சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், பிப்ரவரி 3

இறுதிச்சுற்று...!



ஆரம்பம் முதல் இறுதி வரை மிக ரசித்த படம்... ரித்திகா இந்த பெண்ணை எங்கே கண்டுப் பிடித்தார்கள் என்று ஆச்சர்யப் பட வைத்தார். படத்தை பார்க்கும் முன் விஜய் சூப்பர் சிங்கரில் கெஸ்ட்டா இந்த பெண்ணை பார்த்தப் போது ரொம்ப ரொம்ப சிம்பிளாக நடிகை என்ற  எந்த அடையாளமும் இல்லாமல் வந்து அமர்ந்தார். மாதவனுக்கு இந்த சின்ன பொண்ணு ஜோடியா என்ன படமோ எப்படி இருக்குமோ என்று ஒரு சலிப்பு எனக்கு. பொதுவாக ரிலீஸ் ஆகுகிற படமெல்லாம் பார்க்கிற வழக்கம் இல்லை ரொம்ப யோசிச்சு செலக்ட் பண்ணிப் பார்ப்பேன்

ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை 'ஆவி கோவை' தனது பேஸ்புக் ஸ்டேடஸில் மாதவனின் நடிப்பை சிலாகித்ததை  பார்த்ததும் இந்த படத்தை பார்த்தால் என்ன என்று தோன்றியது. அன்னைக்கு எனது வேலைகள்  முடிந்து  வெட்டியாக வேறு இருந்ததால் நானும் கணவரும் உடனே  கிளம்பியும் விட்டோம். தியேட்டரில் சொற்பக் கூட்டத்தை பார்த்ததும் அடடா தப்பா Choose  பண்ணிட்டோமோ அரண்மனை 2 (ஹவுஸ் புல்) போய் இருக்கலாமோ,  சரி எதுனாலும் நேருக்கு நேராச் சந்திப்போம் என்ற வீராவேசத்துடன் உள்ளே சென்று சீட்டில் அமர்ந்தேன்.

சும்மாச் சொல்லக் கூடாது ஆரம்பம் முதல் சீன் பை சீன் திரையுடன் என்னை ஒன்ற வைத்துவிட்டது. ரித்திகாவை எப்படி பாராட்ட என்றே தெரியவில்லை அந்த பொண்ணு நடிச்சிருக்குனுலாம் சொல்ல முடியாது, என் கணவரிடம் சொன்னேன், இந்த பொண்ணு ஒரு ஸ்போர்ட்ஸ்வுமன் ஆக இருப்பாளோ என்று... அந்த அளவிற்கு ரொம்ப சாதாரணமாக அனைத்தையும் கையாண்டாள்.  அந்த பேச்சு(டப்பிங்கா   நம்ப முடியவில்லை) அந்த ஸ்டைல் அந்த நடை அந்த பார்வை... கண்ணா அது என்னமா உணர்ச்சியை வெளிக் காட்டுது. நடனமா நளினமா என்று இமைக் கொட்டாமல் பார்த்தேன். ஒவ்வொரு அசைவும் தனித் தனியாக ரசிக்கவைத்தது. இதற்கு முன்  ஷோபாவை இப்படி ரசித்திருக்கிறேன்.

பொதுவாக மாதவன் அடிக்குரல்ல பேசுற  படத்தை தவிர்த்துவிடுவேன், டிவியில் படம் போட்டாலும் பார்க்க மாட்டேன். உருவத்துக்கும் குரலுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி இருக்கும். இந்த படத்துல ரொம்பவே ஸ்மார்ட்.  இறுக்கமா இருக்கணும் அதே நேரம் இயல்பாவும் தெரியணும் என்பதைப் பார்வையாளனிடம் வெளிப்படுத்திய விதத்தில் மாதவன் நடிப்பு அட்டகாசம். நடிப்பை பொறுத்தவரை நம் தமிழ் திரையுலகம் இவரை அவ்வளவாக பயன்படுத்தவில்லை என்ற வருத்தம் ஏற்பட்டது.

நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்த  படம், அவரும் தனது பாத்திரத் தன்மையை உள்வாங்கி மன உணர்வுகளை முகத்தில் அருமையாக வெளிப் படுத்தி இருந்தார். தமிழ் நாட்டு மீனவப் பெண்ணுக்கு வடநாட்டுப் பெண் சாயல் எப்படி என யோசிப்பதற்கும் ஒரு சிறு கதை வைத்தது அழகு.   நாசர் ராதாரவி உள்பட நடித்த அனைவருமே நடிப்பில் அவ்வளவு கச்சிதம்  நடிகர்களுக்குள் இருக்கும் நடிப்பை   கதைக்கு ஏற்றப் படி வெளிக் கொணர்ந்து  நடிக்க வைத்தது  இயக்குனரின் திறமை.     

திருமதி. சுதாவின் இயக்கம் மிக பாராட்டத்தக்க ஒன்று...ஒவ்வொரு பிரேமிலும் அவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார். அவரது உழைப்பு வீண் போகவில்லை, இணைய உலகமே கொண்டாடித் தீர்க்கிறது. ஆனால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடைய வேண்டுமே என்ற ஆதங்கம் எனக்கு. ஒரு குத்து பாட்டு, டாஸ்மாக் விளம்பரப் பாடல், ரத்தம் தெறிக்கத் தெறிக்க கொ*லைவெறித் தாக்குதல், அம்பது பேரை தூக்கி வீசுற ஹீரோயிச  சண்டை, காதைப் பிளக்கும் இசை, வெளிநாட்டில் ஒரு பாடல் இதெல்லாம்  தான்  படத்தின் இலக்கணம் என தமிழ் ரசிகனின் புத்தியில் பதிந்துவிட்டது.  தற்போது பேய்களின் காலம் வேறு, அதுவும் சிறு குழந்தைகளை ஈர்பதற்காக காமெடியை கலந்துக் கட்டி பேய் பிசாசுக்களை தாராளமாக நடமாட விட்டிருக்கிறார்கள். இப்போதெல்லாம் பேய் பிசாசு என்று ஒன்றும் இல்லை எல்லாம் சும்மா லுலுலாயிக்குனுச் சொன்னா சின்னப்பசங்க எங்க கேட்குறாங்க .    சினிமா சொல்றது மூடநம்பிக்கை என்றாலும் நம்பித் தொலைக்குறாங்களே .

இறுதிச்சுற்று காக்கா முட்டை போன்ற படங்கள் குறிஞ்சிப் பூக்கள் போல... சினிமாவைக் கொண்டாடும் ரசிகர்கள் இந்த படத்தையும் கொண்டாடவேண்டும்.  சம்பந்தப் பட்டவர்களை பாராட்டி உற்சாகப் படுத்த வேண்டும். விளையாட்டுத்துறையில் நிலவும் அரசியலைச் சாடுகிறார்கள். இந்த படத்தில் சமூகத்திற்கான அறிவுரைகளை வசனங்களின் மூலமாகச் சொல்லவில்லை ஆனால் உணர்த்துகிறார்கள்.  கடந்த வாரம் ஆஸ்திரேலியாவை வென்று கோப்பையை கைப்பற்றிய  பெண்கள் கிரிக்கெட் அணியை பற்றி எத்தனை பேருக்கு தெரியும், எத்தனை பேர்கள் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் போட்டோம், என்னையும் சேர்த்துதான். இப்படித்தான் இருக்கிறது நமது சமூக அக்கறை எல்லாம். முடிந்தவரை நல்ல தமிழ் சினிமாக்களை வாழ்த்துவோம் பாராட்டுவோம்.    (சினிமாவைப் பற்றிய பதிவில் வேறெப்படி நான் சொல்ல) :-)

சுவாரசியத் துளிகள் 

ரித்திகா ஒரு குத்துச்சண்டை வீரர் என்பது படம் பார்த்தப்பிறகு தான் தெரிந்தது . முதலிலேயே தெரியாமல் இருந்ததும் நல்லதுதான், விமர்சனங்கள்  படிக்காமல் படம் பார்ப்பது சுவாரசியமானது என்பதை போல...  

நாயகி நாயகனை புரிந்துக் கொண்டப்பின்  இருவரும் அருகருகே இருக்கும் சந்தர்ப்பங்களில் அது குத்துச் சண்டை பயிற்சியாக இருந்தாலும் மெல்லிய நேச இழை நிழலாடியது அற்புதம். ஒளிக்காட்சி அமைப்பு மனதை ஈர்த்தது.  

குரு சிஷ்யை  காதல் எப்போதுமே தனித்துவமானது...உடல் தாண்டிய உணர்வு ரீதியிலான நேசத்தை பரிமாறியும் சமயங்களில் பரிமாற முடியாமல் தவிக்கும் தவிப்பை அனுபவித்தவர்களால் மட்டுமே உணர  முடியும்.  குருவின் ஒற்றைப்பார்வை ஒற்றைப்புன்னகை 'ம்' என்ற ஒற்றை வார்த்தை(?) ஏதோ ஒன்று போதும் சிஷ்யைகள்  ஜீவித்துக் கொள்ள...!  குரு தனக்குச் செய்ததற்கு நன்றி பாராட்ட, தான் எதைக் கொடுப்பது என்றெல்லாம் அதிகம் யோசிக்காமல், வெற்றி பெற்றதும் குருவையும்  தன்னையும் அழிக்க முயன்ற சந்தர்ப்பவாதி எதிரியை இரண்டு குத்தில்  தரையில் வீழ்த்தி, எதிர்வரும் அத்தனை பேரையும் மோதி ஒதுக்கித் தள்ளி , குருவிடம் நேராக  ஓடிச்சென்றுத் தன்னை முழுவதுமாய் ஒப்படைத்து சரணாகதி அடைந்த அந்த ஒரு நொடி... எனது சுவாசத்தை நான் மறந்த தருணம் அது !!!

'நீ  எனக்காகச் செய்யும் விசயமெல்லாம்  காதல் இல்லாமல் வேறென்ன?'  

விழிகளில் வழியும் எனது  கண்ணீரில் இருக்கிறது பெண்ணே உனது கேள்விக்கான எனது பதில்...!!

* * * * * * * * * * 
 பிரியங்களுடன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா 





வெள்ளி, டிசம்பர் 11

சிம்புவின் சைக்கோத்தனம் - Ban Beep Song



எவ்வளவு ஆபாசமாகவும் படம் எடுக்கலாம், மிக வக்கிரமாக  பெண்களை வர்ணிக்கலாம், பெண்ணை இழிவுப் படுத்தி வசனங்களால் வன்புணர்வு செய்யலாம், நடிகைகளின் ஆடைகளை கிழித்து அலங்கோலப்படுத்தி பேஷன் இது என காட்டலாம், பாடல் வரிகளில் நேரடியாக பெண்ணை கேவலமாக வசை பாடி கவிதை என கொக்கரிக்கலாம் ...இது எல்லாமே சாத்தியம் இன்றைய சினிமாக்களில்!? யாரும் இங்கே கேள்வி கேட்க மாட்டார்கள், ஏன் அதில் நடிக்கும்  பெண்ணுக்கே அதை பற்றி எந்த கவலையும் இல்லை. பணம் புகழ் மட்டுமே முக்கியம் தன்மானம் சுயகௌரவம் எல்லாம் வெறும்  வார்த்தைகளாகிவிட்டன! 

இப்படிதான் ஒரு சினிமா எடுக்கப்படவேண்டும் என்ற எந்த சட்ட திட்டமும் திரைத்துறைக்கு கிடையாது, எடுத்து முடித்த பிறகும் தணிக்கை துறை சர்டிபிகேட் கொடுத்து தனது கடமையை முடித்துக்கொள்ளும். வக்கிரம் வன்முறை ஆபாசத்தில் ஊறிய சினிமாக்களால் சீரழியும் இளைய சமுதாயத்தை பற்றி நினைக்கக் கூட இங்கே நமக்கும் நேரமில்லை. அதனால்தான் கொளுத்திவிட்டு கொழுப்பெடுத்துத் திரிகிறார்கள் சிம்பு, அனிருத் போன்ற ஆட்கள்.     

சிம்புவுக்கு ஏற்பட்ட காதல்கள் எல்லாம் தோல்வி ஆனதன் பலனை சம்பந்த பட்ட பெண் அனுபவிக்கிறதோ இல்லையோ நாம்  நன்றாகவே  அனுபவிக்கிறோம், இவனது காதல் தோல்விகளை(?) காரணமாக வைத்து தொடரும் அவனது படங்கள், பாடல்கள் அனைத்திலும் பெண்களை இழிவுப் படுத்தி வக்கிரமாக வசனம் பாடல் என எழுதி ஆபாச நடனம் அமைத்து என்று தனது மன வக்கிரத்தை ஒவ்வொன்றாக மேடை ஏற்றிக் கொண்டிருக்கும் சிம்புவின் சமீபத்திய அழிச்சாட்டியம் அனிருத் இசையில்  பாடி யூ டுயூப்பில் வெளிவந்திருக்கும்  'BEEP SONG'  

சிம்பு நல்ல திறமையான மனிதரின் மகன்...அப்பாவைப் போன்றே சிம்புவும்  திறமைசாலிதான்  ஆனால் மன  பக்குவமின்மையால் தடம் மாறி வாய்க்கு வந்ததை எல்லாம் பொது வெளியில் படையல் போடும் லெவலுக்கு போய்விட்டது மகா கேவலம்.  காதலித்ததாக சொன்ன நயன்தாரா  சோர்ந்துப் போகாமல் சிம்புவை சிறிதும் லட்சியம் செய்யாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று வரிசையாக படங்களில் நடித்து முன்னேறி சினிமாவில் இன்றைக்கு நம்பர் ஒன் நடிகை,  ஆனால்  சிம்புவோ  இன்னும் ஆரம்பிச்ச இடத்திலேயே நிற்கும் பரிதாபம்...?!!

காதலில் தோல்வி கண்டவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க என்று செல்வது  நல்ல மனிதர்களின் குணம் ஆனால் தான்  ஒரு  மன நோயாளி என்பதற்கு தற்போதைய உதாரணம் இந்த பாடல்.  கேலி செய்யும் ஆண்களை பெண்கள்  'நீயெல்லாம் அக்கா தங்கச்சி கூட பிறக்கல' என்று திட்டுவார்கள், ஆனால் கூட பிறந்த தங்கச்சி, பெத்த அம்மா  இருந்தும் பெண்ணை கேவலப் படுத்தும் இந்த பாடல் எந்த எண்ணத்தில் பாடப்பட்டிருக்கும்  என்று நினைத்துப் பார்க்கவே கூசுகிறது.    அவர்கள் இதை கேட்டு இருப்பார்களா கேட்டும் ஒன்றும் சொல்லவில்லையா ? உடன் நடிக்கும் நடிகையை தொட்டுக்கூட  நடிக்காத அப்பாவிற்கு (டி.ராஜேந்தர்) இப்படி ஒரு பிள்ளை ... அந்த அப்பாவும்  இந்த பாடலை கேட்டும்  பெருசா ரியாக்சன் காட்டாம  தொலையுது சனியன் என்று இருந்துவிட்டார் போல

எவண்டி உன்ன பெத்தான் அவன் கைல கிடைச்சா செத்தான் என்று பாடியபோது ரசித்த அதே கூட்டம் தான் இந்த பாடலையும் ரசிக்கிறது...ரசிக்கப் போகிறது. ஆகச் சிறந்த பாடலான கொலவெறி பாடலை போல இதையும்  ஹிட் ஆக்காமல் ரசிகர்களும் ஓயப் போவதில்லை.  பெண்ணைத் திட்டி வசனம் பாடல் வைத்தால் அதை எல்லோரும் விரும்புவார்கள் குறிப்பாக இளைஞர்கள் என்ற எண்ணம் இருக்கவேதான் இது போன்றவை பிரபலமாகின்றன.  ஆனால் தாய் மனைவி அக்கா தங்கை என்று பெண்களுடன் இணைந்து நன்றாக வாழ்கிற எந்த ஒரு நல்ல ஆண்மகனும் இந்த பாடலை காரித்துப்புவானே தவிர ரசிக்க மாட்டான். 

எனக்கு என்ன கவலை என்றால் நாளையே இந்த பாடல் சூப்பர் சிங்கரிலும், சன் சிங்கரில் சின்ன சின்ன குழந்தைகளினால் பாடப்படுமே , பாடுவதற்கு முன் பலமுறை மனப் பாடம் செய்வார்களே,  நினைச்சுப் பார்க்கவே கலக்கமாக இருக்கிறது.

சினிமாக்களில் வசனம் என்றால் கூட சில நொடிகளில் கேட்டதும் மறந்துவிடலாம், ஆனால் பாடலாக வரும்போது பலமுறை ஒலிக்கும், கேட்டு கேட்டு மக்களுக்கும் பழகிவிடும், நாளை வீட்டில் சாதாரணமாக பேசப்படும் ஒரு வார்த்தையாக இந்த வார்த்தை மாறிவிடும்!!???

இன்னொரு கொடுமை என்னவென்றால் மழை வெள்ளப் பாதிப்பை பற்றிய செய்திகளை  பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை இந்த பாட்டு பிடித்துக் கொண்டதுதான். 

இந்த பாட்டுக்கு எதிர்வினை காட்டினால் அதுவே இதற்கு ஒரு விளம்பரம் ஆகிவிடும் என்ற எண்ணத்தை புறம் தள்ளிவிட்டது எனது கோபம். உடல் முறுக்கி நெளியும் சிறு புழுவென எனது எதிர்ப்பை இங்கே காட்டிவிட்டேன். எதிர்ப்புகள் பல ஒன்று சேர்ந்தால் அந்த பாடல் நீக்கப்படவும் ஒரு வாய்ப்பு இருக்கிறது.  மது வேண்டாம் என்ற பாட்டிற்கு சிறை இந்த பாட்டிற்கு குறைந்தபட்சமாக தடை... ???!!!

#BAN BEEP SONG#


வெள்ளி, பிப்ரவரி 13

'சினிமா' அவ்வளவு முக்கியமானதா என்ன ?!


இன்றைய சூழலில் எது முக்கியமோ இல்லையோ  சினிமா ரொம்ப ரொம்ப முக்கியம்... அப்படின்னு பத்திரிக்கை ஊடகங்கள் சமூக வலைத் தளங்கள் சொல்கின்றன.  சமூகத்தில் பல்வேறு  பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்து கண்முன்னால் நின்றாலும் அனைத்தையும்    அசட்டை செய்து  தமிழ் கூறும் நல்லுலகம் கேளிக்கையின் பின் மட்டுமே போய்  கொண்டிருக்கிறது.  சினிமாக்கள் பற்றிய செய்திகள் , கருத்துக்கள் , தத்துவம் ஆதங்கம்,கோபம்  என்று எங்கும் இதே  பேச்சு ! வலைத்தளங்களில் விழிப்புணர்வு பேசியவர்களும் சினிமா விமர்சனத்தை  கையில் எடுத்தது காலத்தின் கஷ்டம்  !! 

முன்பு சினிமா விமர்சனத்தை ஒரு சிலர் எழுதினார்கள், இன்று பெரும்பாலோர் இதே வேலையாக இருக்கின்றனர். கொடுமை என்னவென்றால் படைப்பாளிகள், எழுத்தாளர்கள் கூட சினிமா பற்றி எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டதுதான். சினிமாவை பற்றி  எழுதினால் பலரால் தாம் கவனிக்கப் படுவோம் என்பதால் கூட இருக்கலாம் என்றே எனக்கு தோன்றுகிறது. 

விழிப்புணர்வுப்  பதிவு என்றால் ஒரு செகண்டில் கடந்து செல்பவர்கள் சினிமா என்றால் மட்டும் அதீத கவனம்?  மக்களின் மனநிலையை புரிந்த சினிமாக்காரர்களும் தங்கள் மனம் போனப்படி ஒவ்வொரு நாளும்  ஒரு  கதையை பின்னி இளைஞர்களின் நேரத்தை பணத்தைப்  பறிக்கிறார்கள். சினிமா ஒரு பொழுதுப்போக்கு என்பது மாறி பலரின் பொழுதை வீணாகப் போக்கிக் கொண்டிருக்கிறது. 

உலக நாடுகள் சினிமாவை கையாளுவதற்கும் இந்தியர்கள் அதிலும் தமிழர்கள் கையாளுவதற்கும் அதிக வித்தியாசம் உண்டு. மற்றவர்களுக்கு எப்படியோ ஆனால் தமிழர்களுக்கு சினிமாதான் சுவாசம் வாசம் எல்லாம். ஐந்து முதல்வர்களை கொடுத்த பெருமை போதாதென்று நாளைய முதல்வர்களையும் சினிமாவிற்குள் தான் தேடிக் கொண்டிருக்கிறோம். சினிமா பிரபலங்கள் யாரிடமும் ஒரு நன்றியோ மன்னிப்போ கேட்டுவிட்டால் அவ்வளவுதான் என் ஹீரோ மனசு மாதிரி யாருக்கு வரும் என்று புகழ்ந்து அந்த ஹீரோவை தெய்வமாக்கி விடுவார்கள் ரசிகர்கள்.  கேமராவிற்கு முன்னால் என் நாடு என் மக்கள் என்று வேற ஒருத்தர் சொல்லிக் கொடுத்த வசனத்தை பேசியவுடன் தமிழன் இங்கே தலைவானு  உணர்ச்சிவசப்படுவான் . கோவில் கட்டுவான் சிலை வைப்பான் பாலுத்துவான் பைத்தியமாவான் செத்தும் போவான் ... மகா கேவலம்!!?

இதையெல்லாம் விட கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் சமூக வலைத்தளங்களில் உலவும் படித்தவர்கள் புரியும் அதிகப் பிரசங்கித்தனங்கள் தான் சகிக்க முடியவில்லை. இவங்களே  தங்களை  இணைய மொன்னைகள் நொன்னைகள் வெண்ணைகள் தொன்னைகள் என்று அழைத்துக் கொல்லுவார்கள். சினிமாவை சினிமாவாக மட்டும் பார்க்காமல் டாக்டரேட் வாங்குமளவு ஏ(க்)கப்பட்ட ஆராய்ச்சிகள் புரிவார்கள் !!  

இன்றைய விமர்சனங்களின் தரம் ?!

'ஐ' படம் பற்றி ஒரு பேஸ்புக் பிரபலம் இப்படி விமர்சனம் செய்திருந்தார், எமியின் மார்பகத்தை (இதை விட நாகரீகமாக எனக்கு சொல்ல தெரியல) நம்பி மட்டுமே படம் எடுத்திருக்கிறார் இயக்குனர் என்று. மூன்று மணி நேர படத்தில் இவ்வளவோ காட்சிகள் இருக்க இவர் கண்ணுக்கு இப்படி. நடிகையை தீவிரமாக ரசித்து வரிக்கு வரி ஆபாசமாக விமர்சனம் எழுதியதோடு மட்டுமில்லாமல் படத்தில் பெண்களை மோசமாக சித்தரிச்சிருக்காங்கனு வேற வருத்தப்படுறாரு இன்னொரு நல்லவர். இவர்களை போன்றவர்கள் இணையம் முழுவதும் நிறைந்திருக்கிறார்கள். அப்புறம் 'ஐ' படத்துல வில்லன்கள் பழிவாங்கல் காட்சிகளை பார்த்து குழந்தைகள் பயப்படுவாங்க கூட்டிட்டு போகாதிங்கன்னு ஒருத்தரோட அட்வைஸ்.  படம்  பார்த்திட்டு இருக்கும்போது பக்கத்துல ஒரு சின்ன பையன் வில்லன் HULK மாதிரி மாறிட்டான்னு சிரித்தான். ஆங்கிலப் படங்கள் கார்ட்டூன்கள் என பார்த்து பழகிவிட்டார்கள் இன்றைய குழந்தைகள். ரத்தம் தெறித்து விழும் பல சினிமாக்களின் கொடூரக் காட்சிகளுக்கு இது தேவலாம்.

செல்போன் கேமரால ஒரு செல்பி கூட சரியா எடுக்கத் தெரியாத ஆட்கள் எல்லாம் கேமரா கோணத்தை பத்தி இரண்டு பக்கத்துக்கு விமர்சனம் எழுதுறாங்க...கொடுமை! ஒன்றை பற்றி பேச அதை குறித்த அறிவு தேவையில்லை ஆனா விமர்சிப்பதற்கு அதை பற்றிய அடிப்படை கொஞ்சமாவது தெரிந்திருப்பது நல்லது. குறை மட்டும் சொல்வதற்கு பெயர் விமர்சனம் அல்ல,  இணையவாசிகள் பொழுதை சந்தோசமாக கழிக்க வேண்டும் என்று படம் பார்க்க போவதாக தெரியவில்லை. ஏதோ ஒரு குறையை கண்டுப் புடிச்சு சொல்றவங்களைத்தான் இந்த தமிழ் கூறும் இணைய உலகம் அறிவாளியா நினைச்சுக்குமாம்னு வரிஞ்சு கட்டிட்டு எழுதி தள்ளுறாங்க...

காடு என்று ஒரு படம், காட்டை பற்றி மரத்தை பற்றி மலைமக்களின் வாழ்வுரிமையை பற்றிய படம். அங்குள்ள  மனிதர்கள் மிருகங்கள், பறவைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதையும் , மரங்கள் வெட்டப்படுவதையும் அரசாங்கம் கவனிப்பதில்லை என்பதை இப்படம் சிறிது தொட்டு சென்றது. சமுத்திரக்கனி பேசும் வசனங்கள் அருமை ரகம்.  இப்படத்தை விமர்சனம் செய்த ஒரு மேதாவி ‘இதில் காதல் காட்சிகள் அவ்வளவாக ஈர்க்கவில்லை, இருவருக்குமிடையிலான காதல் சரியாக சொல்லப் படவில்லை என்று தனது அறிவுக்கு எட்டியதை சொல்லி இருந்தார்.

தலைப்புலேயே காடு  எதை  பற்றிய படம் என்று தெரிகிறதே இருந்தும் ஒரு சினிமானா இதெல்லாம் இருக்கணும் என்று இவர்களாக ஒரு இலக்கணத்தை வரையறுத்துக் கொள்வார்கள்.    

சிஜி வெளிநாட்டுக்காரணுது மாதிரி இல்ல கிராபிக்ஸ்ல அவனுங்கள அடிச்சிக்க முடியாது , இப்டி எடிட் பண்ணி இருக்கலாம், திரைக்கதையை வேறு விதமா கொண்டு போய் இருக்கலாம்  என்று ஏகப்பட்ட லாம்கள் சொல்றவங்களுக்கு ஒன்னு மட்டும் ஏன் புரியமாட்டேங்குது, பணம் போட்டு படம் எடுக்கிறவங்க  அவங்களுக்கு பிடிச்ச மாதிரி, தெரிஞ்ச அளவுக்கு தானே எடுப்பாங்கனு.

நிறைய எதிர்ப்பார்த்து போனேன், டிக்கெட், வண்டிக்கு பெட்ரோல், பார்க்கிங் செலவு, பாப்கான், ஐஸ்க்ரீம் செலவு என ஒரு லிஸ்ட் போட்டு அத்தனையும் வீணா போச்சே என்பார்கள். உங்களுக்காக நீங்க   பண்ணிய  செலவுக்கு ஒரு நடிகனோ இயக்குனரோ எப்படி  பொறுப்பாக முடியும்? அவங்களா கையை புடிச்சு இழுத்துட்டு வந்து படத்தை பாருங்கனு  சொன்னாங்க....உங்களுக்கு பொழுது போகலன்னு போகலாம், அல்லது பேஸ்புக்கு ஒரு ஸ்டேடஸ் தேத்தலாம்னு போலாம் தானே...

சினிமா துறையினரைப் பொறுத்தவரை அது அவங்க  தொழில். தொழிலுக்காக ஆயிரம் பொய்  சொல்லுவாங்க.  படத்தை ப்ரோமோட் பண்ண என்ன ஜிகினா வேலையும் காட்டத்தான் செய்வாங்க,  ஆஹா ஓஹோன்னு பண்ற விளம்பரத்தை பார்த்து ஏமாந்து படம் பார்த்துட்டு இது நொட்டை  இது நொள்ளை குறை  மட்டுமே சொன்னா எப்படி? ஆறு வாரத்துல சிவப்பா மாறலாம்னு கூடத்தான் விளம்பரம் பண்றாங்க ... அப்டி யாராவது மாறி இருக்காங்களா, இல்ல சிவப்பா மாத்தலையேன்னு யாரும் வாங்காம இருக்காங்களா?

சினிமா மூலமா சமூக சேவையா செய்ய வராங்க ...சினிமா என்பது ஒரு கற்பனை உலகம், நம்மவங்க  சாதாரண புத்திசாலியா இருப்பாங்க  ஆனா  தியேட்டர்க்குள்ள  போனதும் டக்குனு  அதிமேதாவியா மாறிடுவாங்க. லாஜிக்னு ஒன்ன கிளைமாக்ஸ் வரைக்கும் தேடோ தேடுன்னு தேடி அது கிடைக்காதது தன்னோட தவறுனு கூட புரிஞ்சுக்காம லாஜிக்கே இல்லாம படம் எடுத்திருக்கானுங்க முட்டாப்பசங்கனு திட்டுவாங்க பாருங்க...., வேடிக்கை !! கேளிக்கை சினிமாவில் மெசெஜ் இருந்தே ஆகணும்  என்ற எதிர்பார்ப்பும் அதீதம்தான். பேஸ்புக்கில் இரண்டு வரி  மெசெஜ் சொல்ல முடியாத ஆட்கள் எல்லாம் சினிமாவில் மெசேஜ் தேடுவாங்க :-) 

ஒரு நடிகனோட ரசிகர்கள்  அடுத்த நடிகனை இழுத்துப் போட்டு கதற கதற வார்த்தை  வன்கொடுமை பண்ணுவாங்க. அப்புறம் அந்த நடிகனோட ரசிகர்கள் இந்த நடிகனை உண்டு இல்லன்னு பண்ண இப்படியே படம்  வெளிவந்த ஒரு வாரத்துக்கு ரணகளமா  இருக்கும். அதுக்கப்பறம் தான் வேற படம் வேற நடிகன் கிடைச்சிடுவானே.... சக மனிதனை படு ஆபாசமான வார்த்தைகளால் குத்திக் கிழிக்கும் உரிமையை  யார்  கொடுத்தாங்களோ தெரியல,... என்றாவது அதே வார்த்தைகள் திரும்பி அவர்கள்  மீதே எறியப்பட்டால் அன்றி அந்த வலி எவருக்கும் புரிய வாய்ப்பே  இல்லை.   

உங்களின் எதிர்மறையான விமர்சனமே தரமற்ற சினிமாவையும் பிரபலப் படுத்திவிடுகிறது.  ஆபாசமான காட்சிகள், வசனங்கள் என்ன என்ன இருக்கிறது உடை விலகுவது வரை  மிக தெளிவாக எடுத்துச் சொல்லி விமர்சித்து விடுகிறீர்கள். இசை படத்தை எடுத்த சூர்யாவுக்கு கூட  தெரியாது நாம இவ்ளோ ஆபாசமா காட்சிகள் வச்சோமான்னு ஆனா நம்ம விமர்சன சிங்கங்கள் அக்குவேறு ஆணிவேரா பிரிச்சு எரிஞ்சிட்டாங்க ... தேமேனு இருந்தவங்களையும் பார்க்க வச்ச புண்ணியம் உங்களுக்கு, இந்த லட்சணத்தில் தான் பல படங்கள் ஹிட்டாவுது. 'என்னை அறிந்தால்' அழகான தமிழ் டைட்டில் ஆனால் படத்துல ஏகப்பட்ட   ஆங்கில வசனங்கள், புரியவேயில்லை. கிளைமாக்ஸ்ல வில்லனை சர் சர்னு சீவித்தள்ளார் அஜித், திக்குன்னு இருந்துச்சு.,  அரைத்த மாவையே அரைத்ததை தவிர வேறு என்ன இருக்குனு எல்லோரும் ஆஹா ஓஹோ சொல்றாங்கன்னு கடைசிவரை என் புத்திக்கு எட்டவேயில்லை.

அதிகபிரசங்கித்தனமான சினிமா விமர்சனம் தேவையா ?

நாட்டுல எவ்வளவோ நடக்குற மாதிரி சினிமாக்களும்   வரட்டும் போகட்டும். நல்ல படங்களை ரசிக்கலாம் பாராட்டலாம் மாறாக அதை பற்றி மட்டுமே பேசி பேசி எழுதி எழுதி இதை தவிர வேறு ஒன்றுமே முக்கியம் இல்லை என்பதை போல ஏன் செய்யவேண்டும். விமர்சிக்கிறேன் பேர்வழினு வேலை மெனக்கிட்டு பக்கம் பக்கமா எழுத அதை ஒரு நூறு பேர் படிக்க அதுல பாதி பேர் அந்த சினிமாவ  பார்க்க, பார்த்த அவர்கள் மறுபடி அதே படத்தை விமர்சிக்க என்று விமர்சனங்கள் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. வெள்ளிக்கிழமை வந்தால்  போதும் எங்கும் புதுப்படங்களை பற்றிய அப்டேட்ஸ் தான். அன்னைக்கு  முக்கியமானவர்  யாராவது இறந்தாலும் கண்டுக்கொள்ளப் படமாட்டார்கள் என்பதே உண்மை...

சினிமாவை பற்றி இணையம் எங்கும் பேசி  இன்றைய இளைய சமூகத்தையும் அதை நோக்கி 'மட்டுமே' திருப்பும் வேலையை நீங்கள் செய்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதாவது புரிகிறதா?   

நம் மாணவர்களிடம் பாட புத்தகங்கள் தவிர  வேறு புத்தக வாசிப்பு என்ற ஒன்று சுத்தமாக இல்லை, பாடங்களை தவிர்த்து வெளி உலகம் எதுவும் அவர்களுக்குத் தெரியவில்லை, தெரிய வைக்கப்படவும் இல்லை. இதுதான் நம் கல்வியின் நிலை.  வகுப்பு பாடங்களுக்கு அடுத்ததாக அவர்களுக்கு அதிகம் தெரிபவை சினிமா ...சினிமா மட்டுமே ! எந்த நடிகன் எந்த படம் எந்த காட்சியில் சிறப்பாக நடித்தான் என்பது முதல் குறிப்பிட்ட வசனங்கள் வரை அவர்களுக்கு மனப்பாடம். பள்ளி, கல்லூரி மாணவர்களின் விளையாட்டு, பொழுதுப் போக்கின் இடங்களை  சினிமா பிடித்துக் கொண்டது.. அவர்களின் பேஸ்புக் டிவிட்டர் இன்ஸ்டாகிராம் வாட்ஸ்அப் தளங்களை பார்த்தாலே இதை தெரிந்து கொள்ளலாம். அவர்களின் ஸ்டேடஸ், கமென்ட்ஸ் இன்பாக்ஸ் மெசெஜ்களில் அதிகம் பேசப்படுபவை சினிமாவை பற்றி மட்டுமே.

சினிமாவும் தனது பங்குக்கு பாடல் வெளியீடு, First Look, டீசர், டிரைலர் என்று ஒரு படத்தை குறித்த செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு இளைய சமுதாயத்தினரை சினிமாவை சுற்றியே வலம் வர செய்கிறது. ரிலீஸ் ஆனதும் சமூக வலைதளங்களில் வேறு விமர்சனம் என்ற பெயரில் அக்குவேறு ஆணிவேராக படத்தைப் பிரித்து ஆராய்கிறார்கள். இவ்வாறு ஒவ்வொரு படத்திற்கும் இந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து பள்ளி கல்லூரி  மாணவர்களை அங்கே இங்கே திரும்பவிடாமல் சினிமாவைச் சுற்றியே சுழற்றிச் சுழற்றி  அடிக்கிறது.  இந்த சிக்கலில் இருந்து மாணவ சமூகம் என்று மீளுவது , யார் மீட்பது ??  

பிற துறைகளை போல திரைத்துறையும் பலருக்கு வாழ்வளிக்கிறது, அதை நம்பி பல குடும்பங்கள் ஜீவிக்கின்றன, அவ்வளவு ஏன்  இணையத்தில் சாதாரணமாக எழுத வந்த பலருக்கும்  ஒரு அடையாளம் கொடுத்திருக்கும் ஒரு நல்ல தொழில் சினிமா, அவ்வளவே. இதைத் தாண்டி தலைமேல் தூக்கிவச்சு கொண்டாடியே ஆகணும் என்ற எந்தவித அவசியமும் இல்லை.

சமூக ஊடகங்களில் இயங்குபவர்களுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து நமது மாணவ சமுதாயம் சரியான பாதையில்  செல்ல உதவவேண்டும்.  நம் வீட்டு குழந்தைகளும் இங்கேதான் உலவிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.  சினிமாவை தாண்டியும் உலகம் இருக்கிறது, அங்கே தான் தங்கள் வாழ்க்கைக்கான பொருள் புதைந்துக் கிடக்கிறது என்பதை மாணவர்கள் உணரும் காலம் வரவேண்டும்.

தெருவில் இறங்கி புரட்சியோ, மரக்கன்று நட்டு சமூக சேவையோ செய்யவேண்டும் என்று கூட இல்லை, சினிமாவைப்  பற்றி பொதுவெளியில் அதிகமாக பேசுவதை நிறுத்தினாலே போதும், சமூகத்திற்கு மிக பெரிய நன்மை செய்தவர்களாக  ஆவோம், (இந்த பதிவை எழுதிய என்னையும் சேர்த்தேதான் சொல்கிறேன்)
  
எங்களுக்கு எது தெரியுமோ அதை தான் பேசுவோம், எழுதுவோம் என பிடிவாதம் பிடிப்பவர்களை ஒன்றும் செய்ய  முடியாது, ஆனால் அவர்கள் இனிமேலாவது கொஞ்சம் யோசிக்கலாமே...!


வெள்ளி, அக்டோபர் 8

முள்வேலி....!

ஒரு பக்கம் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் அவலங்கள், தீவிர வாதம் போன்ற வன்முறைகளால் அவதி படும் மக்கள், ஆட்கொல்லி நோய்களால் மரணமடையும் மக்கள், விபத்து களால் உயிர் இழக்கும் மக்கள்....ஆனால் மற்றொரு பக்கம் "ஏன் படைக்கப்பட்டோம்.......?", "இன்று ஏன் இந்த சித்திரவதை அனுபவிக்கிறோம்.....??", "உயிர் எங்கள் அனுமதி இல்லாமல் ஏன் பறிக்கபடுகிறது....??" இப்படிப்பட்ட விடை இல்லாத கேள்விகள்.....??!! நாள்தோறும் சிலரின் சுயநலத்திற்காக மொத்த மொத்தமாக அப்பாவி மக்களை வதைத்து கொல்லுகிற கொடூரம்.....!!?

அது ஏன் எதற்காக என்று விவாதிப்பதற்காக இல்லை இந்த பதிவு....!!? எல்லோருக்கும் இருக்கும் மனசாட்சி என்ற ஒன்று ஒரு சிலருக்கு  இல்லாமல் ஏன் போய் விட்டது....?? மனிதம் அவ்வளவு மலிவானதா....?? அடுத்த உயிர் பறி போவதை பார்க்கும் போது நம் கண்ணிற்கு அது ஒரு நிகழ்வு, அவ்வளவே......அடிக்கடி ரத்த காட்சிகளை மீடியாக்கள்  மூலமாக பார்த்து பார்த்து நமக்கும் பழகி போய் விட்டது.....அதே நேரம் தன் ரத்த உறவுக்கு ஒன்று என்றால் துடிக்கிறோம்.....!கதறுகிறோம்....! அப்போது மட்டும் நம்முடைய இரக்க குணம், மனிதாபிமானம், அன்பு, பாசம்  வெளிப்படுவது  ஏன்...?? எனக்குள்ளும் இந்த கேள்வி அடிக்கடி எழுகிறது, நானும் இந்த ஜனசமுத்திரத்தில் ஒருத்தி  தான் என்பதை மறந்துவிட்டு.....!!?? 

சமீபத்தில் நான் பார்த்த ஒரு ஜெர்மானிய படம் 'THE BOY IN THE STRIPED PYJAMAS' என்னை பல விதத்தில் யோசிக்க வைத்தது....அதன் பாதிப்பில் தான்  இந்த பதிவு...

ஹிட்லர்  அரசாட்சி செய்த  காலம் அது.  யூதர்களை கொல்வதை  மட்டுமே முழு நேர வேலையாக செய்யக்கூடிய காலகட்டத்தில் நடந்ததாக சித்தரிக்கப்பட்ட ஒரு கதை. 'நாஸிகள் முகாம்' ஒன்றுக்கு ஜெர்மானிய ராணுவ அதிகாரி ஒருவர் தன் குடும்பத்துடன்  வருகிறார். அவரது ஒன்பது வயது மகன் 'ப்ருனோ' அவனை சுற்றி தான் இந்த கதை பயணிக்கிறது.

அந்த பையனுக்கு தனியாக வீட்டில் இருப்பது வெறுப்பாக இருக்கவே வெளியில் விளையாட  செல்கிறான். ஆனால் அருகில் யாரும் இல்லை.  பொறுமையிழந்த அவன் ஒருநாள் வீட்டின் பின் கதவை திறந்து அங்கு ஒரு 'முகாம்' இருப்பதை பார்த்து அங்கே ஓடுகிறான். அங்கே தடுப்பாக 'முள்வேலி' அமைக்கப்பட்டுள்ளது. அதனுள் இவன் வயதையொத்த ஒரு சிறுவன் அகதி உடை அணிந்து மெல்லிய தேகத்துடன் இருப்பதை பார்க்கிறான். அவன் அந்த யூத சிறுவனிடம், "எதுக்கு இந்த முள்வேலி போட்டிருக்காங்க.... விலங்குகள் வராமல் இருக்கவா....??" ,என்று கேட்கிறான். அதற்கு யூத சிறுவன் "மனிதர்கள் வராமல் தடுக்க....!!" என்று பதில் சொல்கிறான். (இந்த  ஒரு பதில் சட்டென்று நம் முகத்தில்  அறைவது போல் இருக்கிறது)

ஜெர்மானிய  சிறுவனுக்கு 'இந்த அகதி முகாம்', 'யூத சிறுவனின்  பதில்' என்று எதுவும் புரியவில்லை. மறுநாள் அந்த அதிகாரியின் வீட்டில் ஒரு விருந்து நடக்கிறது . அதற்கு ஒய்ன் கிளாஸ்  கழுவும் வேலைக்காக முகாமில் இருந்து யூதச் சிறுவன் அழைத்து வரப்படுகிறான்.  ஜெர்மானிய சிறுவன், யூத சிறுவனுக்கு கேக் கொடுத்து சாப்பிட சொல்லும்போது ராணுவ அதிகாரி பார்த்து விடுகிறார்......ஜெர்மானிய சிறுவனும் அப்பாவின் மேல் உள்ள பயத்தில் 'இவனை எனக்கு  தெரியாது' என்று சொல்லவும் கேக் திருடியதாக  எண்ணி யூத சிறுவனை அடிக்கிறார்.

மறுநாள் தன்  தவறுக்கு மன்னிப்பு கேட்க அவனை தேடி வருகிறான் ப்ருனோ. ஆனால் யூத சிறுவன் பெருந்தன்மையாக "அகதியாக இருப்பவன், அவமானங்களை தாங்கி பழகி விட்டான் " என்கிறான். இருவருக்குள் நட்பு பூ மலருகிறது.

யூத முகாமில்  இருப்பவர்களை கூட்டங்கூட்டமாக கொல்லும் வேலை (கொடூரம்..!?)  ஒரு பக்கம் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த விஷயம் தெரிந்த  அந்த ராணுவ அதிகாரியின்  மனைவி அதிர்ச்சி அடைந்து கணவனுடன் சண்டை இடுகிறாள். அதற்கு அந்த ராணுவ அதிகாரி, 'ஹிட்லரின் கட்டளை' மீற  முடியாது... ' என்கிறான்.  இனியும் இங்கிருந்து இந்த கொடுமையை என்னால் பார்த்து கொண்டிருக்க முடியாது என்று கூறி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு ஊர் கிளம்ப முடிவு செய்கிறாள்.

ஊருக்கு கிளம்பும் முதல் நாளில் யூத சிறுவன் தன் 'அப்பாவை காணவில்லை' என்று தன்  நண்பனிடம் கூறி கவலைபடுகிறான். இருவரும் சேர்ந்து தேடலாம் என்று முடிவு செய்கின்றனர். இதற்காக அகதி உடை ஒன்றை திருடி வந்து ஜெர்மானிய சிறுவனுக்கு தருகிறான்.

இருவரும் அகதி முகாமுக்குள் செல்கின்றனர்...அங்கே நடக்கும் கொடுமைகளை பார்கிறார்கள். அந்த நேரத்தில் ஹிட்லரின் அவசர ஆணைப்படி எல்லோரும் மொத்தமாக கொள்ள அழைத்து போக படுகிறார்கள், அதில் இவர்கள் இருவரும் மாட்டி கொள்கிறார்கள் .

தன்  மகனை காணாமல்  அந்த தாய் பல இடங்களில் தேடி அலைகிறாள்..... ப்ருனோவின் தந்தை முகாமிற்குள் வந்து தேடுகிறான்..... 'விஷ வாயு' செலுத்தி கொல்வதற்காக  அடைத்து வைக்கப்பட்டுள்ள சேம்பருக்குள் இரண்டு சிறுவர்களும் அடைக்கப்பட்டுள்ள விவரம் தெரியவருகிறது.  தங்கள்  பிள்ளையை காப்பாற்ற  குடும்பமே தவித்து போராடுகிறது. ஆனால் இருவரும் செத்து விழுகிறார்கள். அவர்களின் கை இறுக்கமாக பின்னபட்டிருக்கிறது. முள் வேலியின் அந்த பக்கம் கழட்டி போடபட்டிருக்கிற  தன் மகனின் உடைகளை கையில் வைத்து  ஜெர்மானிய மகனின் தாய் கதறி அழுகிறாள்.

படுகொலை காட்சிகள், வன்முறை எதுவும் இன்றி உணர்வை மட்டுமே காட்சிகள் பிரதிபலிக்கின்றன.இது கற்பனை கதை என்று சொல்ல முடியவில்லை...மனிதாபிமானம் மறந்த சிலரால் மனிதம் செத்து சீரழிந்து கொண்டிருக்கிறதை நெஞ்சில் அறைவது போல் காட்சியின் பரிமாணம் உணர்த்துகிறது....    !!!??


"தன்  சொந்த ரத்தம் பலியானபோது ஏற்படும் தவிப்பு போராட்டம், ஏன் ஆயிரமாயிரம் பேர் கொல்லப்பட்டபோது வரவில்லை....??" என்று 'ஜெர்மானிய மனசாட்சி' கேள்வி கேட்பதுபோல் இருக்கிறது....படத்தின்  கடைசி காட்சியை பார்க்கும் போது நம் மனதையும்  மெல்ல கீறி பார்க்கிறது இந்த கேள்வி.......!!   






உலகத்தின் சில இடங்களில் வெளியில் தெரிந்தும் தெரியாமலும்...... இந்த கொடுமைகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் வலியை இரண்டு சிறுவர்களை மட்டுமே முதன்மை படுத்தி சொல்லிய ஒரு சிறந்த படைப்பு இந்த படம்.