பதிவர்கள் சந்திப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவர்கள் சந்திப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஆகஸ்ட் 14

நமக்கே நமக்கான திருவிழா - சென்னையில் 'பதிவர்கள் சந்திப்பு'


சென்ற வருடம் போலவே இந்த வருடமும் சென்னையில் பதிவர்களின் சங்கமம் நடைபெற இருக்கிறது. பதிவர்கள் கூடும் திருவிழா பற்றி பதிவுலகிலும் பேஸ்புக்கிலும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. களைக்கட்டத் தொடங்கிவிட்ட இந்த அற்புத நிகழ்வைப் பற்றி பலரும் பதிவிட்டு சந்திப்புப் பற்றி தெரியாத பலருக்கும் கொண்டு போய் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது பதிவர்களாகிய நமது கடமையும் கூட என்பது என் கருத்து.  

முன்பை போல் இல்லாமல் இப்போது தான் பதிவுலகம் என்ற ஒன்று இருப்பது வெளியே கொஞ்சம் தெரிய தொடங்கி இருக்கிறது. பதிவர்களுக்கென்று ஒரு அங்கீகாரம் தேவை என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பதை விட இது போன்ற நிகழ்வுகளில் கலந்துக்கொண்டும் அல்லது இதை பற்றிய செய்திகளைப்  பலருக்குக்   கொண்டுச்  செல்வதின் மூலம் பதிவுலகத்தின் இருப்பு மற்றவர்களுக்கும்  தெரிய வரும். 

பதிவுலகம் முன்பு போலில்லை, பதிவர்கள் பலர் பேஸ்புக் , ஜி பிளஸ் , டுவிட்டர் என்று போய்விட்டார்கள் என்ற பொதுவான ஒரு குறை உண்டு, எங்கே சென்றாலும் பதிவர்கள் எழுதிக் கொண்டுத்  தானே இருக்கிறார்கள் என்பது ஒரு ஆறுதல். ஆனால் இனியும் அப்படி இல்லாது தொடர்ந்து நிறைய கதைகள், கட்டுரைகள், கவிதைகள், பயண அனுபவங்கள்,  வெளிவர வேண்டும். எழுதுவதைக்  குறைத்துக் கொண்டவர்கள் மீண்டும் எழுத இது போன்ற சந்திப்புகள் நிச்சயம் ஒரு உத்வேகம் கொடுக்கும்.

பத்திரிகை உலகமும், அரசியல் , திரைத்துறை போன்றவையும்  இங்கே நடப்பதை கவனிக்க தொடங்கி ரொம்ப நாளாகிறது. பதிவர்களின் பல கதைகள், கவிதைகள், கட்டுரைகள் பத்திரிகை உலகில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பேஸ்புக் டுவிட்டர் ஸ்டேட்ஸ்கள் வராத மாத வார இதழ்கள் குறைவு தான்.அப்படி பட்ட முக்கியத்துவம் பெற்ற இடத்தில் இருக்கும் நாம் நமக்கே நமக்காக நடைபெற இருக்கும் இந்த மாபெரும் சந்திப்பில் கலந்துக் கொள்வதன் மூலம் நமது ஒற்றுமை உலகறியட்டும். 

சந்திப்புக்கான ஏற்பாடுகள்

ஒவ்வொன்றையும் மிக அருமையாக திட்டமிட்டு , வாரமொருமுறை கலந்தாலோசித்து, கட்டுக்கோப்புடன் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.  தனித்  தனி குழுவாக பிரித்து அவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்திருக்கிறார்கள் , யாருக்கெல்லாம் என்ன பொறுப்பு என்பதை இங்கே http://www.tamilbloggers.info/2013/07/blog-post_30.html சென்று பார்க்கலாம் ! 

விழா நடைபெறும் இடம்

சென்னை வடபழனியில் கமலா தியேட்டர் அருகில் உள்ள CINE MUSICIAN'S UNION' க்கு சொந்தமான கட்டிடம் .

இதுவரை தங்கள் பெயரை உறுதி செய்தவர்கள் தவிர மேலும் கலந்துக் கொள்ள விரும்புவர்கள் தொடர்பு கொள்ள

ரமணி ஐயா: svramanni08@gmail.com
அலைபேசி: 9344109558
திரு.தமிழ்வாசி பிரகாஷ் : thaiprakash1@gmail.com
அலைபேசி 9080780981

பதிவர்கள் தெரிவிக்க வேண்டிய விபரங்கள் 
வலைத்  தளம் பெயர், முகவரி (blog  name & blog url address)
தொடர்பு மின்னஞ்சல்  முகவரி
தொலைபேசி எண் 
ஊர் பெயர் 
முதல் நாள் வருகையா என்ற விபரம்

இந்த வருடம் பதிவர்களின் அறிமுகம் , கவிதை நூல் வெளிஈட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என்பதுடன் பதிவர்களின் தனிப்பட்ட திறமையை வெளிக்காட்டவும் ஒரு நிகழ்வு வைக்கலாம் என உள்ளார்கள்.
எழுத்தில்  தங்கள் திறமையை காட்டியவர்கள் பாட்டு, நடனம் , மிமிக்ரி, நடிப்பு , குழு நாடகம் இப்படி பல வற்றிலும் கலந்து, கலக்க இது ஒரு நல்ல வாய்ப்பு. இதில் ஆர்வம் உள்ளவர்கள், நூல் வெளியிட விருப்பம் உள்ளவர்கள் கவிஞர் மதுமதி அவர்களிடம்   மின்னஞ்சலில் தெரிவியுங்கள். (விரைவாக)
 kavimadhumathi@gmail.com 
அலைபேசி : 989124021

நிகழ்ச்சிநிரல்  பற்றிய குறிப்புகளுடன் கூடிய அழைப்பிதழ் விரைவில் வெளியிடப் பட இருக்கிறது. 

விழா குழுவினரிடம் ஒரு வேண்டுகோள் - 

இந்நிகழ்வை பத்திரிகை, தொலைகாட்சியிடம் ஏன் கொண்டுச் செல்லக் கூடாது. அங்கே வரும் பலரும்  பத்திரிகை , ஊடகத்துறையுடன் தொடர்பு உள்ளவர்கள் அல்லவா, அவர்களின் மூலமாக கொண்டுப்  போகலாமே...இதை விளம்பரம் என்று தயவுசெய்து எண்ணக்கூடாது. மறைமுகமாக அவர்களுக்கும் பதிவர்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்றபோது நம்மைப் பற்றி மக்களிடம் கொண்டு சேர்ப்பது அவர்களின் கடமை தானே ? இதற்கான முயற்சியை எடுக்கலாமே என்பதே எனது வேண்டுகோள்.    

அன்புள்ளம்  கொண்ட பதிவுலக நட்புகளே!

வருடம் ஒரு முறை நடப்பது என்பது சிறப்பு என்றாலும் மாதம் ஒரு முறையாவது பதிவர்களின் சிறு சிறு  சந்திப்பு நடைபெறவேண்டும். வெறும் சந்திப்பாக மட்டும் இல்லாமல், பதிவுலகை கட்டுக் கோப்புடன் கொண்டு செல்வதற்கும், நம்மில் யாருக்காவது எந்த உதவியாவது தேவை என்றால் அனைவரும் ஒன்றிணைந்து உதவுவதும் என்று இருந்தால் நன்றாக இருக்கும்.

மேலும் இந்த வருடம்,   

200 பேருக்குமேல் வருவதாக அறிகிறேன். இதற்கு  ஆகும் செலவு ஒரு லட்சத்தை தாண்டக் கூடும், செலவினை யாரெல்லாம் செய்ய இருக்கிறார்கள் என தெரியவில்லை, இருப்பினும் நமது பங்களிப்பு சிறிதாவது இருந்தால் நன்றாக இருக்கும்.  பணம் என்றாலே பிரச்சனை எழும், இருந்தும்  கடந்த வருட சந்திப்பு முடிந்ததும் வரவு செலவு கணக்கை தெளிவாக விரிவாக பதிவிட்டு இருந்தார்கள். நான் கூட நினைத்தேன், இவ்வளவு விரிவாக தெரிவிக்க வேண்டுமா என்று, ஆனால் இது அவசியமானது என்று விழா குழுவினர் இதற்காக சிரத்தை எடுத்து செய்ததை மனமார பாராட்டுகிறேன். 

மேலும் சென்ற  வருட விழா தொடர்பான வேறு வகை விமர்சனங்கள் அங்கே இங்கே என்று எழுந்தன. இருப்பினும் விழா அமைப்பினர் அத்தனைக்கும் பதில் தெரிவித்ததையும் நாம் அறிவோம். அது போன்றவை இந்த வருடமும் எழலாம் என்ற ஐயம் சிலருக்கு இருக்கலாம்.  ஒரு நாலு பேரை வைத்து சந்திப்பு நடத்துவதே  சிரமம் என்கிற போது நூறு பேருக்கு மேல் கூடும் ஒரு இடத்தில் சலசலப்புகள் வரும் , முடிந்த பின்னரும்  எதிர்வினைகள் எழத்தான் செய்யும்.  எதையும் நாம் பெரிதுப் படுத்தாமல் இருந்தாலே போதுமானது  யார் பிரபலம் யார் சீனியர் ஜூனியர் என்பதை விட பதிவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றில் சிறந்தவர்கள் தான் என்ற ஒரு எண்ணம் நமக்குள் இருந்தால் மட்டும் போதும், எந்த ஈகோ பிரச்னையும் எழாது.  

தவிரவும் பங்குப்  பெரும் அனைவரும், விழா அமைப்பினர் தான் எல்லாம் செய்யவேண்டும் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பதை விட இது நமக்கான விழா நாமும் இயன்றவரை சமமான/சரியான  ஒத்துழைப்பு, ஈடுபாடு  கொடுப்பது நல்லது. நிச்சயம் மிக சிறப்பான ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது. எனது உறவுகளிடம் இதை பகிர்ந்துக்  கொள்வது எனக்கு ஒரு நிறைவை கொடுக்கும் என்பதால் இதைச் சொல்கிறேன். 

யாரெல்லாம் வருவார்கள் என்னவெல்லாம் சுவாரசியங்கள்  நடக்கப் போகின்றது என்ற ஆவல், நாள் நெருங்க நெருங்க அதிகமாகிக் கொண்டேச் செல்கிறது.

சாதி, மத, இன,கொள்கை வேறுபாடுகள் இன்றி பதிவர்கள் என்ற ஒரே ஒரு  அடையாளத்தோடு மட்டும் நடக்க போகும் இதில் கலந்துகொண்டு தமிழ் பதிவுலகை பெருமைப்படுத்தபோகும் அத்தனை உறவுகளுக்கும் என் வாழ்த்துகள். அனைத்தும் குறைவின்றி நடைபெற்று முடிய எல்லாம் வல்ல தேவனிடம் என் பிரார்த்தனைகள் ! சந்திப்பை திருவிழாப் போல் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் நேச உறவுகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்...! விழா மிகச் சிறப்பான வெற்றி பெறட்டும்  ...! 

                               ஓங்குக தமிழ் பதிவுலக மக்களின் ஒற்றுமை !!

                                                        * * *

                                               வெல்க தமிழ் !!!

                                                        * * *

வியாழன், ஜூன் 23

நெல்லையில் உறவுகளின் உற்சாகம் !



கடந்த இரு வாரங்களாக பதிவர் சந்திப்பிற்கான ஏற்பாடுகளை சிந்திக்கவும், செயல்படுத்தவும் நாங்கள் எடுத்த பிரயாசங்கள் பெரிதல்ல என்று நிரூபித்தது நேச நெஞ்சங்களின் வருகை. எத்தனை போன் கால்ஸ், எத்தனை மெயில்கள், சாட்டிங், நேரில் நடந்த சிறு சந்திப்புகள் அனைத்தையும் ஊதித் தள்ளிவிட்டது நண்பர்களின் உற்சாகமும் அவர்கள் கொடுத்த ஒத்துழைப்பும்...!!

எப்போதும் எதையோ தேடி ஓடிகொண்டே இருக்கிற இந்த வாழ்க்கையில் நாம் சற்று இளைப்பாறும் ஒரு சோலைவனம், நல்ல நட்புகளின் இந்த சங்கமம் ...! பதிவர்கள் சந்திப்பு என்றாலும் ஒரு குடும்ப விழா போன்று தாத்தா,அப்பா,அக்கா, அண்ணன், தம்பி, அக்கா,தங்கை, நண்பன்,தோழி என்று பல உறவுகள் ஒன்று சேர்ந்தது எனலாம். அன்று பல உறவுகள் புதிதாய் மலர்ந்தது ஒரு இனிய அனுபவம். 

சிறிதும் முன் அறிமுகம் இல்லாத பதிவர்களை தான் நான் கடந்த வெள்ளிகிழமை அன்று (சங்கரலிங்கம் அண்ணா, சித்ரா, பாபு தவிர்த்து) சந்தித்தேன். இருந்தும் பல காலம் பழகியவர்களை போன்று ஒவ்வொருவரும் நடந்த கொண்ட விதம் மீண்டும் மறு சந்திப்பு என்று வரும் என எண்ண வைத்துவிட்டது.  ஆரம்பம் முதல் முடிவு வரை சிறிதும் இடைவெளி இன்றி சிரிப்பு பட்டாசுகள் வெடித்துக்கொண்டே இருந்தன.....

வந்திருந்து சந்திப்பை பெருமை படுத்திய உறவுகளுக்கு நன்றி சொல்வதில் மகிழ்கிறேன் !


முதலில் சங்கரலிங்கம் அண்ணனுக்கு என் பாராட்டுகள்...ஒரே ஊர்காரர் என்றாலும் அறிமுகமானது பதிவுலகம் மூலமாகத்தான் . சில மாதங்களுக்கு முன் அவரது தளத்தை, என் தளத்தில் அறிமுகம் செய்வதில் தொடங்கியது எங்களின் நேச உறவு. விழிப்புணர்வு வேண்டும், சமூக அக்கறை வேண்டும் என்று இணையத்தின் முன் அமர்ந்து குரல் கொடுப்பதுடன் திருப்தி பட்டுகொள்கிறோம், ஆனால் நடைமுறையில் அதை சாதித்துக் கொண்டிருக்கிறார் இவர். ஆரம்பத்தில் பதிவுகளை எழுதுவதுடன் மட்டும் இருந்த இவர் அதன் பின் பல நட்புகளை வளர்த்து இன்று பதிவர்கள் சந்திப்பை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் வரை வந்திருக்கிறார் என்பது பெருமையான ஒன்று. அண்ணா உங்களுக்கு என் நன்றிகள்.

பலரும் சந்திப்பில் நடந்தவற்றை ஏற்கனவே பகிர்ந்துவிட்டதால், என் நினைவில் இருப்பவை சிலவற்றை இங்கே சொல்கிறேன்....

Dr.கந்தசாமி சார் - கோயம்புத்தூரில் இருந்து வந்திருந்தார்.  தனது பதிவுகளை மற்றவர்கள்  காபி பேஸ்ட் செய்து கொள்ள அனுமதி வழங்கி இருப்பதாக சொன்னார். 'பிறருக்கு உபயோகமாக இருக்கத்தானே பதிவுகள் எழுதுகிறேன், அதை அவர்கள் எடுத்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே' என்று சொன்னவுடன் கைதட்டல் அதிர்ந்தது. உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

சீனா ஐயா பல பல பதிவர்களை வலைசரத்தில் அறிமுகம் செய்ய பெரிய காரணமாக இருக்கிறார்...ஆனால் நான் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை என்று தன்னடக்கத்தோடு சொன்னபோது மிக வியந்தோம். வலைச்சரத்தில் உங்களை அறிமுகம் செய்திருக்கிறாங்க என்று எனக்கு மெயில் வந்தபோது அங்கே அறிமுகம் செய்ற அளவிற்கு நாம எழுதுறோமா என்று சிறு மிதப்பு வந்ததென்னவோ உண்மை...! அவர் தலைமை வகித்து சிறப்பித்தமைக்கு என் நன்றிகள் !

பலாபட்டறை சங்கர், மணிஜி - சென்னையில் இருந்து இவ்வளவு தூரம் வந்திருந்து சந்திப்பை பெருமைபடுத்தினார்கள். பதிவுலகத்தின் மீதான தங்களின் பார்வையை/பங்களிப்பை எங்களுடன் பகிர்ந்துகொண்டார்கள். இணையம் என்பது டைரி போன்றது, பல வருடங்கள் கழித்து நாமே இதை எடுத்து படிக்கும் போது கிடைக்கும் நிறைவு மிக பெரிது, மேலும் நமக்கு பின் நம் வாரிசுகள் இதை படித்து தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்றார் சங்கர். சந்திப்பின் இறுதிவரை அப்ப அப்ப தன் கருத்துக்களை தெரிவிக்க தவறவில்லை. கூகுள் பஸ்ஸில் பதிவர்கள் அதிக நேரம் செலவிடுவதால் பதிவுலகத்தில் பதிவுகள் குறைந்து வருகிறது என்பது உண்மைதான், பதிவுகள் எழுதுவதை குறைக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினார். சங்கர் அவர்களின் கருத்துக்கள் மிக உபயோகமாக இருந்தன, நினைவில் வைத்துக்கொண்டேன்.(முக்கியமாக செந்தில் சாரை நன்றாக உற்சாக படுத்தினார்...!!) என் நன்றிகள் !

செந்தில்குமார் - பலரும் இவரை படாதபாடு படுத்திவைக்க கொஞ்சமும் முகம் சுளிக்காமல் எதிர் கொண்ட பாங்கு இவர் ஒரு தெளிந்த நீரோடை என்பதை காட்டியது. (என்ன செந்தில் சார் ??இது போதுமா? ) அவர் மீது வைக்கும் குற்றசாட்டுகளை எங்கள் முன் பகிர்ந்துகொண்டதுடன் தன்னிலை விளக்கம் கொடுத்தார். உண்மையில் இந்த மாதிரி தன்னை பற்றி மற்றவர் முன் எடுத்துரைக்க எல்லோராலும் இயலாது. ரொம்ப வெளிப்படையாக, இயல்பாக எந்தவித மேல்பூச்சும் இல்லாமல் சொன்ன விதம் அருமை. இந்த சந்திப்பிற்கு பின் வரும் அவரது பதிவுகளில் ஒரு மாற்றம் தெரியும். கண்டுபிடிங்க !!

பதிவு போடாமல் எப்படி இங்கே அதுவும் வெள்ளிகிழமை வந்தார் என்ற என் ஆச்சரியத்தை உடைத்துபோட்டது அடுத்து அவர் சொன்ன வார்த்தை...'இன்னைக்கு போட வேண்டிய பதிவை அப்பவே போட்டு இருப்பாங்க' அட கடவுளே பதிவு போட என்று ஒரு ஆபீஸ் வச்சு நடத்துறார் போல.....!! இவர் ஒருத்தர் இருக்கும் வரை பதிவுலகம் எப்படி சாகும்...வாழும் நன்றாகவே  வாழும்...!! விழாவை நகைசுவையாக கொண்டு சென்றதில் இவரின் பங்கு அதிகம். அதற்காக ஒரு ஸ்பெஷல் நன்றி.


                               செல்வா பக்கத்தில் செந்தில் சார் ! 


பெசொவி- ஒரு வழியாக தனது உண்மையான பெயரை சொல்லிவிட்டார்...தூத்துக்குடியில்  (மத்திய அரசு) வேலை பார்த்து வருவதாக சொன்னதால் நான் சும்மா இருக்காமல் 'அப்ப நல்லதா போச்சு, ஒரு உதவி தேவை படுது, உங்களை பார்க்க வரணும்' என்றேன்...அதற்கு அவரும் 'செய்யலாமே... நீங்க என்னைக்கு வரீங்கன்னு முன்கூட்டியே சொல்லிடுங்க' என்றார். நானும் ஆர்வமாகி 'கண்டிப்பா சொல்லிடுறேனு' சொல்ல, அதுக்கு அவர் 'அப்பத்தான் அன்னைக்கு நான் ஊர்ல இருக்கமாட்டேன்'  சொன்னதும் ரொம்ப வருத்தமா போச்சு. ம்ம்...இருக்கட்டும் சொல்லாம ஒரு நாள் போகணும்...!! நடுநடுவே நகைச்சுவையை வாரி கொட்டிகொண்டே இருந்ததுக்காக  சிரிச்சிட்டே ஒரு நன்றி !



 மத்தவங்க பேச்சை கிண்டல் பண்ணி சிரிச்சிட்டு இவர் மட்டும் ரொம்ப சீரியஸா பேசுறாராம் - பெசொவி 


சித்ரா - ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக பேசக்கூடிய அன்பான ஒரு தோழி. அமெரிக்காவில் இருந்து போனில் அவங்க பேசினா எனக்கு வாய் வலிக்கும் !  அது எப்படின்னு கேட்ககூடாது...ஒரு அரைமணி நேரம் அவங்க கிட்ட பேசி பாருங்க அப்ப தெரியும். ஒரு சோக கதை என்னனா, நானும் அவங்களும் போன வாரம் அண்ணனின் ஆபீசில் வைத்து சந்திப்பு விசயமா ஆலோசனை பண்ணினோம்.....அதற்கு மறுநாள் அந்த ஆபீசை இடிச்சிட்டு இருக்காங்க, 'என்ன அண்ணா ஆச்சு'ன்னு கேட்டா, 'நேத்து நீங்க போன பின்னாடி சுவர் விரிசல் விட்டு ரொம்ப டேமேஜ் ஆகி விட்டது , அதுதான் பில்டிங் முழுதும் இடிச்சிட்டு புதுசா கட்டபோறாங்க' !!?

                                                     
                       என்ன கொடுமை இது...!?

இப்ப அண்ணனின் ஆபீஸ் வேற இடத்தில் இயங்குகிறது. இந்த சந்திப்பு நடக்க ஒரு முக்கிய காரணம் சித்ராவின் நெல்லை வருகை என்பதால் பெரிய நன்றிகள் தோழி.

பாபு - இவருடன் நான்கு மாதங்களாக தான் பேசிட்டு இருக்கிறேன், என்றாலும் ஒரு சகோதர வாஞ்சையுடன் இவர் பேசுவது பல வருடங்கள் பழகியது போன்ற உணர்வை தரும். இந்த சந்திப்பிற்கு இவரது பங்கு அதிகம், கோவில்பட்டியில் இருந்து குடும்பத்துடன் வந்து சந்திப்புக்கான  ஏற்பாடுகளை பேசிவிட்டு சென்றார். சந்திப்பு நடந்த அன்று அவரது கம்ப்யூட்டர்  சென்டரின் பத்தாமாண்டு நிறைவு விழா, அதைவிட இந்த சந்திப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தார். அந்த அன்பிற்கு நன்றி சொன்னால் நல்லா இருக்காது. உங்களை பாராட்டுகிறேன் சகோ.

வெடிவால் சகாதேவன் - இவர் ஒரு சீனியர் பதிவர் என்பதை விட இவரது குடும்பமே பதிவர்கள் குடும்பம் தான், கோமு மேடம், ராமலக்ஷ்மி... இவரது பங்கெடுப்பு சிறப்பாக இருந்தது. இவருக்கு என் நன்றிகள்.


சகாதேவன் சார் பக்கத்தில ஜெயந்த், அட பாபுவை கவர் பண்றாரா ? 


ஷர்புதீன் - எல்லா பிளாக்குக்கும் மார்க் போட்டு கொண்டு சென்றவர் இவர் தான். வித்தியாசமாக இருக்கட்டுமே என்று அப்படி செய்ததாக கூறினார். அவர் பிளாகிற்கு 55 மதிப்பெண் கொடுத்து கொண்டாராம், (அது எப்படி அவருக்கு நாம தானே மதிப்பெண் போடணும் ?!) இவரிடமும் கலகலப்பிற்கு குறைவில்லை. . .இந்த சந்திப்பிற்கு மார்க் போட்டதாக கூறினார்...எத்தனை மார்க் என்பதை சொல்லவில்லை...! அவர யாரும் பார்த்தா கொஞ்சம் கேட்டு சொல்லுங்க. இவரும் அப்ப அப்ப கலாய்ச்சிட்டு இருந்தார். உங்களுக்கு என் நன்றிகள்.   

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ரத்னவேல் நடராஜன் இவர் தனது மனைவியுடன் வந்திருந்து விழாவை சிறப்பித்தார். இருவருக்கும் என் நன்றிகள்.

பதிவு ரொம்ப பெரிசா போற மாதிரி இருக்கு...அதனால அடுத்த பாகம் போட வேண்டியது தான் வேற வழியில்லை.......பொறுத்துக்கோங்க.

கலந்துரையாடலின் போது கிடைச்ச கொஞ்ச கேப்ல ஹாலை விட்டு வெளியே வந்தேன். அப்போ ரொம்ப சீரியஸா போட்டோகிராபர் நம்ம ஜெயந்த்கிட்ட பேசிட்டு இருந்தார்... அவங்களை கிராஸ் பண்ணும் போது காதில் விழுந்தது (நம்புங்க ஒட்டு கேட்கல !! )

போட்டோகிராபர் - உள்ளே எல்லோரும் மொக்கை மொக்கைனு அடிக்கடி சொல்றாங்களே அப்படினா என்னங்க ?

முதலில் நொந்துபோன ஜெயந்த் பின்பு மெதுவா ரிலாக்சாகி பொறுமையா மொக்கை எனப்படுவது யாதெனில் .....என்று விளக்க ஆரம்பித்தார்...!

போட்டோகிராபர் படபோற அவஸ்தையை எண்ணி வருத்தபட்டுகொண்டே  உள்ளே வந்துவிட்டேன். 

அடுத்த பாகத்தில், இங்கே விடுபட்ட மற்றவர்கள் பற்றியும்...சிறு சமூக சேவை என்று ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தோம், அதன் முழு விவரத்தையும் பகிர்கிறேன்.                       

                           *************************

செவ்வாய், ஜூன் 14

திருநெல்வேலியில் திருவிழா !




'திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' -  சம்பந்தர்
'தண்  பொருநைப் புனல்நாடு'  -  சேக்கிழார்
பொன்திணிந்த  புனல் பெருகும் பொருநைத் திருநதி - கம்பர்

என்று சான்றோர்கள் பாடி பரவசம் அடைந்த பூமி இந்த திருநெல்வேலி !! ஆசியாவின் மிகப் பெரிய சிவன் கோவில், இங்கே உள்ள நெல்லையப்பர் கோவில் என்பது ஒரு சிறப்பு.சிவபெருமானின் ஐம்பெரும் சபைகளில் 'தாமிர சபை' என்று போற்றப்படுவதும் இந்த கோவில் தான்.


திருநெல்வேலி என்றால் இலக்கியம் சுவைத்த டி.கே.சி, விடுதலை உணர்வு தந்த வ.உ.சி, எட்டயபுரத்து பாரதி, உனக்கேன் தரவேண்டும் வட்டி என ஆங்கிலேயரிடம் உறுமிய  கட்டபொம்மன், ஆங்கிலேயரை முதன் முதலில் எதிர்த்த மன்னன் பூலித்தேவன், வாஞ்சிநாதன் இப்படி பலரும் நினைவுக்கு வரலாம்.....! பலருக்கு  பாளையங்கோட்டை ஜெயில் நினைவுக்கு வரலாம்.....! முக்கியமாக எல்லோருக்கும் அல்வா நினைவுக்கு வரும்.....!  

இப்ப எதுக்கு இந்த பில்டப்னா,  இனிமேல் பதிவுலகத்திற்கு திருநெல்வேலி என்றால் 'பதிவர்கள் சந்திப்பு' நினைவுக்கு வரணும், வரும்.....!! (இது கொஞ்சம் ஓவர்தான்...!! )

எங்க ஊர்ல விஷேசமுங்க !

ஆம் மக்களே வரும் வெள்ளிகிழமை அன்று சென்னை, மதுரை, கோவில்பட்டி, ஈரோடு, கோயம்புத்தூர், கோபி,விருதுநகர் இன்னும் ஊர்களில் இருந்தெல்லாம் பதிவர்கள் நெல்லை நோக்கி வராங்க.....! 

பதிவுலகம் மூலமாக முகம் தெரிந்தும் தெரியாமலும் நட்புகள் கொண்டாடி வருகிறோம். பின்னூட்டங்கள் மற்றும் நம்மை தொடருவதின் மூலம் பலர் நம்மை பற்றி அறிந்திருப்பார்கள். அப்படி  அறிந்தவர்கள் தெரிந்தவர்களாக மாற உதவுகிறது  'பதிவர்கள் சந்திப்பு'. 

அது போன்ற ஒரு சந்திப்பு இங்கே திருநெல்வேலியில் நடைபெற இருக்கிறது. 'உணவு உலகம்' திரு சங்கரலிங்கம் அண்ணன் அவர்கள் தலைமையில் வரும்  17.06.2011 வெள்ளி அன்று, பதிவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம். இது தொடர்பாக அவரது மெயிலுக்கு பத்தாம் தேதிக்குள் வருகையை குறித்து பதிவு செய்ய சொல்லி இருந்தோம்....பத்து பேர் முதல் பதினைந்து பேர் வருவார்கள் என்ற நினைத்தோம். ஆனால்  வருவதாக விருப்பம் தெரிவித்து வந்த மெயில்களை பார்த்து பிரமித்துவிட்டோம். எங்களின் பொறுப்பு  கூடியதாக உணரும் அதே நேரம் மிகவும் சந்தோசமாக அந்நாளை எதிர்பார்க்கிறோம். 

                      இடம்: மிதிலா ஹால்,A/C.
                       ஹோட்டல் ஜானகிராம்,
                        மதுரை ரோடு,
                        திருநெல்வேலி சந்திப்பு.
                        நாள்: 17.06.2011 
                        நேரம்: காலை 10.00 மணி


நிகழ்ச்சி நிரல் 


காலை 10௦.00 மணி --- வரவேற்புரை, பதிவர்கள் ஒரு சுய அறிமுகம்

காலை 11 .00 மணி --- செல்வாவின் நகைச்சுவை நேரம்

 அதன்பின்னர் கலந்துரையாடல், அது முடிந்ததும் 1 மணிக்கு மதிய உணவு இத்துடன் சந்திப்பு நிறைவு பெறுகிறது.

இந்த பதிவர்கள் சந்திப்பில் ஒரு சிறந்த ஒன்றாக சிறிய சமூக சேவை ஒன்றினை செய்யலாம் என்று யோசித்து வைத்துள்ளோம்...வரும் நண்பர்களின் ஒத்திசைவுக்கு பின் செயல் படுத்தப்படும்.....!
                                                       
நிகழும் நிகழ்வுகளை பதிவுலக நண்பர்கள் ஆன்லைனில் கண்டுகளிக்க நாற்று நிரூபன் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளார். புகைப்படம் எடுக்க போடோகிராபர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது , அதில் கலந்து கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் தவிர்த்துவிடலாம், கட்டாயம் இல்லை. 



அப்புறம் முக்கியமாக, பதிவர்கள் சந்திப்பு என்று சொன்னாலும், உண்மையில் இது ஒரு குடும்ப விழா...விரும்பம் உள்ளவர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ளலாம்.    

வலைச்சரம் - சீனா ஐயா 
உணவுஉலகம் -சங்கரலிங்கம் 
சாமியின் மன அலைகள் Dr.P. கந்தசாமி 
வெடிவால் - சகாதேவன் 
சங்கவி - சதீஷ் 
அட்ரா சக்க - செந்தில்குமார்
கோமாளி செல்வா 
தமிழ்வாசி - பிரகாஷ் 
எறும்பு - ராஜகோபால்
ஜயவேல் சண்முக வேலாயுதம் 
அன்புடன் எ.மு.ஞானேந்திரன் 
நெல்லை நண்பன் - ராம்குமார் 
வெறும்பய -ஜெயந்த் 
நான் ரசித்தவை - கல்பனா 
ரசிகன் ஷர்புதீன்
ஜோசபின் பாபா 

இவர்கள் அனைவரும் வருகிறார்கள்...இவர்கள் தவிர மற்றவர்கள் புதன்கிழமை (நாளை) கன்பர்ம் செய்து,  சொல்வதாக இருக்கிறார்கள். மேலும் வர விருப்பம் இருக்கிறவர்கள், உணவுஉலகம் ஐடிக்கு மெயில் பண்ணுங்கள்...முக்கியமாக நெல்லையில் வேறு யாரும் பதிவர்கள் இருக்கிறார்களா என தெரியவில்லை...அப்படி இருந்தால் அவசியம் தொடர்பு கொள்ளவும்.

உணவு உலகம் சங்கரலிங்கம் அண்ணா  அவர்களின் மெயில் ஐடி   unavuulagam@gmail.com  
அவரது செல் எண் 9442201331.

ஒரு வித்தியாசமான அனுபவமாகவும், நம் நட்பை பரிமாறிக்கொள்ள கிடைத்த ஒரு சந்தர்ப்பமாகவும் இந்த பதிவர்கள் சந்திப்பு இருக்கும்.


அப்புறம் ஒண்ணச் சொல்லியே ஆகணும் - குற்றாலம் 


தென்பொதிகைச் சாரலில் அமைந்துள்ளது குற்றால மலை, இதில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் உள்ளன.....இந்த செடிகள் மீது பட்டு விழும்  மழைத்துளிகள் பின்னர் அருவியாக ஓடி வருவதால் அருவி நீரில் அந்த மூலிகை செடிகளின் மருத்துவ குணமும் கலந்து வருகிறது என்பதும் அதில் நீராடுவதால் உடலுக்கு ஆரோக்கியம் என்பது தனிச் சிறப்பு.   

இப்போது சீசன் களைகட்ட தொடங்கிவிட்டது. தென் மேற்கு பருவக்காற்று குளிர்ச்சியாக வீசி, குற்றாலத்தில் சாரல் மழையை  பெய்வித்து கொண்டிருக்கிறது .....!! அனைத்து  அருவிகளிலும் தண்ணீர் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது .....


வெள்ளிகிழமை பதிவர் சந்திப்பு என்றால் சனி, ஞாயிறு இரண்டு தினங்களும் மூலிகை கலந்து வரும் அருவிகளில் நீராடி அற்புதமான அனுபவத்தை பெற ஒரு நல்ல சந்தர்ப்பம்.  இது போன்ற சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது அனுபவித்து கொள்ளவேண்டும்...! (அவரவர் சொந்த செலவில்...?!) என்ன நான் சொல்றது...?! சரி தானே.....?!!


நெல்லையும் நாங்களும் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலாக இருக்கிறோம்.  எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து இணையம் என்ற கடலில் வந்து விழுந்த நதிகள் நாம் ! நம்மிடையே இருக்கலாம் பல வேற்றுமைகள், இருந்தும் ஒன்றிணைகின்றோம்  நட்பு என்ற அற்புதத்தால் !! சகோதர பாசத்தையும், தோழமை அன்பையும், மனித மாண்பையும் போற்றுவோம் !!  

கலந்து கொள்ள இயலாத தோழமைகளிடம் இருந்து வாழ்த்துக்களையும், ஆசிர்வாதங்களையும்  எதிர்பார்கின்றோம்...!

தமிழர்களாய், தமிழால் ஒன்றுபடுவோம் !
அன்பால் மனிதர்களை வசப்படுத்துவோம் ! 
நட்பால் உலகை வெல்வோம் !

வெல்க தமிழ் ! வாழ்க தமிழர்கள் ! வளர்க அவர்தம் புகழ் !






படங்கள் - கூகுள்