நம்மை போல பதிவுகள் எழுதுபவர்களுக்கு நம் நண்பர்கள் வந்து படித்தால் கிடைக்கிற திருப்தியே தனி தான். ஒரு மாதமாக பதிவுலகம் பக்கம் வராமல் இருந்த நாட்களில் நான் அதிகமாக வோட், கமெண்ட் போடவில்லை.....அதனால் வழக்கம் போல் என் சந்தேக புத்திக்கு ஒரு சந்தேகம் , 'ரொம்ப நாள் கழிச்சு பதிவு போடுறோம், யாருக்கு தெரிய போகிறது ?'
என் சந்தேக புத்தியை சாட்டையால் அடிக்கிற மாதிரி போன பதிவிற்கு நண்பர்களின் வரவு இருந்தது. இந்த மாதிரி ஒரு தவறான எண்ணத்தை நான் மட்டும் அல்ல பலரும் கொண்டிருக்கிறோம்...நாம் போய் வோட், கமெண்ட் போட்டால் அவர்கள் நமக்கு வருவார்கள் என்பது நமது எழுத்துகள் பிறருக்கு அறிமுகம் ஆகும் வரை மட்டுமே. பதிவு பிடித்து இருந்தால் நண்பர்கள் தொடர்ந்து படிப்பார்கள். இதை புரிந்து கொள்ளாமல் அதிக ஹிட்ஸ் வேண்டி பல பதிவர்கள் நடந்து கொள்ளும் சில அநாகரீக முறைகள், வீண் ஆர்பாட்டங்கள்...இதன் உச்சகட்டமாக சமீப காலமாக நடந்துகொண்டிருக்கும் விரும்பத் தகாத சில நிகழ்வுகள்.....! (இப்போது புரிந்து இருக்கும் நான் எதை பற்றி சொல்லபோகிறேன் என்று !?)
சிறு பிள்ளைகள் 'டீச்சர், டீச்சர் இவன் என்னை கிள்ளிட்டான், இவன் என் பென்சிலை எடுத்துவிட்டான்' என்கிற மாதிரி, மாறி மாறி சண்டை போடுவதை பார்த்தால் நாம் இன்னும் பள்ளிப்படிப்பை விட்டே தாண்டவில்லையோ ?! இணையத்தை கையாண்டும் இன்னும் மனமுதிர்ச்சி அடையாமல் இருக்கும் சிலரை எண்ணி நகைப்பும், கூடவே வெறுப்பும் வருகிறது. இதை விட வேறு சிலர் தங்களை அதிக முதிர்ச்சி அடைந்தவர்களாக எண்ணி நடந்து கொள்ளும் விதம் அசிங்கத்தின் உச்சம்.
இலக்கியம், இலக்கணம் தெரிந்தவர்களா எல்லோரும் ?
இங்கே எழுதுபவர்களில் எல்லோருமே தமிழ் மொழியில் முழு புலமை பெற்றவர்கள் என்று சொல்ல இயலாது...என்னையும் சேர்த்து, பேசுவதை அப்படியே எழுத்தில் கொண்டு வருகிறவர்களே அதிகம். இதை கூட பள்ளி செல்லும் சிறுவன் மாதிரி எழுதிக்கொண்டு இருக்கிறான் என்று விமர்சிப்பது எத்தகைய கீழ்த்தரமான செயல்...?!
எங்கே மனிதம் ?
ஒருத்தர் எழுதிய பதிவு பிடிக்கலைனா அதை சுத்தமா கண்டுக்க கூடாது, இல்லைனா அமைதியாக நாகரீகமான முறையில் கருத்துக்களை சொல்ல வேண்டும். அதைவிடுத்து அநாகரீகமான வார்த்தை பிரயோகங்கள், மனித நேயமற்ற விமர்சனங்கள் ! இப்படி செய்து எதை சாதிக்க போகிறாய் , என்ன எதிர் பார்க்கிறாய் ? என்ன வேண்டும் உனக்கு ? மனதினுள் இருக்கும் வக்கிரம் வார்த்தைகளாய் வெளியே வருவதும், அது சக மனிதனை கீறி கிழிப்பதிலும் என்ன சுகம் கண்டாய் ? பிறரின் மனதை கொல்வது சரி என்று யார் சொன்னார்கள் உங்களுக்கு ?!
நீங்க கேட்கலாம், 'உனக்கேன் அக்கறை' ? சில மாதங்கள் முன் நானே பாதிக்கப்பட்டேன்...!! நானும் அந்த மன உளைச்சலை சந்தித்தேனே ! அப்படி ஒரு சூழ்நிலையை அனுபவித்தவர்களுக்கு தெரியும், அந்த வேதனை எப்படி பட்டது என்று ?! பதிவுலகில் எதாவது சர்ச்சைகுரிய பதிவு எழுதினா உடனே ஆளாளுக்கு எதிர் பதிவு போட்டு அந்த பதிவை விமர்சிப்பதை ஓரளவிற்கு சரி எனலாம் . ஆனால் அதை விடுத்து , பதிவரை மட்டும் தாக்குவது எந்த விதத்தில் சரி...?! இது எழுத சரக்கு இல்லாத ஒரு குறிப்பிட்ட சிலரின் வேலையாக போய்விட்டது, இதன் மூலம் விளம்பரம் தேடுவது என்ன லாஜிக்கோ ?
தமிழனை இழிவு படுத்தாதே
பதிவுலகம் என்பது உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களால் பார்க்க படுகிறது...படிக்கபடுகிறது...இங்கே எழுதப்படும் செய்திகள் தான் தமிழனையும், தமிழ்நாட்டையும் குறிக்கும் அடையாளங்கள். இந்த எழுத்துக்களின் மூலம் தங்கள் நாட்டின் தற்போதைய நிலையை அறிந்து கொள்கிறார்கள்... இந்நிலையில் தமது சுயநலத்திற்காகவும், பிறர் மீதான வெறுப்பை உமிழுவதற்காகவும், எழுதப்படும் மோசமான பதிவுகள் கடல் கடந்து இருக்கும் தமிழர்களுக்கு எத்தகைய உணர்வை ஏற்படுத்தும் ? தமிழன் இப்படிபட்ட எண்ணம், செயல், பார்வை கொண்டிருப்பான் என்று பிரகடன படுத்துவது போல் ஆகாதா ? தமிழனின் விருப்பம் இது தான் என்று உறுதியாக அறிதியிட்டு வெளியிடப்படும் சில மோசமான பதிவுகள்...கேவலம் !!
சமூதாயத்தை திருத்துவது என் வேலை இல்லை என்று விழிப்புணர்வு பதிவுகளை எழுதுபவர்களை குறை சொல்வதற்கு என்றே சிலர் இருக்கிறார்கள். யார் நினைத்தாலும் சமூதாயத்தில் புரையோடி போயிருக்கும் அவலங்களை ஒரே நாளில் சரி படுத்தமுடியாது. ஆனால் படிக்கும் ஒருத்தர் இரண்டு பேர் மாறலாம் அல்லது யோசிக்க வைக்கலாம், அல்லது குறைந்த பட்சம் ஒரு விழிப்புணர்வு ஏற்படும்.
வாசகர்கள் இதை தான் விரும்புகிறார்கள் என்று எண்ணி வலிய தவறான கருத்துக்களை திணிக்கும் செயல்கள் தவிர்க்கலாமே . பதிவுலகம் பொறுத்தவரை ஒரு தளத்திற்கு வந்து வோட் செய்து அந்த பதிவை பலரை சென்றடைய செய்வது சக பதிவர்கள் தான். ஒரு மோசமான தளத்தை படிக்கும் பிற பதிவர்கள் இப்படி எழுதினால், இப்படி ஆபாச படம் போட்டால் தான் நாமும் ஹிட்ஸ் அதிகரிக்க முடியும் என்று எண்ணி செயல் படகூடிய பரிதாப நிலையும் இருக்கிறது...?!
யோசிக்கலாமே ?!
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
எல்லா மதமும் பிற உயிர்களிடத்தில் அன்பை பாராட்டணும் என்று தானே போதிக்கின்றன. அன்பு கொள்ளவில்லை என்றாலும் துவேசம் காட்டாமல் இருக்கலாமே...
சுவாசம் நின்ற மறுநொடி நம்ம எல்லோருக்கும் ஒரே பெயர் தான்...'பிணம்'
நமது இந்த வாழ்க்கை என்னும் ஓட்டத்தூரம் கொஞ்சம் தான்...இதில் அடிக்கடி நின்று விட்டால் எப்படி? நம்மை பற்றி குறை பேசுறவங்க பேசிட்டு இருக்கட்டும், நமக்கு தேவையானதை மட்டும் எடுத்துகொண்டு போயிட்டே இருக்கணும் (எனது இந்த விமர்சன பதிவையும் சேர்த்தே சொல்கிறேன்...!) நமக்கு பிரயாணம் தான் முக்கியம், நடுவில் வரும் ஸ்பீட் பிரேக்கர் நிதானித்து செல்லத்தானே தவிர, அங்கேயே நின்றுவிட இல்லை.
பிறர் குறை ,விமர்சனம் சொல்றாங்க என்று பதிலுக்கு நாமும் புழுதி வாரி தூற்றினால் அந்த தூசி நம்மீதும் விழத்தான் செய்யும்.....இன்னும் அதிகமாக !!
முடிந்தவரை நாளைய தலைமுறையினருக்கு நல்லதை விதைக்காவிட்டாலும் பரவாயில்லை, கெட்டதை விதைத்து விட்டு சென்றுவிடாதீர்கள்.
வாழும் நாட்கள் விரைந்து மறைந்து விடும் பனித்துளிபோல...இருக்கும் குறுகிய நாட்களில் பல நெஞ்சங்களை அன்பால் சேர்த்து கொள்வோம். 'தனிமனித தாக்குதல்' என்ற ஒரு அநாகரீகத்தை இனியாவது கைவிட்டு நேசம் வளர்ப்போம். ஏற்கனவே சாதி, மத, அரசியல், கொள்கைகள் வேறுபாட்டால் பிரிந்து கிடக்கிறார்கள் தமிழர்கள்...இது போன்ற சூழ்நிலையில் வறட்டு கௌரவம், சுயநலம் போன்றவற்றுக்காக நமக்குள் சண்டை இட்டு நம் மதிப்பை குறைத்துக் கொள்ளாமல், நேச கரம் நீட்டி நட்புறவை உறுதி படுத்தி 'நாம் தமிழனடா' என்று உரக்க சொல்வோம்.....
தமிழனுக்கு ஒரு பிரச்னை என்றால் ஒன்று சேர்ந்து குரல் கொடுப்போம்.
தமிழனுக்கு ஒரு பிரச்னை என்றால் ஒன்று சேர்ந்து குரல் கொடுப்போம்.
வெல்லட்டும் மானுடம் !
