குழந்தை வளர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குழந்தை வளர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜூன் 8

மெதுவாய் மலரட்டுமே பூக்கள் !!?




எங்கும் அவசரம், எதிலும் அவசரம் என்ற ஒரு இயந்திரத்தனமான  ஒரு காலம் இது. இந்த இயந்திர உலகில், நமக்கு தெரியாமல் நம் உடலில் ஏற்பட கூடிய ஹார்மோன் மாற்றங்களை பற்றி நாம் அவ்வளவாக கண்டுகொள்வதில்லை.....?! பொருட்படுத்துவதும் இல்லை.....!? ஒரு முக்கியமான மாற்றம் தான் பெண் குழந்தைகளின் விரைவான பூப்படைதல். சமீப காலமாக பருவமடையும் வயது குறைந்துக்  கொண்டே செல்கிறது. ஒரு பெண் குழந்தை ஆறு வயதில் பருவமடைந்திருக்கிறது...இங்கே இல்லை லண்டனில்...?!!


Precocious Puberty causes hormone disorders and  brain abnormalities


அவ்வாறு விரைவில் வயதிற்கு வருவது நல்லதல்ல என்பதே மருத்துவர்கள், ஆய்வாளர்களின் கருத்து.  பெண் குழந்தைகளை பொறுத்தவரை அவர்களின் மனமும் உடலும் ஒன்றாக  சேர்ந்து வளர வேண்டும். உடல் மட்டுமே வளர்ந்து, மனதில் குழந்தையாக இருப்பவர்களின் வாழ்க்கை அவ்வளவு நன்றாக இருக்காது என்பதை விட பல ஆபத்துகளுக்கும் இது வழி வகுக்கும்.

இது ஏன் அவ்வாறு விரைவாக ஏற்படுகிறது என்பதற்கு ஒரு முக்கியமான காரணமாக இருப்பது  அக்குழந்தையின் பெற்றோர் தான் ?!

இதனைப்  பற்றியதே இந்த பதிவு.....

முன்பு எல்லாம் பதினாறு வயதில், பின் அதுவும்  குறைந்து பதினாலு வயதில் பருவமடைதல் என்றானது...இப்போது 12 வயதாக இருக்கிறது. சில குழந்தைகள் பத்து வயதில்....!! பொதுவாக ஒரு பெண் வயதிற்கு வருவது என்பது அவர்கள் வளரும் சூழ்நிலை, பரம்பரை, உணவு பழக்க வழக்கம் இவற்றை அடிப்படையாக வைத்து தான் நடை பெறும்.

உளவியல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் வேறு சில காரணங்களும் இருக்கின்றன.

*  குழந்தை வயிற்றில் இருக்கும் போது அதன் தாயார் டாக்சிக் அமிலம் அடங்கிய மருந்துகளை உட்கொள்வது ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

*   பெற்றோர்களின் கருத்து வேறுபாடுகள் குழந்தைகளை பலவிதத்திலும் பாதிக்கும் என்பது உண்மை. ஆனால் இது பெண் குழந்தைகள் விரைவில் வயதிற்கு வருவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது என்று உளவியல் அறிஞர்கள் கூறும் போது பெரிய அதிர்ச்சி கலந்த ஆச்சரியமாக இருக்கிறது.

குடும்பத்தில் ஏற்படும் சண்டைகள், பெற்றோர்கள் பிரிந்து வாழ்வது போன்றவை பெண் குழந்தைகளுக்கு மிகுந்த மன அழுத்தத்தைக் கொடுக்கிறது, இது  ஹார்மோன்களின் சுரப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது, பிரச்சனை நேருகிறது. உடல் வளர்ச்சியில் பெறும் குழப்பம் ஏற்பட்டு முடிவில் விரைவாக அக்குழந்தையை பூப்படையச்  செய்து விடுகிறது.

*  ஆணின் அரவணைப்பு இல்லாமல்...

பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை ஆணின் அரவணைப்பு அதாவது தன்  தந்தையின் நெருக்கம் அவசியம் தேவை. தந்தையில்லாத , தந்தை வெளியூரில் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் படி நேர்ந்தால்,  அவர்களின் பெண் குழந்தைகள் விரைந்து வயதிற்கு வந்து விடுகிறார்கள்....!!

சகோதரனின் பாசமும் ஹார்மோன்களின் குழப்பத்தை சரிச்செய்யும். இப்போது பெரும்பாலான  வீடுகளில் ஒரு குழந்தை மட்டுமே இருப்பதால் அதுவும் ஒரு பெண் குழந்தையாக இருந்துவிட்டால் சகோதரன் என்ற ஒரு உறவேத்  தெரியாமல் தான் அக்குழந்தைகள் வளருகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தந்தையின் அருகாமையும், பாசமான அரவணைப்பும் மட்டுமாவது கண்டிப்பாகத  தேவை.

*  தொலைக்காட்சியும் ஒரு காரணம் !!?

நம் குழந்தைகளின் வாழ்க்கையோடு விளையாடுவதில் இந்த தொலைக்காட்சிக்கு அப்படியென்ன சந்தோசமோ தெரியவில்லை. குறைந்தது ஒரு நாளைக்கு மூணு மணி நேரம் டிவி பார்க்கும் குழந்தைகளின் தூக்கம் மிக அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. குழப்பமான மனதுடனே  தூங்கவும் செல்கிறார்கள். இதன் காரணமாகவும் விரைவில் பூப்படைகிறார்கள்  என்று அறிஞர்கள் தங்களது ஆய்வில் கண்டுப்  பிடித்துள்ளனர்.

சீக்கிரம் வயதிற்கு வருவதால் ஏற்படக்கூடிய அசௌரியங்கள்

* முதலில் இதைப்  பற்றி என்ன வென்றே தெரியாத ஒரு நிலை.
* நிகழ்ந்த பின் ஏற்படக்கூடிய ஒரு அச்சம், குழப்பம், எதனால் என்கிற கேள்வி ?!!
* பள்ளியில் சக மாணவிகள்/மாணவர்கள்  வினா எழுப்பும் பார்வைகள்.
* தனிமையான ஒரு உணர்வு.
* மனதளவில் குழந்தை, உடலளவில் பெண் ?!!

தகுந்த சரியான முறையான நேரத்தில் நடக்காத எது ஒன்றுமே பிரச்சனைகளைத்தான் கொண்டுவரும்...பெண் குழந்தைகளின் வளர்ப்பில் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியம்

பெற்றோர்கள் சரியாக இருந்துவிட்டால் அந்த வீட்டில் குழந்தைகள் அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி நல்ல முறையில் தான் வளருவார்கள்....குழந்தைகள் முன்னால் சண்டைப்  போடும் பெற்றோர்கள் இருக்கும் வீட்டில் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படுவது மட்டும் இன்றி ஹார்மோன் குளறுபாடுகள்  ஏற்பட்டு விரைவில் பெண் குழந்தைகள் வயதிற்கு வருவதும் ஏற்படுகிறது.

பெண் குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்களே! கொஞ்சம் உங்கள் குழந்தையின் மனநிலையிலும் அக்கறைக் காட்டுங்கள்.

இதற்கு ஒரு தீர்வு உங்கள் கையில் தான் இருக்கிறது, குழந்தைகளின் மனம் பாதிக்காத அளவிற்கு அவர்கள் முன் நடந்து கொள்ளுங்கள் , உணவு பழக்கவழக்கத்தை முறைப் படுத்தணும் , கொழுப்புப்  பொருட்களைத்  தவிர்க்க வேண்டும், அவர்கள் வளரும் சூழ்நிலை ஆரோக்கியமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.






பூ மெதுவாய்.....இயல்பாய் மலரட்டுமே....!


புதன், நவம்பர் 2

யாருக்கு அறிவுரை... ?!!

Child rearing
அறிவுரை குழந்தைக்கா நமக்கா ?



மாறி வரும் இன்றையச்  சூழலுக்கு ஏற்றபடி நேற்றைய குழந்தைகளான இன்றைய பெற்றோர்களுக்கு தான் அறிவுறுத்த வேண்டியது  இருக்கிறது.
குழந்தைகள் மிகுந்த புத்திசாலிகள், கணினி யுகத்தின் வேகத்திற்கு  ஏற்ப  சிந்திக்கக்  கூடிய  ஆற்றல்  மிக்கவர்கள் . ஆனால்  அவர்களுக்கு  வழிகாட்டுகிறோம்  என்று  பெற்றோர்கள் படுத்தும் பாடு இருக்கே அப்பப்பா !! பாவம் குழந்தைகள் !! அதிக பாடச்சுமை, பெற்றோர்களின் அதிக எதிர்பார்ப்புகள், போட்டி உலகத்தில் தங்களை முன்னிறுத்த எடுக்கும் முயற்சிகள் அத்தனையையும் சமாளித்து வளர்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இச்சூழ்நிலையில் பெற்றோர்கள் அவர்களுக்கு பக்கபலமாக ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். ஆனால் உண்மையில் பல வீடுகளில் என்ன நடக்கிறது......?!!

கொஞ்சம் யோசியுங்களேன் 

குழந்தைகளுடன் செலவழிக்கும் நேரங்கள் மிகக் குறைந்துவிட்டது. பொருளாதாரத் தேவைக்காகவும், வாழ்க்கை வசதியை பெருக்கவும் நிமிட முள்ளை விட வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் பெற்றோர்களே ஒரு நிமிடம் நிதானியுங்கள்,

உங்களின் இந்த ஓட்டம் யாருக்காக ? எதற்காக ? 

வெகு சுலபமாகச்  சொல்வீர்கள் என் பிள்ளைகளுக்காக என்று . ஆனால் இது வெறும் சமாளிப்பு !!

முழுக்க முழுக்க உங்களின் சந்தோசத்துக்காக, பிறர் முன் கௌரவமாக வாழ வேண்டும் என்ற அந்த ஆசைக்காக ! குழந்தைகளின் வசதிக்காக கார்  வாங்கினேன், வீடு கட்டினேன், இதைச்  செய்தேன், அதைச்  செய்தேன் என்று இனியும் சொல்லாதிங்க. எந்த குழந்தையும் எனக்கு வீடு கட்டி வையுங்கள், பேங்கில் பணம் போட்டு வையுங்கள் என்று கேட்டதா ? (சின்ன குழந்தைக்கு என்ன தெரியும் என்று அறிவு பூர்வமா பதில் சொல்லக்  கூடாது !) வீடு,  பேங்க் பேலன்ஸ் முக்கியம் தான். ஆனால் அதற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவது நல்லது அல்ல. கண்ணுக்கு தெரியாத எதிர்காலம் என்ற ஒன்றுக்காக ஓடி ஓடி சம்பாதித்து பொருள் சேர்க்கும் நீங்கள், கண்முன் இருக்கும் நிகழ்காலத்தில் என்ன செய்கிறீர்கள்...??!

முதலில் உங்கள் குழந்தையின்  இன்றையத்  தேவை என்ன என அறிந்து அதை முதலில் நிறைவேற்றுங்கள். குழந்தையை அருகில் அழைத்து மெதுவாக பொறுமையாகக்  கேட்டுப்  பாருங்கள் ' உனக்கு என்னமா வேண்டும் என்று ' குழந்தை சொல்லும் 'என்கூட விளையாடணும்', 'என்னை வெளியே கூட்டி போங்க' !! வீட்டிற்குள் நுழையும் அப்பாவை பார்த்ததும் ஓடி வரும் குழந்தை அப்பா 'இன்னைக்கு கிளாஸ்ல ஹரிணி இல்ல அவ.....'என்று எதையோச்  சொல்ல ஆரம்பிக்கும் போதே 'அப்பா டியர்டா இருக்கேன்,தொந்தரவு பண்ணாத ' என்று வெறுப்பாகச்  சொல்லாமல் ஒரு இரண்டு நிமிடம் காது கொடுத்துக்  கேளுங்கள் அல்லது வெயிட் பண்ணு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு மறுபடி வந்து கட்டாயம் என்னவென்றுக்  கேளுங்கள். குழந்தையும் மிகுந்த ஆர்வமாகிச்  சொல்ல தொடங்கும். 

தன் பேச்சை பெற்றோர்கள் விரும்பிக்  கேட்கிறார்கள் என்ற எண்ணம் அக்குழந்தையின் மனதில் ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கும். தவிரவும், பள்ளியில் குழந்தையின் நடவடிக்கை, ஆசிரியர்களின் அணுகுமுறைகள்  எப்படி இருக்கிறது, ஏதும் பிரச்சனைகள் ஏற்படுகிறதா என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.  முதலில் உங்கள் குழந்தையின் சின்ன சின்ன தேவையை நிறைவேற்றுங்கள். அப்புறம் பார்க்கலாம் வீடும் காரும்...! 

நாம் இருவர் நமக்கு ஒருவர் !

இன்று பல வீடுகளில் ஒரு குழந்தை தான், காரணம் கேட்டால் 'இத ஒன்னு வளர்த்தாப்  போதாதா இருக்கிற விலைவாசியில' என்று பதில் வரும். ஆனால் முந்தைய தலைமுறை பெற்றோர்கள் நாலு, ஐந்து குழந்தைகளைப்  பெற்றார்கள், படிக்க வைத்தார்கள், திருமணம் முடித்து கொடுத்தார்கள் !! அன்றைய விலைவாசிக்குத்  தக்கதாகத்தான் அப்போதைய அப்பாக்களின் சம்பளமும் இருந்தது. பின் அவர்களுக்கு எப்படி சாத்தியமாயிற்று ? காரணம் அவர்களிடம் தேவைக்கு மீறிய ஆசைகள், ஆடம்பரம், போட்டி மனப்பான்மை இல்லை. முக்கியமாக வாழ்க்கை வசதியைப் பெருக்க அவசரம் காட்டவில்லை . ஒவ்வொரு செயலையும் நிதானித்துத் தீர்மானித்தார்கள். இப்போது கணினிகாலம் அதற்கு ஈடு கொடுத்து ஓடி கொண்டிருக்கிறோம். 

தவறில்லை ஆனால் இந்த ஓட்டத்தை சற்று நிறுத்தி குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவழியுங்கள். அந்த நேரங்கள் வானவில் நிமிடங்கள் ரசிக்க/பார்க்க  தவறிவிட்டோம் என்றால் க்ஷண நேரத்தில் மறைந்து விடும்.

நாம்  மாறுவோம்

*  தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி, பெரியம்மா, பெரியப்பா, மாமா, அத்தை போன்ற உறவுகளின் பெயர்கள் மறந்து/மறைந்து வருகிற காலம் இது. வீட்டுக்கு ஒரு பிள்ளை என்ற நிலையில் அடுத்த தலைமுறையினருக்கு இந்த உறவுகள் கூட இல்லாமல் போகலாம் !! அதனால் விடுமுறை நாட்களில் பார்க், பீச் , சினிமா என்று போவதை விட உறவினர்களின் இல்லத்திற்கு அழைத்து செல்லலாம். அவர்களை நம் வீட்டிற்கு வரவழைக்கலாம். சிறு சிறு மனஸ்தாபங்கள் இருந்தாலும் நம் குழந்தைகளுக்காக அதை மறந்து உறவுகளின் உன்னதத்தை உணர்த்தலாம். நம்மை பார்த்து நம் குழந்தைகள் கற்றுக் கொள்ளட்டும்.

*  'தொலைகாட்சிப்  பார்க்காதே' என்று சொல்வதற்கு பின்னால் சீரியல் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்ற ஆதங்கம் இருப்பதாகத்தான் தோன்றுகிறது. பார்க்க அனுமதியுங்கள். டிஸ்கவரி, ஜியாக்கிரபி போன்ற சேனல்கள் பார்க்கட்டும். கார்ட்டூன்(சில தவிர்த்து) பார்ப்பதால் என்ன பாதிப்பு வந்துவிட போகிறது...? அதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி பார்க்க செய்யுங்கள். இயன்றால் அவர்களுடன் அவற்றை சிறிது நேரம் நீங்களும் பாருங்கள் இவ்வாறு செய்வதின் மூலம் நமது மன அழுத்தம் குறைந்து குழந்தைகளுடன் குழந்தையாக மாறி விடுவோம். அவர்களும் ரிலாக்சாக பீல் பண்ணுவார்கள்.

* குழந்தைகளுக்கான நீதிநெறி கதை புத்தகங்களை வாங்கிக்கொடுத்து வாசிக்க செய்யலாம் . 

*  கல்வி தொடர்பான டிவிடிக்களை போட்டு பார்த்தால் குழந்தைகள் விரைவாக அந்த பாடங்களை கிரகித்து கொள்வார்கள் என்று நாம் எண்ணுவோம், ஆனால் இப்படி திரைகளை பார்த்து தெரிந்து கொள்வதைவிட மற்றவர்களுடன் பேசி பழகும் குழந்தைகளின் மூளை சுறுசுறுப்பாக இயங்குகிறது, விரைவாக எதையும் கற்றுக் கொள்கிறார்கள்  என்று ஆய்வு சொல்கிறது. அதனால் அக்கம் பக்கம் குழந்தைகளுடன் ஒரு ஆரோக்கியமான நட்பை ஏற்படுத்தி கொடுங்கள். நன்கு விளையாடட்டும், பேசி பழகட்டும்.

*  உடலுக்கு பயிற்சி தரக்கூடிய ஷட்டில் காக் , ரிங் பால், ஸ்கிப்பிங், த்ரோ பால்  போன்ற விளையாட்டுகளை அவர்களுடன் இணைந்து விளையாடுங்கள், அவர்களையும்  விளையாட உற்சாகபடுத்துங்கள்.

*  இப்போதுள்ள குழந்தைகளின் முக்கிய பிரச்சனை ஞாபக மறதி, இதற்கு ஒரு எளிய வழியாக பகல் நேர தூக்கத்தைச்  சொல்கிறார்கள் வல்லுனர்கள். தூங்கி எழுந்தபின் எதையும் கற்றுகொண்டால் அது எளிதாக மூளையில் பதியும். விடுமுறை நாட்களில் முடிந்த வரை பகலில் சிறிது நேரம் தூங்க வைத்து பழக்குங்கள். 

*  சில அம்மாக்கள் தங்கள்  குழந்தைகளைக்  காப்பாற்றுவதாக எண்ணி குழந்தைகளின் சில தவறுகளை கணவரிடம் மறைப்பார்கள். இது தவறான வளர்ப்பு முறை. அவ்வாறு செய்யும் போது அம்மா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க, அம்மாவை எப்படியும் சமாளித்து விடலாம் என்று துணிச்சலாக தவறுகளைச்  செய்ய தொடங்குவார்கள்.  

*  சில வீடுகளில் கணவனுக்கு தெரியாமல் மனைவியும், மனைவிக்கு தெரியாமல் கணவனும் தங்கள் குழந்தைகளுக்குப்  பொருட்களை வாங்கி கொடுப்பார்கள். இதுவும் சரியன்று. எதுவாக இருந்தாலும் இருவரும் இணைந்தே, இருவரின் விருப்பத்தின் பெயரிலேயே குழந்தைகளுக்கான பொருட்கள் வாங்கப்பட வேண்டும். 

*  சிலர் கண்டிப்பதில் ஒரு கொள்கையை வைத்திருப்பார்கள், அதாவது குழந்தை ஒரு தவறை செய்து விட்டால் ஒருவர்(அப்பா) கண்டிக்க வேண்டும் என்றும் மற்றொருவர்(அம்மா)  சமாதானம் படுத்தணும் என்றும்...! ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது...அப்பாவிற்கு தவறாகப்  படுவது அம்மாவிற்கு சாதாரணமாகப்   படுகிறதே என்று குழந்தை கொஞ்சம் குழம்பி யோசிக்க ஆரம்பித்துவிடும். தவறு என்றால் இருவருக்கும் தவறுதான். இருவரும் கண்டிக்க வேண்டும். 

*  பொதுவாக ஒரு குழந்தையிடம் பலரும் சகஜமாக கேட்கும் கேள்வி உனக்கு அம்மா பிடிக்குமா ? அப்பா பிடிக்குமா ? உண்மையில் இந்த கேள்வியே அபத்தம். அம்மா, அப்பா இருவரும் வேறு வேறு அல்ல, இருவரும் ஒருவரே...இருவருக்கும் சம அளவில் மரியாதையும், அன்பும் கொடுக்கப்பட வேண்டும். இதை முதலில் குழந்தைக்குப்  புரிய வைக்க வேண்டும். 

குழந்தைகளை குழந்தையாக எண்ணி நடந்து கொண்டாலே போதும். வயதிற்கு மீறிய எதிர்பார்ப்பை அவர்கள் மீது திணிக்காமல் இருங்கள். அவர்களுக்கு வழியை மட்டும் காட்டுங்கள், கூடவேச்  செல்ல வேண்டும் என்பது தேவை இல்லை. 

Child rearing



எனது இக்கட்டுரை கழுகில் வெளிவந்தது.
படங்கள் - நன்றி கூகுள் 

திங்கள், ஜனவரி 24

ஒரு அலசல்......! குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு !


Child abuse - Sexual attraction to children


முந்தைய பதிவில் குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு என்பதை பற்றியும், அதில் இருந்து நம் பிள்ளைகளை எப்படி பாதுகாத்துக்கொள்வது  என்பதைப்  பற்றியும் சொல்லி இருந்தேன். அதற்கு பலரும் பின்னூட்டங்களின் மூலம் தங்களதுக்  கருத்துக்களைக்  கூறியிருந்தனர்.அப்படி வந்தவை எனக்கு வெறும் பின்னூட்டங்களாகத்  தெரியவில்லை...ஒவ்வொருவரின் ஆழமான உணர்வுகளாக வெளி வந்திருந்தன....அதில் ஒரு இரண்டு  பின்னூட்டங்களை பற்றி மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

அதில் சகோதரர்  ஜோதிஜி அவர்கள் இதற்கு கடுமையான தண்டனைகள் என்று இருந்தால் தவறுச்  செய்ய என்னும் நபர்கள் அச்சம் கொண்டு இந்த செயலைத்  தவிர்ப்பார்களா என்று ஒரு கேள்வி எழுப்பி இருந்தார். மேலோட்டமாகப்  பார்க்கும் போது சரி என்றுத்  தோன்றினாலும், சமீபத்தில் அரேபிய நாட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்வை கேட்டறிந்த பின் தண்டனைக்கு பலன் இருக்குமா என்று யோசிக்க வேண்டியதாகிவிட்டது. கடுமையான தண்டனைகளுக்கு பெயர் பெற்ற அரேபிய நாட்டிலேயே இத்தகைய குற்றம் சாதாரணமாக நடைபெறும்  போது தண்டனை மட்டுமே இதற்கு ஒரே தீர்வாக இருக்க முடியாது என்றே தோன்றுகிறது. தவிரவும் நம்ம நாட்டில் இச்செயலுக்கு, 

*  தண்டனை என்று பார்த்தால் பெண்கள் பாதிக்கபட்டால் கொடுக்கப்படும் அதே 7  ஆண்டு முதல் 10  ஆண்டுகள் சிறைவாசம்தான்  குழந்தைகள் பாதிக்கப் பட்டாலும் என்கின்றனர்...?! 

இது மட்டும் போதாது இந்த விசயத்தில் தண்டனை இன்னும் கடுமையாக்கப்படணும்.   

2002  வது ஆண்டின் கணக்கின் படி 89 ,000 குழந்தைகள் பாதிக்க பட்டுள்ளனர். இந்த கணக்கு வெளியில் வந்தவை மட்டுமே, வராதவை எத்தனை ஆயிரமோ....?! 

என்  மனதை மிக பாதித்த மற்றொரு பின்னூட்டம் சகோதரர் அப்பாதுரை அவர்கள் கொடுத்து இருந்தார்.

//பெண்களைப் போலவே, maybe more often and discreetly, ஆண்கள் இளம் வயதுப் பாலியல் கொடுமைகளில் பாதிக்கப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன். இதற்கு மதம், கலாசாரம், அறிவு (அறியாமை), சூழல் என்று பல காரணங்கள். பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்படுத்தும் வக்கிரங்கள் கற்பனை செய்யக்கூட முடியாத அளவுக்கு வடிவெடுக்கின்றன. பாலியல் வக்கிரங்களிடையே வளர்ந்தவன் என்ற முறையில் இவை சாகும் வரை அழியாத வடுக்கள் என்று அனுபவத்தோடு சொல்வேன். அறியாத வயது என்றாலும், அறிந்த பின் தொலையாத கொடுமை. எத்தனை எழுதினாலும் எச்சரித்தாலும் வீட்டுப் பூனை பாலைத் திருடிக் குடிக்கும் பொழுது ஒன்றுமே செய்ய முடியாது. புதைந்து போன எலும்புகளை, நினைவுகளைத் தோண்டிய, தூண்டிய பதிவு.//

ஒவ்வொரு வரிகளும் வேதனைத்  தாங்கி இருந்ததை உணரமுடிந்தது. ஆண் குழந்தைகளும் அதிகமாகப்  பாதிக்கபடுகிறார்கள் என்பதை இவரது பின்னூட்டம் ஊர்சிதப் படுத்தியது.  

இந்த பதிவிற்கு மிக நெருங்கிய சிறுகதை ஒன்றை இவர் எழுதி இருக்கிறார்.....மனம் நடுங்கச்  செய்யக்கூடிய  ஒரு விஷயத்தை கருவாக எடுத்து சிறிதும் ஆபாசம் இன்றி எழுதி இருக்கிறார். தயவுசெய்து அதை அனைவரும் படியுங்கள்... 

அந்த கதை படிக்க  இங்கே செல்லுங்கள்.  



மற்றொரு வேதனையான அனுபவம் ஒன்று 

மேலும் எனது பதிவை படித்து விட்டு ஒரு சகோதரி மெயில் மூலம் தனது இன்றைய நிலையை மிகுந்த துயரத்துடன் எழுதி இருந்தார். மிக பெரிய மடலின் சுருக்கத்தை மட்டுமே இங்கே பகிர்கின்றேன் (அவர்களின் அனுமதியுடன் ) அவரது பெயர் சுசீலா, ஆந்திர மாநில தலைநகரில் வசிக்கிறார், படித்த பட்டதாரி பெண்,  பல்கலைகழகத்தில் படிப்பிற்காக தங்க மெடல் வாங்கியவர், பெரிய கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.   திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தைகள் இல்லை, முக்கியமாக கணவன் மனைவியருக்குள் எது நடக்க வேண்டுமோ அது இன்று வரை நடக்கவில்லை...!? 

காரணம் சிறு வயதில் அந்த பெண் அனுபவித்திருந்த பாலியல் துன்புறுத்தல்கள் ??! நெருங்கிய உறவினர் ஒருவரால் பத்து வயதில் ஏற்படுத்தப்பட்ட கொடுமைகள் இந்த பெண்ணின் மனதில் ஆற்றாமல் வடுவாக இருந்திருக்கிறது. இப்படி வடு ஒன்று இருப்பதை,  முதல் இரவில் கணவனின் முதல் தொடுதலின்  போதுதான் இவரே உணர்ந்திருக்கிறார். ஒவ்வொரு நாள் இரவிலும் கணவனின் அருகாமை என்றாலே உடலில் ஒரு படபடப்பு சேர்ந்து கொண்டு , முகம் எல்லாம் வியர்த்து அலறி அடித்து படுக்கையின் ஓரமாக ஒரு குழந்தை போல் சுருண்டு படுத்துக்  கொள்வாராம். 

ஆரம்பத்தில் இவரது கணவன், புது பெண்தானே போகப்  போக சரியாகி விடும் என்று மனதைத்  தேற்றி கொண்டுள்ளார், மாதக்கணக்கில் தொடரவும், வற்புறுத்தி  மருத்துவரிடம் அழைத்துச்  சென்று உள்ளார். தொடர்ந்த சிகிச்சைகளின் மூலம் உடல் சிறிது தேறி வந்திருக்கிறது, மனமோ அதே பழைய நிலையில் !!? நல்ல வேளை இவருக்கு அமைந்த கணவன் நல்லவராக இருப்பதால் காலப்போக்கில் மனைவி சரியாகி விடுவாள் என்ற நம்பிக்கையில் நாட்களை நகர்த்திக்  கொண்டுவருகிறார்.

இந்த பெண்ணின் மடல் ஒரு உதாரணம் தான் , இது போல் இன்னும் எத்தனையோ.....?? பாவம் ஓரிடம்  பழி ஓரிடம்  என்பது போல், தவறு செய்தவன் எங்கோ நிம்மதியாக இருக்கிறான், இந்த பெண்ணை போன்றவர்கள் வாழ வகையற்று நரகத்தில் உழன்றுக்  கொண்டிருக்கிறார்கள். 

இந்த பிரச்சனை முந்தைய பதிவில் சொன்ன மாதிரி உளவியல் நோய் உள்ளவர்களால் மட்டும் ஏற்படுவது இல்லை. சாதாரணமாக குடும்ப வாழ்வில் இருப்பவர்களும் சில சூழ்நிலைகளில் இந்த பாவத்தைச்  செய்ய நேரிடுகிறது என்பது நிதர்சனம்.  

சூழ்நிலைகள்

*  திருமணம் முடிந்த பின்னர் மனைவி பிரசவத்திற்காக தாய் வீடு சென்ற சமயங்களில்.....

*  விவாகரத்தான கணவர்கள் தனிமையில் இருக்கும் போது.....

*  மனைவி இறந்த சமயங்களில்.....

* மனைவி நோய்வாய்ப்பட்ட சமயங்களில்..... 

*  பணியில் இருக்கும் இல்லாத ஒரு சில வயதானவர்கள் (தனிமை கிடைத்தால்)....

இது போன்ற சூழ்நிலைகளில் இருக்கும் ஒரு சிலர் சந்தர்ப்பம் வாய்த்தால் தவறவேச்  செய்கிறார்கள். தங்களுக்கு வசதியாக சிறுவர், சிறுமிகளை பயன்படுத்திக்கொள்(கொல்)கின்றனர்.

தீர்வு என்ன ?? 

சகோதரர் ரஜின் அவர்கள் இந்த பாதக செயலுக்கு தீர்வு ஒன்றை தனது பின்னூட்டத்தில் சொல்லி இருந்தார். 

//இப்படிப்பட்ட கிராதகர்களை முன்னோக்கும் போதும்,எப்படி எதிர்கொள்ளவேண்டும் என கற்றுத்தருவது அவசியமான ஒன்று,,,

இதை ஸ்பெஷல் கோச்கள்,மனநலமருத்துவர்கள் கொண்டு,பள்ளிகளே வாரமோ,அல்லது மாதம் ஒரு முறையோ வகுப்புகள் நடத்தினால் நன்மை பயக்கும்...
செய்வார்களா?//
  
மிகவும் சரியான யோசனையாக எனக்குத்  தெரிந்தது...பள்ளிகளின்  மூலமாக இந்த பிரச்சனையின் தீவிரத்தை பிள்ளைகள் உணரும்படி அறிவுறுத்த வேண்டும்.  பொதுவாக பெற்றோர்களின் அறிவுரைகளை விட ஆசிரியர்களின் அறிவுறுத்தல் பிள்ளைகளின் மனதில் நன்றாக பதிந்து விடும். தவிரவும் சக மாணவர்களுடன் இது பற்றி அவர்கள் கலந்து பேசிக்கொள்ளவும் எதுவாக இருக்கும்.

நம்  பிள்ளைகள் எந்த வித மோசமான பாதகத்திற்கும் ஆளாகிவிடாமல் அவர்களைப்  பாதுகாத்துக்  காப்பாற்றுவது நம் ஒவ்வொருவரின் கடமை.  அவர்களின் எதிர்காலத்திற்காக சொத்துக்களை சேர்த்து வைக்க காட்டும் தீவிரத்தை, அவர்களின் நிகழ்கால வளர்ப்பிலும் கொஞ்சம் காட்டுங்கள்.  

எதிர்காலச்  சமுதாயம் சிறப்பாக அமைய பதிவுலகத்தில் இருக்கும் நாம் அனைவரும் நம்மால் முடிந்தவரை ஒத்துழைப்புக்  கொடுப்போம்.....

இந்த பிரச்சனைச்  சம்பந்தப்பட்ட பதிவுகளைத்  தேடி எடுத்து படியுங்கள், பலரிடம் இத்தகைய பதிவுகளைக்  கொண்டுப்  போய் சேருங்கள், பிரச்சனையின் தீவிரம் பலரையும் சென்று அடைய உதவுங்கள்.  




படம் - நன்றி கூகுள் 


வியாழன், செப்டம்பர் 2

அவசர உலகில் நம் குழந்தைகள் - தொடர்ச்சி


இளம் பெற்றோரின் நிலை  

இதுவரை இருந்த தலைமுறையினருக்கு இல்லாத கஷ்டங்கள் இப்போதுள்ள இளைய  தலைமுறையினருக்கு உள்ளது. ஒன்று நல்லதா, கெட்டதா என்று பிரித்து சொல்ல கூட்டுக்குடும்பம் இல்லை.  பெரியோர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் சில நேரம் தடுமாறி விடுகின்றனர் .  

தங்கள் வரவேற்பறையில் வந்து விழுபவை எத்தகையவை என்பதை தரம் பிரிக்க இயலாதவர்களாகி விடுகின்றனர்.  தங்களை சுற்றி கலர் கலராய் நல்லதும், கெட்டதும் வலம் வரும்போது, அதையும் தாண்டி ஒழுக்கத்துடனும், முறையுடனும் வாழ்வது என்பது சவாலான விசயம்தான். அந்த சவாலை வெற்றிகரமாக பல இளம் தம்பதியினரும் சமாளித்து வருகின்றனர் என்பது ஆறுதலான விஷயம்.

இதே மாதிரியான சூழ்நிலையில் தங்களது குழந்தைகளை வளர்ப்பது என்பது அதைவிட மிகவும் கடினமான சவால்தான்.

பெண்களும் இப்போது வேலைக்கு செல்வதால், தன் வீட்டு வேலை, பணியின் சுமை , வேலை நேரத்தில் தங்கள் சகாக்களுடன் ஏற்படும் உறவு, உரசல், விரிசல் இதனால் ஏற்படும் மன அழுத்தம், மன உளைச்சல், உடல் சோர்வு போன்றவற்றையும் மீறி குழந்தைகளை கவனித்து வளர்ப்பது அவ்வளவு சுலபம் இல்லை.

குழந்தைகளின் எதிர்பார்ப்புகள்

குழந்தையின் வளமான வாழ்க்கைக்கு மிக முக்கியமான அடித்தளமே குழந்தைக்கும்,  அதன் பெற்றோருக்கும் இடையிலான உறவுதான் தீர்மானிக்கிறது.

*  எல்லா குழந்தைகளுமே தங்கள் பெற்றோரிடம் அன்பு, அரவணைப்பு, உணர்வு ரீதியான பாதுகாப்பு ஆகியவற்றை எதிர்ப்பார்கிறது. அது ஏமாற்றத்தில் முடியும்போது  தான் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுகின்றன. 

*  தங்களின்  பெற்றோர்கள் தங்களுடைய சிறு சிறு விருப்பங்களையும் நிறைவேற்ற   வேண்டும் என்று எதிர்பார்க்கும் அதே நேரத்தில் அதை காதுகொடுத்து கேட்கவாவது செய்யவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு.

* தங்களின் சிறு செயல்களையும் பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்கின்றனர். அது விளையாட்டாகவோ, படிப்பு மற்றும் எந்த விசயமாக இருந்தாலும் சிறு அங்கீகாரத்தை எதிர்பார்கிறார்கள் நம் பிள்ளைகள்.

*  தங்களின் ரோல் மாடலாக ஆண் குழந்தை தந்தையையும், பெண் குழந்தை தன் தாயையும் கொண்டு வளருகிறார்கள் . சிறந்த பெற்றோராய் தங்கள் பெற்றோரும் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் அதிகபட்ச எதிர்பார்ப்பு.

கிரச் (குழந்தைகள் காப்பகம்)

வேலைக்கு செல்லும் பெற்றோர் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை கிரச்சில்  விட்டு செல்கின்றனர். வார  இறுதியில் மட்டுமே தன் தாயுடன் முழு பொழுதையும் கழிக்கிறார்கள். தாயின் அன்பையும் அரவணைப்பையும் சிறு பிராயத்தில் இழந்து விடுவதால் அவர்கள் கண்களில் ஒரு ஏக்கம் நிரந்தரமாக தங்கி விடுகிறது. 

இதைவிட வீட்டு பெரியவர்களிடம் விட்டு செல்லப்படும் குழந்தைகள் நல்ல அன்பான கவனிப்பில் வளருகிறார்கள். ஆனால் பல வீடுகளில் பெரியோர்கள் இல்லாத நிலைதான் நிலவுகிறது. தங்கள் குழந்தைகளின் நன்மையை கருதியாவது பெரியோர்களை வீட்டில் இருக்க செய்வது அல்லது அவர்களுடன் இணைந்து வாழ்வது வேலைக்கு செல்லும் இளம் பெற்றோருக்கு நன்மையாக இருக்கும்.

சில ஆலோசனைகள்

*  உங்கள் விருப்பங்கள், கனவுகளை அவர்களின் மீது திணிக்காதீர்கள். LKG  படிக்கும் போதே டாக்டர் ஆகவேண்டும், இன்ஜீனியர் ஆகவேண்டும் என்பது போன்ற கனவுகளை விதைக்காதீர்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்தன்மை இருக்கும். வளர வளரத்தான் தான் என்னவாக  வேண்டும், எத்துறையில் சாதிக்க வேண்டும் என்பது பிடிபடும். அதை விடுத்து ஒன்றை மட்டுமே நாம் சொல்லி வளர்க்கும் போது பிற துறைகளில் அவர்களின் கவனம் செல்வது தடுக்கப்படுகிறது. அவர்களின் தனித்தன்மையும் பாதிக்கப்பட்டு, உங்களின் கனவும் நிறைவேறாமல் தடுமாறி போக கூடிய சூழ்நிலை ஏற்பட்டு விடும். 

*  வாய்ப்புகளை மட்டும் நீங்கள் ஏற்படுத்தி கொடுங்கள்....இன்றைய குழந்தைகள் மிக புத்திசாலிகள் சாதிப்பார்கள்....அவர்களுக்கு  போடப்பட்ட கனவு கைகட்டுகளை அவிழ்த்து விடுங்கள்.  தன் வாழ்கையை தாங்களே நிர்ணயிக்க கூடிய உரிமையை வளரும் பிள்ளைகளுக்கு கொடுங்கள், அதற்கு தேவையான உதவிகளை மட்டும் நீங்கள் செய்யுங்கள்.

*   முக்கியமாக ஒரு குழந்தையை ஓயாமல் விளையாட கூட விடாமல் படி படி என்று வற்புறுத்தும் போது அந்த பிள்ளை இப்படித்தான் பதில் சொல்லும், " படிக்கச்சொல்லி வற்புறுத்தி உட்கார வைத்தாலும் நான் மனம் வைத்து முயன்றால் தானே படிக்க முடியும். இப்ப கொஞ்சம் நேரம் விளையாடனும் போல் இருக்கிறது, விளையாடிவிட்டு வந்தால் ரிலாக்சாக  பீல் பண்ணுவேன். அப்புறம் படித்தால் மனதில் நன்கு பதியும். SO LET ME GO  TO PLAY "  இதுதான் நம் எல்லோருக்குமான பதில். நாம் தலை கீழாய் நின்றாலும் படிக்க வேண்டியது அவர்கள்தானே....நிதர்சனம் இதுவே...!! 

அதிக கண்டிப்பு இப்போது வேலைக்கு ஆகாது. ரொம்ப கண்டித்தால் 'சரிதான் போங்கள்' என்று அசால்டாக போய்ட்டே இருப்பார்கள்.


வழி முறைகள்

பெரிதாக ஒன்றும் இல்லை ஒரே ஒரு திட்டமிடல் மட்டுமே போதும் குழந்தைகளை நன்றாக வளர்ப்பதற்கு.  தினம் கிடைக்கும் கொஞ்ச நேரத்தையும் உங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யுங்கள் என்னதான் வேலை , பிசி என்றாலும் தினம் கொஞ்ச நேரம் அவர்களுடன் மனம் விட்டு பேசி சிரித்து பாருங்கள் உங்களின் அன்றைய மொத்த டென்ஷனும் பறந்து போகும். குழந்தைகளும் உற்சாகமாக  பள்ளியில் நடந்த விசயங்கள் அனைத்தையும்  உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். இதன் மூலம் கிடைக்கக்கூடிய பெரிய நன்மை என்னவென்றால் அவர்களின் நடவடிக்கைகள் நல்லவை , கெட்டவை  இரண்டையும் தெரிந்து கொள்ள முடியும். அந்த தனிப்பட்ட நேரத்தில் சில நற்பண்புகளையும் அவர்கள் மனதில் சுலபமாக விதைத்து விட முடியும்

" சரியான திட்டமிடுதலும், முன் யோசனையும் மட்டும் இருந்தால் போதும் வேலையையும் இழக்காமல் , உங்கள் குழந்தைகளையும் நன்கு கவனித்து வெற்றிகரமாக வாழ்க்கையில் பேலன்ஸ்   பண்ண முடியும் " 

" நேரத்தை கொஞ்சம் அவர்களுக்காகவும்   கொடுங்கள்,  நம் குழந்தைகள் தானே சந்தோசமாக  இருந்துவிட்டு போகட்டுமே ".


   

வியாழன், ஆகஸ்ட் 26

அவசர உலகில் நம் குழந்தைகள்



ஒரு சமுதாயம் நல்ல விதத்தில் இருப்பதற்கு இன்றைய குழந்தைகளின் வளர்ப்பு மிகவும் அவசியம், இவர்கள் தான் நாளைய சமுதாயம். அதனால் இந்த விசயத்தில் நாம்  அசட்டையாக இருக்காமல் இன்னும் அதிகமாக கவனம் எடுத்து கொள்வது காலத்தின் கட்டாயம்.    




இன்றைய அவசர உலகத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன்  செலவு செய்யும்  நேரம் மிகவும் குறைவு தான். குழந்தைகள் நம்முடன்  வீட்டில் இருக்கும் நேரத்தை விட ஸ்கூல், டியூஷன், playground , டான்ஸ் கிளாஸ், மியூசிக் கிளாஸ்  இந்த மாதிரி இன்னும் பல காரணங்களால் வெளியே தான் பல நேரத்தை செலவு செய்கிறார்கள். வீட்டில் இருக்கும் கொஞ்ச நேரத்தையும் தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ் போன்ற பொழுதுபோக்கு சாதனங்கள் அவர்களை ஆக்கிரமித்து கொள்கின்றன.


பெற்றோர்களும் நம்மை தொந்தரவு செய்யாமல்  விட்டால் சரி தான் என்று விட வேண்டியதாகி விடுகிறது. பெற்றோர்களையும் குறை சொல்ல முடியாது, பெரும்பாலான இளம் பெற்றோர்களில்  இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருப்பார்கள், அலுவலக களைப்புடன் வீட்டில் உள்ள வேலைகளையும் செய்ய வேண்டி இருப்பதால் சோர்ந்து விடுவார்கள். தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ளவே அவர்களுக்கு நேரம் கிடைப்பது இல்லை. இதில் குழந்தைகளுடன் இருக்க இயலாத நிலையே உள்ளது.

ஆனால் இதையே காரணமாக சொல்லி தங்களை தாங்களே சமாதானம்  செய்து கொள்வது சரி இல்லை.

சமுதாயதிற்கு நல்ல பிள்ளைகளை கொடுப்பது உங்கள் கடமை.  ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்ககூடிய 'தார்மீக பொறுப்பு' இளம் பெற்றோருக்கு இருக்கிறது. நம்முடைய அன்பான, கண்டிப்புடன் கூடிய அரவணைப்பில் வளராத பிள்ளைகளின் எதிர்காலம் நிச்சயமாக சுபிட்சமாக, வளமாக இருக்காது !!


'குழந்தை வளர்ப்பு பற்றிய திட்டமிடல்' இப்போது கண்டிப்பாக தேவை படுகிறது. குழந்தைகளை நோய்கள், விபத்துகள் இவற்றில் இருந்து பாதுகாத்து வளர்க்கணும்... நல்ல பழக்க வழக்கங்களை கற்று கொடுக்கணும், படிப்பு மற்றும் பள்ளி சம்பந்தமான விவகாரங்களை பார்த்துக்கொள்ளவேண்டும். இது மாதிரி இன்னும் பல உள்ளன..அவற்றை சொல்லி கொண்டே போகலாம். இந்த மாதிரியான விசயங்களை  பெற்றோர்கள் நேரடியாக கண்காணித்து வளர்க்க வேண்டும். அப்போதுதான் அடுத்த தலைமுறை ஆரோக்கியமானதாக  உருவாகும்.      

சர்வதேச கணக்கெடுப்பு ஒன்று சமீபத்தில் எடுக்கப்பட்டது. அதை படிக்கும் போதுதான் இன்றைய நமது நிலை அதிர்ச்சி அளிக்கிறது...அந்த விவரங்கள் கீழே.....

*  பெற்றோர் இருவரும் வேலை பார்க்கும் சராசரி குடும்பங்களில் ஒரு வாரம் முழுமைக்கும் ஒட்டுமொத்தக் குடும்பமும் ஒன்றாக இருந்து செலவழிக்கும் நேரம் வெறும் 45 நிமிடங்கள் மட்டும்தானாம்....??!!

*   சுமார் 5 முதல் 16  வயதுக்குட்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒருவர் வாரத்துக்கு இரண்டு நாள்களாவது தம் பெற்றோரை பார்க்காமலேயே உறங்கச் செல்கிறார்களாம்...??!

*   வெறும் 20 சதவீத குடும்பத்தினர்தான் வாரத்துக்கு ஒரு நாளோ இரண்டு நாட்களோ குடும்பத்துடன் மொத்தமாக அமர்ந்து காலை உணவோ மதிய உணவோ அல்லது இரவு உணவோ உட்கொள்கிறார்கள்...??! 

*   கிட்டத்தட்ட இரண்டாயிரம் பெற்றோரிடம் கணக்கெடுப்பு  நடத்தியதில் 50 சதவீதத்துக்கும் அதிகமான பெற்றோர் ஒத்து கொண்ட  ஒரே  கருத்து , 'தங்கள் குழந்தைகளின் ஒரே பொழுது போக்கு, தொலைக்காட்சி, கம்ப்யூட்டர் போன்ற நவீன சாதனங்கள்தான் ' என்பது தானாம்.....!!?

இது நிச்சயம் ஆரோக்கியமான சூழ்நிலை இல்லை. என்ன செய்ய போகிறோம் பெற்றோர்களே...!!? 

நாம் எல்லோருமே வாழ்கையில் நம் குழந்தைகளுக்கு மிக சிறந்த விசயங்கள் எல்லாவற்றையும் கிடைக்க செய்ய  வேண்டும் என்று தானே விரும்புவோம்..அப்படி நல்ல விசயங்களை கொடுத்து வளர்க்க செய்ய சில நல்ல வழி முறைகள் இருக்கின்றன. 

அவை என்ன வென்று தொடர்ந்து அடுத்த பதிவில் பார்ப்போம்...  


         ௦