மலரும் நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலரும் நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், டிசம்பர் 30

கல்யாண நினைவலைகள் தொடருகிறது...!


 முதல்  பாகத்தின் தொடர்ச்சி இந்த பதிவு...

வெடி சத்தம் பயங்கரமா கேட்டதும்,மறுபடியும் ஒரு சந்தோசம்...?! யார் வைக்கிராங்கனு பார்த்திட்டு முழுசா சந்தோஷப் படலாம்னு காரில் இருந்து எட்டி பார்த்தேன். அட வெடிப்பத்த வைக்கிறது எல்லாம் என் பெரியம்மா பசங்க...! அவங்க ஊர் சிவகாசி என்பதை அட்டகாசமாய்,  சத்தமாக  நிரூபிச்சிடாங்க...!                    

ஊர்வலம் ஒரு வழியாக  என்னவரின் வீட்டுக்கு (ம்...இனி என் வீடு !)  வந்துச்  சேர்த்தது...அங்கே வைத்து தான் வரவேற்ப்பு. ஆரத்தி எடுக்க மக்கள்ஸ்  வெய்டிங்...சினிமால மாதிரி தட்டுல எடுக்கல, ஒரு பாத்திரத்தை வச்சு எடுத்தாங்க...மூணு பேரு மாத்தி மாத்தி தனித் தனியாக   எடுத்தாங்க...(ரொம்ப திருஷ்டி பட்டுடுச்சு போல...?!) 

இப்ப கரெக்டா ஒரு பாட்டு பாடணுமே...உங்கள் யூகம் சரிதான் 'மணமகளே மருமகளே வா வா' பாட்டுதான். இன்னும் எத்தனை காலம் தான் இதே பாட்டு போடுவாங்களோ தெரியலை, ஆனா சூப்பர் பாட்டு  (இதுக்கு புதுசா ரீமிக்ஸ் யாரும் இன்னும் ரெடி பண்ணலையா?) ஆரத்தி எடுத்து வீட்டினுள் மெதுவாக  வலது காலை எடுத்து வச்சு போனோம். 

எங்க மாமியார், மாமனாரிடம் ஆசிர்வாதம் வாங்கிய பின்னர் ஒரு போட்டி ஒண்ணு இருக்குனு சொல்லி எங்க இரண்டு பேருக்கும் நடுவில ஒரு குடத்தை வச்சாங்க. குடத்தில இருக்கும் தண்ணிக்குள்ள  ஒரு மோதிரத்தைப்  போட்டு இரண்டு பேரையும் ஒண்ணா ரெடி ஸ்டார்ட் சொல்லி மோதிரத்தை எடுக்கச்  சொன்னாங்க. அடடா போட்டியான்னு ஒரு குஷில வேகமா தண்ணிக்குள்ள கையை விட்டேன், ஒரு ஐந்து செகண்ட்ல மோதிரம் மாட்டிக்கிச்சு, சந்தோசமாக  எடுத்து அருகில் இருந்த அக்காவிடம் கொடுத்தேன். உடனே பக்கத்தில் இருந்த மாமியார் 'நீ எடுக்கக்கூடாதுமா, வீட்டுகாரனுக்காக நீ விட்டு கொடுத்திடணும்' அப்படின்னு சிரிச்சிட்டே அட்வைஸ் பண்ணினாங்க...?! (அப்ப எதுக்குங்க போட்டின்னு சொல்லணும், அதுக்கு பதிலா இவரைப்  போட்டியின்றி தேர்ந்து எடுக்கப் பட்டதா அறிவிச்சு இருக்கலாமே...?!) 

எனக்கு ஒரே எரிச்சல், சரி இவர் என்னடா பண்றார்னு நிமிர்ந்து பார்த்தேன், அவங்க அம்மா மாதிரியே அழகாக  சிரிச்சிட்டு 'இந்தா மோதிரம்'னு நீட்டுறார்...இது என்னனு வாங்கி பார்த்தா, அட இது நான் கைலப்  போட்டு இருந்த மோதிரம்...?! அது எப்படி இவர் கிட்ட போச்சு...குடத்துக்குள்ள இருந்த மோதிரம் மேலேயே  என் கவனம் இருக்கிறப்ப இவர் என் கைல இருந்து கழட்டி இருக்கிறார். (அட ச்சே இது கூட தெரியாம...?!) பல்பு தொடருதோ...?!!!

மறுபடி உப்பு நிரம்பிய பாத்திரத்தில் இதே போல் மோதிரம் போட்டு எடுக்க சொன்னார்கள்...இந்த  முறை எதுக்குடா வம்பு என்று தேமே என்று கையை மட்டும் வச்சிட்டு எடுத்திட்டேன். (ரொம்ப விட்டுக்  கொடுக்க வேண்டி இருக்குமோ என்று இந்த  நொடியில் தான் எனக்குள்  ஒரு கேள்வி எழுந்தது...)ஆனாலும் உள்ளுக்குள்ள ஒரு குரல் ரொம்ப அசடா இருந்தது போதும், அலர்ட்டா இருன்னு சொல்லிட்டே இருந்தது.

அப்புறம் சில கலாட்டாக்கள் நடந்து எங்களை ஸ்டேஜில் அமர வைத்தனர். ஒவ்வொருத்தரா வந்து வாழ்த்திட்டு கிப்ட் கொடுத்திட்டு போயிட்டே இருந்தாங்க...நிறைய பேர் வந்திட்டே இருந்தாங்க...கம்பெனியில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் செட் செட்டா வந்து சின்ன சின்ன கலாட்டா பண்ணி கிப்ட் கொடுத்திட்டு சென்றார்கள் ஆனா என் நிலைமை கண்ணைக்  கட்டி காட்டில் விட்ட மாதிரி இருந்தது... எனக்கு  தெரிஞ்ச ஆள்கள் ஒருத்தர் கூட பக்கத்தில இல்லை (சாப்பிடப்  போய்டாங்களா...?? இல்லை வேலை முடிஞ்சதுன்னு ஊருக்கேப்  போயிட்டாங்களான்னு வேற தெரியலை?!!!)

நானும் பேந்த பேந்த முழிச்சிட்டு என்னவர் அறிமுகப்படுத்தி வச்சவங்களுக்கு எல்லாம் ஒரு வணக்கம் சொல்லிட்டு ஒரு இயந்திரம்  மாதிரி அவர் இன்ட்ரோ கொடுத்தவுடன்(சுவிட்ச் போட்டவுடன்...!)  கை தன்னால ஒண்ணு சேர்ந்துடும்!

அப்புறம் நாங்களும் சாப்பிடப் போனோம்...அங்கே எல்லோர்  கல்யாணத்திலும்   போல நடக்குற கலாட்டா செவ்வனே நடந்தேறியது.நான் மட்டும் இந்த உம்மணாமூஞ்சி கெட்டப்பை அப்படியே மெயின்டெயின் பண்ணினேன். என்னவோ சிரிக்கவே தோணல...அது பதட்டமா, சோர்வா, அச்சமா சொல்லத் தெரியல. 

மறுவீடு போன்ற பிற சடங்குகள் எல்லாம் முடிந்து இரவு 11 மணிக்கு தனி அறை ஒன்றுக்கு வந்து சேர்ந்தேன். கதவு திறக்கும் சத்தம் கேட்டு திடுக்கென்று விழித்தேன், இருந்த களைப்பில் அப்படியே தூங்கிட்டேன் போல...நேரம் பார்த்தேன் மணி 12 அவர் வருவதைப்  பார்த்து எழுந்து நின்றேன், அவர் வந்ததும், 'தூங்கியாச்சா, சரி கொலுசைக்  கழட்டு' என்றார் (தூங்கிரப்ப கொலுசு போடக்கூடாதானு நினைச்சிட்டே வேகமா கழட்டி வச்சேன்) 'சரி பேசாம (எனக்கு பேசத்  தெரியும்கிறத மறந்து இரண்டு நாள் ஆச்சே, என்னை போய் பேசாதே என்கிறாரே...ம்...!!?)  என் கூட வா'னு சொல்லிட்டு நடக்கத் தொடங்கிட்டார். வரிசையா உறவினர்கள் படுத்துத்  தூங்கிட்டு இருந்தாங்க, சத்தம்  கேட்டு அவங்க எழுந்துவிடாம மெதுவாக  (கொலுசை இதுக்குதான்  கழட்ட சொன்னாரா...ம்...!) மேல கால் படாம மெதுவா ஒவ்வொருத்தரா தாண்டிப்  போயிக்கிட்டே இருந்தோம். அப்புறம் ஒரு கதவைத்  திறந்து வெளியே வந்தோம், தோட்டம் போல இருந்தது. (காற்றில் மல்லிகை மணம் வந்ததே...!) 

ஒரு சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தோம். அவர் பேச தொடங்கினார், 'நகரத்தில் வளந்தவ, இந்த கிராமத்து சூழ்நிலை பழகிக்க சிரமமா இருக்கும் போகப்  போக சரியாகிவிடும். ஞானஸ்தானம் எடுக்கும் போது உன் கண்ணீர் பார்த்தேன், மனதில் இந்துக்  கடவுளை நினைச்சிட்டு வேற மதம் மாறும் போது இருக்கும் வருத்தத்தை என்னால் உணர முடிகிறது. அதே போல் உன் நெற்றி பொட்டை என் அண்ணி எடுக்கும் போது உன் முகம் மாறுவதையும் கவனித்தேன், திருமணம் இந்த முறையில் நடக்கவேண்டும் என்பது வயதான என் பெற்றோரின் விருப்பம் அதை மீற முடியாது  . அதே நேரம் இனி 'உனது எனது விருப்பம்' தான் நம் சந்தோசத்தைத்  தீர்மானிக்கும். பெரியவர்களின் மனம் வருத்தப்படாமல் நாம் இருவரும் நடந்துக்  கொள்வது நம் கடமை அவ்வளவே. 

உன் விருப்பத்திற்கு நடக்க உன்னை யாரும் இங்கே தடைச்  சொல்ல மாட்டாங்க...எல்லோரும் ரொம்ப அன்பானவர்கள்...யாருக்காகவும் உன் சுயத்தை நீ இழக்கக் கூடாது...பொட்டு வச்சுக்கோ அது உன் முகத்திற்கு முழுமைக்  கொடுக்கிறது...அப்புறம் இறுக்கமா இருக்காத, உன் வீடு மாதிரி  நினைச்சுக்க...இந்த வீடு, இந்த உறவுகள், அப்புறம் நான், எல்லாம் சகஜம் ஆகட்டும். நம் கல்யாணம் அவசரமாக  முடிந்து இருக்கலாம், ஆனால் இன்றே வாழ்ந்து விடணும் என்பதற்கு எந்த அவசரமும் இல்லை, இந்த ஊரில் இருக்கிற கோமதி அம்மன் கோவில் ரொம்ப பிரபலம், கல்யாண சந்தடி எல்லாம் ஓய்ந்தப்பின் முதலில் அந்த கோவிலுக்குப்  போவோம், ஆசைத்தீர சாமி கும்பிடு...வேண்டுதல் எதுவும் இருந்தா நிறைவேற்றிக்கோ...சந்தோசமா இயல்பா ஆனப்பின்னாடி நம் வாழ்க்கையைத்  தொடங்குவோம் சரியா...??!" என்றார்.

நான் அப்படியே மெய் மறந்து அவர் பேசுவதைக்  கேட்டுட்டே இருந்தேன்...கடவுள் என்னை மட்டும் ரொம்ப ஸ்பெசலா ஆசிர்வதிச்ச மாதிரி இருந்தது. (என்னவோ நான் இந்திய மண்ணையே  மிதிக்காத மாதிரியும், அப்பத்தான் பிளைனில்  இருந்து இறங்கியது மாதிரியும் ஓவரா சீன் போட்ட என்னை என்ன பண்ணலாம்?!!!)சற்று   முன்வரை  எனக்கிருந்த மாறுபாடான எண்ணம் முழுவதையும் அப்படியே நொறுக்கி போட்டு விட்டார்.
                          
'தவறான எண்ணங்களே பெரிய தவறுதான்' என்பதை அப்போது நான்   உணர்ந்தேன். 

மனதினுள் மெல்ல  கவிதை ஒன்று வளரத் தொடங்கியது...கவிதை மட்டுமா...காதலும் தான்?!!

*****

பின் குறிப்பு
இதுவரை என் நினைவலைகளை பொறுமையாக படித்த(முழுசா படிச்சீங்களா...?!) உங்கள்  அனைவரையும் மீண்டும்  புது வருடத்தில் புது உற்சாகத்துடன், நல்ல பதிவுகளுடன் சந்திக்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் என் அன்பான 'புத்தாண்டு வாழ்த்துக்கள்' !!


  




பிரியங்களுடன் 
கௌசல்யா
  

திங்கள், டிசம்பர் 20

கல்யாண நினைவலைகள்...!

Marriage is made in heaven


திருமணம் என்ற பந்தம் வேறுபட்ட கலாச்சாரம், சூழ்நிலையில் வளர்ந்த இருவரை இணைத்து வாழ்வின் இறுதிவரை தொடர்ந்து ஒன்றாக பயணிக்க வைக்கிறது. இந்த பயணத்தில் பல மேடு, பள்ளங்கள் இருந்தாலும் அதை வெற்றிகரமாக கடந்து செல்வதற்கு பரஸ்பர அன்பு அவசியப்படுகிறது. அந்த அன்பு சட்ரென்று வரவழைக்கக்  கூடிய   மந்திர செயல் அல்ல. மெல்ல மெல்ல இதழ் விரித்து மலர்ந்து மணம் பரப்பும் அழகிய ரோஜா மலரைப்  போன்றது. எங்கள் இருவருக்கும் இடையிலும் அன்பு ஒரே நாளில் வந்துவிடவில்லை,  பூ மலருவதே தெரியாத மாதிரி மலர்ந்த அந்த அன்பு தான் இன்று வரை மணம் பரப்பி கொண்டிருக்கிறது. 

முதல் நாள்

திருமணத்திற்கு முன் தினம் எங்களின் நிச்சயதார்த்தம் எங்கள் சொந்த ஊரில் வைத்து  நடந்தது.....! சென்னையில் இருந்து மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே சொந்த ஊர் பக்கம் (குற்றாலச்   சாரல் கொட்டமடிக்கும் தென்காசி) அதுவும் ஒரு வாரம் மட்டும் எட்டி பார்க்கும்  எங்களுக்கு, இந்த சூழ்நிலை எல்லாமே ரொம்ப புதுசு...! எங்கு பார்த்தாலும் உறவினர்கள் சூழ்ந்து அந்த இடமே கலகலப்பாய் இருந்தது....என் அண்ணனின் நண்பர்கள் வேறு அவர்கள் பங்கிற்கு சவுண்ட் கொடுத்திட்டு இருந்தார்கள். அதில் ஆங்கிலோ இந்தியன் நண்பன் ஒருவர் , அவரை வயதான பாட்டிகள் எல்லாம் சூழ்ந்துக்கொண்டு அவர் கடிச்சித் துப்பிய  தமிழை ரசிச்சிட்டு இருந்தது நல்ல காமெடியாக  இருந்தது. 

ஆனால் நானும் என் சகோதரர்கள் மட்டும்  திருதிருனு (ஏன் திருமதி திருமதின்னு போடக்கூடாது...??!) முழிச்சிட்டு இருந்தோம். அப்ப சினிமாவில் பார்த்த மாதிரியான ஒரு கெட்டப்பில் பின்னால் சிலர் புடைச் சூழ வெள்ளையும் வேஷ்டியுமாய் நாட்டாமை ஒருவர் வந்தார். அதுவரை ஸ்லோமோஷனில் நடந்துக் கொண்டிருந்த எல்லோரும் என்னவோ ஏதோ என்று ஓடுவதை பாவம்போலப்  பார்த்திக்கிட்டு இருந்தேன். 

பெரியவர்கள் அனைவரும் முன்னாடி உள்ள ஹாலில் போய் அமர தொடங்கினர். நான் இரு அறைகள் தள்ளி இருந்தேன். இருபது பேர் வட்டமாக அமர்ந்து மும்முரமாக  எதைப்  பற்றியோ விவாதித்து கொண்டு  இருந்தார்கள். அங்கே என்ன பேசுகிறார்கள் என்று என் தம்பி அடிக்கடி வந்து நேரடி ஒலிபரப்பு செய்துக்  கொண்டிருந்தான். திடீரென்று சத்தமாக ஒரு குரல் (வேற யாரு நாட்டாமை தான்...! ) "தாய் மாமா எங்கப்பா ?? ", இதோ வந்திட்டேன் என்று என் அம்மாவின் அண்ணன் குரல் கொடுத்துக்  கொண்டே வந்தார். ஊரில் (ஸ்ரீவில்லிபுத்தூர்) இருந்து அப்போது தான் வந்திருக்கிறார் (அது எப்படி சரியான நேரம் உள்ளே என்ட்டர் ஆனார்... ஆச்சரியம்....??!! ) 

சம்பிரதாய  பேச்சுகள் எல்லாம் ( ஒரு மணி நேரமாவா....??!!)  நடந்து முடிந்து என்னை அழைத்தார்கள். என்னை  அழைத்து வந்த அக்கா (பெரியம்மா மகள்) என் காதில் அப்ப அப்ப மெதுவா ரன்னிங் கமெண்டரி சொல்லிட்டே வந்தாங்க. தலையை குனி...... மெதுவா நட.... எல்லோருக்கும் பொதுவா ஒரு வணக்கம் சொல்.....!!  சரி என்று வணக்கம் சொன்னதும் ஒரு தட்டை கொடுத்தார்கள். "சீக்கிரமா 5 நிமிசத்தில இந்த புடவையை மாத்தி பொண்ணைக்  கூட்டிட்டு வாங்க (ஒரு மணி நேரம் பேசினப்ப தெரியலையா...நான்  டிரஸ் மாத்த  மட்டும் வெறும் 5 நிமிஷமா...? நாட்டாமை தனியா மாட்டின நீ  தொலைஞ்ச...)  ஒரு வழியாக பத்து நிமிசத்தில் மறுபடி  அழைத்து வரப்பட்டேன்.

அப்ப நாட்டாமை என்னை பார்த்து ஒரு லுக் விட்டார் பாருங்கள் நடிகர் திலகம் மாதிரி...நானும் ஒண்ணும் புரியாம அன்பா ஒரு சிரிப்பு சிரிச்சேன்....?! "தாயீ எல்லார் கால்லையும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்க" (இதுக்கு தான் அந்த லுக்கா...?!)  நானும் சரி ஆசிர்வாதம் தானே  என்று புடவையை நல்லா இடுப்பில் ஒரு சொருகு சொருக்கிட்டு விழ தயார் ஆனேன். முதலில் சாஷ்டாங்கமா அம்மா, அப்பா அப்புறம்.... மெதுவா திரும்பி பார்த்தா,  ஒரு இருபது பேருக்கு மேல வரிசை கட்டி நிக்கிறாங்க....?! இது என்னடா சோதனை என்று பரிதாபமாக அம்மாவை தேடினா ஆள்  எஸ்கேப் (ஏற்கனவே தெரியும் போல ...!!?)  

அந்த நேரம் பார்த்து என் சின்ன தம்பி கீழ விழுந்து வணங்கிட்டு இருந்த  என்னை மெதுவா தூக்கி விட்டான். அடடா ! அம்மா கைவிட்டாலும் தம்பி இருக்கிறானே (தம்பி உடையாள் இந்த படைக்கு அஞ்சாள் !) அப்படின்ற மகிழ்ச்சியில் வேகமா அடுத்த காலில் விழுந்தேன். விழுந்து எழுந்ததும் என் கையில் பணம் கொடுத்தாங்க 'அட இது வேறயா..?!'என்று சந்தோசமாக  வாங்கினேன்...'அக்கா என்கிட்டே கொடு நான் பத்திரமா வச்சிக்கிறேனு' என்கிட்டே இருந்து பிடுங்காத குறையா வாங்கிட்டான்..அப்பதான் புரிஞ்சது என் தம்பியோட திடிர் பாசம்....?!! (ரொம்ப அப்பாவியா இருக்கமோ!?) ம்...தொடக்கத்தில் இருந்த வேகம் மெதுவா குறைஞ்சு ஒரு மாதிரி ஆகிட்டேன்.'வராண்டாவிலும் நிறைய பேர் இருக்காங்க தாயீ இங்க வா' என்று அதே வெண்கல குரல் அடப்பாவிகளா உங்க கொடுமைக்கு அளவே இல்லையா என்று மனசுக்குள் நொந்துக்  கிட்டே மெதுவா அங்கயும் போய் விழுந்தேன் இல்லை ஆசிர்வாதம் வாங்கினேன்...!!

இனி முடியாது சாமிகளா என்று ஒரு சேரில் போய் அப்படியே உட்கார்ந்துட்டேன்...அப்ப திடீரென்று வாசலில் கட்டி இருக்கிற  ஸ்பீக்கரில் இருந்து மைக்கேல்  ஜாக்சன் குரல் ( அட பாட்டு தாங்க )அப்படியே என் சோர்வு எல்லாம் என்னை விட்டு பறந்தது போல் ஒரு உணர்வு....! ஆனா இந்த பாட்டு  இங்க எப்படி  சாத்தியம்...?!எல்லாம்  என் அண்ணனின் நண்பர்களின் கைங்கரியம்...என் மூடை மாத்ரான்கலாம். (அட தேவுடா ! பயங்கரமா  யோசிச்சி 007 நம்பர் செட் பண்ணி இருந்த என் சூட்கேசை எப்படி தொறந்தாங்க...அதுல நான் வச்சிருந்த காசெட் தான் இது !) புதுசா இப்ப இந்த குழப்பம் வேற...!  

" யாருலே அது புரியாத பாட்டைப்  போடுறது ??" நாட்டாமை. இந்த நாட்டாமை எனக்கு தாத்தா முறையாம். சரியா போச்சு...!(இது தெரியாம மனசுக்குள்ள ரொம்ப திட்டிடோமோ...?!)

நாளை கல்யாணம்....ஆனா இன்றே சோர்ந்துப்  போய்விட்டேன்...'எப்படி இருக்கும் அந்த திருமணம்' என்ற புது  குழப்பத்துடன் நடு இரவை தாண்டி பின் அப்படியே தூங்கிப்  போனேன்..

விடிந்தது பொழுது.....(அப்படின்னு சொல்லி எழுப்பினாங்க.....?!)

என் கணவர் ஊரில் திருமணம், ஒரு தேவாலயத்தில் நடந்தது. வெகு சிறப்பாக  நடந்தது என்று தான் சொல்லணும், ஏன்னா அவ்வளவு கூட்டம். அந்த கூட்டத்தைப்  பார்த்து எனக்கு பெருமை பிடிப்படல. அப்புறம் தான் தெரிந்தது அன்னைக்கு மட்டும் அந்த சர்ச்சில ஆறு கல்யாணமாம்...?!(ம்...அது தெரியாம பெருமைப்  பட்டுட்டேனே...!)ஒரு வழியாக  திருமணம் முடிந்து சர்ச் விட்டு வெளியே வந்தோம். 

அப்போது அங்கே பெரிய கூட்டத்தின் நடுவே பேண்டு வாத்தியங்கள், டிரம்ஸ் அடிச்சிட்டு இருந்தாங்க. அப்ப என் கூட நடந்து வந்துட்டு இருந்த என் அண்ணனிடம் "நல்லா அடிக்கிராங்கல்ல... கொஞ்சம் நின்னு கேட்டுட்டு போலாமே" என்றேன். "அட லூஸ், இது உன் கல்யாணத்துக்காக மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஏற்பாடு,எல்லாம்  வீடியோவில் இருக்கும், அப்போ பார்த்துக்கோ" என்றான். (என்னவோ என்னை கேட்டுத்தான் புக் பண்ணின மாதிரி இவன் என்னை லூஸ் என்கிறான்...!டேய் அண்ணா,சமயம் கிடைக்கட்டும் அப்ப இருக்கு உனக்கு, ஏற்கனவே பழைய பாக்கி வேற ஒன்னு இருக்கு...!? மாப்பிள்ளை பிடிக்கலை சொல்வான்னு, போய் பார்த்திட்டுவானு இவனை நான் அனுப்பி வச்சா, போய் பார்த்திட்டு வந்து 'இதை விட நல்ல சாய்ஸ் உனக்கு கிடைக்காது'ன்னு பல்டி அடிச்சவன் ஆச்சே இவன்...!)

ஊர்வலம் சும்மா சொல்லக்கூடாது முன்னாடி நாலு காரு, பின்னாடி வேற வரிசையா நிறைய கார்கள், திரும்பித் திரும்பி பார்த்து ரசிச்சிட்டே வந்தேன். மறுபடியும் எனக்கு பெருமை தாங்கல மனசுக்குள் சிரிச்சிட்டே இருந்தேன்! ஆனா அதுவும் ரொம்ப நேரம் நீடிக்கல...?! டிரைவர்  கிட்ட என்னவர் 'இந்த ரோட்ல எப்பவும் டிராபிக் தான்' வருகிற  வண்டி எல்லாம் நம்மள பாலோ பண்ணற மாதிரியே இருக்குனு கிண்டல் பண்ணி ஒரே சிரிப்பு. (அட ச்சே ஒருத்தி எத்தனை பல்புதான் வாங்குவா ?!)
( நன்றி 'பல்போ பல்பு' இம்சைஅரசன் பாபு) 

கொஞ்ச தூரம் கடந்ததும் ஒரே டமால் டுமீல்னு பயங்கர சத்தம்...!?

பதிவு பெரிதாகி விட்டதால் மீதி அடுத்தப் பதிவில் தொடரும்...

ப்ரியங்களுடன் 
கௌசல்யா 


**********************************************************
நேரம் இருப்பின்
கல்யாண நினைவுகள்  படிங்க.



திங்கள், அக்டோபர் 18

திருடன் வந்த வேளை.....!


நாலு வருடங்களுக்கு முன் நடந்த ஒரு உண்மை  சம்பவம் இது. எங்களது பாக்டரியில் மருந்து பொருட்களை (தீக்குச்சி செய்ய தேவைப்படும் குளோரேட், சல்பர் போன்ற பொருட்கள்) தனி தனி அறைகளில் ஸ்டாக் செய்து வைத்து இருப்போம். அந்த அறைகளை கவனித்து கொள்வதற்காக இரவில் ஒரு காவலாளி அந்த அறைகளுக்கு வெளியில் படுத்து இருப்பார்.  அன்று மழை பெய்து கொண்டிருந்ததால் அதனால் உள்ளே ஒரு இடத்தில் படுத்து இருந்திருக்கிறார்.

நடு ராத்திரியில எங்க வீட்டு கதவை  பலமா தட்டற சத்தம் கேட்டுச்சு .....என்னவோ ஏதோனு பயந்துட்டு (தீ விபத்து நடப்பது இந்த தொழிலில்  சகஜம்) வேகமா நானும் என் கணவரும் எழுந்து வந்து கதவை திறந்தோம் ....வெளியே அந்த காவலாளி நடுங்கிட்டே "முதலாளி குளோரேட் ரூம்ல யாரோ இருக்கிற மாதிரி இருக்கு....நீங்க உடனே வாங்க' ன்னு  சொல்லவும் எங்களுக்கும் ஒரே படபடப்பு.... உடனே என் கணவர் ஒரு கம்பை கைல எடுத்திட்டு வேகமா அந்த இடம் நோக்கி நடக்க தொடங்கிட்டார்....எனக்கு ஒரே பயம் இவர் தனியா போய் என்ன பண்ணுவாரோ...உள்ள இருக்கிறவன் கத்தி, அரிவாள்  ஏதும் வச்சிருந்தா.... ஏடா கூடாம ஆச்சுனா என்ன பண்ணனு....பக்கத்தில இருக்கிற இவரோட அண்ணன்ங்க வீட்டு  கதவுகளையும் ஓடி போய் தட்டினேன்.....ஒருத்தரையும்  விடலையே ...வயதான என் மாமனார், மாமியார் முதல் அத்தனை பேரும் பதறி எழுந்து வந்திட்டாங்க...(எங்க குடும்பம் கொஞ்சம் பெரிசு...மொத்த உருப்படி ஒரு 17 தேறும்...!)

வீட்டை விட்டு கொஞ்சம் தள்ளி  தான் அந்த அறை உள்ளது.... ஆண்கள் மட்டும் அந்த ரூம் பக்கம் போக நாங்க எல்லோரும் ஒரு வித திகிலோட அந்த பக்கமே பார்த்திட்டு இருந்தோம்....கொஞ்ச நேரம் அமைதியா போச்சு....திடீர்னு  ஒரே அடிதடி சத்தம்...யார் யாரை அடிக்கிறாங்கன்னு  தெரியாம அக்கா'ஸ் 'எல்லோரும் ஆண்டவா என் வீட்டுகாரரை   காப்பாத்து'ன்னு வேண்டிட்டு இருந்தாங்க....ஆனா நான் மட்டும் அந்த திருடனை காப்பாத்துன்னு வேண்டினேன்....(அவ்ளோ நம்பிக்கை எனக்கு எங்க வீட்டு ஆண்கள் மேல....!!) 

அப்புறம் மெதுவா அந்த திருடனை இழுத்திட்டு  வந்தாங்க....(என் நம்பிக்கை  வீண் போகலைங்க...) போன வேகத்தில எங்க ஆட்கள் ஆளுக்கு ஒரு அடிதான் கொடுத்திருக்காங்க....ஆனா அந்த திருடன் ரொம்ப பாவங்க...சோர்ந்து போய்ட்டான்....(எங்க வீட்டு குட்டிஸ் எல்லாத்துக்கும் ஒரே சந்தோசம் இப்பதானே முதல் முறையா திருடனை நேரில் பாக்கிறாங்க.....நாளைக்கு ஸ்கூல்ல  போய் எப்படி பெருமை அடிக்கலாம்னு அப்பவே பிளான் பண்ண ஆரம்பிச்சிடுசுங்க )


அப்புறம் மாமனார் தலைமையில் ஒரு சின்ன மீட்டிங் 'இந்த திருடனை இப்ப என்ன செய்யலாம் என்று..?' ஆளாளுக்கு ஒவ்வொரு ஆலோசனை சொன்னார்கள்...முடிவாக காலையில் போலீஸ்கிட்ட ஒப்படைச்சிடலாம்.....இப்ப கம்பெனி முன்பாக இருக்கும் லாம்ப் போஸ்டில் கட்டி வைக்கலாம் என்ற  யோசனை குரல் வாக்கெடுப்பில் தேர்ந்து எடுக்க பட்டது.....! ஆனால் கட்டி வைச்ச பிறகு  கயிறை அறுத்திட்டு ஓடிட்டா என்ன செய்ய என்று ஆண்களில் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் முழிச்சிட்டு காவல் இருக்கணும்  என்றும் முடிவு செய்திட்டு மத்த எல்லோரும் தூங்க போய்ட்டோம்....நேரம் மூணு மணி ஆச்சு......ஒரு மணி நேரம் நிம்மதியா தூங்கி இருப்போம்....வெளியில் மறுபடியும் சத்தம்....! ஏற்கனவே எல்லோரும் கொஞ்சம் அலர்ட்டா  இருந்ததாலே...சட்டுன்னு எழுந்திட்டோம்....இப்ப என்ன பிரச்சனைன்னு வந்து பார்த்தா, நின்ன போன மழை மறுபடி  சோன்னு கொட்டுது....!! அந்த திருடன் மழையில நல்லா  நனைஞ்சிட்டு  நடுங்கிட்டு இருந்தான் (அடி வாங்கின உடம்பு வேறையா..... நல்லாவே நடுங்கினான் )


என் மாமனார் 'ஏம்பா, அவன் செத்து கித்து போய்ட போறான், ரூம்  உள்ளே கொண்டு போய் அடைங்க' னு சொல்லவும்....அடடா இது என்னடா புது சோதனைன்னு அவனை கொண்டு போய் ஒரு ரூம்ல அடைச்சாங்க....! இப்ப தூக்கம் சுத்தமா போச்சு...எங்க அக்கா மழைக்கு சூடா டீ குடிங்கன்னு 'கருப்பட்டி இஞ்சி போட்டு ப்ளாக் டீ'  கொண்டு வர மொத்தமா நாங்க ரவுண்டு கட்டி உட்கார்ந்து.....அழகா டீ குடிச்சிட்டு பேசி பேசியே  இரவை ஒரு வழியா போக வச்சிட்டு விடியலை வர வச்சிட்டோம்....! மணி 5 ஆனதும் என்னைக்கும்  போல அவங்க அவங்க வேலையை வேகமா பார்க்க ஆரம்பிச்சோம்.....ஏழு மணி ஆனதும் தொழிலாளர்கள் வேற வர தொடங்கிட்டாங்க....அப்புறம் என்ன எல்லோரும் கூடி கூடி பேசி திருடனை ஹீரோவாகிட்டாங்க...


மணி ஒன்பது ஆச்சு....இனிதான் தான் கிளைமாக்ஸ்....அந்த திருடனை காரில் ஏத்திட்டு  காவல் நிலையத்துக்கு என் கணவர் அழைத்து கொண்டு போனார். இங்கிருந்து போகும் போது கொஞ்சம் தள்ளாடிட்டேதான் போனான்...அங்க போனதும் இன்ஸ்பெக்டர் முன்னாடி அப்படியே விழுந்திருக்கான் (ஆனா அது ஆக்டிங்க்னு அப்ப என் கணவருக்கு தெரியல ) இன்ஸ்பெக்டரும் பதறி, 'என்னங்க சார் ரொம்ப அடிச்சிடீங்களா.....ஏதாவது ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆக போகுது....அவன்தான் ஒண்ணு திருடலையே...பேசாம அவன் ஊர் பேரை கேட்டுட்டு அந்த ஊருக்கு பஸ் ஏத்தி விட்டுடுங்க' ன்னு சொல்லி இருக்கிறார்....!!? இவரும் நம்ம காவல்துறையின்  மனிதாபிமானத்தை மெச்சிட்டு (திட்டிட்டுதான்.....!) அந்த திருடனுக்கு பூரி செட் வாங்கி கொடுத்து சாப்பிட வச்சு,  கையில செலவுக்கு ஒரு 200 ரூபாயும் கொடுத்து பஸ் ஏத்தி விட்டுட்டு வீடு வந்து சேர்ந்தார்............!!?


இதில இருந்து நாங்க கத்துகிட்ட பாடம் என்னனா.......அதை நான் எப்படிங்க  சொல்றது...... உங்களுக்கே  இப்ப புரிஞ்சிருக்குமே....!!?

திருட வந்தவனை நல்லா (கவனிச்சு )உபசரிச்சு விருந்தாளி போல அனுப்பி வச்ச இந்த சம்பவம்.....ஒரு மழைநாள் இரவில், திக் திக்னு திரில்லா ஆரம்பிச்சி....அடிதடி சண்டை நடந்து..... ஒரு பஞ்சாயத்து ( இங்க சொம்புக்கு பதிலா டீ கப் ) சீன் வேற....குட்டிஸ் கலாட்டா....பெண்களின் வித்தியாசமான வேண்டுதல்கள்.....கிளைமாக்ஸ் சீன்ல போலீஸ் வருவதற்கு பதிலா  நாங்க ஸ்டேஷனுக்கு போய்....அப்புறம் ஒரு சின்ன டுவிஸ்ட்....கடைசியில் சுபம் (எங்களுக்கு இல்லை அந்த திருடனுக்கு )






வாசலில் என் கவிதை