தீபாவளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீபாவளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், அக்டோபர் 24

தீபாவளி அன்றும் இன்றும்...!


தீபாவளி என்று சொல்லும் போதே மனசில மத்தாப்பு பூக்கும்...இப்பவே இப்படினா சின்ன வயசில எப்படி இருந்திருக்கும்...!! முக்கியமா பெரியவர்களுக்கான பண்டிகைனு சொல்வதை விட சின்ன குழந்தைகளின் பண்டிகைனு சொல்வது பொருத்தமாக இருக்கும்...

தீபாவளி அன்று...

சின்ன புள்ளையா இருந்தபோ, தீபாவளி வந்தா போதும் நமக்கு கவனிப்பு ரொம்ப பிரமாதமா இருக்கும்......! நமக்காகவே பார்த்து பார்த்து எல்லாம் தயார் பண்ணுவாங்க.....எங்க அம்மா தீபாவளிக்கு இரண்டுநாள் முன்னாடி எப்ப தூங்குவாங்க...? எப்ப எழுதிருப்பாங்க என்றே தெரியாது...எப்பவும் ஒரு நல்ல வாசனை சமையலறையில் இருந்து வந்துட்டே இருக்கும். அப்புறம் தி.நகர் போய் கடை கடையா ஏறி இறங்கி எங்களுக்கு பிடிச்ச மாடல்,கலர்ல தேடி வாங்கிய டிரஸ் தயாரா இருக்கும். புது டிரஸ், பட்டாஸ், அதிரசம், முறுக்கு, ஜாங்கிரி, பாதுசா...பாருங்க இப்ப பலகாரம் பேர் கூட மறந்து போச்சு...

மத்த நாள் அம்மா காலையில எழுப்பினா, 'என்னடா வாழ்க்கை இது'னு புலம்பிட்டே எழுந்திருகிறது, ஆனா தீபாவளி அன்னைக்கு மட்டும் சீக்கிரமாக  எழுந்து விடுவேன்(நைட் தூங்கினாத்தானே...?) அம்மா சொல்றாங்களேனு(!) வேகவேகமா எண்ணெய் தேச்சுகிறதும், குளிக்கிறதும் நமக்கே இது கொஞ்சம் ஓவராத்தான் இருக்கும்...ஆனா எப்ப புது டிரசை போட விடுவாங்கன்னு மனசு பூரா பரபரன்னு இருக்கும். பக்கத்து வீடு, எதிர்வீடு,  அடுத்த  தெருவில  இருக்கிற  வீடுன்னு எல்லா வீட்டுக்கும் பலகாரங்கள் கொடுக்க என்னை அனுப்புவாங்க...அது ஒரு தனி ஜாலியா இருக்கும்...! 

பலகாரம் கொடுக்கிற சாக்குல புது டிரசை காமிக்கிறதுக்கு தான் இந்த அலட்டல்,அவசரம் எல்லாம்...!!கொடுத்துட்டு வீட்டுக்கு திரும்பி வந்தா இங்கேயும் ஒரு பத்து பதினைந்து வீட்டு பலகாரங்கள் டிசைன் டிசைனா டைனிங் டேபிள் மேல நிறைஞ்சி இருக்கும்.

அப்புறம் அம்மா கொடுக்கிற இட்லி, கறி குழம்பு காம்பினேசனை ஒரு வெட்டு வெட்டிட்டு டிவி பார்த்து, தம்பிங்க போடுற வெடிகளை தூரமா இருந்து (பக்கத்துல போக பயம் இல்ல, பட்டாசுக்கு ஒரு மரியாதை? )ரசிக்கிறது என ஒரே ஸ்பெஷல் என்டர்டைன்மென்ட் தான். தம்பிங்க ரொம்ப ஆசை படுறாங்களேனு பொட்டு வெடியை வரிசையா தரையில வச்சு, நீநீநீளமான சுத்தியல் எடுத்து டக் டக்னு அழகா(?) வெடிப்பேன். அப்புறம் மத்தியானம் வாழையிலைல இடம் கொள்ளாம அம்மா வைக்கிற ஐட்டங்களை ஒவ்வொன்னா எடுத்து காலி பண்ணிட்டு மறுபடி தெருவில வெடி போடுற என் குட்டி பிரண்ட்ஸ் கூட ஜாலியா விளையாடி, அன்னைக்கு ரிலீசான படங்கள் பற்றிய கதை பேசி என்று அந்த நாள் மிக இனிதாக கழியும்...

நைட்ல நாம ராக்கெட் விடுறதை விட ஊர்ல மக்கள் விடுற ராக்கெட்டை ரசிக்கிறது செம சூப்பரா இருக்கும்...வானமே ஜெகஜோதியா ஜொலிக்கும். எந்த பக்கம் போறதை பார்க்கிறது ? எதை ரசிக்கிறது ? எதை விடுறது ? எல்லாத்தையும் பார்த்துவிடணும் என்று கால் வலிக்க சுத்தி, கழுத்து வலிக்க பார்த்து, கை வலிக்க தட்டி குதூகளிச்சு...அப்படியே எம்பி வானத்தை தொட்டா என்னனு மனசு குதிக்கும் அந்நேரம் புரிந்தது சுவர்க்கம் வேறு எங்கும் இல்ல என் வீட்டு மொட்டை மாடியில் !!

எல்லாம் அழகாய், நிறைவாய் முடிந்து இரவும் வந்து விழிகளை தூக்கம் தழுவகொள்ளும்...இந்த ஒரு நாளின் உற்சாகம் அடுத்து தொடர்ந்து வரும் நாட்களுக்கு ஒரு சந்தோஷ பூஸ்ட் !!

தீபாவளி இன்று...

அப்படி உற்சாகம் கொடுத்த தீபாவளி இன்று ஒரு சாதாரண நிகழ்வாக மாறி போனது...நம் குடும்பத்தினரிடம் கூட ஆர்வம் குறைந்து போய்விட்டது...பெண்களை பொறுத்தவரை பிற நாட்களை விட பண்டிகை நாட்களில் அதிகரிக்கும் வேலைகள் !! வேலை செல்லும் பெண்கள் என்றால் இன்னும் கஷ்டம் கிடைக்கும் ஒரு நாள் விடுமுறையும் தீபாவளி சமயத்தில் அதிகரிக்கும் வேலை பளுவால் இடுப்பொடிந்து போய்விடும். ஆண்களுக்கு தங்கள் பர்ஸ் காலியாகிவிடுமே என்ற யோசனையில்...!! 

போனஸ் கிடைத்தாலும் இப்போதுள்ள விலைவாசிக்கு எவ்வளவு பணம் வந்தாலும் போதாது. மட்டன் விலை கிலோ 400 தொடபோகிறது, சிக்கன் கிலோ 180  ஆகிவிடும்...சரி அசைவமே வேண்டாம் காய்கறி வாங்கலாம் என்றால் அங்கே அதுக்கு மேல் இருக்கிறது...என்ன செய்வான் சாமானிய மனிதன்...? பட்டாஸ் விலையும் 50% வரை போன வருடத்தை விட விலை ஏறி விட்டதாம். துணிமணிகளின் விலை பற்றி சொல்ல வேண்டியதில்லை, ரெடிமேட் ஜாஸ்தி விலை என்று துணியாக எடுத்து தைக்க கொடுத்தால் தையல் கூலி, துணி வாங்கிய விலையை விட அதிகமாக இருக்கிறது...புதுத்துணி, பட்டாஸ் இவை எல்லாம் இல்லாமல் தீபாவளி கொண்டாடவும் முடியாது...இதை எல்லாம் யோசிக்கிறப்போ ஏண்டா இந்த பண்டிகைகள் வருகிறது என்ற சலிப்பு ஏற்படுவது சகஜம். 

இனி வரும் காலங்களில் தீபாவளி போன்ற பண்டிகைகள் வசதி உள்ளவர்கள் மட்டுமே கொண்டாடும் படியாக மாறி போனாலும் ஆச்சர்யபடுறதுக்கு இல்லை...நடுத்தர குடும்பத்து தாய் தன் மகனை பார்த்து,'தீபாவளி கொண்டாட நாம எல்லாம் ஆசை படலாமா மகனே...? நீ நல்லா படிச்சு நிறைய சம்பாதி அப்ப கொண்டாடலாம் ?' என ஆறுதல் சொல்ல கூடும்...?!!

நம்ம சமுதாயம் கொஞ்சம் கொஞ்சமாக பழைய சந்தோசங்களை இழந்து வருவது போல் இருக்கிறது...என்னதான் சொல்லுங்க நம்ம குழந்தைகளை விட முந்தின தலைமுறையினர் நாம ரொம்ப கொடுத்து வச்சவங்க...!!

நம்ம பசங்களுக்கு பண்டிகைகளின் மேல் ஆர்வம் குறைந்துவிட்டது...ஏன்,எதற்காக கொண்டாடுறோம் என்றும் தெரிந்துகொள்ள அவர்கள் விரும்பவில்லை. அவர்களை பொறுத்தவரை இன்னொரு விடுமுறை நாள் அவ்வளவே...காலையில் பட்டாஸ் போடும்போது இருக்கிற ஆர்வம் கூட நேரம் ஆக ஆக குறைந்துவிடுகிறது...இன்றைய தலைமுறையினருக்கு தொலைக்காட்சியில், கம்ப்யூட்டர், மொபைல், பிளே ஸ்டேஷன் கேம்ஸில் கிடைக்கும் சந்தோசம் பண்டிகைகளை கொண்டாடுவதில் கிடைப்பதில்லையோ...??!  


பெற்றோர்களான என் போன்றோருக்கு   பண்டிகை கொண்டாடி ஆகணும், பசங்களையும் சந்தோசமாக வச்சுக்கணும் என்று கஷ்டப்பட்டு அங்கே இங்கே ஓடி மூச்சுவாங்க எல்லாம் செஞ்சு முடிக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிவிடுகிறது. 

ஒரு உண்மை என்னனா...  

நாம சின்ன புள்ளைகளா இருந்த வரைக்கும் தீபாவளி நல்லா இருந்தது...இப்ப நமக்கு புள்ளைங்க இருக்கிறபோது, தீபாவளியை அவ்வளவாக நம்மால் ரசிக்க இயலவில்லை...!!

உங்கள் மனதோடு கொஞ்சம்...

இந்த தீபாவளி சமயத்தில் நமக்காக எவ்வளவோ செலவு செய்கிறோம். அதில் சிறிய அளவு பணத்தில் உடை, இனிப்பு, வெடி ஏதோ ஒன்றை வாங்கி அருகில், ரோட்டில், தெருவில் பார்க்கும் ஏதோ ஒரு ஏழை சிறுவர், சிறுமிகளுக்கு கொடுங்கள்...பிறகு உங்களுக்கு கிடைக்கும் மனநிறைவை உணர்ந்து அனுபவித்து பாருங்கள் !!

நீங்கள் கொடுங்கள்...அப்போது அவர்கள் விழிகளில் தெரியும், உண்மையான தீபாவளி !! 


என் நேசத்துக்குரிய அனைத்து பதிவுலக உறவுகளுக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!



படங்கள் - நன்றி கூகுள்