இளைஞர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இளைஞர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, பிப்ரவரி 13

'சினிமா' அவ்வளவு முக்கியமானதா என்ன ?!


இன்றைய சூழலில் எது முக்கியமோ இல்லையோ  சினிமா ரொம்ப ரொம்ப முக்கியம்... அப்படின்னு பத்திரிக்கை ஊடகங்கள் சமூக வலைத் தளங்கள் சொல்கின்றன.  சமூகத்தில் பல்வேறு  பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்து கண்முன்னால் நின்றாலும் அனைத்தையும்    அசட்டை செய்து  தமிழ் கூறும் நல்லுலகம் கேளிக்கையின் பின் மட்டுமே போய்  கொண்டிருக்கிறது.  சினிமாக்கள் பற்றிய செய்திகள் , கருத்துக்கள் , தத்துவம் ஆதங்கம்,கோபம்  என்று எங்கும் இதே  பேச்சு ! வலைத்தளங்களில் விழிப்புணர்வு பேசியவர்களும் சினிமா விமர்சனத்தை  கையில் எடுத்தது காலத்தின் கஷ்டம்  !! 

முன்பு சினிமா விமர்சனத்தை ஒரு சிலர் எழுதினார்கள், இன்று பெரும்பாலோர் இதே வேலையாக இருக்கின்றனர். கொடுமை என்னவென்றால் படைப்பாளிகள், எழுத்தாளர்கள் கூட சினிமா பற்றி எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டதுதான். சினிமாவை பற்றி  எழுதினால் பலரால் தாம் கவனிக்கப் படுவோம் என்பதால் கூட இருக்கலாம் என்றே எனக்கு தோன்றுகிறது. 

விழிப்புணர்வுப்  பதிவு என்றால் ஒரு செகண்டில் கடந்து செல்பவர்கள் சினிமா என்றால் மட்டும் அதீத கவனம்?  மக்களின் மனநிலையை புரிந்த சினிமாக்காரர்களும் தங்கள் மனம் போனப்படி ஒவ்வொரு நாளும்  ஒரு  கதையை பின்னி இளைஞர்களின் நேரத்தை பணத்தைப்  பறிக்கிறார்கள். சினிமா ஒரு பொழுதுப்போக்கு என்பது மாறி பலரின் பொழுதை வீணாகப் போக்கிக் கொண்டிருக்கிறது. 

உலக நாடுகள் சினிமாவை கையாளுவதற்கும் இந்தியர்கள் அதிலும் தமிழர்கள் கையாளுவதற்கும் அதிக வித்தியாசம் உண்டு. மற்றவர்களுக்கு எப்படியோ ஆனால் தமிழர்களுக்கு சினிமாதான் சுவாசம் வாசம் எல்லாம். ஐந்து முதல்வர்களை கொடுத்த பெருமை போதாதென்று நாளைய முதல்வர்களையும் சினிமாவிற்குள் தான் தேடிக் கொண்டிருக்கிறோம். சினிமா பிரபலங்கள் யாரிடமும் ஒரு நன்றியோ மன்னிப்போ கேட்டுவிட்டால் அவ்வளவுதான் என் ஹீரோ மனசு மாதிரி யாருக்கு வரும் என்று புகழ்ந்து அந்த ஹீரோவை தெய்வமாக்கி விடுவார்கள் ரசிகர்கள்.  கேமராவிற்கு முன்னால் என் நாடு என் மக்கள் என்று வேற ஒருத்தர் சொல்லிக் கொடுத்த வசனத்தை பேசியவுடன் தமிழன் இங்கே தலைவானு  உணர்ச்சிவசப்படுவான் . கோவில் கட்டுவான் சிலை வைப்பான் பாலுத்துவான் பைத்தியமாவான் செத்தும் போவான் ... மகா கேவலம்!!?

இதையெல்லாம் விட கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் சமூக வலைத்தளங்களில் உலவும் படித்தவர்கள் புரியும் அதிகப் பிரசங்கித்தனங்கள் தான் சகிக்க முடியவில்லை. இவங்களே  தங்களை  இணைய மொன்னைகள் நொன்னைகள் வெண்ணைகள் தொன்னைகள் என்று அழைத்துக் கொல்லுவார்கள். சினிமாவை சினிமாவாக மட்டும் பார்க்காமல் டாக்டரேட் வாங்குமளவு ஏ(க்)கப்பட்ட ஆராய்ச்சிகள் புரிவார்கள் !!  

இன்றைய விமர்சனங்களின் தரம் ?!

'ஐ' படம் பற்றி ஒரு பேஸ்புக் பிரபலம் இப்படி விமர்சனம் செய்திருந்தார், எமியின் மார்பகத்தை (இதை விட நாகரீகமாக எனக்கு சொல்ல தெரியல) நம்பி மட்டுமே படம் எடுத்திருக்கிறார் இயக்குனர் என்று. மூன்று மணி நேர படத்தில் இவ்வளவோ காட்சிகள் இருக்க இவர் கண்ணுக்கு இப்படி. நடிகையை தீவிரமாக ரசித்து வரிக்கு வரி ஆபாசமாக விமர்சனம் எழுதியதோடு மட்டுமில்லாமல் படத்தில் பெண்களை மோசமாக சித்தரிச்சிருக்காங்கனு வேற வருத்தப்படுறாரு இன்னொரு நல்லவர். இவர்களை போன்றவர்கள் இணையம் முழுவதும் நிறைந்திருக்கிறார்கள். அப்புறம் 'ஐ' படத்துல வில்லன்கள் பழிவாங்கல் காட்சிகளை பார்த்து குழந்தைகள் பயப்படுவாங்க கூட்டிட்டு போகாதிங்கன்னு ஒருத்தரோட அட்வைஸ்.  படம்  பார்த்திட்டு இருக்கும்போது பக்கத்துல ஒரு சின்ன பையன் வில்லன் HULK மாதிரி மாறிட்டான்னு சிரித்தான். ஆங்கிலப் படங்கள் கார்ட்டூன்கள் என பார்த்து பழகிவிட்டார்கள் இன்றைய குழந்தைகள். ரத்தம் தெறித்து விழும் பல சினிமாக்களின் கொடூரக் காட்சிகளுக்கு இது தேவலாம்.

செல்போன் கேமரால ஒரு செல்பி கூட சரியா எடுக்கத் தெரியாத ஆட்கள் எல்லாம் கேமரா கோணத்தை பத்தி இரண்டு பக்கத்துக்கு விமர்சனம் எழுதுறாங்க...கொடுமை! ஒன்றை பற்றி பேச அதை குறித்த அறிவு தேவையில்லை ஆனா விமர்சிப்பதற்கு அதை பற்றிய அடிப்படை கொஞ்சமாவது தெரிந்திருப்பது நல்லது. குறை மட்டும் சொல்வதற்கு பெயர் விமர்சனம் அல்ல,  இணையவாசிகள் பொழுதை சந்தோசமாக கழிக்க வேண்டும் என்று படம் பார்க்க போவதாக தெரியவில்லை. ஏதோ ஒரு குறையை கண்டுப் புடிச்சு சொல்றவங்களைத்தான் இந்த தமிழ் கூறும் இணைய உலகம் அறிவாளியா நினைச்சுக்குமாம்னு வரிஞ்சு கட்டிட்டு எழுதி தள்ளுறாங்க...

காடு என்று ஒரு படம், காட்டை பற்றி மரத்தை பற்றி மலைமக்களின் வாழ்வுரிமையை பற்றிய படம். அங்குள்ள  மனிதர்கள் மிருகங்கள், பறவைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதையும் , மரங்கள் வெட்டப்படுவதையும் அரசாங்கம் கவனிப்பதில்லை என்பதை இப்படம் சிறிது தொட்டு சென்றது. சமுத்திரக்கனி பேசும் வசனங்கள் அருமை ரகம்.  இப்படத்தை விமர்சனம் செய்த ஒரு மேதாவி ‘இதில் காதல் காட்சிகள் அவ்வளவாக ஈர்க்கவில்லை, இருவருக்குமிடையிலான காதல் சரியாக சொல்லப் படவில்லை என்று தனது அறிவுக்கு எட்டியதை சொல்லி இருந்தார்.

தலைப்புலேயே காடு  எதை  பற்றிய படம் என்று தெரிகிறதே இருந்தும் ஒரு சினிமானா இதெல்லாம் இருக்கணும் என்று இவர்களாக ஒரு இலக்கணத்தை வரையறுத்துக் கொள்வார்கள்.    

சிஜி வெளிநாட்டுக்காரணுது மாதிரி இல்ல கிராபிக்ஸ்ல அவனுங்கள அடிச்சிக்க முடியாது , இப்டி எடிட் பண்ணி இருக்கலாம், திரைக்கதையை வேறு விதமா கொண்டு போய் இருக்கலாம்  என்று ஏகப்பட்ட லாம்கள் சொல்றவங்களுக்கு ஒன்னு மட்டும் ஏன் புரியமாட்டேங்குது, பணம் போட்டு படம் எடுக்கிறவங்க  அவங்களுக்கு பிடிச்ச மாதிரி, தெரிஞ்ச அளவுக்கு தானே எடுப்பாங்கனு.

நிறைய எதிர்ப்பார்த்து போனேன், டிக்கெட், வண்டிக்கு பெட்ரோல், பார்க்கிங் செலவு, பாப்கான், ஐஸ்க்ரீம் செலவு என ஒரு லிஸ்ட் போட்டு அத்தனையும் வீணா போச்சே என்பார்கள். உங்களுக்காக நீங்க   பண்ணிய  செலவுக்கு ஒரு நடிகனோ இயக்குனரோ எப்படி  பொறுப்பாக முடியும்? அவங்களா கையை புடிச்சு இழுத்துட்டு வந்து படத்தை பாருங்கனு  சொன்னாங்க....உங்களுக்கு பொழுது போகலன்னு போகலாம், அல்லது பேஸ்புக்கு ஒரு ஸ்டேடஸ் தேத்தலாம்னு போலாம் தானே...

சினிமா துறையினரைப் பொறுத்தவரை அது அவங்க  தொழில். தொழிலுக்காக ஆயிரம் பொய்  சொல்லுவாங்க.  படத்தை ப்ரோமோட் பண்ண என்ன ஜிகினா வேலையும் காட்டத்தான் செய்வாங்க,  ஆஹா ஓஹோன்னு பண்ற விளம்பரத்தை பார்த்து ஏமாந்து படம் பார்த்துட்டு இது நொட்டை  இது நொள்ளை குறை  மட்டுமே சொன்னா எப்படி? ஆறு வாரத்துல சிவப்பா மாறலாம்னு கூடத்தான் விளம்பரம் பண்றாங்க ... அப்டி யாராவது மாறி இருக்காங்களா, இல்ல சிவப்பா மாத்தலையேன்னு யாரும் வாங்காம இருக்காங்களா?

சினிமா மூலமா சமூக சேவையா செய்ய வராங்க ...சினிமா என்பது ஒரு கற்பனை உலகம், நம்மவங்க  சாதாரண புத்திசாலியா இருப்பாங்க  ஆனா  தியேட்டர்க்குள்ள  போனதும் டக்குனு  அதிமேதாவியா மாறிடுவாங்க. லாஜிக்னு ஒன்ன கிளைமாக்ஸ் வரைக்கும் தேடோ தேடுன்னு தேடி அது கிடைக்காதது தன்னோட தவறுனு கூட புரிஞ்சுக்காம லாஜிக்கே இல்லாம படம் எடுத்திருக்கானுங்க முட்டாப்பசங்கனு திட்டுவாங்க பாருங்க...., வேடிக்கை !! கேளிக்கை சினிமாவில் மெசெஜ் இருந்தே ஆகணும்  என்ற எதிர்பார்ப்பும் அதீதம்தான். பேஸ்புக்கில் இரண்டு வரி  மெசெஜ் சொல்ல முடியாத ஆட்கள் எல்லாம் சினிமாவில் மெசேஜ் தேடுவாங்க :-) 

ஒரு நடிகனோட ரசிகர்கள்  அடுத்த நடிகனை இழுத்துப் போட்டு கதற கதற வார்த்தை  வன்கொடுமை பண்ணுவாங்க. அப்புறம் அந்த நடிகனோட ரசிகர்கள் இந்த நடிகனை உண்டு இல்லன்னு பண்ண இப்படியே படம்  வெளிவந்த ஒரு வாரத்துக்கு ரணகளமா  இருக்கும். அதுக்கப்பறம் தான் வேற படம் வேற நடிகன் கிடைச்சிடுவானே.... சக மனிதனை படு ஆபாசமான வார்த்தைகளால் குத்திக் கிழிக்கும் உரிமையை  யார்  கொடுத்தாங்களோ தெரியல,... என்றாவது அதே வார்த்தைகள் திரும்பி அவர்கள்  மீதே எறியப்பட்டால் அன்றி அந்த வலி எவருக்கும் புரிய வாய்ப்பே  இல்லை.   

உங்களின் எதிர்மறையான விமர்சனமே தரமற்ற சினிமாவையும் பிரபலப் படுத்திவிடுகிறது.  ஆபாசமான காட்சிகள், வசனங்கள் என்ன என்ன இருக்கிறது உடை விலகுவது வரை  மிக தெளிவாக எடுத்துச் சொல்லி விமர்சித்து விடுகிறீர்கள். இசை படத்தை எடுத்த சூர்யாவுக்கு கூட  தெரியாது நாம இவ்ளோ ஆபாசமா காட்சிகள் வச்சோமான்னு ஆனா நம்ம விமர்சன சிங்கங்கள் அக்குவேறு ஆணிவேரா பிரிச்சு எரிஞ்சிட்டாங்க ... தேமேனு இருந்தவங்களையும் பார்க்க வச்ச புண்ணியம் உங்களுக்கு, இந்த லட்சணத்தில் தான் பல படங்கள் ஹிட்டாவுது. 'என்னை அறிந்தால்' அழகான தமிழ் டைட்டில் ஆனால் படத்துல ஏகப்பட்ட   ஆங்கில வசனங்கள், புரியவேயில்லை. கிளைமாக்ஸ்ல வில்லனை சர் சர்னு சீவித்தள்ளார் அஜித், திக்குன்னு இருந்துச்சு.,  அரைத்த மாவையே அரைத்ததை தவிர வேறு என்ன இருக்குனு எல்லோரும் ஆஹா ஓஹோ சொல்றாங்கன்னு கடைசிவரை என் புத்திக்கு எட்டவேயில்லை.

அதிகபிரசங்கித்தனமான சினிமா விமர்சனம் தேவையா ?

நாட்டுல எவ்வளவோ நடக்குற மாதிரி சினிமாக்களும்   வரட்டும் போகட்டும். நல்ல படங்களை ரசிக்கலாம் பாராட்டலாம் மாறாக அதை பற்றி மட்டுமே பேசி பேசி எழுதி எழுதி இதை தவிர வேறு ஒன்றுமே முக்கியம் இல்லை என்பதை போல ஏன் செய்யவேண்டும். விமர்சிக்கிறேன் பேர்வழினு வேலை மெனக்கிட்டு பக்கம் பக்கமா எழுத அதை ஒரு நூறு பேர் படிக்க அதுல பாதி பேர் அந்த சினிமாவ  பார்க்க, பார்த்த அவர்கள் மறுபடி அதே படத்தை விமர்சிக்க என்று விமர்சனங்கள் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. வெள்ளிக்கிழமை வந்தால்  போதும் எங்கும் புதுப்படங்களை பற்றிய அப்டேட்ஸ் தான். அன்னைக்கு  முக்கியமானவர்  யாராவது இறந்தாலும் கண்டுக்கொள்ளப் படமாட்டார்கள் என்பதே உண்மை...

சினிமாவை பற்றி இணையம் எங்கும் பேசி  இன்றைய இளைய சமூகத்தையும் அதை நோக்கி 'மட்டுமே' திருப்பும் வேலையை நீங்கள் செய்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதாவது புரிகிறதா?   

நம் மாணவர்களிடம் பாட புத்தகங்கள் தவிர  வேறு புத்தக வாசிப்பு என்ற ஒன்று சுத்தமாக இல்லை, பாடங்களை தவிர்த்து வெளி உலகம் எதுவும் அவர்களுக்குத் தெரியவில்லை, தெரிய வைக்கப்படவும் இல்லை. இதுதான் நம் கல்வியின் நிலை.  வகுப்பு பாடங்களுக்கு அடுத்ததாக அவர்களுக்கு அதிகம் தெரிபவை சினிமா ...சினிமா மட்டுமே ! எந்த நடிகன் எந்த படம் எந்த காட்சியில் சிறப்பாக நடித்தான் என்பது முதல் குறிப்பிட்ட வசனங்கள் வரை அவர்களுக்கு மனப்பாடம். பள்ளி, கல்லூரி மாணவர்களின் விளையாட்டு, பொழுதுப் போக்கின் இடங்களை  சினிமா பிடித்துக் கொண்டது.. அவர்களின் பேஸ்புக் டிவிட்டர் இன்ஸ்டாகிராம் வாட்ஸ்அப் தளங்களை பார்த்தாலே இதை தெரிந்து கொள்ளலாம். அவர்களின் ஸ்டேடஸ், கமென்ட்ஸ் இன்பாக்ஸ் மெசெஜ்களில் அதிகம் பேசப்படுபவை சினிமாவை பற்றி மட்டுமே.

சினிமாவும் தனது பங்குக்கு பாடல் வெளியீடு, First Look, டீசர், டிரைலர் என்று ஒரு படத்தை குறித்த செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு இளைய சமுதாயத்தினரை சினிமாவை சுற்றியே வலம் வர செய்கிறது. ரிலீஸ் ஆனதும் சமூக வலைதளங்களில் வேறு விமர்சனம் என்ற பெயரில் அக்குவேறு ஆணிவேராக படத்தைப் பிரித்து ஆராய்கிறார்கள். இவ்வாறு ஒவ்வொரு படத்திற்கும் இந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து பள்ளி கல்லூரி  மாணவர்களை அங்கே இங்கே திரும்பவிடாமல் சினிமாவைச் சுற்றியே சுழற்றிச் சுழற்றி  அடிக்கிறது.  இந்த சிக்கலில் இருந்து மாணவ சமூகம் என்று மீளுவது , யார் மீட்பது ??  

பிற துறைகளை போல திரைத்துறையும் பலருக்கு வாழ்வளிக்கிறது, அதை நம்பி பல குடும்பங்கள் ஜீவிக்கின்றன, அவ்வளவு ஏன்  இணையத்தில் சாதாரணமாக எழுத வந்த பலருக்கும்  ஒரு அடையாளம் கொடுத்திருக்கும் ஒரு நல்ல தொழில் சினிமா, அவ்வளவே. இதைத் தாண்டி தலைமேல் தூக்கிவச்சு கொண்டாடியே ஆகணும் என்ற எந்தவித அவசியமும் இல்லை.

சமூக ஊடகங்களில் இயங்குபவர்களுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து நமது மாணவ சமுதாயம் சரியான பாதையில்  செல்ல உதவவேண்டும்.  நம் வீட்டு குழந்தைகளும் இங்கேதான் உலவிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.  சினிமாவை தாண்டியும் உலகம் இருக்கிறது, அங்கே தான் தங்கள் வாழ்க்கைக்கான பொருள் புதைந்துக் கிடக்கிறது என்பதை மாணவர்கள் உணரும் காலம் வரவேண்டும்.

தெருவில் இறங்கி புரட்சியோ, மரக்கன்று நட்டு சமூக சேவையோ செய்யவேண்டும் என்று கூட இல்லை, சினிமாவைப்  பற்றி பொதுவெளியில் அதிகமாக பேசுவதை நிறுத்தினாலே போதும், சமூகத்திற்கு மிக பெரிய நன்மை செய்தவர்களாக  ஆவோம், (இந்த பதிவை எழுதிய என்னையும் சேர்த்தேதான் சொல்கிறேன்)
  
எங்களுக்கு எது தெரியுமோ அதை தான் பேசுவோம், எழுதுவோம் என பிடிவாதம் பிடிப்பவர்களை ஒன்றும் செய்ய  முடியாது, ஆனால் அவர்கள் இனிமேலாவது கொஞ்சம் யோசிக்கலாமே...!


திங்கள், ஜனவரி 7

அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகள் - குற்றவாளி யார்...??!



இன்றைய பெண்கள் குறிப்பாக சிறுமிகள் மனதில் ஆண்கள் என்றாலே மோசமானவர்கள் என்பதை மிக அழுத்தமாக இது போன்ற மோசமான நிகழ்வுகள் பதியவைத்துவிடுமோ என்றே வருந்துகிறேன். அருவருக்க தக்க இச்செயல்களை ஒரு சில ஆண்கள் செய்வதால் ஒட்டுமொத்த ஆண்சமூகமும் தலைகுனிந்து நிற்கிறது. நடக்கும் சம்பவங்களுக்கு  ஆண்கள் மட்டுமா காரணம் !!?? என ஒரு கேள்வியும் உடன் எழுகிறது...

ஓடும் பேருந்தில் பலரால் சிதைக்கப்பட்டு இறந்த இளம் பெண், ஆசிட் வீசப்பட்டதால் வாழ்வை தொலைத்தவள், எதிர்வீட்டுக்காரனால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கபட்டுவிட்டாள் என தந்தை கையால் கௌரவ(?)கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுமி, பாலியல் வன்முறையால் கொல்லப்பட்ட சிறுமி புனிதா, வீட்டில் இருந்த 4 ஆம் வகுப்பு மாணவியை இருவர் சிதைத்த கொடுமை......... இவை எல்லாம் விட கொடுமை பிளே ஸ்கூல் படிக்கும் மூன்றை வயது குழந்தையை வன்கொடுமை புரிந்த பள்ளி உரிமையாளரின் கணவன் !!??

ஊடகத்திற்கு வந்தவை கொஞ்சம், ஆனால் இப்படிபட்ட அல்லது இதை விடவும் மோசமான கொடுமையான நிகழ்வுகள் உலகம் முழுவதும் அதிக அளவில், விதவிதமாக பெண்களின் மீது காலங்காலமாக நடந்துக்கொண்டிருக்கின்றன, மீடியாக்களின் உபயத்தில் இன்று அதிகரித்து வருவதை போல தெரிகிறது...

இணையத்தின் விவாதப்பொருளா ?!

டெல்லியில் நடந்தது மட்டும் இப்போது பெரிதுபடுத்தி பார்க்கப்படுகிறது,  பாதிக்கப்பட்ட மற்ற பெண்களுக்கு இந்த அளவிற்கு முக்கியத்துவம் ஏன் இல்லை என இணையத்தில் காரசாரமான கருத்துக்கள் கண்டேன்.   ஊடகங்கள் செய்யாவிட்டால் என்ன தனி மனிதர் ஒவ்வொருவரும் போராட வேண்டியது தானே ?! நமக்கு அருகில், தெருவில் ஒரு பெண்ணிற்கு அநீதி இழைக்கப்படும் போது நம்மில் எத்தனை பேர் வேடிக்கை மட்டும் பார்த்து கடந்து சென்றிருப்போம்.

பெண் பாலியல் வன்முறை செய்யப்பட்டுவிட்டாள் என தெரிந்ததும் ஆவேசத்துடன்  சரமாரியாக கருத்துக்கள் இடுபவர்களில் சிலர் முகநூலில் நடிகையின் படத்தை வெளியிட்டு மட்டமாக வர்ணிப்பவர்கள் !! மனதில் இவ்வளவு வக்ரத்தை வைத்துகொண்டு பெண்ணுக்கு ஆதரவாக கருத்திடும் வேடதாரிகள் ஒருவகையில் குற்றவாளிகள் தான் ! உடலை தீண்டி சிதைத்தால்தான் வன்முறையா ? பார்வையால், பேச்சால்  பெண்களை கேலிப்பொருளாக்குபவர்கள் செய்வதற்கு பெயரும் வன்முறைதான்   !!

பெண்களை போகப்பொருளாக எண்ணி பேசுபவர்கள் நிறைந்திருக்கும் உலகம், இப்போது பெண்களைப்பற்றி புதிதாக கவலைப்படுவது தான் வினோதம் !!
  
மேலும்

என்னவோ எல்லோரும் தமிழ்நாட்டுக்கு வெளில வாழ்வதை போல 'டெல்லியில் போராடுறாங்க, தமிழ்நாட்டுல ஏன் யாரும் போராடல' என்று முகநூல்,ட்விட்டர்ல  பொங்கறத பார்த்தபோது வேடிக்கையான வேதனை !!??  ஏதோ சொல்லனும்னு கண்டபடி உளறி இந்த மாதிரி நிகழ்வுகளை தயவுசெய்து  வெட்டி விவாதப்  பொருளாக்கி வேடிக்கை பார்க்காதீர்கள் !!  நடந்த கொடுமையை விட இது மிக அதிகமாக வலிக்கிறது !!

இது போன்ற செய்தியை சில நாள் பேசுவதும் பின் மொத்தமாக மறந்து விடுவதுமாக இருக்கும் நாம் தான் மன்னிக்கவே முடியாத குற்றவாளிகள் !! .

போராட்டம் ??

பாலியல் வன்முறைக்கு எதிராக கொடிப்பிடிக்கிறோம் என்ற பெயரில் போடப்படும் கோஷங்கள் அறிக்கைகள் எல்லாம் தங்கள் உடை சுதந்திரத்தில் யாரும் தலையிட கூடாது , என் உடல் என் விருப்பம் என்பது மாதிரியாக த்தான் இருக்கிறது !! எங்கோ ஒரு மூலையில் நிமிடத்திற்கு ஒரு முறை பெண் கொடுமைக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறாள், அவற்றை எதையும் கண்டுகொள்ளாத ஆணுலகம் ஒரு புறம் என்றால், பெண்கள் இயக்கமும், அமைப்புகளும் அமைதியாகவே  இருக்கிறது !

இரோம் ஷர்மிளா என்ற பெண்ணின் பல வருட தொடர் உண்ணாநிலை போராட்டம் இன்று வரை பெரிதுபடுத்தப்படாமல், முடிவும் எட்டப்படவில்லை. எந்த பெண்ணுரிமை இயக்கங்களும் இதனை அவ்வளவாக தீவிரப் படுத்தவும் இல்லை ?! அவருக்கே நீதி கிடைக்காத நாட்டில் வேறு எந்த பெண்ணிற்கு கிடைத்துவிட போகிறது...??!!

தூக்கில் போட்டால் எல்லாம் சரியாகிவிடும்?!!

சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு அரசும் அதிகாரிகளும் என்ன செய்வார்கள், அவர்கள் மட்டுமா பொறுப்பு ?! தனி மனித ஒழுக்கம் என்பது இல்லாத வரை எந்த அரசும் என்னவும் செய்ய முடியாது ! அந்த 6 பேரை தூக்கில் போடுவதுடன் முடிந்துவிடுமா அத்தனை கேவலங்களும், அசிங்கங்களும் ?! நிச்சயமாக இதுவல்ல தீர்வு...?!!

குற்றச்செயலின் போது, உணர்ச்சி வசத்தின் பிடியில் சிக்கி இருப்பவர்களுக்கு உயிர் பயம் சுத்தமாக இருக்காது, ஈடுபடும் செயலை முடித்தே தீரவேண்டும் என்ற வெறி மட்டுமே  மனதை ஆக்கிரமித்து இருக்கும் என்ற நிலையில் தண்டனையை பற்றிய எண்ணம் எப்படி வரும் ?

நடக்கும் அத்தனை பாலியல் கொடுமைகளும் வெளிவருவதில்லை...  ஏதோ ஒன்றோ இரண்டோ மட்டுமே வெளி உலகம் அறிகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள், குடும்பத்தினர் மறைத்துவிடும் அளவில் தான் நமது சமூக அமைப்பு இருக்கிறது. கேவலம் அவமானம் போன்றவைகள் உயிர்ப்புடன் இருக்கும் வரை பெண்மை மௌனம் சாதித்துத்தான் ஆகவேண்டும் போல...!!

குற்றவாளியை தூக்கில் போடணும், அடிச்சே கொல்லனும் என்கிற ஆவேசமான ஆர்பாட்டங்களை மதிக்கிறேன். ஆனால் இதனால் மட்டும்  இது போன்ற பிரச்சனைகள்  முடிவுக்கு எப்படி வரும்...??!  வன்முறைக்கு மற்றொரு வன்முறை என்பது போல் ஆகுமே தவிர குற்றங்கள் குறைந்துவிடுமா?.  பலிக்கு பலி என்று மனதை சமாதானம் பண்ணிக்கொள்ளலாம், அதே நேரம் இப்படிப்பட்ட பலியை எதிர்பார்க்கும் நமக்கு  என்ன பெயர் ???! 

இன்று இவர்கள் 6 பேரை தூக்கில் போட்டுவிடுவோம், அதே நேரம் இன்னும் பலர் தினசரி செய்திகளில் தொடர்ந்து வருகிறார்களே...அவர்களை என்ன செய்வது...அதன்பிறகு நாளை சிலர் வருவார்களே...அவர்களை...???!!!  தண்டனைகள்  தொடர்கதையாகுமே தவிர வேறு என்ன நடந்துவிடும்.  மாற்றம் வந்தாகவேண்டும்...சமூகத்தில்...அரசியலில்...கல்வியில்...மனிதமனங்களில்...!!

சட்டங்கள் என்ன செய்யும் ??

ஒவ்வொரு கொலை, மரணங்கள்  ஏற்பட்ட பின்னரே விழித்துக்கொண்டு சட்டங்களை இயற்றும் நம் அரசு. பள்ளி கூரை தீப்பிடித்து நூறு குழந்தைகள் இறந்தால், பள்ளிகளை கண்காணிக்க உத்தரவு!  பள்ளி வேனின் ஓட்டையில் குழந்தை விழுந்து இறந்ததும் வாகனங்கள் லைசென்ஸ், பராமரிப்பை தீவிரமாக செக் பண்ணுவார்கள்... இப்போது இந்த பரிதாப டெல்லிப் பெண் கிடைத்துவிட்டார் புதிதாக சட்டங்களை இயற்ற 

கடுமையான தண்டனைகள் கொடுக்ககூடிய சட்டங்களை இயற்றுங்கள் என்பது பலரது கூக்குரல் !! சில வருடங்களுக்கு முன் தமிழகத்தில் நடந்த நாவரசு கொலை பலருக்கு நினைவிருக்கலாம். நாவரசின் கை கால்களை தனித்தனியாக வெட்டி சூட்கேசில் மறைத்த குற்றவாளி ஒரு மருத்துவ கல்லூரி மாணவர் ! உலகமே அதிர்ச்சி அடைந்த அந்த கொடூர கொலைக்கு தண்டனை கிடைக்க 15 வருடம் ஆனது. ராகிங் தடுப்பு சட்டம் (Tamil Nadu Prohibition of Ragging Act)ஒன்றும் அதன் பிறகு இயற்றப்பட்டது. அன்றில் இருந்து இன்று வரை வேறு ராகிங் குற்றங்களே நடக்கவில்லை என்பது உண்மை என்றால் , பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டங்களை இயற்ற சொல்லி போராடலாம் தவறே இல்லை !! 

வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தை வைத்து  பிடிக்காத கணவன்/ கணவன் வீட்டாரை பழிவாங்கும் சில பெண்கள் இருக்கிறார்கள். அதை  போல இதற்காபோடப்படும் சட்டங்களும் தவறாக பிரயோகிக்கப்படலாம் ...  

அரசாங்கம் 

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறோம் என்று மத்திய அரசும், சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது என மாநில அரசும் சிறிதும் மனசாட்சி இன்றி சொல்கிறது. வேறு என்ன செய்ய முடியும் அவர்களால் ?? மக்கள் அரியணையில் அமரவைத்ததற்கு இதையாவது சொல்ல வேண்டாமா?? இதுபோன்ற நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பண உதவி செய்வதுடன் அரசு தனது பொறுப்பை முடித்துக்கொள்கிறது. சுயநல அரசுகள், கையாலாகாத அதிகாரிகள், ஊழலுக்கு துணை நிற்கும் நீதி மற்றும் காவல்துறை, இவை  எல்லாவற்றையும் விட முதுகெலும்பில்லாத நம் மக்கள் !!!

இணைய தளங்களில் ஆவேசபடுகிற அளவில் தான் மக்களின் தைரியம் இருக்கிறது. அப்படியே ஒரு சிலர் உண்மையாக கருத்திட்டு கோபத்தை காட்டினாலும் சைபர் கிரைம் என்ற பயத்தை காட்டிவிட்டது அரசு.

சமூகம் !!

மக்களால்  கட்டி அமைக்கப்பட்ட இந்த சமூகம் இப்போது மது என்னும் கொடிய அரக்கனாலும், மின் தடையாலும் முடக்கிப்போடப்பட்டுள்ளது. தொழில், வேலை, விவசாயம் பாதிப்பது  ஒரு பக்கம் என்றால் இரவில்  தடை செய்யப்படும் மின்சாரத்தால் சரியான தூக்கமின்றி பகலிலும் தொடரும் உடல், மன சோர்வு, மன உளைச்சலில் கொண்டுபோய் விட்டு விடுகிறது. சிந்தனைகள் முழுவதும் எதன் வசமோ சென்றதை போல் மந்திரித்துவிட்ட கோழியாக வலம்  வருகிறார்கள் மக்கள். இங்கே மக்கள் என்று குறிப்பிடுவது  சென்னையை தவிர்த்த பிற பகுதிகளை சேர்ந்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். 

மனம் தடுமாற குடியை காரணம் சொல்கிறான் ஒருவன், ஓ அப்படியா என்று கேட்பதுடன் இங்கே நம் அனைவரின் கடமையும் ஏறக்குறைய முடிந்தே விடுகிறது. குடிக்கிற எல்லோருமா தவறு பண்றாங்க என்ற மேதாவிகளின் விமர்சனங்களை சகித்துகொள்ளவும் பழகிகொள்ளவேண்டும் .

திரைத்துறை, தொலைக்காட்சி, மீடியாக்கள் 

திரைப்படம் விளம்பர படம் எடுக்கும் ஆண்களால் தான் கலாச்சாரச்சீரழிவு  என்ற கருத்துகள் விமர்சனங்கள் சுத்த அபத்தம் ! அவர்கள் படம் எடுக்கிறார்கள் என்றால் அதற்கு துணை போகும் பெண்களை என்னவென்று சொல்வீர்கள்...??! உடை குறைக்கவேண்டும், ஆபாச காட்சி இருக்கிறது என்றால் முடியாது என மறுக்காமல் அதற்கு  உடன்படும்  பெண்கள் இருக்கும் வரை இந்த சீரழிவு தொடரத்தான் செய்யும் !! தனது விருப்பத்திற்காக , பணம் புகழுக்காக தனது உடலை, பெண்மையை  கடைவிரித்துவிட்ட பெண்களால் நிரம்பி இருக்கிறது திரைத்துறை, விளம்பர மீடியாக்கள் !! 

பெண்களின் அங்கங்களை கேமரா ஜூம் செய்ய அனுமதித்துவிட்டு கேமராவை  குறை சொல்வதை போல் இருக்கிறது படம் எடுப்பவர்களை குறை சொல்வது ... 

இளைஞர் கூட்டத்திற்கு  தன் அங்கங்களை காட்டிவிட்டு, 'நான் காட்டுவேன் அதை நீ பார்த்து சலனபடகூடாது' என கூறுவது என்ன லாஜிக் தெரியல...உணர்ச்சிகள் அற்றவர்களா மனிதர்கள் ?!! இன்றைய இளைஞர்கள் கையில் இருக்கும் மொபைல் போன் ஒன்று போதும் எத்தகைய மோசமான நிகழ்வுகளையும் நிமிடத்தில் கண்டுகளிக்க......இதற்கு மத்தியில் வாழும் இன்றைய இளைஞர்கள்  ஒரு விதத்தில் பரிதாபத்துக்குரியவர்கள், இவர்களுக்கு எது சரி எது தவறு என்று வழிகாட்ட பெற்றோர்களோ, கல்வியோ, சமூகமோ இல்லை. 

பெண்களின் உடைதான் காரணம் என்ற கருத்துகளை படிக்கும் போது  இப்படி கேட்கத் தோன்றுகிறது...திரைப்படங்களில் நடிகைகளின் அரைகுறை உடைகள்  பாலியல் உணர்வுகளை தூண்டுகிறது இனிமேல் அது போன்று உடை அணியக்கூடாது, நாகரீகமாக இருக்கவேண்டும் என அரசாங்கம் கடுமையான உத்தரவு பிறப்பித்தால் என்ன...?!! (முதலில் அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள், அப்புறம் பார்க்கலாம்........!!)

குற்றவாளிகள்  எங்கும் இருக்கிறார்கள்?!

பல ஹாஸ்டல் அறை சுவர்கள் கூட சொல்லும்... பல்வேறு விதமான பாலியல் துன்புறுத்தல் மாதிரியிலான(?) கதைகளை !! ஒரு சிலர்  உடன்பட்டும் மற்றவர்கள் சகித்துக்கொண்டும் கடத்தவேண்டும் நாட்களை!

ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருவிலும் ஏன் ஒவ்வொரு வீட்டிலும் கூட ஒரு குற்றவாளி இருக்கலாம் மனபிறழ்வு, மனச்சிதைவு, தாழ்வு மனப்பான்மை, போட்டி பொறாமை, பழி வாங்கும் எண்ணம் , வன்மம்  நிரம்பிய மனது சந்தர்ப்பம் கிடைப்பதற்காக காத்திருந்து சந்தர்ப்பம் அமைந்தால்,  அப்போது தெரியும் நேற்றுவரை சாதுவாக தெரிந்த இவனா இப்படி என்று...!!???

டெல்லி பெண் விசயத்தில் பிடிபட்ட ஒருவரின் வயது 17,  மற்றொருவனுக்கு 18 இருக்குமாம் ??!! என்ன கொடுமை இது !! பாலியல் வெறியை தணித்துகொண்டதுடன் நில்லாமல் உறுப்பை சிதைத்து.......????!! இவர்களின் ரத்தத்தில், மூளையில், உடல் செல்களில் எதில் கலந்திருக்கும் இத்தகைய  வன்மம் !?  அந்த பெண்ணை பார்த்த அந்த கணத்தில் ஏற்பட்ட வன்மம் மட்டும் அல்ல இது, மனதின் ஓரத்தில் ஏதோ ஒரு பாதிப்பு, கோபம், காயம், வலி, வடு இருந்திருக்கிறது... அது இப்போது வெளிவந்து கோரத்தாண்டவம் ஆடிவிட்டு அமைதி அடைந்திருக்கிறது .

ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் ஒரு மிருகம்... அன்பிற்கு அர்த்தமோ...ஆண் பெண் பேதமோ...மனித நேயமோ...இடம் பொருளோ...எதுவும் தெரியாது அவ்வளவு ஏன் ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்து வந்ததும்  மறந்து போகும்...
மிருகம் வெளிப்படும் அந்த வேளையில்...

பாலியல் இன்பத்திற்காக, பாலியல் வறட்சி காரணமாக இவை நடக்கின்றன என்றால் நாம் இன்னும் மனித மனதை சரியாக புரிந்துகொள்வில்லை என்றே அர்த்தம்!

ஏதோ ஒன்றை அடைய முயன்று அது முடியாமல் இப்படி தீர்த்துகொள்கிறார்கள்  என்பதை ஒத்துக்கொள்ள முடியவில்லை என்றாலும் இதில் உண்மை இருக்கிறது. எதிலும் நிறைவு அடையாமை, மேலும் மேலும் வேண்டும் என்பதை போன்ற மனதிற்கு, ஏதோ ஒரு வடிகால் தேவை படுகிறது, சமூக சீரழிவு அரங்கேறுகிறது! 


மனிதநேயம், சக மனிதரின் மீதான அன்பு குறைந்து காழ்ப்புணர்ச்சி அதிகரித்துவிட்டது. நம் மதங்கள் கடவுளை முன்னிறுத்துகின்றனவே தவிர  ஆன்மீக விழிப்புணர்ச்சியை கொடுக்கவில்லை. மனிதனுக்குள் இருக்கும் ஆத்மாவை தூய்மை படுத்த முயற்சி செய்யாமல் தனி மனித துதிகள் பெருகிவிட்டது. 

ஒரு குற்றம் நடந்ததற்கு பின்னால் மறைமுக கா'ரணங்கள்' இப்படி பல இருக்கின்றன, ஆனால் செய்தவன் மட்டும் குற்றவாளி என கூண்டில் ஏற்றப்படுகிறான்...! வன்மத்தால் கொடுமை செய்தவனுக்கு தண்டனை வாங்கி தருவது பெரிய காரியமல்ல, வன்மம் ஏற்படாமல் தடுக்க என்ன வழியோ அதை செய்வதே மிக நல்லது !!

* * * * * * * * * * * * *
பாலியல் வன்முறை பெண்கள்  மீது மட்டுமல்ல பெண்களாலும் நடந்துகொண்டிருக்கிறது என்பது கொஞ்சமும்  ஜீரணிக்கமுடியாத உண்மை !! நேரம்  இருப்பின்  படித்து பாருங்கள் - பெண்களா இப்படி ??!!
மற்றும் எனது இரண்டு பதிவுகள் உங்கள் பார்வைக்கு
ஒரு அலசல் - குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு 
குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு ஏன்...?
* * * * * * * * * * * * * * 
பெண்களே காரணம்? பெற்றோர் காரணமா? இந்த பிரச்னைக்கு தீர்வு ஏதும் இருக்கிறதா ?? 
தொடர்ந்து பேசுவோம்...சிந்திப்போம் !!

வெள்ளி, நவம்பர் 18

ஏன் இந்த வெளிநாட்டு மோகம்...!?




பெரும்பாலான இளைஞர்கள் படித்து முடித்ததும் உடனே தேடுவது ஒரு நல்ல வேலை...! கல்லூரியை விட்டு வெளியில் வந்ததும் அரசாங்கமோ, பெரிய கம்பெனியோ 'இந்தா அப்பாயின்மென்ட் ஆர்டர்' என்று தூக்கி கொடுத்து விடாது. வேலைக்கான தகுதியை வளர்த்து கொள்வதுடன், தனக்கு தகுந்த வேலையை தேடுவதும் அவசியம். ஆனால் வெளியிடங்களில் வேலை தேடியே சோர்ந்து போய் விடுகிறான் நம் இளைஞன். எதற்கெல்லாமோ, எதன் பின்னாலோ ஓடி நாட்களை வீணாக கழிப்பவர்கள், வேலை மட்டும் உடனே கிடைத்துவிட வேண்டும் என்று ஆசை படுவது என்ன நியாயமோ தெரியவில்லை.

அதுவும் ஒருசிலர் படிக்கும் போதே வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்கிற ஆசையை, ஆர்வத்தை வளர்த்து கொள்கிறார்கள்...இங்கே தகுந்த வேலையோ சம்பளமோ கிடைக்காது என்கிற விதமாக இருக்கும் அவர்களின் பேச்சுக்கள் எல்லாம்...!?

வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் வசதியானவர்களை பற்றி இங்கே சொல்லவில்லை...இந்த நாட்டில் வேலை கிடைக்கவில்லை என்று அப்பாவிடமோ, அடுத்தவரிடம் கடன் வாங்கியோ விமானத்தை பிடிக்கும் இளைஞனை சொல்கிறேன்...கடன் வாங்கி வெளிநாட்டை தேடி செல்வதை விட அதே பணத்தை வைத்து சொந்த ஊரில் சிறு தொழிலை தொடங்கலாமே என ஏன் யோசிப்பதில்லை...?! பிழைக்க வழி வகை தெரியவில்லையா ?? துணிச்சல் இல்லையா ?? முன்ன பின்ன தெரியாத ஊரில் வாழ தைரியத்துடன் செல்லும் இளைஞனுக்கு, அந்த துணிச்சலை மூலதனமாக வைத்து சொந்த நாட்டில் உழைத்து  சம்பாதிக்க தெரியவில்லை எனும் போது வருத்தம் ஏற்படுகிறது.

நம் நாட்டை குறை சொல்ல ஆயிரம் காரணங்களை அடுக்கலாம். ஆனால் ஏன் இங்கே உழைக்க முடியவில்லை என்ற கேள்விக்கு சரியான பதில் இருக்கிறதா ? அப்படி உங்களுக்கு சாதகமாக பதில் வைத்திருந்தாலும், இங்கே இருக்கும் மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதையும் சொல்ல வேண்டி வருமே...?!  அரசாங்கம்,  ஊழல், லஞ்சம் என்று எந்த வித சமாளிப்பும் தேவையில்லை. உழைக்க கூடிய திறன் , மனோதிடம், உத்வேகம், தன்னம்பிக்கை, சுய மரியாதை இருந்தால் எங்கேயும் வாழ முடியும். கை நிறைய சம்பாதிக்க முடியும். 

ஆயிரம் வசதிகள் இருந்தாலும் சொந்த நாட்டில் சொந்த பந்தங்களுடன், மனைவி குழந்தைகளுடன் ஒன்றாக வாழும் வாழ்க்கைக்கு ஈடு இணை ஏதும் இல்லை. 

* மனைவி குழந்தைகளை விட்டு சென்று, பல வருடம் கழித்து திரும்பி வரும் சிலருக்கு,நெருங்கிய அந்த உறவுகளே அன்னியமாகி விட்டதை போல தெரியும் சோகம் மிக கொடுமை ?!

* முதலில் அன்பை பொழிந்த உறவுகள், வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தை அனுபவித்த பின்னர், வெறும் பணம்காய்ச்சி மரமாக மட்டுமே உங்களை பார்க்க கூடிய நிலை சகஜம் !!

* பணத்தின் ருசி கண்டவர்கள் ஒரு சிலரின் மூணு வருட அக்ரீமென்ட் முடிந்த பிறகும் மீண்டும் போக சொல்லி வற்புறுத்துவது வேதனை !

இன்னும் இருக்கிறது சொல்வதற்கு...(அடுத்த பதிவில் பார்த்துக்கலாம்னு இத்தோட நிறுத்திக்கிறேன்)

வெளிநாட்டு வேலையை பற்றி இப்படி என்னை ஆதங்கப்பட வைத்துவிட்டது நேற்று நடந்த ஒரு சிறிய சம்பவம்... 



உழைக்க என்ன வெட்கம் ?!

சொந்த தொழில், மாதம் செலவு போக வருமானம் 20,000 ரூபாய்...!! இரண்டு  வருடத்தில்,வந்த வருமானத்தில் சொந்தமாக இரு ஆட்டோ (லோன் ), கூட வேலை செய்ய துணைக்கு மற்றொருவர் மட்டுமே !! அப்படி என்ன வேலை என்கிறீர்களா ?? 

இஸ்திரி கடை நடத்துகிறார்...என்னங்க நம்ப முடியவில்லையா?? நானும் இதை வேறு யாரும் என்னிடம் சொல்லி இருந்தால் நம்பி இருக்க மாட்டேன், நேரில் சென்று பேட்டி எடுக்காத குறையாக விவரங்களை கேட்டு தெரிந்துகொண்ட பிறகே நம்பினேன்... 

நேற்று என் கணவர் வீட்டில் மின்சாரம் இல்லாத போது , அவசரமாக வெளில  அயன்(கரண்ட் அயனிங் அண்ட் கரி பெட்டி அயனிங் இரண்டும் இருக்கும்) பண்ணிட்டு வரேன்னு ஒரு ஷர்ட், பேன்ட் எடுத்து சென்றவர், போன வேகத்தில் திரும்பி வந்துவிட்டார்...'என்னாச்சுங்க' என்றேன். 'இரண்டு நாள் ஆகுமாம், எனக்கு இப்ப தேவை. சரி பரவாயில்லை அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்'னு கிளம்பிட்டார். எனக்கு ஆச்சர்யம் "ஒரு அரைமணி, ஒரு மணி நேரம் வெயிட் பண்ண சொன்னா பரவாயில்லை, இரண்டு நாள் என்றால் எப்படிங்க ?!"

"கடைல ஒரு இடம் பாக்கி இல்லாம வரிசையா பெரிய பெரிய பேக்ல துணிகள் இருக்கு, இருக்கிற துணிய பார்த்தா ஒரு வாரம் ஆகும் போல...!?" 

என கணவர் சொல்லவும் அப்படி என்ன ஸ்பெஷல் அந்த கடைல என்று எனக்கு ஒரு ஆர்வம் வந்து விட்டது. மாலையில் அந்த வழியாக போனபோது போய் விசாரித்தே விட்டேன். 

(வேலை மும்மரத்தில் இருந்ததால் எனது கேள்விக்கு பதில்கள் இன்ஸ்டால்மென்டில் வந்தன.கால் வலித்தாலும் பரவாயில்லை...முழுதும் தெரிந்து கொள்ளாமல் விடுவதாயில்லை) 

B.com படித்திருக்கிறார், ஒரு வருடம் இப்படி அப்படி என்று கழித்துவிட்டு, வேறு உதவி ஏதும் கிடைக்காத காரணத்தால், எங்க ஏரியாவில் இருக்கும் அக்கா வீட்டிற்கு வந்திருக்கிறார். அக்கா வீட்டின் வாசல் மர நிழலில், வண்டியில் ஒருவர் இஸ்திரி போட்டு கொண்டிருந்திருக்கிறார். அவரது வண்டியை சுற்றி ஏகப்பட்ட துணி பேக்குகள் இருக்குமாம். சில நாட்கள் வண்டியை ஓரமாக விட்டு விட்டு போய் விடுவாராம்.அந்த ஏரியாவில் அரசாங்க வேலையில் உள்ளவர்கள் அதிகம், கொஞ்சம் வசதியானவர்கள் உள்ள ஏரியா. 'இஸ்திரி போட ஆள் வராத போது எல்லோரும் என்ன செய்வாங்க' என்று யோசித்திருக்கிறார். ஒரு சுப முகூர்த்த நாளில் 'ஏன் இந்த தொழிலை நாம் செய்ய கூடாது' என்ற சிந்தனை தோன்றி இருக்கிறது. 

முறையான வேலை (துணிகளை சரியாக மடித்து வைக்கும் லாவகம்) தெரியாத போதும், ஒரு மாதம் வீட்டில் பழகி பார்த்திருக்கிறார். அக்கா கணவரின் உதவியால் வண்டி, இஸ்திரி பெட்டி, கரி எல்லாம் தயார்.  ஏற்கனவே அங்கே ஒருவர் இருப்பதால், அக்கா வீட்டு வாசல் சரிபடாது என்று அடுத்த தெருவில், வேப்பமரம் இருக்கும் இடமாக பார்த்து வண்டியை நிறுத்தி இருக்கிறார். 

அடுத்த ஸ்டெப் கஸ்டமர்களை தேடுவது...

புதிய நபர்களை நம்பி யாரும் துணிகளை கொடுக்க மாட்டார்கள்...அதற்காக தனது துணிகளை எடுத்து வந்து ஒவ்வொன்றாக மெதுவாக அயன் செய்வாராம். அவரது ஒரு சட்டை பல முறை அயன் செய்ய பட்டு இருக்குமாம் !(தொழில் பழகின மாதிரியும் ஆச்சு, பாக்கிறவங்களுக்கு யார் வீட்டு துணியவோ அயன் பண்றான்  என்று நினைக்கவும் வசதி ஆச்சு) இப்படி இவரது பிளான் வொர்க் அவுட் ஆகி, ஒரு பெண்மணி தனது குழந்தைகள் துணிகளை கொண்டு வந்து கொடுத்திருக்காங்க...இவர் அவரை அக்கானு கூப்பிட்டு  மிகுந்த மரியாதையாக, அன்பாக பேசி இருக்கிறார் (முதல் போனி ஆச்சே !) 

அந்த பெண் அப்படியே அடுத்த பெண்களிடமும் போய் 'பார்த்தா நல்ல பையனா இருக்கிறான், உங்க துணி எல்லாம் கொடுங்க, அயன் பண்ணுவான்' அப்படின்னு இவரது விளம்பர பிரதிநிதி ஆகிடாங்க. இப்படியே தொழில் பிக் அப் ஆகி மெய்ன் ரோட்டில் ஒரு கடையை வாடகைக்கு பிடித்து தொழிலை விரிவு படுத்தி விட்டார். அப்புறம் என்ன ஒரே ஏறு முகம் தான், அடுத்து புதிதாக இரு ஆட்டோ வாங்கி சம்பளத்திற்கு டிரைவர்களை அமர்த்திவிட்டார். இப்போது அதில் இருந்தும் வருமானம் வருகிறது...

திருமணத்திற்கு பெண் தயாராக இருக்கிறதாம், இவர்தான் இன்னும் ஒரு வருடம் போகட்டும் என்று இருக்கிறாராம். 

* * *

என்ன விவரங்கள் போதுமா இன்னும் வேண்டுமா ?! இப்ப மறுபடியும் முதலில் இருந்து படிங்க...என்னோட ஆதங்கம் சரிதானா ? இல்லையானு ?

* நெல்லையில் மதுரம் ஹோட்டல் அருகில் ஒரு கடை இருக்கிறது, இங்கே எப்படி என்றால், அக்கம் பக்கத்தில் வீடுகளில் இருந்து கொண்டு வந்து போடும்  துவைக்க/தேய்க்க வேண்டிய துணிகளை மொத்தமாக சேகரித்து ஒரு மினி ஆட்டோவில் ஏற்றி நாகர்கோவிலுக்கு(!) கொண்டு செல்கிறார்கள், அங்கே ரெடி ஆனதும் , மறுபடி எடுத்து வந்து கஸ்டமர்களுக்கு  கொடுக்கிறார்கள்...இந்த வேலை தினமும் நடக்கிறது...துணிகளும் வந்து குவிந்து கொண்டே இருக்கிறது...!!   

இப்படி ஒவ்வொரு இளைஞரும் உத்வேகத்துடன் உழைக்க தயாராகிவிட்டால் வெளிநாடு செல்வது  என்பது பழங்கதையாகி விடுமல்லவா ? 

இஸ்திரி வேலை என்று இல்லை, எத்தனையோ சிறு தொழில்கள் மலிந்து கிடக்கின்றன...அரசின் மானியம் வேறு இருக்கிறது...எதற்கு யாரை எப்படி அணுக வேண்டும் என்பது தெரிந்து விட்டால் போதும். 

சொல்ல போனால் அரசின் உதவியே தேவையில்லை...சுயமாக பல தொழில்கள் செய்யலாம். படித்த சிலர் கிராமத்தில் தங்கள் படிப்பின் உதவி கொண்டு விவசாயம் பார்த்து வருகிறார்கள்...! சொந்த ஊரில் சொந்த பந்தங்களுடன், தன் குடும்பத்தினர் புடை சூழ வாழும் ஒரு வாழ்க்கை எவ்வளவு அர்த்தமுள்ளதாக மகிழ்ச்சியாக இருக்கும்...?! வெளிநாட்டு வருமானம் அளவு இல்லை என்றாலும் ஒரு நிறைவு இருக்கும் அல்லவா ?! கணவன் ஓர் இடம் மனைவி, குழந்தை  ஓர் இடம் என்பது கசப்பான ஒரு வாழ்க்கை தானே ?(அப்படி வாழ்பவர்களை மட்டும் !)

என்ன செய்வது, எங்க தலைஎழுத்து இப்படி வெளிநாட்டில் லோல் படணும் என்று  இருக்கிறது என்று சலித்து கொள்ளாதீர்கள், உங்களுக்கு நீங்கள் தான் எஜமானன் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிக்கும் உரிமையும் உங்களது தானே ?! அப்புறம் என்ன ?! வேறு யாருக்கோ உங்களின் உழைப்பும், சக்தியும் வீணாகிறது, அதை உங்கள் சொந்த முன்னேற்றத்துக்கு பயன் படுத்தினால் அபரீதமான வளர்ச்சியை காணவும் முடியும், இறுதி வரை நிம்மதியான ஒரு வாழ்க்கையும் வாழலாம்...!? சிந்தியுங்கள் எம் தேசத்து இளைஞர்களே !! 

வாழ நினைத்தால் வாழலாம்...!வழியா இல்லை நம் பூமியில்...!!


பி.கு.

எனக்கு தெரிந்த சிலரின் வேதனையான வாழ்க்கையை நேரில் பார்த்து , அதன் மீதான என் ஆதங்கம் தான் இந்த பதிவு. யார் மனதையும் புண்படுத்துவது என் விருப்பமல்ல . வருத்தபடுத்தி இருந்தால் மன்னிக்கவும்.


படங்கள் _ நன்றி கூகுள்