இணைய நட்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இணைய நட்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜூன் 23

நெல்லையில் உறவுகளின் உற்சாகம் !



கடந்த இரு வாரங்களாக பதிவர் சந்திப்பிற்கான ஏற்பாடுகளை சிந்திக்கவும், செயல்படுத்தவும் நாங்கள் எடுத்த பிரயாசங்கள் பெரிதல்ல என்று நிரூபித்தது நேச நெஞ்சங்களின் வருகை. எத்தனை போன் கால்ஸ், எத்தனை மெயில்கள், சாட்டிங், நேரில் நடந்த சிறு சந்திப்புகள் அனைத்தையும் ஊதித் தள்ளிவிட்டது நண்பர்களின் உற்சாகமும் அவர்கள் கொடுத்த ஒத்துழைப்பும்...!!

எப்போதும் எதையோ தேடி ஓடிகொண்டே இருக்கிற இந்த வாழ்க்கையில் நாம் சற்று இளைப்பாறும் ஒரு சோலைவனம், நல்ல நட்புகளின் இந்த சங்கமம் ...! பதிவர்கள் சந்திப்பு என்றாலும் ஒரு குடும்ப விழா போன்று தாத்தா,அப்பா,அக்கா, அண்ணன், தம்பி, அக்கா,தங்கை, நண்பன்,தோழி என்று பல உறவுகள் ஒன்று சேர்ந்தது எனலாம். அன்று பல உறவுகள் புதிதாய் மலர்ந்தது ஒரு இனிய அனுபவம். 

சிறிதும் முன் அறிமுகம் இல்லாத பதிவர்களை தான் நான் கடந்த வெள்ளிகிழமை அன்று (சங்கரலிங்கம் அண்ணா, சித்ரா, பாபு தவிர்த்து) சந்தித்தேன். இருந்தும் பல காலம் பழகியவர்களை போன்று ஒவ்வொருவரும் நடந்த கொண்ட விதம் மீண்டும் மறு சந்திப்பு என்று வரும் என எண்ண வைத்துவிட்டது.  ஆரம்பம் முதல் முடிவு வரை சிறிதும் இடைவெளி இன்றி சிரிப்பு பட்டாசுகள் வெடித்துக்கொண்டே இருந்தன.....

வந்திருந்து சந்திப்பை பெருமை படுத்திய உறவுகளுக்கு நன்றி சொல்வதில் மகிழ்கிறேன் !


முதலில் சங்கரலிங்கம் அண்ணனுக்கு என் பாராட்டுகள்...ஒரே ஊர்காரர் என்றாலும் அறிமுகமானது பதிவுலகம் மூலமாகத்தான் . சில மாதங்களுக்கு முன் அவரது தளத்தை, என் தளத்தில் அறிமுகம் செய்வதில் தொடங்கியது எங்களின் நேச உறவு. விழிப்புணர்வு வேண்டும், சமூக அக்கறை வேண்டும் என்று இணையத்தின் முன் அமர்ந்து குரல் கொடுப்பதுடன் திருப்தி பட்டுகொள்கிறோம், ஆனால் நடைமுறையில் அதை சாதித்துக் கொண்டிருக்கிறார் இவர். ஆரம்பத்தில் பதிவுகளை எழுதுவதுடன் மட்டும் இருந்த இவர் அதன் பின் பல நட்புகளை வளர்த்து இன்று பதிவர்கள் சந்திப்பை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் வரை வந்திருக்கிறார் என்பது பெருமையான ஒன்று. அண்ணா உங்களுக்கு என் நன்றிகள்.

பலரும் சந்திப்பில் நடந்தவற்றை ஏற்கனவே பகிர்ந்துவிட்டதால், என் நினைவில் இருப்பவை சிலவற்றை இங்கே சொல்கிறேன்....

Dr.கந்தசாமி சார் - கோயம்புத்தூரில் இருந்து வந்திருந்தார்.  தனது பதிவுகளை மற்றவர்கள்  காபி பேஸ்ட் செய்து கொள்ள அனுமதி வழங்கி இருப்பதாக சொன்னார். 'பிறருக்கு உபயோகமாக இருக்கத்தானே பதிவுகள் எழுதுகிறேன், அதை அவர்கள் எடுத்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே' என்று சொன்னவுடன் கைதட்டல் அதிர்ந்தது. உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

சீனா ஐயா பல பல பதிவர்களை வலைசரத்தில் அறிமுகம் செய்ய பெரிய காரணமாக இருக்கிறார்...ஆனால் நான் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை என்று தன்னடக்கத்தோடு சொன்னபோது மிக வியந்தோம். வலைச்சரத்தில் உங்களை அறிமுகம் செய்திருக்கிறாங்க என்று எனக்கு மெயில் வந்தபோது அங்கே அறிமுகம் செய்ற அளவிற்கு நாம எழுதுறோமா என்று சிறு மிதப்பு வந்ததென்னவோ உண்மை...! அவர் தலைமை வகித்து சிறப்பித்தமைக்கு என் நன்றிகள் !

பலாபட்டறை சங்கர், மணிஜி - சென்னையில் இருந்து இவ்வளவு தூரம் வந்திருந்து சந்திப்பை பெருமைபடுத்தினார்கள். பதிவுலகத்தின் மீதான தங்களின் பார்வையை/பங்களிப்பை எங்களுடன் பகிர்ந்துகொண்டார்கள். இணையம் என்பது டைரி போன்றது, பல வருடங்கள் கழித்து நாமே இதை எடுத்து படிக்கும் போது கிடைக்கும் நிறைவு மிக பெரிது, மேலும் நமக்கு பின் நம் வாரிசுகள் இதை படித்து தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்றார் சங்கர். சந்திப்பின் இறுதிவரை அப்ப அப்ப தன் கருத்துக்களை தெரிவிக்க தவறவில்லை. கூகுள் பஸ்ஸில் பதிவர்கள் அதிக நேரம் செலவிடுவதால் பதிவுலகத்தில் பதிவுகள் குறைந்து வருகிறது என்பது உண்மைதான், பதிவுகள் எழுதுவதை குறைக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினார். சங்கர் அவர்களின் கருத்துக்கள் மிக உபயோகமாக இருந்தன, நினைவில் வைத்துக்கொண்டேன்.(முக்கியமாக செந்தில் சாரை நன்றாக உற்சாக படுத்தினார்...!!) என் நன்றிகள் !

செந்தில்குமார் - பலரும் இவரை படாதபாடு படுத்திவைக்க கொஞ்சமும் முகம் சுளிக்காமல் எதிர் கொண்ட பாங்கு இவர் ஒரு தெளிந்த நீரோடை என்பதை காட்டியது. (என்ன செந்தில் சார் ??இது போதுமா? ) அவர் மீது வைக்கும் குற்றசாட்டுகளை எங்கள் முன் பகிர்ந்துகொண்டதுடன் தன்னிலை விளக்கம் கொடுத்தார். உண்மையில் இந்த மாதிரி தன்னை பற்றி மற்றவர் முன் எடுத்துரைக்க எல்லோராலும் இயலாது. ரொம்ப வெளிப்படையாக, இயல்பாக எந்தவித மேல்பூச்சும் இல்லாமல் சொன்ன விதம் அருமை. இந்த சந்திப்பிற்கு பின் வரும் அவரது பதிவுகளில் ஒரு மாற்றம் தெரியும். கண்டுபிடிங்க !!

பதிவு போடாமல் எப்படி இங்கே அதுவும் வெள்ளிகிழமை வந்தார் என்ற என் ஆச்சரியத்தை உடைத்துபோட்டது அடுத்து அவர் சொன்ன வார்த்தை...'இன்னைக்கு போட வேண்டிய பதிவை அப்பவே போட்டு இருப்பாங்க' அட கடவுளே பதிவு போட என்று ஒரு ஆபீஸ் வச்சு நடத்துறார் போல.....!! இவர் ஒருத்தர் இருக்கும் வரை பதிவுலகம் எப்படி சாகும்...வாழும் நன்றாகவே  வாழும்...!! விழாவை நகைசுவையாக கொண்டு சென்றதில் இவரின் பங்கு அதிகம். அதற்காக ஒரு ஸ்பெஷல் நன்றி.


                               செல்வா பக்கத்தில் செந்தில் சார் ! 


பெசொவி- ஒரு வழியாக தனது உண்மையான பெயரை சொல்லிவிட்டார்...தூத்துக்குடியில்  (மத்திய அரசு) வேலை பார்த்து வருவதாக சொன்னதால் நான் சும்மா இருக்காமல் 'அப்ப நல்லதா போச்சு, ஒரு உதவி தேவை படுது, உங்களை பார்க்க வரணும்' என்றேன்...அதற்கு அவரும் 'செய்யலாமே... நீங்க என்னைக்கு வரீங்கன்னு முன்கூட்டியே சொல்லிடுங்க' என்றார். நானும் ஆர்வமாகி 'கண்டிப்பா சொல்லிடுறேனு' சொல்ல, அதுக்கு அவர் 'அப்பத்தான் அன்னைக்கு நான் ஊர்ல இருக்கமாட்டேன்'  சொன்னதும் ரொம்ப வருத்தமா போச்சு. ம்ம்...இருக்கட்டும் சொல்லாம ஒரு நாள் போகணும்...!! நடுநடுவே நகைச்சுவையை வாரி கொட்டிகொண்டே இருந்ததுக்காக  சிரிச்சிட்டே ஒரு நன்றி !



 மத்தவங்க பேச்சை கிண்டல் பண்ணி சிரிச்சிட்டு இவர் மட்டும் ரொம்ப சீரியஸா பேசுறாராம் - பெசொவி 


சித்ரா - ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக பேசக்கூடிய அன்பான ஒரு தோழி. அமெரிக்காவில் இருந்து போனில் அவங்க பேசினா எனக்கு வாய் வலிக்கும் !  அது எப்படின்னு கேட்ககூடாது...ஒரு அரைமணி நேரம் அவங்க கிட்ட பேசி பாருங்க அப்ப தெரியும். ஒரு சோக கதை என்னனா, நானும் அவங்களும் போன வாரம் அண்ணனின் ஆபீசில் வைத்து சந்திப்பு விசயமா ஆலோசனை பண்ணினோம்.....அதற்கு மறுநாள் அந்த ஆபீசை இடிச்சிட்டு இருக்காங்க, 'என்ன அண்ணா ஆச்சு'ன்னு கேட்டா, 'நேத்து நீங்க போன பின்னாடி சுவர் விரிசல் விட்டு ரொம்ப டேமேஜ் ஆகி விட்டது , அதுதான் பில்டிங் முழுதும் இடிச்சிட்டு புதுசா கட்டபோறாங்க' !!?

                                                     
                       என்ன கொடுமை இது...!?

இப்ப அண்ணனின் ஆபீஸ் வேற இடத்தில் இயங்குகிறது. இந்த சந்திப்பு நடக்க ஒரு முக்கிய காரணம் சித்ராவின் நெல்லை வருகை என்பதால் பெரிய நன்றிகள் தோழி.

பாபு - இவருடன் நான்கு மாதங்களாக தான் பேசிட்டு இருக்கிறேன், என்றாலும் ஒரு சகோதர வாஞ்சையுடன் இவர் பேசுவது பல வருடங்கள் பழகியது போன்ற உணர்வை தரும். இந்த சந்திப்பிற்கு இவரது பங்கு அதிகம், கோவில்பட்டியில் இருந்து குடும்பத்துடன் வந்து சந்திப்புக்கான  ஏற்பாடுகளை பேசிவிட்டு சென்றார். சந்திப்பு நடந்த அன்று அவரது கம்ப்யூட்டர்  சென்டரின் பத்தாமாண்டு நிறைவு விழா, அதைவிட இந்த சந்திப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தார். அந்த அன்பிற்கு நன்றி சொன்னால் நல்லா இருக்காது. உங்களை பாராட்டுகிறேன் சகோ.

வெடிவால் சகாதேவன் - இவர் ஒரு சீனியர் பதிவர் என்பதை விட இவரது குடும்பமே பதிவர்கள் குடும்பம் தான், கோமு மேடம், ராமலக்ஷ்மி... இவரது பங்கெடுப்பு சிறப்பாக இருந்தது. இவருக்கு என் நன்றிகள்.


சகாதேவன் சார் பக்கத்தில ஜெயந்த், அட பாபுவை கவர் பண்றாரா ? 


ஷர்புதீன் - எல்லா பிளாக்குக்கும் மார்க் போட்டு கொண்டு சென்றவர் இவர் தான். வித்தியாசமாக இருக்கட்டுமே என்று அப்படி செய்ததாக கூறினார். அவர் பிளாகிற்கு 55 மதிப்பெண் கொடுத்து கொண்டாராம், (அது எப்படி அவருக்கு நாம தானே மதிப்பெண் போடணும் ?!) இவரிடமும் கலகலப்பிற்கு குறைவில்லை. . .இந்த சந்திப்பிற்கு மார்க் போட்டதாக கூறினார்...எத்தனை மார்க் என்பதை சொல்லவில்லை...! அவர யாரும் பார்த்தா கொஞ்சம் கேட்டு சொல்லுங்க. இவரும் அப்ப அப்ப கலாய்ச்சிட்டு இருந்தார். உங்களுக்கு என் நன்றிகள்.   

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ரத்னவேல் நடராஜன் இவர் தனது மனைவியுடன் வந்திருந்து விழாவை சிறப்பித்தார். இருவருக்கும் என் நன்றிகள்.

பதிவு ரொம்ப பெரிசா போற மாதிரி இருக்கு...அதனால அடுத்த பாகம் போட வேண்டியது தான் வேற வழியில்லை.......பொறுத்துக்கோங்க.

கலந்துரையாடலின் போது கிடைச்ச கொஞ்ச கேப்ல ஹாலை விட்டு வெளியே வந்தேன். அப்போ ரொம்ப சீரியஸா போட்டோகிராபர் நம்ம ஜெயந்த்கிட்ட பேசிட்டு இருந்தார்... அவங்களை கிராஸ் பண்ணும் போது காதில் விழுந்தது (நம்புங்க ஒட்டு கேட்கல !! )

போட்டோகிராபர் - உள்ளே எல்லோரும் மொக்கை மொக்கைனு அடிக்கடி சொல்றாங்களே அப்படினா என்னங்க ?

முதலில் நொந்துபோன ஜெயந்த் பின்பு மெதுவா ரிலாக்சாகி பொறுமையா மொக்கை எனப்படுவது யாதெனில் .....என்று விளக்க ஆரம்பித்தார்...!

போட்டோகிராபர் படபோற அவஸ்தையை எண்ணி வருத்தபட்டுகொண்டே  உள்ளே வந்துவிட்டேன். 

அடுத்த பாகத்தில், இங்கே விடுபட்ட மற்றவர்கள் பற்றியும்...சிறு சமூக சேவை என்று ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தோம், அதன் முழு விவரத்தையும் பகிர்கிறேன்.                       

                           *************************

திங்கள், டிசம்பர் 6

இது கண்டனம் அல்ல விழிப்புணர்வு....!

    காதலியை, மனைவியை
    தாயாய் உயர்த்தி மகிழும் நல்லவர் 
    வாழும் இங்கே தான் 
    வேறு சில புல்லுருவிகள் !
  
    அன்பு, அக்கறை காட்ட வீட்டில் 
    அவளுக்கும்  ஆட்கள்  உண்டு 
    என்பதை மறந்து வீழ்த்த எண்ணிய 
    உன் அறியாமை என்னே !
  
    பெண் வீழ்ந்தாள்  என்று நினைத்தாயோ
    வார்த்தைகளை கொண்டு ஆடை உரிக்கும்
    உன் வித்தை புரியா
    பேதையவள் அன்றோ !
  
    தாய்க்கும் தாரதிற்க்கும்
    வித்தியாசம் உண்டென்பதை
    உணரா மூடன் நீ அன்றோ !
  
    அடுத்தவன் பெண் தானே
    எடுத்தாள சுலபம் என்று எண்ணியது
    உன் மடமை அன்றோ !
  
    உன் வீட்டு பெண்ணை அடுத்தவன் பார்த்தால்
    மட்டுமே வெகுண்டெழும்  உன் ஆண்மை
    என்ன  வேடிக்கையடா,மானிடா !?
  
    காதலை விட புனிதமான நட்பை 
    காமத்திற்கு என்றே கடைவிரிக்கும் 
    கூட்டத்தின் தலைவன் பதவி உனக்கே !
  
    பாரதியின் ரௌத்ரம் பழகினால் 
    மட்டும் போதாது பெண்ணே....
    செயலிலும் காட்டு,
    அழிந்தொழியட்டும் கயமை ! 
    களை எடுக்க ஏன் தயக்கம்
    தோள் கொடுக்க நல்லவர் பலர் 
    உண்டு இங்கே !
  
    'தேரா  மன்னா' இயம்பிய 
    வழி வந்தவள் அன்றோ நீ !
    உள்ளே கொந்தளிக்கும்
    நெருப்பை  அள்ளி எறி
    எரிந்து சாம்பலாகட்டும்
    அற்ப பதர்கள்... !!

இதை நான் சொல்லியே ஆகணும்...!!

பதிவுலக தோழி ஒருவர் சொல்லி வருத்தப்பட்ட ஒரு நிஜ நிகழ்வு,,,,பதிவுலகம் வந்த புதிதில் ஆண் பதிவர்  ஒருவர் ஒரு பெண் பதிவரிடம் நட்பாக பேசி பழகி இருக்கிறார்....அன்பாகவும், அக்கறையாகவும் வலிய... வழிய...அறிவுரைகளை வாரி வழங்கி இருக்கிறார்.....!?  காலை வணக்கம் சொல்வதில் இருந்து இரவு வணக்கம் சொல்வது வரை அந்த  ஆண் பதிவரின் நட்பு  தொடர்ந்து இருக்கிறது......!

நாள் செல்ல செல்ல இந்த நட்பு அதிகரித்து சாட் பண்ணவில்லை என்றால் ஏன் பண்ணவில்லை...? வேறு புது நண்பர்களுடன் பேச தொடங்கியாச்சா...? அப்படி வேறு யாரிடமும் நீங்க பேச கூடாது என்ற மாதிரியான டார்ச்சர்கள் வர தொடங்கி இருக்கின்றன...! நட்பு கொஞ்சம் பாதை மாறுவதை உணர்ந்து,  நட்பை  முறித்து கொள்ளலாம் என்ற முடிவிற்கு அந்த  பெண் பதிவர் வந்ததை தெரிந்து டார்ச்சர் இன்னும் அதிகரித்து இருக்கிறது...கடைசியில் இந்த விவகாரம் அந்த பெண் பதிவரின் கணவன் காதிற்கு போய்விட்டது....அதன் பின் பிரச்சனை வேறு விதமாக திரும்பி விட்டது...தன் மனைவியை சந்தேகப்பட தொடங்கிவிட்டார்....மூணு மாதம் கழித்து அந்த பதிவரின் கணவன் இப்போது கோர்டில் போய் நிற்கிறார்.....!? பெண் பதிவரோ மன உளைச்சலில் சிக்கி பிளாக் எழுதுவதை தற்சமயம்  நிறுத்திவிட்டார். 

வேறு மாதிரியான பிரச்சனைகளையும் இந்த நபர்கள் ஏற்படுத்துகிறார்கள். ஒருவேளை பெண் பதிவர் நட்பை முறித்துக்கொண்ட பின் அந்த பதிவரை பற்றி மற்றவர்களிடம் இந்த பெண் அப்படி, இப்படி என்று கதை வேறு கட்டி விடுகிறார்கள்...(என்ன செய்து இந்த மாதிரியான ஆட்களுக்கு புரிய வைப்பது என்று புரியாமல் தான் இந்த பதிவை எழுதுகிறேன்.) 

வேலையற்ற சில வீணர்களின் விளையாட்டால் இணையத்தில் பெண்கள் இப்படியும் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் புதிய பெண் பதிவர்கள் ரொம்பவே கவனமாக பேசவேண்டியது அவசியம். அக்கறையாக, அன்பாக பேசுகிறாரே என்று நெருங்கி நட்பு பாராட்டி விடாதீர்கள். மேலும் இந்த மாதிரி முகம் தெரியாத ஆட்களிடம் இருந்து வரும் அளவுக்கு மீறி வரும் பாசம் எதில்  போய் முடியும் என்று நான் சொல்ல வேண்டியது இல்லை...! கண்ணுக்கு முன் நிற்கும் எதிரியை சமாளித்து விடலாம், ஆனால் இதை போன்ற மறைமுகமாக நட்பு என்ற போர்வையில் பழகும் நபர்கள் மிக ஆபத்தானவர்கள்.

மறுத்தல் அவசியம்

உங்க மெயில் id பெரும்பாலும் கொடுக்காமல் இருந்தால் நலம்...மீறி கொடுத்தாலும் சொந்த விசயங்களை பேசாமல் தவிர்ப்பது நல்லது...செல்போன் எண்ணையும் கொடுக்காமல் தவிர்க்கலாம் .எந்த கேள்விக்கும் நாகரீகமாக மறுப்பு சொல்வது பின்னால் பிரச்சனைகள் வருவதை தடுக்கும்.....சிலருக்கு பொழுது போக்கே பெண்களின் மெல்லிய  உணர்வுகளோடு விளையாடுவது தான்.....?!

செல்போனில் ஏதாவது நம்பரை டயல் பண்ண வேண்டியது, எதிர்புறத்தில் பெண் குரல் கேட்டால் "சாரிங்க என் பிரண்ட்  நம்பருக்கு டயல் பண்ணினேன், தப்பா உங்களுக்கு வந்துவிட்டது, சரி விடுங்க....நீங்க என்ன பண்றீங்க.....உங்க குரல் காலேஜ் பொண்ணு வாய்ஸ் மாதிரி இருக்கு...எந்த காலேஜ்  படிக்கிறீங்க....?" இந்த மாதிரி உரையாடல் நீண்டு கொண்டே போகும். உடனே கட் பண்ணினாலும் கண்ட நேரத்தில் மெசேஜ் அனுப்பி டார்ச்சர் தொடரும். இந்த ராங் கால் விஷயத்தால் பெண்களில் சிலர் பாதிக்க படுகிறார்கள். 

இதைப்போலத்தான் இணையத்திலும் பெண் பதிவர்களுக்கு தொல்லைகள் தொடருகின்றன.....இந்த சங்கடங்களை வெளியில் சொல்ல இயலாமல் மனதிற்குள் புழுங்கி மன அழுத்தத்திற்கு ஆளாகிவிடுகிறார்கள்.  இரு பெண் தோழிகளிடம் (பதிவர்கள்) இடையே கூட இந்த மாதிரி ஆட்கள் சிண்டு முடித்து, பிரித்து விடுகிறார்கள். அவர்களை பொறுத்தவரை இது பொழுது போக்கு, ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு....?!! அவர்கள் பாதிப்பு அடைந்தால் அவர்களின் குடும்பமும் பாதிக்கும் என்பதை உணருவார்களா இந்த மாதிரியான ஆட்கள்...??! 

   
" படித்த, நாகரீகமான, பகட்டான மனிதருக்குள்ளும் ஒரு நரி ஒளிந்திருக்கலாம் " 

எச்சரிக்கை !!



ஞாயிறு, ஜூன் 13

இணைய நட்பு


இணைய நட்பு




சலனம் 
                                           
மௌனமாய் இருக்க மனதும்                                          இடம் கொடுக்க வில்லை...!
விலகிச் செல்ல பாதையும் 
எனக்கு தெரியவில்லை....?!

                       ********                                                  
எந்த நிமிடம் என் மனதினுள் நுழைந்தாய்?
நட்பு என்ற அடையாளத்துடன் நுழைந்து 
என் உணர்வோடு கலந்தது ஏன்?
தெளிந்த என் மன நீரோடையில் 
முதல் கல் எரிந்தது நீ..... ஏன்?
கலங்கிய நீரில் நான் 
கரைந்துப் போகவா...இல்லை
துடித்து சாகவா.....?    
காரணம் 
சொல் விட்டு விடுகிறேன் 
நிரந்தரமாக என் மன கூட்டில் இருந்து...!

*****

 நீ எழுதிய  ஒவ்வொரு வார்த்தையும் 
முள்ளாய் தைத்ததை நீ அறிவாயா?
தைக்கட்டும் என்று அறிந்தே எழுதினாயா 
வெறும் எழுத்துக்கள் ஒருவரை 
சித்திரவதை செய்யுமா....... ?   
செய்கிறதே என்னை......!?
                       
                     **********
கல் நெஞ்சகாரனடா  நீ ! 
என் நெஞ்சை ரணமாக்கி விட்டு, 
துயில்கிறாய்  நிம்மதியாக !!
விடமாட்டேன் உன்னை...?
கடவுளிடம் வருந்தி 
வரம் பெறுவேன் நிதமும் 
உன் கனவில் வருவதற்கு!!
                                              
                                                               **********
                      
                             மறந்தும் உன் நட்பை இழக்க, 
               மனம்  இடம் கொடுக்காது 
           என்றானபின், உன் மன நிலையை 
               நான் அறிவது எவ்வாறு ?
           முகமூடி  போட்டு பேச எனக்கு 
               விருப்பம் இல்லை,  உடைத்தே 
           சொல்கிறேன்,  உன் அன்பு வேண்டும் 
               வாழ்வின் இறுதிவரை...!!
           அதற்கு என்ன பெயர் வேண்டுமானாலும் 
                வைத்துகொள்....?! மண்ணுக்குள் நான்  
           போகும் கடைசி நொடி வரை கூட, 
                உன்னை நேரில் சந்திக்காது என் கண்கள் !
           பின் எவ்வாறு நம்  நட்பு கற்பிழக்கும்....??!
                ஆதலினால், தூய நட்பு  கொள்வோம் !!
                                                              
                                                                 ************


இணையம் பிரபலம் ஆன புதிதில் என் நெருங்கிய கல்லூரி தோழி இணைய நட்பை வைத்து எழுதிய கவிதைகள் தான் மேலே இருப்பவை. அவள் இப்போது பெரிய நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கிறாள்.  நான் இணையத்தில் எழுதுவதை அறிந்த அவள் அப்போது விளையாட்டாய் உணர்ச்சிவசப்பட்டு எழுதிய இந்த கவிதைகளை எனக்கு அனுப்பி வைத்தாள்.  அதை நான் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். எழுதியவற்றில் பலதும் மறந்துவிட்டது என்று சொன்னாலும் நினைவில்  இருக்கும் இவற்றை படிக்கும் போது வியப்பாகத் தான் இருக்கிறது !! 

இணையத்தின் உதவியால் இன்று  முகம் தெரியாமல் பல நட்புகள் உருவாகின்றன.  அவை அனைத்தும் ஆரோக்கியமாகவே இருக்கவேண்டும்.  இந்த நட்பால் புது கலாச்சாரம் உருவாகிவிடக்  கூடாது என்பதில் அனைவரும் மிக கவனமாக இருக்க வேண்டும். சிறு சலனமும்  நம் மனதில் நுழைய இடம் கொடுக்காமல் இருந்தால் நட்பு என்பது நீடித்து நிலைத்து இருக்கும்.  

ஆண், பெண் நட்பு மிகவும் போற்றப்படக்கூடிய ஒன்றுதான், ஆனால் இருவரும் தங்களுக்கு என்று எல்லைகளை வரையறுத்துக்கொண்டு அதன்படி நடப்பதே நன்று. இணைய நட்பைப்  பொறுத்தவரை முகமறியா நட்புதானே என்று கவனக்குறைவாக இல்லாமல், வார்த்தைகளை பரிமாறும்போது மிகவும் கவனமாக கையாள்வது நட்பைக்  கொண்டாடும் இருவருக்குமே நலம் பயக்கும்.

வார்த்தைகளில் மரியாதையை கையாளும்போது அந்த நட்பு வணங்கப்பட கூடியதாகி விடுகிறது! அவசரப்பட்டோ, உணர்ச்சி வேகத்திலோ, வார்த்தைகளை வெளி இடாமல் நிதானமாக, தேவைக்கு ஏற்ப,  பதில் சொல்வது கண்ணியத்தைக்  கொடுக்கும்.  நன்கு பழகியவர்கள் ரூபத்திலேயே பிரச்சனைகள் உருவாகும் கால சூழ்நிலையில் இணைய நண்பர்கள், அது இரு ஆண்களுக்கு இடையிலான நட்பு, இரு பெண்களுக்கு இடையிலான    நட்பு என்றாலுமே கவனமுடன் நட்புக்கொள்வது தவறான பின்விளைவுகளை ஏற்படுத்தாது.  

தோழமைக்கு  உரிமை அதிகம்தான் ,  அது வரம்பு மீறாதவரை.....?!!
                               
நல்ல பல பதிவுகளை எழுதுவதற்கு இணைய நட்பு உதவியாக  இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அந்த மாதிரி நல்ல நட்பை பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள் ! அந்த மாதிரி 30 நண்பர்களை followers ஆகவும் , வோட் மற்றும் பின்னூட்டத்தின் மூலமாக பல நல்ல நண்பர்களை பெற்றதின் மூலம் நானும் கொடுத்து வைத்தவள்தான் !! 

என் நண்பர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்ற பேராசை எனக்கு அதிகம் உண்டு என்பதை என்னால் மறைக்க முடியாது .  என் இணைய நண்பர்கள் அனைவருக்கும் இந்த பதிவின் மூலமாக என் அன்பையும் , நன்றியையும் தெரிவித்துக்  கொள்கிறேன்.  எழுதும் என் கையை பலப்படுத்த  உங்கள் நட்பு தொடர்ந்து வேண்டும்....!                                 
                           
எனது தாம்பத்தியம் பாகம் 5 பதிவு அடுத்ததாக  வெளி வரும்....!  காத்திருங்கள் !! நன்றி