் விலகும்...! வாழும் நாட்கள் அர்த்தமானதாக தோணும்....! அந்த சக்தி உங்களை  தீய வழியில் போக சொல்லி தூண்டாது.....! பிறருக்கு உதவக்கூடிய எண்ணத்தை கொடுக்கும்....! அந்த சக்தி  அன்பைத்தான் சொல்லும்.... !  அந்த சக்திக்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள்....!! உங்கள் விருப்பம்.  

தவிரவும் கடவுளை தேடி எங்கேயும்  போக வேண்டாம்....உங்களுக்குள் தேடுங்கள்... கண்டடைவீர்கள்....பிற மனிதனிடம் நீங்கள் அன்பை பரிமாறும் போதே அந்த இடத்தில் கடவுள் நிற்பதை உணரமுடியும்...அதுதான் சிவன், இயேசு, அல்லா,புத்தர்......
கடவுள் இருக்கிறார் , இல்லை என்று வாதிடுவதை விட கண்முன் இருக்கும் மனிதனை அன்பால் அனைத்து  கொள்ளுங்கள்....உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்....அர்த்தமற்ற வீண் விவாதம் புரிந்து உங்களை நீங்களே தாழ்த்தி கொள்ளாதீர்கள்.....

கடைசியாக ஒன்று நம் அன்னை தெரேஸா அவர்கள் முதலில் இந்தியாவிற்கு கிறிஸ்துவத்தை எடுத்து  கூற  தான் வந்தார்கள்....ஆனால் உண்மையில் நடந்தது என்ன  ..?!!  அன்பை கையில் எடுத்தார்கள்....சக மனிதனை என்று சொல்வதை விட வாழ்வின் இறுதி நாட்களில் ஆதரவற்று தவித்து கொண்டு  இருந்தவர்களை தன் கரத்தால் அணைத்து அன்பால் உதவினார். நம்மிடையே வாழ்ந்த ஒரு தெய்வம்  அவர்கள்....! அந்த மக்களிடையே தான் தன் கடவுளை அவர் கண்டார்.....! அர்த்தத்துடன் வாழ்ந்து முடித்தார்....! 

ஆனால் நாம் வறட்டு விவாதம்  செய்து கொண்டு வீணாய் போய் கொண்டு இருக்கிறோம்.....உணர்வடையுங்கள் மக்களே...!!  
         
Tweet

46 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...