பசுமைவிடியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பசுமைவிடியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், அக்டோபர் 4

பசுமை விடியல் நிர்வாகிகளின் முதல் சந்திப்பு - காஞ்சிபுரம்

பசுமைவிடியல் அமைப்பை சேர்ந்த   அனைத்து நிர்வாகிகளின்  சந்திப்பு கடந்த ஞாயிறன்று காஞ்சிபுரத்தில் மிக இனிமையாக நடந்து முடிந்தது. இணையத்தின் மூலம் அறிமுகமாகி, ஒத்த கருத்தில் ஒன்றிணைந்து, அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி செயல்பட்டு கொண்டிருந்த நாங்கள் அன்றுதான் நேரில் முதல்முறையாக சந்தித்தோம்.  ஒரு கிராமத்தில் ஏதாவது ஒரு பெரிய மரத்தடியில் மண் வாசனையுடன் மீட்டிங் வைக்கலாம் என கேஆர்பி செந்தில் அவர்களிடம் கேட்டபோது, 'நன்றாக இருக்கும் ஆனா இப்போ இங்க மழை காலமாக இருக்கிறது, ஏதாவது ஹால்னா பெட்டெர்'னு சொன்னதால் ஹால் என முடிவு செய்தோம் 


மண்ணோட சம்பந்தப்பட்ட பசுமைவிடியலுக்கு ஹால்,பேனர்,மைக், ஸ்பீக்கர் இந்த மாதிரி எதுவும் தேவையில்லை என்பதே நிர்வாகிகள் எல்லோரின் விருப்பமாக இருந்தது.  மண்டபம், உணவு அரேஞ்ச்மென்ட் எல்லாம் காஞ்சிபுரம் தன்னார்வலர் திரு.அருள் செய்திருந்தார். 

கலந்து கொண்டவர்கள் 

சென்னையில் இருந்து திரு.செல்வகுமார், திரு கேஆர்பி.செந்தில், திரு சிவகுமார் மற்றும் பெங்களூருவில் இருந்து திரு.பிரபு கிருஷ்ணா, திரு.சூர்ய பிரகாஷ், திருநெல்வேலியில் இருந்து திரு.ஜோதிராஜ், திருமதி கௌசல்யா கலந்து கொண்டனர். மேலும் பசுமைவிடியலின் தன்னார்வலர்கள் காஞ்சிபல்லவன் கல்லூரிபேராசிரியர்திரு.சண்முகம்,திரு.அருள்,திரு.பூபாலன், திரு.ஜெய்சங்கர் திரு.மாதேஷ், திரு.செந்தில்,திரு.கணேஷ் ,   மற்றும் உறுப்பினர்கள் வந்திருந்தனர்.

காலையில் நிர்வாகிகளின் சந்திப்பு மிக இனிமையாக நகைச்சுவையுடன் சென்றது. பசுமைவிடியல் பற்றிய பேச்சுக்கு நடுவே கேஆர்பி அவரது சில அனுபவங்களை முக்கியமாக அவர் நடித்த குறும்படம் படப்பிடிப்பு சம்பவங்களை விவரித்தபோது சிரிப்பால் ஹால் அதிர்ந்தது. எந்தவித மேல்பூச்சும் இல்லாமல் பேசக்கூடிய வெகு சில மனிதரில் ஒருவருடன் உரையாடிய அந்த சில நிமிடங்கள் என்றும் என் நினைவில்...!  


உணவு இடைவேளைக்கு பிறகு தொடர்ந்த கலந்துரையாடலில் எல்லோரும் தங்கள் கருத்தை கூறியது  மிக இயல்பாக இருந்தது. ஒவ்வொருத்தர் பேச்சிலும் சமூகத்தை பற்றிய அக்கறை அதிகம் தெரிந்தது. சொல்லப்பட்ட யோசனைகள், ஆலோசனைகள் குறித்துக்கொண்டோம். வந்திருந்த உறுப்பினர் ஒருவர் "பள்ளி, கல்லூரிகளில் இருந்து நமது விழிப்புணர்வை தொடங்கவேண்டும், அவர்களிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை பற்றி பேச ஒருநாளில் ஒரு பத்துநிமிட நேரம் செலவிட்டால் போதும், அவர்கள் தான் இதனை நன்கு புரிந்து கொண்டு செயல்படுவார்கள்" என்று சொன்னார். குறும்படம், சிலைட் ஷோ, பவர்பாயின்ட் ப்ரசன்டேசன் போன்றவை மூலமாக இன்னும் சரியாக மனதில் பதியவைத்துவிடலாம் என்பதால் அதனை தயாரிக்கும்,திரட்டும் வேலைகளில் விரைவில் இறங்க வேண்டும் என முடிவு செய்தோம். 

                                  (சிவகுமார் பேச அருகில்  KRP.செந்தில், சண்முகம் சார் )
திரு.சிவகுமார் , இயற்கையின் மேல் இவருக்கு இருக்கும் அக்கறை அன்று இவரது பேச்சில் முழுமையாக வெளிப்பட்டது. சாதனை மனிதர் திரு.யோகநாதன் அவர்களை பற்றியும் விரிவாக எடுத்து கூறினார். தனிநபராக பல ஏக்கர் நிலபரப்பில் ஒரு காட்டை உருவாக்கிய திரு.ஜாதவ் பயேங் பற்றியும் பேசப்பட்டது. 

சில நிகழ்வுகள், எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :-

பசுமைவிடியலின் மூன்றாவது திட்டமான கிராமம் தத்து எடுப்பது குறித்த யோசனைகள் பரிமாறப்பட்டன. அந்த கிராமத்தில் என்னவெல்லாம் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன என்பதை குறித்துப் பேசப்பட்டன.

                                                           (வெகு உற்சாகமாக...!!)

* கிராமத்தின் முக்கியஸ்தர்கள் முழு ஒத்துழைப்பு தருவதாக கூறியதின் அடிப்படையில் முதல் கிராமமாக காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த கீழம்பி முடிவு செய்யப்பட்டு அங்குள்ள  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பசுமைவிடியல் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பின்னர் மரம் நடுவது கிராமம் முழுமைக்குமாக விரிவு படுத்தப்பட இருக்கிறது. இன்னும் மூன்று நாட்களில் ஊர் குளத்தை சுற்றி கன்றுகள்  நடப்படுகிறது.   

                                         (ஒரே சமயத்தில் ஒன்றாக வரிசையாக நடப்பட்டது) 

* இரண்டாவதாக 'திடக் கழிவு மேலாண்மை திட்டம்' (குப்பைகள் மறுசுழற்சி) குறித்த யோசனை ஒன்று  முன்  வைக்கப்பட்டது. இதனை பல்வேறு கட்டமாக படிப்படியாக செயல்படுத்த என்ன முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பதை பற்றி நிர்வாகிகள் கலந்து முடிவு செய்தார்கள்.

* காஞ்சிபுரம் மாவட்டத்தின் பசுமைவிடியல் PROJECT EXECUTIVE வாக திரு.அருள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு திரு.கேஆர்பி.செந்தில் அவர்களால் முன் மொழியப்பட்டது. 
 
* அன்று மாலை காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சன்னதி அருகில் உள்ள வள்ளலார் சிறுவர் ஆதரவற்றோர் இல்லத்திற்கு பசுமைவிடியல் சார்பில் ஒரு சிறு தொகை வழங்கப்பட்டது.

முக்கிய துளிகள்

திரு.சிவகுமார் அவர்கள், வருடந்தோறும் சென்னையில் நடக்கும் யூத் பதிவர் சந்திப்புக்கு அடுத்த  முறை   'PROJECT EXECUTIVE' திரு.அருள் அவர்களை அழைத்து கௌரவிப்பதாக கூறியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

                                          (மரம் நடுபவர் அருள், அருகில் செல்வா அண்ணா )

திரு.அருளை பற்றி குறிப்பிட்டாக வேண்டும், பசுமைவிடியலில் இணைவதற்கு முன்பே ஊரில் பல பகுதிகளில் மரங்களை நட்டு, தினமும் தவறாமல் தண்ணீர் ஊற்றி பராமரித்து வருபவர். MBA படித்திருக்கும் இவர் கெவின் கேர் நிறுவனத்தில் தற்போது பணிபுரிந்து வருகிறார். மேலும் பல உறுப்பினர்களை பசுமைவிடியலில் இணைத்தும் வருகிறார்.

நட்ட மரக்கன்றுகளை பராமரிக்க தேவையான ஆட்களை பசுமைவிடியலின் ஆலோசனையின் படி திரு. அருள் ஏற்பாடு செய்து கவனித்துக் கொள்கிறார்.

மன நிறைவு 

கிராம மக்களின் அனுமதி, ஒத்துழைப்பு, ஆர்வம், அக்கறை இல்லாமல் வெளியில் இருந்து மற்றவர்கள் யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்பதை அறிந்திருப்பதால்  அங்குள்ள பெரியவர்களை  அவ்வப்போது கலந்து பேசிக் கொண்டிருக்கிறோம். வெகு விரைவில் அங்கே அருகில் உள்ள வேறு ஒரு கிராமத்திலும் களப்பணிகளை தொடர இருக்கிறோம்.

நாங்கள் எதிர்பார்த்ததை விட சந்திப்பு, களப்பணிகள் சிறப்பாக இருந்தது.  மழை குறைந்த வரண்ட பகுதிகளில் மரம் நடுவதை அதிக அளவில் செயல்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும். சந்தர்ப்பம் அமைந்தால் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் பசுமைவிடியல் திட்டங்களை செயல்படுத்த மிக ஆர்வமாக இருக்கிறோம். நன்றிகள்.


பிரியங்களுடன்                                     
கௌசல்யா
பசுமைவிடியல்

வெள்ளி, செப்டம்பர் 14

ஒத்துழைப்பு தாருங்கள், திட்டத்தில் இணையுங்கள் !!

பிளாஸ்டிக் பயன்படுத்தாதீர்கள், சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவுங்கள், மரம் வளர்ப்போம் மழை பெறுவோம், வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் இப்படி மாய்ந்து மாய்ந்து அரசு பிரச்சாரம் செய்கிறது. ஆனால் ரசாயன உரம், பிளாஸ்டிக் என்று சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் அனைத்தையும் விற்பனை செய்ய அனுமதி அளித்திருக்கும் ஒரு முரண்பாட்டு மூட்டை அரசாங்கம்...!!

அரசை திருத்துவது நம் வேலை அல்ல எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும் ஆனால் தனி மனிதன் நம் கடமை ? தண்ணீருக்காக போர் போட்டால் சில அடிகளில் ஊற்றெடுக்கும் நிலத்தடி நீர், பல நூறு அடிகள் போடப்பட்டும் கல்லை கரைத்து துப்பிக்கொண்டிருக்கிறது. திரளும் கருமேகங்களை குளிர்வித்து கீழே கொண்டுவரும் திறனற்ற வறண்ட பூமி !!? கான்கிரீட் பூமியில் கண்ணுக்கு தெரியாத பசுமை !

பசுமைவிடியல் 

அமைதியாக இருந்தால் போதுமா ஏதாவது செய்ய வேண்டாமா என யோசித்ததின் முடிவில் பிறந்ததுதான்  'பசுமை விடியல்'

கடந்த சில மாதகாலமாக சிறு குழந்தை போல தவழ்ந்து நிமிர்ந்து எழுந்து மெல்ல அடி எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் இணைந்த தன்னார்வலர்களின் கரங்களை பிணைத்து கொண்டிருக்கும் தைரியத்தில் பசுமைவிடியல் பெரிய அளவில் செயல் பட திடங்கொண்டு  பல வியத்தகு முடிவுகளை எடுத்திருக்கிறது. முதலில் இரண்டு திட்டம் தொடங்கினோம்.

* 'தினம் ஒரு மரம்' திட்டம்

* 'இலவச மரக்கன்று' திட்டம் 

சில முயற்சிகள் செய்யலாம் 

தன்  வீடு தன் வேலை என்ற குறுகிய வட்டத்திற்குள் நாம் நின்றுவிடாமல் அதை தாண்டி வெளியே வந்து சில கடமைகளை இயன்றவரை செய்யலாமே. யாருக்கோ செய்யவேண்டாம். நம் குழந்தைகள் பேரன் பேத்திகள் நாளை வாழப்போகும் இடம் இது, இதை சரி செய்து கொடுக்க வேண்டியது நம் கடமை. 'வாழ தகுதியில்லாத பூமியை நமக்கு விட்டுச் சென்றுவிட்டார்கள் இரக்கமற்றவர்கள்' என்று நம்மை நம் குழந்தைகள் சபிக்க வேண்டுமா ??

வீட்டுக்குள் ரோஜா செம்பருத்தி குரோட்டன்ஸ் வளர்த்துவிட்டு நாங்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கிறோம் என்று திருப்தி பட்டுவிடக் கூடாது. 

*   நாம் வசிக்கும் தெருவின் ஓரத்தில்...

*   வீட்டு வாசலில், காம்பௌன்ட் உள்ளே...

* வீட்டை சுற்றி இடம் இல்லை என்றால் தெரிந்தவர்கள் வீட்டில் இடம் இருந்தால் வாங்கி கொடுத்து வைக்க சொல்லலாம். நீங்களே நட்டு, நேரம் கிடைக்கும் போது சென்று பார்த்து வரலாம்.    

* உறவினர்கள் வீட்டுக்கு செல்லும் போது  மரக்கன்றுகளை பரிசாக கொண்டு செல்லலாம்.

*  பள்ளி கல்லூரிகளுக்கு சென்று கொடுக்கலாம். முக்கியமாக உங்கள் குழந்தைகளிடம்(அவங்க பிறந்தநாளின் போது) கொடுத்து அவங்க பள்ளியில் நட சொல்லலாம். தினம் தண்ணீர் ஊற்றி எப்படி வளர்ந்திருக்கு என்று குழந்தைகளிடம் கேட்டு அவர்களின் ஆர்வத்தை தூண்டலாம்.

* விதைகள் சேகரித்து மலைவாசஸ்தலம் எங்காவது சென்றால் அங்கே விதைகளை  தூவிவிட்டு வரலாம். (இதெல்லாம் காக்கா, குருவி, பறவைகள் பண்ற வேலை அவைதான் இப்போ கண்ணுல படலையே)

 ஏதோ ஒரு விதத்தில் நமக்கு இயன்றவரை செய்து வரலாம்.

இப்படியும் சொன்னாங்க 

*  எங்க வீட்ல இடம் இல்ல... எங்க நட.
* தெருவுல போய் நடவா ? வேற வேலை இல்ல...பாக்குறவங்க என்ன நினைப்பாங்க.

இதெல்லாம் கூட பரவாயில்லை ஒரு காலேஜ் ப்ரோபசர் சொன்னார், "நீங்க நட்டு வச்சுட்டு போய்டுவீங்க, யாருங்க தண்ணீ ஊத்த? அதுக்கும் ஒரு ஆள நீங்களே ரெடி பண்ணி வச்சுட்டா நல்லது !!"

அவர் சொன்னப்போ சுர்ருன்னு கோபம் வந்துடுச்சு. ஆனாலும் அவர் சொன்னதுல என்ன தப்பு இருக்கு. அவர் பாட(பாடத்தை) கவனிப்பாரா செடிக்கு தண்ணி  ஊத்திட்டு இருப்பாரா? இருந்தாலும் நானும் விடாமல் "காலேஜ்க்குனு தோட்டக்காரங்க இருப்பாங்களே" னு கேட்டேன், "இதுவரை செய்றதுக்கு சம்பளம் கொடுப்போம், இது எக்ஸ்ட்ரா  வேலை"

இப்படி சொன்னதும் நான் வேற என்ன செய்ய "சரிங்க நான் ஆள் ரெடி பண்ணிட்டு உங்க கிட்ட பேசுறேன்"னு போன் வச்சுட்டேன்.

ஆக

கன்றை கொடுப்பது  சின்ன வேலை அதை பராமரிப்பதுதான் பெரிய வேலை என்ற ஒன்றை புரிய வச்சாங்க. அதன் பின் தான் மூன்றாவது திட்டம் உதயமானது. ஒரு கிராமத்தை தத்து எடுத்து அங்கே மரக்கன்றுகளை ஊரை சுற்றி நட்டு, தண்ணீர் ஊற்றி பராமரிக்க அங்க உள்ள சிலரை பணியில் அமர்த்தி பசுமைவிடியல் மூலமாக சம்பளம் கொடுப்பது என்று முடிவு செய்திருக்கிறோம். முதல் இரண்டு திட்டங்கள் படிப்படியாக செயல்படதொடங்கியதும் மூன்றாவது திட்டம் தொடங்க இருக்கிறோம். 

* * * * * * * * * *

முகநூலில் பார்த்து சிலர் போன் பண்ணிகேட்டது மனதிற்கு நிறைவாக இருந்தது. முக்கியமாக சென்னையில் கொடுப்பிங்களானு கேட்டாங்க. பிற மாவட்டங்களுக்கும் கொடுக்கிறதுக்காக சில ஏற்பாடுகள் செய்துகொண்டு இருக்கிறோம்...விரைவில் நல்ல செய்தியை  பகிர்கிறேன்

சந்தோசமான செய்தி ஒன்று 

இலவச மரக்கன்று அறிவித்த மூன்றாவது நாளில் Rotaract Club of Kovilpatti Chairman திரு செந்தில் குமார் என்னை தொடர்புகொண்டு பேசினார். "ஒரு வருடத்திற்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்து இருக்கிறோம். அதற்கு உங்களால் உதவ முடியுமா" என்று கேட்டார். இது போன்ற ஒரு வாய்ப்புக்காகத் தானே காத்திருக்கிறேன் என்பதால் சந்தோசமாக 'ஏற்பாடு செய்கிறேன்' என்றேன்.

உடனே "முதலில் அடுத்த வாரம் பத்தாயிரம் மரக்கன்று வேண்டும்" என்றார். 

ஒரே சமயத்தில் இவ்வளவு கன்றுகள் ரெடி செய்வது முதல் முறை என்பதால் கொஞ்சம் தயங்கினாலும் ,தயார் செய்து விட்டோம். அடுத்தவாரம் கொடுக்க போகிறோம்.

மரக்கன்றுகள் சென்று சேர போகும் இடம்

Junior Red Cross Convener
தென்காசி கல்வி மாவட்டம்
இ.மா. அரசு மேல்நிலை பள்ளி
பண்பொழில்.
* * * * * * * * * * * * * *                             

2 வது திட்டம் குறித்த பதிவு  - ஒரு புதிய முயற்சி -தினம் ஒரு மரம் 

அன்பின் உறவுகளே!!

 * இலவச மரக்கன்றுகள் பெற்று இயன்றவரை உங்களை சுற்றி இருக்கிற இடங்களில் நட முயற்சிசெய்யுங்கள்...
* தினம் ஒரு மரம் திட்டத்தில் அனைவரும் அவசியம் பங்குபெற வேண்டுகிறேன்.
தொடர்புக்கு tree@pasumaividiyal.org

உங்களின் மேலான ஒத்துழைப்பையும் ஆதரவையும்  நாடுகிறேன். 
 
மரம் நடுவோம், மண்ணை காப்போம்


பிரியங்களுடன்
கௌசல்யா


 

   

திங்கள், செப்டம்பர் 10

ஒரு புதிய முயற்சி - 'தினம் ஒரு மரம்'

அருமை இணைய உறவுகளே,

வணக்கம். 

சில நிமிடங்கள் உங்கள் பார்வையை இங்கே பதியுங்கள்...படித்து கடந்து செல்லும் முன் ஒரு உறுதியுடன் செல்வீர்கள் என நம்புகிறேன்.

சுற்றுச்சூழல் பாதுக்காப்புக்கென்று ஒரு புதுமையான திட்டம் 'தினம் ஒரு மரம்' யார் தொடங்கினாங்க? எப்படி? எதுக்கு? என்னவென்று கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்களேன்.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் இயங்கி கொண்டிருக்கும் EAST TRUST ஆல்  தொடங்கப்பட்ட 'பசுமைவிடியல் அமைப்பு' கடந்த சில மாதங்களாக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கென்று பல செயல்களை செய்துவருகின்றது. அதன் அடுத்தகட்ட ஒரு முயற்சிதான் 'தினம் ஒரு மரம்' என்ற திட்டம். நாம் வாழும் சமூகத்திற்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற தேடல், ஆர்வம் இருப்பவர்கள் பங்கு பெற ஒரு நல்ல சந்தர்ப்பம் .  

 

தினம் ஒரு மரம்!
பசுமை விடியல் குழுவின் புதிய பசுமைத் திட்டம்!

இத் திட்டத்தின் நோக்கம் என்ன?
பசுமை விடியல் சார்பில் உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் தினம் ஒரு மரம் நடப்பட வேண்டும்.

இத்திட்டத்தில் யார் யார் எல்லாம் பங்கு கொள்ளலாம்?
உலகில் பசுமை நிலைத்திருக்க விரும்பும் அனைத்து நல்ல உள்ளங்களும் பங்கு கொள்ளலாம்

இத்திட்டம் எப்படி செயல்படுகிறது?
ஒரு சங்கிலித் தொடர்போல, மரம் நடும் நண்பர்கள், தினம் தினம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
முதல் ஆர்வலரை பசுமைவிடியலே பரிந்துரை செய்து இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறது. முதல் நபர் மரத்தை நடும் முன்பே, அடுத்த நபரை பரிந்துரைக்க வேண்டும். அவர் நண்பராகவோ, உறவினராகவோ, பசுமை விடியல் அங்கத்தினராகவோ இருக்கலாம். அவர் அவருக்கடுத்த நபரை பரிந்துரைப்பார். இப்படியே தினம் ஒரு மரம் பசுமை விடியல் சார்பில் உலகில் எங்காவது ஒரு மூலையில் நடப்படும். வருடத்திற்கு 365 மரங்கள். சங்கிலித் தொடர்போல இந்த பணி தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இந்த சங்கிலித் தொடருக்குள் இணைவது எப்படி?
மிக எளிது. தினம் ஒரு மரம் திட்டத்தில் ஆர்வமுள்ளவர்கள் தங்கள் பெயரையும், ஊரையும் குறிப்பிட்டு tree@pasumaividiyal.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். உங்கள் பெயர் தினம் ஒரு மரம் ஆர்வலர்களின் பட்டியலில் இணைக்கப்படும். அந்தப் பட்டியலில் இருந்து உங்கள் பெயரை மற்றவர்கள் பரிந்துரைப்பார்கள். நீங்கள் அவர்கள் குறிப்பிடும் தேதியில் ஒரு மரம் நட வேண்டும்.

மரம் நடப்பட்டது என்பதை எப்படி உறுதி செய்வது?
 மரம் நடும் காட்சியை ஒரு புகைப்படமாக tree@pasumaividiyal.org என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப் புகைப்படம் தேதிவாரியாக ஒரே ஆல்பத்தின் கீழ் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரில் இணைக்கப்படும். இந்த ஆல்பம் மற்றவர்களை  நிச்சயம் ஊக்கப்படுத்தும்

                                                                               * * * * *                                                                      

விழிப்புணர்வு ஏற்படுத்துவதே...

உலகம் தற்போது இருக்கும் நிலையில் ஒருநாளைக்கு ஒரு மரம் நட்டால் போதுமா? என்ற கேள்வி சிலருக்கு ஏற்படக்கூடும். இத்திட்டம் ஒரு மரம் வைக்கணும் என்பதாக இருந்தாலும், உலகின் பல இடங்களில் இருந்தும் பலர் இணைந்து தினமும் தொடர்ச்சியாக செய்து வரும் போது பிறருக்கு நிச்சயம் ஒரு விழிப்புணர்வு ஏற்படும். 

இத்திட்டத்தின் நோக்கம் பலரை தட்டி எழுப்புவது தான். அவர் செய்துவிட்டார் நாமும் செய்வோம் என்ற மறைமுக ஊக்கப்படுத்துதல். மரம் நடுவது அனைவரின்  இன்றியமையாத கடமை என்றில்லாமல், அதை ஏன் செய்யவேண்டும், அதனால் என்ன பலன் என்ற கேள்வியை இன்னமும் கேட்கும் பலர் இங்கே உண்டு...! அப்படிபட்டவர்களிடத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டோம் என்பதே போதுமானது. பின் அவர்களாக தொடர்ந்து செய்ய தொடங்கிவிடுவார்கள்.

எந்த ஒன்றும் எல்லோரின் ஒத்துழைப்பு இன்றி செயல்வடிவம் பெற இயலாது என்பதை தெரிந்தே இருக்கிறோம்.  அதனால் உங்களின் மேலான ஆதரவையும், பங்கெடுப்பையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். சிறிதும் தயக்கம் இன்றி முழுமனதாக ஒத்துழைப்பு கொடுப்பீர்கள் என திடமாக நம்புகிறேன்.

இனிமேல் இது  'எங்க திட்டம்' இல்லை 'நம்ம திட்டம்'. 

இணைந்து செயலாற்றுவோம். 
                                    வாழ்த்தட்டும் இயற்கை !! வணங்கட்டும் தலைமுறை !!

தினம் ஒரு மரம்!
இந்த பூமி உள்ள வரை...
 
ஆம் சங்கிலித் தொடராக தினம் ஒரு மரம்.

இன்று நீங்கள், நாளை நண்பர், அடுத்த நாள் மற்றொருவர்!

ஆளுக்கொரு மரம்!
                                       மரம் நடுவோம்! 
                                                                           மண் காப்போம்!!

                                                                                      * * * * *

பிரியங்களுடன்

கௌசல்யா 
பசுமைவிடியல்.


புதன், பிப்ரவரி 22

அதீதத்தில் பசுமைவிடியல் - நண்பருக்கு நன்றி !!



பதிவுலகம் வந்த புதிதில் எனக்கு அறிமுகமான கார்த்திக்(எல்.கே) அதற்கு பிறகு இப்போது என் கணவருக்கும் நெருங்கிய நண்பராகி விட்டார் ...! தற்போது பிளாக்கில் பதிவுகள் எழுதுவதை குறைத்துவிட்டார். முன்பு பிறரது தளங்களை தனது பாகீரதி தளத்தில் அறிமுகம் செய்து பலரை, பலருக்கும் தெரிய வைத்தவர் எல்.கே. (மீண்டும் பாகீரதியில் 'இவர்களும் பிரபலமானவர்களே' பகுதியை எழுதலாமே !)

நாங்கள் பசுமை விடியல் இயக்கத்தின் இணையதளம் தொடங்கியதை அறிந்து மிக பாராட்டி வாழ்த்தினார். 'அதீதத்தில் பசுமைவிடியல் தளத்தை அறிமுகம் செய்து எழுதட்டுமா?' என ஒரு மாதமாக கேட்டு கொண்டே இருந்தார். தற்போது தான் இருவருக்கும் நேரம் வாய்த்தது...சில கேள்விகளை என்னிடம் கேட்டு பதிலை பெற்றுக்கொண்டு உடனே பதிவை எழுதி வெளியிட்டும் விட்டார். நடந்தது இதுதான் என்றாலும் அதன் பின் நடந்தது தான் நான் சிறிதும் எதிர்பாராத ஒன்று, வெளிவந்த அன்று மாலையே முகநூலில் 'மரத்தை வெட்டுங்கள்' பதிவு சசிதரன் என்பவரால் பகிரப்பட்டு இந்த நிமிடம் வரை 2,083 பகிர்வுகள் வரை பலராலும் கவனிக்கபட்டு கொண்டிருக்கிறது...!!! இரண்டு வருடங்களாக நான் எதிர்பார்த்து கொண்டிருந்த இது போன்ற ஒரு தருணத்திற்கு ஒரு மறைமுக காரணமாக அதீதத்தை நினைக்கிறேன்...! பெருமிதம் கொள்கிறேன் !

பசுமைவிடியல் இயக்கத்தின் சார்பாக நண்பர் கார்த்திக் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். அதீதத்தில் வந்த பதிவு இப்போது உங்கள் பார்வைக்காக...

                                                       * * * * * * * * * * * * * * * * * 


இதுவரை பிற தளங்களை பற்றி வலையோசையில் மட்டுமே பகிர்ந்துள்ளோம்.. சுற்றுப்புற சூழல் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு தளத்தை பற்றியக் கட்டுரை இது.. இன்றைக்கு நமது சுற்றுப்புறச் சூழல் பல விதத்திலும் பாதிப்படைந்துள்ளது. பலரும் பலவகையிலும் விழிப்புணர்வுகளை செய்து வருகின்றனர். இங்கே நமது இணையத்திலும் விழிப்புணர்வு பதிவுகள் எழுதி வெளியிட்டு வருவது பாராட்டுக்குரியது.அதே நேரம் விழிப்புணர்வை எழுத்தில் வெளிபடுத்துவதுடன் நின்றுவிடாமல் களத்தில் இறங்கி இருக்கும் 'மனதோடுமட்டும்' கௌசல்யாவையும் அவருக்கு உற்றத் துணையாக கை கோர்த்திருக்கும் ISR. செல்வகுமார், பிரபு கிருஷ்ணா , சூர்யபிரகாஷ் போன்றோரையும் பாராட்டுகிறேன்.

இணையத்தின் மூலமாக இணைந்த இவர்கள் 'பசுமைவிடியல்' என்ற இயக்கத்தை தொடங்கி, முறையாக திட்டங்கள் தீட்டி ஒவ்வொரு படியாக நிதானமாக எடுத்து வைத்து நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்... இதற்கான ஒரு இணையதளம் திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் வைத்து பதிவர்களின் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர் திரு இசக்கி சுப்பையா அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

*அன்றே இயக்கத்தின் முதல் மரமாக செண்பக மரக்கன்று ஒன்றும் நடப்பட்டது...

*மாபெரும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ஒன்றையும் சங்கரன்கோவில் ஊரில் நடத்தி முடித்திருக்கிறார்கள்.

* ISR. Ventures நிறுவனமும் பசுமைவிடியலும் இணைந்து மாங்குரோவ் காடுகளை பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்திருக்கிறது...

சீமை கருவேலமரம்


இவ்வியக்கம் மிக முக்கிய பணியாக கையில் எடுத்திருப்பது சீமை கருவேலமரங்களை வேருடன் அழித்தொழிப்பது. சுற்றுச்சூழலையும் , நிலத்தடி நீரையும் பெருமளவில் பாதித்துகொண்டிருக்கும் நச்சு மரமான இதனை வேரறுக்க சீரிய முறையில் பல திட்டங்களை வடிவமைத்து இருக்கிறார்கள். முதல் படியாக தமிழகம் முழுவதும் தன்னார்வலர்களை ஒன்று திரட்டி கொண்டிருக்கிறார்கள். மேலும் விவரம் தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்.

இம்மரத்தை குறித்த விவரங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல  வேண்டிய ஏற்பாடுகள் ஒரு புறமும், மக்களிடம் நேரில் விழிப்புணர்வை ஏற்படுத்த மற்றொரு புறத்திலுமாக உத்வேகத்துடன் செயல்பட்டு வருகின்றார்கள்.    
இவர்களை நாம் வாழ்த்துவோம்...நமது வாழ்த்துக்கள் அவர்களை அதிக உற்சாகமாக உழைக்க வைக்கும்.

பசுமைவிடியல் தளம் - www.pasumaividiyal.org

அதீதம் சார்பில் இயக்கத்தை குறித்து நான்கு கேள்விகள் கேட்கப்பட்டது...கேள்விகளுக்கான பதிலை பசுமைவிடியலின் சார்பில்  கௌசல்யா தெரிவித்தார்கள்...

1. எல்லோரும் மரம் நடவேண்டும் என்றுதானே சொல்வார்கள். நீங்கள் ஏன் மரத்தை வெட்ட வேண்டும் என்று ஆரம்பித்து உள்ளீர்கள்? 

உலக வெப்பமயமாதல் பாதிப்பை தடுக்க வேண்டும் என்றால் முதலில் எல்லோரும் சொல்வதும், செய்வதும் மரம் நடுவதுதான். ஆனால் நாங்கள் சொல்வோம் நடுவது முக்கியமில்லை, இந்த சீமைக்கருவேல மரத்தை வெட்டுவதுதான் முக்கியம் என்று...! ஏன் என்றால் வயலில்  களைகளை அகற்றினால் தான் பயிர் நன்கு வளரும், களைகள் இருப்பின் பயிரை வளரவிடாது என்பது விவசாயம் ! களை இருக்கும் போது பயிருக்கு தண்ணீர்,உரம் போட்டு பயனேதுமில்லை. அதையே தான் இங்கே நாங்களும் சொல்கிறோம், இந்த நச்சு மரங்களை அழித்தால் தான் நல்ல மரங்கள் வளரமுடியும், நல்ல மரங்களின் பயன் முழுதாக பூமிக்கு கிடைக்கும்.

2. சீமை கருவேலமரத்தின் தீமையை சுருக்கமாக கொஞ்சம் சொல்ல முடியுமா ?

அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் சீமைக் கருவேல மரம்(வேலிகாத்தான், சீத்த மரம்,டெல்லி முள் என்று பல வட்டார பெயர் உண்டு அறிவியல் பெயர் ப்ரோசொபிஸ் ஜூலிபிளோரா (Prosopis Juliflora))

விறகிற்கு பயன்படும் என்று 1950 ஆம் ஆண்டுவாக்கில் விதைகள் கொண்டுவரப் பட்டு இங்கே தூவப்பட்டன., இதன் விஷத்தன்மை பற்றி முழுதாய் தெரியாமல்...! கடந்த அறுபது ஆண்டுகளில் இவை தமிழகம் முழுவதும் கிளைபடர்ந்து ஏறத்தாழ 25 சதவித விளைநிலங்களை ஆக்கிரமித்து பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றன.  அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இதை வேருடன் களைய முயற்சி மேற்கொண்டாலும் இன்னும் முழு மூச்சுடன் நடைபெறவில்லை என கருதுகிறோம். மேலே சொன்னபடி களை எடுக்காமல் பயிர் நடுவதும், உரமிடுவதும் வீண் என்ற எண்ணம் தான் இது பற்றிய ஆழமான ஆராய்ச்சியை எங்களுக்குள் உருவாக்கியது மேலும் இதன் தீங்குகள் பற்றி அறிய இங்கே படிக்கவும்
பதிவுலகமே மரத்தை வெட்ட உதவுங்கள்...!

3. களப்பணி தான் இயக்கத்தின் முக்கிய நோக்கம்.  பசுமை விடியல் நிர்வாகிகள் நால்வரும் நான்கு திசையில் இருக்கும் நிலையில் இது எப்படி சாத்தியம்?
இதில் இப்படி ஒன்று இருக்கிறதா ?? உண்மையில் இந்த கேள்வி எங்களுக்குள் ஏன் இதுவரை எழவில்லை என ஆச்சர்யபடுகிறேன்.  இணைந்து செயல்படவேண்டும் என முடிவு செய்தோமே தவிர 'முடியுமா' என்ற வினா யாருக்கும் எழாததே 'சாத்தியம்' என்பதால் இருக்கலாம் அல்லவா...?! நால்வரின் எண்ணங்கள் ஒத்த அலைவரிசை என்ற போது நிச்சயம் எதுவும் சாத்தியமே !

4. சாத்தியம் என்றால் எவ்வாறு ? கொஞ்சம் சொல்லவும்...
நாங்கள் ஒன்றிணைய இணையம் தான் காரணம் என்பதை மறுக்கயியலாது. அதே நேரம் களத்தில் இறங்கி பணியாற்ற நல்ல மனிதர்களின் உதவிதான் வேண்டும். தகவல்களை பரிமாற்ற, சமூக நோக்கு கொண்டவர்களை ஒன்றிணைக்க, செய்திகளை அறிவிக்க, பலரிடம் இயக்கம் பற்றிய செயல்களை கொண்டு சேர்க்க இணையத்தை பயன்படுத்தி கொள்கிறோம். அவ்வளவே.

தற்போது எங்களுடன் இணைந்திருக்கும் தன்னார்வலர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருக்கிறார்கள்...அவர்களுடன் நாங்கள் எப்போதும் தொடர்பில் இருக்கிறோம்...அந்தந்த இடத்தில் நடக்க வேண்டிய களப்பணிகளை பற்றிய ஆலோசனைகள், முன்னெடுப்புகள் , கருத்துகள் பற்றி எல்லாம் விவாதித்த பின்னே செயலில் இறங்க இருக்கிறோம். களப்பணிகளின் போது கூடுமானவரை எங்களில் ஒருவர் களத்தில் இருப்பார்.  நாங்கள், தன்னார்வலர்கள் இணையும் போது அனைத்தும் சாத்தியமாகும்.

அதீததிற்கு மனமார்ந்த நன்றிகளை எங்கள் இயக்கத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறேன். உங்களை போன்ற நல்ல உள்ளங்கள்  எங்களுக்கு கொடுக்கும் ஒத்துழைப்பும், ஆதரவும் எங்களுக்கு இன்னும் அதிக உற்சாகத்தை கொடுக்கிறது...நாம் வாழும் இந்த சமூகத்திற்கு நம்மால் இயன்றவரை சிறு துரும்பையாவது கிள்ளி போடுவோம் என்று சொல்வார்கள் நாங்கள் துரும்பை கிள்ள அல்ல மரத்தையே வெட்டி சாய்க்க போகிறோம்...!!

நன்றி - அதீதம்   
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * 
மீண்டும் ஒரு முறை அதீததிற்கு நன்றியையும் , 'மரங்களை வெட்டுங்கள்' பதிவை பலருக்கும் கொண்டு சேர்க்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கு மகிழ்ச்சியையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன். 

பிரியங்களுடன் 
கௌசல்யா