ஆணாதிக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆணாதிக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், நவம்பர் 6

இணையம் - ஒரு 'சின்'ன விவகாரமும், ஆணாதிக்கமும்...!!?

இணையத்தில் விவாதிப்பதற்கு காரச்சாரமாக ஒரு விஷயம் கிடைத்து ஒரு மாதம் ஓடிவிட்டது, இந்த ஒன்று பலவாகி, பலரையும் பலவிதத்தில் யோசிக்க,வசைபாட,விவாதிக்க,எழுதவும் வைத்துக்கொண்டிருக்கிறது... அவர்கள் எல்லோரின் புண்ணியத்தில் எனக்கு பூர்வ ஜென்ம ஞாபகமே வந்துவிடும் போல...!? :) அந்த அளவிற்கு பல தலைமுறை வரலாறுகளை தோண்டி கிளறிக் கொண்டிருக்கிறார்கள். எதைப்  பற்றிய பிரச்சனை என்பதே இந்த நிமிஷம் மறந்து பின்நவீனத்துவம்னா என்னனு யோசிச்சிட்டு இருக்கேன்.:) 

நண்பர் ஒருத்தர் கேட்டார், பெண் சம்பந்தப்பட்ட இதை பற்றி பெண் பதிவர்கள் அவ்வளவா ஏன் கருத்துக்களை தெரிவிக்கவில்லை என்று...ஆதரவாக, எதிராக, நடுநிலை என்று மூன்றில் எதையோ ஒன்றை சார்ந்து பேசணும் இல்லைனா மௌனமா இருக்கணும். இந்த விசயத்தின் ஆரம்பம், முடிவு பற்றி எதுவும் தெரியாமல் என்னனு எழுத??!  (சம்பந்தப்பட்ட அத்தனையும் படிச்சிட்டு பதிவு எழுதணும்னா எனக்கு இரண்டு மாசம் ஆகும்) :) நான் பதிவுலகம் வந்த புதிதில் ஒரு பெண் பதிவரை சுற்றி பாலியல் சார்ந்த கருத்து மோதல்கள், சாதியை சாடுதல் என பிரச்சனைகள் பல கட்டங்களில் நடந்தேறின. இரண்டு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். இது பெண் பதிவரின் குடும்பத்திலும் எதிரொலித்து பிரச்னை பெரிதானது. இணைய உலகில் இது போன்றவையும் நிகழும் என்ற யதார்த்தம் அப்போது புரிந்தது. அதே போல் சமீபத்திய விஷயம் இன்று பலருக்கும் ஒரு பாடமாக இருக்கிறது. எனது சொந்த(?) தளம் எதுவும் எழுதுவேன் என்று இனி சொல்ல கூட ரொம்ப யோசிக்கணும் போல !?  

இந்த பிரச்னையை பேசவோ, விவாதிக்கும் அளவிற்க்கோ எனக்கு விவரம் போறாது. அதற்குள் போகவும் விரும்பவில்லை. ஆனா இந்த பிரச்சனையை வைத்து ஒரு சிலர் சொல்லும் கருத்துக்கள் ஆண் பெண் என பிரித்து பார்பதாகவே இருக்கிறது. யாராக இருந்தாலும் சொல்லப்பட்ட கருத்தை விவாதிப்பது என்று இல்லாமல் எழுதியவரை தாக்குவது குறித்த என் வருத்தத்துடன் கூடிய  ஒரு ஆதங்கம் தான் இந்த பதிவு.

பேதம் 

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஆண் பெண் பேதம் பிரித்தும் பெண் என்றால் பாலியல் ரீதியாக விமர்சிப்பது என்பதும் மிக கேவலம், கண்டிக்கப்படவேண்டும். இச்செயல் படித்தவர்களிடத்தில் மிகுந்திருப்பது கொடுமை !! பணம் சம்பாதிக்க, அறிவை வளர்க்க பயன்படும் கல்வி, ஒழுக்கத்தை போதிக்கிறதா அல்லது அந்த போதனை அலட்சியபடுத்தபடுகிறதா ?!

முகநூலில் ஒரு பிரபல பெண்மணி ஒருவர் நடுநிலையாக பேசுகிறேன் என்று எழுதிய அந்த நோட்ஸில்  முழுக்க முழுக்க ஆண்களின் மீதான தாக்குதல் மட்டுமே அதிகம். அங்க சுத்தி இங்க சுத்தி தவறுகள் அத்தனையையும் தூக்கி ஒருசாராரின் மீது போடுவது எப்படி நடுநிலைமை ஆகும்...??!

ஆண்  பெண்ணை வசைபாட முதலில் தேர்ந்தெடுக்கும் வழி பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் என்கிறதாம் பெண்ணிய உலகம்...??!!

அதனால் இனிமேல்,

சாதி, மதம், மொழி போன்ற பிரச்சனைக்குரிய தலைப்புகளின் வரிசையில் ஆண்களையும் சேர்த்து விடலாம் போல ...!

ஒருவர் இப்படியா பேசினார் ?! எப்படி பேசலாம் ?! என்று பாலினம் ரீதியாக மட்டும் பார்த்து பேசுவது சரியா ?!

இணையம் மூலமாக ஒரு சில வரிகளில் எவ்வளவு பெரிய பிரபலங்களையும் நெருங்கிவிடமுடியும், அதிகம் நெருங்கினால் வம்பில் முடிந்து வாழ்வே கேள்வி குறியாகிவிடும் என்பதை தற்போது காலம்  எச்சரிக்கிறதா ?!

அவ்வளவு பெரிய குற்றமா ?

சம்பந்தப்பட்டவர்கள் அனைவரின் மீதும் தவறுகள் இருக்கிறது, அதற்கு சிறைத் தண்டனை என்பது மிக அதிகம் என்பதே எனது புரிதல். தெருவில் ஒரு பெண் மானபங்கபடுத்தபடும் போது  வேடிக்கை பார்க்கும் கூட்டமும்,  காவல் நிலையம் வரை பந்தாடப்படும் பெண்மை பற்றி கூட பெரிதாக கவலைபடாதவர்கள் தானே நாம்...

பெண்ணுக்கெதிராக அரங்கேறும் கேவலங்கள் தான் எத்தனை எத்தனை ?! அருவருக்கச்செய்யும் அவலங்கள்,கொடுமைகள் பார்த்து  கலங்காத மக்கள், அடுத்தவரின் தனிப்பட்ட அந்தரங்கத்தை கூட கள்ளகாதல் என்று நாமகரணம் சூட்டி அதிலும் பெண்ணை மட்டுமே சாடும் விவஸ்தைகெட்ட சமூகம் !! பெண் கெடுக்கப்படுகிறாள் என்றால் அவளது சம்மதமும் அதில் இருக்கிறது என்று வாய்கூசாமல் சொல்பவர்கள் வாழும் சமூகத்தில், எழுத்துக்கள் மன உளைச்சலை கொடுத்ததால் பாதிக்கப்பட்டு காவல்துறையில் புகார் என்பதும் அதுக்கு சிறைத்தண்டனை என்பதும் வினோதம் !

தண்டனை சரியென்றால் இதுவரை இங்கே பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட அத்தனை பெண்களுக்கும் நீதி கிடைத்திருக்கிறதா? இப்போது ஊடகம் எங்கும் ஒரே பேச்சாக பேசப்படும் அளவிற்கு பிற விசயங்கள் பேசப்பட்டிருக்கிறதா?  காரணங்கள் என்னவேண்டுமானால் இருந்துவிட்டு போகட்டும், பெண் என்றால் பெண்தான். இன்று அந்த பெண்ணிற்கு ஆதரவு தெரிவித்து பொங்குகிறவர்கள் பிற பெண்களுக்கு ஒரு பிரச்சனை என்றாலும் உடன் நின்றிருக்க வேண்டுமே...??!

பெண்களுக்கெதிராக  நடக்கும் பல பெரிய மோசமான கொடுமைகளுக்கு மத்தியில் இந்த விவகாரம் எனக்கு சிறியதாகவே தெரிகிறது.

சாதி,  மதம், இனம் என்பதன் முழுமையான புரிதல் இல்லாமல் வெறும் உணர்ச்சிவசப்படுதல் மட்டுமே இன்று மேலோங்கி நிற்கின்றது. இதற்கு படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற விதிவிலக்கு இல்லை. சாதியை குறித்து ஏதும் கருத்து வந்தால் என்ன ஏது என்று தீர யோசிக்காமல் ஆவேசகருத்துக்களை அள்ளி விடுபவர்கள் அதிகம். கல்வி, அரசியல் , சமூகம் என்று அனைத்து இடத்திலும் சாதி பெருமைகள் கொண்டாடபடுகிறது. அதன் அடிப்படையில் வளரும் மாணவர்களின் நிலை சுயநலத்துடன் கூடிய ஒன்றாக மட்டும் இருக்கிறது. தனது கல்வி, தனது வாழ்க்கை , தன் சந்தோசம் என்ற குறுகிய வட்டத்தில் சுற்றிவர சாதி உதவலாம் என்பதை தவிர வேறு என்ன சொல்ல...?!

சக  மனிதனை மதித்து அன்பும் அக்கறையும் செலுத்தும் மனப்பான்மை தற்போது குறைந்து சுயநலம் மிகுந்திருப்பதால் யார் என்ன சொன்னாலும் அதை குறையாக மட்டுமே பார்ப்பது வழக்கமாகிவிட்டது. நல்லவை குறைந்து தீயவை நிறைந்துவிட்டது. 

எது கருத்து சுதந்திரம் ?

சக மனிதனை பாதிக்காத எந்த கருத்தையும் தெரிவிக்கலாம், அதுதான் கருத்து சுதந்திரம் அப்படின்னு நினைக்காதிங்க. தனக்கு என்ன சொல்ல வருதோ அதை சொல்லலாம் அதுதான் கருத்து சுதந்திரம்...!!!!? ஒரு விஷயத்தை பலவிதமாக திரித்து கூறுவது, ஆபாசமாக கருத்திடுவதை நியாயபடுத்துவது, எழுதிய கருத்தை அழிப்பது, வக்கிரமாக வன்மமாக பேசுவது, வேறு பல பெயரில் ஒளிந்து கொண்டு கருத்திடுவது, சாதி, மதம் என்ற போர்வையை போர்த்தி கொண்டு பேசுவது இது எல்லாமே கருத்து சுதந்திரத்தில் சேரும் என்கிறார்கள். மொத்தத்தில் எதன் அர்த்தமும் புரியாத ஒரு குழப்பத்தில் நான் !!

ஒருவருக்கு சாதாரண வார்த்தையாக இருப்பது பிறருக்கு மிக ஆபாசமான வார்த்தையாக தெரியும். அது போன்றவைகளை கேட்டு பழகாத சூழலில் வளர்ந்திருக்கலாம். ஊருக்கு ஒரு தமிழ்,  சென்னையில் வா போ என்றால் சாதாரணம், ஆனால் இங்கே,  என்ன'ப்பா' என்றால் 'நான் என்ன உன் வீட்டு வேலைக்காரனா?' என்கிறார்கள். வார்த்தைகளை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கை தேவை. அழுத்தமாக சொல்கிறது தற்போதைய பிரச்சனை !

எதிரான கருத்து ஒன்று எங்கோ வெளியிடப்படும் போதும், அது ஒருவேளை தன்னை குறித்துத்தானோ என்ற சந்தேகமே பல பிரச்சனைகளுக்கு ஆரம்பம் என்பது  பதிவுலகில் சகஜம்.  நம்மை குறித்த தவறான கருத்துக்களுக்கு பதில் சொல்லிகொண்டிருப்பது பிரச்சனையை அதிகரிக்குமே தவிர குறைக்காது .

முகநூல், பிளாக், டுவிட்டர் எதாக இருந்தாலும் நாம் முன் வைக்கும் கருத்துக்களை வைத்துதான் நாம் அறியபடுகிறோம். நம்ம சொந்த தளம் நான் எதுவும் சொல்வேன் என்ற ரீதியில் கருத்துக்கள் இருந்தால் பிறரும் அதே ரீதியில் தான் நடந்துகொள்வார்கள். பிறரது கருத்துக்கள் பிடித்தால் ஏற்றுக்கொள்வதும், பிடிக்கவில்லை என்றால் நிராகரிப்பதும் நமது உரிமை என்பதை நினைவில் வைத்துகொள்வது நம் மனதிற்கும் உடலுக்கும் நல்லது !

பெண்களே

ஆண்களை குறை சொல்றப்போ தவறாம பெண்கள் நாம சொல்றது 'உங்க அக்கா, தங்கை, அம்மா பத்தி கூட இப்படித்தான் பேசுவீங்களா?' என்று... ஆண்களை ஒட்டுமொத்தமாக மோசமானவங்க,ஆணாதிக்கவாதிகள், பாலியல் துன்புறுத்தல் பண்றவங்க என்று சொல்லும் போது நம்ம வீட்லயும் அப்பா,சகோதரன்,கணவர், மகன் என்று இருப்பார்களே அப்போ அவர்களையும் சேர்த்து தான் சொல்றோமா ?!

இதுவரை ஆண்கள் யாரும் பெண்களை பார்த்து இப்படி கேட்டார்களா என தெரியவில்லை !!?

இதுவும் ஆணாதிக்கம் ??!

தற்போது நடந்த பிரச்சனையிலும் இது முழுக்க ஆணாதிக்கம் அடிப்படையிலானது என்று கூறப்படுவது தவறு. பெண்ணை பற்றி ஆண் பேசினாலே அது ஆணாதிக்கம் என்று முத்திரை குத்தபடுவதை எண்ணி வருந்துகிறேன். இந்த பெண்ணியம் பேசுபவர்கள் எந்த ஒரு விசயத்துக்கும் இரண்டு பக்கம் இருக்கும் என்பதையே பார்க்க மாட்டார்களா ?! ஆணாதிக்கம் என்ற கண் கொண்டு மட்டுமே பார்ப்பதால் உண்மையில் அந்த ஆண் எதை குறித்து சொல்ல வருகிறான் என்பதன் உட்கருத்து, பொருள் புரிந்து கொள்ளபடாமலேயே போய் விடுகிறது...!!? சமயங்களில் சிறந்த பொருள் பொதிந்த வாதங்களும் திசை மாறி போய்விடுகின்றன...!! 

ஒரு பெண்ணை அதிகபட்சமாக இழிவு படுத்த எவரும் கையில் எடுக்கும் ஆயுதம் பாலியல் ரீதியிலான கருத்திடல் . இதை ஆண்கள் மட்டும் செய்வது இல்லை, பெண்ணே மற்றொரு பெண்ணை அப்படி பார்க்கலாம், பேசலாம். இதை யாரும் ஆணாதிக்கம் மாதிரியான கருத்து என்று வசைபாடுவதில்லை, அதே சமயம் ஒரு ஆண் கூறும் போது மட்டும் ஏன் ஆணாதிக்கம் என்று பெரிதாக கூச்சலிட வேண்டும்...?

ஒரு ஆணை எதை சொல்லி, எந்த இடத்தில் தட்டினால் அவனுக்கு வலிக்கும் என்று ஒரு பெண்ணுக்கு நன்றாகவே தெரியும். இரக்கத்தை சம்பாதிக்க தன் விருப்பத்தை பூர்த்தி செய்ய எந்தவிதமாக பேசவும் சிலரால் முடியும். பெண் என்பதால் சலுகை கொடுக்கணும் என்ற எதிர்பார்ப்பில் அதிகம் அடிபடுவது ஆண்கள் தான்.  ஆண் ஒரு பெண்ணை பழிவாங்க வார்த்தைகளை பிரயோகிப்பது முதலில் அவளது உடலை நோக்கி என்றால் ஒரு சில பெண்கள் கையில் எடுப்பதும் அதே உடலை(வைத்துத்தான்) நோக்கிதான்  என்பதுதான் வருத்தத்துக்குரிய உண்மை !!?   

சுயபரிசோதனை

இந்த பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்கள், வேடிக்கை பார்த்தவர்கள்  ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த விதத்தில் கருத்துகளை அள்ளித் தெளிக்கிறார்கள். எப்போதோ தாங்கள் பட்ட காயத்திற்கு இப்போது மருந்திடுகிறார்கள் போலும். ஆனால் இணையத்தில் இயங்கும் அனைவரையும் நன்றாக சுய பரிசோதனை செய்ய வைத்திருக்கிறது டுவிட்டர் விவகாரம் ! பேசத் தெரியும் என்பதற்காக எதையும் பேசலாம் என்று கண்டபடி உளறிக்கொட்டிக் கொண்டிருந்தவை இனிகுறையலாம்.
ஆண் பெண் இருவரும் தங்களின் எல்லை, நிலை, தகுதி அறிந்து நடந்து கொள்வது அவசியம். அது வீடாக இருந்தாலும் சரி பொதுவெளியாக இருந்தாலும் சரி! பகுத்தறியும் சுயசிந்தனை அற்று வார்த்தைகளை வீசுவது பூமாராங் போல திரும்பி வந்து தாக்கும் என்பதை நினைவில் வைத்து கொள்வது நலம்.

பிரச்சனையில் சம்பந்தப்பட்டவர்கள் தனிப்பட்ட தங்கள் நிலை உணர்ந்து மனிதநேயம் என்ற ஒன்றை மட்டுமே எண்ணி விட்டுகொடுத்து பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவது ஒன்றே இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும். வாழ்க்கை வாழ்வதற்காக மட்டுமே, பிறரை தூற்றவோ, பழிவாங்கவோ  இல்லை. பிறரையும் நோகடித்து தானும்  மன அழுத்தத்தில் விழும் இது போன்றவை இனியும் நிகழாமல் இருக்கவேண்டும். 

சிலரின் சுயநலம், பலரின் தூண்டுதல் என மாறி மாறி சொல்லப்படும் கருத்துக்களால் பிரச்சனை இன்னும் பெரிதாகாமல் விரைவில் நல்லதொரு முடிவுக்கு வரவேண்டுமென  இறைவனை வேண்டுகிறேன்.


பிரியங்களுடன்
கௌசல்யா




படம்  -நன்றி கூகுள்

சனி, ஜூலை 31

குடும்பத்தில் பெண்ணியம் தேவையா...?! தாம்பத்தியம் பாகம் -13

முந்தைய பதிவு...
 


குடும்பத்தில் பெண்ணியம்


முன்குறிப்பு 

பெரும்பாலான குடும்பத்தை ஆட்டிப்  படைப்பது இரண்டே வார்த்தைகள்தான் , ஒன்று ஆணாதிக்கம் மற்றொன்று பெண்ணுரிமை.  படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் இடத்திற்கு தகுந்தபடி பிரச்சனைகள், இதனை அடிப்படையாக வைத்து வருவதுதான். 'ஈகோ' என்று படித்தவர்கள் மேம்பட்ட ஒரு வார்த்தையை சொல்வார்கள்  .


ஆண், பெண் இருவரும் ஒன்றை புரிந்துக்  கொள்வது இல்லை, அது என்னவென்றால் ஆணாதிக்கம், பெண்ணுரிமை என்பதன் சரியான அர்த்தத்தை , அர்த்தம் என்று சொல்வதைவிட அந்த வார்த்தைகளை எங்கே பயன்படுத்த வேண்டும்....? எங்கே பயன்படுத்தக்  கூடாது.....?! என்பதைத்தான். ( எனக்கு தெரிந்த சில விளக்கங்களை இங்கே சொல்ல எண்ணுகிறேன் இது முழுக்க முழுக்க என் கருத்துகள்.  தவிர யாரையும் மனம் வருந்த செய்வது என் நோக்கம் இல்லை,  எனக்குமே இதில் சில முரண்பாடுகள், வேறுபாடுகள் இருக்கின்றன.  என்னை நான் தெளிவுப்  படுத்தி கொள்ளவுமே இங்கே எழுதுகிறேன், தெரிந்தவர்கள் உங்கள் கருத்தை சொன்னால் பலருக்கும் தங்களை , தங்கள் எண்ணங்களை சரி செய்துக்  கொள்ள உதவியாக இருக்கும். கருத்துகளை  எதிர் பார்க்கிறேன் )

ஆணாதிக்கம்

அது என்ன ஆணாதிக்கம் ? ஒரு ஆண் மற்றொரு ஆணை அதிகாரம் செய்வதையோ...? அல்லது அடக்கி ஆள்வதையோ....?  ஆணாதிக்கமாக சொல்லப்படவில்லை. பெண்களை அடக்கி அவர்கள் மேல் ஆண் என்ற திமிர்வாதத்தை  காட்டுவதையே ஆணாதிக்கம் என்பதாக கருதுகிறேன்.   இன்றைய காலக்கட்டத்தில் எந்த வீட்டில் ஆணாதிக்கம் தலைத் தூக்கி இருக்கிறது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மனசாட்சியுடன் சொன்னால் உபயோகமாக இருக்கும்.  இங்கே முக்கியமாக ஒன்றை குறிப்பிட்டே  ஆக வேண்டும், நான் பகிர்ந்துக்  கொண்டு இருப்பது தாம்பத்தியம் பற்றியது. வீட்டிற்கு வெளியே நிலவுகின்ற ஆணாதிக்கம் பற்றி எனக்கும் ஆதங்கம் உண்டு, ஆனால் குடும்பம் என்று பார்க்கும் போது இரண்டையும் ஒன்றாக  போட்டு குழம்பிக்கொள்ளக்  கூடாது.  

ஆணாதிக்கம், பெண்ணுரிமை பற்றி என்னாலும்  பக்கம் பக்கமாக பேச இயலும், மேடை போட்டு மைக் கொடுத்தால் ...!! ஆனால் பெண்ணுரிமை என்று கொடிப்  பிடிக்க குடும்பம், அரசியலும் கிடையாது, வருந்திப்  பெற்றுக்  கொள்ள நாம் நமது உரிமையை, யாருக்கும் விட்டு கொடுக்கவும்  இல்லை.

ஏன் ஏற்பட்டது? எதனால்?

ஆண்கள் பெண்கள் மீது செலுத்தும் ஆதிக்கம் என்பது நேற்று இன்று ஏற்பட்டது இல்லை.  ஆடையின்றி அலைந்த ஆதிகாலத்தில் இயற்கையால் ஏற்படுத்தப்பட்ட தற்செயலாக தீர்மானிக்கப்பட்ட ஒன்றே.  இதை கொஞ்சம் இன்று நன்றாக யோசித்து பார்த்தோம் என்றால் பெண்கள் சரிதான், அப்படியும் இருக்கலாம் என்றாவது சமாதானம்  செய்துக்  கொள்வார்கள்.  ( நான் என்னை சமாதானம் செய்துக்  கொண்டதைப்  போல )

காடுகளில் விலங்குகளுடன் விலங்காக  வாழ்ந்துக்  கொண்டிருந்த அந்த நேரத்தில் ஆண், பெண் இருவருமே வேட்டையாடி  தங்களது பசியை ஆற்றிக்  கொண்டு இருந்தார்கள். அப்படி இருந்த ஒரு சில கட்டத்தில் மாதவிடாய் நேரத்தில் ஏற்படக்கூடிய ரத்தவாடையில் கவரப்பட்ட மிருகங்களால் பெண்கள்  பாதிப்புக்கு உள்ளானார்கள். அதனால் ஆண்கள், பெண்களைப்  பாதுகாப்பாக ஒரு இடத்தில் இருக்க வைத்து விட்டு , அவர்கள் வேட்டையாடச்   சென்றார்கள்.  வேட்டையாடிக்  கொண்டு வந்து பெண்களிடம் கொடுத்து, தங்கள் பெண்களையும்  , குழந்தைகளையும் கவனித்துக்  கொண்டார்கள்.  இப்படித்தான் ஆண்கள் வெளியில் வேலைக்கு செல்வதும், பெண்கள் வீட்டை கவனித்துக்  கொள்வதுமாக இருந்திருக்க வேண்டும்.  


நாளடைவில் மனதளவிலும் ஆண்களுக்கு நாம் தான் பெண்களைவிட உயர்ந்தவர்கள் , நமது தயவு  இல்லாமல் அவர்களால் வாழமுடியாது....நாமே சிறந்தவர்கள்....நமது பேச்சைத்தான் பெண்கள் கேட்கவேண்டும்....எதிர் கேள்வி கேட்கக் கூடாது...அடங்கி இருக்கவேண்டும் என்பதாக மனதில் பதிந்து இருக்க வேண்டும். அதுவே இன்று வரை பெரிய அளவில் பெண்களை அடக்கி ஆள்வதில் தொடங்கி கொடுமையில் வந்து முடிந்து இருக்கவேண்டும். வேறு என்ன சொல்வது எல்லாம் இயற்கையின் விளைவுகள். 


பெண்ணுரிமை

பெண்களுக்கு எது உரிமை என்று  விளக்குவதே  பெரும்பாடாக இருக்கிறது. தங்களுக்கு என்ன தேவை என்றே தெரியாமல் இருப்பவர்களை என்ன சொல்வது....? கணவனை அடக்குவது மட்டுமே பெண்ணுரிமை என்றே பெரும் பாலான குடும்பப்பெண்கள் எண்ணுகிறார்கள்.  'ஆணுக்கு சரிசமம்' என்ற வார்த்தை இப்போது காலாவதி ஆகிவிட்டது, அதற்கு பதில் 'ஆணை விட தான் எதில் குறைந்துப்  போய் விட்டோம்' என்ற வாதமே பிரதானமாக  இருக்கிறது.  என் விருப்பபடி குடும்பம் நடக்கவேண்டும் என்று ஆண் அதிகாரம் செய்வது போய் இப்போது தன் விருப்பப் படி  தன் கணவன் நடக்க வேண்டும் என்ற குரலே பல வீடுகளில் எதிரொலிக்கத்   தொடங்கி விட்டது.  இது நல்ல முன்னேற்றம் அல்ல என்பது மட்டும் புரிகிறது.  ஆணின் அதிகாரம் ஒரு கட்டத்தில் அமைதி பெரும், ஆனால் பெண்கள்  செய்யும் அதிகாரம்......??!! 

உண்மையில் ஒரு ஆண் பிறக்கும்போது ஆணாதிக்கவாதியாக பிறப்பதில்லை, ஆணாதிக்க மனப்பான்மை என்ற  பாலை  ஊட்டி வளர்த்தெடுப்பது எல்லாம் அவனைச்  சுற்றி இருக்கும் பெண்களால் மட்டுமே  என்று என்னால் உறுதியாக சொல்லமுடியும் .  ஆக பெண்ணுக்கு பெண்ணே எதிரி !??

எனவே 

பெண்ணுரிமை கேட்டு வீட்டிற்கு வெளியில் போராடுங்கள், வீட்டுக்குள் வேண்டாமே.... கணவனின் அன்பைக்  கேட்டு  மட்டுமே போராடுங்கள் அதுவும் அன்பாக.... வீட்டில் எதற்கு இடஒதுக்கீடு..... ? அதிகாரம் செய்யும் கணவனையும் உங்கள் அன்பால் கட்டி அரசாளுங்கள்..... ஒரு கட்டத்தில் அந்த ஆணின் அதிகாரம் புறமுதுகைக்   காட்டி ஓடிவிடும்

கணவனைப்  பார்த்து 'ஆணாதிக்க மனபான்மையுடன் என்னை நடத்துற 'என்று மனைவி குறைப்பட்டுக்  கொள்வதும் ,  மனைவியைப்  பார்த்து ' நான் ஆண்  அப்படித்தான் இருப்பேன் , நீ அடங்கி இரு ' என்று கணவன் சொல்வதும்  அநாகரீகம்.

ஆண்கள் தங்களது இத்தகைய மனப்பான்மையை வெளிக்காட்டாமல் இயல்பாக மனைவியை கையாளும் போதுதான் அங்கே ஆண்மை கம்பீரம் பெறுகிறது.  மனைவி தன்னை விட எதிலும் தாழ்ந்தவள் இல்லை , அவளது எண்ணத்திற்கும், கருத்திற்கும் கண்டிப்பாக மதிப்பு கொடுக்கவேண்டும் என்று கருத வேண்டும் .    

குடும்பத்தில் ஏற்படக்கூடிய எந்த விசயத்திற்கும் ஆண், தான் மட்டுமே  முடிவு செய்ய வேண்டும் என்று இல்லாமல் மனைவியின் ஆலோசனையையும் கேட்கவேண்டும். இருவரும் கூடி விவாதிக்கும் போதுதான் அந்த விசயத்தின் நல்லது, கெட்டது என்ற இரண்டு பக்கமும்  வெளிவரும், அதனால் அதை கையாள்வதும் சுலபம். தன்னிச்சை முடிவு தவறாகக்   கூடிய வாய்ப்புகளும் உள்ளது. நாளை இருவரும் சேர்ந்த எடுத்த முடிவு தவறாக இருந்தாலுமே ஒருவர்  மீது ஒருவர் பழி போடாமல்.  'அடுத்து என்ன  செய்யலாம்'  என்று அடுத்த  அடி எடுத்து வைக்க சுலபமாக  இருக்கும்.

தாம்பத்தியத்தில் " பெண்மை தோற்றாலும்  ஆண்மை தோற்றாலும்  அங்கே இறுதியில்  வெல்வது என்னவோ இருவருமேதான் "

இதன் தொடர்ச்சி நாளை மறுநாள் வெளி வரும்.......
                                                                    
                                                                

                                                                                            
தொடர்ந்துப்  பேசுகிறேன்... 
உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா