இவள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இவள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், டிசம்பர் 7

ஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'



இதுவரை கட்டுரைப்  போல பதிவுகள் எழுதி இருந்தாலும் கதை எழுதியதில்லை. (எழுதத் தெரியவில்லை என்பதே உண்மை) ஆனால் என் மனதை மிகவும் பாதித்த ஒரு பெண்ணின் வாழ்க்கையைப்  பற்றி எழுதவேண்டுமென நீண்ட நாட்களாக ஒரு எண்ணம் இருந்தது. தவிர இதை எழுதுவதற்கு  ஒரு முக்கிய காரணம் அவள் என் நெருங்கிய சினேகிதி...! தனது மனக்  குமுறல்களை டைரியிலும்  என்னிடமும் தவறாதுக்  கொட்டிவிடுபவள்...அனைத்தையும் சேர்த்து ஒரு கதையாக(?) என் தோழியின் சுய சரிதையை இங்கே பதிகிறேன் அவளின் அனுமதியுடன்...(அவரது வேண்டுகோளுக்கிணங்க பெயரும் ஊரும் மட்டும் தவிர்க்கப்படுகிறது)

முன் அறிமுகம் !

சந்தோசமான வாழ்க்கை எல்லோருக்கும்  அமைந்துவிடுவதில்லை, பிரச்சனைகளின் நடுவில் வாழ்பவர்களில் ஒரு சிலர் ஒரு கட்டத்தில் மீண்டு எழுந்துவிடுவார்கள் ஒரு சிலரால் முடிவதில்லை. அந்த ஒரு சிலரில் இவளும்  ஒருத்தி. சிறுவயதில் மனதைப்  பாதித்த சம்பவங்கள் திருமணம் முடிந்தபின்னரும் ஏன் வயதான பின்னர் கூட மனதை அழுந்த செய்யும்.அதிலும் இந்த பெண்ணைப்  பொறுத்தவரை சிறு வயதில் மனதை பாதித்தவைகள் திருமணத்திற்கு பின்னரும் தொடருவது வேதனை ! அன்பான கணவன் , குழந்தைகள், செல்வச்செழிப்பான வாழ்வு என எல்லாம் இருந்தும் எதுவுமே தனதில்லை என்பதைப்  போல எந்த வித பிடிப்பும் இல்லாமல் வாழ்ந்து வருகிறாள்.

யார் இவள் ?

சிறு வயதில் இருந்து எனக்கு அவளைத்  தெரியும்...ஒருவர் குடும்பத்தை பற்றி மற்றொருவருக்கு நன்கு பரிட்சயம் உண்டு.நடுவில் சில வருடங்கள் பெற்றோரின் வற்புறுத்தலுக்காக அவளது சொந்த ஊரில் இருக்கும் ஹாஸ்டலில் தங்கி தனது பள்ளிப் படிப்பை தொடர்ந்தாள்...பின் கல்லூரி வாழ்வின் போது மீண்டும் இருவரும் சந்திக்க நேர்ந்தது...இன்று வரை தொடருகிறது எங்களின் நட்பு. 

தாம்பத்தியம் தொடரை நான் எழுத மிக முக்கிய காரணம் என் தோழி தான். இப்போது உங்களுக்கு ஓரளவிற்கு புரிந்திருக்கலாம், அவள் வாழ்வில் எதனால் பிரச்னை என்று ?! ஆம். அவளது பெற்றோரின் கருத்து வேறுபாடுகளால் ஏற்படும் சண்டைகள் ! இது ஒரு பக்கம் என்றால் இவற்றின் நடுவே வேறு சில இம்சைகள்(?) இவையும் சேர்ந்துக்  கொண்டு இவள் மனதை அதிகம் பாதித்தன, கண்டபடி யோசிக்க வைத்தன...

சில அனுபவங்கள்  

தனது பத்தாவது வயதில் திருமணமான ஒரு ஆணின் பாலியல் ரீதியிலான தவறானத்  தொடுதல்...ஹாஸ்டலில் பிளஸ் 1 படித்த போது லெஸ்பியன் பற்றிய அர்த்தம் புரியாமல் அதைப்  பற்றி அறிய நேரிட்ட சூழல்...இப்படி வயதிற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் கிடைத்தன சில கசப்பான அனுபவங்கள் !

இதற்கிடையில் இவளது வாழ்வில் அழகான காதல் ஒன்றும் வந்து(!) போனது(?) ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லாமல் ஆறு வருடமாக வளர்த்த காதல், பிறகு ஒருநாள் முதல் முறையாக இருவரும் நேரில் சந்தித்து தங்கள் விருப்பங்களை வெளியிட்ட அக்கணத்திலேயே அந்த அழகான காதல் முடிவுக்கும் வந்து விட்டது ?!!

ஆமாம். காதலைச்  சொன்ன அத்தருணத்திலேயே இருவரும் பரஸ்பரம் பிரிந்து விட்டனர்...அதன் பின் இந்த நிமிடம் வரை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதே இல்லை...ஆனால் அந்த காதல் இன்னும் ஆத்மார்த்தமாக வாழ்ந்து கொண்டிருக்கிறது இருவரின் நெஞ்சிலும் என்பதை அறிவேன்...!

இப்படி அவளது பல வித்தியாசமான சம்பவங்களை எவ்வித ஜோடனையும் இன்றி அப்படியே பதிய வைக்க எண்ணுகிறேன்.

'இவள்' உங்களுக்கு பிடிக்கலாம், பிடிக்காமல் போகலாம்...ஆனால் நிச்சயம் உங்கள் மனதைப்  பாதிப்பாள்...'இவள்' மட்டும் என்று இல்லை இவளைப்  போன்று பலர் நம்மிடையே இருக்கிறார்கள், நமக்கு  தெரிய வாய்ப்பில்லை...! 'இவள்' ஒருவேளை நம் முன்னே நடமாடி கொண்டிருக்கலாம்,நம்முடன் பேசிக்கொண்டிருக்கலாம், பழகிக்  கொண்டிருக்கலாம்...ஒரு தோழியாக, சகோதரியாக...

ரகசியமாக தனக்குள்ளே இன்னொரு(?)வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கும் இவளைப்  போன்றோர் தங்களது சுயத்தை, மனதைத்  தாங்களாக எங்கும் வெளிப் படுத்த விரும்ப மாட்டார்கள்...ஒருவேளை இவளைப்  போன்ற சாயலில் யாராவது உங்களிடம் பேசும்போது ஒரு பலவீனமான கணத்தில் சில வேதனைகளைக்  கொட்டி இருக்கலாம், அதை அசட்டைச்  செய்யாமல் ஒரு ஆறுதல் வார்த்தைச்  சொல்லி ஒரு சின்னப்  புன்னகையைப்  பரிசளியுங்கள்...அவளது கனவுத் தோட்டத்தில் பூக்கும் பூக்களும் மணம் வீசிவிட்டுப்  போகட்டும்...!!

இந்த 'இவள்' பிடித்தால் தொடர்ந்துப்  படியுங்கள், பிடிக்காவிட்டாலும் தொடர்ந்து படியுங்கள்...ஒரு பெண்ணின் மென் உணர்வுகளை புரிந்து கொள்ள...

முன் அறிமுகம் ஒரு வழியாக முடிந்து விட்டது. :) என் தோழியே தனது கதையைச்  சொல்வதாக எழுதி இருக்கிறேன்...உங்களுடன் இனி அவள் பேசுவாள்...நான் விடைப் பெறுகிறேன்...!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *


இவள்...!

'Born with a Silver spoon in my mouth' என்று சொல்கிற மாதிரியான குடும்பத்தில் இரண்டாவது பெண்ணாகப்  பிறந்தேன். குழந்தையில் குண்டா(!) அழகா இருப்பேனாம், இப்பவும் போட்டோவுலப்   பார்த்தா எனக்கே பெருமை தாளாது...என்னைத்  தூக்கி வச்சுகிறதுக்குனே ரசிகர்கள் கூட்டம் அலையுமாம்...!


ஐந்து வயது வரை மிகச்  செல்லமாக வளர்ந்தேன்...வளர்க்கப்பட்டேன்...!அதற்கு பின் விதி ஒரு ஜோசியக்காரன் வடிவத்தில்  வந்தது...எதிர்காலத்தில எனக்கும் அம்மாவுக்கும் ஒத்தே போகாதாம், எப்பவும் எதிர்த்து பேசுவேனாம்...நடப்பேனாம்...வீட்டிற்கு அடங்க மாட்டேனாம்...!இப்படி வாய்க்கு வந்ததை உளறிக்  கொட்டி இருக்கிறான்...என் மேல அவனுக்கு என்ன கோபமோத்  தெரியல...?! நான்  வளரும் சூழலைப்  பார்க்கிற யாரும் ஈசியா சொல்லிடலாம், இப்படி அதிகச்  செல்லமா வளர்த்தாப்  பின்னாடிச்  சொன்ன பேச்சைக்  கேட்க மாட்டானு...! ஆனால் என் அம்மா புதுசா அவன் எதையோ சொல்லிட்ட மாதிரி அதுக்கு அப்புறமா என்னை கொஞ்சம் யோசனையோடயே   டீல் பண்ணத்  தொடங்கிட்டாங்க...! 

மத்தபடி என்னைக்  கவனிக்கிற விதத்தில எந்த குறையும் இருக்காது... கலர்கலரா கவுன் அதே நிறத்தில பிளாஸ்டிக் கம்மல், வளையல், பொட்டு, ரிப்பன் என்று பார்த்து பார்த்து வாங்கி அலங்கரிப்பாங்க...பள்ளி விழாக்களில் நான்தான் ஸ்பெஷல்...எல்லாம் அம்மாவின் ட்ரைனிங் !! 

பள்ளியில் படிக்கும் போது பள்ளி ஆண்டு விழாவிற்கு அப்போதைய கவர்னர் பட்வாரி அவர்கள் வரவழைக்கப்பட்டிருந்தார். அவரை வரவேற்கும் விதமான  பாடல் ஒன்றுக்கு நானும் இன்னும் மூன்று பேரும் நடனம் ஆட ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருந்தோம், விழாவிற்கு முதல் நாள் காலையில் என் காலில் கொலுசு போடும் இடத்தில் எதனாலோ ஒரு பெரியக்  கட்டி வந்துவிட்டது...வலி இல்லை ஆனா பார்க்க ஒரு மாதிரியாக  இருந்தது.

முட்டி வரை உள்ள கவுன் தைச்சுத்  தயாரா இருக்கு, ஆனா என் கால் இப்படி இருக்கிறதால கவுன் மாடல் டிரஸ் செட் ஆகாது, என்ன பண்ணலாம் என யோசனையில் இருக்கும் போது என் அம்மா உடனே எல்லோருக்கும் மேக்ஸி (நைட்டி மாதிரியான கால்வரை உள்ள மாடல் டிரஸ்)  போடச்  சொல்லிடலாம் என சொல்லவும், எங்க ஆசிரியை கொஞ்சம் யோசிச்சாங்க... உடனே என் அம்மா "நானே நாலு பேருக்கும் மொத்தமா வாங்கிக்  கொடுத்துவிடுகிறேன்" அப்படின்னு சொல்லிடாங்க...அப்பவே கடைக்கு போய், நல்லா அழகா பிரில் வச்ச வேற வேற கலர்ல ஒரே மாதிரியான மேக்ஸி வாங்கி கொடுத்தாங்க...அதை போட்டுகிட்டுச்  சிறப்பா ஆடி முடிச்சோம்.

இப்படி என்னை அருமையாக்  கவனித்துக்  கொண்டாலும் அம்மாவின் மனதோரத்தில் சிறு கசப்பு இருந்துகொண்டே வந்திருக்கிறது...அதை நானே உணர்ந்துக்  கொள்ள கூடிய சூழல் ஒன்றும் வந்தது...


பொதுவாக விடுமுறை நாள் அன்று சோம்பலாய் விடியும் மாணவ மாணவர்களின் பொழுதுகள் !

அப்படிதான் எனக்கும் ஒருநாள் காலைப்  பொழுது விடிந்தது...கலைந்துக்  கிடந்த முடிகளை ஒன்று சேர்த்து கிளிப் போட்டு, தலைக்கு மேல் கைகளை உயர்த்தி சோம்பல் முறித்துக்கொண்டே மெல்ல எழுந்தேன்...இன்னும் சற்று நேரத்தில் என் தலையில் இருந்து ரத்தம் கொப்பளிக்கப்  போகிறது என தெரியாமல்...!? 

                                                                   * * * * ** * * * *

'இவள்' உங்களுடன் தொடர்ந்து பேசுவாள்...




படங்கள்- நன்றி கூகுள்