அன்றொரு நாள் மொட்டை மாடியில்
இரவின் அமைதியில் நீயும் நானும்
நம்மை மறந்து பேசிகொண்டிருந்தோம்...
அன்று முழு நிலவு ஆதலால் நிலவுப்பெண்
தன் ஒளி கற்றையை நாளா புறமும் வீசி
இரவை பகலாக்கி கொண்டிருந்தாள்.
பேசிகொண்டிருந்த நீ என்னை பார்ப்பதை விடுத்து
அவளையே கண் வைத்து நோக்க
பெண்மைக்கே உரிய பொறாமைத்தீ
என்னுள் எரிய, கோபத்தில் நான்
அவ்விடத்தை விட்டகன்று செல்ல,
சுதாரித்துக்கொண்ட நீ தள்ளிச்சென்ற
என்னை உன் வலு கரத்தால் பற்றி இழுத்து
அணைத்துக்கொள்ள, சினம் தணியாத
நான் திமிர, தரையில் அமர்ந்த நீ என்னை
உன் மடியில் சாய்த்து, முகத்தை நிமிர்த்தி
'நிலவைப்பார்' என்றாய். வெறுப்பாய் நான்
மேலே நோக்க....., என்னால் இயலவில்லை
அங்கிருந்து என் கண்ணை அகற்ற!
முழு நிலவாய், அழகாய், தென்னங்கீற்றின்
ஊடாய் பளிரென்று சிரித்து கொண்டிருந்தவள்
என்னையும் அல்லவா மயக்கி விட்டாள்!
'இப்படித்தான் மாட்டிக்கொண்டேன் நானும்'
என்றார் என்னவர் விஷமசிரிப்புடன் !!
மெய் உணர்ந்து மடியில் நானும்
கண்மூட, அந்தோ என்னாயிற்று...?
மறைந்துவிட்டாள் நிலாப்பெண்
மேகத்திற்குள்.... என்ன செய்வாள்
அவளும் பெண்தானே ?
வந்துவிட்டது பொறாமை..??!!
******