சமகால கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமகால கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், டிசம்பர் 13

என் பார்வையில் - சமகால கல்வி



நண்பர் தேவா   சமகால கல்வி என்பதை பற்றி ஒரு பதிவை எழுத சொல்லி இருந்தார். ஏற்கனவே சகோதரர்கள்  எஸ் கே , பாபுசெல்வா ஆகியோர் எழுதி இருக்கிறார்கள். நானும் எனக்கு தெரிந்த இன்றைய கல்வியின் நிலைபற்றி இங்கே சொல்ல முயற்சித்து  இருக்கிறேன்..படித்துவிட்டு சொல்லுங்கள். 

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது கல்வி, விவசாயம், மருத்துவம் என்ற இவை மூன்றையே சார்ந்து இருக்கிறது. இதில் முதல் இடத்தில் இருக்கும் கல்வி இன்று எந்த நிலையில் இருக்கிறது ? உண்மையில் இன்றைய கல்வியால் மாணவர்கள் பயன் பெறுகிறார்களா?? இல்லையா ?? என்ற கேள்விகளை முன் வைத்து பதிவை தொடருகிறேன்.

இன்றைய மாணவர்கள் 

இன்றைய இளைய சமுதாயத்தினர் மிகவும் வித்தியாசமான பார்வை உள்ளவர்களாக  இருக்கிறார்கள். அவர்கள் கிராமப்புறங்களில் உள்ளவர்களாக இருந்தாலும் சரி, நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் என்றாலும் சரி ஒரே கோணத்தில் தான் பார்க்கிறார்கள். எல்லோருமே நல்ல வேலையில் சேர வேண்டும், வாழ்க்கையில் மேலும் மேலும் முன்னேறவேண்டும் என்பதையுமே லட்சியமாக வைத்துள்ளனர். இப்படி பட்ட தாகத்துடன் இருப்பவர்களுக்கு நல்ல வழி காட்டுவதும், அதற்கான வாய்ப்பை உருவாக்கி தருவதும் நம் அரசாங்கத்தின் கடமை மட்டும் அல்ல, சமுதாயத்தின் பொறுப்பும் கூடத்தான்.

இப்போது நம்மிடையே இருக்கும் கல்வி கற்பிக்கும் முறை என்பது பல விதங்களில் இருக்கிறது. ஆங்கிலோ இந்தியன்  முறை, மெட்ரிகுலேஷன், ஸ்டேட் போர்டு, சென்ட்ரல் போர்டு (CBSC) என்று பலவித  பள்ளிகள் மூலமாக கல்வி கற்றுக்கொடுக்க படுகிறது. பாடங்கள் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. இதில் உள்ள சிரமங்கள் ஏற்ற தாழ்வுகளை மனதில் வைத்து தான் நமது அரசாங்கம் சமச்சீர் கல்வி ஒன்றை சில வகுப்புகள் வரை தற்போது கொண்டு வந்துள்ளது....அதிலும் அடுத்த வருடத்தில் இருந்து தமிழகம் முழுதும் உள்ள பள்ளிகளுக்கும் ஒரே விதமான பாட திட்டங்கள் கொண்ட ஒரு சமச்சீர் கல்வியை கொண்டு வர போவதாக ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

பாடத்திட்டங்கள் ஒன்றாக இருக்கும்...தேர்வுகளும் அனைவருக்கும் ஒன்றாக  நடக்கும். நல்ல ஒரு முடிவு தான். மேலும் பாடங்களை பயிற்றுவிக்கும் முறைகளையும் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.

பயிற்றுவிக்கும் முறை 

கடந்த வருடத்தில் இருந்து ஒரு சிறந்த முறை ACTIVE LEARNING METHOD (ALM) ஒன்று நமது அரசாங்க பள்ளிகளில் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது என்பது பலருக்கும்  தெரியுமா என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்த வரையில் எளிய முறையில் சொல்கிறேன்,

ஒரு சப்ஜெக்டில் ஒரு பாடம் ஆசிரியரால் எடுக்க படும் முன்னரே மாணவர்கள் பல சிறு குழுக்களாக பிரிக்க வைக்க படுகிறார்கள்....அதில் படிப்பில் கொஞ்சம் பின் தங்கிய மாணவன், நன்கு படிக்கும் மாணவன் என்று கலந்து குழுக்களை பிரிக்கிறார்கள். ஒவ்வொரு குழுவும் தங்களுக்குள் அந்த புதிய பாடத்தை படிக்க வேண்டும், யாருக்கு எந்த இடத்தில் சந்தேகம் வருகிறதோ அந்த இடத்தில் அடிகோடிட்டு கொண்டே வரவேண்டும். பின் எல்லோரும் அந்த பாடத்தை முடித்ததும் ஆசிரியர் பாடம் நடத்தி ஒவ்வொருத்தரின் சந்தேகங்களை தீர்த்து வைக்கிறார். (கார்டு ஒன்று  கொடுக்கபடுகிறது அதில் உள்ள பாடங்களை வரிசையாக முடித்து கொண்டே வர வேண்டும், ஒன்றில் தெளிவில்லாமல் அடுத்ததிற்கு போக இயலாது என்று நினைக்கிறேன்)

இதன் மூலம் ஒரு சின்ன வார்த்தைக்கு அர்த்தம் தெரியலைனாலும், அதனுடன் சேர்ந்த பிற அர்த்தங்களையும் விளக்க வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர் இருக்கிறார். முன்பு  மொத்தமாக எல்லோரையும் அமரவைத்து புத்தகத்தை வாசித்து, அர்த்தங்களை மட்டும் சொல்லி கொடுத்துவிட்டு, சிலரின் சந்தேகங்களை விளக்குவதுடன் முடிந்துவிடும். சிலர் மட்டும் தான் சந்தேகம் கேட்பார்கள்...எழுந்து சந்தேகம் கேட்கவும் தயக்கம் இருக்கும்...ஆனால் இந்த புதிய முறையில் அனைவரின் சந்தேகமும்  தெளிவிக்க பட வாய்ப்பு இருக்கிறது. ஒரு பாடம் முடிந்த பின் அதில் சில கேள்விகள் எழுப்பப்பட்டு அதற்கும் விளக்கம் கொடுக்க படுகிறது. இதில் ஒரு பாடம் நன்கு புரிந்த பின்னே அடுத்த பாடத்திற்கு செல்ல கூடிய வாய்ப்பு வருகிறது.

தவிரவும் ஆசிரியர்களின் பணி சுமை இதனால் கூடுவது போல் இருந்தாலும் மாணவர்களின் படிப்பு நன்றாக இருக்கிறது என்பது உண்மை. (அப்படி படித்த சில மாணவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்)

பெற்றோரின் ஆங்கில பள்ளி மோகம்

நம்ம ஊர்ல என்னதான் அரசாங்க பள்ளியில் நன்றாக சொல்லி கொடுத்தாலும் ஆங்கில பள்ளியின் மேல் உள்ள மோகம் குறைய போவது இல்லை. இந்த இடத்தில் நாம் ஒன்றை புரிந்து கொள்வது கிடையாது . அரசாங்க பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள் பி எட், ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களாகத்தான் இருப்பார்கள்....ஆனால் சில ஆங்கில பள்ளிகளில் ஒரு டிகிரி முடிச்சிருந்தால் கூட போதும் பணிக்கு அமர்த்தி விடுகிறார்கள். (அவர்கள் தான் குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்பார்கள்) 

இங்கே ஒரு பிரபலமான பள்ளியில் தன் குழந்தையை பள்ளிக்கு அழைத்து கொண்டு வரும் தாயார் ஒருவர்  டிகிரி முடித்திருக்கிறார்கள் என்பதை மட்டும் வைத்து வேலைக்கு சேர்த்து கொண்டார்கள், முறையான பயிற்சி இல்லாமல் எப்படி இவர்களால் நன்றாக சொல்லி கொடுக்க முடியும்.....?!! ஆனால் இது தெரிந்துமே நாம் அந்த மாதிரி பள்ளியில் சேர்ப்பதற்கு தான் முயலுகிறோம் (நான் உள்பட) காரணம் பிரபலமான பள்ளி என்ற ஒரு பெருமையும், நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையும் தான்....! இந்த மாதிரி ஆசிரியர்களின் சம்பளமும் குறைவு  தான் ஆனால் அரசாங்க பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் இவர்களை விட மூன்று மடங்கு அதிகம். (அதிக சம்பளம் வாங்கிரவங்களை விட குறைந்த சம்பளம் வாங்கிற ஆசிரியர்கள் கடினமாக அதிக உழைப்பை கொடுத்து  சொல்லி கொடுப்பார்கள் என்பது என்ன நம்பிக்கையோ தெரியவில்லை....! என்ன லாஜிக்....? )

மாண்டிசொரி கல்வி முறை  

முன்பு இத்தாலியில் கொலை கொள்ளை போன்ற பாதகங்கள் அதிகம் நடைபெற்று கொண்டிருந்த ஒரு கால கட்டத்தில் ஆசிரியர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து ஒரு மாநாட்டை நடத்தினர். பிள்ளைகளுக்கு கல்வியில் சில மாறுதல்களை கொண்டு வரலாமா ? அதன் மூலம் அவர்களின் மனோபாவம் மாறி இந்த மாதிரியான  செயல்கள் இனி நடைபெறுவதை தடுக்க முடியுமா என்றும் பலவாறாக வாதிட்டனர். முதல் இரண்டு நாளாக விவாதங்கள் நடைபெற்றன, முடிவுகள் ஒன்றும் எட்டப்படவில்லை. மூன்றாம் நாள் ஒரு பெண்மணி எழுந்து தனது கருத்துகளை கூறலானார்.........  

" நீங்கள் போதிக்கும் பாடங்களை மாற்றுவது ஒரு தீர்வு ஆகாது....அதற்கு பதில் மாணவர்களின் அடிப்படை குண நலன்களை அறிய முயல வேண்டும் "

" எல்லா குழந்தைகளும் ஒரே குண நலன்களை பெற்று இருப்பது இல்லை. உதாரணமாக ஜீரண சக்தி நன்றாக இருக்கும் ஒரு குழந்தைக்கு வெறும் கஞ்சியை மட்டுமே உணவாக கொடுத்து வந்தால் பலமற்றவனாக மாறி விடுவான். அப்புறம் ஜீரண சக்தி சரியாக இல்லாதவனுக்கு ஆரம்பத்திலேயே கடின உணவை கொடுத்தால் விபரீதமாகிவிடும். பலவீனமானவனுக்கு மெது மெதுவாக முதலில் கஞ்சி போன்ற லேசான ஆகாரம் கொடுத்து ஜீரண சக்தியை உண்டாக்கி, பிறகே கடினமான புஷ்டியான உணவு கொடுக்க படவேண்டும் "

" இதே போன்று தான் கல்வியையும் புகட்ட வேண்டும்....குழந்தைகளின் இயற்கையை அறியாமல் போதிப்பது தவறு...! "

இவரது இந்த கருத்து அங்குள்ளவர்களால் ஏற்று கொள்ளப்பட்டது. உண்மையில் இவர் ஆசிரியர் இல்லை, இவர் ஒரு மருத்துவர்...! இவரது இந்த ஆலோசனை ஏற்று கொள்ள பட்டு, இவரது தலைமையின் கீழ் ஒரு பள்ளி கூடம் ஏற்படுத்தி தீய குணங்களும், கெட்ட பழக்க வழக்கங்களும் கொண்ட அடங்காத பிள்ளைகளை எல்லாம் அதில் சேர்த்தனர். அந்த பெண்மணி அந்த பிள்ளைகளை வைத்து நடத்தின பல ஆராய்ச்சிகளின் முடிவில் அநேக விசயங்களை அறிந்து புதிதாக கல்வி கற்பிக்கும் முறை   ஒன்றை கையாள தொடங்கினார். அதன்பின் அந்த பிள்ளைகளின் துர் குணங்கள் மறைய தொடங்கின...! 

அந்த பெண்மணியி பெயர் தான் மாண்டிசொரி, அவர் தோற்றுவித்த கல்வி முறையின் பெயர் தான் மாண்டசொரி கல்விமுறை.  

இந்த முறையில் சில சிறப்புகள்

* மாணவ மாணவியர்கள் தன் ஆசிரியைகளை ஆன்ட்டி என்று தான் அழைக்க வேண்டும். இந்த உறவு முறையினால் இவர்களுக்கும் இடையில் ஒரு புரிதல் வர வாய்ப்பு இருக்கிறது. பயம் என்பது குறைந்து மரியாதை, நேசம்  வளருகிறது.

*  ஒரு பாடம் எடுத்து முடித்ததும், மாணவர்கள் பாடத்தை பற்றிய ஒரு கட்டுரை தயார் செய்து செமினார் மாதிரி பிரசென்ட் பண்ணவேண்டும். இதே முறையில் சிறு குழந்தைகளுக்கு ஒரு பண்டிகை, மிருகம், பறவை இப்படி எதை பற்றியாவது ஒரு நாலு  வரிகளாவது சொல்ல வேண்டும். இது ஆரம்பத்தில் இருந்து சொல்லி கொடுக்க படுவதால் மேடை கூச்சம் என்பது சுத்தமாக போய் விடும். மேலும் சம்பந்த பட்ட பாடத்தை பற்றிய தெளிவும் அதிகரிக்கும் என்பது நிச்சயம்.

* ஒவ்வொருத்தருக்கும் அவர்களது செயல் திறனுக்கு ஏற்றபடி சொல்லிகொடுக்க படுகிறது.

* உணவு உண்பதில் இருந்து சுத்தமாக தங்களை பேணி கொள்வது வரை ஒரு தாய் சொல்லி கொடுப்பது போல் சொல்லி கொடுக்கிறார்கள். நல்ல பழக்கவழக்கங்கள், ஒழுக்கம், முக்கியமாக நான் கவனித்தது சரியான தொடுதல், தவறான தொடுதல் என்பதை கூட குழந்தைகள் புரிந்து கொள்ளும் விதத்தில் சொல்லிகொடுக்கிறார்கள்.

முன்னேற வழிகாட்டுங்கள்

பிற மொழிகள் கற்றுகொடுக்க படுவதிற்கு ஊக்கம் கொடுக்க படவேண்டும். நம் நாட்டில் குறிப்பாக தமிழ் நாட்டில் ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்கி உள்ளன. இதில்  வேலை வாய்ப்பும் அதிகம்.  ஒரு மாணவன் ஜப்பான் மொழியோ கொரிய மொழியோ படித்துவிட்டு , என்ஜினியரிங் படிப்போ அல்லது பட்டப்படிப்போ படித்தால் போதும் இந்த நிறுவனங்களில் உடனே வேலையுடன் அதிக சம்பளமும் நிச்சயம். ஜப்பான் மொழி படித்த மாணவன் ஜப்பான் சென்றாலும் அங்கே ரோபோடிக் என்ஜினியரிங் படித்தால் மிக உன்னத நிலைக்கு போய்விடலாம்.  

ஆனால் இந்த மாதிரி வேற்று மொழிகள் மத்திய கல்வி திட்டத்தில் தான் இருக்கிறது...!? பணக்கார மாணவர்கள் மட்டுமே நிறைய பணம் கொடுத்து தனியார் பள்ளிகளில்(CBSC)  சேர்ந்து படித்து விடுகிறார்கள்.  இதை நமது மாநில கல்வி திட்டத்தில் கொண்டு வந்தால்,  திறமை, ஆர்வம் இருந்தும்  அதிக பணம் கொடுத்து படிக்க வசதி இல்லாத மாணவர்களும் பயன் பெறுவார்கள். நம்ம நாட்டில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் நம் மக்கள் தான் அதிகம் இருப்பார்கள்...! இங்கே படித்துவிட்டு அதிக சம்பளத்திற்காக வெளிநாட்டை தேடி போக வேண்டிய நிலையும் நம் மக்களுக்கு ஏற்படாது.    

குறைகள் களைய பட வேண்டும்

குறிப்பாக இன்றைய நமது அரசாங்க பள்ளிகள் பற்றி பார்க்கும் போது நல்ல முன்னேற்றம் தெரிகிற்து...கல்வியை எளிதாக்கவும், அதில் ஆர்வம் வருவதற்கும், இதனால் எதிர்காலத்தில் மாணவர்களுக்கு பயன்  கிடைக்கணும் என்ற நோக்கத்தில் இப்போது மேற்கொண்டு வருகிற முயற்சிகள் பாராட்ட பட வேண்டியவைதான்.  ஆனால் வேறு சில களையப்பட வேண்டிய குறைகள் மலிந்து கிடக்கின்றன அதையும் அரசாங்கம் கவனத்தில் கொண்டு செயல் பட்டால் எதிர்காலத்தில் அரசாங்க பள்ளியில் பிள்ளைகளை சேர்க்க இடம் கிடைக்காமல் கூட போய்விடலாம்....!!  

பின் குறிப்பு.

கல்வியை கற்க இன்றைய மாணவர்கள் தயார்தான், ஆனால் அதை சரியான விதத்தில் அவர்களிடம் கொண்டு போய் சேர்க்கவேண்டும். இங்கே குறிப்பிட பட்டுள்ள சில தகவல்கள் என் பார்வையில் சரி என்று பட்டவைதான். தவறுகள் குறைகள் ஏதும் இருப்பின் சொல்லுங்கள் திருத்தி கொள்கிறேன். (ரொம்ப முயற்சி பண்ணியும் பதிவு கொஞ்சம் பெரிதாகி  விட்டது...பொறுத்துகொள்ளுங்கள்)