தலையணை மந்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தலையணை மந்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், செப்டம்பர் 12

'தலையணை மந்திரம்' எனும் கவர்ச்சி நல்லுணர்வுகளின் வெளிப்பாடா?! தாம்பத்தியம் - 26

முன்குறிப்பு :
எனது கடந்த தாம்பத்தியம் தொடரில் சகோ.திரு.அப்பாதுரை அவர்கள் ஒரு பின்னூட்டம் இட்டு இருந்தார்...

//தலையணை மந்திரம் என்ற ஜாடிக்குள் இருக்கும் கவர்ச்சி - நல்லுணர்வுகளின் தீவிர வெளிப்பாடு தானே? தலையணை மந்திரத்துக்கு வாழ்நாள் முழுதும் நிலைக்கும் சக்தி இருந்தால் திருமண உறவுகள் செழிக்குமோ?//

எதையும் நேர்மறையாகப் பார்க்கும் அவரது பண்பிற்கு வணக்கங்கள்.

தலையணை மந்திரம் - அவசியம் தேவை

தலையணை மந்திரம் என்பதின் பின்னால் இருக்கும் கவர்ச்சி திருமண உறவைக்  கெடாமல் வைத்திருக்கும் என்பதில் எனக்கு முழு உடன்பாடு இல்லை. ஒரு மனைவி, கணவனை வசீகரித்து மகிழ கூடிய இடம் தனியறை. இந்த இடத்தில் ஒரு கணவன் தன் மனைவியின் அன்பு பிடிக்குள் அல்லது கட்டுபாட்டுக்குள் போய்விடுவான் என்பது இயல்பு. ஆனால் இந்நிலை அந்நேரம் மட்டுமா அல்லது விடிந்த பின்னருமா என்பது அவரவர் மனநிலைகளைப்  பொறுத்தது. 

மனைவி கணவனை கவர்ச்சியின் மூலம் மட்டுமே தன்னைச்  சுற்றி வரும்படி செய்வது என்பது மிக நல்லதா இல்லையா என்பதே இந்த பதிவில் என் முன் நிற்கும் கேள்வி ? இந்த ஈர்ப்பு சரியென்றால் அவர்களின் வாழ்க்கையில் எடுக்கப்படும் எந்த தீர்மானமும் ஒருதலைபட்சமாகப்  போய்விடக்கூடிய ஆபத்து இருக்கிறது...அப்படி இல்ல, ஒருவரை ஒருவர் கலந்துதான் முடிவு பண்றோம் என்று சொன்னாலும் இறுதி முடிவு சந்தேகமே இல்லாமல் மனைவியுடையதாகவே இருக்கும். ஒருவேளை மனைவியின் முடிவு தவறான தீர்வாக போய்விட்டால்...!?

முந்தைய தலைமுறையில் 

முழுமையான தாம்பத்தியதிற்கு தம்பதிகளின் அன்னியோனியம் மிக முக்கியம், தலையணை மந்திரத்துக்கு வாழ்நாள் முழுதும் நீடிக்கும் சக்தி இருந்திருக்கலாம், ஒரு காலத்தில்...!

அன்றைய பெரியோர்கள் திருமணம் முடிந்தப்  பெண்களுக்குச்  சிலவற்றை அறிவுறுத்தினார்கள்...ஆண்கள் கவனம் வேறு பக்கம் சிதறி விடக்  கூடாது என்பதற்காக சில வார்த்தைகளைச்  சொல்லி வைத்தார்கள். நன்கு கவனிக்கவும்...! வார்த்தைகள் தான் 'தலையணை மந்திரங்கள்' இல்லை. இவை காலப்  போக்கில் ஆணை வசியப்படுத்தும் ஒரு கவர்ச்சி ஆயுதமாக வலுப்பெற்று விட்டன...!!

'அக்கம்பக்கம் திரும்ப விட்டுடாத, உன்னையேச்  சுத்தி வர்ற மாதிரிப்  பக்குவமா நடந்துக்க' என்று சொன்னதின் பின்னால் சில அந்தரங்க சூட்சமங்கள் இருக்கிறது. "ஆண்களின் உடம்பில் வயதாகி ஆயுள் முடியும் வரை கூட விந்து அணுக்கள் சுரக்கும் , எனவே அதன் உந்துதலால் அவர்கள் பெண்ணுடன் இறுதிவரை உறவுக்  கொள்ளவே விரும்புவார்கள். இதற்கு மனைவி நீ சரியாய் ஒத்துழைக்கலைனா வீட்டுக்காரன் அடுத்த பக்கம் திரும்பிவிடுவான்...அதனால உன் அழகால, பேச்சால, வருடுதலால், தொடுதலால், இன்னும் பிறவற்றால் கணவனைப்  பார்த்துக்கோ ,கைக்குள்ள போட்டு வச்சுக்க" என்பது தான் அவர்கள் சொன்னதின் உட்கருத்து.

ஆனால் இன்று அதற்கு வாய்ப்புகள் மிக குறைவு. இன்றைய குடும்பங்கள் இருக்கின்ற சூழல்,பொருளாதாரத்தை நோக்கிய ஓட்டம், சுயநலம் மிகுந்த மனிதர்கள், கவனத்தைத்  திசைத்  திருப்பக்கூடிய ஊடகங்களின் ஆக்கிரமிப்பு, தொலைத்  தொடர்பு வசதிகள், பெருகிவிட்ட ஆடம்பர மோகம், இவற்றின்  பிடியில் சிக்கிக்கொண்ட தம்பதிகள், தங்களுக்கு என்று செலவிடும் நேரம் மிக மிகக்  குறைந்துவிட்டது.அவர்களின் அந்தரங்கமும் அள்ளித்  தெளித்த கோலம் போன்றே ஆகிவிட்டது !

அதனால் இன்றையக்  காலகட்டத்திற்கு அந்த அறிவுரை, மந்திரம் எல்லாம் உதவாது. இத்தகைய மந்திரத்துக்கு (கவர்ச்சிக்கு) மயங்கும் ஆண்கள் இருந்துவிட்டால் நாட்டில் கள்ள உறவுகள், விவாகரத்துக்கள் அதிகரித்து இருக்காதே ?!! இது போன்றவை வீட்டிற்கு வெளியே  மிக தாராளமாக கிடைக்கக்கூடிய காலம் இது. எனவே உடல் கவர்ச்சி மட்டும் போதாது என்பதே எனது உறுதியான முடிவு.

* தலையணை(?) தேவையின்றி போனில் கூட மந்திரம் போட்டு மாங்காய் பறித்துவிடும் காலமிது.

'அகத்தில் அன்பில்லாத பெண்டிரை மனதாலும் தீண்டேன்' என ஆண்கள் உணரும்வரை அவர்களுக்கு ஏற்றபடி இன்றைய பெண்கள் மாறித்தான் ஆகவேண்டும்...!!



இப்போதைய தலையணை மந்திரம்,

* கணவனின் குடும்பத்தினரை கணவனை விட்டு தூரத்  தள்ளி வைக்க, முக்கியமாக கணவனின் பெற்றோர்களை...

* தன் தனிப்பட்ட விருப்பத்தை, தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள

* தன் தவறுகளைக்  கண்டுக்கொள்ளாமல் இருக்க

* தன் சுயத்தைத்  திருப்திப்படுத்த

* பெருமைக்காக

இவை போன்றவைகளுக்காகப்  பயன்படுகிறது. குடும்பத்தின் நல்வாழ்வுக்காக என்பது இப்போது மிக குறைவு !

ஒரு உதாரணம் 

சென்னையில் இருக்கும் மகளுக்கு இங்கிருக்கும் தாய் ஒருவர் செல்பேசினார் , அதுவும் பொது இடத்தில் பஸ்ஸில் !!

என் பதிவுக்கு பாய்ண்ட்ஸ் தேவைப்படுவதால் இப்போதெல்லாம் பொது  இடத்தில் என் காதுகள் கூர்மையாகி விடுகிறது .(அதாங்க ஒட்டு கேட்கிறது)

///"என்னடி எங்க அது (மருமகனைத் தான் !) எங்க ஊர் சுத்தப்  போயாச்சா  ? இன்னைக்கு லீவ் தானே கூட மாட ஒத்தாசைக்கு வச்சுக்கலையா நீ தனியாக்  கிடந்துக்  கஷ்டபடுற(?)"

''சரி சரி எப்போ கடைக்குப்  போன, அவருக்குப்  பிடிச்ச புடவையா ? ஏண்டி இப்படி இருக்கிற?.....அது உனக்கு பிடிச்சாலுமேப்  பிடிக்கலச்  சொல்லு.....அப்பத்தான் எல்லாம் உன் விருப்பப்படி என்று ஆகும்.....ஓ ! நாத்தனார் பையன் வந்திருக்கானா .....அதுதான் கேட்கிறதுக்கு எல்லாம் ம் கொட்ற? (மகளை பேச விட்டாத்தான?) அவன் எதுக்கு இங்கே வரான், இன்டர்வியூவா ஏதோ ஒரு சாக்கு கிளம்பி வந்துறாங்க.....உன் வீட்ல என்ன கொட்டியாக்  கிடக்கு? பரவாயில்லைன்னு சமாளிக்காத.....எல்லாம் உன் நல்லதுக்கு(?) தான் சொல்றேன்"

"இன்னைக்கு இன்டர்வியூ, நாளைக்கு வேலைக் கிடைச்சு, 'வெளிலத்  தங்கினா செலவு ஆகும் இங்கேயே இருக்கட்டும்' னு இவர் சொல்லப்  போறார்.....அதுக்கு முன்னாடி உஷாரா இருந்துக்கோ.....இவங்க எல்லோரையும் பத்து அடி தள்ளி வை, சொல்றதுக்  கேட்குதா முந்தானையில முடிஞ்சி வச்சுக்கோ...இல்லை உன்னை தெருவுக்குக்  கொண்டு வந்துவிடுவான்.....சாயந்தரம் அந்தாளு வந்ததும், நல்லா டிரஸ் பண்ணிட்டு சினிமா ஏதும் போய்ட்டுவா, அனுசரணையா(!) நடந்துக்க.....தகுந்த நேரம் பார்த்து நாத்தனார் மகனைப்  பத்திச்  சொல்லு !"///

இதுபோல பல உதாரணங்கள் இருக்கிறது. போதாததுக்கு டிவி சீரியல்கள் வேற இப்படி நிறையச்  சொல்லிக்  கொடுக்கிறது...!!
  
இது போன்ற எந்த தவறான ஆலோசனைக்கும் தயவுசெய்துச்  செவிசாய்த்து விடாதீர்கள். உங்கள் குடும்ப சந்தோசம் உங்கள் கையில் மட்டும் !! தவறான வழிமுறைகள் எதையும் கைக்கொண்டு குடும்பத்தை நாடகமேடையாக மாற்றிவிடாதீர்கள். நித்தம் ஒரு வேஷம், நித்தம் ஒரு நாடகம் என்பதாக இருக்குமே தவிர குடும்பமாக இருக்காது...!

(உடல் கவர்ச்சி தாண்டிய மந்திரங்கள் பற்றி போனப் பதிவில் சொல்லிவிட்டேன் , நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்)



மெல்ல
என்
தலைகோதி
கை
விரல்களை
சொடுக்கெடுக்கும்
உன் தளர்ந்த விரல்கள்
மட்டும் போதுமடி
என் வயோதிகம்
பிழைத்துக்கொள்ளும்!!

அழகான குடும்ப வாழ்க்கைக்கு ஒருவரின் மேல் ஒருவருக்கு ஒரு ஈர்ப்பு இருந்தாக வேண்டியது அவசியம். முக்கியமாக கணவனும், மனைவியை தன் அன்புப்பிடிக்குள் வைத்தாக வேண்டும். கணவனின் பிடிக்குள் மனைவி இல்லாவிட்டால் எடுத்ததுக்கு எல்லாம் எதிர்வாதம் கிளம்பும். அதை தவிர்க்க மனைவியின் பிரியத்தைச்  சம்பாதியுங்கள். மனைவியை அதிகமாக நேசிக்கிறேன் என்று எண்ணி கொண்டிருந்தால் மட்டும் போதாது, அதை சொல்லில்,செயலில் வெளிப்படுத்துங்கள் !

தாம்பத்தியம் ஒரு வீணை , அதை மீட்டும் விதமாக மீட்டுங்கள் ! சுகமான இசை வெள்ளத்தில் மூழ்கி, வாழ்வை ரசித்து,உணர்ந்து,மகிழ்ந்து வாழுங்கள் ! வாழ்த்துக்கள் !!

*******************************************************************

தம்பதிகளுக்குள் உடல் , மனம் காரணமாக ஏதோ சிறு விருப்பமின்மை என்றாலும் விரைவில் சலித்து வெறுப்பின் எல்லைக்கு போய்விடுகிறார்கள். ஒருவேளை இந்த விருப்பமின்மைகள் மூன்று, நான்கு முறை என தொடர்ந்தால் மனவிரிசல் அதிகரித்து வேறு வடிகால்களை(?) தேடிக் கொள்கிறார்கள்.  

அடுத்த பதிவில் 'இல்லறத்திற்கு உடலுறவு ஏன் அவசியம் ?'  தொடர்ந்து பேசுவோம்...காத்திருங்கள் !!

*******************************************************************


நினைவிற்காக !

ஏற்கனவே விளக்கமாகச்  சொல்லி இருக்கிறேன்...மீண்டும் ஞாபகப் படுத்துகிறேன் . எனது இந்த தொடர் கணவன், மனைவி பற்றியது...ஆண் பெண் என்ற பிரிவினை/பேதம் பற்றி இங்கே பேசப்படவில்லை.பெண்ணைக்  குறைச்  சொல்லி எழுதப்பட்டு இருக்கிறது என்று யாரும் பொங்கிடாதிங்க !? எதைப்  பற்றிச்   சொல்கிறேன் என்றே புரியாமல் விமர்சிப்பவர்களை என்னவென்று சொல்வது...!? தொடரில் சில உண்மைகளைச்  சொல்லும் போது எனக்கும் கசக்கவே  செய்கிறது.

குற்றாலமலையில் இருக்கிற ஆணாதிக்க ஞானசித்தர் வேற 'எது என்றாலும் வெளிப்படையாகச் சொல்லிடு, இல்லைனா பாவம் சேர்ந்துடும்'னு பயமுறுத்துகிறார்...!!! :))


                                                                           *****************

தொடர்ந்து பேசுகிறேன் 
கௌசல்யா  

புதன், ஆகஸ்ட் 3

தாம்பத்தியம் - பாகம் 25 - போடுங்க ' தலையணை மந்திரம் ' !?

கணவன் மனைவிக்கான தலையணை மந்திரம்


மந்திரம் என்பது ஆன்மீக வாழ்வுக்கானது என்றாலும் நம் சமூக அமைப்பில் சாதாரணமாகச் சொல்லப்படும் பொதுவான ஒரு மந்திரம் தலையணை மந்திரம் !! இது கணவன் மனைவி இருவரும் தங்களின் தனிமையான நேரத்தில் ரொம்ப ஸ்பெஷலாக அன்னியோனியமாக பேசிக்கொள்வதை குறிக்கிறது! ஆனால் இதன் அர்த்தம் வேறு விதமாக நம்மால் எடுத்து கொள்ளப்படுகிறது.

எனக்கு தெரிந்தவரை மாமியார் தனது மருமகளை திட்டுவதற்கு கையாளும் ஒரு வசைச் சொல் என்றே தெரிகிறது. 'தலையணை மந்திரம் போட்டு என் மகனை மயக்கிட்டா ', 'அப்படி என்ன தலையணை மந்திரம் போட்டாலோ,இப்படி மயங்கி கிடக்கிறான் '  இதை சொல்லாத மாமியார்கள் குறைவு.....!! ஆனால் மிக உன்னிப்பாக கவனித்தால் இதன் பொருள் அந்தரங்கம் என்றே வருகிறது. இது எவ்வளவு மோசமான உதாரணம் என்று பலருக்கும் புரிவதில்லை....ஆண்கள் எல்லோரும் அந்த உறவிற்கு மயங்கிவிடுவார்கள் என்றும் அதற்காக பெற்றவளையும் உதாசீனப் படுத்தி விடுவான் என்பதாகத்தானே பொருள்...?! அதுவும் பெற்ற தாயே தனது மகனை அவ்வாறு சொல்வது எந்த விதத்தில் ஏற்புடையது !?

மருமகளை திட்டுவதற்காகக்  கூறப்படும் இந்த வார்த்தை அந்த ஆண்மகனை இழிவுக்குள்ளாக்கும் என்பதை ஏன் யாரும் புரிந்து கொள்வதில்லை ?? 'வீட்டுக்காரனை கைக்குள்ளப்  போட்டுகிட்டா' , 'முந்தானையில் முடிஞ்சிகிட்டா' என்பது போன்றவைகள் பெண்ணை குறை சொல்லணும் என்று பேசப்பட்டாலும் மறைமுகமாக அங்கே கேலிப் பொருளாக்கப்படுவது பரிதாபத்துக்குரிய ஆண்மை...!!

ஆண்களே ?!

என்னவோ ஆண்கள்  என்றாலே எப்போதும் பெண் சுகத்திற்கு அலைபவர்கள் போலவும், அதைத் தவிர அவர்களின் மூளை வேறு எதையும் சிந்திக்காது என்கிற ரீதியில் ஒரு சில பெண்கள் ஆண்களை நடத்துவது மிகவும் வருந்த தகுந்த ஒன்று.......

ஒவ்வொரு ஆணிற்கும் திருமணம் ஆன புதிதில் சில நாட்கள் மனைவி தேவதையாக தெரியலாம். அந்த தேவதை வரம் கொடுக்காமல்,வரம் கேட்டாலும் கொடுப்பார்கள்....!! இது ஆரம்ப சில மாதங்கள் மட்டுமே.....அடுத்து தொடரும் நாட்களில் மனைவிடம் தன் அம்மாவை தேடுவார்கள்/எதிர்பார்ப்பார்கள் என்பது உண்மையில் இங்கே எத்தனை பெண்களுக்கு புரியும் ?!! அம்மாவின் அன்பும் அரவணைப்பையும் மட்டுமே பெரிதாக என்னும் ஆண்கள் பலர், அதையே மனைவி சிறிதும் குறைவின்றி தரும் போது, அந்த ஆண்மகன் சற்று தடுமாறிப்  போவான். அந்த அன்பில் திளைத்து மூழ்கி முத்தெடுப்பவர்கள் பாக்கியசாலிகள் ! மாறாக எந்த ஆண் மகனும் வெறும் உடல் சுகத்தை மட்டும் பெரிதுப்படுத்த மாட்டான். இது புரியாத அறிவிலிகள் தலையணை மந்திரம் என்று எதையாவது சொல்லி அன்பான தம்பதிகளுக்கிடையே பிரிவினையை, விரிசலை ஏற்படுத்தி விடுகிறார்கள். 

அதனால் கணவன், மனைவி இருவருக்குள் மனப்பொருத்தம் ஏற்பட வழி  இல்லாமல் கெடுக்கக்கூடிய காரணங்கள் பெரும்பாலும் பெண்ணின் பக்கத்தில் இருந்தே தொடங்குகிறது.....அதை பெண்கள் புரிந்துக்  கொண்டு நடந்துக் கொள்ள வேண்டும். திருமணம் முடிந்த பெண்ணிற்கு நல்லது சொல்கிறோம்/செய்கிறோம் என்று வருகிற நலம்விரும்பிகளை(?) முதலில் வெளியே நிறுத்துங்கள்.  

மனைவிகளே !


பிறர் கூறும், கணவனை கைக்குள்ள போட்டுக்கோ, முந்தானையில் முடிஞ்சுக்கோ என்பது போன்ற தவறான பேச்சுக்களை முதலில் காதுகொடுத்து கேட்காதீர்கள் ஒருவேளை சொன்னது உங்கள் தாயாக இருந்தாலுமே...!! தாய் நமக்கு நல்லதுக்கு தானே சொல்வாங்க என்று அப்படியே கேட்டு வைக்காதீர்கள்...அவர்கள் அப்படி சொல்வதின் பின்னணியில் சில கசப்பான அனுபவங்கள் குறிப்பாக  தன் மாமியார் வீட்டில் அவர்கள் பெற்ற அனுபவங்கள் அவர்களை இப்படி பேச வைக்கலாம். 'நாம தான் உசாரா இல்லாம போய்ட்டோம் நம் மகளாவது நல்லா இருக்கட்டும்' என்று ஒரு நல்ல எண்ணத்தில் சொல்லலாம். ஆனால் நீங்கள் சீர்தூக்கிப்  பார்க்க வேண்டும். அவர்கள் வாழ்ந்த சூழ்நிலை வேறு. கணவன் மனைவி இருவருமே படித்து வேலைக்கு செல்லக்கூடிய இன்றைய தம்பதிகளின் நிலை வேறு.

இருவருமே பொருளாதார ரீதியிலான ஒரு தேடலில் தீவிரமாக போய்  கொண்டிருக்கும் போது...இந்த மாதிரி தலையணை மந்திரம், கணவனை தன் வழிக்கு கொண்டு வரணும் என்று ஈடுபடக்கூடிய இத்தகைய செயல் ஒரு நயவஞ்சக எண்ணம் போல் சென்று, மனதில் எப்போதும் ஒரு இறுக்கமான நெருக்கடியை கொடுத்துவிடக்  கூடிய ஆபத்து இருக்கிறது. அதை முற்றியும் தவிர்த்து அந்தரங்கமான நேரத்தில் இனிமையான நினைவுகளை பரஸ்பரம் பரிமாறி ஒரு தெளிந்த நீரோடை போன்று மனதை வைத்துக்கொண்டு உறவில் ஈடுபடும் போது அங்கே தாம்பத்தியம் மிக அழகாக அற்புதமாக நிறைவு பெறும். மறுநாள் காலை இருவருமே உற்சாகமாக, புது புத்துணர்ச்சியுடன் துயில் எழுவார்கள்...அப்புறம் என்ன, அன்றைய பகல் பொழுது முழுவதுமே அதே புத்துணர்ச்சி தொடரும் என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ...?!!


ஒரு சர்வே : 


" நகரத்தில் வாழும் 44 சதவீத திருமணமான ஆண்கள் தங்களுக்கு செக்ஸ் மீது இருக்கும் ஆர்வம் குறைந்துக்  கொண்டே இருப்பதாகச் சொல்கிறார்கள். இவர்களிலும் 29 சதவீதம் பேர் நிறைய சம்பாதிக்கிறார்கள் !!"  


சர்வே வேற இப்படி சொல்லுது...!! நிலைமை இப்படி இருக்க, தலையணை மந்திரம் அப்படி இப்படின்னு எதையாவது முயற்சி செய்து(?) இருந்ததும் போச்சு... அப்படின்ற நிலைக்கு கொண்டு வந்திடாதிங்க...!!

சரி இருக்கட்டும்...தவறாமல் மனைவியுடன் உறவு வைத்து கொள்பவர்கள், என்ன சொல்றாங்க... அதையும் பார்ப்போம்.....


"எங்கள் வேலைகளிலேயே நாங்கள் மிகவும் சோர்ந்து போகிறோம்.  வாரத்தில் ஒரு முறையாவது உறவு வைத்துக் கொள்ளாவிட்டால் மனைவி, அவள் மீது எங்களுக்கு பாசம் இல்லை என்று நினைத்துவிடுகிறாள். அப்படி ஒரு எண்ணம் மனைவிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் படுக்கையை பகிர்ந்துக்  கொள்கிறோம் " 


இது ஏதோ சுவாரசியத்துக்காக எழுதப்பட்டதில்லை...சர்வேயில் சொல்லப்பட்ட தகவல்கள். இன்றைக்கு பல வீடுகளில் இருக்ககூடிய நிதர்சனம் !!



'தலையணை மந்திரம்' இனி இப்படி போடுங்க...!!


* மனதில் சுமப்பதால் நீங்களும் ஒரு தாய்தான். உங்கள் அன்பான அரவணைப்பில் அவரை குழந்தையாய் மாற்றுங்கள்...! அப்புறம் எங்கிருந்து வரும் பிரச்சனை ??!! அதனால் பாசத்தை காட்டும் விதத்தில் ஒரு தாயாய் !!

* அவரது குறைகளை மட்டுமே பெரிதுப் படுத்தி வாதாடாமல் நிறைகளைச்  சொல்லி ஊக்கபடுத்துங்கள் ஒரு சகோதரியாய் !!

*  கணவர் சோர்ந்து போகும் நேரம் தோளில் தாங்குங்கள் ஒரு தோழியாய் !!

* குடும்பம்/தொழில்/வேலை இவற்றில் பிரச்சனை ஏற்பட்டால் உங்களுக்கு தெரிந்த நல் ஆலோசனைகளை சொல்லுங்கள் ஒரு மந்திரியாய் !!

* எல்லாவற்றிற்கும் பிறகு தனியறையில் நடந்துக் கொள்ளுங்கள்...முழுமை அடைந்த மனைவியாய் !!

கணவன் தன்னை புரிந்துக்  கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட நீங்கள் முதலில் அவரை புரிந்துகொள்ளுங்கள். கணவனின் ஆசைகள், தேவைகள், உரிமைகள் என்னவென்று தெரிந்துக்  கொண்டு அதற்கு ஏற்ப நடந்துக்  கொள்வது தான் புரிதல். குடும்பத்தில் யார் பேச்சை யார் கேட்கணும் என்று எடை போட்டுப்  பார்த்து கொண்டிராமல் இருவரும் ஒருவர் பேச்சை ஒருவர் மதித்துச்  செல்வது நல்லது. உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

அனைத்தையும் விட ஒருவரை ஒருவர் உண்மையாக நேசியுங்கள், பாசாங்கு இருக்கக் கூடாது...!! 

பிறரின் தேவையற்ற ஆலோசனைகளைக்  கேட்டு அதன் படி நடந்து மனவிரிசலை  ஏற்படுத்திக்  கொள்வதை விட இங்கே குறிப்பிட்ட இந்த மந்திரங்களை பின்பற்றுங்கள்...கணவன் உங்களையே சுற்றி வருவார்...! அன்பால் சாதிக்க முடியாததை வேறு எதைக்கொண்டு சாதித்தாலும் அவை எல்லாம் வெறும் கானல் !!

                                           ***************************


பின் குறிப்பு 


தாம்பத்தியம் பற்றிய தொடரின் 25 வது பாகம் இது ! இந்த தொடர் முதலில் ஒரு பத்து பாகத்துடன் முடிந்துவிடும் என எண்ணி எழுத தொடங்கினேன் . வாசகர்களாகிய உங்களின் அன்பான ஆதரவினால் இது இன்னும் பல பாகங்களைத்  தொடரும் என்று நினைக்கிறேன்...! என்னை தொடர்ந்து எழுத வைக்கும் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... 


பிரியங்களுடன் 
உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா