ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், மார்ச் 12

மாணவர்கள் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் தமிழ் நண்டுகள் !?

சிகப்பு கம்பள வரவேற்பு ஒரு பக்கம், நேரில் சென்று பொன்னாடை போர்த்து வாழ்த்துவது ஒருபக்கம் நடக்க மேடையில் ஈழத்துக்காக உயிரை விடவும் தயார் என இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகளை தான் நமக்கு தெரியும். மாணவர் சக்தியை அரசியல்வாதிகள் தங்களின் சுயநலத்துக்காக பயன்படுத்துவதையும் அறிவோம்.

மாறாக இன்று ஈழ மக்களுக்காக உண்ணாவிரத்தை கையில் எடுத்திருக்கும் கல்லூரி மாணவர்களின் உணர்விற்கு என் வணக்கங்கள். மாணவர்கள் நினைத்தால் சமூகத்தில் அரசியலில் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியும். இப்படி ஒரு போராட்டம், புரட்சி இங்கே வராதா என் சமூக அக்கறை உள்ள எல்லோரின் மனதிலும் நிச்சயம் ஒரு கேள்வி எழும். அதற்கான பதிலாய் இவர்களின் போராட்டத்தை பார்க்கிறேன்.


ஈழம் முழுமையாக சிங்கள இராணுவத்தால் சூழப்பட்டு இன அழிப்பு வேலைகள் கனகச்சிதமாக நடைபெறுகிறது. நெஞ்சில் ஈரம் உள்ள எவரும் நம் பாலச்சந்திரனுக்காக இரு சொட்டு கண்ணீர் விடாமல் இருந்திருக்க முடியாது. சிறு பாலகனையும் சுட்டுக்கொல்லும் அளவுக்கு ஈனமதி படைத்த அரக்கர்கள் ! இவர்களிடம் பணிந்து போகும் மத்திய அரசு. கொலை பாதகங்களை, பாலியல் ரீதியிலான கொடூரங்களை ரசித்து கொண்டாடும் சர்வ தேச அரசியல் !!

அகிம்சை வழியில்  போராடும் மாணவர்களை பல இன்னல்கள் கொடுத்தும் அடக்க நினைக்கிறது அரசு. ஆனால் ஒரு கல்லூரி தானா இருக்கிறது தமிழகத்தில்...?! தீ பரவட்டும் அனைத்து மாணவர்களிடையே...நீதி கிடைக்கட்டும்...! மாபெரும் ஜன சமுத்திரத்தில் மாணவர்கள் தம் மக்களின் உரிமைக்காக கொடுக்கும் குரல் சர்வ தேசம் எங்கும் ஒலிக்கட்டும். மாணவர்கள் உலகம் கேளிக்கை நிறைந்தது மட்டுமல்ல சமூக அக்கறை அதிகம் கொண்டது என சுயநல உலகம் உணரட்டும்.

அதிகார வர்க்கத்தினரின்/ஆசிரியர்களின் இன்டெர்னல் மார்க் கிடையாது என்ற மிரட்டல்கள் ஒரு பக்கம்... மனிதர்களை உணர்ச்சி அற்றவர்களாக்கும் முயற்சி இது. இன்றைய மாணவர்களுக்கு சமூக அக்கறை இல்லை என்று சொல்லும் நாவுகள் தான் இப்படி பேசுகின்றன.  இன்று வாழும் தேசம் நாளை பறிபோகும் என்றானாலும் படிப்பில் முதல் இடம் பிடிப்பது எப்படி என்ற சிந்தனையில்  இருக்க சொல்கிறது இன்றைய கல்வி !

தமிழ் நண்டுகள்

இந்த சூழலில் எனக்கு தமிழ் நண்டுகள் கதைதான் நினைவுக்கு வருகிறது. தமிழர்களின் குணம் இது போன்றதுதான் என அடிக்கடி நிரூபிக்கிறார்கள் இங்கே சிலர் ! இணையத்தில் பலரது வாதத்தையும், கருத்துக்களையும் பார்த்தால் நண்டு கதை இவர்களை வைத்து தான் சொல்லப்பட்டது போல இருக்கிறது. பூட்டப்பட்ட அறைக்குள் உணர்ச்சி பிழம்பாய் கொந்தளித்தால் போதும் நாடு சுபிட்சமாகிவிடும் என்பதை போல வேறு சிலரது எண்ணமாக இருக்கிறது !! இப்படி எல்லாம் இருக்காமல் ஒன்று மாணவர்களின் போராட்டத்திற்கு கருத்துக்களால் வலிமை சேர்க்கலாம் அல்லது எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து விடுவது உத்தமம்.

ஈழத்தில் நடக்கும் இன அழிப்புகள் பற்றி சிறிதும் அக்கறையற்ற தமிழ்நாட்டு தமிழர்கள்(?) மாணவர்கள் போராட்டத்தை கிண்டலும் கேலியும் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை மாணவர்கள் சிறு பிள்ளைகளாம், மன முதிர்ச்சி இல்லாதவர்களாம் ...அரசியல்வாதிகளால் தவறாக கையாளப்படலாம் என்பது பலரின்  எண்ணம் ஆனால் மாணவர்களின் எழுச்சிக்கு காரணமே இன்றைய அரசியல்வாதிகள் மேலுள்ள கோபம் தானே. மக்கள் நலனை மறந்த ஊழல் மலிந்த அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்ட மாணவர் சமுதாயத்தால் மட்டும் தான் இயலும். இவர்களுக்கு தலைவன் என்று யாரும் தேவை இல்லை, சமூக நலன் மட்டும் தான் தலைவன் என்பதாக இருந்தால் இவர்களின் வேகத்திற்கு முன் பொய்மை கயமை ஏதும் நிற்க முடியாது. முக்கியமாக இவர்களிடம் இருக்கவேண்டியது துணிவுடன் கூடிய பொதுநலம் மீதான ஒற்றுமை.

இன்று சேனல் நான்கை பார்த்து பொங்குகிற நீங்கள், இத்தனை நாள் என்ன செய்தீர்கள் என்ற கேள்விகள்  மனதை வதைக்கிறது. என்ன பதிலை சொல்வது எங்களின் கையாலாகாத்தனம் என்றா ?! குத்த குத்த  பொறுத்துக்கொண்டே இருக்கும் புழு ஒரு கட்டத்தில் தன் உடலை வளைத்து எதிர்ப்பைக் காட்டும். அது போல அரசியல்வாதிகளால ஏதாவது நல்லது நடந்துவிடாதா என பொறுத்து பொறுத்து இன்று அதற்கு வழியே இல்லை என்று ஆனதும் மாணவர்கள் போராட்டத்தை கையில் எடுக்கிறார்கள். முத்துகுமரன், செங்கொடியை யாரும் மறக்கவில்லை, அன்று அவர்கள் பற்ற வைத்த தீ இன்று எரிய தொடங்கி  இருக்கிறது. எனது கவலை எல்லாம் நெருப்பு நீர்த்து போய்விடகூடாது என்பதாகத்தான் இருக்கிறது. மாற்றம் தேவை அதுவும் உடனடியாக...சப்பை கட்டும் பேச்சுக்கள் கேட்டு கேட்டு சலித்துப் போய்விட்டது.  

மாணவர்கள் ஒன்றுகூடுவது கேளிக்கைக்காக திரைப்பட கதாநாயகர்களுக்காக, கிரிகெட்டுக்காக என்ற போது   கண்டுகொள்ளாத பெற்றோர்கள் உண்ணாவிரதம் என்றதும் அவர்களின் படிப்பை பற்றி/எதிர்காலம் பற்றி  கவலைப்படுகிறார்கள். நாட்டுக்காக வீட்டுக்கு ஒருவனை அனுப்பியதும் நாம் தான் !   மாணவர்கள் தான் தேசத்தின் தூண்கள் என்பதை உணருங்கள்.

நேற்றைய செய்தி ஒன்று 

லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணாநிலை போராட்டத்தை முடக்கியபின் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளனர். அதன் மூலம் தமிழகமெங்கும் உள்ள கல்லூரி மாணவர்களை ஒன்றாக இணைத்து போராட இருப்பதாக பத்திரிக்கையாளர்களிடம் மாணவர்கள் கூறி உள்ளனர்.

மேலும் 'எங்கள்  அமைப்புக்கு அரசியல் சாயத்தை பூச வேண்டாம் எனவும் எந்த அரசியல் கட்சிகளும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தலையிட வேண்டாம்' எனவும் கேட்டுள்ளனர்.   

இவர்கள் தெளிவாகவே உள்ளனர். கருத்து சொல்றோம்னு இணைய போராளிகள் எதையாவது சொல்லி குழப்பாம இருந்தால் சரி.

மாணவர்கள் சமூக உணர்வு பெறுவதை அதிகாரத்தில் இருப்பவர்கள் விரும்ப மாட்டார்கள்.  அதனால்  பல எதிர்ப்புகளை சமாளித்தாக வேண்டும்.  வேகமாக பரவக்கூடியது என்பதால் விரைவாக போராட்டத்தை முடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். நாட்டை சீரழித்து கொண்டிருக்கும் அத்தனை பிரச்சனைகளிலும் மாணவர்களின் தலையீடு மிக அவசியம் என்பதை போராட்டத்தை குறை சொல்பவர்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள் .

மாணவ நண்பர்களே !!! 

சினிமா, விளையாட்டு, கேளிக்கை தவிர வேறு ஏதும் தெரியாது என நினைத்துக்கொண்டிருக்கும் அனைவரது எண்ணத்தையும் தவிடுபொடியாக்குங்கள்...பிற மாநிலத்து இளைஞர்கள் அவர்களின் உரிமைக்காக உறுதியுடன் நின்று போராடும் போது அவர்களை விட நீங்கள் எந்த விதத்தில் குறைந்து விட்டீர்கள்...நம் பாரதியின் அக்னிகுஞ்சுகள் நீங்கள்...! நினைவில் கொள்ளுங்கள் !!

யாருடைய போலி சமாதானத்தையும், பொய்யான வாக்குறுதிகளையும் நம்பாதீர்கள். உங்கள் போராட்டத்தை சிதைக்க பல வகையிலும் முயற்சிகள் எடுக்கப்படும்...எதற்கும் அஞ்சாதீர்கள்...உள்ளஉறுதியுடன் ஒற்றுமையாக நில்லுங்கள்...! பல நல்ல உள்ளங்கள் தூரத்தில் நின்று உங்களுக்காக உங்களின் நலன் வேண்டி மனதார தொழுது கொண்டிருக்கின்றன... என்பதை மறக்காதீர்கள் ! 

வெல்க தமிழ் ! வெல்லட்டும் இளைஞர்களின் ஒற்றுமை !

திங்கள், மார்ச் 19

மத்திய அரசே ! கண்டன தீர்மானத்திற்கு ஆதரவு கொடு...!


இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை குழுவில் தீர்மானம் கொண்டுவரபடுவதற்க்கு ஆதரவு தெரிவிப்பதில் மௌனம் சாதிக்கும் மத்திய அரசு !!?



" இலங்கையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த உள்நாட்டு போர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக முடிவுக்கு வந்தது. அப்போது 40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் கூட்டங்கூட்டமாக ஈவு இரக்கமின்றி கொடூரமான முறையில் இனப் படுகொலை செய்யப்பட்டனர். சிங்கள அரசின் வெறித்தனமான மனிதத் தன்மை அற்ற கொலைவெறி ஆட்டங்கள் சானல் 4  லின் மூலம் தற்போது வெளி உலகிற்கு வந்திருக்கின்றன. சர்வதேச சமுதாயம்  இதைக் கண்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியது "-பத்திரிகை  செய்தி 

இப்படி சில வரிகளில் நடந்த அத்தனை கொடுமைகளையும் சொல்லிவிட முடியும் ஆனால் மனித உணர்வு உள்ள யாரும் இதை ஒரு செய்தியாக சாதாரணமாக படித்து விட்டு சென்றுவிட இயலாது. கொடூர கொலைகள் !!அந்த விடியோ காண தைரியம் இல்லாமல் ஒரு சில போட்டோக்களை பார்த்தே மனம் நடுங்குகிறது. நடந்தது நடந்து போச்சு, இனி நடப்பதை பார்ப்போம்  என்று சமாதானம் சொல்ல வாய்ப்பே இல்லாத கொடூர நிகழ்வுகள் இவை. 

கண்டன தீர்மானம் 

இதுநாள் வரை கண்டுகொள்ளாத நாடுகளும் இப்போது இலங்கையை ஒரு வித வெறுப்புடன் நோக்க தொடங்கியுள்ளன என்பதற்கு ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கொண்டுவந்துள்ள கண்டன தீர்மானம் ஒரு சாட்சி.   

இந்த தீர்மானம் நிறைவேற வேண்டுமென்றால் மனித உரிமைகள் சபையில் 24 நாடுகளின்  வாக்குகள்  இருந்தால்  மட்டுமே  முடியும் . இலங்கைக்கு எதிராக 22 நாடுகள் தயாராக இருக்கின்றன. ரஷ்யா, சீனா இலங்கைக்கு ஆதரவாக இருக்கின்றன. இத்தீர்மானம் வெற்றி பெற்றுவிட்டால் இன அழிப்புக்கு பதில் சொல்ல கூடிய கட்டத்திற்கு இலங்கை வந்துவிடும். விசாரணைகள், பொருளாதார தடைகள் என்று பாயும். ராஜபக்சே என்னும் அரக்கனின் ஆட்டத்தை அடக்க இது ஒரு சந்தர்ப்பமாக கூட இருக்கும்.  

S. M. கிருஷ்ணா  சொல்கிறார்   "இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்காக உறுப்பினர்கள் அவையில் வெளியிட்ட கவலை, உணர்வுகளை நானும் பகிர்ந்து கொள்கிறேன். இலங்கையில் போர் முடிவுக்கு வந்த நாள் முதல் அந்நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு உதவிகளைச் செய்ய வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டு இந்திய அரசு செயல்பட்டு வருகிறது " என்று 

யாருக்கு வேண்டும் இவர்களின் கவலை,பரிதாப அறைகூவல்கள், இன்னுமா நாம் இவற்றை எல்லாம் நம்பிக்கொண்டிருக்க வேண்டும். எதை சொன்னாலும் நம்பிவிடுவார்கள் மக்கள் என்பதே அரசியல்வாதிகளின் எண்ணம். ஆனால் அரசுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டால் என்னாகும் என்பதை புரிந்துகொள்ள மறந்துவிடுகிறார்கள்.

"இலங்கை அரசு உண்மையான அக்கறையுடன் செயல்பட்டு தமிழ்ச் சமூகத்தினரின் குறைகளைத் தீர்க்கும் என்ற நம்பிக்கையைத்தான் இந்திய அரசு வைக்க முடியும்"  - எஸ்.எம்.கிருஷ்ணா 

கொந்தளித்து கொண்டிருக்கும் நம் மன உணர்வுகளை சட்டை செய்யாமல் எத்தகைய அசட்டையான பதில் இது !!?

சிங்கள இனவாத வெறிபிடித்த அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த இது ஒரு சந்தர்ப்பம். இனியும் மத்திய அரசு மௌனம் சாதித்து கொண்டும் அலட்சியமான பதில்களை சொல்லிக் கொண்டும்  இருந்தால் தமி(ழ்)ழக மக்கள் வேடிக்கைப் பார்க்க மாட்டார்கள் என்பதை உணர்த்தியாக வேண்டும்.

புதிய தலைமுறையில், சுதர்சன நாச்சியப்பன் (இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினர்)

"இலங்கையில் நடந்தது அனைத்தும் விபத்து தான்... விபத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு...நாங்கள் முதலுதவி செய்கிறோம்... விபத்து ஏன் நடந்தது எப்படி நடந்தது... ஆராய்வது எங்கள் வேலையல்ல... அதை இலங்கை பார்த்து கொள்ளும் "என்கிறார். தமிழ்நாட்டுல இருந்து இவரை தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பின மக்களுக்கு நல்லா கொடுக்கிறார் விளக்கம்...?!!

எப்படி இப்படி ஒரு பொறுப்பற்ற பதிலை சொல்ல முடிகிறது என தெரியவில்லை. பெண்களும், பிஞ்சு குழந்தைகளும் கொத்துகொத்தாக கொல்லப்பட்டதுக்கு பேர் கொலை இல்லாம வேறென்ன...?!  இதை விபத்து என்று சொல்ல எப்படி மனம் வருகிறது. 

மத்திய அரசின் தயக்கம் 

இத்தீர்மானத்தை இலங்கைக்கு எதிராக மத்திய அரசு ஆதரித்தால் நாளையே இலங்கை 'இந்தியா சொல்லித்தான் இன படுகொலையை நாங்கள் செய்தோம்' என்ற உண்மையை சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில் தான் இந்த விசயத்தில் மத்திய அரசு சமாளிக்கிறதோ என சந்தேகம் வருவது இயற்கை. 

பொதுவாக பார்த்தால் அமெரிக்கா செய்திருக்கும் மனிதஉரிமை மீறல்கள் மிக அதிகம் என்றபோதிலும் இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்திருப்பதின் உள்நோக்கம் எதுவாக இருப்பினும், இத்தீர்மானத்தை இந்தியா கண்டிப்பாக ஆதரித்தே ஆகவேண்டும். மக்களுக்காகவே இந்த அரசு என்று சொல்லிகொண்டிருக்கும் தமிழக அரசும், மக்களுக்காக எதையும் செய்வோம் என்று மார் தட்டிகொள்ளும் எதிர்கட்சிகளும் இந்த ஒரு விசயத்திலாவது ஒன்றாக இணைந்து மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். 

மக்களுக்கு எதிராக யார், எந்த நாடாக இருந்தாலும் கொலைபாதக செயலை செய்தால் அதை இந்திய அரசு எதிர்த்தே ஆகும் என்பதை உலகுக்கு தெரியபடுத்த வேண்டும். இப்போது இலங்கைக்கு எதிராக தீர்மானம் என சொல்லும் அமெரிக்காவே நாளை மனிதஉரிமை மீறல் செய்தாலும் அதையும் இந்தியா எதிர்க்கும் என்பதை அழுத்தமாக பதிவு செய்தாக வேண்டும். இந்தியா காந்தியம் பேசிகொண்டிருந்தால் மட்டும் போதாது...

அனைத்து தமிழ் நெஞ்சங்களும் ஓங்கி நமது குரலை தெரிவிக்க வேண்டிய  ஒரு நேரம் இது. நம் சகோதர உறவுகளுக்கு ஆதரவாக நாம் இருக்கிறோம் என்பதை இதன் மூலம் தெரிவித்து அவர்களுக்கு தைரியம் கொடுப்போம். 

ஒன்றிணைந்து நமது குரல் ஒலிக்கட்டும் மூடிக்கிடக்கும் செவிகள் திறக்கும் வரை...மத்திய அரசு இத்தீர்மானத்திற்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என்றே வலியுறுத்துவோம்...!! 

வாழ்க எம்மக்கள் ! ஓங்குக தமிழ் மக்களின் ஒற்றுமை !!


முக்கிய குறிப்பு


உலகமெங்கும் தமிழர்கள் இத்தீர்மானத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என வற்புறுத்தி,வலியுறுத்தி கண்ணீர் விட்டு கொண்டிருக்கும் இந்த நிலையில், இதில் இருக்கும் சில அரசியல் தந்திரங்கள் இவையாகவும்  இருக்கலாம், அது என்ன என்று அவசியம் படித்துத்தான் பாருங்களேன்... 


காய்கள் நகர்த்தும் காங்கிரஸ் ! ஐநாவில் அரங்கேறப் போகும்  இலங்கை எதிர்ப்பு நாடகம்...!