வருடத்தின் அடுத்த பண்டிகை !
ஒட்டடை அடித்து பழையனவற்றை கழித்து
வெளியே கொட்டி வீதியில் அசுத்தபடுத்துங்கள்,
நம் வீடு சுத்தமாகட்டும் !!?
கண்டதையும் கொளுத்தி போட்டு
காற்றை மாசு படுத்துங்கள்
தென்றல் காற்றை நூலகத்தில் தேடுவோம் !?
விவசாயத்தில் விளைந்த புதுநெல்லை வைத்து கொண்டாட
அருகதை அற்றவன் தமிழன் என்று அரசு தருகிறதாம்
இலவச பொங்கல் பொருட்கள் !?
யானை கட்டி போரடித்த மரபு என்று பழங்கதை பேசிக்கொண்டு
வீணாய் போகாமல் ரேசன் கடை முன் கையேந்துங்கள்
சோழன் அன்றே செத்துவிட்டான் !?
உழைக்க வழி செய்து கொடுப்பதை விடுத்து
உழைத்தவர்கள் உட்கார்ந்து பொழுது போக்க
தொலைக்காட்சி பெட்டி, உணவிற்கு ஒரு ரூபாய் அரிசி !?
விவசாய நிலங்கள் பிற மாநிலத்தவரின் ரியல் எஸ்டேட்களாக
மாறி கொண்டிருப்பதை கண்டு கொள்ளாத
சுயநல அரசு , கையாலாகாத மக்கள் !?
தீமையை கொளுத்த முயன்று தன்னையே
கொளுத்தி கரிகட்டையான தமிழன் முத்துகுமார்
மறைந்து மறக்கடிக்கபட்டு விட்டான் !?
பச்சை தமிழனாய் பிறந்தது பாவம் என்று
தாமதமாய் உணர்ந்து சிகப்பு தமிழனாய்
கடல் தாண்டி அழிந்து கொண்டிருக்கிறான் !?
மீன் பிடிக்க போன தமிழனின் உயிர் பிடித்து செல்லும்
வாடிக்கை இன்று வேடிக்கையாகி
எமக்கு பழகிவிட்டது தினசரி செய்திகளும் !?
அக்கறையில்லை எதைபற்றியும், எம்மக்களுக்கு
பண்டிகை வாழ்த்து செய்தி சொன்னால் மறந்துவிடுவார்கள்
அறிக்கையிடும் நரித்தன அரசியல்வாதிகள் !?
மறதி நோய் பிடித்த மக்களும் மூணு நாள் விடுமுறை
கிடைத்த மகிழ்ச்சியில் தொலைகாட்சி முன் அமர்ந்து
பண்டிகை கொண்டாடி திருப்தி அடைந்து கொள்வார்கள் !?
மாட்டு பொங்கல் !
பக்கத்து மாநில மக்களின் உடல் சதையை வளர்க்க அடிமாட்டை அனுப்புங்கள், அது வியாபாரம். பத்து மாடுகள் நிற்கும் இடத்தில் அம்பது மாடுகளை அடைத்து தலை வெட்டப்படும் முன்னரே உயிர் வதைக்கும் சித்திரவதையை செய்து கொண்டு அல்லது பார்த்துக்கொண்டு மற்றொரு பக்கம் அவற்றை அலங்கரித்து மாட்டுபொங்கலாம்...?!!மாடுகள் கூட மன்னிக்காது மனிதனை !!?
காணும் பொங்கல் !
இன்றாவது கைவிடப்பட்ட உறவுகளை, முதியோர்களை சென்று காணுங்கள், அவர்களுடன் கூடி களியுங்கள்.....சுயநலத்தால் பலவீனப்பட்டுக் கிடைக்கும் இதயத்திற்கு அன்பு என்னும் புது இரத்தம் பாயட்டும்...தழைக்கட்டும் நல் உறவுகள்.....புத்தன், இயேசு,கீதை, குரான் சொன்ன அன்பு வழியில்.....!!
வருடந்தோறும் தை மட்டும் பிறக்கிறது !
தமிழனுக்கு வழிமட்டும் பிறக்கிறதா தெரியவில்லை !!
வழக்கம் போல் இதையும் படித்துவிட்டு பொங்கல் வாழ்த்து சொல்லி பதிவுலக தர்மத்தை காத்து கொள்வோம் எனதருமை பச்சை தமிழர்களே.....!!
பொங்கட்டும் பொங்கல்...தங்கட்டும் மகிழ்ச்சி இல்லந்தோறும் !
படங்கள் - நன்றி கூகுள்


