குடும்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குடும்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஏப்ரல் 8

போலி உறவுகளின் ஈர்ப்பு...!? தாம்பத்தியம் - பாகம் 33






couple showing fake love in relationship



"இந்த ஆம்பளைங்க  ஏன்  இப்படி இருக்காங்க...????" 

ரிங் ஆன செல்போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த செகண்ட் இந்த கேள்வி காதை அறைந்தது? ஆறு மாதத்திற்கு முன்பு  ஆலோசனை தேவை என்று இமெயில் மூலம் தொடர்பு கொண்டவர் போன் நம்பர் கேட்கவே  கொடுத்தேன். அந்த பெண்தான் எடுத்ததுமே ஒட்டு மொத்த ஆண்களையும் சாடும்  கேள்வியை என்னிடம் கேட்டார். அடுத்ததாக '"என் கணவரை  டைவர்ஸ் பண்ணப் போறேன், வக்கீலை பார்க்குறதுக்கு முன்னாடி உங்ககிட்ட போனில் ஒரு முறை பேசினா என்னனு தோணிச்சு" என்றார். 

வழக்கம் போல நானும், ஆலோசனைக்கு வருபவர்களை முழுதாக பேசவிடுவதைப்  போன்று இவரையும், 'சரி எல்லாம் சொல்லி முடியுங்கள்' என்றேன். ஒரு  மணி  நேரமாக அவர் சொன்னதின் மொத்தப் பொருளே இரண்டே வரிகள் தான். கணவர் சலனப்  புத்திக்காரர், வேறு தொடர்பு ஏற்பட்டு இருக்கும் என்று சந்தேகம். "எதை வைத்து சொல்கிறீர்கள்" என்றேன், "முன்பை விட என்மீது மிகுந்த அன்பாக இருக்கிறார். கேட்ட பொருளை உடனே வாங்கி கொடுத்து விடுகிறார். வேறு எங்கோ தவறு நடக்கவே தான் உறுத்தல் ஏற்பட்டு என்னிடம் அன்பைக் கொட்டுகிறார் போல" என்று தனது துப்பறியும் புத்தியை மெச்சிக் கொண்டார்.  திடீரெனப்  பெருகும் அன்புக்கு பின்னால் இப்படியும் காரணங்கள் இருக்கலாம்  என்பதை இந்த சமூகம் தெரிந்துக் கொள்ளவேண்டும்!

சில பல ஆலோசனைகளைச்  சொல்லி போனை வைத்தேன். அப்போதைய விவாகரத்து முடிவை சிறிது காலம் தள்ளிப்  போடும் அளவிற்கு மனதை மாற்றிவிட்டதாக எனக்கு தோன்றியது. அதன் பிறகு ஆறு மாதமாக தொடர்புக்  கொள்ளவில்லை. கடந்த  வாரம் அவராக தொடர்புக் கொண்டு சொன்னவற்றைச்  சத்தியமாக என்னால் நம்பவே  முடியவில்லை.

பெண் எடுத்த வித்தியாசமான ஆயுதம் 

"An idle mind is the devil's workshop"   என்று சொல்வார்கள்.   அந்த பெண் பலவிதமாக சிந்தித்து முடிவாக தனது கணவனின் நடவடிக்கையை வேவுப்  பார்க்க ஆரம்பித்துவிட்டார்.  சந்தேகம் என்பது வந்துவிட்டால் அதன் பிறகு அமைதி என்பது எது?!  ஆனால் இவர் கொஞ்சம் வித்தியாசமாக கணவரின் மொபைல் ஐ ஆராய்ச்சிச் செய்யவில்லை அதற்கு பதிலாக புதிதாக fake ஐடி ஒன்றை பேஸ்புக்கில் ஓபன் செய்து  குட் மார்னிங், குட் நைட் சொல்வது, கவிதை எழுத வரும் என்பதால் காதல் கவிதைகளாக தினம் இரண்டு என்று பகிர்ந்திருக்கிறார். பிறகு  கணவரின் ப்ரெண்ட்  லிஸ்டில் இருக்கும் இரண்டு மூன்று நபருக்கு request அனுப்பி இணைத்திருக்கிறார். அப்புறம் என்ன people you may know  இவரது கணவரையும் காட்டி இருக்கிறது. இவருக்கு காட்டியதை அவருக்கும் காட்டி இருக்கும் அல்லவா, ஒரு சுபயோக சுபதினத்தில் தானாக வந்து விழுந்திருக்கிறார் request கொடுத்து...!!!

அதன் பிறகுதான் இவரது வாழ்கையில் மிகப் பெரிய டுவிஸ்ட் ?! திரைப்படங்களில் நடக்கும் சம்பவங்கள் கற்பனை  என்று சொல்லப்பட்டாலும் உண்மை   கொஞ்சமாவது இருக்கும்.  தற்போதைய நமது சமூக சூழல்களில் திரைப்படத்தையும் விஞ்சக்கூடிய பல சம்பவங்கள் நமது குடும்பங்களில் நடந்தேறி வருகிறது என்பது இந்த பெண்மணி தனது கதையைச்  சொல்லும் போது புரிந்தது. 

ஆண் எவ்வளவு தான் தனது மனைவியை நேசித்தாலும் தெரிந்தோ தெரியாமலோ வெளியில் புதிதாக ஏற்படும் எதிர்பாலின ஈர்ப்பில் விழுந்துவிடுகிறான், தனது மனசாட்சியிடம் நட்பு தானே  என்று சமாளித்தும் விடுவான்...அதிலும் இன்றைய ஆண் பெண் இருவரும் தேடித்தேடி  தைரியமாகவே   நட்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். வாழ்க்கைச் சூழலின் மன அழுத்தம் இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. புதிய உறவை ஆரம்பிப்பது ஆணாக இருந்தாலும் அதை இன்னும் நெருக்கமாக்கி விடுவது பெண். எல்லாவற்றையும் மனைவியிடம் பகிர்ந்துக் கொள்ள  முடியாத ஆண்கள் அடுத்த பெண்ணின் சிநேகிதத்தைத்  தேடுகிறார்கள்... கிடைத்ததும் அதில் தொலைந்தும் விடுகிறார்கள்!

ஆறுதலாக பேச அக்கறையாக விசாரிக்க, திரைப்படம் சமூகம் அரசியல் கதை கவிதை பற்றி எல்லாம் விவாதிக்க, மற்றொரு உயிர் ஒன்று தேவைப்படுகிறது அது எதிர்பாலினமாக இருந்தால் ஈர்ப்பு அதிகமாகிறது, ஆணிற்கு ஒரு பெண்ணும் பெண்ணிற்கு ஒரு ஆணும்!! ஏன் இதையெல்லாம் தனது துணையிடம் பேசலாமே என கேட்கலாம்.  'இவளுக்கு என்ன தெரியும்' என்ற கணவனின் மெத்தனமும், 'ஆமா நாம பேசுறதை எங்க காதுக் கொடுத்து கேட்கப்போறாரு' என்ற பெண்ணின் சலிப்பும் இருவரையும் நெருக்கமாக பேச விடுவதில்லை. தவிரவும் வீடு என்றால் குழந்தைகள் வளர்ப்பு, கல்வி,  EMI உட்பட்ட  பொருளாதார சிக்கல்கள், சொந்தங்கள் சார்ந்த உறவு பேணுதல் போன்றவற்றில் உழன்றுக் கொண்டிருக்கும் தம்பதிகள் தங்களுக்கான நேரம் என்ற ஒன்றை ஒதுக்குவதே இல்லை. நேரம் கிடைக்க மாட்டேங்குது என்று நேரத்தின் மேல் தவறைப் போட்டுவிட்டுத்  தப்பித்து விடுகிறார்கள்.  

அதேசமயம் வெளியே ஏற்படும்  நட்புடன் பேச வேண்டும் என்பதற்காக நேரத்தை உருவாக்கிக் கொள்பவர்களும் இவர்கள் தான்.  எங்கிருந்தோ முகம் தெரியாத ஒரு நட்பு அனுப்பும்  சின்ன டெக்ஸ்ட் மெசேஜ்  கொடுக்கும் மகிழ்ச்சி ,உற்சாகம், சிலிர்க்க வைக்கும்  'கிக்'  உடனிருக்கும் துணையிடம் ஏன் ஏற்படுவதில்லை !   மனித மூளையின் ஒரு ஓரம் மட்டும் தாறுமாறாக  டிசைன் செய்யப்பட்டிருக்கிறதோ என்னவோ ?!!! 

ஹார்மோன்களின் முக்கியத்துவம் 

நமது மூளையில் இருக்கிற 'ஹைப்போதாலமஸ்' உடலின் உணர்ச்சிகளை தூண்டவும் கட்டுப்படுத்தவும் கூடிய முக்கியப்  பங்கு வகிக்கிறது. சாப்பிடத்  தூண்டுவது,  உடல் சூட்டினை  சமநிலைப்  படுத்துவது, நினைவாற்றல், தூக்கம், கோபம், செக்ஸ் குறிப்பாக சொல்லணும்னா  ஹார்மோன்களை ஆட்டிவைக்கிறதே இவர் தான்!!  எதிர்பாலினத்தவரிடம் ஈர்க்கப்படும்போது டோபோமைன் எனப்படும் மகிழ்ச்சி ஹார்மோன் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இது ஹைபோதாலமஸில் மிகச் சிறப்பு என்று மூளையில் பதிவுச்  செய்யப்பட்டு இருப்பதால்  'எதிர்பாலின ஈர்ப்பு', போதையை போன்றதொரு  மெக்கானிஸத்திற்குள் மனிதனைத் தள்ளி விடுகிறது.  .

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரியான ஹார்மோன்கள் அதாவது ஈஸ்ட்ரோஜன், டெஸ்டோஸ்டிரோன், ப்ரோஜெஸ்டிரோன் இருந்தாலும் உறுப்புகள் உள்ளிட்ட வேறுபாடுகள் அவற்றின் இயங்கங்களை பொறுத்து மாறுபடுகின்றன. பாலியல் ஈர்ப்பு சம்பந்தப்பட்ட ஹார்மோன்களான     டெஸ்டோஸ்டிரோன், ஈஸ்ட்ரோஜன் போன்றவற்றின்  உற்பத்தியை சில சமயம் ஹைபோதாலமஸ் தொந்தரவு செய்துவிடுவதால் மனிதனின் நடத்தையில் மாறுபாடுகள் ஏற்படலாம். 

உடல் ரீதியிலான உறவு ஏற்படவில்லை என்றாலும் அதீத ஈர்ப்பு இருவருக்கிடையில் இருப்பது சாத்தியமா என்றால் ஆம் என்று தான் சொல்லவேண்டும்.  அந்த நபருடன் பேசும்போது மட்டுமே ஏற்படும் மகிழ்ச்சியான மனநிலை தொடர்ந்து அதே நபருடன் அதிக நேரத்தைச்  செலவிடச் சொல்கிறது. ஆனால் அறிவியல் பல சொன்னாலும் இன்றைய மனித மனங்களை இது இப்படிதான் என்று குறிப்பிட்டுச் சொல்வது அறிவியலாலும் முடியாது போல. 

எண்ணங்களில் மாறுபாடு   

தற்போது பலரும் இவ்வாறு சொல்லத் தொடங்கிவிட்டார்கள் , (கொரானாவிற்கு பிறகு)  "இருப்பது ஒரே வாழ்க்கை, காலையில் எழுந்தா தான் நாம உயிரோட இருக்கோம்ன்றதே தெரியுது ...யாருக்கு எப்ப, என்ன ஆகும் என்றே தெரியாத நெலம... இதுல மனசாட்சியாவது மண்ணாங்கட்டியாவது...பாவமாவது புண்ணியமாவது... இருக்கிறவரை அப்படியே ஜாலியா நமக்கு புடிச்ச மாதிரி வாழ்ந்துட்டு போய்டணும் " இதை  இன்றையத்  தத்துவம் என்று சொல்வதை விட ஒரு கொள்கையாகவே எண்ணத் தொடங்கிவிட்டார்கள்!!

இதை  சொல்வதற்கும் கேட்பதற்கும் நன்றாக இருக்கும், ஆனால் இங்கே நிஜம்  வேறு !  ஒரு தம்பதியினர் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதை மட்டுமே சமூகம்/உறவுகள்  பார்க்கும் ஆனால் தனது பெற்றோர் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதை அவர்களின் குழந்தைகள் கண்டிப்பாகப் பார்க்கும்.  பெற்றோரை பார்த்தே ஒரு குழந்தை பாடம் படிக்கிறது. யாருக்காக இல்லை என்றாலும் தனது குழந்தைக்காக ஒவ்வொருவரும் சரியாக வாழ்ந்துதான் ஆக வேண்டும்.  பிறரை துன்புறுத்தக் கூடிய, கொடுமை விளைவிக்கக் கூடிய ஒரு மகனை/மகளை நாம் இந்த சமூகத்துக்கு கொடுத்துவிட்டுச் செல்கிறோமா அல்லது நல்ல பண்பு, ஒழுக்கம்,  மனிதத்தன்மை கொண்டவர்களையா என்பதைப்பற்றி  பெற்றோர்கள் யோசித்தாக வேண்டும். 

Fake மனிதர்களின்  அதீத அன்பு  

ஆலோசனைக்கு வந்த பெண்ணும் அவரது கணவரும் chatting செய்ய ஆரம்பித்து அந்தரங்கமாக  பேசும் அளவிற்கு தொடர்பு நெருங்கமாகி இருக்கிறது...??!!! போட்டோ கேட்டதற்கு 'என்னை நம்பலைனாப்  பேச வேண்டாம். என் முகத்தை பார்த்து பழகினால் அது உண்மையாக இருக்காது' அப்படி இப்படி என்று செண்டிமெண்டாக தாக்கி இருக்கிறார் இந்த பெண்! 

"மன ஆறுதலுக்காக உங்ககிட்ட பேசுறேன் பேசப்  பிடிக்கலைனா விட்டுடுங்க, என்று ஒரு போடு போட்டேன், அதோட ஆள் மறுபடி அந்த பேச்சை எடுப்பதே இல்லை"  

"உன் குரலை ஒரு முறை கேட்கணும், ஆம்பளப்  பசங்க கூட பொண்ணு  மாதிரி chatting பண்ணி ஏமாத்துவாங்க அதுக்காக கேட்கிறேன்" என்று கேட்டார், அதுக்காக 'ஒரு முறை தான் சரியா' என்று கண்டிசன் போட்டு ஒரு இரண்டு நிமிஷம் வாய்ஸ் சாட்டில் கொஞ்சம் லேசா ஹஸ்கி வாய்ஸ்ல பேச்சை மாத்திப் பேசி அனுப்பினேன். அவரால கண்டுப்பிடிக்க கூட முடியல, தேன் மாதிரி இருக்குன்னு   ஒரே வழிசல் வேற.  அப்படி பேசி அனுப்பும் போது எனக்கு எவ்ளோ த்ரில் ஆ இருந்துச்சு தெரியுமா ? ஒரே வெட்கமா போச்சு மேடம்" 

என்று என்னிடம் சொல்லிச் சிரிக்கிறார் விவாகரத்து பண்ணப்போகிறேன் என்ற முடிவில் இருந்த  அந்த பெண்.

கவிதை வழியாக  காதலை தினமும் இவர் கொட்ட அதற்கு அவர்  இதயம் போட்டு  குதூகலிக்க என இருப்புறமும் உற்சாகம் கரைப்  புரண்டு ஓடியிருக்கிறது. வீட்டில் இருக்கும் போது கணவர் தனது மனைவிக்கு தெரியாமல் ஆனால் மனைவிக்கே(?) 'குட் மார்னிங் டியர் என்ன பண்ற' என்று மெசெஜ் அனுப்ப, மனைவியும் 'வீட்டுக்காரர் இருக்கிறார், அவர் போனதும் மெசேஜ் பண்றேன் டார்லிங்' என்று பதில் மெசேஜில் சிணுங்க??!! 

பருவ வயதில் ஏற்படும் முதல் காதல் அனுபவத்தை விவரிப்பதைப் போல உற்சாகமாக அந்த பெண் பேசப் பேச எனக்கு பைத்தியம் பிடிக்காதக்  குறை . இது எப்படி சாத்தியம் ?!  

"ஏங்க இப்படி பண்றிங்க, உண்மை தெரிஞ்சா என்னாகும்?"

"ஒன்னும் ஆகாது மேடம். உண்மையை எதுக்கு சொல்லணும் கடைசிவரை தெரியாமப்  பார்த்துப்பேன்... அவர் இப்படி என்கிட்ட பேசுறதால மத்த பொண்ணுங்க கூட  பேசவோப்  பழகவோ  வாய்ப்பே இல்லை, அந்த அளவிற்கு அவரை நான் மயக்கி வச்சிருக்கேன்... FB ல கவிதை வரலைனா தவிச்சுப் போய்டுவார். இதனால இணையத்தில  மத்தவங்க எழுதிய  கவிதையை லைட் ஆ மாத்தி  போஸ்ட் பண்ணிவிடுவேன்... ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன்... வீட்டுவேலைகளை ஜாலியாப்  பண்றேன், குழந்தைகளை சந்தோசமாப்  பாத்துக்குறேன். வீட்டில என் கண் முன்னாடி இருக்காரு,  வெளில போனாலும் என்கிட்டே தான் மெசேஜ் பண்ணிப்பேசிட்டு இருக்காரு. 24 மணி நேரமும் ஒன்னாவே இருக்கோம். இதை விட ஒரு பெண்ணுக்கு வேற என்ன வேணும்?!!!" 

"என்ன இருந்தாலும் இது தப்பில்லையா" என அப்பாவியாக  நான் கேட்க,  

"என்னங்க தப்பு என் வீட்டுக்காரரைத் தானே லவ் பண்றேன். அவரும் என்னை தானே லவ் பண்றாரு" 

உங்களைத்  தான் என்றாலும் அவரது கற்பனையில் வேறு ஒரு பெண் தானே இருப்பார் என்று சொல்லத் தோன்றியது,  ஆனால் சொல்லவில்லை. அவரது சந்தோசத்தை எனது லாஜிக் கேள்வியால் சிதைக்க விரும்பவில்லை. சில சுவாரசியங்களை அப்படியே விட்டுவிடுவது தான் நல்லது. 

"நல்லா இருக்குங்க... வாழ்த்துகள்" என்று வாழ்த்திப்  போனை வைத்துவிட்டேன்.

இந்த மனித மனம் தான் எத்தனை விசித்திரமானது...!!! ரத்தமும் சதையுமாய் உடன் இருக்கும் போது வராத/ஏற்படாத காதல் வெற்று எழுத்துக்களைப் பார்த்து ஏற்படுகிறது என்றால் நமது ஆழ்மனதிற்கு எதுதான் தேவை... எதை நோக்கி அது காத்திருக்கிறது... எதற்காக ஏங்குகிறது...?!!! 


தொடர்ந்துப்  பேசுகிறேன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'

கௌசல்யா. 

புதன், நவம்பர் 12

அடிக்கடி சொல்லுங்க... ஐ லவ் யூ ! தாம்பத்தியம் - பாகம் 31



காலில் சக்கரம் கட்டி ஓடிக் கொண்டிருக்கும் தம்பதியினர்  ஒரு நொடி நிதானித்து இந்த வாரத்தில் உங்கள் துணை உங்ககிட்ட எத்தனை முறை ஐ லவ் யூ சொன்னாங்க...கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க... அடடா ஒரு முறை கூட சொல்லலையா? ரொம்ப பாவமுங்க நீங்க ,  பரஸ்பரம் இதைச் சொல்லக் கூட  நேரம் , மூட்  இல்லாம என்ன தாம்பத்தியம் நடத்துரிங்களோ தெரியலன்னு வருத்தப்பட்டதுக்கு, அப்படி என்ன இதுல இருக்கு, நாங்க என்ன லவர்ஸ்ஆ , வயசு நாற்பது மேல ஆச்சு இன்னும் என்ன வேண்டிக்  கிடக்கு? அப்டி இப்டின்னு ஏகப்பட்ட சலிப்பு, புலம்பல்கள்.  ஆனா அதுக்கூட பரவாயில்லை  ‘ஐ லவ் யூ  சொன்னாத்தான் தெரியுமா லவ் பண்றேன்னு” என்று கேட்கும்  அப்பாவிகளுக்காகத்தான்  இந்த பதிவு !

கல்யாணம் முடிந்து குழந்தையும் பிறந்து பத்து வருஷம் ஆச்சு இனியென்ன  என்று ரொமான்ஸ் எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு இரவின் நடுவில் ஐந்து நிமிட தேடலுடன் முடித்துக்கொண்டு விடிந்ததும் படுக்கையுடன் காதலையும் மடித்து ஓரமாக வைத்துவிட்டு ஆளுக்கு ஒரு பக்கமாய் பறந்துவிடுகிறார்கள். இதுதான் இன்றைய தாம்பத்தியம் ! பெரிதாக ஈர்ப்பு எதுவும் இருவரிடையே இருப்பதில்லை, அதனால்தான் நடுவில் ஏதாவது சிறு பிரச்சனை என்றாலும் கோர்ட் படியேறத்  துணிந்துவிடுகிறார்கள். இரு  மனங்களிலும் காதல் இருந்தால் மட்டுமே தாம்பத்தியம் இறுதிவரை சந்தோசமாக கழியும். மகிழ்ச்சியுடன் கூடிய தாம்பத்தியத்தில் அவர்களின் குழந்தைகளும் நன்முறையில் வளருவார்கள். எல்லாம் சரிதான் ஆரம்ப நாட்களில் இருந்த ஈர்ப்பு, காதல், கவர்ச்சி எல்லாம் எங்கையோப்  போய்விட்டது, மறுபடி அதையெல்லாம் எப்படி கொண்டு வருவது என்பது உங்கள் முன் நிற்கும் கேள்வி என்றால் விடை ‘ஐ லவ் யூ’

ஆமாங்க ஆமா ஐ லவ் யூ என்பது ஒரு மந்திரம். எப்படிப்பட்ட உடல், உள சோர்வையும் நொடியில் மாற்றக் கூடியது. உங்கள் துணையின் மீது கடலளவு நேசம் வைத்திருப்பீர்கள் ஆனால் அதை வெளிப்படுத்தத்  தெரியாமல் முழித்துக் கொண்டிருப்பீர்கள். இதற்காக கஷ்டப்பட்டு கவிதைலாம் எழுதிடாதிங்க (இருக்குற கவிஞர்கள் இம்சையே தாங்கல) :-) உங்களின் ஒட்டு மொத்த அன்பையும் வெளிப்படுத்த ஒரே வழி ஐ லவ் யூ சொல்வது தான். உங்களுக்கே உங்களுக்கான தனிமையின் போது பேச்சின் நடுவில் துணையின் கைவிரல்களைப்  பற்றி மெதுவாக ஐ லவ் யூ என்று சொல்லிப் பாருங்கள் ...நொடியில் மனதுக்குள் மத்தாப்பு வெடித்து வண்ணத்துப்பூச்சி பறக்கும் (அது எப்படி மத்தாப்புக்கும் வண்ணத்துப்பூச்சிக்கும் லாஜிக் இடிக்குதே என்றெல்லாம் அச்சு பிச்சுன்னு யோசிக்கப்படாது, பறக்கும் அவ்ளோதான்)  அடிக்கடி இப்படி பறக்க விடுங்கள்.  அப்புறம் பாருங்க,’ சாம்பார்ல உப்பு போட மறந்துப்  போச்சா, பிரெண்ட்ஸ் கூட வீக் எண்டு பார்ட்டி ஆ‘ கவலையேப்  படாதிங்க, உங்க துணைக்கு கோபமே வராது.

பிடிக்காத குணம் துணையிடம் இருக்கிறதா, அதை நினைத்து கோபம் எரிச்சல் அடையாமல் சிறு புன்னகை, கூடவே ஒரு ஐ லவ் யூ வுடன் அணுகுங்கள். அப்படியே அந்த பிடிக்காத குணத்தை நாசுக்காக வெளிப்படுத்துங்கள். இந்த அணுகுமுறையால் அதுவரை மாறவே வாய்ப்பில்லை என்பதை  ‘ஏன் மாறினால்தான் என்ன’ என்று துணையை யோசிக்கத் தூண்டும், பின் மெல்ல மெல்ல மாறவும் செய்வார்கள்.  இம்முறையில் மற்றொரு அனுகூலமும் இருக்கிறது ஐ லவ் யூ என்று சொல்லும்போது ஆட்டமேட்டிக்காக உங்கள் குரலிலும் ஒரு மென்மை வந்துவிடும், அதன்பின்  நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் தேனில் தோய்த்தெடுத்தவையாக வெளி வரும். அப்புறம் என்ன நீங்கள் சுட்டிக் காட்டும் குறை, குற்றம் சொல்வதை போலவே தெரியாது ஏதோ ஆலோசனைச்  சொல்வதை போலவேத்  தோன்றும். கடைசியாக  ‘சீக்கிரம் சரிபண்ணிக்கிறேன் டியர்’ என்பதில் வந்து முடியும். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் இது எவ்வளவு சுலபமான முறை என்று.      

இன்னொரு மேஜிக்கும் இதில் நிகழும் இயல்பாகவே நீங்கள் கோபம் கொண்டவராகவோ அல்லது எதிர்மறை எண்ணம் கொண்டவராகவோ அல்லது தாழ்வு மனப்பான்மை கொண்டவராகவோ இருந்தீர்கள் என்றால் அடிக்கடி சொல்லும் ஐ லவ் யூ உங்களையும் உற்சாகமான ஆளாக மாற்றிவிடும். (முகத்தை கடுகடுன்னு வச்சுட்டு குரல்ல கடுமையை ஏத்திகிட்டு பல்ல கடிச்சிட்டு வெடுக்குனா ஐ லவ் யூ சொல்விங்க!?) சொல்ல ஆரம்பிக்கும்போதே லேசான சிரிப்பு கொஞ்சம் வெட்கம் தன்னாலே வந்து ஒட்டிக்காதா என்ன .  ஐ லவ் யு சொல்லிச் சொல்லி அது ஒரு பயிற்சியாகவே மாறி, உங்க முகமும் பிரகாசமாய் அழகாய் ஜொலிக்கும் ,  நம்புங்க !

அன்பை வெளிப்படுத்தத்  தெரியாததால் தான் பல தம்பதியர் ஒரே வீட்டில் எலியும் பூனையுமாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்கள். மௌனமாக இருப்பது நல்லது என்று அன்பை வெளிக்காட்டாமல் இருந்தால் அன்பில்லாதவர் என்ற தோற்றம் தான் கிடைக்கும். எவ்வளவு செஞ்சாலும் அன்பா ஒரு வார்த்தை கிடையாது என்ற சலிப்பு  தான் ஏற்படும். இத்தகைய பல சலிப்புகள் ஒன்று சேர்ந்தால் என்னவாகும், அன்பான வார்த்தை எங்கிருந்து வருகிறதோ அங்கே பாயும் என்பதுதானே இயல்பு. மனித மனமே ஏதோ ஒரு அங்கீகாரத்திற்காகத்தான் போராடுகிறது. தம்பதியருக்குள் அங்கீகாரம் என்பது அன்பான வார்த்தைகளாக இருக்கிறது. சாப்பிட்டு முடித்ததும் கணவன் சாப்பாடு நல்லா இருக்கு’ என்பதற்கு பதில்  ‘வெகு ஜோர்டா செல்லம்’ என்று சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது தானே. தம்பதியருக்குள் நெருக்கம் அதிகரிக்க வார்த்தைகள் அருமையாக உதவும்.

FM ல ஒரு விளம்பரம்.  போனில் மனைவியை அழைத்து ஐ லவ் யூ என்பான் கணவன். அதற்கு மனைவி சிரித்துக் கொண்டே 'என்ன திடீர்னு, அடுத்த ரூம்ல தானே இருக்கிங்க நேர்ல வந்து சொல்லலாமே என்பாள். 'போன்ல உன் குரல் கேட்கிறப்போ அவ்ளோ அழகா இருக்கு ' என்று கணவன் சொல்ல அதன் பின் தொடரும்  போன் உரையாடல் அவ்ளோ இனிமையாக  படு ரொமாண்டிக்காக இருக்கும். இப்படிப்பட்ட சின்னச்  சின்ன பேச்சுக்கள் மூலம் தாம்பத்தியத்தை அருமையாக கொண்டுச் செல்ல முடியும். சந்தோசத்தை வெளியே எங்கும் தேட வேண்டாம் நம்மிடமே இருக்கிறது என்பதை தம்பதியர் புரிந்துக் கொள்ள வேண்டும். இயந்திர உலகில் கணவன் மனைவி இருவரும் வேலை பார்க்கும் நிலை, வீட்டிற்கு தூங்குவதற்காக மட்டுமே வருவதைப்  போலவே இன்றைய சூழல் இருக்கிறது. வேலையின் நிமித்தம் தொலைதூரம் பிரிந்திருந்தாலும் இணைக்கும் பாலமாக தொலைபேசி இருக்கிறது. கிடைக்கும் நேரத்தில் பேசும் பேச்சுகளின் நடுநடுவே ஐ லவ் யூ வும் போட்டுக்  கோங்க!!

ஆமா செய்றதெல்லாம் செஞ்சுட்டு ஐ லவ் யூ சொன்னா சரியாப்  போச்சா என்று சண்டையும் பிடிப்பாள் பெண், உடனே ஆண்கள் பின்வாங்கக்கூடாது, அப்போ ஒரு பேச்சு இப்போ ஒரு பேச்சு இல்ல எப்போவும் ஒரே பேச்சுன்ற மாதிரி ஸ்டெடியா நிக்கணும். வெளியே சண்டை பிடிச்சாலும் உள்ளுக்குள் ரசிக்கவே செய்வாள் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

தோல்வி இழப்பு போன்ற சூழலில் நானிருக்கிறேன் என்று தோள் சாய்த்துச்  சொல்லும் ஐ லவ் யூ வின் ஆறுதலுக்கு ஈடு வேறில்லை. துணையை தேற்றுவதை முழு மனதுடன் செய்யுங்கள். தவிக்கும் உள்ளத்திற்கு இது சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொடுக்கும். அன்பை நிலை நிறுத்தும்.

உங்களிடம் பிடிக்காததையும் பிடித்ததாக மாற்றும் சக்தி இந்த ஐ லவ் யூ க்கு உண்டு.

ஏதாவது பிரச்சனை திட்ட வேண்டும் என்று தோன்றினாலும் நீங்கள் சொன்ன ஐ லவ் யூ க்களை நினைத்து சே அவள்/அவர் நம் மீது அவ்ளோ காதலுடன் இருக்கும் போது எப்படி திட்ட என பின்வாங்கவே தோன்றும். 

ஆனால்  

ஐ லவ் யூ சொன்னா காரியம் சாதித்துவிடலாம் என்று மனதளவில் இல்லாமல் உதட்டளவில் பேசுபவர்களின் சாயம் ஒரு நாள் வெளுத்துவிடும். அதன் பிறகு உண்மையான அன்புடன் ஐ லவ் யூ சொன்னாலும் அது நடிப்பாகவே தெரியும், தாம்பத்தியம் சிதையும். கவனம் ! காதலும் அன்பும் தானாகப்  பெருகுவதில்லை இரு மனமும் இணையும் போதே சாத்தியமாகிறது. நீங்கள் அன்பு செலுத்தினால் பதிலுக்கு அன்பு கிடைக்கும், நீங்கள் போலியாக அன்பு காட்டினால் போலியான அன்பையே பதிலாக பெறுவீர்கள்...என்பதை உணர்ந்து மனபூர்வமாக அன்பு செலுத்துங்கள் காதலைக்  கொண்டாடுங்கள் ...உங்களின் அந்திமம் வரை !!       

98 சதவீத பெண்களின் எதிர்ப்பார்ப்பு என்ன என்று தெரியுமா ? தங்களின் மீதுள்ள காதலை அடிக்கடி கணவன் வார்த்தைகளால் வெளிப்படுத்த வேண்டும் என்பதே. இதே அவர்களின் விருப்பமும்... இவை கிடைக்காத போதே விரக்தியின் எல்லைக்கு சென்று 40% பேர் விவாகரத்து கோருகிறார்கள் 42%  பேர் வேறொரு உறவை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அந்த உறவு வேறு ஆணுடன் இருக்கலாம் அல்லது தங்கள் குழந்தையின் மேல் அதிக கவனம் செலுத்தி அதனுடன் மட்டும் நேரத்தை செலவழிக்கலாம் அல்லது ஏதோ ஒரு வேலையில்/தொழிலில்  தங்களை முழுமையாக ஈடுப்படுத்திக் கொள்ளலாம்.

ஆக எவ்விதமாக பார்த்தாலும் கணவனை ஒரு பொருட்டாக எண்ணாமல் தவிர்த்து விடுகிறார்கள் என்பதே இதன் அர்த்தம். தம்பதிகளுக்கிடையே பேசப்படும் வார்த்தைகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துக் கொள்ளுங்கள். சந்தோசமாக தாம்பத்தியத்தை கொண்டுச் செல்லுங்கள்.

வளவளனு எல்லாம் என்னால அன்பாகப் பேசமுடியாது... பேசவும் தெரியாது... என்பவர்களுக்காகவே உருவாக்கப் பட்டது தான் இந்த ஐ லவ் யூ !

சோ... காசா பணமா... சும்மா சொல்லுங்க... அடிக்கடி ஐ... லவ்... யூ... 
                                                                          
                                                    * * *
                                                            
தொடர்ந்து பேசுகிறேன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'' 
கௌசல்யா 

  



புதன், நவம்பர் 2

யாருக்கு அறிவுரை... ?!!

Child rearing
அறிவுரை குழந்தைக்கா நமக்கா ?



மாறி வரும் இன்றையச்  சூழலுக்கு ஏற்றபடி நேற்றைய குழந்தைகளான இன்றைய பெற்றோர்களுக்கு தான் அறிவுறுத்த வேண்டியது  இருக்கிறது.
குழந்தைகள் மிகுந்த புத்திசாலிகள், கணினி யுகத்தின் வேகத்திற்கு  ஏற்ப  சிந்திக்கக்  கூடிய  ஆற்றல்  மிக்கவர்கள் . ஆனால்  அவர்களுக்கு  வழிகாட்டுகிறோம்  என்று  பெற்றோர்கள் படுத்தும் பாடு இருக்கே அப்பப்பா !! பாவம் குழந்தைகள் !! அதிக பாடச்சுமை, பெற்றோர்களின் அதிக எதிர்பார்ப்புகள், போட்டி உலகத்தில் தங்களை முன்னிறுத்த எடுக்கும் முயற்சிகள் அத்தனையையும் சமாளித்து வளர்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இச்சூழ்நிலையில் பெற்றோர்கள் அவர்களுக்கு பக்கபலமாக ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். ஆனால் உண்மையில் பல வீடுகளில் என்ன நடக்கிறது......?!!

கொஞ்சம் யோசியுங்களேன் 

குழந்தைகளுடன் செலவழிக்கும் நேரங்கள் மிகக் குறைந்துவிட்டது. பொருளாதாரத் தேவைக்காகவும், வாழ்க்கை வசதியை பெருக்கவும் நிமிட முள்ளை விட வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் பெற்றோர்களே ஒரு நிமிடம் நிதானியுங்கள்,

உங்களின் இந்த ஓட்டம் யாருக்காக ? எதற்காக ? 

வெகு சுலபமாகச்  சொல்வீர்கள் என் பிள்ளைகளுக்காக என்று . ஆனால் இது வெறும் சமாளிப்பு !!

முழுக்க முழுக்க உங்களின் சந்தோசத்துக்காக, பிறர் முன் கௌரவமாக வாழ வேண்டும் என்ற அந்த ஆசைக்காக ! குழந்தைகளின் வசதிக்காக கார்  வாங்கினேன், வீடு கட்டினேன், இதைச்  செய்தேன், அதைச்  செய்தேன் என்று இனியும் சொல்லாதிங்க. எந்த குழந்தையும் எனக்கு வீடு கட்டி வையுங்கள், பேங்கில் பணம் போட்டு வையுங்கள் என்று கேட்டதா ? (சின்ன குழந்தைக்கு என்ன தெரியும் என்று அறிவு பூர்வமா பதில் சொல்லக்  கூடாது !) வீடு,  பேங்க் பேலன்ஸ் முக்கியம் தான். ஆனால் அதற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவது நல்லது அல்ல. கண்ணுக்கு தெரியாத எதிர்காலம் என்ற ஒன்றுக்காக ஓடி ஓடி சம்பாதித்து பொருள் சேர்க்கும் நீங்கள், கண்முன் இருக்கும் நிகழ்காலத்தில் என்ன செய்கிறீர்கள்...??!

முதலில் உங்கள் குழந்தையின்  இன்றையத்  தேவை என்ன என அறிந்து அதை முதலில் நிறைவேற்றுங்கள். குழந்தையை அருகில் அழைத்து மெதுவாக பொறுமையாகக்  கேட்டுப்  பாருங்கள் ' உனக்கு என்னமா வேண்டும் என்று ' குழந்தை சொல்லும் 'என்கூட விளையாடணும்', 'என்னை வெளியே கூட்டி போங்க' !! வீட்டிற்குள் நுழையும் அப்பாவை பார்த்ததும் ஓடி வரும் குழந்தை அப்பா 'இன்னைக்கு கிளாஸ்ல ஹரிணி இல்ல அவ.....'என்று எதையோச்  சொல்ல ஆரம்பிக்கும் போதே 'அப்பா டியர்டா இருக்கேன்,தொந்தரவு பண்ணாத ' என்று வெறுப்பாகச்  சொல்லாமல் ஒரு இரண்டு நிமிடம் காது கொடுத்துக்  கேளுங்கள் அல்லது வெயிட் பண்ணு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு மறுபடி வந்து கட்டாயம் என்னவென்றுக்  கேளுங்கள். குழந்தையும் மிகுந்த ஆர்வமாகிச்  சொல்ல தொடங்கும். 

தன் பேச்சை பெற்றோர்கள் விரும்பிக்  கேட்கிறார்கள் என்ற எண்ணம் அக்குழந்தையின் மனதில் ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கும். தவிரவும், பள்ளியில் குழந்தையின் நடவடிக்கை, ஆசிரியர்களின் அணுகுமுறைகள்  எப்படி இருக்கிறது, ஏதும் பிரச்சனைகள் ஏற்படுகிறதா என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.  முதலில் உங்கள் குழந்தையின் சின்ன சின்ன தேவையை நிறைவேற்றுங்கள். அப்புறம் பார்க்கலாம் வீடும் காரும்...! 

நாம் இருவர் நமக்கு ஒருவர் !

இன்று பல வீடுகளில் ஒரு குழந்தை தான், காரணம் கேட்டால் 'இத ஒன்னு வளர்த்தாப்  போதாதா இருக்கிற விலைவாசியில' என்று பதில் வரும். ஆனால் முந்தைய தலைமுறை பெற்றோர்கள் நாலு, ஐந்து குழந்தைகளைப்  பெற்றார்கள், படிக்க வைத்தார்கள், திருமணம் முடித்து கொடுத்தார்கள் !! அன்றைய விலைவாசிக்குத்  தக்கதாகத்தான் அப்போதைய அப்பாக்களின் சம்பளமும் இருந்தது. பின் அவர்களுக்கு எப்படி சாத்தியமாயிற்று ? காரணம் அவர்களிடம் தேவைக்கு மீறிய ஆசைகள், ஆடம்பரம், போட்டி மனப்பான்மை இல்லை. முக்கியமாக வாழ்க்கை வசதியைப் பெருக்க அவசரம் காட்டவில்லை . ஒவ்வொரு செயலையும் நிதானித்துத் தீர்மானித்தார்கள். இப்போது கணினிகாலம் அதற்கு ஈடு கொடுத்து ஓடி கொண்டிருக்கிறோம். 

தவறில்லை ஆனால் இந்த ஓட்டத்தை சற்று நிறுத்தி குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவழியுங்கள். அந்த நேரங்கள் வானவில் நிமிடங்கள் ரசிக்க/பார்க்க  தவறிவிட்டோம் என்றால் க்ஷண நேரத்தில் மறைந்து விடும்.

நாம்  மாறுவோம்

*  தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி, பெரியம்மா, பெரியப்பா, மாமா, அத்தை போன்ற உறவுகளின் பெயர்கள் மறந்து/மறைந்து வருகிற காலம் இது. வீட்டுக்கு ஒரு பிள்ளை என்ற நிலையில் அடுத்த தலைமுறையினருக்கு இந்த உறவுகள் கூட இல்லாமல் போகலாம் !! அதனால் விடுமுறை நாட்களில் பார்க், பீச் , சினிமா என்று போவதை விட உறவினர்களின் இல்லத்திற்கு அழைத்து செல்லலாம். அவர்களை நம் வீட்டிற்கு வரவழைக்கலாம். சிறு சிறு மனஸ்தாபங்கள் இருந்தாலும் நம் குழந்தைகளுக்காக அதை மறந்து உறவுகளின் உன்னதத்தை உணர்த்தலாம். நம்மை பார்த்து நம் குழந்தைகள் கற்றுக் கொள்ளட்டும்.

*  'தொலைகாட்சிப்  பார்க்காதே' என்று சொல்வதற்கு பின்னால் சீரியல் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்ற ஆதங்கம் இருப்பதாகத்தான் தோன்றுகிறது. பார்க்க அனுமதியுங்கள். டிஸ்கவரி, ஜியாக்கிரபி போன்ற சேனல்கள் பார்க்கட்டும். கார்ட்டூன்(சில தவிர்த்து) பார்ப்பதால் என்ன பாதிப்பு வந்துவிட போகிறது...? அதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி பார்க்க செய்யுங்கள். இயன்றால் அவர்களுடன் அவற்றை சிறிது நேரம் நீங்களும் பாருங்கள் இவ்வாறு செய்வதின் மூலம் நமது மன அழுத்தம் குறைந்து குழந்தைகளுடன் குழந்தையாக மாறி விடுவோம். அவர்களும் ரிலாக்சாக பீல் பண்ணுவார்கள்.

* குழந்தைகளுக்கான நீதிநெறி கதை புத்தகங்களை வாங்கிக்கொடுத்து வாசிக்க செய்யலாம் . 

*  கல்வி தொடர்பான டிவிடிக்களை போட்டு பார்த்தால் குழந்தைகள் விரைவாக அந்த பாடங்களை கிரகித்து கொள்வார்கள் என்று நாம் எண்ணுவோம், ஆனால் இப்படி திரைகளை பார்த்து தெரிந்து கொள்வதைவிட மற்றவர்களுடன் பேசி பழகும் குழந்தைகளின் மூளை சுறுசுறுப்பாக இயங்குகிறது, விரைவாக எதையும் கற்றுக் கொள்கிறார்கள்  என்று ஆய்வு சொல்கிறது. அதனால் அக்கம் பக்கம் குழந்தைகளுடன் ஒரு ஆரோக்கியமான நட்பை ஏற்படுத்தி கொடுங்கள். நன்கு விளையாடட்டும், பேசி பழகட்டும்.

*  உடலுக்கு பயிற்சி தரக்கூடிய ஷட்டில் காக் , ரிங் பால், ஸ்கிப்பிங், த்ரோ பால்  போன்ற விளையாட்டுகளை அவர்களுடன் இணைந்து விளையாடுங்கள், அவர்களையும்  விளையாட உற்சாகபடுத்துங்கள்.

*  இப்போதுள்ள குழந்தைகளின் முக்கிய பிரச்சனை ஞாபக மறதி, இதற்கு ஒரு எளிய வழியாக பகல் நேர தூக்கத்தைச்  சொல்கிறார்கள் வல்லுனர்கள். தூங்கி எழுந்தபின் எதையும் கற்றுகொண்டால் அது எளிதாக மூளையில் பதியும். விடுமுறை நாட்களில் முடிந்த வரை பகலில் சிறிது நேரம் தூங்க வைத்து பழக்குங்கள். 

*  சில அம்மாக்கள் தங்கள்  குழந்தைகளைக்  காப்பாற்றுவதாக எண்ணி குழந்தைகளின் சில தவறுகளை கணவரிடம் மறைப்பார்கள். இது தவறான வளர்ப்பு முறை. அவ்வாறு செய்யும் போது அம்மா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க, அம்மாவை எப்படியும் சமாளித்து விடலாம் என்று துணிச்சலாக தவறுகளைச்  செய்ய தொடங்குவார்கள்.  

*  சில வீடுகளில் கணவனுக்கு தெரியாமல் மனைவியும், மனைவிக்கு தெரியாமல் கணவனும் தங்கள் குழந்தைகளுக்குப்  பொருட்களை வாங்கி கொடுப்பார்கள். இதுவும் சரியன்று. எதுவாக இருந்தாலும் இருவரும் இணைந்தே, இருவரின் விருப்பத்தின் பெயரிலேயே குழந்தைகளுக்கான பொருட்கள் வாங்கப்பட வேண்டும். 

*  சிலர் கண்டிப்பதில் ஒரு கொள்கையை வைத்திருப்பார்கள், அதாவது குழந்தை ஒரு தவறை செய்து விட்டால் ஒருவர்(அப்பா) கண்டிக்க வேண்டும் என்றும் மற்றொருவர்(அம்மா)  சமாதானம் படுத்தணும் என்றும்...! ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது...அப்பாவிற்கு தவறாகப்  படுவது அம்மாவிற்கு சாதாரணமாகப்   படுகிறதே என்று குழந்தை கொஞ்சம் குழம்பி யோசிக்க ஆரம்பித்துவிடும். தவறு என்றால் இருவருக்கும் தவறுதான். இருவரும் கண்டிக்க வேண்டும். 

*  பொதுவாக ஒரு குழந்தையிடம் பலரும் சகஜமாக கேட்கும் கேள்வி உனக்கு அம்மா பிடிக்குமா ? அப்பா பிடிக்குமா ? உண்மையில் இந்த கேள்வியே அபத்தம். அம்மா, அப்பா இருவரும் வேறு வேறு அல்ல, இருவரும் ஒருவரே...இருவருக்கும் சம அளவில் மரியாதையும், அன்பும் கொடுக்கப்பட வேண்டும். இதை முதலில் குழந்தைக்குப்  புரிய வைக்க வேண்டும். 

குழந்தைகளை குழந்தையாக எண்ணி நடந்து கொண்டாலே போதும். வயதிற்கு மீறிய எதிர்பார்ப்பை அவர்கள் மீது திணிக்காமல் இருங்கள். அவர்களுக்கு வழியை மட்டும் காட்டுங்கள், கூடவேச்  செல்ல வேண்டும் என்பது தேவை இல்லை. 

Child rearing



எனது இக்கட்டுரை கழுகில் வெளிவந்தது.
படங்கள் - நன்றி கூகுள் 

சனி, ஜூலை 31

குடும்பத்தில் பெண்ணியம் தேவையா...?! தாம்பத்தியம் பாகம் -13

முந்தைய பதிவு...
 


குடும்பத்தில் பெண்ணியம்


முன்குறிப்பு 

பெரும்பாலான குடும்பத்தை ஆட்டிப்  படைப்பது இரண்டே வார்த்தைகள்தான் , ஒன்று ஆணாதிக்கம் மற்றொன்று பெண்ணுரிமை.  படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் இடத்திற்கு தகுந்தபடி பிரச்சனைகள், இதனை அடிப்படையாக வைத்து வருவதுதான். 'ஈகோ' என்று படித்தவர்கள் மேம்பட்ட ஒரு வார்த்தையை சொல்வார்கள்  .


ஆண், பெண் இருவரும் ஒன்றை புரிந்துக்  கொள்வது இல்லை, அது என்னவென்றால் ஆணாதிக்கம், பெண்ணுரிமை என்பதன் சரியான அர்த்தத்தை , அர்த்தம் என்று சொல்வதைவிட அந்த வார்த்தைகளை எங்கே பயன்படுத்த வேண்டும்....? எங்கே பயன்படுத்தக்  கூடாது.....?! என்பதைத்தான். ( எனக்கு தெரிந்த சில விளக்கங்களை இங்கே சொல்ல எண்ணுகிறேன் இது முழுக்க முழுக்க என் கருத்துகள்.  தவிர யாரையும் மனம் வருந்த செய்வது என் நோக்கம் இல்லை,  எனக்குமே இதில் சில முரண்பாடுகள், வேறுபாடுகள் இருக்கின்றன.  என்னை நான் தெளிவுப்  படுத்தி கொள்ளவுமே இங்கே எழுதுகிறேன், தெரிந்தவர்கள் உங்கள் கருத்தை சொன்னால் பலருக்கும் தங்களை , தங்கள் எண்ணங்களை சரி செய்துக்  கொள்ள உதவியாக இருக்கும். கருத்துகளை  எதிர் பார்க்கிறேன் )

ஆணாதிக்கம்

அது என்ன ஆணாதிக்கம் ? ஒரு ஆண் மற்றொரு ஆணை அதிகாரம் செய்வதையோ...? அல்லது அடக்கி ஆள்வதையோ....?  ஆணாதிக்கமாக சொல்லப்படவில்லை. பெண்களை அடக்கி அவர்கள் மேல் ஆண் என்ற திமிர்வாதத்தை  காட்டுவதையே ஆணாதிக்கம் என்பதாக கருதுகிறேன்.   இன்றைய காலக்கட்டத்தில் எந்த வீட்டில் ஆணாதிக்கம் தலைத் தூக்கி இருக்கிறது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மனசாட்சியுடன் சொன்னால் உபயோகமாக இருக்கும்.  இங்கே முக்கியமாக ஒன்றை குறிப்பிட்டே  ஆக வேண்டும், நான் பகிர்ந்துக்  கொண்டு இருப்பது தாம்பத்தியம் பற்றியது. வீட்டிற்கு வெளியே நிலவுகின்ற ஆணாதிக்கம் பற்றி எனக்கும் ஆதங்கம் உண்டு, ஆனால் குடும்பம் என்று பார்க்கும் போது இரண்டையும் ஒன்றாக  போட்டு குழம்பிக்கொள்ளக்  கூடாது.  

ஆணாதிக்கம், பெண்ணுரிமை பற்றி என்னாலும்  பக்கம் பக்கமாக பேச இயலும், மேடை போட்டு மைக் கொடுத்தால் ...!! ஆனால் பெண்ணுரிமை என்று கொடிப்  பிடிக்க குடும்பம், அரசியலும் கிடையாது, வருந்திப்  பெற்றுக்  கொள்ள நாம் நமது உரிமையை, யாருக்கும் விட்டு கொடுக்கவும்  இல்லை.

ஏன் ஏற்பட்டது? எதனால்?

ஆண்கள் பெண்கள் மீது செலுத்தும் ஆதிக்கம் என்பது நேற்று இன்று ஏற்பட்டது இல்லை.  ஆடையின்றி அலைந்த ஆதிகாலத்தில் இயற்கையால் ஏற்படுத்தப்பட்ட தற்செயலாக தீர்மானிக்கப்பட்ட ஒன்றே.  இதை கொஞ்சம் இன்று நன்றாக யோசித்து பார்த்தோம் என்றால் பெண்கள் சரிதான், அப்படியும் இருக்கலாம் என்றாவது சமாதானம்  செய்துக்  கொள்வார்கள்.  ( நான் என்னை சமாதானம் செய்துக்  கொண்டதைப்  போல )

காடுகளில் விலங்குகளுடன் விலங்காக  வாழ்ந்துக்  கொண்டிருந்த அந்த நேரத்தில் ஆண், பெண் இருவருமே வேட்டையாடி  தங்களது பசியை ஆற்றிக்  கொண்டு இருந்தார்கள். அப்படி இருந்த ஒரு சில கட்டத்தில் மாதவிடாய் நேரத்தில் ஏற்படக்கூடிய ரத்தவாடையில் கவரப்பட்ட மிருகங்களால் பெண்கள்  பாதிப்புக்கு உள்ளானார்கள். அதனால் ஆண்கள், பெண்களைப்  பாதுகாப்பாக ஒரு இடத்தில் இருக்க வைத்து விட்டு , அவர்கள் வேட்டையாடச்   சென்றார்கள்.  வேட்டையாடிக்  கொண்டு வந்து பெண்களிடம் கொடுத்து, தங்கள் பெண்களையும்  , குழந்தைகளையும் கவனித்துக்  கொண்டார்கள்.  இப்படித்தான் ஆண்கள் வெளியில் வேலைக்கு செல்வதும், பெண்கள் வீட்டை கவனித்துக்  கொள்வதுமாக இருந்திருக்க வேண்டும்.  


நாளடைவில் மனதளவிலும் ஆண்களுக்கு நாம் தான் பெண்களைவிட உயர்ந்தவர்கள் , நமது தயவு  இல்லாமல் அவர்களால் வாழமுடியாது....நாமே சிறந்தவர்கள்....நமது பேச்சைத்தான் பெண்கள் கேட்கவேண்டும்....எதிர் கேள்வி கேட்கக் கூடாது...அடங்கி இருக்கவேண்டும் என்பதாக மனதில் பதிந்து இருக்க வேண்டும். அதுவே இன்று வரை பெரிய அளவில் பெண்களை அடக்கி ஆள்வதில் தொடங்கி கொடுமையில் வந்து முடிந்து இருக்கவேண்டும். வேறு என்ன சொல்வது எல்லாம் இயற்கையின் விளைவுகள். 


பெண்ணுரிமை

பெண்களுக்கு எது உரிமை என்று  விளக்குவதே  பெரும்பாடாக இருக்கிறது. தங்களுக்கு என்ன தேவை என்றே தெரியாமல் இருப்பவர்களை என்ன சொல்வது....? கணவனை அடக்குவது மட்டுமே பெண்ணுரிமை என்றே பெரும் பாலான குடும்பப்பெண்கள் எண்ணுகிறார்கள்.  'ஆணுக்கு சரிசமம்' என்ற வார்த்தை இப்போது காலாவதி ஆகிவிட்டது, அதற்கு பதில் 'ஆணை விட தான் எதில் குறைந்துப்  போய் விட்டோம்' என்ற வாதமே பிரதானமாக  இருக்கிறது.  என் விருப்பபடி குடும்பம் நடக்கவேண்டும் என்று ஆண் அதிகாரம் செய்வது போய் இப்போது தன் விருப்பப் படி  தன் கணவன் நடக்க வேண்டும் என்ற குரலே பல வீடுகளில் எதிரொலிக்கத்   தொடங்கி விட்டது.  இது நல்ல முன்னேற்றம் அல்ல என்பது மட்டும் புரிகிறது.  ஆணின் அதிகாரம் ஒரு கட்டத்தில் அமைதி பெரும், ஆனால் பெண்கள்  செய்யும் அதிகாரம்......??!! 

உண்மையில் ஒரு ஆண் பிறக்கும்போது ஆணாதிக்கவாதியாக பிறப்பதில்லை, ஆணாதிக்க மனப்பான்மை என்ற  பாலை  ஊட்டி வளர்த்தெடுப்பது எல்லாம் அவனைச்  சுற்றி இருக்கும் பெண்களால் மட்டுமே  என்று என்னால் உறுதியாக சொல்லமுடியும் .  ஆக பெண்ணுக்கு பெண்ணே எதிரி !??

எனவே 

பெண்ணுரிமை கேட்டு வீட்டிற்கு வெளியில் போராடுங்கள், வீட்டுக்குள் வேண்டாமே.... கணவனின் அன்பைக்  கேட்டு  மட்டுமே போராடுங்கள் அதுவும் அன்பாக.... வீட்டில் எதற்கு இடஒதுக்கீடு..... ? அதிகாரம் செய்யும் கணவனையும் உங்கள் அன்பால் கட்டி அரசாளுங்கள்..... ஒரு கட்டத்தில் அந்த ஆணின் அதிகாரம் புறமுதுகைக்   காட்டி ஓடிவிடும்

கணவனைப்  பார்த்து 'ஆணாதிக்க மனபான்மையுடன் என்னை நடத்துற 'என்று மனைவி குறைப்பட்டுக்  கொள்வதும் ,  மனைவியைப்  பார்த்து ' நான் ஆண்  அப்படித்தான் இருப்பேன் , நீ அடங்கி இரு ' என்று கணவன் சொல்வதும்  அநாகரீகம்.

ஆண்கள் தங்களது இத்தகைய மனப்பான்மையை வெளிக்காட்டாமல் இயல்பாக மனைவியை கையாளும் போதுதான் அங்கே ஆண்மை கம்பீரம் பெறுகிறது.  மனைவி தன்னை விட எதிலும் தாழ்ந்தவள் இல்லை , அவளது எண்ணத்திற்கும், கருத்திற்கும் கண்டிப்பாக மதிப்பு கொடுக்கவேண்டும் என்று கருத வேண்டும் .    

குடும்பத்தில் ஏற்படக்கூடிய எந்த விசயத்திற்கும் ஆண், தான் மட்டுமே  முடிவு செய்ய வேண்டும் என்று இல்லாமல் மனைவியின் ஆலோசனையையும் கேட்கவேண்டும். இருவரும் கூடி விவாதிக்கும் போதுதான் அந்த விசயத்தின் நல்லது, கெட்டது என்ற இரண்டு பக்கமும்  வெளிவரும், அதனால் அதை கையாள்வதும் சுலபம். தன்னிச்சை முடிவு தவறாகக்   கூடிய வாய்ப்புகளும் உள்ளது. நாளை இருவரும் சேர்ந்த எடுத்த முடிவு தவறாக இருந்தாலுமே ஒருவர்  மீது ஒருவர் பழி போடாமல்.  'அடுத்து என்ன  செய்யலாம்'  என்று அடுத்த  அடி எடுத்து வைக்க சுலபமாக  இருக்கும்.

தாம்பத்தியத்தில் " பெண்மை தோற்றாலும்  ஆண்மை தோற்றாலும்  அங்கே இறுதியில்  வெல்வது என்னவோ இருவருமேதான் "

இதன் தொடர்ச்சி நாளை மறுநாள் வெளி வரும்.......
                                                                    
                                                                

                                                                                            
தொடர்ந்துப்  பேசுகிறேன்... 
உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா  

திங்கள், மே 17

பெண்களின் அறியாமை - தாம்பத்தியம் -2

கணவனின் மென்மையான அணைப்பில்தான்  ஒரு பெண் 'தான் பாதுகாப்பாக' இருப்பதாக உணருகிறாள்.  எல்லோருக்கும் அந்த பாதுகாப்பு உணர்வு கடைசிவரை கிடைக்கிறதா? இல்லை என்று தான் சொல்லமுடிகிறது.  ஏன் இல்லை, காரணம் என்ன என்பதை பற்றிய ஒரு பகிர்வுதான் இந்த தாம்பத்தியம் என்ற தொடர் பதிவு!     

தான் யார் என்பதும் , தனது மதிப்பு என்ன என்பதையும் அறியாமல் இருக்கிறாள் பெண். பெண்களின் அறியாமை
ignorance of women


தாம்பத்தியம் சுகமானதாக இருப்பதற்கு பெரும் பங்கு வகிப்பது பெண்கள்தான்.  பெண்மை அங்கே  திருப்தி அடையவில்லை என்றால் அந்த வீடு வாழ தகுதி அற்றதாகி விடுகிறது,  ஒரு குடும்பத்தின் கெளரவமே அந்த குடும்பத்தின் பெண்ணின் கையில் தான் இருக்கிறது,  வீடு சொர்க்கமாவதும், நரகமாவதும் அந்த பெண்ணை பொறுத்துத் தான் அமைகிறது.  முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் கணவன் ராமனாக இருப்பதும் கிருஷ்ணனாக மாறுவதும் கூட அந்த மனைவியை வைத்துதான் இருக்கிறது என்பது என் கருத்து. கணவனுக்கு எல்லாமுமாக ஒரு மனைவி இருந்து விட்டால் அந்த கணவனுக்கு வேறு எண்ணங்கள் வரக்கூடிய வாய்ப்புகள் மிகவும் குறைவு.  


அதனால் தாம்பத்தியம் என்று பார்க்கும்போது முதலில் பெண்களின் பலம், பலவீனங்கள் போன்றவற்றை கொஞ்சம் சுருக்கமாக (இயன்றவரை) பகிர்வது  சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.   


(நான் எழுதுவது அனைத்தும் சொந்த மற்றும் பிறரின் அனுபவங்களின் அடிப்படையில் அமைந்தவைதான்.    தவிர இது யார் மனதையும் புண்படுத்தாது என்று நம்புகிறேன். யார் மனதையும் கஷ்டப்படுத்துவது என் நோக்கம் அல்ல,  தாம்பத்தியத்தில் தடுமாறிக்  கொண்டிருக்கும்  ஒரு சில மனங்களில் ஒரு மனதை மட்டுமாவது  எனது ஏதாவது ஒரு வரி கொஞ்சம் தொட்டுவிடாதா  என்ற ஒரு நப்பாசை தான் காரணம்)      

பெண்களின் அறியாமை :

பெண்கள் இன்று பல துறைகளில் முன்னேறி இருந்தாலும் இன்னும் அவர்களுக்குள் இருக்கும் அறியாமை போகவில்லை என்று தோன்றுகிறது. நான் அறியாமை என்று சொல்வதின் அர்த்தம் எது என்றால், ' தங்களை பற்றி இன்னும் சரியாக அறிந்துக் கொள்ளவில்லை ', என்று சொல்வேன்.  

நீண்ட காலமாக பெண்ணுரிமை இயக்கங்கள் தொடர்ந்து சம உரிமை வேண்டும் என்று போராடி வருகின்றன,  அது எதற்காக.......?  பெண்கள் எப்போது தாழ்ந்து போனார்கள்? இப்போது உயர்த்தணும் என்று போராடுவதற்கு.  உண்மையில் பெண்கள் ஆண்களை விட 'எப்போதுமே ஒரு படி மேலே தான்' அப்படி இருக்கும்போது எதற்கு சம உரிமை என்று கேட்டு தங்கள் இடத்தை விட்டு கீழே  இறங்கி வர வேண்டும்.     


குழந்தை பேறு என்ற மகத்தான சக்தி நம்மிடம் இருக்கும்போது நாம் எப்படி ஆண்களுக்கு குறைந்து போவோம்...!?   அவர்களைவிட மேலே மேலே தான்!! ஆண்கள்  உடலளவில் பலமுள்ளவர்களாக இருந்தாலும் மனவலிமையில் பெண்களுக்கு ஈடாக மாட்டார்கள்.  இதை பெண்கள் மனதில் வைத்து கொண்டால் சரிசமமாக   சண்டைக்கு போக மாட்டார்கள், பரவாயில்லை  என்று விட்டுக் கொடுத்துவிடுவார்கள்!!      

சம வயது உடைய ஆண், பெண் இரண்டு பேரில் ஆணை விட பெண்ணின் அறிவு வளர்ச்சி, மன முதிர்ச்சி  அதிகமாக இருக்கும்,  இதை நான் சொல்லவில்லை விஞ்ஞானம் சொல்கிறது. அதனால் தான் திருமணத்திற்கு பெண்  தேடும்போது 2 , 3  வயதாவது குறைந்த பெண்ணை நம் பெரியவர்கள் முடிவு செய்கிறார்கள்.  வயது அதிகமான பெண்ணை மனம் முடித்த ஒரு சிலர்  பாவம் அந்த பெண்ணிற்குக்  கட்டுப்பட்டுப்   போக வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.  

பெண்களுக்கே தங்களை பற்றிய தாழ்வுமனப்பான்மை  அதிகமாக இருப்பதால் தான் இன்னும் பலர் முன்னேறாமல் தங்கள் திறமைகளை தங்களுக்குள் போட்டு புதைத்து விட்டு வெறும் சவமாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.  

பெண்களின் சிறப்பு  இயல்புகள்  :

இயல்பிலேயே பொறுமை, விடாமுயற்சி, உறுதி, உழைப்பு, தன்னம்பிக்கை, தைரியம் ஆகிய திறமைகளை பெற்றவர்கள்தான்.  தவிர தாய்மை, அன்பு, கருணை, தயாளகுணம், விருந்தோம்பல்,  புன்னகை என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றில் சில குணாதிசியங்களை மட்டும் பார்போம்.  


நவீன ஜான்சிராணிகள்!


நமக்கு ஆண் உடை தரித்து வாளெடுத்து   போரிட்ட ஒரு ஜான்சிராணியை நன்றாக தெரியும். அவர் இருந்த  அப்போதைய இக்கட்டான சூழ்நிலையில் வாளேடுத்து போரிட்டு   ஆகவேண்டும் என்ற கட்டாயம், எனவே துணிந்து போரிட்டார்.  இன்றுவரை வீரப்பெண்மணி என்று புகழுகிறோம்.  


ஆனால் எல்லா பெண்களுக்குள்ளும் ஒரு ஜான்சிராணி இருக்கத்தான் செய்கிறாள்.  தேவைப்பட்டால் போரிடவும் தயங்க மாட்டாள்.   உண்மையில் அன்றைய ஜான்சிராணிக்கு   குறிக்கோள் ஒன்று,  போர்க்களம் ஒன்று.   ஆனால் இன்றைய பெண்களுக்குக்கோ தினம் தினம் பலவித போராட்டங்கள், விதவிதமான போர்களங்கள், அத்தனையையும் தனி ஒருவளாக சமாளிக்கும் ஆற்றல் பெற்றவள்!!           


கரண்டிப் பிடிக்கும் அதே கையால் துப்பாக்கி பிடிக்கவும் தயங்காதவள் பெண்!
  
தைரியம்:

பெண்களின் தைரியத்தை பலர் நேரில் பார்த்திருக்கலாம், சிலர் அவர்களால் வாழ்க்கையில் மேல் நிலைக்கு வந்திருக்கலாம்,  பல ஆண்களின் வெற்றிக்கு பின்னால் பெண்கள் இருந்திருக்கிறார்கள்.  உதாரணமாக குடும்பத்தில் திடீரென்று  பிரச்சனை வந்து விட்டால் கலங்கி விடாமல் முதலில் சுதாரித்து எழுபவள் பெண்..........!  கணவனையும் சோர்ந்து விடாமல் பார்த்துக் கொண்டு, பிரச்சனைக்கு என்ன தீர்வு என்று ஆராயத்  தொடங்கி விடுபவள் பெண்.........!  தன் புன்சிரிப்பால் சூழ்நிலையை மாற்றி அடுத்த கட்டத்திற்கு போக தன் கணவனை ஊக்கப்படுத்துபவள் பெண்........!  பிரச்சனை பொருளாதாரமாக இருந்துவிட்டால் கொஞ்சமும் தயங்காமல் தன் கையில்  இருக்கும் தங்க வளையலை கழட்டி கணவனிடம் கொடுத்து நிலைமையை சமாளிக்க சொல்லுபவளும் பெண்.........! பிரச்சனை  தங்கள் குழந்தைகளுக்கு தெரியக்கூடாது என்று  மறைத்து   அவர்களை உற்சாகமாக இருக்குமாறு பார்த்துக்கொள்பவளும்  பெண்தான் !! 


இவ்வாறு  பெண்களின் சமயோசித்த செயல்களைச்  சொல்லிக்கொண்டே போகலாம்.  

பெண்ணடிமை:

பெண்கள் ஆணுக்கு அடிமையாக அடங்கி இருந்தார்கள் என்பதை முழுமையாக ஏற்றுக்  கொள்ளமுடியாது,  அப்படி ஒரு நிலைமை இருந்திருந்தால் பல பெண்கள் அந்த காலத்தில் சில பல புரட்சிகள் படைத்திருக்க முடியாது!  (உதாரணங்களை அடுக்கிக்  கொண்டிருந்தால் தாம்பத்தியம் என்ற படைப்பு வேறு பாதையில்  பயணிக்கத்  தொடங்கிவிடும், அதனால் ஒரு வரி தகவல் மட்டும் போதும் என்று நினைக்கிறேன்)  பலரும் வீட்டை விட்டு வெளியில் வந்து பல வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு புகழ் பெற்று இருந்தார்கள்.  வீட்டில் இருந்த பெண்களும் நல்ல குடும்ப தலைவிகளாக இருந்து தத்தம் பிள்ளைகளை நன்மக்களாக வளர்த்து உயர்த்தினார்கள்.

பெண்களின் மனநிலை எந்த காலத்திலும் ஒன்று தான்,  மாற்றங்கள் சூழ்நிலையை  பொறுத்து மாறுமே தவிர பெண், பெண்ணாகத்தான் எப்போதும் பரிமளிக்கிறாள்.  

தான் எப்படி வாழவேண்டும் என்பதை அந்த பெண்தான் தீர்மானிக்கவேண்டும்.   கோபுரகலசமாகவா?   குத்துவிளக்காகவா?  அல்லது சாதாரண தெருவிளக்காகவா?  என்பது அவள் முடிவிலும், அவள் வாழும் வாழ்க்கையை பொறுத்தும்தான் இருக்கிறது!
   
கணவன், மனைவி உறவு பாதிக்கப் படுவது ஏதோ ஒருநாள் பிரச்சனையால் மட்டும்  ஏற்படுவது இல்லை, இதற்கு பல காரணங்கள் இருக்கின்றது.  மிக முக்கியமான காரணமாக இருப்பது ஆண், பெண் வளர்ந்த விதம்தான்.   
 
பெண்கள் வளர்ந்த விதம்:


முதலில் பெண்கள் வளர்ந்த விதத்தில் இரண்டு வகைகளை கொஞ்சமாக பார்ப்போம்.    பெண்களை அதிகமாக அடக்கி வைப்பது எப்படி தவறோ அந்த அளவிற்கு சுதந்திரம் கொடுத்து வளர்ப்பதும் தவறு என்பது என் கருத்து.  

அடக்கி வைத்து வளர்க்கப்படும் பெண்கள் எப்போது இதில் இருந்து மீள வழி பிறக்கும் என்ற எண்ணத்திலேயே வளருவார்கள், பின் திருமணம் முடிந்ததும் தன் மேல் திணிக்கப்பட்ட அடக்கு முறையை தன் கணவன் மேல் காட்ட தொடங்குவார்கள்,   ஒருவகையில் இதை  superiority complex என்றுகூட சொல்லலாம்.   தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற ஒரு வித மயக்கத்தில் நடப்பார்கள், தனது அடிமைத்தன  வளர்ப்பு கணவனுக்கு தெரிந்து விடக்கூடாது என்பதில் தொடங்கி தன் பேச்சை மட்டும்தான் கேட்கவேண்டும் என்பதில் முடியும். எதை எடுத்தாலும் சண்டை, சச்சரவு என்று தான் இருக்கும். ஒவ்வொரு சண்டையின் முடிவிலும் தற்கொலை என்ற ஆயுதம் பிரவோகிக்கப்படும்.   கணவன் அப்பாவி ஆக இருந்துவிட்டால் தப்பித்து விடுவார்,  மாறாக விவரமானவராக இருந்து  விட்டால் தினம் இங்கே தாம்பத்தியம் பயங்கரமாக அடி வாங்கும்.

மாறாக சுதந்திரமாக செல்லமாக வளர்க்கப்பட்ட பெண்களில் சிலர் திருமணத்திற்கு பிறகு கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுகிறார்கள்.  புகுந்த வீட்டினரை எதிரிகளாக பார்க்கிறார்கள்,  மாமியார், மருமகள் சண்டையே இந்த வீட்டில் தான் அதிகமாக நடக்கிறது.  தனது விருப்பத்திற்கு ஏற்ப நடக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தை தனது கணவனிடம் காட்ட தொடங்குவாள்,  கொஞ்சம் கொஞ்சமாக தன் கணவனை தனிக்குடித்தனம் போகத்   தூண்டுவாள், கணவன் ஆரம்பத்தில் தவித்தாலும் வேறு வழி இன்றி இதற்கு உடன்பட்டு விடுவான்.  

தனியாக போனாலும் பிரச்சனை தீர்ந்து விட்டது என்றால் இல்லை என்பது பல அனுபவசாலிகளின் பதில்.  கணவன் தன்னை எப்போதும் தாங்கவேண்டும்,  சின்ன தலைவலி என்றாலும் ஓடி வந்து உபசாரம் செய்யவேண்டும்,  தன்னை ஆகா, ஓகோ என்று புகழவேண்டும், ரோட்டில் போகும்போது சும்மா கூட வேறு பெண்ணை ஏறிட்டுப்  பார்த்து விடக்  கூடாது என்பது  மாதிரி highly possessive ஆக இருப்பார்கள்.  மொத்தத்தில் இங்கே தாம்பத்தியம் தள்ளாடும்.

பெற்றோர்களால் பாதிக்கப்படும் பெண்கள்:


கருத்து வேறுபாடுகள் நிறைந்த எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருக்கும் பெற்றோர்களுக்கு மகளாக பிறந்து வளர்ந்த பெண்ணின் மனம் கவலைகள், குழப்பங்கள் நிறைந்ததாகவே  இருக்கும். வெளிப்பார்வைக்கு சகஜமானவளாக தோன்றினாலும், அவளது மனம் அடிக்கடி தனிமையையே நாடும்.  எதிர்காலத்தை பற்றிய பயம் அதிகமாகவே இருக்கும். படிப்பிலும் கவனம் இருக்காது, மிக குறைந்த அளவிலேயே தோழியர் இருப்பர்.  வெளி இடங்களில் சிரித்து பேசியபடியும், வீட்டில் எப்போதும் இறுக்கமாக, அமைதியாக  இருப்பார்கள். ஏன் வீட்டிற்கு வருகிறோமோ என்ற எண்ணம் ஒவ்வொருமுறை வீடு திரும்பும்போதும் மனதில் எழும்.  

கற்பனையாக ஒரு துணையை உருவாக்கி அதனுடன் சந்தோசமாக  வாழ்வதாக கருதி எப்போதும் ஒரு கற்பனை உலகில் வலம் வந்து சுகம் காணுவார்கள்.   இவர்களில் ஒரு சிலர் தாழ்வு மனப்பான்மையுடனும்,  ஒரு சிலர் உயர்வான மனப்பான்மையுடனும்   இருப்பார்கள்.  இவர்களது எதிர்கால திருமண வாழ்கையில் இதன் பாதிப்பு நிச்சயமாக   எதிரொலிக்கும்.   அந்த புகுந்த வீடும், கணவனும்  எவ்வளவு நன்றாக, நல்லவனாக  இருந்தாலும் இந்த மோசமான பாதிப்பு கண்டிப்பாக சில நேரங்களில் வெளிப்பட்டே தீரும்.....!!     

பல தாம்பத்தியங்கள் தடுமாற இந்த மாதிரி பாதிக்கப்பட்ட பெண்களும் ஒரு காரணம்!?   ஆனால் இந்த அடிப்படை காரணம் அந்த கணவனுக்கு முழுவதுமாக தெரிய வாய்ப்பில்லை என்றே சொல்லவேண்டும்.  அந்த பெண்ணிற்கும் தனது ஆழ்மனதில் பதிந்தவைதான் தனது நிகழ்கால குழப்பங்களுக்கு காரணம் என்பதை உணர்ந்தாலும் பெரும்பாலும் அவளது பலவீனம் அதை ஒத்துக் கொள்ள விடுவது இல்லை.   விளைவு நல்ல குடும்பம், நல்ல கணவன் கிடைத்தும் அற்புதமான இந்த தாம்பத்தியம் உடைய தொடங்கிவிடுகிறது.........!!

               தவிரவும் ஒரு சில பெண்களின் குணங்கள்,  பெற்றோர்கள் மட்டும் உறவினர்களின் தவறான வழிகாட்டுதல்,  சொல்லப்போனால் பக்கத்து வீட்டினர்கூட குடும்பம் பிளவுப்பட காரணமாக  இருந்து விடுகிறார்கள்.   அதில் முக்கியமான ஒரு சிலவற்றை தொடர்ந்து அடுத்த பதிவில் பார்க்கலாம்.   தொடர்ந்து வரும் சில தலைப்புக்கள்,  


பெண்களின் மனோபாவங்கள் 
ஆண்களின் சிறப்பியல்புகள் 
ஆண்களின் மனோபாவங்கள் 
திருமண பந்தம் (இரு குடும்பங்களின் இணைப்பு விழா)
கருத்து வேறுபாடுகள் ( பிரிவு, விவாகரத்து)
தீர்வுதான் என்ன? 
சுகமான தாம்பத்தியம் இப்படித்தான் இருக்கும்.


தொடர்ந்து படியுங்கள், இதனை குறித்த உங்களது விமர்சனங்களையும் (அர்ச்சனைகளையும்),  மேலான ஆலோசனைகளையும்,   கருத்துகளையும் தயவுசெய்து தெரிவியுங்கள் அப்போதுதான் என்னால் பிற தலைப்புகளை நன்றாக தொடரமுடியும்.  


 காத்திருங்கள்.........!!    எழுத்துக்களை சுவாசிக்க... மன்னிக்கவும் வாசிக்க......!!!  

பிரியங்களுடன் 
உங்களின் 'மனதோடு மட்டும்
கௌசல்யா