முகநூல் சுவற்றில்
நேற்றுவரை
பெண்ணின் புகைப்படம் பகிர்ந்தும்
அங்கங்கள் குறித்த அர்த்தமற்ற கவிதைகள் எழுதியும்
ரசித்து விளையாடியவர்கள்
இன்று
தெய்வம் என்கிறார்கள்
தேவதை என்கிறார்கள்
சகோதரியாம்
தோழியாம்
சிலரோ அதிக உணர்ச்சிவசப்பட்டு
அம்மா தாயே பெற்றவளே என்கிறார்கள்...
நாளையே இது அத்தனையும் மாறி
பெண் என்பவள் போகப்பொருள் மட்டும்
என்ற தங்கள் ஆழ்மன அசிங்கத்தை அரங்கேற்றுவார்கள்
அதையும் கண்டு காறித்துப்பிவிட்டு
வழக்கம் போல எங்கள் வேலைகளை
நாங்கள் பார்க்கவேண்டும் !?
பெண்னை
தூற்றலும்
வதைப்பதும்
சிதைப்பதும்
எல்லாம் செய்து
துதிக்கவும் முடிகிறது
ஆண்களால் ??!!
இங்கே பல ஆண்களின் சுயவிளம்பர போற்றுதலுக்கு ஆளாகும் பெண்ணின் நிலை அடுத்த சில மணிநேரங்களில் தலைகீழாக மாறிவிடும்.
வெளியிடங்களிலும் எங்குப்பார்த்தாலும் மகளிர் கொண்டாட்ட வாழ்த்தொலிகள், பாராட்டு விழாக்கள் !
சிங்கள அரசை சர்வதேச குற்றவாளி கூண்டில் நிறுத்த பலமாக யோசிக்கும் நிலையில் மகளிர் தினத்தை கொண்டாடுவது ரொம்ப முக்கியம்தான் !! வரிசையாக பெண்ணை சிதைத்துக் கொன்று உடலுடன் உறவு கொண்டான் சிங்களவன் என்ற செய்தியை கேட்டும் பார்த்தும் கொதிக்காத நெஞ்சில் இருந்து எப்படி மகளிர் தின வாழ்த்துக்கள் வருகிறது...கொத்துகொத்தாக பெண்கள் சின்னாபின்னாமாகி சீரழிந்து போனதுக்கு காரணமானவர்களை சாமரம் வீசி நாட்டுக்குள் வரவேற்பார்கள், அதை எதிர்த்து ஒரு கண்டனம் கூட சொல்ல தைரியம் அற்ற கோழைகள் தானே நாம்!?
சிறுகுழந்தையையும் விட்டுவைக்காமல் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை ஒரு செய்தியாய் சகஜமாய் கடந்து போகும் மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். நமது பெண்கள் பள்ளி, கல்லூரிகளில் சரியானமுறையில் ஒரு கழிவறை வசதி இல்லை. காதல் என்ற பெயரில் நடக்கும் ஆசிட் வீச்சுக்கள், கௌரவ கொலைகள், சாதி மதத்தின் பெயரால் காட்டுமிராண்டித்தனங்கள்.......இன்னும் பல கேவலங்கள், அசிங்கங்கள் !!
பெண்ணுக்கு எங்கே எந்த கொடுமையும் நடக்கட்டும் என் வீட்டு பெண் பத்தரமா இருக்கிறாள் என்ற தெம்பில், திமிரில் ஒரு நாடுனா நாலும் நடக்கத்தான் செய்யும் அதற்காக பண்டிகை, தினம் எல்லாம் கொண்டாடாம, வாழ்த்தாம இருக்க முடியுமான்னு சில அறிவாளிகள் கேள்வி கேட்பதை தான் சகித்து கொள்ள முடியவில்லை.
ஏன் சொல்றோம் எதற்கு சொல்கிறோம் என்பதைவிட அவன் சொல்றான் அதனால் நானும் சொல்றேன் என்ற ஆட்டுமந்தை குணம் மனிதர்களை விட்டு என்று ஒழியுமோ தெரியல. எந்த தினமாக இருந்தாலும் அத்தினத்தின் உண்மையான பொருள் விளங்கப்படாமலேயே அந்த தினம் முடிந்துவிடுகிறது.
முகநூலில் முன்பின் தெரியாத பெண்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லி பெண்கள் மீதான அக்கறைய காட்டுற மாதிரி, அப்படியே மறக்காம உங்க வீட்டிலும் அம்மா, மனைவி, சகோதரி என்று பெண்கள் இருப்பாங்க அவங்களுக்கும் சொல்லிடுங்க, சந்தோசபடட்டும். ஆண்களே ! தயவுசெய்து தினங்களை விட்டுவிடுங்கள் உங்கள் வீட்டு பெண்களை கொண்டாடுங்கள் !
முகநூலில் பெண்ணை வர்ணித்து எழுதும் சில கவிதைகள் ஆபாசத்தின் உச்சம் ! நடிகைகள், பெண்கள் படங்களை போட்டு கருத்து சொல்றோம்னு ஒட்டுமொத்த பெண்களை வார்த்தைகளால் குத்திக் கிழிக்கிறார்கள். இளம்பெண்கள் குடிக்கிற மாதிரியான படங்களை பகிர்ந்து ஆண்கள் நாங்கள் குடிக்கிறது நாட்டுக்கு நல்லது,ஆனா பெண்கள் இப்படி குடிச்சா உலகத்துக்கே கெட்டது என்பதை போல பறைசாற்றுகிறார்கள். இந்த படங்களை போடுவதன் மூலம் தாங்கள் குடிப்பதை நியாயபடுத்திக்கொள்கிறார்கள்.
தமிழ்நாட்டு பெண்களின் கண்ணீருக்கும், அவலநிலைக்கும் பெரும் காரணமான டாஸ்மார்க் வியாபாரத்தை தீவிரமாக்கி வருமானம் பார்த்துக் கொண்டிருப்பதும் ஒரு பெண் என்ற அளவில் இந்த மகளிர் தினத்தை நாம் கண்டிப்பாக சிறப்பாக கொண்டாடியே தீரவேண்டும் !? வேதனை !!
பெண்கள்
ஆண்களுக்கு சிறிதும் குறைந்தவர்கள் அல்ல ஒரு சில பெண்கள்... பிறரை கவர
வேண்டும் என்பதற்காக என்னென்னவோ ஜாலங்கள் செய்து அதை உரிமை ,சுதந்திரம்
என்று நியாயப்படுத்துவது, ஆண்களை ஆணாதிக்கம் என்று மட்டுபடுத்துவதன் மூலமே
பெண்மை ஒளிரும் என்று எண்ணிக்கொண்டு செயல்படுவது, ஆணை சாடுவது எதிர்த்து
பேசுவது மட்டுமே பெண்ணியம் என்பதை போல நடப்பது.....இப்படி இன்னும்... இதுபோன்ற சில பெண்களின் செயலால் ஒத்துமொத்த
பெண்களின் சுயகௌரவம் பாழாவதை பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை.
குடும்பத்தை பொருத்தவரை ஆணுக்காக,பிறருக்காக மட்டுமே வாழ்கிறோம் என்றில்லாமல் தனக்காக வாழ்கிறோம் அதன் மூலம் தன்னை சேர்ந்தவர்களை சந்தோசப்படுத்துகிறோம் என்ற மனநிலை பெண்ணுக்கு வேண்டும்.
அரசியலில்
பெண்கள் ஈடுபடுவது பாராட்டுதற்குரியது...இதில் இரண்டு விதம்,
ஒன்று பெயருக்கு பதவியில் இருந்து கொண்டு ஆணின் சொல்கேட்டு செயல்படுவது
மற்றொன்று ஒட்டுமொத்த அதிகாரத்தையும் கையில் எடுத்துக்கொண்டு
சுயநலத்துக்காக எல்லோரையும் ஆட்டிப்படைப்பது ! இது இரண்டுமே சமூகத்தின்
சாபக்கேடுகள் ! மாறாக பெண் தனக்குரிய சிறப்பு தன்மைகளை மட்டுமே வெளிப்படுத்தி
சுயமரியாதையுடன் ஒரு சமூகத்தை, நாட்டை வழிநடத்தி செல்வது என்று நடக்குமோ அன்றே நிறைவான பெண்களின் தினம் !
எல்லா நிலைகளிலும் எல்லா இடத்திலும் சமவாய்ப்பு பெறுவது தான் பெண்ணுரிமையே தவிர ஆண்களுக்கு சமம் என்ற பெயரில் அவர்களை போல நடப்பது அல்ல என்பதை முதலில் பெண் உணரவேண்டும். ஆண்களும் தனது தாய், சகோதரி, மனைவி, மகள் தவிர மற்ற பெண்கள் வெறும் சதை பிண்டங்கள் என்ற எண்ணத்தை மாற்றியாக வேண்டும்.
ஆண், பெண் இருவரின் மனதில் இந்த மாற்றம் ஏற்படாமல் வெறும் பேச்சிற்கு மகளிர்தின வாழ்த்துக்கள் என்று சொல்வதில் அர்த்தமும் இல்லை...அந்த வார்த்தையில் ஜீவனும் இல்லை !!!!
படம் :கூகுள்
