குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஆகஸ்ட் 13

குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு தேவை...ஏன் ? சிறு அலசல்

அற்புதமான,உயர்ந்த கலாசாரம் பண்பாடு கொண்டவர்கள்  நாம்  என்று பெருமை பேசும் இங்கேதான் குழந்தைகளின் மீதான பாலியல் கொடுமைகள் மற்ற நாடுகளை விட மிக அதிகமாக இருக்கிறது,  மொத்தம் 53% குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்.  அதாவது இரண்டில் ஒரு குழந்தை இக்கொடுமைக்கு ஆளாகிறது!? இது எத்தகைய மோசமான நிலை, குழந்தைகள் நன்றாக வாழமுடியாத பாதுகாப்பற்ற ஒரு நாடு வல்லரசு கனவு காண்கின்றது.   இக்கொடுமைகள் நிகழ என்ன காரணம் என விவாதித்துக் கொண்டிருப்பதை விட இனி அவ்வாறு நடக்காமல் நம் குழந்தைகளை காப்பாற்றுவது தான் முக்கியம். ஆனால்   மனிதனின் மனபிறழ்வு, வளர்ப்பு  முறை, சிதைந்துவிட்ட இன்றைய குடும்ப அமைப்பு, பொருளாதாரத்துக்கு  பின் ஓடும்  பெற்றோர்கள், திரைப்படம், இணையம் போன்ற ஊடகங்கள், சந்தர்ப்பச் சூழல் என்று பல காரணங்கள் இருக்கும் போது  'பண்பாடு கலாசாரம் சீரழிந்து விட்டது' என்ற ஒற்றை வரியில் நாம் இப்பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடுகிறோம். 

பாலியல் துன்புறுத்தல் குறித்த சில புள்ளிவிவரங்களை பார்க்க நேர்ந்தபோது குழந்தைகளின் மீதான  கழிவிரக்கம் மேலும் அதிகரித்து மனம் பதறுகிறது.   

* குழந்தைகள் மீதான 89 சதவிகிதம் குற்றங்கள் உறவினர்கள், நண்பர்கள் என நன்கு அறிமுகமானவர்களாலேயே நடத்தப்படுகின்றன.

* ஒருமுறை வன்முறைக்கு ஈடுபடுத்தப்படும் குழந்தைகளில் 87 சதவிகிதம் பேர் மீது மீண்டும் மீண்டும் வன்முறை தொடர்கிறது.

* இவர்களில் 5-12 வயதுக்குள் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 42.06 சதவிகிதம்.

* வன்முறைக்கு  உள்ளாகும் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை 6 சதவிகிதம் அதிகம்.



இந்த விவரங்கள் வெளிப்படையாக தெரிய வந்தவை மட்டுமே, வெளியில் வராத தெரியாத கொடுமைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடும். இந்த கொடுமைகளை தடுக்க நாம் என்ன செய்தோம், என்ன செய்யப் போகிறோம் ?! ஒவ்வொன்றிற்கும் அரசாங்கத்தை குற்றம் சொல்லிக்கொண்டு இருப்பதைப் போல இதற்கும் சொல்லிக் கொண்டிருப்பதை விட பெற்றோர்கள் தான் இதற்கான முயற்சியை மேற்கொள்ளவேண்டும்.  முக்கியமாக தங்களின்  உடலை பற்றிய புரிதல் குழந்தைகளுக்கு தெரிய வேண்டும். அப்போதுதான் உறவுகள்/அந்நியர்கள் அத்துமீறும் போது, (அசட்டையாக) அனுமதிக்காமல் தடுக்க தங்களால் ஆன முயற்சியை எடுப்பார்கள். 

பாலியல் கல்வி  அவசியம்

பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம் என்பதை ஏற்றுக்கொண்டாக வேண்டிய காலக்கட்டம் இது. பாலியல் கல்வி என்றதும் படித்தவர்களே முகம் சுளிக்கிறார்கள். ஆனால் பாலியல் கல்வி என்பது உடலுறவை பற்றி மட்டுமே சொல்லிக் கொடுப்பது அல்ல என்பதை புரிந்துக் கொள்ள தவறிவிடுகிறார்கள். படம் வரைந்து பாகங்களை குறி என்பதை போன்றதும்  அல்ல பாலியல் கல்வி. ஆண் பெண் உடல் அமைப்பு, உடல் உறுப்புகள் வளர்ச்சி , ஹார்மோன் சுரப்பால் ஏற்படும் மாற்றங்கள், பெண்ணின் மாதவிடாய், ஆணின் விந்து வெளியேற்றம், உறுப்புகளின் சுத்தம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு, .....என்று பல இருக்கின்றன. இவைகளை அறிவியல் ரீதியில் படித்து தெளிவது அவசியம். பேசாப் பொருளா மறுக்கப்பட்டத்தன் விதியை மாற்றித்தான ஆகவேண்டும்.

பாலியல் கல்வியை வீட்டில் இருந்தும்  தொடங்கலாம். உதாரணமாக பெண்ணின் மாதவிடாய் என்பது அச்சமூட்டக்கூடியதோ, அருவருப்பானதோ அல்ல அது இயல்பான ஒரு இயற்கை  நிகழ்வு என்பதை டீன்ஏஜ் பெண்களுக்கு புரிய வைப்பது அவசியம், இதை  தனது மகளுக்கு சொல்லவேண்டியது ஒவ்வொரு தாயின் கடமை. அதேபோல் ஆணுக்கும் பெண்ணின் மாதவிடாய் பற்றி தெரிந்திருப்பது நல்லது. அந்த நாட்களில்  பெண்ணின் அப்போதைய  மனநிலை , உடல்   அவஸ்தைகளுக்கு ஏற்றபடி பெண்ணின் உடனிருக்கும் சகோதரன், காதலன், கணவன் போன்றோர் புரிந்து நடந்து கொள்ள இயலும்.    

அதுவும் தவிர , பாலியல் குறித்த புரிதல் இருந்தால் தான்  காதல்  ஒரு உணர்வு என்பதும் பருவ வயதில் வரும் காதல்  பக்குவமான ஒன்றா அல்லது வெறும் இன கவர்ச்சியா என்பதையும் அப்போதுதான் அவர்களால் பிரித்துணரமுடியும். அதன் பிறகே அதற்கு ஏற்றார்ப் போல் தங்களை காத்துக் கொள்ள முடியும்.

சில தவறான புரிதல்கள்

நம் சமூகத்தில் காலங்காலமாக இருக்கும்  சில பழக்கங்களை தற்போது மாற்றினால் நல்லது.  குறிப்பாக சிறு குழந்தைகளின் முன் பெற்றோர் இவ்வாறுதான் நடந்துக் கொள்ள வேண்டும் என வரையறுத்துக் கொண்டதை சொல்லலாம்.

* தாய் உடை மாற்றிக் கொண்டிருக்கும் போது தற்செயலாக அங்கே வரும் குழந்தையிடம் ' அம்மா டிரஸ் பண்ணிட்டு இருக்கேன்ல நீ பாக்கக்  கூடாது வெளில போ' என குரலில் கடுமையுடன் சொல்வதுண்டு.  இது மிக தவறு. 'நான் என்ன பண்ணேன்,  அம்மா ஏன் இப்படி கோபமாகத்  துரத்துகிறாள்' என்று முதலில் குழம்பும், பிறகு 'அப்படியென்ன இருக்கு, நாம பார்த்தா என்னாகிவிடும்'  என்று யோசிக்கும். உடை மாற்றி  வெளியில் வரும் அம்மாவை இத்தகைய கேள்விக்களுடன் ஏறிட்டுப் பார்ப்பது சரியல்லவே. மாறாக அறைக்கு உள்ளே வந்த குழந்தைக்கு எதிர்ப்புறமாக திரும்பிக்  கொண்டு உடையை மாற்றலாம். ஆபாசமாக தெரியாமல் பிறர் அறியாவண்ணம் எவ்வாறு உடை மாற்றுவது என்பது எல்லா பெண்களுமே அறிந்த ஒன்றுதானே.  அப்படி இருக்கும் போது சிறுகுழந்தைகள் முன்பு மாற்றினால் தவறாகப் போய்விடும் என்று எண்ணுவது ஏற்புடையது அல்ல. சொல்லப்போனால் துணி விலகி உடல் தெரிவதை   அவர்களே கவனிக்காமல் இருக்கக்கூடும், ஆனால் பார்க்கக்  கூடாது என்று நீங்கள் வலியுறுத்தும் போதுதான் பார்த்தால் என்ன என்ற கேள்வியே எழும்.

* தற்போது வரும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பார்க்காமல் முற்றிலும் தவிர்ப்பதே நல்லது என்று தோன்றுகிறது.   குடும்பத்துடன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் போது ஆபாசமாக ஒரு காட்சி வந்துவிட்டால் உடனே வேகவேகமாக ரிமோட் எடுத்து சேனலை மாற்றும் வழக்கம் அநேகமாக எல்லா பெற்றோருக்கும் உண்டு. ஆனால் இது தேவையில்லை என்கிறேன் நான். அவசரப் படாமல்  இயல்பாக இருங்கள், அவர்கள் இதை சாதாரணமாகப்  பார்க்கலாம் அல்லது அவர்களாக முகத்தை வேறுப் பக்கம் திருப்பிக் கொள்ளலாம்  அல்லது அவ்விடத்தை விட்டு எழுந்துச் செல்லலாம். அவ்வாறு அவர்களாக அந்த காட்சியை தவிர்க்குமாறு விட  வேண்டுமே தவிர நாமாக வலியுறுத்திப்  பார்க்க தடுக்கும் போது 'அது என்னவாக இருக்கும், அதை நாம் ஏன் பார்க்கக் கூடாது, பார்த்தால் என்ன தப்பு' என்று சிந்தனை முழுவதும் அந்த காட்சியை சுற்றியே சுழலும். இறுதியில் அதே காட்சியை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வெளி இடத்திலோ, நண்பர்கள் மூலமோ பார்த்தப் பின்பே  அவர்களின் மனது திருப்தி அடையும்.

* பெற்றோர்கள் தங்களின் பரஸ்பர அன்பை  குழந்தைகள் முன் வெளிக்காட்டக்கூடாது என்பார்கள், அதுவும்  சரியல்ல. இருவரும் லேசாக அணைத்துக் கொள்வதில் பெரிய தவறொன்றும் இல்லை. கட்டிப்பிடிப்பது அன்பை வெளிப்படுத்தும் ஒரு செயல் அவ்வளவே . குழந்தைகளை நாம் கட்டிப் பிடித்தால் அதிக மகிழ்ச்சி அடைவார்கள். அதே போன்று அம்மாவும் அப்பாவும் ஒற்றுமையாக அன்பாக இருக்கிறார்கள் என்று தான் புரிந்துக் கொள்வார்கள். இன்னும் சொல்லப் போனால் இன்றைய மன அழுத்தம் கொடுக்கும் வாழ்க்கை முறையில் இது போன்ற செயல்கள் அதிக பிணைப்பை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கும் தெரியட்டுமே பெற்றோர்கள் நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் அன்பானவர்கள் தான் என்பது. இதை பார்த்து வளரும் குழந்தைகள் நிச்சயம் அன்பானவர்களாகத் தான் இருப்பார்கள்.

மேலே  குறிப்பிட்ட மூன்று விசயங்களும் குழந்தைகளிடம் வலுக்கட்டாயமாக வற்புறுத்தி திணிக்க வேண்டியவை என்று குறிப்பிடவில்லை, மாறாக இயல்பாக நடப்பதை அப்படியே விட்டுவிடுங்கள், பெரிதுப் படுத்த வேண்டாம் என்றே கூறுகின்றேன்.

 வீட்டுக்கு வீடு இணையமும், எல்லோர் கையிலும் மொபைல் போனும் வந்துவிட்ட காலத்தில்  எத்தகைய ஆபாசக் காட்சியையும் ஒரு நொடியில் கண்டு விட  முடியும். பெற்றோர்கள் தடுக்கும் ஒவ்வொன்றையும் அவர்கள் வேறு இடத்தில் கண்டிப்பாகத்  தேடிக் கொள்வார்கள் என்பதே இன்றைய நிதர்சனம்.

மறுக்கப்படும் அனைத்துமே ஒரு சமயத்தில் தனது கட்டுக்களை உடைத்துக் கொண்டாவது  பெற்றேத்தீரும் . அதற்கு தேவை தகுந்த ஒரு சந்தர்ப்பம்... சந்தர்ப்பம் தானாக அமையவில்லை என்றால் அமைத்தும் கொள்வார்கள் இன்றைய குழந்தைகள்.

இவ்வாறு  பாலியல் சம்பந்தப்பட்ட பேச்சுக்கள், சிறு விசயங்களை வலிந்து தடுப்பதை விட அவை என்னவென்றும் வயதுக்கு தகுந்தபடி கொஞ்சங்கொஞ்சமாக சொல்லித்தரலாம். கை கழுவிவிட்டுதான்  சாப்பிட வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதை போல ...

சிறு குழந்தைகளின் பாலியல் தொடர்பான கேள்விகள் 

பெண்களின் மார்பக வளர்ச்சி, உடலுறவு, மாதவிடாய், நாப்கின், ஆணுறை, சுய இன்பம், கற்பு, குழந்தைப் பிறப்பு பற்றியெல்லாம்  குழந்தைகளுக்கு பலவித சந்தேகங்கள் எழும், கேள்விகள் கேட்கிறார்கள். எதையோ ஒப்புக்கு சொல்லி மழுப்பாமல் உண்மையை சற்று எளிமையாக வயதிற்கு ஏற்றார் போல சொல்வது நல்லது . தொலைக்காட்சியில் ஜியாக்கிரபி சேனலே ஓரளவு சொல்லிவிடுகிறது, அதில் மிருகங்கள், பறவைகளின் வாழ்க்கை, சேர்க்கைகளை தெளிவாகவேப் பார்த்துவிடுகிறார்கள். அதை அப்படியே  மனிதர்களுக்கு பொருத்தி எப்படி சொல்வது என்பதுதான் நமது வேலை என்பதால் மிகவும் சுலபம்.  உங்களிடத்தில் திருப்தியான பதில் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் அடுத்துச் செல்லும்  இடம் நண்பர்கள். அவர்களும் இவர்கள் வயதுதான் என்பதால் அங்கேயும் தெளிவு கிடைக்காது, ஆனால் பதில் கிடைக்கும் அதுவும் அரைகுறையாக! முற்றிலும் மாறாக சொல்லக் கூடிய பதிலில் பெரிய ஆபத்து  ஒளிந்திருக்கும். இது பெரிய சிக்கல்.

இன்றைய  குழந்தைகள் மிகவும் வேகமானவர்கள், எல்லாவற்றையும் கூகுளில் தேடுவதை போல இதையும் தேடலாம், மிக அபத்தமான ஆபாசமான பக்கத்திற்கு செல்லக் கூடிய வாய்ப்புகள்  அதிகம். எச்சரிக்கை.

அதனால் நீங்களே அவர்களுக்கு தெளிவுப்படுத்துங்கள். அதிக அழுத்தம் கொடுத்தோ, சீரியசாகவோ சொல்லவேண்டியது இல்லை,எளிய மொழியில் இயல்பாக ஜஸ்ட் லைக் தட் மாதிரி சொல்லுங்கள். பெரிய பெரிய விளக்கங்கள் கொடுத்து அவர்களை குழப்பாமல், தத்துப்பித்துனு உளறாமல் பதில் சொல்வது முக்கியம். ஒரு வரியில் பதில் இருந்தாலும் போதும்.

ஆண், பெண் இரு குழந்தைகளுக்கும்  ஒருவருக்கு மற்றவரின் மீது ஒரு ஈர்ப்பு இருக்கும், அவனுக்கு ஏன் அப்படி, அவளுக்கு ஏன் அப்படி இருக்கிறது என்ற சந்தேகங்கள் தோன்றும். எதிர்பாலினத்தவரை அதிகமாக பிடித்தும், சுத்தமாக  பிடிக்காமலும் இருக்கும். இதை பற்றி எல்லாம் அவர்களிடம் சகஜமாக பேசாமல் நாம் தெரிந்துக் கொள்ள முடியாது. அவர்கள் கேள்வி கேட்டால் அதை அசட்டை செய்யாமல் குழந்தைகளிடம் பேச கிடைத்த ஒரு நல்ல சந்தர்ப்பமாக  எண்ணிப் பேசத் தொடங்குங்கள். குழந்தைகளிடம் எதிர்பால் குழந்தைகளை எப்படி அணுகுவது என்றும்,  உடலமைப்பு தான் வேறு வேறே தவிர  அவர்களும் உங்களை போன்றவர்கள் தான். யாரும் யாருக்கும் குறைந்தவர்களும் அல்ல உயர்ந்தவர்களும் அல்ல என்றும்  சொல்லுங்கள்.

இறுதியாக,

திருமணம் முடிந்து 30 வருடம் கழிந்த பின்பும் உடலுறவில் உச்சம்(கிளைமாக்ஸ்) என்பது என்ன என்பது பலருக்கும் தெரிவதில்லை. அது என்னவென்று தெரியாமலும் அதன் அவசியம்  புரியாமல் தவற விடுவதும், தவறான உறவுகள் ஏற்பட ஒரு காரணமாக இருக்கலாம் என்பது  நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்??

முக்கியமாக ஆணின் சிறு வயதிலேயே இந்த விதத்தில் இன்ன வயதில் இன்ன வயது பெண்ணுடன் தான் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும்  மற்றவை எல்லாம் மிக தவறானவை என்பதையும் புரிய வைத்துவிட்டோம் என்றால் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்பதன் சதவீதம்   குறையலாம். பாலியல் கல்வியின் மூலம் இது சாத்தியமாக வாய்ப்பு இருக்கிறது, சிறு வயதில் இருந்தே  இக்கல்வியை பயிற்றுவிக்க வேண்டியது அவசியம். வீட்டில் இருந்தே  தொடங்கலாம், பாலியல் கல்வியை வாழ்க்கைக்கான கல்வி என்று ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும்.

எனவே,

சிறு குழந்தைகள் பாலியல் தொடர்பான கேள்விகள் கேட்டால் உடனே பெரியவர்களின் பதில் நீ சின்ன பையன்/பொண்ணு இப்போ சொன்னா ஒன்னும் புரியாது வளர்ந்த பிறகு தானாக தெரியும், அதுவரை இதை பற்றி பேசவே கூடாது , ரொம்ப தப்பு ' என்று இனியும் சொல்லாதீர்கள்.

வளர்ந்ததும் எல்லாமே தானாக புரிந்துவிடாது, அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் அல்லது கற்றுக் கொடுக்கப்பட  வேண்டும். இவை இரண்டுக்குமே நம் சமூகத்தில் வழியில்லை. பாலியல் விழிப்புணர்வு இல்லாத சமூகம் சீரழிந்து தான் போகும் என்பதை கண்கூடாக ஊடகங்களில் கண்டு வருந்தி கடந்து போவதுடன் நமது சமூக கடமை அனேகமாக முடிந்தே விடுகிறது என்பது பெற்றோர்களாகிய நமக்கு மிக பெரிய அவமானம் !!?


* * * * * * * * * * * * * * *

நண்பர்களே இந்த தலைப்பை  சார்ந்து தொடர்ந்து எழுத இருக்கிறேன்...குறைகள் இருப்பின் தெரிவியுங்கள், மேலும் இதை பற்றிய செய்திகள், தகவல்கள் கொடுத்தாலும் உதவியாக இருக்கும்.

எனது இந்த கட்டுரை Lawyersline  மாத இதழில் கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது.

நன்றி.

பிரியங்களுடன்
கௌசல்யா

திங்கள், ஜனவரி 24

ஒரு அலசல்......! குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு !


Child abuse - Sexual attraction to children


முந்தைய பதிவில் குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு என்பதை பற்றியும், அதில் இருந்து நம் பிள்ளைகளை எப்படி பாதுகாத்துக்கொள்வது  என்பதைப்  பற்றியும் சொல்லி இருந்தேன். அதற்கு பலரும் பின்னூட்டங்களின் மூலம் தங்களதுக்  கருத்துக்களைக்  கூறியிருந்தனர்.அப்படி வந்தவை எனக்கு வெறும் பின்னூட்டங்களாகத்  தெரியவில்லை...ஒவ்வொருவரின் ஆழமான உணர்வுகளாக வெளி வந்திருந்தன....அதில் ஒரு இரண்டு  பின்னூட்டங்களை பற்றி மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

அதில் சகோதரர்  ஜோதிஜி அவர்கள் இதற்கு கடுமையான தண்டனைகள் என்று இருந்தால் தவறுச்  செய்ய என்னும் நபர்கள் அச்சம் கொண்டு இந்த செயலைத்  தவிர்ப்பார்களா என்று ஒரு கேள்வி எழுப்பி இருந்தார். மேலோட்டமாகப்  பார்க்கும் போது சரி என்றுத்  தோன்றினாலும், சமீபத்தில் அரேபிய நாட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்வை கேட்டறிந்த பின் தண்டனைக்கு பலன் இருக்குமா என்று யோசிக்க வேண்டியதாகிவிட்டது. கடுமையான தண்டனைகளுக்கு பெயர் பெற்ற அரேபிய நாட்டிலேயே இத்தகைய குற்றம் சாதாரணமாக நடைபெறும்  போது தண்டனை மட்டுமே இதற்கு ஒரே தீர்வாக இருக்க முடியாது என்றே தோன்றுகிறது. தவிரவும் நம்ம நாட்டில் இச்செயலுக்கு, 

*  தண்டனை என்று பார்த்தால் பெண்கள் பாதிக்கபட்டால் கொடுக்கப்படும் அதே 7  ஆண்டு முதல் 10  ஆண்டுகள் சிறைவாசம்தான்  குழந்தைகள் பாதிக்கப் பட்டாலும் என்கின்றனர்...?! 

இது மட்டும் போதாது இந்த விசயத்தில் தண்டனை இன்னும் கடுமையாக்கப்படணும்.   

2002  வது ஆண்டின் கணக்கின் படி 89 ,000 குழந்தைகள் பாதிக்க பட்டுள்ளனர். இந்த கணக்கு வெளியில் வந்தவை மட்டுமே, வராதவை எத்தனை ஆயிரமோ....?! 

என்  மனதை மிக பாதித்த மற்றொரு பின்னூட்டம் சகோதரர் அப்பாதுரை அவர்கள் கொடுத்து இருந்தார்.

//பெண்களைப் போலவே, maybe more often and discreetly, ஆண்கள் இளம் வயதுப் பாலியல் கொடுமைகளில் பாதிக்கப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன். இதற்கு மதம், கலாசாரம், அறிவு (அறியாமை), சூழல் என்று பல காரணங்கள். பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்படுத்தும் வக்கிரங்கள் கற்பனை செய்யக்கூட முடியாத அளவுக்கு வடிவெடுக்கின்றன. பாலியல் வக்கிரங்களிடையே வளர்ந்தவன் என்ற முறையில் இவை சாகும் வரை அழியாத வடுக்கள் என்று அனுபவத்தோடு சொல்வேன். அறியாத வயது என்றாலும், அறிந்த பின் தொலையாத கொடுமை. எத்தனை எழுதினாலும் எச்சரித்தாலும் வீட்டுப் பூனை பாலைத் திருடிக் குடிக்கும் பொழுது ஒன்றுமே செய்ய முடியாது. புதைந்து போன எலும்புகளை, நினைவுகளைத் தோண்டிய, தூண்டிய பதிவு.//

ஒவ்வொரு வரிகளும் வேதனைத்  தாங்கி இருந்ததை உணரமுடிந்தது. ஆண் குழந்தைகளும் அதிகமாகப்  பாதிக்கபடுகிறார்கள் என்பதை இவரது பின்னூட்டம் ஊர்சிதப் படுத்தியது.  

இந்த பதிவிற்கு மிக நெருங்கிய சிறுகதை ஒன்றை இவர் எழுதி இருக்கிறார்.....மனம் நடுங்கச்  செய்யக்கூடிய  ஒரு விஷயத்தை கருவாக எடுத்து சிறிதும் ஆபாசம் இன்றி எழுதி இருக்கிறார். தயவுசெய்து அதை அனைவரும் படியுங்கள்... 

அந்த கதை படிக்க  இங்கே செல்லுங்கள்.  



மற்றொரு வேதனையான அனுபவம் ஒன்று 

மேலும் எனது பதிவை படித்து விட்டு ஒரு சகோதரி மெயில் மூலம் தனது இன்றைய நிலையை மிகுந்த துயரத்துடன் எழுதி இருந்தார். மிக பெரிய மடலின் சுருக்கத்தை மட்டுமே இங்கே பகிர்கின்றேன் (அவர்களின் அனுமதியுடன் ) அவரது பெயர் சுசீலா, ஆந்திர மாநில தலைநகரில் வசிக்கிறார், படித்த பட்டதாரி பெண்,  பல்கலைகழகத்தில் படிப்பிற்காக தங்க மெடல் வாங்கியவர், பெரிய கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.   திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தைகள் இல்லை, முக்கியமாக கணவன் மனைவியருக்குள் எது நடக்க வேண்டுமோ அது இன்று வரை நடக்கவில்லை...!? 

காரணம் சிறு வயதில் அந்த பெண் அனுபவித்திருந்த பாலியல் துன்புறுத்தல்கள் ??! நெருங்கிய உறவினர் ஒருவரால் பத்து வயதில் ஏற்படுத்தப்பட்ட கொடுமைகள் இந்த பெண்ணின் மனதில் ஆற்றாமல் வடுவாக இருந்திருக்கிறது. இப்படி வடு ஒன்று இருப்பதை,  முதல் இரவில் கணவனின் முதல் தொடுதலின்  போதுதான் இவரே உணர்ந்திருக்கிறார். ஒவ்வொரு நாள் இரவிலும் கணவனின் அருகாமை என்றாலே உடலில் ஒரு படபடப்பு சேர்ந்து கொண்டு , முகம் எல்லாம் வியர்த்து அலறி அடித்து படுக்கையின் ஓரமாக ஒரு குழந்தை போல் சுருண்டு படுத்துக்  கொள்வாராம். 

ஆரம்பத்தில் இவரது கணவன், புது பெண்தானே போகப்  போக சரியாகி விடும் என்று மனதைத்  தேற்றி கொண்டுள்ளார், மாதக்கணக்கில் தொடரவும், வற்புறுத்தி  மருத்துவரிடம் அழைத்துச்  சென்று உள்ளார். தொடர்ந்த சிகிச்சைகளின் மூலம் உடல் சிறிது தேறி வந்திருக்கிறது, மனமோ அதே பழைய நிலையில் !!? நல்ல வேளை இவருக்கு அமைந்த கணவன் நல்லவராக இருப்பதால் காலப்போக்கில் மனைவி சரியாகி விடுவாள் என்ற நம்பிக்கையில் நாட்களை நகர்த்திக்  கொண்டுவருகிறார்.

இந்த பெண்ணின் மடல் ஒரு உதாரணம் தான் , இது போல் இன்னும் எத்தனையோ.....?? பாவம் ஓரிடம்  பழி ஓரிடம்  என்பது போல், தவறு செய்தவன் எங்கோ நிம்மதியாக இருக்கிறான், இந்த பெண்ணை போன்றவர்கள் வாழ வகையற்று நரகத்தில் உழன்றுக்  கொண்டிருக்கிறார்கள். 

இந்த பிரச்சனை முந்தைய பதிவில் சொன்ன மாதிரி உளவியல் நோய் உள்ளவர்களால் மட்டும் ஏற்படுவது இல்லை. சாதாரணமாக குடும்ப வாழ்வில் இருப்பவர்களும் சில சூழ்நிலைகளில் இந்த பாவத்தைச்  செய்ய நேரிடுகிறது என்பது நிதர்சனம்.  

சூழ்நிலைகள்

*  திருமணம் முடிந்த பின்னர் மனைவி பிரசவத்திற்காக தாய் வீடு சென்ற சமயங்களில்.....

*  விவாகரத்தான கணவர்கள் தனிமையில் இருக்கும் போது.....

*  மனைவி இறந்த சமயங்களில்.....

* மனைவி நோய்வாய்ப்பட்ட சமயங்களில்..... 

*  பணியில் இருக்கும் இல்லாத ஒரு சில வயதானவர்கள் (தனிமை கிடைத்தால்)....

இது போன்ற சூழ்நிலைகளில் இருக்கும் ஒரு சிலர் சந்தர்ப்பம் வாய்த்தால் தவறவேச்  செய்கிறார்கள். தங்களுக்கு வசதியாக சிறுவர், சிறுமிகளை பயன்படுத்திக்கொள்(கொல்)கின்றனர்.

தீர்வு என்ன ?? 

சகோதரர் ரஜின் அவர்கள் இந்த பாதக செயலுக்கு தீர்வு ஒன்றை தனது பின்னூட்டத்தில் சொல்லி இருந்தார். 

//இப்படிப்பட்ட கிராதகர்களை முன்னோக்கும் போதும்,எப்படி எதிர்கொள்ளவேண்டும் என கற்றுத்தருவது அவசியமான ஒன்று,,,

இதை ஸ்பெஷல் கோச்கள்,மனநலமருத்துவர்கள் கொண்டு,பள்ளிகளே வாரமோ,அல்லது மாதம் ஒரு முறையோ வகுப்புகள் நடத்தினால் நன்மை பயக்கும்...
செய்வார்களா?//
  
மிகவும் சரியான யோசனையாக எனக்குத்  தெரிந்தது...பள்ளிகளின்  மூலமாக இந்த பிரச்சனையின் தீவிரத்தை பிள்ளைகள் உணரும்படி அறிவுறுத்த வேண்டும்.  பொதுவாக பெற்றோர்களின் அறிவுரைகளை விட ஆசிரியர்களின் அறிவுறுத்தல் பிள்ளைகளின் மனதில் நன்றாக பதிந்து விடும். தவிரவும் சக மாணவர்களுடன் இது பற்றி அவர்கள் கலந்து பேசிக்கொள்ளவும் எதுவாக இருக்கும்.

நம்  பிள்ளைகள் எந்த வித மோசமான பாதகத்திற்கும் ஆளாகிவிடாமல் அவர்களைப்  பாதுகாத்துக்  காப்பாற்றுவது நம் ஒவ்வொருவரின் கடமை.  அவர்களின் எதிர்காலத்திற்காக சொத்துக்களை சேர்த்து வைக்க காட்டும் தீவிரத்தை, அவர்களின் நிகழ்கால வளர்ப்பிலும் கொஞ்சம் காட்டுங்கள்.  

எதிர்காலச்  சமுதாயம் சிறப்பாக அமைய பதிவுலகத்தில் இருக்கும் நாம் அனைவரும் நம்மால் முடிந்தவரை ஒத்துழைப்புக்  கொடுப்போம்.....

இந்த பிரச்சனைச்  சம்பந்தப்பட்ட பதிவுகளைத்  தேடி எடுத்து படியுங்கள், பலரிடம் இத்தகைய பதிவுகளைக்  கொண்டுப்  போய் சேருங்கள், பிரச்சனையின் தீவிரம் பலரையும் சென்று அடைய உதவுங்கள்.  




படம் - நன்றி கூகுள் 


வெள்ளி, ஜனவரி 21

குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு ! ஏன் ??



செய்திதாள்கள், தொலைகாட்சி, இணையதளம் இப்படி எல்லா இடத்திலும் நம்மை பதைபதைக்கு செய்யும்  ஒரு செய்தி ஒன்று உண்டென்றால் அது " 3  வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது...??!"

ஏன் இந்த மாதிரியான வக்கிரம், அவன் மனிதனே இல்லை, அவன் ஒரு மிருகம்,  அவனை உயிரோட விட கூடாது, உடனே தூக்கில் போடுங்கள் என்று மக்கள் உணர்ச்சிகரமான வார்த்தைகளை வெளிபடுத்துவார்கள். சில நேரம் அதிகபட்சமாக அத்தகையவர்களுக்காக வாதாட வக்கீல்கள் எவரும் முன் வருவதும் இல்லை...மீறி வந்தாலும் பிற வக்கீல்கள் அதை விரும்புவதும் இல்லை, அனுமதிப்பதில்லை. ஆனால் எல்லாம் அந்த செய்தியில் சூடு இருக்கும் வரை தான்...பின்னர் மக்களுக்கு வேறு ஒரு செய்தி வந்துவிடும். 

பல கொடுமைகள் தெரிந்தும், தெரியாமல் நடந்து கொண்டிருந்தாலும்  நம் மக்களின் விழிப்புணர்வு இந்த அளவில் தான் இருக்கிறது. 

மக்களை பொறுத்த வரை குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்புள்ள மனிதர்களைச் சமுதாயத்தில் நடமாட விடுவது ஆபத்து என்பதே. ஒருமுறை இதில் ஈடுபடுபவர்கள் மீண்டும் மீண்டும் அதுபோன்ற வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதுதான் உண்மை. சிறு குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் மிக கவனமாக இருக்கவேண்டிய சூழ்நிலை இது.

சமீபத்தில் கூட சென்னையில் ஒரு வீட்டு ஓனரின் மகன் தங்கள் வீட்டில் குடி இருக்கும் இரண்டு  சிறு வயது குழந்தைகளிடம் இந்த மாதிரியான செயலில் ஈடுபட்டு இருக்கிறான். அவர்களிருவரும் அண்ணன், தங்கை ஆவர். அவர்களின் தாய் காவல் துறையிடம் புகார் செய்ததின் பெயரில் இப்போது சிறையில். அவனுக்காக  யாரும் வாதாடக்கூடாது என்று வக்கீல்கள் முடிவு  செய்து இருக்கிறார்கள்.

கொஞ்ச நாள் முன்பு கூட கோவையில் ஒரு சம்பவம் நடந்ததை யாரும் மறந்திருக்க முடியாது...அதில் சம்பந்த பட்ட ஒருவனை போலீஸ் என் கவுண்டர் செய்தார்கள்  என்பதையும்  அனைவரும் அறிவர். 

மனிதர்களாக பிறந்த இவர்கள் ஏன் இப்படி மனம் மாறி முரண் பட்டு நடக்கிறார்கள் என்பதை பற்றிய ஆய்வுகளை படிக்கும் போது மிகவும் வியப்பாக இருக்கிறது.

உளவியல் மற்றும் மருத்துவம் என்ன சொல்கிறது ?

* இந்த தன்மை பற்றி  உளவியல் அறிஞர்கள் பலவாறு விவரிக்கிறார்கள் . இது பீடோப்பீலியா என்னும் ஒரு வகை உளவியல் நோய்.  இந்த எண்ணங்கள் ஒருவருக்கு வயது வந்தவுடனே வந்து விடுமாம். பெரியவர்களுடன் அத்தகைய செயல்களில் ஈடு பட முடியாதவர்கள் அல்லது அந்த வாய்ப்பு கிடைக்காதவர்கள் இப்படி  குழந்தைகளை பயன் படுத்திகொள்கிறார்கள். 

* மேலும் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களில் ஒரு சிலர் சிறு வயதில் இதே போன்ற ஒரு துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்ககூடும் என்கிறது ஆய்வு.

*  மரபியல் காரணங்களும் இருக்கலாம் !! ஒரு குடும்பத்தில் இத்தகைய மனநிலை கொண்டவர்கள் இருந்திருந்தார்கள் என்றால் அடுத்து வரும் வாரிசுகளிடம் இத்தகைய எண்ணம் வருவதிற்கு வாய்ப்பு அதிக அளவில் இருப்பதாக விஞ்ஞானிகள் கருத்துக்கள் சொல்லி இருந்தாலும், அத்தகைய மரபணு இன்று வரை கண்டுபிடிக்க படவில்லை என்பது நமக்கு ஒரு ஆறுதல். 

* இவர்களை வெறும் குற்றவாளியாக மட்டும் பார்க்காமல் உளவியல் குறைபாடுள்ள நோயாளிகளாகவும் பார்க்க வேண்டும் என்கிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள்.

ஆனால் யதார்த்தம் என்னவென்றால், இத்தகையவர்களை உளவியல் ரீதியாகவும் , மருந்து சிகிச்சைகளின் மூலமாகவும் குணபடுத்தலாம் என்றாலுமே அதற்கு மிகுந்த சிரமப்படவேண்டும், தவிரவும் இத்தகைய இச்சைகளை கட்டுபடுத்த இவர்கள் வாழ்க்கை முழுவதும் மிக கஷ்டப்பட்டு முயலவேண்டும் என்பதே...!? 

யோசியுங்கள் மக்களே !

ஆய்வுகள் எதையும் சொல்லிவிட்டு போகட்டும், ஆனால் பெரியவர்களாகிய நாம் நம்மிடையே சாதாரணமாக நடமாடி கொண்டிருக்கும் இத்தகைய ஆபத்தானவர்களிடம் இருந்து நம் குழந்தைகளை எப்படி காப்பாற்ற போகிறோம் என்பதே இந்த பதிவில் நான் உங்களிடம் எழுப்பும் ஒரு கேள்வி. 

இத்தகையவர்களுக்கு குழந்தைகள் எதிர்க்க மாட்டார்கள் என்பதே ஒரு முக்கிய காரணம். குழந்தைகள் பெரும்பாலும் தங்களது உறவினர்கள், பக்கத்து  வீட்டினர், பள்ளிக்கு அழைத்து செல்லும் நபர்கள் போன்றவர்களாலேயே மிகுந்த பாதிப்புக்கு ஆளாகிறார்கள். 

பாதிக்கப்படும் அனைத்து குழந்தைகளுமே தங்களுக்கு நடந்த கொடுமையை சொல்வார்கள் என்று எதிர்பார்க்க  முடியாது. அப்படி ஒரு வேளை சொன்னால் பெற்றோர்கள் தங்களைத்தான் அடிப்பார்கள் அல்லது திட்டுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக மறைத்து விடுவார்கள். 

ஆண் குழந்தைகள் !

சிலர் நினைக்கலாம் நமக்கு தான் ஆண் குழந்தைகள் ஆச்சே என்று ! பெண் குழந்தைகளுக்கு தான் இந்த பாதிப்பு அதிகம் நேரும் என்றாலுமே ஆண் குழந்தைகளும் இந்த கொடுமைக்கு தப்புவதில்லை.  கயவர்கள்  அந்த நேரத்தில் யாரை எப்படினாலும் பயன் படுத்தி கொள்வார்கள்.  அவர்களது தேவை தற்காலிகமாக தங்களது எண்ணம் ஈடேரனும் அவ்வளவே.  

எதிர்காலத்தில் ?!

இதனால் குழந்தைகள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அடைய போகும் பாதிப்புகள் மிக அதிகம். பாதிக்க பட்ட குழந்தைகள் ஒருவேளை  இதில் இருந்து தப்பித்தாலும் எதிர்காலத்தில் குடும்ப வாழ்வில் ஈடுபடும் போது மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். பல விவாகரத்து பிரச்சனைகளுக்கு பின்னணியில் இந்த பாதிப்பு காரணமாக  இருப்பது சம்பந்த பட்ட ஆண், பெண்ணுக்கே தெரிவதில்லை என்பதுதான் இதில் பெரும் சோகம். 

நம்மால் என்ன செய்ய முடியும் ??

எல்லோர் வீட்டிலும் குழந்தைகள் இருக்கிறார்கள் என்கிற போது இதை படிக்கும் ஒவ்வொருத்தரும் இனிமேலாவது தங்கள் குழந்தைகளின் படிப்பிற்கு காட்டும் அக்கறையை கொஞ்சம் உங்கள் குழந்தைகளின் மேல் காட்டுவது மிக அவசியம். 

* சிறு குழந்தைகளுக்கு குட் டச், பேட்  டச் பற்றி சொல்லி கொடுங்கள். 

* அவர்கள் சொல்லும் எந்த சின்ன விசயத்தையும் காது கொடுத்து பொறுமையாக கேளுங்கள். எந்த குறை சொன்னாலும் அதற்கு திட்டாமல் உற்சாகபடுத்தி முழுமையாக சொல்ல வையுங்கள். முக்கியமாக குழந்தைகள் பொய் சொல்ல மாட்டார்கள் என்பதை நாம் மறக்க கூடாது. 

*  ஆசிரியர்களை பற்றியும் கேளுங்கள்...(எந்த புற்றில் எந்த பாம்போ...?!) 

*   சக மாணவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையும் கேட்டு அறிந்துகொள்ள வேண்டும். 

* பிறர் முத்தமிடுவதை அனுமதிக்க  கூடாது  என்று  சொல்லுங்கள். (நெருங்கிய  உறவினர்களாக இருந்தாலுமே !)  

கட்டாயம் சொல்லி கொடுங்கள் 

டீன் ஏஜ் பிள்ளைகளிடம் நட்பாய் பழகி அவர்களுடன் பேசி அவர்களின் நடவடிக்கைகளை அறிந்து கொள்ளுங்கள். சிறிதளவாவது உடல் அமைப்பை பற்றியும், ஆண் பெண் உறவை பற்றியும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள்  சொல்லி கொடுப்பது காலத்தின் கட்டாயம். மறவாதீர் !!     

இத்தகைய இழி செயலை நாம் கண்டிக்க வேண்டும். இதனை பற்றிய ஒரு விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்...இத்தகைய நபர்களிடம் இருந்து குழந்தைகளை எப்படி பாதுகாத்து கொள்வது என்பதை பற்றி ஒரு விவாதம் கூட பதிவுலகில் நடத்தலாம். 

குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு பிரச்சனை பற்றி நண்பர் பத்மஹரி தனது புத்தகத்தில் விரிவாகவும் தெளிவாகவும் எழுதி இருக்கிறார். அந்த புத்தகத்தை இணையத்தில் படிக்க இங்கே செல்லவும்.


படம் - நன்றி கூகுள்