பெரும்பாலான இளைஞர்கள் படித்து முடித்ததும் உடனே தேடுவது ஒரு நல்ல வேலை...! கல்லூரியை விட்டு வெளியில் வந்ததும் அரசாங்கமோ, பெரிய கம்பெனியோ 'இந்தா அப்பாயின்மென்ட் ஆர்டர்' என்று தூக்கி கொடுத்து விடாது. வேலைக்கான தகுதியை வளர்த்து கொள்வதுடன், தனக்கு தகுந்த வேலையை தேடுவதும் அவசியம். ஆனால் வெளியிடங்களில் வேலை தேடியே சோர்ந்து போய் விடுகிறான் நம் இளைஞன். எதற்கெல்லாமோ, எதன் பின்னாலோ ஓடி நாட்களை வீணாக கழிப்பவர்கள், வேலை மட்டும் உடனே கிடைத்துவிட வேண்டும் என்று ஆசை படுவது என்ன நியாயமோ தெரியவில்லை.
அதுவும் ஒருசிலர் படிக்கும் போதே வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்கிற ஆசையை, ஆர்வத்தை வளர்த்து கொள்கிறார்கள்...இங்கே தகுந்த வேலையோ சம்பளமோ கிடைக்காது என்கிற விதமாக இருக்கும் அவர்களின் பேச்சுக்கள் எல்லாம்...!?
வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் வசதியானவர்களை பற்றி இங்கே சொல்லவில்லை...இந்த நாட்டில் வேலை கிடைக்கவில்லை என்று அப்பாவிடமோ, அடுத்தவரிடம் கடன் வாங்கியோ விமானத்தை பிடிக்கும் இளைஞனை சொல்கிறேன்...கடன் வாங்கி வெளிநாட்டை தேடி செல்வதை விட அதே பணத்தை வைத்து சொந்த ஊரில் சிறு தொழிலை தொடங்கலாமே என ஏன் யோசிப்பதில்லை...?! பிழைக்க வழி வகை தெரியவில்லையா ?? துணிச்சல் இல்லையா ?? முன்ன பின்ன தெரியாத ஊரில் வாழ தைரியத்துடன் செல்லும் இளைஞனுக்கு, அந்த துணிச்சலை மூலதனமாக வைத்து சொந்த நாட்டில் உழைத்து சம்பாதிக்க தெரியவில்லை எனும் போது வருத்தம் ஏற்படுகிறது.
நம் நாட்டை குறை சொல்ல ஆயிரம் காரணங்களை அடுக்கலாம். ஆனால் ஏன் இங்கே உழைக்க முடியவில்லை என்ற கேள்விக்கு சரியான பதில் இருக்கிறதா ? அப்படி உங்களுக்கு சாதகமாக பதில் வைத்திருந்தாலும், இங்கே இருக்கும் மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதையும் சொல்ல வேண்டி வருமே...?! அரசாங்கம், ஊழல், லஞ்சம் என்று எந்த வித சமாளிப்பும் தேவையில்லை. உழைக்க கூடிய திறன் , மனோதிடம், உத்வேகம், தன்னம்பிக்கை, சுய மரியாதை இருந்தால் எங்கேயும் வாழ முடியும். கை நிறைய சம்பாதிக்க முடியும்.
ஆயிரம் வசதிகள் இருந்தாலும் சொந்த நாட்டில் சொந்த பந்தங்களுடன், மனைவி குழந்தைகளுடன் ஒன்றாக வாழும் வாழ்க்கைக்கு ஈடு இணை ஏதும் இல்லை.
* மனைவி குழந்தைகளை விட்டு சென்று, பல வருடம் கழித்து திரும்பி வரும் சிலருக்கு,நெருங்கிய அந்த உறவுகளே அன்னியமாகி விட்டதை போல தெரியும் சோகம் மிக கொடுமை ?!
* முதலில் அன்பை பொழிந்த உறவுகள், வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தை அனுபவித்த பின்னர், வெறும் பணம்காய்ச்சி மரமாக மட்டுமே உங்களை பார்க்க கூடிய நிலை சகஜம் !!
* பணத்தின் ருசி கண்டவர்கள் ஒரு சிலரின் மூணு வருட அக்ரீமென்ட் முடிந்த பிறகும் மீண்டும் போக சொல்லி வற்புறுத்துவது வேதனை !
இன்னும் இருக்கிறது சொல்வதற்கு...(அடுத்த பதிவில் பார்த்துக்கலாம்னு இத்தோட நிறுத்திக்கிறேன்)
வெளிநாட்டு வேலையை பற்றி இப்படி என்னை ஆதங்கப்பட வைத்துவிட்டது நேற்று நடந்த ஒரு சிறிய சம்பவம்...
சொந்த தொழில், மாதம் செலவு போக வருமானம் 20,000 ரூபாய்...!! இரண்டு வருடத்தில்,வந்த வருமானத்தில் சொந்தமாக இரு ஆட்டோ (லோன் ), கூட வேலை செய்ய துணைக்கு மற்றொருவர் மட்டுமே !! அப்படி என்ன வேலை என்கிறீர்களா ??
இஸ்திரி கடை நடத்துகிறார்...என்னங்க நம்ப முடியவில்லையா?? நானும் இதை வேறு யாரும் என்னிடம் சொல்லி இருந்தால் நம்பி இருக்க மாட்டேன், நேரில் சென்று பேட்டி எடுக்காத குறையாக விவரங்களை கேட்டு தெரிந்துகொண்ட பிறகே நம்பினேன்...
நேற்று என் கணவர் வீட்டில் மின்சாரம் இல்லாத போது , அவசரமாக வெளில அயன்(கரண்ட் அயனிங் அண்ட் கரி பெட்டி அயனிங் இரண்டும் இருக்கும்) பண்ணிட்டு வரேன்னு ஒரு ஷர்ட், பேன்ட் எடுத்து சென்றவர், போன வேகத்தில் திரும்பி வந்துவிட்டார்...'என்னாச்சுங்க' என்றேன். 'இரண்டு நாள் ஆகுமாம், எனக்கு இப்ப தேவை. சரி பரவாயில்லை அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்'னு கிளம்பிட்டார். எனக்கு ஆச்சர்யம் "ஒரு அரைமணி, ஒரு மணி நேரம் வெயிட் பண்ண சொன்னா பரவாயில்லை, இரண்டு நாள் என்றால் எப்படிங்க ?!"
"கடைல ஒரு இடம் பாக்கி இல்லாம வரிசையா பெரிய பெரிய பேக்ல துணிகள் இருக்கு, இருக்கிற துணிய பார்த்தா ஒரு வாரம் ஆகும் போல...!?"
என கணவர் சொல்லவும் அப்படி என்ன ஸ்பெஷல் அந்த கடைல என்று எனக்கு ஒரு ஆர்வம் வந்து விட்டது. மாலையில் அந்த வழியாக போனபோது போய் விசாரித்தே விட்டேன்.
(வேலை மும்மரத்தில் இருந்ததால் எனது கேள்விக்கு பதில்கள் இன்ஸ்டால்மென்டில் வந்தன.கால் வலித்தாலும் பரவாயில்லை...முழுதும் தெரிந்து கொள்ளாமல் விடுவதாயில்லை)
B.com படித்திருக்கிறார், ஒரு வருடம் இப்படி அப்படி என்று கழித்துவிட்டு, வேறு உதவி ஏதும் கிடைக்காத காரணத்தால், எங்க ஏரியாவில் இருக்கும் அக்கா வீட்டிற்கு வந்திருக்கிறார். அக்கா வீட்டின் வாசல் மர நிழலில், வண்டியில் ஒருவர் இஸ்திரி போட்டு கொண்டிருந்திருக்கிறார். அவரது வண்டியை சுற்றி ஏகப்பட்ட துணி பேக்குகள் இருக்குமாம். சில நாட்கள் வண்டியை ஓரமாக விட்டு விட்டு போய் விடுவாராம்.அந்த ஏரியாவில் அரசாங்க வேலையில் உள்ளவர்கள் அதிகம், கொஞ்சம் வசதியானவர்கள் உள்ள ஏரியா. 'இஸ்திரி போட ஆள் வராத போது எல்லோரும் என்ன செய்வாங்க' என்று யோசித்திருக்கிறார். ஒரு சுப முகூர்த்த நாளில் 'ஏன் இந்த தொழிலை நாம் செய்ய கூடாது' என்ற சிந்தனை தோன்றி இருக்கிறது.
முறையான வேலை (துணிகளை சரியாக மடித்து வைக்கும் லாவகம்) தெரியாத போதும், ஒரு மாதம் வீட்டில் பழகி பார்த்திருக்கிறார். அக்கா கணவரின் உதவியால் வண்டி, இஸ்திரி பெட்டி, கரி எல்லாம் தயார். ஏற்கனவே அங்கே ஒருவர் இருப்பதால், அக்கா வீட்டு வாசல் சரிபடாது என்று அடுத்த தெருவில், வேப்பமரம் இருக்கும் இடமாக பார்த்து வண்டியை நிறுத்தி இருக்கிறார்.
அடுத்த ஸ்டெப் கஸ்டமர்களை தேடுவது...
புதிய நபர்களை நம்பி யாரும் துணிகளை கொடுக்க மாட்டார்கள்...அதற்காக தனது துணிகளை எடுத்து வந்து ஒவ்வொன்றாக மெதுவாக அயன் செய்வாராம். அவரது ஒரு சட்டை பல முறை அயன் செய்ய பட்டு இருக்குமாம் !(தொழில் பழகின மாதிரியும் ஆச்சு, பாக்கிறவங்களுக்கு யார் வீட்டு துணியவோ அயன் பண்றான் என்று நினைக்கவும் வசதி ஆச்சு) இப்படி இவரது பிளான் வொர்க் அவுட் ஆகி, ஒரு பெண்மணி தனது குழந்தைகள் துணிகளை கொண்டு வந்து கொடுத்திருக்காங்க...இவர் அவரை அக்கானு கூப்பிட்டு மிகுந்த மரியாதையாக, அன்பாக பேசி இருக்கிறார் (முதல் போனி ஆச்சே !)
புதிய நபர்களை நம்பி யாரும் துணிகளை கொடுக்க மாட்டார்கள்...அதற்காக தனது துணிகளை எடுத்து வந்து ஒவ்வொன்றாக மெதுவாக அயன் செய்வாராம். அவரது ஒரு சட்டை பல முறை அயன் செய்ய பட்டு இருக்குமாம் !(தொழில் பழகின மாதிரியும் ஆச்சு, பாக்கிறவங்களுக்கு யார் வீட்டு துணியவோ அயன் பண்றான் என்று நினைக்கவும் வசதி ஆச்சு) இப்படி இவரது பிளான் வொர்க் அவுட் ஆகி, ஒரு பெண்மணி தனது குழந்தைகள் துணிகளை கொண்டு வந்து கொடுத்திருக்காங்க...இவர் அவரை அக்கானு கூப்பிட்டு மிகுந்த மரியாதையாக, அன்பாக பேசி இருக்கிறார் (முதல் போனி ஆச்சே !)
அந்த பெண் அப்படியே அடுத்த பெண்களிடமும் போய் 'பார்த்தா நல்ல பையனா இருக்கிறான், உங்க துணி எல்லாம் கொடுங்க, அயன் பண்ணுவான்' அப்படின்னு இவரது விளம்பர பிரதிநிதி ஆகிடாங்க. இப்படியே தொழில் பிக் அப் ஆகி மெய்ன் ரோட்டில் ஒரு கடையை வாடகைக்கு பிடித்து தொழிலை விரிவு படுத்தி விட்டார். அப்புறம் என்ன ஒரே ஏறு முகம் தான், அடுத்து புதிதாக இரு ஆட்டோ வாங்கி சம்பளத்திற்கு டிரைவர்களை அமர்த்திவிட்டார். இப்போது அதில் இருந்தும் வருமானம் வருகிறது...
திருமணத்திற்கு பெண் தயாராக இருக்கிறதாம், இவர்தான் இன்னும் ஒரு வருடம் போகட்டும் என்று இருக்கிறாராம்.
* * *
என்ன விவரங்கள் போதுமா இன்னும் வேண்டுமா ?! இப்ப மறுபடியும் முதலில் இருந்து படிங்க...என்னோட ஆதங்கம் சரிதானா ? இல்லையானு ?
* நெல்லையில் மதுரம் ஹோட்டல் அருகில் ஒரு கடை இருக்கிறது, இங்கே எப்படி என்றால், அக்கம் பக்கத்தில் வீடுகளில் இருந்து கொண்டு வந்து போடும் துவைக்க/தேய்க்க வேண்டிய துணிகளை மொத்தமாக சேகரித்து ஒரு மினி ஆட்டோவில் ஏற்றி நாகர்கோவிலுக்கு(!) கொண்டு செல்கிறார்கள், அங்கே ரெடி ஆனதும் , மறுபடி எடுத்து வந்து கஸ்டமர்களுக்கு கொடுக்கிறார்கள்...இந்த வேலை தினமும் நடக்கிறது...துணிகளும் வந்து குவிந்து கொண்டே இருக்கிறது...!!
* நெல்லையில் மதுரம் ஹோட்டல் அருகில் ஒரு கடை இருக்கிறது, இங்கே எப்படி என்றால், அக்கம் பக்கத்தில் வீடுகளில் இருந்து கொண்டு வந்து போடும் துவைக்க/தேய்க்க வேண்டிய துணிகளை மொத்தமாக சேகரித்து ஒரு மினி ஆட்டோவில் ஏற்றி நாகர்கோவிலுக்கு(!) கொண்டு செல்கிறார்கள், அங்கே ரெடி ஆனதும் , மறுபடி எடுத்து வந்து கஸ்டமர்களுக்கு கொடுக்கிறார்கள்...இந்த வேலை தினமும் நடக்கிறது...துணிகளும் வந்து குவிந்து கொண்டே இருக்கிறது...!!
இப்படி ஒவ்வொரு இளைஞரும் உத்வேகத்துடன் உழைக்க தயாராகிவிட்டால் வெளிநாடு செல்வது என்பது பழங்கதையாகி விடுமல்லவா ?
இஸ்திரி வேலை என்று இல்லை, எத்தனையோ சிறு தொழில்கள் மலிந்து கிடக்கின்றன...அரசின் மானியம் வேறு இருக்கிறது...எதற்கு யாரை எப்படி அணுக வேண்டும் என்பது தெரிந்து விட்டால் போதும்.
சொல்ல போனால் அரசின் உதவியே தேவையில்லை...சுயமாக பல தொழில்கள் செய்யலாம். படித்த சிலர் கிராமத்தில் தங்கள் படிப்பின் உதவி கொண்டு விவசாயம் பார்த்து வருகிறார்கள்...! சொந்த ஊரில் சொந்த பந்தங்களுடன், தன் குடும்பத்தினர் புடை சூழ வாழும் ஒரு வாழ்க்கை எவ்வளவு அர்த்தமுள்ளதாக மகிழ்ச்சியாக இருக்கும்...?! வெளிநாட்டு வருமானம் அளவு இல்லை என்றாலும் ஒரு நிறைவு இருக்கும் அல்லவா ?! கணவன் ஓர் இடம் மனைவி, குழந்தை ஓர் இடம் என்பது கசப்பான ஒரு வாழ்க்கை தானே ?(அப்படி வாழ்பவர்களை மட்டும் !)
என்ன செய்வது, எங்க தலைஎழுத்து இப்படி வெளிநாட்டில் லோல் படணும் என்று இருக்கிறது என்று சலித்து கொள்ளாதீர்கள், உங்களுக்கு நீங்கள் தான் எஜமானன் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிக்கும் உரிமையும் உங்களது தானே ?! அப்புறம் என்ன ?! வேறு யாருக்கோ உங்களின் உழைப்பும், சக்தியும் வீணாகிறது, அதை உங்கள் சொந்த முன்னேற்றத்துக்கு பயன் படுத்தினால் அபரீதமான வளர்ச்சியை காணவும் முடியும், இறுதி வரை நிம்மதியான ஒரு வாழ்க்கையும் வாழலாம்...!? சிந்தியுங்கள் எம் தேசத்து இளைஞர்களே !!
வாழ நினைத்தால் வாழலாம்...!வழியா இல்லை நம் பூமியில்...!!
பி.கு.
எனக்கு தெரிந்த சிலரின் வேதனையான வாழ்க்கையை நேரில் பார்த்து , அதன் மீதான என் ஆதங்கம் தான் இந்த பதிவு. யார் மனதையும் புண்படுத்துவது என் விருப்பமல்ல . வருத்தபடுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
படங்கள் _ நன்றி கூகுள்

