பசுமை விடியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பசுமை விடியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூன் 5

சுற்றுச்சூழல் மீதான அக்கறை நமக்கு இருக்கிறதா ?!!



ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடபடுகிறது...இத்தினத்தை பொறுப்பேற்று நடத்துவதற்காக ஐ.நா சபையின் சுற்றுச்சூழல் திட்டக் குழு ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒவ்வொரு நாட்டை தேர்ந்தெடுக்கிறது...இந்த ஆண்டு இந்த வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்துள்ளது...

இதற்காக பெருமை கொள்ள முடியாது, எங்கே குறைவு இருக்கிறதோ அங்கே தான் நிறைவு செய்து கொள்ள வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்று தான் நாம் எடுத்து கொள்ள வேண்டும்...120 கோடி பேர் வாழும் இந்த நாட்டில் அடிப்படை தேவையான கழிப்பறை வசதி இல்லாமல் 60 % மக்கள் இருக்கிறார்கள் என ஆய்வு கூறுகிறது..!!

இத்தகைய மோசமான நிலையில் நாடு இருக்கும்போது வல்லரசு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என கூறும் அதி மேதாவிகளை என்னவென்று சொல்ல ??!

தரமற்ற குடிநீர்,
சாக்கடையாகும் நீர்பிடிப்பு பகுதிகள்,
பிளாஸ்டிக் கழிவால் சீர்கெட்டுப்  போன சுற்றுப்புறம்,
மணல் கொள்ளையால் காணாமல் போகும் ஆறுகள்,
மரங்களை வெட்டியதால் சுடுகாடாய் மாறிய பசுமை பிரதேசங்கள்

பூமியில் காணப்படும் செடி, கொடி, மரங்கள் முதல் மிருகங்கள், பறவைகள், பூச்சி இனங்கள் போன்றவற்றுடன் மனிதனும் இணைந்த இணைப்பே பல்லுயிரியம் (Bio diversity) எனப்படுகிறது. இவை அனைத்தும் சரிவிகிதத்தில் இருக்கவேண்டும். 

ஆனால்... 

மனிதனை தவிர மற்றவை தங்கள் பங்கை சிறப்பாக செய்து வரும் போது 'ஆறறிவு படைத்த மனிதன்' தன் சுயநலத்திற்காக கண்டபடி அனைத்தையும் அழித்துக்கொண்டு வருகிறான். சமன்பாட்டில் குறைவு ஏற்படும் போது இயற்கை குழப்பம் அடைந்து பல மாறுபாடுகளை ஏற்படுத்துகிறது. அதுதான் ஓசோனில் ஓட்டை, புவி வெப்பமடைதல் என்று தொடரும் ஆபத்துகள்...

இனியும் நாம் விழித்து கொள்ளவில்லை என்றால் வாழும் போதே நரகத்தை அனுபவிப்பதை விட வேறு வழி இல்லை.

மரங்கள்  நடுவது போன்ற கண் துடைப்புகள்

ஒரு வாரத்தில் இத்தனை மரங்களை நட்டோம் என்று லட்சத்தில் கணக்குகளை சொல்கிறார்கள்...இது சாத்தியமா ?!! எந்த ஊரில் , எந்த தெருவில் என்று விவரமாக கூறினால் நல்லது. நடுவதுடன் நிறுத்தி கொள்ளாமல் தொடர்ந்து அதை பாராமரிப்பது தான் மிக முக்கியம்...மரம் நடுவது என்பது வியாபாரம் அல்ல !! விளம்பரத்துக்காக மரம் நடுபவர்கள் தாங்கள் நட்ட மரங்களை தொடர்ந்து கண் காணிக்கிறார்களா என தெரியவில்லை. தற்போது வி.ஐ.பி கள் ஒரு கன்றை நடுவதை போன்று புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதுடன் அவர்களின் சமூக கடமை நிறைவேறி விட்டதாக நிறைவு கொண்டுவிடுகிறார்கள். இப்படி அல்லாமல் முழுமையாக மரம் நடுவதை செயல்படுத்த வேண்டும்...

அரசின்  வீண் ஜம்பங்கள் !!

"வனங்கள்: உங்கள் சேவையில் இயற்கை' என்ற தலைப்பில் உலக சுற்றுச் சூழல் தினத்தை கடைப்பிடிக்க ஐ.நா. சபை கேட்டுக் கொண்டுள்ளது. இதன்படி, பூமியின் சுற்றுச்சூழலைக் காப்பதில் வனங்களின் பங்கு, குறிப்பாக இந்திய வனங்களின் பங்கு குறித்து உலகம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடுசெய்யப்படும். - செய்தி 

 எந்த  வித விளம்பரமும் இல்லாமல் 30 வருடங்களாக 1360 ஏக்கர் பரப்பளவில் ஒரு காட்டையே உருவாக்கிய மாமனிதரை இன்று நினைவுகூர்வது ஏற்புடையதாக இருக்கும்...இவரை உலகிற்கு அறிமுகபடுத்த வேண்டியது இந்திய அரசின் கடமை. அதை செய்ய தவறிய அரசு தான் இப்படி சொல்கிறது......

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் " பூமியின் சுற்றுச்சூழலை காப்பதில் இந்தியா முக்கிய பங்காற்றி வருவதாகவும், பொருளாதார வளர்ச்சி- சுற்றுச்சூழல் பாதுகாப்பு விவகாரத்தில் சமநிலையை இந்தியா கடைப்பிடித்து வருகிறது"

இன்னும்  எத்தனை காலத்திற்கு இது போன்ற பச்சை பொய்களை நம் அரசியல்வாதிகள் கூறி கொண்டிருப்பார்கள் ???!! கேவலம் !!

சுற்றுச்சூழலின் எதிரி பிளாஸ்டிக் !!

2009 ஆம் ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது.வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வருபவர்களால் தான் பிளாஸ்டிக் குப்பைகள் சேருகின்றன. அதனையும் உடனுக்கு உடன் அகற்றி விடுகிறார்கள். ஊரின் நுழைவாயிலிலேயே இங்கே 'பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது' என்ற போர்ட் வைக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு எச்சரிக்கையாக இது இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்ட மக்களின் ஒத்துழைப்பை பெற்று சிறப்பாக முழுமையாக செயல்படுத்த பட்டு வருகிறது பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டம் !!

ஜூன் முதல் தேதியில் இருந்து திருநெல்வேலியில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பே இத்திட்டம் நடைமுறைக்கு வந்தாலும்,அவ்வளவாக கவனிக்க படவில்லை. ஆனால் தற்போது மேயர் அவர்களின் சிறப்பான அக்கறை, ஆர்வத்தினால் முழுமையாக செயல்படுத்த படும் என்று நம்புகிறோம்...! அரசு மட்டும் திட்டங்களை போடும் ஆனால் அதை கடைபிடிக்க வேண்டியது மக்களின் வேலை. 500 ஆண்டுகள் ஆனாலும் மண்ணில் மக்கமுடியாத பிளாஸ்டிக் பொருட்களை வாங்காமல் தவிருங்கள்.

கூவமாகும் தாமிரபரணி போன்ற அனைத்து நதிகளையும் சுத்தபடுத்த கடுமையான தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்...!!


நமது கடமையும் கூட

சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு என்பது ஏசி அறைக்குள் மீடியா மைக்குகள் சூழ கோட் போட்ட பெரிய மனிதர்கள் மட்டும் பேசி விவாதிக்கும் விஷயம் அல்ல...
பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த ஒரு நல்லதும் நடைபெறாது...இது நமது மண்...நம் பூமி...இதனை காக்கவேண்டியது நம் கடமை...

நம்மால் இயன்றவரை மரங்களை வெட்டாமல், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, நதியில் கழிவுகளை/குப்பைகளை போடாமல், மரங்களை நட்டு வளர்த்து, இயற்கை விவசாயத்தை மேற்கொள்வோம்...

அடுத்த தலைமுறைக்கு நல்லதை மட்டும் விட்டு செல்வோம்...!!


அனைவருக்கும் பசுமைவிடியல் நண்பர்களின் சார்பில் சுற்றுச்சூழல் தின வாழ்த்துக்கள்...!! 
 
source - பசுமை விடியல் 

படங்கள்  - நன்றி கூகுள்

புதன், மே 2

திருமண விழாவில் பசுமை விடியல்...!

உணவு உலகம் திரு சங்கரலிங்கம் அவர்கள் மகளின் திருமணம் கடந்த புதன் அன்று 25/04/2012  திருநெல்வேலியில் வைத்து நடைபெற்றது. அன்று வருகை தருபவர்களுக்கு எங்கள் தொண்டு நிறுவனம் சார்பில் இலவசமாக மரகன்றுகளை வழங்கலாம் என முடிவு செய்தோம்.

'ஈஸ்ட் தொண்டு' நிறுவனத்தின் கீழ் இயங்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கமான பசுமை விடியல் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது செய்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதில் ஒன்றாக சங்கரலிங்கம் அண்ணன் வீட்டு திருமணத்தை பயன்படுத்திக்கொள்ள கேட்டதும் அண்ணன் சந்தோசமாக அனுமதி கொடுத்தார்.



மரகன்றுகளை வாங்க பலரை அணுகினேன், முக்கியமாக நமது அரசின் வனத்துறை ! ஆனால் அவர்கள் கூறிய சட்ட திட்டங்கள் எனக்கு மரகன்றுகள் இலவசமாக கிடைப்பதற்கு தடையாக இருந்தது. பலவாறு வேண்டியும் ஏமாற்றமே மிஞ்சியது. அதற்கு அவர்கள் கூறிய காரணங்கள்: "கன்றுகளை பெறுபவர்கள் முறையாக பராமரிக்கிறார்களா என நன்கு தெரிய கூடிய நிலையில் தான் அரசு இலவசமாக கொடுக்கும், இப்படி தனித் தனியாக கொடுத்தால் நாங்கள் எவ்வாறு கணக்கு எடுக்க முடியும், ஆயிரம் பேரின் முகவரியும் கொடுக்க முடியுமா?" என கேட்டனர்.

இதில் இப்படி ஒரு சிக்கலா என மிக வருத்தத்துடன் நாட்கள் செல்ல இறுதியாக உதவி செய்ய கேட்டு சங்கரலிங்கம் அண்ணனை சரண் அடைந்தேன். பரபரப்பான திருமண வேலைக்கு மத்தியிலும் அண்ணன் அவரது நண்பர் திரு.முத்துக்குமார் அவர்களிடம் தொடர்பு கொண்டு எனக்கு தேவையானவற்றை செய்யச் சொன்னார். 

அவரின் உதவியால் குற்றாலத்தில் இருந்து குறைந்த விலைக்கு மரக் கன்றுகள் கிடைத்தன.

எனது ஆதங்கம் என்னனா 'எங்கும் பசுமை, எதிலும் பசுமை' என சூளுரைக்கும் அரசு எங்களை போன்று சேவைகள் செய்ய முன்வருபவர்களுக்கு அந்த சட்டம், இந்த சட்டம் என சுட்டி காட்டிக்கொண்டு இராமல் தாராளமாக உதவினால் என்ன ?! விரும்பி கன்றுகளை வாங்கிச் செல்பவர்கள் அதனை எப்படி வீணாக்குவார்கள்...? நட்டு பராமரிக்கவே செய்வார்கள் என்பதை இவர்கள் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். 

திருமணத்தன்று...

பெங்களூரில் இருந்து வந்திருந்த பிரபுவும் நானும் கன்றுகள் வழங்க வேண்டிய ஏற்பாடுகளை செய்தோம். உதவிக்கு அழைத்ததும் மறுக்காமல் வந்தான் நெல்லையை சேர்ந்த சகோதரன் சிராஜ். கன்றுகளுடன் பையினுள் சிறு குறிப்பு எழுதப்பட்ட துண்டு பிரசுரம் வைக்கும் யோசனையை எங்களிடம் கூறியது எறும்பு ராஜகோபால் தான். முன் தினம் இரவில் எல்லோருமாக அமர்ந்து பேசிகொண்டிருந்த போது "உங்களின் நோக்கம் என்ன ? நீங்க யார் ? என்பதை பற்றிய சிறு விளக்க குறிப்பு இருந்தால் நன்றாக இருக்கும்" என்றார். நல்ல யோசனையாக இருந்தது ஆனால் அவர் சொல்லும் போது நேரம் 8  மணி, பின் வேகவேகமாக எழுதி பிரபு + சிராஜ் இருவரிடம் கொடுத்து பிரிண்ட் பண்ண கொட்டும் மழையில் அனுப்பி வைத்தேன்...காலையில் வந்து சேர்ந்தது கட் செய்யபடாமல்...கட் பண்ண கத்தி தேட, சிசர் தேட என கொஞ்ச நேரம் அல்லாடி, சங்கரலிங்கம் அண்ணாவின் நண்பர் வந்தார் உதவிக்கு...!! மக்கள் வர தொடங்கவும் நம் பதிவர்கள் வந்தார்கள் உதவிக்கு, ஆளுக்கு ஒரு கன்றை எடுத்து பையில் வைத்து அரேஞ் பண்ணினார்கள்.(இதை ஏன் விரிவா சொல்றேனா, பலரின் ஒத்துழைப்பால் மட்டுமே இந்த சேவை சாத்தியப்பட்டது  .



திருமணம் நடைபெறும் ஹாலில் திரு. சிதம்பர பாண்டியன் சார் மரகன்றுகள் விநியோகிக்க இருப்பதை பற்றியும், வீட்டில் வைக்க இடவசதி இருப்பவர்கள் மட்டும் இந்த இளந்தளிர்களை பெற்று செல்ல வேண்டுமாறு அறிவித்தார்.அவருக்கு என் நன்றிகள்.

அங்கே நடந்தவற்றில்... 

மனம் கவர்ந்த சில சந்தோஷத் துளிகள் 

* மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் லைபிரேரியன் திருமதி.திருமகள் விழிகள் விரிய ஆர்வமாக பசுமை விடியல் பற்றிய அனைத்தையும் கேட்டறிந்தார்.தனக்கும் சுற்றுச்சூழல் குறித்தான விசயங்களில் ஆர்வம் இருப்பதாகவும், இனி பசுமைவிடியல் மேற்கொள்ள போகும் அத்தனை சேவையிலும் அவரை அழைக்க வேண்டுமென செல்பேசி எண்ணை கொடுத்தார். "உங்கள் கல்லூரியில் மரம் நடுவதை நாங்கள் செய்ய ஆர்வமாக இருக்கிறோம், அனுமதி கிடைக்குமா?' என்றேன், 'நேரில் வாருங்கள், முயற்சி செய்வோம்' என்றார். நமக்கு இது போதாதா, அடுத்த வாரம் போய்ட வேண்டியதுதான்.

* திருநெல்வேலி மாநகராட்சி மேயர் திருமதி. விஜிலா சத்யானந்த் அவர்கள் மணமக்களை வாழ்த்திவிட்டு மாடியில் இருந்து கீழிறங்கி எங்களை கடக்க முயன்றவர் திரும்பி, 'என்னது இங்க பச்சை பச்சையா இருக்கு' என சிரித்து கொண்டே பார்த்தார், உடனே நான் 'மேடம் ஈஸ்ட் டிரஸ்ட் ஞாபகம் இருக்கா?' என்றதும் (போலியோ முகாமில் எங்கள் நிறுவனம் கலந்து கொண்டு பணியாற்றியது, அப்போது பேசி இருக்கிறோம்) அவரும் அருகில் வந்து 'ஓ! நீங்களா' என்று ஆச்சர்யபட்டு துணிப்பையை எடுத்து பார்த்து வெகுவாக பாராட்டினார்...'உங்களின் இந்த முயற்சி நன்றாக இருக்கிறது' என்றவர் தனக்கும் ஒரு மரக்கன்றை வேண்டும்' என வாங்கி கொண்டார்...உடன் வந்த மாநகராட்சி அதிகாரிகளையும் 'ஆளுக்கு ஒண்ணா வாங்கிகோங்க' என வாங்க வைத்து சந்தோசமாக கிளம்பினார்.



* மாநகராட்சி ஆணையாளர் திரு. மோகன் அவர்கள் விசாரித்து மகிழ்வுடன் மரக்கன்றை பிரபுவிடம் இருந்து பெற்று கொண்டார்.



* ஒரு பாட்டி பிரபுவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டார், இப்படி கேட்கிறாரே இவர் எங்க வாங்க போறார் என நினைத்தேன், திரும்பி பார்த்தா அவரை சுற்றி நிறைய பேர், அத்தனை பேருக்கும் ஆளுக்கு ஒரு கன்றாக கொடுக்க சொல்லி அசத்திட்டார். பிரபுவுக்கு தான் பாட்டி அங்கிருந்து கிளம்பியது பிடிக்கவில்லை.



* நாகர்கோவிலை சேர்ந்த திரு.கதிரேசன் என்பவர் "விரைவில் தனது வீட்டில் ஒரு திருமணம் நடைபெற இருக்கிறது,அங்கேயும் இதுபோல் மரக்கன்றுகளை வழங்கவேண்டும் என விரும்புகிறேன்,ஏற்பாடு செய்து தருவீர்களா" என்றார். எதிர்பார்த்த ஒன்று கண்முன் காட்சியாகி நின்ற சந்தோசத்தில் ஒரு கணம் அப்படியே சிலையாகி விட்டேன். பிரபுவின் முகத்திலோ பெருமித புன்னகை !! பரஸ்பரம் செல்பேசி எண்களை பரிமாறிகொண்டேன்...

* மாலை நடந்த ரிசப்ஷனிலும் தொடர்ந்து கன்றுகளை வழங்கினோம்...அப்போது வந்திருந்த பதிவர் நண்பர் துபாய்ராஜா மிக ஆர்வமாக 15 கன்றுகளை வாங்கிகொண்டார். (மறுநாள் காலையில் பிரபுவிற்கு போன் செய்து கன்றுகளை நட்டுவிட்டேன் என மகிழ்வுடன் கூறினார்) இரு மாதங்கழித்து கன்றுகளின் வளர்ச்சியை போட்டோ எடுத்து அனுப்பு வதாகவும் கூறினார். அவரது ஆர்வத்திற்கு என் நன்றிகள்.

* யானைக்குட்டி ஞானேந்திரன் தான் வாங்கி சென்ற கன்றுக்கு 'பவி' என பெயரிட்டு நட்டதாக மகிழ்வுடன் தெரிவித்தார்.

*  மாலை வந்த பசுமை விடியலின் உறுப்பினர் பதிவர் கூடல் பாலா அவர்கள் , திருமண வரவேற்பு முடியும் வரை கூட இருந்து மரக்கன்றுகளை வழங்கினார்.

எந்த ஒரு செயலும் பலரால் அங்கீகரிக்க பட்டால் அதன் மகிழ்ச்சியே தனிதான்...அத்தகையதொரு மனநிலையில் நாங்கள் இருக்கிறோம்.  

வேலையில் மும்முரமாக இருந்த போது 'ஆன்டி நான்  வந்திருக்கிறேன்' என ஒரு இனிய குரல்...அட 'உலகச் சாதனை சிறுமி' சுட்டிப் பெண் விசாலினி ஆசையுடன் அவளை வேகமாய் இழுத்து கட்டிக் கொண்டேன். அவளோட அம்மா சந்தோசமா 'இப்ப மேலும் இரண்டு கோர்ஸ் முடிச்சிட்டாள்' என்றார்...! மேலும் இரண்டு சாதனைகள் !! அவங்க சொல்ல சொல்ல ஆச்சர்யபட்டுகொண்டே இருந்தேன்...(இன்னும் பல சிறப்பு தகவல்கள் கூறினார்கள் அதை இப்போது சொல்ல அனுமதி இல்லை, மற்றொரு சமயத்தில் தெரிவிக்கிறேன்)

நல்லவை நடந்தேறியது நன்றாகவே...

முதல் முறையாக செய்ய போகிறோம், சங்கரலிங்கம் அண்ணனின் உறவுகள் நண்பர்கள் , அதிகாரிகள் என பெரிய மனிதர்கள் பலர் வரக்கூடிய விழா, தவறாக ஏதும் நிகழ்ந்துவிட கூடாதே என உள்ளுக்குள் ஒரு எச்சரிக்கை மணி அடித்து கொண்டே இருந்தது, அதனால் தானோ என்னவோ வந்திருந்த பதிவுலக உறவுகளிடம் கூட நன்றாக பேச முடியவில்லை...

இணையம் கொடுத்த ஒரு நல்ல சகோதரன் பிரபு , இரண்டு நாளாக கூடவே சுறுசுறுப்பாக இயங்கினான்...அவனது ஒத்துழைப்பு இல்லையென்றால் என்னால் இந்த அளவிற்கு நன்றாக நடத்தி இருக்க முடியாது...அவனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். 

வாழ்நாளில் சிறப்பான  ஓர் நாள்  !!

சமுதாயத்தின் மேல் எல்லோருக்கும் அக்கறை இருந்தாலும் ஒரு சிலருக்கே சமூக பணி ஆற்ற சந்தர்ப்பம் அமைகிறது...அப்படி எனக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொள்ளாவிட்டால் நான் வாழும் நாட்கள் அர்த்தமில்லாதவை...இந்த மனநிறைவான நிகழ்வும் என் ஒருத்தியால் மட்டும் நடந்துவிடவில்லை...எத்தனை பேர் பங்கு பெற்று இருக்கிறார்கள் என்று எண்ணிக்கையில் அளவிட முடியாது...அவர்களுக்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் சொல்லி முடித்துவிட மனம் ஒப்புக்கொள்ளவில்லை, தொடர்ந்து அத்தகையவர்கள் வாழும் இந்த சமூகத்திற்கு தொடர்ந்து சேவை புரிவதே  அவர்களுக்கு நான் சொல்லும் நன்றியாக இருக்கும்...!

திங்கள் அன்று (30/4/2012) திருநெல்வேலியில் இருக்கும் 'ஸ்ரீ ரமணா பாலிடெக்னிக் கல்லூரி' யில் பசுமைவிடியல் சார்பில் 160 மரகன்றுகள் வழங்கப்பட்டது. என்னுடன் பெங்களூரில் இருந்து வந்திருந்த Miss.சில்வியா (Project Executive,Pasumai Vidiyal) மற்றும் அவரின் பெற்றோர் சகிதம் சென்றோம். நல்லமுறையில் கல்லூரியின் நிறுவனர் எங்களை மகிழ்வுடன் வரவேற்று உபசரித்தார், அங்கிருக்கும் ஊழியர்கள் உதவியுடன் மரக்கன்றுகள் நடப்பட்டன.



உங்களின் வாழ்த்துக்கள் ஆசியையும் எங்களுடன் இருக்கிறது என முழுமையாக நம்புகிறேன்...அவை எங்கள் குழுவை வழி நடத்தும் இன்றும், என்றும், எந்நாளும்...
                                                                    
மீண்டும் சந்திக்கிறேன்...

பிரியங்களுடன்
கௌசல்யா. 


வெள்ளி, ஜனவரி 13

பசுமை தேசம்...இது எங்கள் நம்பிக்கை !!



புதிய வருடத்தில் ஏற்கனவே உங்களிடம் தெரிவித்துள்ளபடி எனது மற்றொரு தளத்தை உங்கள் முன் இன்று அறிமுகப்படுத்துகிறேன். சுற்றுச்சூழலுக்கு என்று தொடங்கப்பட்டுள்ள அத்தளத்தை பார்வையிட்டு உங்களின் மேலான ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டுமென வேண்டுகிறேன். 

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக எங்களது ஈஸ்ட் தொண்டு நிறுவனம்(EAST TRUST, Sankarankovil)  சார்பில் பசுமைவிடியல் என்ற பெயரில் ஒரு இயக்கம் ஏற்படுத்தப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் திரு.இசக்கி சுப்பையா அவர்களால் கடந்த வியாழன்(Jan/2012) அன்று குற்றாலம் இசக்கி ரிசார்ட்ஸில் வைத்து பதிவர்கள் முன்னிலையில் இவ்வியக்கத்தின் இணையத்தளம் தொடங்கி வைக்கப்பட்டது.

  
முதல் களப்பணியாக மரம் நடுதல் விழிப்புணர்வுக்கான முதல் மரக்கன்றை எம்.எல்.ஏ அவர்கள் நட்டு வைத்தார். இனி இதர பணிகள் தொடர்ந்து நடைபெற இருக்கின்றன... 


பசுமை விடியல் - ஒரு அறிமுகம் 


பூமியில் காணப்படும் செடி, கொடி, மரங்கள் முதல் மிருகங்கள், பறவைகள், பூச்சி இனங்கள் போன்றவற்றுடன் மனிதனும் இணைந்த இணைப்பே பல்லுயிரியம் (Bio diversity) எனப்படுகிறது. இவை அனைத்தும் சரிவிகிதத்தில் இருக்கவேண்டும். 


ஆனால்... 


மனிதனை தவிர மற்றவை தங்கள் பங்கைச்  சிறப்பாகச்  செய்து வரும் போது 'ஆறறிவு படைத்த மனிதன்' தன் சுயநலத்திற்காக கண்டபடி அனைத்தையும் அழித்துக்கொண்டு வருகிறான். சமன்பாட்டில் குறைவு ஏற்படும் போது இயற்கை குழப்பம் அடைந்து பல மாறுபாடுகளை ஏற்படுத்துகிறது. அதுதான் ஓசோனில் ஓட்டை, புவி வெப்பமடைதல் என்று தொடரும் பல்வேறு ஆபத்துகள்...


2020 ஆம் ஆண்டில் முழுமையாக உருகிவிடும் என்று கணிக்கப்பட்ட ஆர்ட்டிக் பனிப்படிவுகள் 2015 ஆம் ஆண்டே உருகிவிடும் என்று வேறு தற்போது விஞ்ஞானிகள் பயமுறுத்துகிறார்கள்...!!


உலகில் கார்பன் வாயுவின் அளவு கூடிக்கொண்டேச்  செல்கிறது...இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்...ஆனால் பெரிய நாடுகள் எல்லாம் தங்களை எவ்வாறு பொருளாதாரத்தில் வளர்த்துக்கொள்வது, வளர்ந்த நாடாக பேர் எடுப்பது எப்படி என்ற கவனத்தில்தான்  இருக்கின்றன...!

மக்களை பற்றி நாடு அக்கறைக்  கொள்வது ஒரு பக்கம் இருக்கட்டும்  ஆனால் மக்களாகிய நமது அக்கறை என்ன ? நம் வீட்டில் ஒரு ஓட்டை என்றால் அப்படியே விட்டு விடுவோமா? அது போலத்தான் நாம் வாழும் பூமி. பூமி ஓசோன் படிவத்தில் ஓட்டை விழுந்திருக்கிறது அதனால் பூமியின் வெப்பம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  நம் குழந்தைகளும், அவர்களுக்கு அடுத்த சந்ததியினரும் நன்றாக வாழ நல்ல தூய்மையான பூமியை விட்டுச்செல்ல வேண்டாமா ?!   அதற்கு இதுவரை செய்தவை போதாது இன்னும் அதிகமாக, இன்னும் உற்சாகமாக முழு முன்னெடுப்புடன் திட்டமிட்டுச்  செயல்  படுத்தப் பட வேண்டும்...!

இதை குறித்து எனக்குள் ஒரு பெரிய கனவு இருக்கிறது...எந்த ஒரு கனவும் பிறருக்கு பயன் தரக்கூடியதாக இருந்தால் அதை விட வேறு என்ன இன்பம் இருக்க முடியும்...?! என் கனவும் அது போன்ற ஒரு கனவுதான்...!

கனவை நனவாக்க ஒரே அலைவரிசை கொண்ட உள்ளங்கள் இணைந்தது தற்செயல் ...! இதோ இன்று இணையத்தின் மூலம் எங்கள் கரங்களைக்  கோர்த்து இருக்கிறோம்...!

இனி இந்த பசுமை விடியல் எனது மட்டுமல்ல...நமது !!

ஒருநாள் நம் தேசம் பசுமையில் கண் விழிக்கும்...இது வெறும் ஆசை அல்ல...திடமான நம்பிக்கை !!


பதிவுலக உறவுகளே !


உங்களின் ஆலோசனைகள், கருத்துக்கள் எங்களை இன்னும் சிறப்பாக வழிநடுத்தும் என்பதால் அவசியம் தெரிவிக்க வேண்டுமாய் கேட்கிறேன்.  மேலும் உங்களின் மேலான ஒத்துழைப்பும்,வாழ்த்துக்களும் என்றும் எங்களுடன் இருக்க வேண்டுமென அன்பாய் வேண்டுகின்றேன்.


இனி தொடர்ந்து படிக்க இங்கே செல்லவும்...........அவசியம் செல்லவும். உங்களின் வருகைக்காக அங்கே காத்திருக்கிறோம்.



பிரியங்களுடன்
கௌசல்யா



படங்கள் - நன்றி கூகுள் 

திங்கள், ஜனவரி 9

எங்களை கவர்ந்த மக்கள்பிரதிநிதி...! நேரடி அனுபவம்

நல்ல விசயங்கள் எந்த கணத்தில் நடைபெறும் என்று கணிக்கவே முடியாது...உண்மைதான் அப்படி ஒரு நிகழ்வை சாத்தியமாக்கி காட்டிய அன்பு உள்ளங்களுக்கு நன்றி என்ற வார்த்தையில் முடித்துக்கொள்வதை விட தொடர்ந்து அவர்களுடன் அன்பை பரிமாறிகொள்வது ஒன்றே என் கடமை என்று எண்ணுகிறேன். எனவே 'அன்பு தொல்லை இனி தொடரும்' என்ற அன்பான மிரட்டலுடன், நடைபெற்ற ஒரு உன்னத நிகழ்ச்சி பற்றிய சிறு துளிகளை இங்கே பகிர்கிறேன்...



பதிவர் சந்திப்பு ஒன்றை நடத்த வேண்டும், அதற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.இசக்கி சுப்பையா அவர்களை வரவழைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று முடிவு செய்திருந்தோம்.  ஜனவரி 12 அல்லது  14 அன்று நிகழ்ச்சி நடத்தலாம் என 'நிகழ்ச்சி நிரல்' மாடல் ஒன்றை வடிவமைத்தும், பதிவர்கள் + எம் எல் ஏ கேள்வி நேரம் ஒன்றுக்காக இருபது கேள்விகள் (அரசியல் தவிர்த்து) ரொம்பவே யோசிச்சு(?) டைப் செய்து முன்தினம் இரவு செல்வா(செல்வாஸ்பீக்கிங் ) அண்ணனுக்கு மெயில் செய்தேன். இனி நட்புகளை அழைக்கவேண்டிய ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்ற ஒரே எண்ணம் தான் இருந்தது...ஆனால் மறுநாள்(5/1/12) காலை 11 மணிக்கு "நாளையே  ஏற்பாடு பண்ண முடியுமா , எம்.எல்.ஏ வை இப்போது விட்டால் அடுத்து ஒரு மாதம் ஆகிவிடும்" என்றார் அண்ணன்...! ஒண்ணும் ஓடல...!! விசாலினியை பற்றி பிளாக்கில  எழுதியதும் தொடர்ந்து மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு போய் விடவேண்டும், தாமதம் பண்ணகூடாது என்பதால் "சரிணா பண்ணிடலாம்" என்றேன்.

அன்று துவங்கவேண்டும் என முடிவு செய்திருந்த பசுமைவிடியல் தளம் முழுமையாக வடிவமைக்கபடவே இல்லை...பெங்களூரில் இருக்கும் பிரபுவை(பலே பிரபு) தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னேன். "சரிக்கா கவலை படாதிங்க, இரவுக்குள் முடிச்சிடலாம்" என்றான்.

சங்கரலிங்கம் அண்ணாவிற்கு தெரிந்திருந்தாலும் "எல்லாம் நீங்க இருக்கும் தைரியத்தில்தான்,உதவி பண்ணுங்க"னு புலம்பி தள்ளிட்டேன்...எல்லாம் பொறுமையாக கேட்டவர், 'ஓ.கே ஜி (தங்கையை பெயர் சொல்லாமல் 'ஜி' னு மரியாதையாக அழைக்கும் அன்பு அண்ணன் !!) பண்ணிடலாம்' என்றார்.  

அப்புறம் அங்கும் இங்கும் போன் மேல போன் பண்ணிட்டே இருந்தோம். இந்த மாதிரி இக்கட்டான நேரத்தில் யாரை அழைத்தாலும் நிச்சயமாக வர இயலாது...இது நன்கு தெரிந்தும் அழைத்தோம்...தூரத்தில் இருந்து வந்த சீனா ஐயா, ரத்னவேல் ஐயா, சி.பி.செந்தில்குமார், மதுரை சரவணன் இவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். (தனி போஸ்ட் ரெடி ஆகிட்டு இருக்கு)

நிகழ்ச்சியை அப்படியே சொல்வதை விட என்னை நெகிழ்ச்சி அடைய வைத்த அற்புத தருணங்களை மட்டும் இங்கே...

                        சூரிய சக்தியால் மின்சாரம் பெற்று உபயோகபடுத்துகிறார்கள்-இசக்கி ரிசார்ட்ஸ் 

விழா நடைபெறும் இடமான 'குற்றாலம் இசக்கி ரிசார்ட்ஸ்' போனதும் எம்.எல்.ஏ கலந்து கொள்ளும் விழாவாச்சே மேடை, மைக் அப்படி இப்படின்னு பந்தா செட்டப் இருக்கும்னு ஹால் கதவை மெதுவா திறந்தா ...திக்குன்னு ஆச்சு !! மேடைக்கு பதில் சின்னதா ஒரு டீப்பா, நோ மைக், நல்லவேளை வி ஐ பி சேர் இருந்தது...நாங்கள் அமர ஷோபா, பிளாஸ்டிக் சேர் என்று போடப்பட்டிருந்தது. அங்கே இருந்தவர்களை இதை பற்றி கேட்டேன், ) ஆனா அவங்க,' எம் எல் ஏ சார் ரொம்ப சிம்பிளா இருக்கணும்னு கால் பண்ணி சொல்லிட்டார் மேடம் அதான் இப்படி' என்றார்கள்.

அட என்ன அரசியல்வாதி இவர், ஆடம்பரமா ஏன் பண்ணலன்னு கேட்பார்னு பார்த்தா இப்படி சொல்லி இருக்கிறாரே(எத்தனை சினிமாவுல பார்த்திருக்கோம்...!) ம்...சரி சரி வரட்டும் பார்ப்போம்னு நானும் வேறு எந்தவித உள்வேலைகளும்(இன்டீரியர் டெக்கரேஷன் !?) செய்யாம, டென்ஷனை குறைக்க விசாலினியை தோட்டம் நடுவில வச்சு சுத்தி சுத்தி போட்டோ  எடுத்து தள்ளினேன்.

பதிவுலக நட்புகளின் வருகை 

நம்ம நட்புகள் எல்லாம் வந்து சேர்ந்தாங்க...சீனா ஐயா வந்து அமர்ந்ததும் "யார் வரவேற்பு கொடுக்க போறாங்க , ப்ரோக்ராம் லிஸ்ட் எங்க?" அப்படின்னு கிட்டத்தட்ட மிரட்ட தொடங்கினார் அன்பாகத்தான்...நானும் கொஞ்சம் டென்ஷனோட(?) "வேற யாரு நீங்கதான்" டக்குனு சொல்லவும், ஐயா(வாழ்க) மறுப்பார்னு பார்த்தால் ஒரு நோட்ல குறிக்க தொடங்கிட்டார். மதுரை சரவணன் திருக்குறள் சொல்லி தொடங்க, ஐயா வரவேற்பு என முடிவாகியது.

                                             (பதிவுலக நட்புகளுடன் விசாலினி மற்றும் குடும்பத்தினர் )

சட்டமன்ற உறுப்பினர் உள்ளே என்ட்டர், நாங்க அட்டன்ஷன் பொசிஷனுக்கு வந்தாச்சு...பரஸ்பர அறிமுகம்...பிறகு அகரமுதல் எழுத்தெல்லாம் என சரவணன் சொல்ல விழா தொடங்கியது...அமரப் போன (விழா) தலைவர், இந்த சேர் யார் போட்டா, வேண்டாம் எடுங்க"னு சொல்லிட்டு பக்கத்தில இருந்த பிளாஸ்டிக் சேர் எடுத்து போட்டு உட்கார்ந்தே விட்டார். எனக்கு சப்புன்னு ஆகிபோச்சு...!

அப்புறம் பொன்னாடை அணிவிக்க தயார் ஆனதை பார்த்தவர், "என்ன இது", "இது ஷால்...மரியாதைக்கு" னு இழுக்க..."அதெல்லாம் வேண்டாம், இனி இது மாதிரி யாரையும் கௌரவபடுத்தனும்னா இதுக்கு பதிலா ஒரு புக் வாங்கி கொடுங்க போதும்" என்றதும் எனக்கு மயக்கம் வராத குறை...இவர் எம் எல் ஏ இல்லையோ, சந்தேகமே வந்து போச்சு...

சீனா ஐயா மிக அருமையாக வரவேற்பு உரை நிகழ்த்தினார்...எல்லோரை  பற்றியும் சொல்லிவிட்டு 'பசுமை விடியல்' நிர்வாகிகள் நாலு பேரின் பெயர் , இயக்கத்தின் திட்டங்கள், நோக்கங்கள் அனைத்தையும் சுருக்கமாக சிறப்பாக எடுத்துரைத்தார்...இதெல்லாம் இவருக்கு எப்படி தெரிந்தது என ஆச்சரிய பட்டேன், நிகழ்ச்சி முடிந்து வெளில வந்து கேட்டால் 'எனக்கு எப்படி தெரிந்தது' என அவரே வியந்துதான் ஹைலைட் !! (ஒரு வேளை மைன்ட்வாய்ஸ் ரீட் பண்ண தெரியுமோ...?!)

                          இணையதளம் துவக்கம் - M.L.A, விசாலினி,செல்வகுமார் அண்ணா

தொடர்ந்து விழா தலைவர், 'பசுமை விடியல்' இணைய தளத்தினை தொடங்கிவைத்தார். தளத்தினை பார்த்தவர் pages ஒவ்வொன்னும் பார்த்து 'இது என்ன, இது எப்படி' என்று கேட்டு, 'இந்த லிங்கை எனக்கு மெயில் பண்ணிடுங்க' என்று அருகில் இருந்த உதவியாளரிடம் ஐடியை என்னிடம் கொடுக்கசொல்லி சொன்னார்.

பிறகு சட்டுன்னு செல்வகுமார் அண்ணன், 'கௌசல்யா நீ எழுந்து பசுமை விடியல் பத்தி சில வார்த்தைகள் சொல்'லுனு சொல்லிட்டார். சத்தியமா இதை நான் எதிர்ப்பார்க்கல, சும்மா கூட்டத்தில கோவிந்தா போட்டுட்டு இருந்த என்னை தனியா பேச சொன்னா எப்படி ? அதுவும் எம் எல் ஏ முன்னாடி, எத்தனை நாள் பிளான் பண்ணினாரோ தெரியல, நல்லா மாட்டி விட்டுட்டார், அப்புறம் ஏதோ ஒரு வேகத்துல கடகடன்னு ஒப்பிச்சிட்டு வந்துட்டேன். (என்ன பேசி இருப்பேன்னு இப்பவும் யோசிச்சு பார்க்கிறேன் 'ம்ஹூம் சுத்தம், நினைவே இல்ல')என் பேச்சை பொறுத்துக்கொண்ட நட்புகளின் சகிப்புத்தன்மை ரொம்ப பெரியது...!!

சுட்டிப்பெண்ணுக்கு மரியாதை 


விசாலினிக்கு கேடயம் ஒன்று 'தமிழ் இணைய வலைபதிவர்கள்' சார்பில் வழங்கப்பட்டது...அவளை பற்றி அவங்க அம்மா, சட்டமன்ற உறுப்பினரிடம் விவரமாக எடுத்து சொல்லவும், மிக ஆச்சர்யபட்டவர் "நம்ம சி எம் பெண் குழந்தைகளுக்காக நிறைய செஞ்சிட்டு வராங்க,விசாலினி பற்றி சொன்னால் சந்தோசபடுவாங்க,பாராட்டுவாங்க,  கண்டிப்பாக இவளது திறமையை உலகம் அறியச் செய்ய நிச்சயம் சி எம் கிட்ட கொண்டு போவேன்" என்றதும் ஒரே கைதட்டல் !! இதை எதிர்ப்பார்த்து தானே பதிவர்கள் நாங்கள் அனைவரும் குழுமி இருந்தோம் !!


விசாலினி பற்றி அவங்க அம்மா நிறைய சொன்னாங்க...(அவ்வளவையும் சொல்லனும்னா ஒரு தொடர் பதிவு போடணும்...!!)அவளின் பெற்றோர்கள் இவளுக்காக படும் பாடுகள், எடுக்கும் பிரயாசங்கள், செலவு பண்ணும் தொகை எல்லாமே வேறு யாரும் கற்பனை செய்ய கூட இயலாதவை !! இவளுக்காக பெரிய பை நிறைய பைல்கள், போட்டோ ஆல்பம், சான்றிதல்கள் என்று வைத்திருக்கிறார்கள்...இப்பவும் தொடர்ந்து சில கோர்ஸ்கள் படித்து வருகிறாள்...ஒரு தேர்வுக்கு இரண்டு பேப்பர், இதில் ஒரு பேப்பர் தலா ரூபாய் 80,000 என கட்டி இருக்கிறார்கள், இரண்டில் ஒரு பாடத்தில் தோற்றுவிட்டாலும், மொத்தமாக 1,60,000 போய்விடுமாம். என் போன்ற சாதாரண தாய் இப்படிதான் பணத்தை பற்றி யோசிப்பாள் ஆனால் அவர்கள் செலவழித்து கொண்டே இருக்கிறார்கள்...!! பெண்ணின் திறமையை பட்டை தீட்டி கொண்டே இருக்கிறார்கள்...!!


சட்டமன்ற உறுப்பினரின் எளிமை 


எந்த கட்சியாக இருந்தாலும் அரசியல்வாதி என்றால் மக்களுக்கு(என்னையும் சேர்த்துதான் ) சிலபல  புரிதல்கள் இருக்கின்றன. ஆனால் இவரை பொறுத்தவரை அங்கே இருந்த ஒரு மணி நேரமும் (விழா முடிந்ததும் சென்னை ரயிலை பிடிக்கவேண்டிய அவசரம் வேறு ) எங்களில் ஒருவராக இருந்தார். இவரின் குணம் தெரிந்து தான் செல்வகுமார் அண்ணன் எங்களிடம் அறிமுகம் படுத்திவைக்க 'இப்படி தவித்தாரா ?' என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. மக்களோடு மக்களாக பழகும் இத்தகைய குணம் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் இருந்து விட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்...!?

'கின்னஸ் சாதனைக்காக ஒரே நாளில் இத்தனை மரங்கள் நடவேண்டும் என்ற ஒரு யோசனை இருக்கிறது, அப்போது 'பசுமை விடியல்' இயக்கத்தை சேர்த்து கொள்கிறோம்' என்றார். அவரின் ஆர்வத்தை மிக வியந்தேன்...தீமை விளைவிக்கும் பிளாஸ்டிக் (துகள்களாக்கி)வைத்து சாலைகள் அமைக்கும் பணியை அரசு தொடங்கிவிட்டது என பகிர்ந்துகொண்டார். நாங்கள் அதற்கு வாழ்த்து சொன்னோம். சில கேள்விகள் கேட்டோம், ரொம்ப கேஷுவலாக பதில் சொன்னார்...'விழா முடிந்ததா நான் கிளம்பலாமா' என கேட்டு அனுமதி(!) கொடுத்த பின் தான் கிளம்பினார்.

மரக்கன்றை செல்வகுமார் அண்ணனிடம் இருந்து இவர் பெறும்போது விசாலினியை அழைத்து "நான் உன்னைவிட ரொம்ப சின்ன பையன்,நீதான் பெரியவ, உன் கையால் தொட்டு கொடு" னு சொல்ல அனைவரின் முகத்திலும் பிரகாசமான புன்னகை !


மரக்கன்றை அதே இடத்தில் நன்றாக நட்டு பேணி வளர்க்க வேண்டும் என்று உதவியாளரிடம் சொன்னார்.அந்த செண்பக மரம் பூத்துகுலுங்கி மணம் வீசும் நாள் அன்று பதிவர்களான நம்மை அம்மரம் நிச்சயம் வாழ்த்தும்...! 

மிக சிறப்பாக விழா நடைபெற பேருதவி புரிந்த மதிப்பிற்குரிய சட்டமன்ற உறுப்பினர் திரு.இசக்கி சுப்பையா அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகளை இப்பதிவின் வாயிலாக தெரிவித்து கொள்கிறேன்.

பின்குறிப்பு

தொடரும் பதிவு ஒன்றில் விசாலினியை பற்றியும் , வந்திருந்து வாழ்த்திய பதிவுலக நட்புகள் பற்றியும், ஜெயா டிவி, சன் டிவி, ராஜ் டிவி, விண் டிவி, மக்கள் டிவி, மற்றும் மீடியாக்கள் பற்றியும் சிறிது பகிர்கிறேன்..
 



புதன், ஜனவரி 4

அன்பின் இணைய உறவுகளே...!



அனைவருக்கும் வணக்கம்.

நல்லதொரு செயல், சாதனை எங்கே யாரால் நிகழ்த்தப்பட்டாலும் உங்களால் பாராட்டப்படும், போற்றப்படும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் தான் நேற்றைய பதிவு. என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்து கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் !

நல்ல எண்ணம் கொண்ட நெஞ்சங்கள் ஒன்று சேர்ந்தால் இன்னும் நிறைய செய்யலாம், சாதிக்கலாம் என்கிற உத்வேகத்தை உங்களின் ஒத்துழைப்பு நிரூபித்தது. அடுத்து ஒரு நிகழ்வு இதை தொடர்ந்து நடத்தணும் என்று எண்ணி இருந்தோம் ஆனால் அது இவ்வளவு சீக்கிரமாக நிறைவேற போகிறது என்று இன்று காலையில் கூட எண்ணவில்லை...

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக ஒரு இணையதளம் தொடங்க போவதாக ஒரு பதிவில் குறிப்பிட்டு இருந்தேன்...! அதன் தொடக்க விழாவை பதிவர்களின் துணையோடு செய்வதாகவும் மற்றும் இந்தியாவின் விடிவெள்ளி சிறுமி.விசாலினி அவர்களை பதிவர்கள் இணைந்து கௌரவிக்க வேண்டும் எனவும் அத்துடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்க்காக பதிவர்கள் கையால் 'மரம் நடுதல்' என்கிற விழிப்புணர்வு ஒன்று என அனைத்தையும் சேர்த்து ஒரே நிகழ்வாக நிகழ்த்த முடிவு செய்திருந்தோம்.....

ஒரு பத்து நாளுக்கு முன்பே இணையத்தில் இதனை செய்தியாக பகிர்ந்து, பின் அழைப்பிதழ் ஒன்றின் மூலமாக அனைவரையும் அழைக்க வேண்டும் என பெரிய எதிர்ப்பார்ப்புடன் இருந்தோம்.....

ஆனால்

உடனே இந்த நிகழ்வை நாளையே நடத்தக்கூடிய அவசியம் ஏற்பட்டு விட்டது... அதற்கு உங்களின் ஆதரவையும், வாழ்த்தையும் எதிர்ப்பார்கிறேன்...

மூன்று முக்கிய நிகழ்வுகள் 

1. பதிவுலக உறவுகள் ஒரு நான்கு பேர் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்க்கு என்று ஒரு இணையதளம் ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறோம்...இதன் மூலம் பல விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள பட இருக்கின்றன...தளத்தின் பெயர் 'பசுமை விடியல்' 


பசுமை போராளிகள் 

செல்வகுமார்
பிரபு கிருஷ்ணா 
சூர்யபிரகாஷ் 


(தளத்தை பற்றிய விரிவான விவரங்கள் இனி தொடரும் பதிவுகளில் )

2.இந்தியாவின் விடிவெள்ளி விசாலினியை கௌரவிக்கும் விதமாக பதிவர்களின் சார்பில் நடக்க போகும் இந்த விழாவிற்கு திரு இசக்கி சுப்பையா சட்டமன்ற உறுப்பினர் (அம்பாசமுத்திரம்)  அவர்கள் தலைமை ஏற்று நடத்த இருக்கிறார். நம் அரசின் பார்வை இனி பட தொடங்கி விடும் என்றே எண்ணுகிறேன்...நம்மால் இயன்ற மேலும் பல வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்போம். அது நமது கடமை அல்லவா...?

3 . பசுமை விடியலின் முதல் விழிப்புணர்வு பணியாக விழாவிற்கு வர இருக்கின்ற பதிவுலக நண்பர்களின் கையால் மரங்கள் நடப்பட்ட இருக்கிறது. 

இவை எல்லாம் நல்ல முறையில் நடைபெற உங்கள் அனைவரின் ஆசிர்வாதங்களையும், வாழ்த்துகளையும் வேண்டுகிறோம்.


மிக குறுகிய நேரத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டிருக்கின்றன என்பதால் எல்லோரையும் தனிப்பட்ட முறையில் அழைக்க இயலவில்லை...இவ்விழாவினை குறித்த செய்தியை முகநூலிலும், ட்விட்டரிலும் நண்பர்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அனைவரும் அவசியம் கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டுகின்றோம்.

விழாவிற்கு வருகை தருபவர்கள் வசதிக்காக,
எங்களை தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்

சங்கரலிங்கம் - 9597666800




பிரியங்களுடன் 
கௌசல்யா