திங்கள், செப்டம்பர் 12

11:10 AM
30

முன்குறிப்பு :
எனது கடந்த தாம்பத்தியம் தொடரில் சகோ.திரு.அப்பாதுரை அவர்கள் ஒரு பின்னூட்டம் இட்டு இருந்தார்...

//தலையணை மந்திரம் என்ற ஜாடிக்குள் இருக்கும் கவர்ச்சி - நல்லுணர்வுகளின் தீவிர வெளிப்பாடு தானே? தலையணை மந்திரத்துக்கு வாழ்நாள் முழுதும் நிலைக்கும் சக்தி இருந்தால் திருமண உறவுகள் செழிக்குமோ?//

எதையும் நேர்மறையாகப் பார்க்கும் அவரது பண்பிற்கு வணக்கங்கள்.


தலையணை மந்திரம் என்பதின் பின்னால் இருக்கும் கவர்ச்சி திருமண உறவை கெடாமல் வைத்திருக்கும் என்பதில் எனக்கு முழு உடன்பாடு இல்லை. ஒரு மனைவி, கணவனை வசீகரித்து மகிழ கூடிய இடம் தனியறை. இந்த இடத்தில் ஒரு கணவன் தன் மனைவியின் அன்பு பிடிக்குள் அல்லது கட்டுபாட்டுக்குள் போய்விடுவான் என்பது இயல்பு. ஆனால் இந்நிலை அந்நேரம் மட்டுமா அல்லது விடிந்த பின்னருமா என்பது அவரவர் மனநிலைகளை பொறுத்தது. 

மனைவி கணவனை கவர்ச்சியின் மூலம் மட்டுமே தன்னை சுற்றி வரும்படி செய்வது என்பது மிக நல்லதா இல்லையா என்பதே இந்த பதிவில் என் முன் நிற்கும் கேள்வி ? இந்த ஈர்ப்பு சரியென்றால் அவர்களின் வாழ்க்கையில் எடுக்கப்படும் எந்த தீர்மானமும் ஒருதலை பட்சமாக போய்விடக்கூடிய ஆபத்து இருக்கிறது...அப்படி இல்ல, ஒருவரை ஒருவர் கலந்துதான் முடிவு பண்றோம்னு என்று சொன்னாலும் இறுதி முடிவு சந்தேகமே இல்லாமல் மனைவியுடையதாகவே இருக்கும். ஒருவேளை மனைவியின் முடிவு தவறான தீர்வாக போய்விட்டால்...!?

முந்தைய தலைமுறையில் 

முழுமையான தாம்பத்தியதிற்கு தம்பதிகளின் அன்யோனியம் மிக முக்கியம், தலையணை மந்திரத்துக்கு வாழ்நாள் முழுதும் நீடிக்கும் சக்தி இருந்திருக்கலாம், ஒரு காலத்தில்...!

அன்றைய பெரியோர்கள் திருமணம் முடிந்த பெண்களுக்கு சிலவற்றை அறிவுறுத்தினார்கள்...ஆண்கள் கவனம் வேறு பக்கம் சிதறி விட கூடாது என்பதற்காக சில வார்த்தைகளை சொல்லி வைத்தார்கள். நன்கு கவனிக்கவும்...! வார்த்தைகள் தான் 'தலையணை மந்திரங்கள்' இல்லை. இவை கால போக்கில் ஆணை வசியபடுத்தும் ஒரு கவர்ச்சி ஆயுதமாக வலுபெற்று விட்டன...!!

'அக்கம்பக்கம் திரும்ப விட்டுடாத, உன்னையே சுத்தி வர்ற மாதிரி பக்குவமா நடந்துக்க' என்று சொன்னதின் பின்னால் சில அந்தரங்க சூட்சமங்கள் இருக்கிறது. "ஆண்களின் உடம்பில் வயதாகி ஆயுள் முடியும் வரை கூட விந்து அணுக்கள் சுரக்கும் , எனவே அதன் உந்துதலால் அவர்கள் பெண்ணுடன் இறுதிவரை உறவு கொள்ளவே விரும்புவார்கள். இதற்கு மனைவி நீ சரியாய் ஒத்துழைக்கலைனா வீட்டுக்காரன் அடுத்த பக்கம் திரும்பிவிடுவான்...அதனால உன் அழகால, பேச்சால, வருடுதலால், தொடுதலால், இன்னும் பிறவற்றால் கணவனை பார்த்துக்கோ ,கைக்குள்ள போட்டு வச்சுக்க" என்பது தான் அவர்கள் சொன்னதின் உட்கருத்து.

ஆனால் இன்று அதற்கு வாய்ப்புகள் மிக குறைவு. இன்றைய குடும்பங்கள் இருக்கின்ற சூழல்,பொருளாதாரத்தை நோக்கிய ஓட்டம், சுயநலம் மிகுந்த மனிதர்கள், கவனத்தை திசை திருப்பகூடிய ஊடகங்களின் ஆக்கிரமிப்பு, தொலை தொடர்பு வசதிகள், பெருகிவிட்ட ஆடம்பர மோகம், இவற்றின்  பிடியில் சிக்கிகொண்ட தம்பதிகள், தங்களுக்கு என்று செலவிடும் நேரம் மிக மிக குறைந்துவிட்டது.அவர்களின் அந்தரங்கமும் அள்ளி தெளித்த கோலம் போன்றே ஆகிவிட்டது !

அதனால் இன்றைய காலகட்டத்திற்கு அந்த அறிவுரை, மந்திரம் எல்லாம் உதவாது. இத்தகைய மந்திரத்துக்கு (கவர்ச்சிக்கு) மயங்கும் ஆண்கள் இருந்துவிட்டால் நாட்டில் கள்ள உறவுகள், விவாகரத்துக்கள் அதிகரித்து இருக்காதே ?!! இது போன்றவை வீட்டிற்கு வெளியே  மிக தாராளமாக கிடைக்ககூடிய காலம் இது. எனவே கவர்ச்சி மட்டும் போதாது என்பதே எனது உறுதியான முடிவு.

* தலையணை(?) தேவையின்றி போனில் கூட மந்திரம் போட்டு மாங்காய் பறித்துவிடும் காலமிது.

'அகத்தில் அன்பில்லாத பெண்டிரை மனதாலும் தீண்டேன்' என ஆண்கள் உணரும்வரை அவர்களுக்கு ஏற்றபடி இன்றைய பெண்கள் மாறித்தான் ஆகவேண்டும்...!!இப்போதைய தலையணை மந்திரம்,

* கணவனின் குடும்பத்தினரை கணவனை விட்டு தூர தள்ளி வைக்க, முக்கியமாக கணவனின் பெற்றோர்களை...

* தன் தனிப்பட்ட விருப்பத்தை, தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள

* தன் தவறுகளை கண்டுகொள்ளாமல் இருக்க

* தன் சுயத்தை திருப்திபடுத்த

* பெருமைக்காக

இவை போன்றவைகளுக்காக பயன்படுகிறது. குடும்பத்தின் நல்வாழ்வுக்காக என்பது இப்போது மிக குறைவு !

ஒரு உதாரணம் 

சென்னையில் இருக்கும் மகளுக்கு இங்கிருக்கும் தாய் ஒருவர் செல்பேசினார் , அதுவும் பொது இடத்தில் பஸ்ஸில் !!

என் பதிவுக்கு பாய்ண்ட்ஸ் தேவை படுவதால் இப்போதெல்லாம் பொது  இடத்தில் என் காதுகள் கூர்மையாகி விடுகிறது .(அதாங்க ஒட்டு கேட்கிறது)

"என்னடி எங்க அது (மருமகனைதான் !) எங்க ஊர் சுத்த போயாச்சா  ? இன்னைக்கு லீவ் தானே கூட மாட ஒத்தாசைக்கு வச்சுகலையா நீ தனியா கிடந்து கஷ்டபடுற(?)"

''சரி சரி எப்போ கடைக்கு போன,அவருக்கு பிடிச்ச புடவையா ? ஏண்டி இப்படி இருக்கிற?.....அது உனக்கு பிடிச்சாலுமே பிடிக்கல சொல்லு.....அப்பத்தான் எல்லாம் உன் விருப்பபடி என்று ஆகும்.....ஓ ! நாத்தனார் பையன் வந்திருக்கானா .....அதுதான் கேட்கிறதுக்கு எல்லாம் ம் கொட்ற? (மகளை பேச விட்டாதான?) அவன் எதுக்கு இங்கே வரான், இன்டர்வியூவா ஏதோ ஒரு சாக்கு கிளம்பி வந்துறாங்க.....உன் வீட்ல என்ன கொட்டியா கிடக்கு? பரவாயில்லைன்னு சமாளிக்காத.....எல்லாம் உன் நல்லதுக்கு(?) தான் சொல்றேன்"

"இன்னைக்கு இன்டர்வியூ, நாளைக்கு வேலைகிடைச்சு, 'வெளில தங்கினா செலவு ஆகும் இங்கேயே இருக்கட்டும்' னு இவர் சொல்ல போறார்.....அதுக்கு முன்னாடி உஷாரா இருந்துக்கோ.....இவங்க எல்லோரையும் பத்து அடி தள்ளி வை, சொல்றது கேட்குதா முந்தானையில முடிஞ்சி வச்சுக்கோ...இல்லை உன்னை தெருவுக்கு கொண்டு வந்துவிடுவான்.....சாயந்தரம் அந்தாளு வந்ததும், நல்லா டிரஸ் பண்ணிட்டு சினிமா ஏதும் போய்ட்டுவா, அனுசரணையா(!) நடந்துக்க.....தகுந்த நேரம் பார்த்து நாத்தனார் மகனை பத்தி சொல்லு !"

இது போல பல உதாரணங்கள் இருக்கிறது. போதாததுக்கு டிவி சீரியல்கள் வேற இப்படி நிறைய சொல்லி கொடுக்கிறது...!!
  
இது போன்ற எந்த தவறான ஆலோசனைக்கும் தயவுசெய்து செவிசாய்த்து விடாதீர்கள். உங்கள் குடும்ப சந்தோசம் உங்கள் கையில் மட்டும் !! தவறான வழிமுறைகள் எதையும் கைகொண்டு குடும்பத்தை நாடகமேடையாக மாற்றிவிடாதீர்கள். நித்தம் ஒரு வேஷம், நித்தம் ஒரு நாடகம் என்பதாக இருக்குமே தவிர குடும்பமாக இருக்காது...!

(உடல் கவர்ச்சி தாண்டிய மந்திரங்கள் பற்றி போனபதிவில் சொல்லிவிட்டேன் , நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்)மெல்ல
என்
தலைகோதி
கை
விரல்களை
சொடுக்கெடுக்கும்
உன் தளர்ந்த விரல்கள்
மட்டும் போதுமடி
என் வயோதிகம்
பிழைத்துக்கொள்ளும்!!

அழகான குடும்ப வாழ்க்கைக்கு ஒருவரின் மேல் ஒருவருக்கு ஒரு ஈர்ப்பு இருந்தாக வேண்டியது அவசியம். முக்கியமாக கணவனும், மனைவியை தன் அன்புபிடிக்குள் வைத்தாக வேண்டும். கணவனின் பிடிக்குள் மனைவி இல்லாவிட்டால் எடுத்ததுக்கு எல்லாம் எதிர்வாதம் கிளம்பும். அதை தவிர்க்க மனைவியின் பிரியத்தை சம்பாதியுங்கள். மனைவியை அதிகமாக நேசிக்கிறேன் என்று எண்ணி கொண்டிருந்தால் மட்டும் போதாது, அதை சொல்லில்,செயலில் வெளிப்படுத்துங்கள் !

தாம்பத்தியம் ஒரு வீணை , அதை மீட்டும் விதமாக மீட்டுங்கள் ! சுகமான இசை வெள்ளத்தில் மூழ்கி, வாழ்வை ரசித்து,உணர்ந்து,மகிழ்ந்து வாழுங்கள் ! வாழ்த்துக்கள் !!

*******************************************************************

தம்பதிகளுக்குள் உடல் , மனம் காரணமாக ஏதோ சிறு விருப்பமின்மை என்றாலும் விரைவில் சலித்து வெறுப்பின் எல்லைக்கு போய்விடுகிறார்கள். ஒருவேளை இந்த விருப்பமின்மைகள் மூன்று, நான்கு முறை என தொடர்ந்தால் மனவிரிசல் அதிகரித்து வேறு வடிகால்களை(?) தேடிக் கொள்கிறார்கள்.  

அடுத்த பதிவில் 'இல்லறத்திற்கு உடலுறவு ஏன் அவசியம் ?'  தொடர்ந்து பேசுவோம்...காத்திருங்கள் !!

*******************************************************************


நினைவிற்காக !

ஏற்கனவே விளக்கமாக சொல்லி இருக்கிறேன்...மீண்டும் ஞாபகபடுத்துகிறேன் . எனது இந்த தொடர் கணவன், மனைவி பற்றியது...ஆண் பெண் என்ற பிரிவினை/பேதம் பற்றி இங்கே பேசபடவில்லை.பெண்ணை குறை சொல்லி எழுதப்பட்டு இருக்கிறது என்று யாரும் பொங்கிடாதிங்க !? எதை பற்றி  சொல்கிறேன் என்றே புரியாமல் விமர்சிப்பவர்களை என்னவென்று சொல்வது...!? சில உண்மைகளை சொல்லும் போது எனக்கும் கசக்கவே செய்கிறது.

குற்றாலமலையில் இருக்கிற ஆணாதிக்கஞானசித்தர் வேற 'எது என்றாலும் வெளிபடையா சொல்லிடு, இல்லைனா பாவம் சேர்ந்துடும்'னு பயமுறுத்துகிறார்...!!! :))


                                                                           *****************

Tweet

30 கருத்துகள்:

 1. வழக்கம் போலவே தெளிவான அணுகுமுறையுடன் கூடிய
  உங்கள் அழகான பதிவு

  பதிலளிநீக்கு
 2. தங்களின் தளத்தை என்னால் வாசிக்க முடியவில்லை சகோ.வெறும் புள்ளி புள்ளியா தெரிகிறது .

  பதிலளிநீக்கு
 3. இது போன்ற எந்த தவறான ஆலோசனைக்கும் தயவுசெய்து செவிசாய்த்து விடாதீர்கள். உங்கள் குடும்ப சந்தோசம் உங்கள் கையில் மட்டும் !! தவறான வழிமுறைகள் எதையும் கைகொண்டு குடும்பத்தை நாடகமேடையாக மாற்றிவிடாதீர்கள். நித்தம் ஒரு வேஷம், நித்தம் ஒரு நாடகம் என்பதாக இருக்குமே தவிர குடும்பமாக இருக்காது...!//


  சூப்பரா இருக்கு அறிவுரை, இப்படி இருந்தாலே குடும்பம் சந்தோசமா இருக்கும் இருக்கலாம்...

  பதிலளிநீக்கு
 4. @@ நண்டு @நொரண்டு -ஈரோடு said...

  //தங்களின் தளத்தை என்னால் வாசிக்க முடியவில்லை சகோ.வெறும் புள்ளி புள்ளியா தெரிகிறது .//

  ஓ அப்படியா ? நீங்க வேற பிரௌசர் யூஸ் பண்ணி பாருங்களேன்.

  பதிலளிநீக்கு
 5. என் வருங்காலத்திற்கு உதவும் விஷயகளை அறிந்துகொண்டேன். நன்றி.

  //மெல்ல என் தலைகோதி
  கை விரல்களை சொடுக்கெடுக்கும்
  உன் தளர்ந்த விரல்கள் மட்டும் போதுமடி
  என் வயோதிகம் பிழைத்துக்கொள்ளும்!!//

  அசத்தல்.

  பதிலளிநீக்கு
 6. மிகுந்தத் துணிவுடன், அதே சமயம் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து, தாம்பத்திய உறவை சிக்கலின்றி கொண்டு போக உதவும் பயனுள்ள கட்டுரை தான். ஒரு சிலருக்காவது பயன் படக்கூடும். பதிவுக்கு என் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 7. கணவன் மனைவி உறவு

  வேசமிட்டு வாழ இது ஒன்னும் நாடக மேடை இல்லையே..

  இருவரும் வாழப்பிறந்தவர்கள்.

  வாழவேண்டும்

  சாவதற்கு எத்தனிக்கக் கூடாது.

  பதிவின் மகத்துவம் அருமை சகோதரி.

  பதிலளிநீக்கு
 8. நல்ல பதிவு.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. இந்த அணுகுமுறை எல்லோருக்கும்
  வரவேண்டும்.

  பதிலளிநீக்கு
 10. மகிழ்ச்சி தரும் மந்திரம்.நல்லதொரு பதிவு.

  பதிலளிநீக்கு
 11. //குடும்பத்தை நாடகமேடையாக மாற்றிவிடாதீர்கள். நித்தம் ஒரு வேஷம், நித்தம் ஒரு நாடகம் என்பதாக இருக்குமே தவிர குடும்பமாக இருக்காது...!//
  அற்புதமான கருத்துக்கள். சுருங்க சொல்லி விளங்க வைத்துவிட்டீர்கள்!

  பதிலளிநீக்கு
 12. மெல்ல என் தலைகோதி
  கை விரல்களை சொடுக்கெடுக்கும்
  உன் தளர்ந்த விரல்கள் மட்டும் போதுமடி
  என் வயோதிகம் பிழைத்துக்கொள்ளும்//

  அன்பு தான் உண்மையான தாம்பத்தியத்தின் வெளிபாடு என்பதை எவ்வளவு அழகாக அசத்தியுள்ளீர்கள்...

  பதிலளிநீக்கு
 13. தொடரட்டும் தாம்பத்யம் குறித்த உங்கள் கட்டுரைகள். இந்த காவலர்களை பத்தியெல்லாம் ஒன்னும் கவலைப் படாதீங்க. உங்க வேலையை நீங்க பாருங்க. அவங்க மூலமா ஓசி விளம்பரம் கிடைக்குதுன்னு சந்தோஷப் படுங்க

  பதிலளிநீக்கு
 14. கவர்ச்சி என்றால் உடல் அல்லது உடலுறவு தொடர்பானது என்ற ஒரே கண்ணோட்டத்தில் எழுதியிருப்பதாகத் தோன்றுகிறதே?

  ஈர்ப்பு என்று சொல்லியிருக்கிறீர்களே, அது எப்படி வருகிறது? காதலி புன்னகைத்தாலும் கவர்ச்சி தான். மனைவியின் கோபப்பார்வையிலும் கவர்ச்சி உண்டு. கணவனின் புலம்பலிலும் கவர்ச்சி உண்டு. எல்லாம் அன்பும் நேசமும் இருந்தால். எனக்குத் தெரிந்தவர் ஒருவரின் வீட்டில் மனைவி கணவனுக்கு தட்டில் சாப்பாடு எடுத்துக் கொண்டு ஊட்டி விடுவார் - எனக்கு அது கவர்ச்சியாகத் தோன்றும்! கவர்ச்சியை கவர்ச்சியாக உணர்வது காண்பவர் மனநிலை அல்லவா?

  இன்னொரு கோணமும் உண்டு எனறு நினைக்கிறேன். கேட்டு விடுகிறேன். உடலுறவால் மட்டுமே கணவனையோ மனைவியையோ "கைக்குள்" அடக்குவதில் என்ன தவறு? உடல் சேர்ந்த பின்னரே மனம் சேர முடியும் என்ற பரிதாபமான நிலையில் பெரும்பாலான திருமணங்கள் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டே நடக்கையில்..அது தவறே இல்லையென்று தோன்றுகிறது. மனம் ஒருமைப்பட உடல் ஒரு சாதனம் என்றால் இருந்துவிட்டுப் போகட்டுமே?

  தலையணை மந்திரம் - தனிமையிலே பேசப்படும் அர்த்தமற்ற இனிமை மொழி அவ்வளவு தான். எனினும், 'தலையணை மந்திரம் போட்டார்' என்பது ஒரு குற்றச்சாட்டாக தவறான பொருளிலேயே வழங்கப்படுவது வருத்தமே.

  நீங்கள் நிறையவே சிந்தித்து எழுதியிருக்கிறீர்கள். நன்று.

  (சமீபத்தில் தமிழ் உதயம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். விவாகரத்து சரியா தவறா என்ற விவாதம். உங்களை போல் அவரும் சில 'தம்பதி அன்னியோன்னிய' சிக்கல்களைப் பற்றி எழுதியிருந்தார்.)

  பதிலளிநீக்கு
 15. தலையணை மந்திரக் குற்றச்சாட்டுக்குப் பயப்படாமல் பெண்களும் ஆண்களும் குற்றம் சாட்டுவோரை, பெற்றோராக இருந்தாலும், பதிலுக்குக் கிண்டல் செய்தால் நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 16. @ S Maharajan...

  புரிதலுக்கு நன்றி நண்பரே.  @ "என் ராஜபாட்டை"- ராஜா...

  நன்றிகள்

  பதிலளிநீக்கு
 17. @ MANO நாஞ்சில் மனோ...

  அறிவுரைனு சொல்றத விட ஒரு ஆலோசனை என்று எடுத்துக்கலாம்.

  நன்றி மனோ.

  பதிலளிநீக்கு
 18. @ சிசு said...

  //என் வருங்காலத்திற்கு உதவும் விஷயகளை அறிந்துகொண்டேன். //

  ரொம்ப நன்றி

  பதிலளிநீக்கு
 19. @ வை.கோபாலகிருஷ்ணன் said...

  // பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து, தாம்பத்திய உறவை சிக்கலின்றி கொண்டு போக உதவும் பயனுள்ள கட்டுரை தான். ஒரு சிலருக்காவது பயன் படக்கூடும்//

  நிச்சயமா ஒருத்தர் இரண்டு பேராவது இதன் பொருள் புரிந்து பயன்படுத்தி கொண்டால் அது பதிவின் வெற்றி.

  உங்களுக்கு என் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 20. @ மகேந்திரன்...

  உங்கள் கருத்துக்களுக்கு நன்றி மகேந்திரன்.

  பதிலளிநீக்கு
 21. @ Rathnavel...

  நன்றிகள்


  @ வல்லிசிம்ஹன் said...

  நன்றிகள்

  பதிலளிநீக்கு
 22. @ ஜெரி ஈசானந்தன்...

  நன்றிகள்  @ bandhu...

  உங்களின் முதல் வருகைக்கு நன்றிகள்

  பதிலளிநீக்கு
 23. @ மாய உலகம் said...

  //அன்பு தான் உண்மையான தாம்பத்தியத்தின் வெளிபாடு என்பதை எவ்வளவு அழகாக அசத்தியுள்ளீர்கள்..//

  அன்பு இன்றி இல்வாழ்க்கை சிறக்காது. இந்த தலைப்பின் மொத்தமும் அன்பை அடிப்படையாக கொண்டதே !

  நன்றிகள் மாய உலகம்.

  பதிலளிநீக்கு
 24. @ எல் கே said...

  //தொடரட்டும் தாம்பத்யம் குறித்த உங்கள் கட்டுரைகள். இந்த காவலர்களை பத்தியெல்லாம் ஒன்னும் கவலைப் படாதீங்க. உங்க வேலையை நீங்க பாருங்க. அவங்க மூலமா ஓசி விளம்பரம் கிடைக்குதுன்னு சந்தோஷப் படுங்க//

  எழுத இயலுகிற வரை தாம்பத்யம் தொடர் தொடரும். இதில் எங்கே குறை இருக்கிறது,எப்படி கண்டுபிடிக்கிறது என்று அவர்கள் தான் கவலை படணும். :))

  விளம்பரமா ?? பதிவிற்கு சம்பந்தம் இல்லாமல் ஒரு தலைப்பும்(!), படமும்(?) போட்டால் போதுமே...!!
  விளம்பரம் கிடைத்துவிடும்.

  வருகைக்கு நன்றிகள் கார்த்திக்.

  பதிலளிநீக்கு
 25. எனக்கு திருமணம் ஆகவில்லை. அதனால் பலதும் புரியாமல் இருக்கு. சிலது எங்களோட ஜெனரேஷனுக்கு ஒத்து வராதுன்னு தோனிச்சு. எங்கள் வீட்டில் பார்த்தது பற்றி இன்று பஸ்ஸில் போட்டிருக்கிறேன். எங்கள் வீட்டில் கஷ்டப்பட்டு யாருமே தங்களை மாத்தியதில்லை. அப்பா சொல்லுவார், கடமையாக சிலவற்றைச் செய்வதில் தனக்கு உடன்பாடில்லை என்று. விருப்பப்பட்டு செய்ய வேண்டும். அதுவும் இயல்பாகவே தோன்ற வேண்டும் என்பார்.

  https://profiles.google.com/101272812574663658131/posts/Wf7pNd8kZXq?authuser=0

  பதிலளிநீக்கு
 26. @ அப்பாதுரை said...

  //கவர்ச்சி என்றால் உடல் அல்லது உடலுறவு தொடர்பானது என்ற ஒரே கண்ணோட்டத்தில் எழுதியிருப்பதாகத் தோன்றுகிறதே?//

  இந்த பாகம் அந்தரங்கத்தில் உடலுறவை சார்ந்து வருகிறது சகோ, அதனால் இப்படி எழுத வேண்டி இருக்கிறது. தொடரை தொடர்ந்து படித்து வரும்போது புரியும்.

  //ஈர்ப்பு என்று சொல்லியிருக்கிறீர்களே, அது எப்படி வருகிறது? காதலி புன்னகைத்தாலும் கவர்ச்சி தான். மனைவியின் கோபப்பார்வையிலும் கவர்ச்சி உண்டு. கணவனின் புலம்பலிலும் கவர்ச்சி உண்டு.எல்லாம் அன்பும் நேசமும் இருந்தால//

  //கவர்ச்சியை கவர்ச்சியாக உணர்வது காண்பவர் மனநிலை அல்லவா?//

  உண்மை. உணர்ந்திருக்கிறேன்.

  //இன்னொரு கோணமும் உண்டு எனறு நினைக்கிறேன். கேட்டு விடுகிறேன்.//

  கேளுங்கள்.அப்பத்தான் இன்னொரு பதிவிற்கு யோசிக்கமுடியும். :)

  //உடலுறவால் மட்டுமே கணவனையோ மனைவியையோ "கைக்குள்" அடக்குவதில் என்ன தவறு?//

  நிச்சயம் தவறில்லை அது ஆத்மார்த்தமான உடலுறவாக இருந்தால் ?!!

  //உடல் சேர்ந்த பின்னரே மனம் சேர முடியும் என்ற பரிதாபமான நிலையில் பெரும்பாலான திருமணங்கள் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டே நடக்கையில்..அது தவறே இல்லையென்று தோன்றுகிறது//

  இப்போது இந்த முறை சில இடங்களில்/படித்தவர்கள் மத்தியில் மாறிவருகிறது என நினைக்கிறேன்.திருமணம் முடிந்த தொடக்கத்தில் உடல் சார்ந்தும், பின் போக போக மனம் ஒன்ற ஆரம்பிக்கிறது. சரியே. ஆனால் தங்களின் சுயதிற்க்காக இந்த அற்புத உறவை சிதைக்காதீர்கள், பயன்படுத்தி கொள்ளாதீர்கள் என்கிறேன்.

  //தலையணை மந்திரம் - தனிமையிலே பேசப்படும் அர்த்தமற்ற இனிமை மொழி அவ்வளவு தான். எனினும், 'தலையணை மந்திரம் போட்டார்' என்பது ஒரு குற்றச்சாட்டாக தவறான பொருளிலேயே வழங்கப்படுவது வருத்தமே.//

  யதார்த்த வாழ்க்கையில் தவறான பொருளாய் மாறி ரொம்ப காலமாகிவிட்டது சகோ. அனுபவத்தில் பார்த்தும்,கேட்டும் வெறுத்துவிட்டது எனக்கு.

  //நீங்கள் நிறையவே சிந்தித்து எழுதியிருக்கிறீர்கள்.//

  உங்களின் நன்று என்ற ஒற்றை வார்த்தைக்காகத்தான் ரொம்ப சிந்தித்தேன். :)

  //(சமீபத்தில் தமிழ் உதயம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். விவாகரத்து சரியா தவறா என்ற விவாதம். உங்களை போல் அவரும் சில 'தம்பதி அன்னியோன்னிய' சிக்கல்களைப் பற்றி எழுதியிருந்தார்.)//

  படித்தேன், நன்றாக எழுதி இருந்தார். அதில் உங்களின் கருத்தும் தான் எனதும் !! விவாகரத்து என்ற தலைப்பு தாம்பத்தியத்தில் கடைசியில் வரும் அதில் விரிவாக சொல்லிவிடுகிறேன். :)

  உங்களின் கருத்துக்கள் என்னை இன்னும் அதிகமாக சிந்திக்க, எழுதவும்
  வைக்கிறது.

  நன்றிகள் சகோ.

  பதிலளிநீக்கு
 27. @ அனாமிகா துவாரகன் said...

  இந்த ஜெனரேசன் ரொம்பவே அழகா வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள். ஈசியாக அதிகமா எதையும் தலைக்கு கொண்டுபோகாமல் !! சந்தோசமாக இருக்கிறது.

  //கடமையாக சிலவற்றைச் செய்வதில் தனக்கு உடன்பாடில்லை என்று. விருப்பப்பட்டு செய்ய வேண்டும். அதுவும் இயல்பாகவே தோன்ற வேண்டும் என்பார். //

  உங்கள் அப்பாவின் சிந்தனையும் செயல்களையும் ரொம்பவே மதிக்கிறேன் அனாமிகா.

  பஸ்ஸில் எழுதி இருந்ததை படித்தேன், அப்பா அம்மா இருவரையும் எண்ணி பெருமையாக இருக்கிறது.
  அதே நேரம் அவர்களின் மகளாக நீங்கள் இருப்பதால் கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கிறது. :)

  //அதனாலேயே பலர் போரடிக்கிற வாழ்க்கை என்றாலும் பரவாயில்லை, சண்டை இல்லாமல் இருப்பதே மேல் என்று வாழ ஆரம்பித்துவிட்டார்கள்//

  மிக முக்கியமான புரிதல் இது.சண்டை இல்லாமல் இருந்தாலே போதும் அவர்களின் பிள்ளைகள் மனதில் எந்த நெகடிவ் எண்ணங்களும் இல்லாமல் நன்றாக வளருவார்கள்.

  எடுத்ததுக்கு எல்லாம் சண்டை கோழிகளாக மாறி பிள்ளைகளின் எதிரில் சண்டை இட்டு அவர்களின் மனதை சிதைத்துவிடுகிரார்கள் பலர்.

  உங்கள் பெற்றோரின் இத்தகைய புரிதல் அனைவருக்கும் அமைந்தால் வாழ்வே இன்பமயம் தான். அடுத்த தலைமுறையும் சிறப்பாக இருக்கும்.

  மிக்க நன்றிகள் அனாமிகா துவாரகன்...உங்களின் கருத்துக்கள், அப்பாவின் கருத்துக்களை இங்கே பகிர்ந்தமைக்கு மகிழ்கிறேன்.

  பதிலளிநீக்கு
 28. It's my first time to read your article. It is really wonderful and thoughtful. Thank you. ஆத்மார்தமான உண்மை. நன்றி

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...