அந்தரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அந்தரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், நவம்பர் 18

காமம் - பெண்ணின் தவிப்பும் ஆணின் புரிதலும் !!!

இதுவரை  பேசாப் பொருளா காமம் - அறிமுகம்  படிக்காதவர்கள்,  அதை படித்தப்பின்  இப்பதிவைப்  படித்தால்  தொடர்ச்சிப்  புரியும். நன்றி.

* * * * *

திருமணமானவர்களே இது உங்களுக்கான கேள்வி...

=> காமத்தை காதலோடு செய்கிறீர்களா ?

* இது என்னங்க கேள்வி ... காதல் இல்லாமலா காமம் வச்சுக்க முடியும்?

=> இன்னும் கொஞ்சம் நல்லா யோசிச்சு சொல்லுங்க ... உங்க காமத்தில் காதல் இருக்கிறதா?

* இது என்ன  குழப்பம் உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கான்ற மாதிரி??!! புரியலையே...

=> அப்ப இந்த கட்டுரை உங்களுக்குத்தான் தொடர்ந்து வாசிங்க...

* * * * *

காமத்தை காதலுடன் ரசித்து உணர்ந்தவர்கள் வாழ்க்கையை ரசித்து வாழ்கிறார்கள். மற்றவர்கள் வாழாமல் வாழ்க்கையுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள் !!

தம்பதியருக்கிடையில் காதல் என்று  தனியாக இருக்கவேண்டியதில்லை என்பது உங்களின் எண்ணமாக இருந்தால் உடனே மாற்றிக் கொள்ளுங்கள். புது தம்பதியர் இருவரும் காதல் இன்றி முதல்இரவு என்ற கட்டாயத்திற்காக உறவு வைத்துக் கொள்வதும் தற்கொலைக்கு முயலுவதும் ஒன்றுதான்.  காமத்தை கையாள கட்டாயம் அங்கே காதல் இருந்தாக வேண்டும். அத்தகைய குடும்ப உறவுகள் மட்டுமே நீடித்து நிலைத்து நிற்கும். பெரியோர்கள், நண்பர்கள் சொன்னார்கள் என்றும்  சம்பிரதாயமாம் என்றும் திருமணத்தன்று இரவே அவசர அவசரமாக நடந்து முடிவதற்கு பெயர் காமமும் அல்ல காதலும் அல்ல... முழுமையான தாம்பத்தியமும் அல்ல.  ஒரே வார்த்தையில் சொன்னால் அது ஒரு  'விபத்து' 

Lust is not a sin. பேசாப் பொருள் அல்ல காமம்


'காதலுடன் காமம்' என்பது உடலின் ஒவ்வொரு செல்லும் மென்மையாக தூண்டப்பட உணர்ச்சிகள் மலரைப்  போல மெல்ல விரிய, தானும் நுகர்ந்து துணையையும் நுகரவைக்கும் அற்புத அனுபவம்... வி(மு)டிந்த பின்னும் அடுத்து எப்போது எப்போது என ஏங்க வைக்கும்! சும்மா தொட்டதும் இந்த நிலை ஏற்பட்டுவிடாது, அதற்குத்தான் காதலை துணைக்கு அழைத்துக் கொள்ளவேண்டும் என்கின்றேன்.

வெறும் காமத்துடன் உடல்கள் ஒன்று சேர்ந்தால்   குழந்தை பெற்றுக் கொள்ளலாமே தவிர இறுதிவரை சந்தோசமாக குடும்பம் நடத்த முடியாது. அதுவும் மன அழுத்தம் மிகுந்த இன்றைய இயந்திர வாழ்க்கையில் காமம் மட்டும் என்றால் வேலைக்காகாது. அட ச்சே இவ்ளோதானா மேட்டர் இதுக்குத்தானா இவ்ளோ பில்ட்அப் என்று அசால்ட்டா தூக்கிப் போட்டுவிட்டு கண்டுக்காமப்  போயிக்கிட்டே இருப்பாள் பெண்! நேசத்திற்கும் வலுக்கட்டாயத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது!!

காதலையும் காமத்தையும் போட்டு குழம்பிக் கொள்ளாதீர்கள்.  ஒரு ஆண்,   தன் மனைவியுடன் படுக்கையில் இணைவதையே  காதல் என்கிறான். தன் மனைவியின் மீதான நேசத்தை இவ்வாறு, தான் வெளிப்படுத்துவதாக திருப்திப் பட்டுக் கொள்கிறான்.  என்னிடம் கவுன்செலிங்க்கு வந்த பெண் நாலு பக்கத்திற்கு கணவனின் மீது குறைகளை வாசித்தாள், அதன் மொத்த சாராம்சம் 'தன் மீது கணவருக்கு அன்பில்லை' என்பதே.  கணவனிடம் கேட்டபோது 'நான் அவளை எவ்ளோ நேசிக்கிறேன் தெரியுமா, வாரத்தில் இரண்டு மூணு  தடவை அவளுடன் உறவு வச்சுக்கிறேன், இப்படி என் அன்பை வெளிப்படுத்தியும் அவ புரிஞ்சுக்கலைனா நான் என்னங்க பண்ண'    என்று ரொம்பவே அப்பாவியாக(?) கேட்டார்.

நிறைய ஆண்கள் இவரை போன்றுத்தான் இருக்கிறார்கள். ஒரு பெண்ணிற்கு மகிழ்ச்சி என்பது செக்ஸ் ஆல் ஏற்படும்  என்பது மிக மிக தவறான புரிதல்.  உங்களைப்   பொருத்தவரை செக்ஸ் என்பது பெரிய மேட்டர் என்றால் பெண்ணோட  தேவையெல்லாம் ரொம்ப  சின்ன  மேட்டர். செல்ல வருடல், மென்மையான தொடுதல்,   கொஞ்சம் டைட்டான முரட்டுத்தனமான அணைப்பு, கொஞ்சலான பேச்சு, எண்ணிக்கை வைக்காமல் கிடைக்கும் முத்தம்... இப்படி ஆரம்பித்து மெல்ல மெல்ல முன்னேறி பெண்ணை உச்சத்திற்கு அழைத்துச் சென்று அப்படியே  ஆண் தனது தேவையை தீர்த்துக் கொள்வது ......இதுதான் முழுமையான செக்ஸ்! ஆணின் ஐந்து நிமிட காமம் பெண்ணிற்கு  வெறுப்பைத்தான் தரும்,  அத்தகைய உடலுறவை சந்தோஷம்/திருப்தி என்று எடுத்துக் கொள்வது ஆண்களின்  அறியாமை!!

பெண்ணின் தவிப்பும் ஆணின் தவறான புரிதலும் 

2 குடும்பங்களை உதாரணத்துக்குப்  பார்ப்போம். சிந்தைக்குள் குடும்பச் சிக்கல்கள்  அலைமோத தூக்கம் தொலைத்துப்  புரண்டுக்  கொண்டிருக்கும் மனைவி தனது தவிப்பு கணவனின் கைக்குள் தஞ்சமடைந்தால் குறையும் என முதுகுக்  காட்டி உறங்கும் கணவனை மெல்ல தன் பக்கம் திருப்ப, ஸ்பரிசம் பட்டு லேசாக அசையும்  கணவன், 'எனக்கு மூடில்லை தூங்க விடு' பட்டென்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு தூக்கத்தைத்  தொடருகிறான்.   அடுத்ததாக வேறு ஒரு குடும்பம் இதே மாதிரியான ஒரு சிச்சுவேசன், ஆனா  இந்த கணவன் கொஞ்சம் நல்லவன், அணைப்பிற்குத்  தவித்தவளைப் பிடித்து இழுத்து அவளது தவிப்பைப்  போக்குகிறேன் பேர்வழி என்று பெருந்தன்மையுடன் போராடி(?) தனது ஐந்து நிமிட தேவையை (மட்டுமே) பூர்த்தி செய்துவிட்டு அப்பாடா முடிந்தது கணவனின் கடமை என்று மீண்டும் மனைவிக்கு முதுகுகாட்டி தூங்கியே விடுகிறான்.  இந்த இரண்டு விதமான படுக்கையறை காட்சிகளிலும் நடந்தது என்ன ?!


அன்பான அணைப்பிற்கு மனைவி ஏங்குவதை காமம் என பொருள் கொள்ளும் விந்தையான கணவர்களைக்  கொண்டது தான்  நம் சமூகம்  !!

முதல் குடும்பத்தில்,  மனைவி அடிபட்ட வலிகொண்ட   உணர்வுடன்  அவமானத்தில் கூனிக் குறுகி இருப்பாள், இரண்டாவது குடும்பத்தில்,   மனைவியோ குழப்பத்தின் உச்சத்தில் இருப்பாள்...  இருவருக்குள்ளும் எழும் ஒரே கேள்வி 'நான் சும்மா அணைக்கத்தானே நெனைச்சேன்??!!' பதிலற்ற கேள்வியின் இறுதியில், இந்த இடத்தில்தான்  அவள் வெறுக்கத் தொடங்குகிறாள், காமத்தையும் புரிதலற்று அதனைக்  கையாளும் கணவனையும்...

விடியும்வரை தூக்கமின்றித்  தவித்து விடிந்ததும் அவமானம்  குழப்பம் மனதை வருத்த எரிச்சலுடன் கணவனின் மீது கோபத்தைக்  காட்டுவாள். காரணம் புரியாமல் அதை எதிர் கொள்ளும் ஆண், காலை நேர டென்ஷன் என்று மனதை சமாதானம் செய்துக் கொண்டு வேலைக்குச்  சென்றுவிடுவான். இரவு வீடு திரும்புகையில் வாசலிலேயே  எதிர்க்கொள்ள வேண்டியிருக்கும் அதே கோபத்தை வேறு ஏதோ ஒன்றைக்  காரணமாக வைத்து....... இச்சமயத்தில் ஆண் முழுதாக குழம்பி ' அப்படி நாம என்னத்தச்  செஞ்சுட்டோம், இவ இப்படி குதிக்கிறா'  என்று. இரவில் கணவன் சரியாக நடந்துக் கொள்ளாததுதான் காரணம் என்று பொதுவாக  எந்த பெண்ணும் வெளிப்படையாக சொல்ல மாட்டாள், சொல்லப்போனால் அவளுக்குமே தெரியாது, தனது எரிச்சலின்    நெருப்பு?  படுக்கையறையில் தான் புகைய ஆரம்பித்தது என்று.

காமத்தின் குணம் 

இப்படித்தான் பல தம்பதிகள் சிக்கலின் முதல் முடிச்சு எந்த இடத்தில் விழுந்தது என்று  தெரியாமலேயே மேலும் மேலும் முடிச்சுகளைப்  போட்டுக் கொண்டே சென்று சிக்கலைப்  பெரிதாக்கி ஒரு கட்டத்தில்  கோர்ட் படியேறி விடுகிறார்கள்.  விவாகரத்தும்  கிடைக்கிறது, அதன் பிறகு மறுமணம் நடக்கலாம், அங்கேயும் பிரச்னை ஏற்படலாம், மறுபடியும் விவாகரத்து  என்றால் கேலிக்கூத்தாகிவிடுமே என சகித்துக்கொண்டு காலத்தை ஓட்டலாம். இதுதான் இதுவேதான் இன்றைய நிஜம்... யதார்த்தம்!!

இப்போது புரிகிறதா காமத்தின் வலிமை என்னவென்று.  வெறும் ஐந்து நிமிட சுகம் தானே என்ற அலட்சியம் குடும்ப உறவுகளையே சிதைத்துவிடுகிறது.  ஆணின் அணுகுமுறையை பெண்ணும் பெண்ணின் தேவையை ஆணும் புரிந்து நடந்துக் கொள்ளவேண்டும். இதனை  சரியாக கையாளத் தெரிந்தவர்கள் மட்டும்தான் சந்தோசமாக வாழ்கிறார்கள், மற்றவர்கள் வாழ்வதாக நடிக்கிறார்கள்!!

காமம் - உடல், காதல் - மனம் இரண்டையும் ஒன்று சேர்த்தால் தான் அங்கே நிறைவு கிடைக்கும். ஆண் அல்லது பெண்  வெறும் காம இச்சையுடன்  மட்டும் துணையை அணுகும்போது எதிர்பாலினத்தை சந்தோசப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு தன் உச்சத்தை நோக்கிமட்டுமே செல்வார்கள்... இது அவர்களின் தவறல்ல காமத்தின் பிரத்தியேக குணம்.  ஆனால் காதலுடன் அணுகினால் வேறு சிந்தனையில்  துணை இருந்தாலும்   இழுத்துப் பிடித்து தன்னுடன் பிணைத்து வைத்துக் கொள்ளத் தூண்டும் காதல். அப்புறமென்ன  இருவரும் மற்றொருவருக்குள் கலக்கத் தொடங்கிவிடுவார்கள்.  இதில் இன்னொரு வசதியும் இருக்கிறது, காதலை துணைக்கு அழைத்ததுடன் தேமே என்று இருந்துவிட்டால் கூட  போதும், பிறகு காதல் மற்ற  வேலைகளைப்  பார்த்துக் கொள்ளும்.  காதலுக்கு இருக்கக் கூடிய வீரியம் இது.

காதலுடன் கூடும் போது ஒருவருக்குள் ஒருவர் சுலபமாக ஊடுருவ முடியும்...அது மனதென்றாலும், உடலென்றாலும்...! செல்ல வருடல் , சில பல முத்தங்கள், அன்பான பேச்சு, இறுக்கமான அணைப்பு இவை போதுமே உறவைத்  தொடங்க, இதைதான் காதல் என்கின்றேன். பலரும் உடலுடன் கூடுவதாக எண்ணி உடலுக்கு வெளியேதான் கூடுகிறார்கள்... அது செயற்கை , இயந்திரத்தனம். ஆண் பெண் படைப்பின் அர்த்தமே கூடுவதுதான். அதை இயந்திரத்தனமாக செய்யாமல் இயல்பாக மென்மையாக காதலுடன் செய்யுங்கள். காமம் உடலின் தேடலாக இல்லாமல் ஆன்மாவின் தேடலாக இருந்தால் கூடலுக்குப்பின் தியானத்தில் இருந்து எழுவதைப்  போன்ற ஒரு அனுபவம் கிடைக்கும்... நம்புவர்களுக்கு அங்கே கடவுளின் பிரசன்னமும் தெரியக்கூடும்!!

காமம் அழகானது அருமையானது அதில் முழுமை அடைந்தவர்களுக்கு...!!

விரல் நுனியில் கணினியில் தேடும் இருட்டறை சமாச்சாரம் அல்ல... தெருவோர புத்தகக்கடையில் விலை மலிவாய் கிடைப்பதும் அல்ல... பலரது மூளைக்குள் அமர்ந்துக்  கொண்டு பெண்களின் அங்கங்களை அளவெடுத்துக் கொண்டிருக்கும் சைத்தானும் அல்ல...காலங்காலமாய் அப்பாக்களும் அம்மாக்களும் இதற்காகவே கல்யாணம் முடித்ததாய் எண்ணி ஆற்றிய கடமையும் அல்ல... அரசமரத்தைச் சுற்றி வந்து அடிவயிற்றைத்  தொட்டுப் பார்க்கும் பெண்களின் வரமும் அல்ல ........ 'மனித பிறப்பின் அர்த்தத்தை அணு அணுவாக ரசித்து தானும் இன்புற்று தன்னைச்  சுற்றி இருக்கும் உயிர்களுக்கும் இன்பத்தைக் கொடுக்கும், வெகு சிலரே முழுதாய் உணர்ந்த ஒரு உன்னதம்' - காமம் !

* * * * * * * * * *

ஆணின் தேவை/அவசரத்தை சரியாகப்  புரிந்து உள்வாங்கிக்கொண்டு அதற்கேற்ற விதமாய் நயைந்தும் தளர்ந்தும் ஆணின் தீவிரத்தை தாமதம் செய்து பெண்மையை  முழுமையாய் உணர்த்தி தானும் இன்பத்தில் திளைத்து  ஆணையும் உச்சத்திற்கு அழைத்துச்  செல்வது பெண்ணின் கடமை. அது எவ்வாறு என்ற கேள்வி எழுந்தால் காத்திருங்கள் பதிலுக்காக... தொடர்ந்து தொடரை  வாசியுங்கள்...


தொடர்ந்து பேசுகிறேன்...
உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா


Painting & pic - thanks google

புத்தகப் பரிந்துரை :

written by Om swamy




திங்கள், மார்ச் 9

பேசாப் பொருளா ...காமம் !? ஒரு அறிமுகம்

'தாம்பத்தியம்' தொடர் தொடர்பாக வரும் மெயில்களை வாசிக்கும் போதும் கவுன்சிலிங் செய்யும்போதும்  தம்பதிகளின் சில பிரச்சனைகளை அறிந்து   ஆச்சர்யத்தின் எல்லைக்கு சென்றுவிடுகிறேன். இப்படியெல்லாமா  சந்தேகம் வரும்? இதுக்கூடவாத்  தெரியாது? அதுவும் குழந்தைகள் பிறந்து இத்தனை வருடம் கழித்தா? இதுக்காகவா விவாகரத்து?  என எழும் பல அந்தரங்கக் கேள்விகளுக்கு விடையாக தனியாக ஒரு தொடர் எழுதினால் என்ன என்று தோன்ற.... இதோ எழுதத்தொடங்கியே  விட்டேன்...

A lust that can be spoken of...

தொடருக்குள் போகும்முன் சில வரிகள் புரிதலுக்காக...

பாலியல் பற்றிய எனது முந்தைய கட்டுரைகளில் எப்படிங்க ஒரு பெண்ணா தைரியமா இதை எழுதுறிங்க, உங்க துணிச்சலை பாராட்டுகிறேன் என்ற ரீதியில் வரும் கேள்விகள் கோபத்தையும் சிரிப்பையும் ஒன்றாக வரவழைக்கும். உண்மையில் இதற்கான பாராட்டை ஒரு அவமானமாக உணருகிறேன். இயற்கையாக  ஆணைவிட அதிக மன தைரியம் கொண்ட பெண் தன் சம்பந்தப்பட்ட பாலியலை பேசுவதற்கு ஏன் தயங்க வேண்டும். பெண்ணின் உணர்வுகள் உணர்ச்சிகள் பெண்ணால் சொல்லப்படும்போது தான் முழுமை பெறும்.

பாலியல் உறவுகளைப் பற்றி ஆண் பேசலாம், பெண்ணின் அங்கங்களை வர்ணித்து கவிதைகள் எழுதலாம் ஆனால் இதையே ஒரு பெண் செய்தால் உடனே சமூகம் வெகுண்டு எழும் அப்பெண்ணை பழிக்கும் தூஷிக்கும். அவ்வளவு ஏன்  இதை வைத்தே அந்த பெண்ணின் தரத்தை அவர்களாகவே நிர்ணயித்துவிடுவார்கள். இதுதான் காலகாலமாக நடந்து வருகிறது.

பெண் இதையெல்லாம் செய்யக் கூடாது என்ற கட்டமைப்பை ஏற்படுத்தி அதை மீறும் பெண்களை பெண்ணியவாதி , புரட்சிப்பெண் என்று பெயரிட்டு சக பெண்களை விட்டு அவர்களை தள்ளியே வைத்திருக்கிறது இந்த உலகம்.   ஒரு  ஆண்  மருத்துவராக இருந்தாலுமே அவரால் உணர்ந்துக்கொள்ள முடியாத பல விசயங்கள் பெண்ணிடம் உண்டு என்பதை அறியும்போது தான் பெண் என்பவள் போகப்பொருள் அல்ல போற்றப் படவேண்டியவள், என்பதும்  பாலியல் அத்துமீறல்களுக்கு மறைமுகமாக பெண் எவ்வாறு காரணமாகிறாள்  என்பதையும் உலகம் புரிந்துக் கொள்ளும்.  

பாலியலைப்  பற்றி பெண்  எழுதினால் மட்டுமே இது சாத்தியமாகும். காமம், காதல் பற்றி பெண் அதிகம் பேசவேண்டும், அப்போதுதான் இதுவரை மறைத்து வைக்கப்பட்டுள்ள பக்கங்கள் புரட்டிப் பார்க்கப்படும். தற்போது இணையத்தில் இயங்கிவரும் அத்தனை பெண்களும் பாலியல் பற்றி எழுதவேண்டும், பேசவேண்டும்! அவ்வாறு பெண் பேச முன்வரும்போது இந்த உலகம் தனது வாயைகே  கொஞ்சம் மூடிக் கொள்ளட்டும். எனவே  இனியாவது அர்த்தமற்ற கேள்விகள் எழாமல்  இருக்கட்டும் !!!

பேசாப் பொருளா காமம்?   

அற்புதமான ஒரு விஷயம் எவ்வாறு  அசிங்கமான தவறான அருவருப்பான குற்றமாக தவிர்க்கக்கூடிய - மறைக்கக் கூடிய  ஒன்றாக மாறியது அல்லது மாற்றப்பட்டது... யாரால் ஏன் எப்போது என்ற கேள்விகள் எனக்குள் எழும் ...அதற்கான விடையை தேடும் ஒரு தேடல் இந்த தொடர் என்று சொல்வதை விட காமத்தைப்  பற்றிய அரைகுறை கணிப்புகளினால் சமூகத்தில் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளை அலசும் ஒரு தொடர் என்று வைத்துக்கொள்வோம்.



சித்தர்கள் யோகிகள் புனிதர்கள் முனிவர்கள் பெரியோர்கள் மூத்தோர்கள் ..... என அத்தனை ஆண்களும்  பெண் என்றால் பேய், பெண்ணுறுப்பு என்பது எமன்,  அருவருப்பு அசிங்கம் பாவத்தின் பிறப்பிடம்... அப்டியாக்கும்  இப்டியாக்கும் என்று இஷ்டத்திற்கு எக்கச்சக்கமாக எழுதி/பாடி வைத்துவிட்டு சென்றுவிட்டார்கள்.  அவ்வாறு எழுதியதன் ஒரு காரணம் என்னவென்றால் காமத்தின் மீதான பயம், எங்கே தான் இதிலேயே மூழ்கி விடுவோமோ என்ற பயம்.  காமத்தில் அவர்களால் முழுமைப்  பெற முடியவில்லை, அனுபவித்தால் தானே முழுமை பெற ... காமத்தை முழுமையாக  உணராமலேயே தூஷிப்பது ஆதிகாலம் தொட்டு இன்றுவரை தொடருகிறது. அதில் முழுமை பெற்றவர்  எவரும் காமத்தை நிந்திப்பதில்லை... அமைதியாகவே  இருப்பார்கள். அரைகுறைகள் தான் ஆட்டம் போடும்.  முன்பு பெண்ணை நேரடியாக நிந்தித்து சமாதானம் செய்துக் கொண்டவர்கள் இன்று கலாசாரத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்.    

 எதிர் பாலினத்திடம் ஈர்ப்பை ஏற்படுத்தியது இறைவன் (ஆன்மிகம்) என்றும் இயற்கை (நாத்தீகம்) என்றும் ஹார்மோன் (விஞ்ஞானம்) என்றும்  ஒவ்வொரு கூட்டமும்  ஒன்றை காரணமாக சொன்னாலும் அத்தனை பேரும் ஒன்றாக சொல்வது என்னனா 'காமம் தவறு'. தவறு என்றால் இறைவன் இயற்கை விஞ்ஞானம் அத்தனையும் தவறுதானே. ஈர்ப்பு ஏற்பட்டால்தான் உலகில் ஜனனம் நடைபெறும். உலகின் இயக்கத்திற்கு முக்கியக்  காரணமான ஒன்றிற்குத்தான் காமம் என்று பெயரிட்டு அதை தவறு என்றும் பேசாப்  பொருள் என்றும் மறைத்து வைத்திருக்கிறோம். மனிதன் என்றால் அவனுக்குள் காம உணர்வு எழவேண்டும், அந்த உணர்வை வெளிப்படுத்தும் முறையில்தான் மனிதர்கள் வேறுபடுகிறார்கள்.

இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்றவர்கள் தான் பூஜை அறைக்கதவை அடைத்துவிட்டும் கடவுள் படத்திற்குத்  திரையிட்டு மறைத்தும் உடலுறவு கொள்கிறார்கள். வேடிக்கை மனிதர்கள்! வானத்தை  கூரையாகக்  கொண்டவர்களும் உடலுறவுக் கொண்டு இவ்வுலகில் வாழத்தான்  செய்கிறார்கள். அங்கே எந்த சாஸ்திரமும் சம்பிரதாயமும் கடைபிடிக்கப் படவில்லை.  உறவு கொண்ட அன்று கோவிலுக்கு போனால் தீட்டு,தோஷம்  என்று கடவுளுக்கு சொந்தக்காரர்களாக காட்டிக் கொள்பவர்கள் இந்த கணினி யுகத்திலும் பஜனைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.  காம எண்ணங்களை  மனதில் வைத்துக்கொண்டு பூஜை செய்வதை விட அதை வெளியேற்றிவிட்டு பூஜை செய்வது பெட்டெர் என புரிந்து கொண்டவன் கடவுளின் கருவறையை பள்ளியறையாக்கினான் போலும். மனதில் குப்பையும் ஆடையில் தூய்மையுமாய் அத்தனை அக்கிரமங்களையும் ஆண்டவனின் பெயரால் செய்துக்கொண்டு. சின்னஞ்சிறுமிகளிடம் தங்களது வேட்கையை தணித்துக் கொள்ளும் மனித தன்மையற்ற ஈனனுக்கு  பெயர் பாதிரியார்.

புலன்களை அடக்குவது நல்லது என அறிந்ததாலேயே விரதம் என்ற ஒன்றை எல்லா மதத்தினரும்  ஏற்படுத்தினார்கள். ஆனால் நம்மவர்களோ எப்போதடா விரத காலம் முடியும், விட்டக்குறை தொட்டக்குறைகளை மறுபடியும்  புடிக்கலாம் என்ற எண்ணத்திலேயே பாதி நேரத்தைச்  செலவிடுகிறார்கள். 

பாலியல் உறவை தவிர்த்தால் தான் புனிதமாக முடியும் என்பது மனிதனாக ஏற்படுத்திக் கொண்ட ஒன்று. முற்றும் துறந்த சாமியார் என்று அழைப்பது சரியல்ல உண்மையில் தங்களின்  ஆசைக்கு முற்றும்(The End) போடாதவர்களே இன்றைய சாமியார்கள். ஆரம்பத்தில் கடவுளே சரணம் என்றுதான் வருகிறார்கள்...போகப்  போக தங்களின் புலன்களிடம் தோற்றுப் போய் விடுகிறார்கள், அப்புறமென்ன அச்சு பிச்சுனு ஏடாகூடமாக நடந்து நம் போன்றோரிடம் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள். புலன் அடக்கம் என்பது எவ்வாறு ஏற்படும், புலன்களை திருப்திப் படுத்திய பின்தானே. எவ்வாறு திருப்திப் படுத்துவது? இதற்குத்தான் ஈர்ப்பு என்ற ஒன்று  ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.  

அவரவருக்கு ஒரு நியாயங்களை கட்டுகளை வைத்து பேசுகிறார்களேத்  தவிர பொதுவான ஒரு நியதி எல்லோருக்கும் ஏற்றதான ஒன்றை யாரும் சொல்வதில்லை , காமத்தையும் இவ்வாறேதான் பாவிக்கிறார்கள். இறைவனுக்கு காமம் ஆகாதென்றால் ஏன் கோவில் பிரகாரங்களில் கோபுரங்களில் உடலுறவு காட்சிகள். இல்லை இது வேறு காரணத்திற்காக வைக்கப்பட்டது என்று ஆயிரம் காரணங்களைக்  கூறினாலும் ஒரே காரணம் இறைவனின் விருப்பம் ஆண் பெண் ஈர்ப்பு. உண்ணக்கூடாத கனியை ஏன் உண்டாக்குவானேன், பிறகு  அதை உண்ணாதே என்று ஏன் சொல்வானேன், எல்லாவற்றிலும் ஏதோ ஒரு சூட்சமம் இருக்கிறது தானே!

ஆன்மீகத்திற்கு எதிரானதா  காமம்.

துறவிகளுக்கும்  புனிதர்களுக்கும் காம உணர்வு எழும், அடக்கிப் பழகினார்கள் அதனால் சாதாரண மக்களிடம் இருந்து தனித்துத்  தெரிந்தார்கள். ஆசைக் கொள்ளாதே என்று உபதேசித்தாலும் அவருக்குள்ளும் ஒரு ஆசை இருக்கத்தானேச்  செய்தது, உலக மக்களை உய்விக்க வேண்டுமென்ற ஆசை சொல்லப் போனால் இது சாதாரண ஆசையல்ல பேராசை ! இவ்வாறுதான் காமம் தவிர் தவிர் என்று சொல்லும் போதே காமத்தை எண்ணியவர்களாயினர். காமத்தை உணராமல் மனிதன் வாழவே முடியாது இயற்கையாக எழும் உணர்வை சாதாரணமாக அடக்கமுடியாது அதற்கு மிகுந்த பயிற்சி வேண்டும். புத்தனும் அனுபவித்து அறிந்தப் பின்பே அடக்கினான். வயிற்றில் பசி இறுதி மூச்சு வரை இருப்பதைப்  போல காமப் பசியும் இருக்கும், அப்படியெல்லாம் இல்லை நான் உத்தமனாக்கும் என்று சாதிக்கிறவர்கள் ஒன்று பொய் சொல்ல வேண்டும் அல்லது உடல் மனதளவில் ஆரோக்கியக்  குறைபாடுகள்  கொண்டவராக இருக்கவேண்டும் 

ஒன்றை முழுமையாக உணராமல் அனுபவிக்காமல் அதை ஒரேயடியாக  மறுத்தோ ஏற்றோ  பேச இயலாது. பேசினாலும் அரைவேக்காட்டுத்தனமாக இருக்கும், அத்தகைய அரைகுறைகள் நிரம்பியது தான் நமது சமூகம். காமம் என்றாலே மூன்றாந்தர புத்தகங்களில் இருப்பவை மட்டும் தான் என அடித்து பேசுவார்கள் மெத்த படித்த மேதாவிகள்.  காமம் சரியாகப் புரிந்துக் கொள்ளப் படாததுதான்,  குடும்பத்தில் அதிகரித்து வரும்  விவாகரத்துகள், பாலியல் வன்கொடுமைகள் அனைத்திற்கும் காரணம்.

பின் குறிப்பு:-

குடும்பம் முதல் எல்லாவற்றிலும் நடைபெறும் 'குற்றங்களுக்கு' பின்னால் ஒரு காரணமாக காமம் இருக்கிறது என்பதை நான் சொல்லவில்லை மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒன்றை பற்றி என் அறிவுக்கு எட்டிய அளவிற்கு எழுதுகிறேன்...சொற்குற்றம் பொருள் குற்றம் இருந்தால் சொல்லுங்கள், சரி படுத்தித்  தெளிவுப் படுத்திகிறேன். அதற்காக விளக்கம் சொல்கிறேன் பேர்வழி என்று படுத்தி எடுக்காதீர்கள் என அன்பாக வேண்டுகிறேன்.  :-)

கண்டது கேட்டது உணர்ந்தது என எல்லா அனுபவங்களும் சேர்ந்த இந்த தொடரை  மொத்தமாக எழுதி வைத்து வெளியிடலாம் என்ற கான்செப்ட் ஒத்துவரவில்லை... (ஏற்கனவே ஏகப்பட்டது டிராப்ட்ல ஒரு பாராவுடன்  நிற்கிறது) :-) எனவே எழுதி உடனுக்கு உடன் வெளியிடுகிறேன், continunity விட்டுப் போச்சே  என திட்டாதீர்கள். இது கதையல்ல கட்டுரை தானே சோ அட்ஜெஸ்ட்டுங்க  பிளீஸ் ...


தொடர்ந்து பேசுகிறேன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா



Paintings - Thanks Google 

திங்கள், நவம்பர் 26

'வயாகரா' வில் அப்படி என்ன இருக்கிறது ?!! தாம்பத்தியம் பாகம் - 29


தாம்பத்தியம்  தொடரில் பலவித பிரச்சனைகளைப்  பேசிவந்தாலும் அதில் இது கொஞ்சம் வித்தியாசமானது, ஆனால் மிகத்  தேவையானதும் கூட ! வாசகி ஒருவர் நீண்ட மடல் ஒன்றை எனக்கு எழுதி இருந்தார். அதன் மொத்தம் உள்ளடக்கம் இது...

"எனது கணவரின் வயது 46, மது,புகை  பழக்கம் உள்ளவர். 6 மாதங்களாக தாம்பத்திய ஆர்வம் இல்லாமல் இருக்கிறார். என்னுடன் ஒத்துழைப்பதில் சிரமப்படுகிறார்.முக்கியமான நேரத்தில் இயங்க 
முடிவதில்லை" என தொடர்ந்தவர் "இதற்கு வயாகரா உபயோகிக்கலாமா? " அதை பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?"  என கேட்டிருந்தார்.

அவருக்கு சொன்ன பதில் பிறருக்கும் தேவைப்படலாம் என்பதால் கொஞ்சம் விரிவாக இங்கே பகிர்கிறேன். படித்துக் கருத்துக்களை கூறுங்கள்.

இன்பம்  எங்கே...?


இன்றைய இயந்திர உலகில் தாம்பத்ய இன்பம் என்பது வேறெங்கோ இருப்பதைப்  போலவும் அதை சுலபமாக சீக்கிரமாக அடைய மருந்து மாத்திரைகள் போட்டுக்கொண்டால் போதும் என்பதே சிலரது
முடிவு...!!

ஆனால் உடல்  தயார் நிலையில் இருந்தால்  மட்டும், அங்கே உறவு நடந்துவிடுவதில்லை, (இருவர்) மனமும் ஒத்துழைக்க வேண்டும். 


இப்போதெல்லாம்  ஆண்கள் 30-40 வயதிலேயே ஆர்வம் குன்றிவிடுகிறார்கள். ஆர்வம் என்று கூறுவதை விட இயலாமை என்பதே சரி. இதற்கு மன சார்ந்த உடல் ரீதியிலான காரணங்கள் இருக்கலாம். அவை என்ன என்று கவனித்து சரி செய்ய வேண்டுமே தவிர வயாகரா போன்றவற்றை நாடுவது சரியல்ல. செயற்கை தூண்டுதல்கள் அந்த நேரம் சுவைக்கலாம் தொடர்ந்து அவை எடுத்துக்கொள்ளப்பட்டால் சாதாரண அணைப்பு கூட, அந்த மருந்து இல்லாமல் நடக்காது  என்றாகிவிட்டால்...?!! யோசியுங்கள்!

உறுப்பு  செயல்படும் விதம்

ஆணுக்கு உடலுறவு பற்றிய எண்ணமோ, செயலோத்  தேவைப்படும் போது மட்டும் விரிந்து நீளக் கூடிய தன்மை கொண்டதாக உறுப்பின் அமைப்பு  இருக்கிறது. விரியவோ சுருங்கவோ கூடிய இத்தன்மையை மூளையில்  உள்ள  'சிம்பதடிக் நெர்வஸ் சிஸ்டம்' என்ற பகுதி பார்த்துக் கொள்ளும் . இரண்டு விதமான நரம்பு அமைப்புகளில் ஒன்று சரியாக வேலை செய்யாவிட்டாலும் பிரச்சனைதான்.

பெண்ணை நினைத்ததும்  இந்த நரம்பு மண்டலம் உஷாராகி நியுரோடிரான்ஸ் மீட்டர்களை வெளியிடும், அடுத்து நைட்ரிக் ஆக்சைடு, அசிடைல் கோலைன், டோப்பாமைன் போன்றவை சுரக்க ஆரம்பிக்கின்றன. இவை ஆணுருப்புக்குள் செல்லக்கூடிய ரத்தக் குழாய்களைப்  பெரிதாக்குகின்றன. அதிகமான ரத்தம் அங்கேச்  சென்று அங்கிருக்கும் பஞ்சு போன்ற அறைகளை ரத்தத்தால் நிரப்புகின்றன. அறைகள் பெரிதானதும் ரத்தக்குழாய்கள் மூடிவிடுவதால் ரத்தம் தேங்கி உறுப்பு நீண்டு பெரிதாகி கடினமாகிறது.

உடலுறவு  நிகழ்ந்து முடிந்ததும் மீண்டும் பழைய இயல்பு நிலைக்குக்  கொண்டு வர மூளையின் இரண்டாவது நரம்பு மண்டலம் உடனே செயல்படத்  தொடங்குகிறது. இறுக்கத்தை குறைத்து விரிந்திருக்கும் தன்மையை தடுத்துவிடும்.

வயாகராவின் வேலை 

வயாகரா என்பது சில்டினாபில் என்கிற ஒரு கெமிக்கல். நைட்ரிக் ஆக்சைடு செய்யக்கூடிய வேலையை இதுவும் செய்யும்.  ரத்தக்குழாய்களை பெரிதாக்கி அதிக ரத்தத்தை செலுத்துவதும் அப்படியே இரண்டாவது நரம்பு மண்டலத்தின் வேலையைச்  செயலற்றதாக ஆக்குவதும் இதன் வேலை, அதாவது விறைப்பு தன்மையை! இதனால் உறுப்பு நீண்ட நேரம் விரிந்தே இருக்கும். மீண்டும் பழைய நிலைக்கு மாற்றும் இரண்டாவது நரம்பு மண்டலத்தின் வேலையை கொஞ்ச நேரம் தடுத்து வைக்கிறது வயாகரா.

ஆனால்  இந்த நிலைக்கு வருவதற்கு முன் மனதால் செக்சை நினைக்க வேண்டும். மனம் ஒத்துழைக்காமல் வயாகராவை மட்டும் போட்டு கொண்டால் எந்தவித பிரயோசனமும் இல்லை.

ஆரோக்கியமான மனதும் உடம்பும் அமைய பெற்றவர்களுக்கு எந்த வித செயற்கையான தூண்டுதலும் தேவையில்லை. அதே சமயம் குறைபாடு உள்ளவர்களுக்கு, குறை மனதிலா உடலிலா என்பது தெரியாமல் வயாகரா போட்டுக்  கொண்டால் சரியாகி விடும் என்பது முற்றிலும் தவறு.

இந்த  பெண்ணின் கணவரைப்  பொருத்தவரை அவரது புகை மது பழக்கவழக்கங்கள் அவருக்கு தாம்பத்திய ஆர்வத்தை குறைத்ததோடு மட்டுமல்லாமல் உறுப்பு எழுச்சியையும் முடக்கிப்  போட்டு விட்டது. அந்த பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும். மற்றொன்று சர்க்கரை நோய், இது ஆண்மை குறைவை ஏற்படுத்தும். எனவே குடி, புகை சர்க்கரை நோய் இவற்றின் பாதிப்பை குறைப்பதில் அக்கறை எடுக்க வேண்டுமே தவிர வயாகரா போன்றவற்றையும்,  இத்தனை நாளில் குணப்படுத்துகிறோம் என்ற விளம்பரங்கள் பின்னேயும் செல்வதும்  சரியல்ல!

பெண்களுக்கும் வயாகரா?!

இந்த வயாகரா பெண்களுக்காகவும் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது...!! ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஒரு மருந்து கம்பெனி பிளிபான்செரின் என்ற மாத்திரையை தயாரித்துள்ளது. உறவில் முழு திருப்தியை அளிக்க வல்லது என்றும் இதனை தொடர்ந்து உட்கொண்டால் பெண்களின் பாலியல் ஆர்வம் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. நேரடியாக மூளையை சென்றடைந்து  தேவையான கெமிக்கல்களை மூளையில் அதிக அளவில் சுரக்க வைத்து ஆர்வத்தை தூண்டுகிறது.

ஆனால் பெண்கள் இது போன்றவற்றை உபயோகிக்கும் போது வேறு விதமான சிரமங்களை அனுபவிக்க வேண்டும். மாதவிடாய் கோளாறுகள், கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

ஆண்,பெண் யாராக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை, அனுமதி இன்றி எதையும் உட்கொள்வதை தவிர்தல் நலம்.

வயாகரா தீர்வு இல்லை?

தாம்பத்திய உறவு பற்றிய விருப்பம், ஆர்வம்  இல்லாதவர்களுக்கு, 'சர்க்கரை நோய் இருக்கிறதா' என சோதனை செய்வது முக்கியம். இருந்தால் தாமதிக்காமல் சிகிச்சைப்  பெற வேண்டும். சர்க்கரை நோயை மருந்து மாத்திரையினால் கட்டுக்குள் வைக்கவில்லை என்றால் சிம்பதடிக் நெர்வஸ் சிஸ்டத்தை இந்நோய் இயங்கவிடாமல் தடுத்துவிடும் அல்லது பாதிக்கும். இந்நிலையில் எவ்வளவு தான் செக்ஸ் தூண்டுதலை வெளியே இருந்து ஏற்படுத்தினாலும் அவரது உடல் ஒத்துழைக்காது. இத்தகையவர்களுக்கு வயாகரா தீர்வு இல்லை. (ஒருவேளை ஈடுபட்டாலும் முழுமைப்  பெறாது.) ஆணிடம் இருந்து விந்தணுக்கள் வெளியேறுவதை போல் தோன்றினாலும் பெண்ணை அடைவதற்கு பதிலாக அவர்களின் சிறுநீர்பையினுள் சென்று விடும் !

பொதுவாக  சர்க்கரை நோய் உள்ளவர்கள், புகை, குடி பழக்கம் இருப்பவர்களின் ரத்த குழாய்கள்  அதிக அளவு சுருங்கும். அதோடு ஆண் உறுப்புக்கு செல்லும் ரத்த குழாய்களும் சுருங்கும் என்பதால் அங்கு செல்லும் ரத்த ஓட்டமும் பாதிக்கும். இதனால் எழுச்சியின்மை ஏற்படும். ஆர்வம் குறையும்.

மேலும் 

இம்மாத்திரையை உடலுறவுக்கு அரை மணி நேரத்துக்கு முன் சாப்பிட்டு விட வேண்டும். அந்த நேரத்திற்குள்ளாக ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு உயர் அளவை எட்டிவிடும். கொழுப்பு நிறைந்த உணவு பொருட்களுடன் உட்கொள்ளப்பட்டால் ரத்தத்தில் உறிஞ்சப்படுவது தாமதமாகும். முக்கியமாக இதய நோய்க்கு எடுத்துக் கொள்ளப்படும் மாத்திரைகளோடு(ISMN /ISDN) வயாகரா உட்கொள்ளப்பட்டால் அவர்களின் ரத்த அழுத்தம் குறைந்து உயிருக்கே ஆபத்தாகலாம். 

சுலபமான வழி  - சூரிய குளியல் 

பாலியல் ஆர்வத்தைத்  தூண்ட ஆண்களின் ரத்தத்தில் உள்ள டெஸ்டோ டெரோன் என்ற ஹார்மோன்  உதவுகிறது. இந்த ஹார்மோன்  சுரக்க   வைட்டமின் “டி” அதிக அளவில் தேவைப்படுகிறது.

வைட்டமின் டி சூரிய ஒளி மூலமும், இறைச்சி, மீன் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதாலும் உற்பத்தி ஆகிறது. ஒரு மணி நேரம் சூரிய வெளிச்சத்தில் படுத்தபடி சூரிய குளியல் எடுத்தாலே போதும் என்று ஆஸ்திரியா ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அப்போது டெஸ்டோ டெரோன் 69 சதவீதம் அதிகரிக்கிறது. (நம்ம ஊர் சூரிய நமஸ்காரம் !!)
   
இறுதியாக ஒரு முக்கிய தகவல்

உடல் ரீதியினாலான குறைபாடுகள்   எதற்கும் சரியாக சிகிச்சை பெறாமலோ மது, புகை பழக்கத்தை விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தாலோ நாளடைவில் இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாய்களும் சுருங்கும். இதயப்பாதிப்பு ஏற்படும்.  100  சர்க்கரை நோயாளிகளில் 50 பேர் ஆண்மைகுறைவுக்கு  ஆளாகிறார்கள். இதில் 40 % பேர் மாரடைப்புக்குள்ளாகிறார்கள். இத்தகைய ஆபத்தை முதலில்  சரிப்படுத்த முயலவேண்டும். அளவான சத்தான உணவு, உடற்பயிற்சி, போதுமான தூக்கம் ஆகியவை மிக அவசியம். இதெல்லாம் முறையான பழக்கத்திற்கு வந்த பிறகே உடல் தயாராகும். அதனுடன் மனமும்...!!

மனது நினைக்க நினைக்க அந்நினைவுகள் மூளையின் நரம்பு மண்டலத்தை மெல்ல  மீட்ட, அங்கே பிறக்கும் இசை அதிர்வுகள், உடலெங்கும் பரவி வியாபித்து ஆனந்திக்க வைக்கும்...!! அப்புறம் என்ன உற்சாக அலைகள் கரைகளை வந்து முத்தமிட, நிலவின் மடியில், இரவின்  அமைதியில், சம்சார சாகரத்தில் மூழ்கி முத்தெடுங்கள்...!

இனியும் வயாகரா போன்றவை பற்றிய சிந்தனை வேண்டுமா!? தவிர்த்திடுங்களேன் !!


பின் குறிப்பு :

தாம்பத்தியம் தொடரைப்  படிக்கும் வாசகர்கள் என்னிடம் கேட்கக்கூடிய சந்தேகங்களை மட்டும் கேளுங்கள் பதில் சொல்கிறேன்.  பல சந்தேகங்களை டாக்டரிடம் தான் கேட்கவேண்டும், என்னிடம் அல்ல.  தவிர அந்தரங்கம் பற்றிய ஆழமான(?) பல கேள்விகள்  என்னை பதில் சொல்ல இயலாத படி செய்கின்றன. உண்மையில், பதில் தெரியாமல் கேட்கிறார்களா அல்லது எனக்கு தெரியுமா என சோதிக்கிறார்களா தெரியவில்லை. :-)

ஒருவர் கேட்டிருந்தார், 'பெண்ணிற்கு உச்சம் ஏற்பட்டதை ஒரு ஆணால்  எவ்வாறு தெரிந்து கொள்ளமுடியும்?' என்று ...அதற்கு நான் சொன்னேன், ஒரு கணவனால் மனைவியின் அத்தகைய நிலையை புரிந்துக்கொள்ளமுடியும் என்று... மறுபடி அவர் பதில் சொல்கிறார், மேடம் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று !! கல்யாணம் ஆகாதவருக்கு இந்த கேள்வி எதற்கு??!!

கணவன்  மனைவியின்  கருத்துவேறுபாடு பிரச்சனைகளால்  பாதிக்கப்படும் குழந்தைகளை மனதில் வைத்தே இந்த தொடரை எழுதி வருகிறேன். அனாவசியமான  கேள்விகள்  கேட்பதைத் தயவுசெய்து தவிருங்கள். மேலும் அத்தகைய விவரங்கள்தான் தேவையென்றால் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன, தேடிக்கொள்ளலாமே...! ஒவ்வொருவரிடம் தனித்தனியாக சொல்ல முடியாததால் பொதுவில் இங்கே கூறுகிறேன். நன்றி.

தொடர்ந்து பேசுகிறேன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'...!!

* * * * * 


படங்கள்- கூகுள் 

புதன், ஏப்ரல் 11

'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...?! தாம்பத்தியம் - 27

முன் குறிப்பு

இதற்கு முந்தைய பாகம் வெளிவந்து 6 மாதம் ஆகிவிட்டது...!! பிற பதிவுகளை விட தாம்பத்தியம் தொடருக்கு அதிக காலம் எடுக்கிறேன் என்றாலும் இனி தொடர்ந்து எழுதுகிறேன். நம்புங்க !! 'ஏன் தாமதம்' என கேட்டு வரும் மெயில்கள் இனி குறையணும்...திட்டு வாங்கி முடியல :) உங்களின் பொறுமைக்கு என் நன்றிகள் ! இந்த பதிவைப்  படித்து கருத்துக்களைக்  கூறுங்கள்...அதன் மூலம் இன்னொரு பதிவுக்கு மேட்டர் கிடைக்கட்டும்... :)

                                                         ************


ஏன் அவசியம் ?!

'செக்ஸ்' பற்றி வெளிப்படையாகப்  பேசுவதும், விவாதிப்பதும் மிகத்  தவறான ஒன்றாகப்  பார்க்கபடுகிறது,  நமது கலாச்சாரத்தில் இதற்கு நாம் கொடுக்கும் இடம் கிட்டத்தட்ட கடைசி, அதே நேரம் உலகிற்கு காமசூத்திரம் கொடுத்ததும் நாம் தான் !! கஜூராகோ கோவில் சிற்பங்களாக கலை வடிவிலும் எழுத்து வடிவிலும் பேசிய நாம்தான், இதனை குழந்தைப்  பெறுவதற்காகவும், அற்ப சந்தோசத்துக்காக என்று ஒதுக்கியே வைத்து விட்டோம்.  இதன் மகத்துவம் புரிந்த முன்னோர்கள் சொல்வதை ஏற்காத நாம் சமீபத்திய அறிவியலாளர்கள் இதன் அவசியம் குறித்துச்  சொல்லும் போது அப்படியா என்று புருவத்தை உயர்த்துகிறோம். மன இறுக்கம், மனஅழுத்தம் குறைந்து ஆரோக்கியத்தை இதன் மூலம் அதிகரிக்கலாம் என்பது எவ்வளவு அருமை!

உடல் எடை போட்டுவிட்டது, சுகர், பிரசர், அப்படி இப்படின்னு பிரச்சனைகளில் இருந்து தம்பதிகள் நிறைவான உடலுறவின் மூலம் தள்ளி இருக்கலாம் என்பது ஆச்சர்யம் தானே ?! மன இறுக்கம் தளர்ந்தாலே உடல் தன்னால் அழகு பெற்றுவிடும்! சிலர் கேட்கலாம், ஒரு சிலர் கண்டபடி இதே நினைப்பாகவே அப்டி இப்டி அலையுறாங்களே அவங்க ரொம்பவே நல்லா இருப்பாங்களே என்று...?!! தன் துணையை தவிர பிறருடனான உறவுகளில் சுகம்,சந்தோசம் இருக்கலாம், ஆனால் மன இறுக்கம் குறைய நிச்சயம் வாய்ப்பேயில்லை மாறாக தவறுச்  செய்கிறோம்(!) என்கிற குற்ற உணர்ச்சியால் மன அழுத்தம் அதிகரிக்கவே செய்யும் !! இந்த சப்ஜெக்ட் இந்த பதிவுக்கு தேவையில்லை என்பதால் இப்போதைக்கு இவ்வளவு போதும் :)

பரிணாம வளர்ச்சி பற்றி சொல்லிய டார்வின்... 

"மூளை, மூட்டுகள், ஜனன உறுப்புகள் உட்பட எந்த ஒரு உறுப்பையும் பயன்படுத்தாமல் விட்டுவிட்டால் , அந்த உறுப்பானது நாளடைவில் அதன் செயல் திறனை இழப்பதோடு மட்டுமின்றி தன்னளவில் சுருங்கி இறுதியில் மறைந்தேப் போகும்"

உறுப்புகளுக்கு ஓரளவு மிதமான இயக்கம் இருந்தாக வேண்டியது அவசியம். முற்றிலும் தவிர்த்தால் உடல் ரீதியாக, மன ரீதியாகப்  பாதிப்புகள் வர வாய்ப்புகள் அதிகம். இதயத்தை மாரடைப்பு ஆபத்தில்  இருந்து பாதுகாப்பளிக்கிறது. வெளிநாடுகளில் இன்னும் ஆராய்ச்சிப்  பண்ணிக் கொண்டே இருக்கிறார்கள், இதன் பயன்கள் வேறு என்னவெல்லாம் இருக்கிறது என்று !!

ஆனால் இதைப்  பற்றி எல்லாம் அக்கறையில்லாமல் ஏனோ தானோவென சம்பிரதாயத்துக்காக சலிப்பாகச்  சென்றுக்  கொண்டிருக்கிறது இன்றைய இயந்திர உலகில் தம்பதியரின் தனிப்பட்ட அந்தரங்கம்.

பணம் , படிப்பு, அந்தஸ்து, கௌரவம் இவை போன்றவற்றுக்கு தற்போது முக்கியத்துவம் கொடுக்கும் இதே காலத்தில் தான் விவாகரத்துகளும் பெருகி வருகின்றன. விவகாரத்துக்  கோரும் தம்பதியரிடம் ஆழமாக விசாரித்து பார்த்தால் ஒன்று புரியும்,அவர்களுக்குள் நடக்கும் பல பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக, மூலகாரணமாக இருப்பது செக்ஸ் என்பது...!!

பெண்களின் மனோநிலை

உடலுறவைப்  பொறுத்தவரை தனது விருப்பத்தை நேரடியாக வெளிப்படுத்த மாட்டாள். ஒரு சில பெண்கள் சுற்றி வளைத்துப்  பேசிக்  குறிப்பால் உணர்த்தலாம்...கேலியும் கிண்டலுமாக வெளியிடலாம். அவரவர் கணவனின் எண்ணவோட்டங்களை பொறுத்து இது மாறுபடும். பொதுவாக நம் சமூகத்தில் ஆண்களுக்கு பெண்கள் செக்ஸ் பற்றி பேசினால் அவள் அனுபவரீதியாக எல்லாம் அறிந்தவளாக இருப்பாள் என்கிற எண்ணம் உண்டு.ஆண்கள் என்று இல்லை, பெண்ணே மற்றொரு பெண் இவ்விசயத்தை விவரித்துப்  பேசினால் அப்பெண் அனுபவப்பட்டவள் என்று முடிவு பண்ணிவிடுகிறாள்.  இதற்கு அஞ்சியே பல பெண்கள் உறவு குறித்து சந்தேகம் எதுவும் இருப்பினும் வாய் திறக்க மறுக்கிறார்கள். 

இந்த விஷயத்தைப்  பொறுத்தவரை கற்றுக்கொடுக்கும் இடத்தில் இருப்பதைத்  தான் ஆண் விரும்புகிறான். (எந்த காலமாக இருந்தாலும் !)

எனவே பொதுவாக பெண் இவ்விசயம் குறித்து அதிகம் வெளிப்படையாக பேசுவதையும், ஆணுக்கு முன்னரே செயல்படுவதையும் தவிர்த்தல் நல்லதே. ஒரு சிலர் தனது மனைவி செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசுவதையும், விவாதிப்பதையும் விரும்புவார்கள். கணவன் மனமறிந்து பேசுவது முக்கியம்.

ஆண்களின் மனநிலை 




உறவை பற்றிய எண்ணம் தோன்றியதும் மனைவி உடனே உடன்பட்டே ஆகவேண்டும் என்பதே பெரும்பாலான கணவர்களின் எதிர்பார்ப்பு.அதற்கு முன் மனைவியின் உடலறிந்து, மனமறிந்து என்பதெல்லாம் இரண்டாம் பட்சமாகி விடுகிறது. பெண்களுக்கு மெதுவாகவே  உடல் கிளர்ந்தெழ தொடங்கும், ஆனால் ஆண் இதனைக்  கவனிப்பது இல்லை. தான் இயங்கி திருப்தி  அடைந்தால் போதும் பெண்ணுக்கு என்று தனியாக திருப்தி அடைதல் இல்லை   என முடிவு செய்துக்  கொள்கிறார்கள், அவளது உணர்வுகளுக்கும் வடிகால் தேவை என்பதை மறந்து...! 

பத்து வருடங்கள் கழிந்தப்  பின் 

தாம்பத்தியத்தில் அந்தரங்க உறவு என்பது மிக முக்கியம் என்றாலும் திருமணம் முடிந்த பத்து ஆண்டுகள் கழிந்த தம்பதியினரின் இது குறித்த விருப்பங்களில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆணின் விருப்பம் ஒரு விதமாகவும் பெண்ணின் விருப்பம் வேறு ஒன்றாகவும் இருக்கின்றன.

உதாரணமாக 

திருமணம் முடிந்த புதிதில் நகைச்சுவையாக பேசக்கூடிய கணவனை மிக விரும்புவாள்  மனைவி...ஆனால் பத்து வருடம் கழிந்த பின் அதே மனைவி கணவனின் நகைச்சுவை பேச்சை அவ்வளவாக ரசிப்பதில்லை. ஒரு காரணம் என்னவென்றால், நம்மிடம் பேசுவதைப்  போலத்தானே பிற பெண்களிடமும் பேசுவார், அது அவ்வளவு நல்லதில்லையே என்ற மனோபாவம் ஒரு காரணம், மற்றொன்று 'இருக்கிற சூழ்நிலைத்  தெரியாம அது என்ன எதுக்கெடுத்தாலும் தத்துபித்துனு உளறிட்டு ?!!' என்பது...

இது போல் முதல் பத்து வருடங்களில் பிடித்தவை எல்லாம், அடுத்து தொடரும் காலங்களில் பிடிக்காமல் வெறுப்பிற்கு இடமாகி விடுகின்றன...! அது போன்றே அந்தரங்க விசயத்திலும் மாற்றம் ஏற்படுகிறது, மற்றவை அவ்வளவாக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது, ஆனால் உடலுறவு விஷயம் அப்படி அல்ல...இதில் தவறினால் சமயங்களில் குடும்பத்தில் மிகப்  பெரிய பாதிப்புகளையும், பிரிவுகளையும் ஏற்படுத்திவிடக் கூடும்.

அப்படி என்ன இதில் இருக்கிறது ? என்ன என்ன பாதிப்பு ஏற்படும் ? இது என்ன அவ்வளவு முக்கியமா ? இது போன்ற கேள்விகளுக்கான பதில்களைத்  தொடர்ந்துப்  பார்க்கலாம்.....

பெண்களின் விருப்பமின்மை ?! 

பகலில் மனைவிடம் எந்தவித அன்னியோனியமும்  இல்லாமல் இரவில்  மட்டும் தேடும் கணவனை எந்த மனைவியும் விரும்புவதில்லை. ஒருவேளை உறவிற்கு உடன்பட்டாலும் அதில் எவ்வித உணர்ச்சியும் இருக்காது 'என்னவும் செய்துவிட்டுப்  போ' என்கிற விரக்தி மட்டுமே இருக்கும்...இதே நிலை தொடர்ந்து நீடித்தால் உடல் உறுப்புகளில் கடினத்தன்மையும், வலியும் ஏற்படக் கூடும்.

பொதுவாக முப்பத்தைந்து அதற்கு மேல் வயதுள்ள பெண்களில் சிலருக்கு  உறவின் மேல் விருப்பமின்மை தோன்றும்...இதை சில நடவடிக்கைகளை வைத்து கணவர்கள் புரிந்துக் கொள்ளலாம்...

* இவர்களில் பலரும் கருத்தடை சாதனம் பொருத்தியோ, குடும்பக்  கட்டுப்பாடு ஆபரேஷன் செய்தவர்களாகவே இருப்பார்கள். இருந்தும் ஆணுறை அணியச்  செய்து உறவுக்  கொள்ளச் சொல்வார்கள்.

* உறுப்பில் வலி இல்லை என்றாலும் வலிக்கிறது, எரிச்சலாக இருக்கிறது என்பார்கள்.

* தலை வலி, வயிறு வலி போன்ற வெளியேத்  தெரியாத காரணங்கள்.

* தூக்கம் வருகிறது, பசங்க தூங்கல, டயர்டா இருக்கு...

நேரடியாக உறவு பிடிக்கவில்லை என்றுச்  சொல்லத்  தயங்குவார்கள். அப்படி சொல்லிவிட்டால் கணவன் தன்னை வெறுத்துவிடுவானோ என்கிற அச்சம் ஒரு காரணம் !!

கணவனின் புரிதலின்மை 

மனைவி உறவின் மேல் விருப்பம் இல்லை என்பது போல் காட்டிக்கொண்டால் அது போல் கோபம் வேறு எதிலும் ஒரு ஆணிற்கும் வராது. சாதாரண நேரத்தில் மனைவி மீது அன்பை வாரி பொழிபவர்களும், உறவுக்கு 'ரெட் சிக்னல்' என்றதும் எரிமலையாய் பொங்கிவிடுவார்கள்...எதற்காக மறுக்கிறாள், என்ன காரணம் என்று நிதானித்து யோசிக்கக்  கூடிய மனநிலை ஆண்களுக்கு அப்போது இருப்பதில்லை. உடனே நடந்தாகவேண்டும் என்று உறவைப்  பற்றிய ஒரு உந்துதல் மட்டுமே அவர்கள் மனதில் இருக்கும்.

உறவு நடக்காத பட்சத்தில் மனைவி மீது எரிந்து விழுவது, சம்பந்தம் இல்லாமல் திட்டுவது, ஒரு சிலர் ஒரு நிலையை தாண்டி போய் ' உனக்கு வேறு யாருடனோ தொடர்பு இருக்கிறது, அதுதான் என்னை நிராகரிக்கிற' என்று சிறிதும் யோசிக்காமல் நடத்தையில் சேறை வாரி இறைப்பார்கள்.

இதற்கு பிறகு மனைவிக்கு, கணவனின் மேல் இருக்கிற அன்பு மொத்தமாகக்  குறைந்து போகும் என்பதைத்  தவிர வேறு எந்த நல்ல விசயமும் நடக்க போவதில்லை.

உடல் உறவை தவிர்த்தல் என்பது இப்படி சந்தேகத்தில் வந்து முடிந்துவிடக்  கூடிய ஆபத்தும் இருக்கிறது !!?

இத்தகைய விஷயத்தை வெகு சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் கவனமாக கையாளுவது கணவன் மனைவி இருவருக்கும் நல்லது. 

ஒரு உண்மை தெரியுமா??

படுக்கை அறையில் ஆணை விட பெண்ணே அதிக இன்பத்தை பெறுகிறாள்...உடலுறவின் மூலம் அவர்களது ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பதால் பெண், உறவை அதிகம் விரும்பவேச்  செய்வாள்...அப்படிப்பட்ட பெண் உறவை தவிர்க்கிறாள் என்றால், எதனால் என்றுப்  புரிந்துக்  கொள்வது ஒரு கணவனின் கடமை...அந்த காரணத்தை அறிந்து சரி செய்துக்  கொள்வது தொடரும் குடும்ப வாழ்க்கைக்கு மிக மிக முக்கியம்.

தொடர்ந்து பேசுகிறேன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா 

                                                                 * * * * *

படங்கள் - நன்றி கூகுள்

புதன், ஆகஸ்ட் 3

தாம்பத்தியம் - பாகம் 25 - போடுங்க ' தலையணை மந்திரம் ' !?

கணவன் மனைவிக்கான தலையணை மந்திரம்


மந்திரம் என்பது ஆன்மீக வாழ்வுக்கானது என்றாலும் நம் சமூக அமைப்பில் சாதாரணமாகச் சொல்லப்படும் பொதுவான ஒரு மந்திரம் தலையணை மந்திரம் !! இது கணவன் மனைவி இருவரும் தங்களின் தனிமையான நேரத்தில் ரொம்ப ஸ்பெஷலாக அன்னியோனியமாக பேசிக்கொள்வதை குறிக்கிறது! ஆனால் இதன் அர்த்தம் வேறு விதமாக நம்மால் எடுத்து கொள்ளப்படுகிறது.

எனக்கு தெரிந்தவரை மாமியார் தனது மருமகளை திட்டுவதற்கு கையாளும் ஒரு வசைச் சொல் என்றே தெரிகிறது. 'தலையணை மந்திரம் போட்டு என் மகனை மயக்கிட்டா ', 'அப்படி என்ன தலையணை மந்திரம் போட்டாலோ,இப்படி மயங்கி கிடக்கிறான் '  இதை சொல்லாத மாமியார்கள் குறைவு.....!! ஆனால் மிக உன்னிப்பாக கவனித்தால் இதன் பொருள் அந்தரங்கம் என்றே வருகிறது. இது எவ்வளவு மோசமான உதாரணம் என்று பலருக்கும் புரிவதில்லை....ஆண்கள் எல்லோரும் அந்த உறவிற்கு மயங்கிவிடுவார்கள் என்றும் அதற்காக பெற்றவளையும் உதாசீனப் படுத்தி விடுவான் என்பதாகத்தானே பொருள்...?! அதுவும் பெற்ற தாயே தனது மகனை அவ்வாறு சொல்வது எந்த விதத்தில் ஏற்புடையது !?

மருமகளை திட்டுவதற்காகக்  கூறப்படும் இந்த வார்த்தை அந்த ஆண்மகனை இழிவுக்குள்ளாக்கும் என்பதை ஏன் யாரும் புரிந்து கொள்வதில்லை ?? 'வீட்டுக்காரனை கைக்குள்ளப்  போட்டுகிட்டா' , 'முந்தானையில் முடிஞ்சிகிட்டா' என்பது போன்றவைகள் பெண்ணை குறை சொல்லணும் என்று பேசப்பட்டாலும் மறைமுகமாக அங்கே கேலிப் பொருளாக்கப்படுவது பரிதாபத்துக்குரிய ஆண்மை...!!

ஆண்களே ?!

என்னவோ ஆண்கள்  என்றாலே எப்போதும் பெண் சுகத்திற்கு அலைபவர்கள் போலவும், அதைத் தவிர அவர்களின் மூளை வேறு எதையும் சிந்திக்காது என்கிற ரீதியில் ஒரு சில பெண்கள் ஆண்களை நடத்துவது மிகவும் வருந்த தகுந்த ஒன்று.......

ஒவ்வொரு ஆணிற்கும் திருமணம் ஆன புதிதில் சில நாட்கள் மனைவி தேவதையாக தெரியலாம். அந்த தேவதை வரம் கொடுக்காமல்,வரம் கேட்டாலும் கொடுப்பார்கள்....!! இது ஆரம்ப சில மாதங்கள் மட்டுமே.....அடுத்து தொடரும் நாட்களில் மனைவிடம் தன் அம்மாவை தேடுவார்கள்/எதிர்பார்ப்பார்கள் என்பது உண்மையில் இங்கே எத்தனை பெண்களுக்கு புரியும் ?!! அம்மாவின் அன்பும் அரவணைப்பையும் மட்டுமே பெரிதாக என்னும் ஆண்கள் பலர், அதையே மனைவி சிறிதும் குறைவின்றி தரும் போது, அந்த ஆண்மகன் சற்று தடுமாறிப்  போவான். அந்த அன்பில் திளைத்து மூழ்கி முத்தெடுப்பவர்கள் பாக்கியசாலிகள் ! மாறாக எந்த ஆண் மகனும் வெறும் உடல் சுகத்தை மட்டும் பெரிதுப்படுத்த மாட்டான். இது புரியாத அறிவிலிகள் தலையணை மந்திரம் என்று எதையாவது சொல்லி அன்பான தம்பதிகளுக்கிடையே பிரிவினையை, விரிசலை ஏற்படுத்தி விடுகிறார்கள். 

அதனால் கணவன், மனைவி இருவருக்குள் மனப்பொருத்தம் ஏற்பட வழி  இல்லாமல் கெடுக்கக்கூடிய காரணங்கள் பெரும்பாலும் பெண்ணின் பக்கத்தில் இருந்தே தொடங்குகிறது.....அதை பெண்கள் புரிந்துக்  கொண்டு நடந்துக் கொள்ள வேண்டும். திருமணம் முடிந்த பெண்ணிற்கு நல்லது சொல்கிறோம்/செய்கிறோம் என்று வருகிற நலம்விரும்பிகளை(?) முதலில் வெளியே நிறுத்துங்கள்.  

மனைவிகளே !


பிறர் கூறும், கணவனை கைக்குள்ள போட்டுக்கோ, முந்தானையில் முடிஞ்சுக்கோ என்பது போன்ற தவறான பேச்சுக்களை முதலில் காதுகொடுத்து கேட்காதீர்கள் ஒருவேளை சொன்னது உங்கள் தாயாக இருந்தாலுமே...!! தாய் நமக்கு நல்லதுக்கு தானே சொல்வாங்க என்று அப்படியே கேட்டு வைக்காதீர்கள்...அவர்கள் அப்படி சொல்வதின் பின்னணியில் சில கசப்பான அனுபவங்கள் குறிப்பாக  தன் மாமியார் வீட்டில் அவர்கள் பெற்ற அனுபவங்கள் அவர்களை இப்படி பேச வைக்கலாம். 'நாம தான் உசாரா இல்லாம போய்ட்டோம் நம் மகளாவது நல்லா இருக்கட்டும்' என்று ஒரு நல்ல எண்ணத்தில் சொல்லலாம். ஆனால் நீங்கள் சீர்தூக்கிப்  பார்க்க வேண்டும். அவர்கள் வாழ்ந்த சூழ்நிலை வேறு. கணவன் மனைவி இருவருமே படித்து வேலைக்கு செல்லக்கூடிய இன்றைய தம்பதிகளின் நிலை வேறு.

இருவருமே பொருளாதார ரீதியிலான ஒரு தேடலில் தீவிரமாக போய்  கொண்டிருக்கும் போது...இந்த மாதிரி தலையணை மந்திரம், கணவனை தன் வழிக்கு கொண்டு வரணும் என்று ஈடுபடக்கூடிய இத்தகைய செயல் ஒரு நயவஞ்சக எண்ணம் போல் சென்று, மனதில் எப்போதும் ஒரு இறுக்கமான நெருக்கடியை கொடுத்துவிடக்  கூடிய ஆபத்து இருக்கிறது. அதை முற்றியும் தவிர்த்து அந்தரங்கமான நேரத்தில் இனிமையான நினைவுகளை பரஸ்பரம் பரிமாறி ஒரு தெளிந்த நீரோடை போன்று மனதை வைத்துக்கொண்டு உறவில் ஈடுபடும் போது அங்கே தாம்பத்தியம் மிக அழகாக அற்புதமாக நிறைவு பெறும். மறுநாள் காலை இருவருமே உற்சாகமாக, புது புத்துணர்ச்சியுடன் துயில் எழுவார்கள்...அப்புறம் என்ன, அன்றைய பகல் பொழுது முழுவதுமே அதே புத்துணர்ச்சி தொடரும் என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ...?!!


ஒரு சர்வே : 


" நகரத்தில் வாழும் 44 சதவீத திருமணமான ஆண்கள் தங்களுக்கு செக்ஸ் மீது இருக்கும் ஆர்வம் குறைந்துக்  கொண்டே இருப்பதாகச் சொல்கிறார்கள். இவர்களிலும் 29 சதவீதம் பேர் நிறைய சம்பாதிக்கிறார்கள் !!"  


சர்வே வேற இப்படி சொல்லுது...!! நிலைமை இப்படி இருக்க, தலையணை மந்திரம் அப்படி இப்படின்னு எதையாவது முயற்சி செய்து(?) இருந்ததும் போச்சு... அப்படின்ற நிலைக்கு கொண்டு வந்திடாதிங்க...!!

சரி இருக்கட்டும்...தவறாமல் மனைவியுடன் உறவு வைத்து கொள்பவர்கள், என்ன சொல்றாங்க... அதையும் பார்ப்போம்.....


"எங்கள் வேலைகளிலேயே நாங்கள் மிகவும் சோர்ந்து போகிறோம்.  வாரத்தில் ஒரு முறையாவது உறவு வைத்துக் கொள்ளாவிட்டால் மனைவி, அவள் மீது எங்களுக்கு பாசம் இல்லை என்று நினைத்துவிடுகிறாள். அப்படி ஒரு எண்ணம் மனைவிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் படுக்கையை பகிர்ந்துக்  கொள்கிறோம் " 


இது ஏதோ சுவாரசியத்துக்காக எழுதப்பட்டதில்லை...சர்வேயில் சொல்லப்பட்ட தகவல்கள். இன்றைக்கு பல வீடுகளில் இருக்ககூடிய நிதர்சனம் !!



'தலையணை மந்திரம்' இனி இப்படி போடுங்க...!!


* மனதில் சுமப்பதால் நீங்களும் ஒரு தாய்தான். உங்கள் அன்பான அரவணைப்பில் அவரை குழந்தையாய் மாற்றுங்கள்...! அப்புறம் எங்கிருந்து வரும் பிரச்சனை ??!! அதனால் பாசத்தை காட்டும் விதத்தில் ஒரு தாயாய் !!

* அவரது குறைகளை மட்டுமே பெரிதுப் படுத்தி வாதாடாமல் நிறைகளைச்  சொல்லி ஊக்கபடுத்துங்கள் ஒரு சகோதரியாய் !!

*  கணவர் சோர்ந்து போகும் நேரம் தோளில் தாங்குங்கள் ஒரு தோழியாய் !!

* குடும்பம்/தொழில்/வேலை இவற்றில் பிரச்சனை ஏற்பட்டால் உங்களுக்கு தெரிந்த நல் ஆலோசனைகளை சொல்லுங்கள் ஒரு மந்திரியாய் !!

* எல்லாவற்றிற்கும் பிறகு தனியறையில் நடந்துக் கொள்ளுங்கள்...முழுமை அடைந்த மனைவியாய் !!

கணவன் தன்னை புரிந்துக்  கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட நீங்கள் முதலில் அவரை புரிந்துகொள்ளுங்கள். கணவனின் ஆசைகள், தேவைகள், உரிமைகள் என்னவென்று தெரிந்துக்  கொண்டு அதற்கு ஏற்ப நடந்துக்  கொள்வது தான் புரிதல். குடும்பத்தில் யார் பேச்சை யார் கேட்கணும் என்று எடை போட்டுப்  பார்த்து கொண்டிராமல் இருவரும் ஒருவர் பேச்சை ஒருவர் மதித்துச்  செல்வது நல்லது. உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

அனைத்தையும் விட ஒருவரை ஒருவர் உண்மையாக நேசியுங்கள், பாசாங்கு இருக்கக் கூடாது...!! 

பிறரின் தேவையற்ற ஆலோசனைகளைக்  கேட்டு அதன் படி நடந்து மனவிரிசலை  ஏற்படுத்திக்  கொள்வதை விட இங்கே குறிப்பிட்ட இந்த மந்திரங்களை பின்பற்றுங்கள்...கணவன் உங்களையே சுற்றி வருவார்...! அன்பால் சாதிக்க முடியாததை வேறு எதைக்கொண்டு சாதித்தாலும் அவை எல்லாம் வெறும் கானல் !!

                                           ***************************


பின் குறிப்பு 


தாம்பத்தியம் பற்றிய தொடரின் 25 வது பாகம் இது ! இந்த தொடர் முதலில் ஒரு பத்து பாகத்துடன் முடிந்துவிடும் என எண்ணி எழுத தொடங்கினேன் . வாசகர்களாகிய உங்களின் அன்பான ஆதரவினால் இது இன்னும் பல பாகங்களைத்  தொடரும் என்று நினைக்கிறேன்...! என்னை தொடர்ந்து எழுத வைக்கும் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... 


பிரியங்களுடன் 
உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா 

 


திங்கள், மார்ச் 28

தாம்பத்தியம் பாகம் 22 - உடலின் மீதான திருப்தியின்மை



பதிவை படிக்கும் முன் :

தாம்பத்தியம் தொடர்பான 21 பாகங்களில் திருமணம் முதல் கணவன் மனைவி உறவு நிலைகள், பிரச்சனைகள் போன்ற பல விசயங்களை பகிர்ந்திருந்தேன். கடைசி சில பதிவுகள் தாம்பத்தியத்தின் முக்கிய கட்டமான  அந்தரங்கம் எப்படி இருக்கவேண்டும், அங்கே ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்ன, அதை சரி படுத்தி கொள்ள என்ன வழிகள் இருக்கின்றன என்பதை பற்றியவை.....

கடைசி பதிவில் கணவன், மனைவி பாதை மாறுவதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன என்றும் அதில் அதீத அன்பும் ஒரு காரணம் என்று  எழுதி இருந்தேன், இந்த பதிவு உடலின் மீதான திருப்தியின்மை பற்றியது, சொல்லபோனால் இந்த வார்த்தையே தவறுதான், யாரும் துணையின் உடல் பிடிக்கவில்லை என்று பாதை மாறமாட்டார்கள், அதன் பின்னால் மன ரீதியிலான சலிப்புகள் இருக்கும் என்பது தான் உண்மை. இது என் கருத்து. சலிப்புகள், வெறுப்புகள் ஏற்படாமல் தடுப்பதில் ஒரு வழியினை இங்கே பார்ப்போமே.....      

இருவருக்கும் உடல் அளவில் இருக்கும் வேறுபாடுகள்..

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணதிற்கு வரன் பார்க்கணும் என்று முடிவு செய்ததும் முதலில் கையில் எடுப்பது ஜாதகம். ஜாதகம் பொருந்தி இருந்தால் போதும் கண்ணை மூடி கொண்டு மணம் முடித்து விடுகிறார்கள் (ஒரு சிலர் விதிவிலக்கு)  எனக்கு ஜாதகத்தின் மேல் நம்பிக்கை இல்லை என்று வெளியில் பேசுபவர்கள் கூட கடைசியில் மனதிருப்திக்காக பார்க்காமல் இருப்பது இல்லை.ஆனால் அது மட்டுமே போதாது. திருமணம் முடிக்க போகும் ஆண், பெண் இருவருக்கும் உடல் பொருத்தம் இருக்க வேண்டியது மிக அவசியம். ஒரு பாட்டு கூட உண்டு "ரெட்டை மாட்டு வண்டி வரும்போது நெட்டை குட்டை என்றும் இணையாது.....!"  வண்டி ஓடவே இரண்டு மாட்டின் உடல் பொருத்தம் தேவை படும்போது, இந்த வாழ்க்கை வண்டி ஓட கணவன் மனைவி உடல் பொருத்தம் என்பது மிக அவசியம். (ஒரு சிலர் விதிவிலக்கு)

முன்னாடி எல்லாம் பெண்ணையோ பையனையோ வரன் பிடித்து இருக்கிறதா என்று பெற்றோர்கள் கேட்க மாட்டார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை, இருவரும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்கு என்று சொன்ன பிறகு தான் திருமணமே நடக்கிறது. ஆதலால் தங்கள் மனதிற்கும் தங்கள் உடம்பு அமைப்புக்கும் ஏற்றபடி அமைந்திருக்கிறதா துணை என்று பார்ப்பது மிக அவசியம். பணம், படிப்பு,அழகு,சொத்து, அந்தஸ்து எல்லாம் திருமணத்தின் ஆரம்ப சில வருடங்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சியையும், சமூகத்தில் ஒரு மதிப்பையும் கொடுக்கலாம். ஆனால் வருடம் சில கடந்த பின் ஆணோ பெண்ணோ இருவருக்கும் அது மட்டுமே போதுமானதாக இருப்பது இல்லை. துணைக்கு தன் மீதான கவனம் எந்த அளவில் இருக்கிறது,  தனக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் துணையிடம் இருக்கிறது  என்பதை பொறுத்தே வீட்டிலும் வெளியிலும் அவர்களின் நடவடிக்கைகள் இருக்கும். இச்சூழ் நிலையில் தான் உடல் பற்றிய யோசனைகளும் ஏற்படுகிறது.

உடல் அளவில் பொருத்தமாக  இருக்கிறவர்கள் தங்கள் அந்தரங்க வாழ்விலும் பொருத்தமாக இருப்பாங்க என்று சொல்ல இயலாது. தவிரவும் படுக்கையறையில் உடல் பொருத்தம் அவசியமும் இல்லை. நிறம்,அழகு, உயரம், குள்ளம் மற்றும் அந்தரங்க உடல் அமைப்புகள் இப்படிதான் இருக்கணும் என்று எந்த அளவுகோலும் இல்லை. தன் துணையை   படுக்கையில் உற்சாகமாக வைத்து கொள்ளாதவர் எவ்வளவு அழகாக இருந்தாலும் அங்கே திருப்தி கிடைக்காது . இதை முதலில் பிரச்சனைக்குரிய தம்பதிகள் புரிந்து கொள்ளவேண்டும். அந்தரங்கம் இனிமையாக நீடித்த காலத்திற்கு இருப்பதற்கு துணையின் உடலை திருப்தி செய்யணும், ஆனால் இங்கே திருப்தி என்று சொல்வதின் அர்த்தம் உடலுறவு இல்லை. பின்ன வேறு என்ன ??  தொடர்ந்து படிங்க......

உடலின் மீதான திருப்தியின்மை எப்போது ஏன் எதனால் ??

சில சரி செய்துகொள்ளகூடிய காரணங்கள் உடல் சுத்தமாக வைத்துகொள்ளாமை, அதிகபடியான வியர்வை, உடல் பருமன்/ஒல்லி, மனதிற்கு பிடிக்காத மணம் போன்றவை இருக்கலாம் ஆனால் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் தன் துணையின் அந்தரங்க நடவடிக்கைகள் பிடித்துவிட்டால் இந்த குறைகள் மிக பிடித்தவையாக மாறிவிடக்கூடும் !!

*  ஒரு சில நாட்களில் கணவன்/மனைவி யின் மனநிலை உறவிற்கு ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம். ஒரு சோர்வு,  ஆர்வம் இல்லாமை போன்றவை இருக்கும் போது துணை உறவிற்கு வற்புறுத்தினால் சலிப்பு வரும் நாளடைவில் இதே போன்ற வற்புறுத்தல்கள் தொடர்ந்தால் நிச்சயம் வெறுப்பு அதிகமாகி விரிசலில் கொண்டு போய் விட்டுவிடும். 

*  வேறு சிலருக்கு வேலை, வீடு, குடும்பம் போன்றவற்றினால் மன அழுத்தம் இருக்கலாம். உடல் சம்பந்தப்பட்ட உபாதைகளையும் சட்டை பண்ணாமல் உறவிற்கு அழைத்து அதன் பின் ஏற்படக்கூடிய உறவில் நிச்சயம் திருப்தி இருக்காது. 

*  பெண்களை பொறுத்தவரை வீட்டிற்கு உறவினர்கள் குறிப்பாக தனது பெற்றோர்கள் வந்திருக்கும் போது உறவை விரும்பமாட்டார்கள். குழந்தைகள் சரியாக தூங்கி விட்டார்களா என்று தெரியாதபோது உறவை மனதாலும் நினைக்கமாட்டார்கள். 

*  முக்கியமாக மருத்துவ ரீதியாக மட்டுமே, அது மருந்துகளின்மூலம் அல்லது கவுன்செல்லிங் மூலமாகவோ குணபடுத்தகூடிய உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஆண்/பெண்ணுக்கு இருந்தால் அங்கே கண்டிப்பாக உடலின் மீதான திருப்தியின்மை ஏற்படக்கூடும். 

கணவன்/மனைவி அழகாக இருந்து மனதிற்கு பிடித்திருந்தும் 'உடலுறவில் ஈடுபட இயலாதவர்கள்' இருக்கிறார்கள் என்ற தகவல் ஆச்சரியமாக இருந்தாலும் அதுதான் உண்மை. வெளி உலகில் வலம் வரவும், திருமணம் ஆன புதிதில் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெருமைபட்டுக்கொள்ள உதவிய இந்த அழகு அடுத்து தொடர்ந்து வரும் வருடங்களில் உடலுறவுக்கு உதவுவது இல்லை. அப்போது அங்கே தேவை படுவது வேறு ஒன்று...! 

பாதை மாறி சென்று விடாமல் தன் துணையை பிடித்துவைத்துக் கொள்ளும் சூட்சமம் ஒன்று இருக்கிறது, அதுதான் தொடுதல் !! 

பரவசம் இதுவே !

ஆண்/பெண் இருவரின் உடலிலும் உணர்ச்சி மிகுந்த சில பகுதிகள் இருக்கின்றன அது நபருக்கு நபர் வேறு படும். ஒருவருக்கு இதழை தொட்டால் பரவசம் ஏற்படும், சிலருக்கு இடுப்பு, கை, கால் பாதம், கழுத்து, காது மடல், நெற்றி இப்படி இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். இதில் தன் துணையின் உணர்ச்சி பகுதிகள் எது என்று தெரிந்து வைத்துக்கொள்வது முழுமையான இல்லறத்திற்கு மிக அவசியம். உறவிற்கு உடல், மனம் ஒத்துழைக்காத போது இந்த மாதிரியான இடங்களை தொடுவதின்/வருடுவதின் மூலம் பரவச நிலையை அடையமுடியும். உடலுறவுக்கு தயாராவதற்கு முன்பும் இது மாதிரியான முன்விளையாட்டுகளில் ஈடுபடும் போது உடலுடன், மனமும் உற்சாகமடைந்து பரவசநிலையை எட்டிவிடும், அதன் பின் நடக்கும் உறவே ஒரு முழுமையான உறவாக இருக்கும்.

சில தம்பதிகள் உடலில் வேறு எந்த பிரச்சனையும் இன்றியும் உறவில் ஈடுபட இயலாதவர்களாக இருப்பார்கள். அவர்கள் இந்த மாதிரியான விளையாட்டில் மட்டும்  சில நாட்கள் (உறவு கொள்ளாமல் )ஈடுபட வேண்டும். இதிலும் ஒரு முழு இன்பத்தை அடைய முடியும். வெறும் தொடுதலின் மூலம் சில நாட்களை கழித்து விட்டு பின் முழுமையாக  உறவில் ஈடுபடும் போது, நிச்சயம் கணவன் மனைவி இருவருக்கும் ஒரு வித்தியாசமான புதுமையான அனுபவமாக இருக்கும். இதை நான் சொல்லலைங்க நம்ம வாத்சயனார் முதல் மேல் நாட்டு மருத்துவர்கள் வரை இது ஒரு சிகிச்சை முறை என்று ஒத்துகொண்ட ஒரு விஷயம். 

சூட்சுமம் எது என்று தெரிந்து, தெளிந்து இல்லறத்தை நல்லறமாக கொண்டு செல்லுங்கள்.....!  




தாம்பத்தியத்தில் தொடரும் அடுத்த பதிவு கணவன்/மனைவி பாதை மாற ஒரு காரணம் மன பொருத்தம் இல்லாமை.......காத்திருங்கள் !!


படங்கள் - நன்றி கூகுள் 




புதன், நவம்பர் 10

தாம்பத்தியம் 21 - தம்பதியினர் பாதை தவறுவது எதனால் ?!

கணவன் மனைவி பாதை தவறுவது (மாறுவது )எதனால்??


பல காரணங்கள் இருக்கிறது. இது தான் என்று எந்த ஒரு குறிப்பிட்ட காரணத்தையும் சொல்ல இயலாது. ஆனால் பொதுவாக சில காரணங்களை இங்கே கூறலாம் என்று இருக்கிறேன்.

* ஒருத்தருக்கு மற்றொருவர் மீதான அதிகபடியான பொசசிவனெஸ்
*  உடல் ரீதியான திருப்தியின்மை
*  மன பொருத்தம் இல்லாமை
*  கணவன் மனைவிக்கு இடையில் அதிகபடியான வயது வித்தியாசம்.

அதிகபடியான பொசசிவ்னெஸ்

பாதை தவறி செல்வதற்கு இது எப்படி காரணமாகும் என்று நீங்கள் யோசிக்கலாம். ஒருவர் மேல் மற்றொருவருக்கு அதிகபடியான அன்பு, காதல் இருப்பது எப்படி தவறாகும். அந்த அன்பின் காரணமாகத்தான் தன்  துணையை சந்தேகபடுவதும் , கண்டிப்பதும் ஆகும். இதை  காரணமாக வைத்து எப்படி தவறான பாதைக்கு போவார்கள் என்று கேள்வி எல்லாம்...!!  அதிக  அன்பு வைப்பது கூடாதா....??

அன்பு வைப்பது  தவறாகாது....ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் அதீத அன்பு ஒரு கட்டத்தில் வெறுப்பில் கொண்டு போய் விட்டு விடுகிறது....அன்பு எப்படி வெறுப்பாகும் என்று முதலில் பார்போம்.....

ஒருவர் மீது ஒருவர் 'நீ இப்படித்தான் இருக்கணும், வேற யாரிடமும் அன்பா இருக்க கூடாது, உன் அன்பு முழுவதும் எனக்கு மட்டும்தான் ' என்று சொல்லும் போது தொடக்கத்தில் மிகவும் மகிழ்வாக இருக்கும். அன்பை மழையாய் பொழியும் போது பரவஸத்தில் அப்படியே ஆழ்ந்து போய் விடுவார்கள். ஆனால் போக போக இந்த பேரன்பு கொடுக்கிற அதிகபடியான அழுத்தம் நம்மை நாமாக இருக்க விடாது...!!

எப்படி இதில் இருந்து வெளிவர போகிறோம் என்று துடிக்க வைத்துவிடும்...ஒருவரின் இயல்பை மாற்ற முயற்சிக்கும் போது அது இருவருக்கும் இடையிலான உறவையே கெடுத்து முடிவுக்கு கொண்டு வந்து விடுகிறது.....அதற்கு பிறகு, தன் இயல்பை அப்படியே ஏற்றுகொள்ளும் வேறு ஒருத்தரின் பால் கவனத்தை திசை திருப்பி விடுகிறது....!?

சிறு பிள்ளை அல்லவே நாம்

நம் குழந்தைகளிடம் கூட நீ இப்படி இருக்கணும், இப்படி இருக்க கூடாதுன்னு நம் விருப்பத்தை திணிக்க முடியாது. ஒவ்வொருத்தருக்கும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் உண்டு. இதை விடுத்து நாம் பிரஷர் கொடுத்தோம் என்றால் நம்மிடமிருந்து கொஞ்சங்  கொஞ்சமாக  விலகி தள்ளி போவார்களே தவிர பாசிடிவாக எந்த பலனும் கிடைக்காது. எல்லோரின் மனதும் தன் நிம்மதி , தன் சந்தோசம் என்ற ஒன்றுக்காகத்தான்  ஏங்கிக்கொண்டிருக்கிறது.....! இந்த நிம்மதியையும், சந்தோசத்தையும் கொடுக்கிற ஒரு நல்ல அன்பு நெஞ்சம் தான் தேவையே தவிர, அன்பு என்ற பெயரில் நம்மை அழுத்தும்  ஒரு சக்தி தேவை  இல்லை.....!!?

திருமணம் முடிந்த புதிதில் கணவன், மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதிக பொசசிவ்வாக   இருப்பது அப்போது இனிமையாக இருக்கலாம். ஆனால் குழந்தைகள் , வேலை  பளு என்று வந்த பின்னும், இது தொடர்ந்தால் காலபோக்கில் சந்தேகமாக மாற கூடிய வாய்ப்புகள் தான் அதிகம்.  'ஆரம்பத்தில் நீ எங்க போனாலும், என்ன செய்தாலும் என்கிட்ட சொல்லுவ...., இப்ப வர வர எதுவும் சொல்றது இல்லை , ஏன் இப்படி மாறிட்ட...??'  இப்படிப்பட்ட வார்த்தைகள் வரத்  தொடங்கும்....! பின்னர் இந்த வார்த்தைகள் தடிக்க தொடங்கி பிரச்சனைகள் வெடிக்க ஆரம்பிக்கும்... ஆனால் இந்த மாதிரி ஆட்கள் ஒன்றை புரிந்துக் கொள்வதில்லை.    

திருமணம் முடிந்த புதிதில் புதிய சூழல், புது மனிதர்கள் சுற்றி இருக்க, தன் துணையை மட்டுமே முழுதாய் சார்ந்து இருக்க வேண்டி இருப்பதாலும், பெரிய பொறுப்புகள் ஏதும் இல்லாத அந்த சூழ்நிலையில் ஒருவருக்கு ஒருவர், மாறி மாறி அன்பை பொழிந்து தள்ளுவார்கள். அந்த சமயத்தில் சின்ன சின்ன விஷயம் கூட  ரொம்ப முக்கியமாகப்படும்    தன் துணையிடம் பகிர்ந்து கொள்ள நேரமும் கிடைத்து இருக்கும், ஆனால் சில வருடங்கள் கடந்த  பின் இருவருக்குமே பொறுப்புகளும், கடமைகளும் அதிகரித்திருக்கும். எதையும் சொல்லகூடாது என்று யாரும் வேண்டும் என்றே மறைக்க போவது இல்லை. ஆனால் 'சின்ன விசயம் தானே, இதை போய் எதுக்கு சொல்லிக்கிட்டு'  'மெதுவாக சொல்லிகொள்ளலாம்' என்று அசட்டையாக இருந்திருக்கலாம்.  

தன் கைக்குள்....!

தன் துணை தன் கைக்குள் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறில்லை. ஆனால் பள்ளி செல்லும் சிறுவன், சின்ன சின்ன விசயத்துக்கும் அம்மாவின் அனுமதியை எதிர்பார்ப்பது போல், துணையின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல்  மட்டும் தான் நடக்க வேண்டும் என்று வற்புறுத்துவது தான் தவறு.

"வளைந்து நெளியும் நாணலுமே, குறிப்பிட்ட அளவிற்கு மேல்  வளைத்தால் ஒடிந்துதான் போகும்"

நிதர்சனம்

கணவன் மனைவியாக இருந்தாலுமே, இருவருமே தனி தனி நபர்கள் , தனிப்பட்ட விருப்பங்கள், தனிப்பட்ட இயல்புகள் என்று இருக்கும். ஒருவருக்காக மற்றொருவர் முழுதாய் மாறுவது என்பது முடியாத காரியம்.  தனது சுயத்தை இழப்பது யாராலும் இயலாது. ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்துக்கு மாறாக  அவர்களின் சுதந்திரத்தில் தலையிடுவது துணையாக இருந்தாலுமே, இன்றைய காலகட்டத்தில் தவறுதான்.  'துணை தன் இயல்பு படி செயல்படுவதே, அவர்களுக்கு  நிம்மதியை  தரும்' என்பதை மற்றொருவர்  புரிந்து கொண்டு நடப்பதே, தாம்பத்தியதிற்கு நல்லது.   

எதிர் விளைவு 

முக்கியமான எதிர் விளைவு ஏற்படக்கூடிய  வாய்ப்பு ஒன்றும் உள்ளது....?! ஒருவர் விருப்பத்திற்கு மாறாக மற்றொருவர் வளைக்க முயலும்போது, தனக்கு சாதகமான விசயங்களை மட்டும் சொல்லிவிட்டு பாதகமான விசயங்களை மறைக்க பார்ப்பார்கள். நீங்களாகவே  அவர்களை திருட்டுத்தனத்தை செய்ய வைக்கிறீர்கள்.....??! இறுக்கி பிடித்தால் திமிறத்தான் பார்ப்பார்களே தவிர பிடிக்குள் இருக்க மாட்டார்கள். இப்படியும் கணவன்/மனைவி பாதை மாற வழி ஏற்பட்டுவிடுகிறது. 

கணவன் மனைவி இரண்டு பேருக்குமே இப்படி over possesssive   என்ற விதத்தில் அழுத்தும் அதீத அன்பே துணையை மூச்சு திணறடித்து விடும்.  இதில் இருந்து வெளிவர space தேவை.  இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில் வெளியிடங்களில் பேச பழகி கொண்டிருக்கிற ஒரு நட்புடன் சாதாரணமாக ஏற்படும் ஒரு பழக்கம் ஈர்ப்பில் கொண்டுபோய் விட்டு விடுகிறது.....?? 

பாதைகள் மாறுகின்றன....விருப்பம் இன்றி பயணமும் தொடர்ந்து விடுகிறது....!!??

தாம்பத்தியத்தில் அடுத்து தொடருவது 'உடல் ரீதியான திருப்தி இன்மை.....?!' 

  


வாசலில் விடை கொடு.....!



திங்கள், நவம்பர் 8

உச்சம் ஏன் அவசியம் ?! தாம்பத்தியம் பாகம் - 20



முந்தைய பதிவில் பெண்கள் சம்பந்தப் பட்ட உச்சகட்டம் என்ன என்பதைப்  பற்றி சிறிது சொல்லி  இருந்தேன். பதிவைப்  பற்றி வந்த மெயில்களில் பல சந்தேகங்களை கேட்டு இருந்தனர், இதனை பற்றி இவ்வளவு சந்தேகங்களா என்று ஆச்சரியம் வரவில்லை மாறாக ஏன் இப்படி தெளிவில்லாமல் இருக்கிறோம் என்ற ஒரு ஆதங்கம் தான் இருக்கிறது. படித்த கணவன்  மனைவிக்கு இடையில் கூட இதனைப்  பற்றிய தெளிவு இல்லை என்பதை என்னவென்று சொல்வது...?! எது பரவச நிலை என்பது தெரியாமல் அல்லது உணராமல் இருக்கும் போது, தங்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாட்டுக்கு காரணம் எந்த புள்ளியில் தொடங்கியது என்பதை எப்படி புரிந்துக்  கொள்ளமுடியும்....?? 

திருமணம் முடித்தோம், பிள்ளை பெற்றோம், பள்ளிக்கு அனுப்பினோம், சம்பாதிக்கிறோம், பேங்க்கில் (Bank Balance)  சேமிப்பை அதிகரித்தோம் என்று வாழ்வது எப்படி ஒரு நிறைவான வாழ்வாகும்...?? கடைசிவரை ஒன்றாக எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல் சுகமாக ஒருவருக்கு ஒருவர் அன்பாக வாழ்ந்து முடிப்பது தானே ஒரு நிறைவான வாழ்க்கையாகும்...!! அப்படி வாழ்கின்ற பெற்றோர்களால் தான் இந்த சமூகத்திற்கு சிறந்த சந்ததியினரை விட்டு செல்ல முடியும்.      

/////பெண்களின் உச்சக்கட்டத்துக்கும் ஆண்களின் உச்சக்கட்டத்துக்குமிடையே இருக்கும் அடிப்படை வேறுபாடும் இந்த புரிதல் குறைவின் காரணமாக இருக்கலாம். காதல் வயப்பட்ட ஆண்-பெண் இருவரின் அண்மையிலும் கூட அந்தரங்க உறவு என்று வரும்பொழுது தயக்கமும் கூச்சமும் இருப்பது இன்னொரு காரணம் என்று நினைக்கிறேன். பெண்களுக்குத் தோன்றும் பரவச இடைவெளிகளைத் தவறாகப் புரிந்து கொள்ளும் ஆண்களும் (பெண்களும் கூட) "திருப்தி அடைந்து விட்ட" தாக நினைப்பதும் உண்டு. ஆண் பெண்ணை ஆள வேண்டும் என்று நினைப்பதும் ஒரு காரணம் தான் (உங்கள் பதிவில் கூட கணவன் மனைவியை ஆள்கிறான் என்று தான் எழுதியிருக்கிறீர்கள் :). பெண் ஆணை அடக்கக் கூடாது என்று நினைக்கிறோமா? கருத்தொருமித்த காதலருக்கிடையே யார் யாரை ஆளுவது? எந்தக் கட்டத்தில் அத்தகைய பாகுபாடு மறைகிறதோ அந்தக் கட்டத்தில் தான் uninhibited (மன்னிக்கவும் தமிழ் தெரியவில்லை) உறவு தொடங்குகிறது. பரவசங்கள் இருபுறமும் ஏற்படுகின்றன. தவறாக நினைக்கவேண்டாம்.. ஒரு பெண் உடல்சுகத்தை விரும்பினாள் என்றாலே - கணவனே கூட அதைத் தவறானக் கண்ணோட்டத்தில் பார்க்கும் கலாசாரத்தில் இது போன்ற சாதாரண எதிர்பார்ப்புகள் கூட ரேடிகல் முற்போக்குத்தனமாகத் தான் தெரிகிறது. முழுமைப் புணர்ச்சியின் உடல்சுகத்துக்கு அப்பாற்பட்ட உள/உடல் பலன்களை அறியாமல் போகிறோம். டிப்ரெஷனில் இருப்பது கூடத் தெரியாமல் வாழ்கிறோம்./////

உச்சக்கட்டம் என்னும் அற்புதம்  கட்டுரைக்கு  வந்த நண்பர் அப்பாதுரை  அவர்களின் பின்னூட்டம் தான் மேலே உள்ளது. நல்ல கருத்துரை. அவர் குறிப்பிட்ட நிலைதான் நம்மிடையே இருக்கிறது...

ஒரு பெண்  தான் விரும்பியதைச்  சொல்லக்  கூடாது மீறிச்  சொன்னால் அவளது அடிப்படை வளர்ப்பின் மீதே சந்தேகம் வரக் கூடிய அளவிற்கு தான் நம் கலாச்சாரக்  கணிப்பு இருக்கிறது....!!? ஆனால் நம் கலாச்சாரம்  என்றோ மாறத் தொடங்கி விட்டது பல விசயங்களில்...?! இன்னும் மாறிக்  கொண்டிருக்கிறது...இல்லை மாற்றிக் கொண்டிருக்கிறோம்....! மாறும் காலத்திற்கு ஏற்ற  மாதிரி கணவனும் தன் மனைவியின் விருப்பம்  என்ன என்று தெரிந்து அதற்கு மதிப்பு கொடுக்கும் நிலை வர வேண்டும்...கட்டாயம் வந்துதான் ஆக வேண்டும் இந்த அந்தரங்க விசயத்தில்...! கணவன், மனைவி இருவருமே ஒன்றை புரிந்துக்  கொள்ளவேண்டும் இது வெறும் உடல் சார்ந்தது என்பது மட்டும் இல்லை.  உடல், மனம் இரண்டுக்குமான ஆரோக்கியம் இதை வைத்துத்தான் இருக்கிறது.  

ஆணின் ஆசை விரைவில் அடங்கிவிடும் பெண்ணின் ஆசை தொடர்ந்து வரும். ஆண் தனது தேவை முடிந்த அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தூங்கிவிடுவான். ஆனால் அவனுக்கு தெரியாது அதற்கு  பிறகு தான் அந்த மனைவிக்கு கணவனின் அணைப்பு தேவைப்படும் என்று ,  இதை உணர்ந்த கணவர்களின் எண்ணிக்கை மிக சொற்பம் ...!?  இந்த மாதிரியான சிறிய அளவிலான ஒரு அணைப்பு கூட மறுக்கப்படும்போது தான், இயலாமையால் மனதிற்குள் புழுங்கத்  தொடங்குகிறாள். இதற்கு ஆண்களையும்  குறைச்  சொல்ல முடியாது அவர்களின் உடல் அமைப்பு அப்படி....! அதனால் மனைவியை முதலில் திருப்தி அடைய வைத்துவிட்டு பின்னர் ஆண்  தனது  தேவையை கவனிப்பது ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.

கணவன் மனைவி உறவில் முழு திருப்தி அடையாதவர்கள்,  நிச்சயமாக மன அழுத்தத்தில் விழுவார்கள். சமீப காலமாக ஒவ்வொருவரும் தங்களது சந்தோசம் தங்களது நிம்மதி என்று பிரித்து சுயநலமாக வாழ தொடங்கிவிட்டார்கள். வாழும் காலம் குறைவுதான் என்பது போலவும் அதற்குள் அனைத்தையும்  அனுபவித்து விட வேண்டும் என்ற குறுகிய எண்ணங்கள்  பெருகி விட்டன. இந்த மாதிரியான சூழ்நிலைகள் ஏற்பட போய் தன் மனதை ஒரு நிலைப்படுத்த என்று யோக நிலையங்களும், தியானம் செய்யுங்கள் என்ற போதனைகளும் அதிகரித்துவிட்டன. இயன்றவர்கள் மன நல  மருத்துவரை நாடுகின்றனர். 'கவுன்செலிங்' என்ற வார்த்தைகூட இப்போது நாகரீகமான வார்த்தையாக மாறிவிட்டது.  மனதை தடுமாற செய்யக்  கூடிய காரணிகள் அதிகம் இருக்கிறது என்பதை அறிந்ததால்தான் 'மனதை ஒரு நிலைப்படுத்துங்கள்' என்ற கோஷமும் வலுக்கிறது...வேறு சிலரோ தீவிர ஆன்மீகத்தை நோக்கிச்  சென்று தங்களை காத்துக்  கொள்ள போராடுகின்றனர்.  

திருமணம் முடிந்தவர்கள் இல்லறத்தை நல்லறமாக மாற்ற அந்தரங்கத்தை அவசியமானதாக எண்ணுங்கள். அதற்கு தேவையான நேரத்தை ஒதுக்குங்கள் உறவையும் முழுமையாக நிறைவேற்றுங்கள்..அந்த நேரம் முழுவதும்  உங்களுக்கான  நேரம் என்பதை மறவாதீர்கள். அந்த ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் பெறக்  கூடிய உற்சாகம் பல மடங்காய் அதிகரித்து, தொடரும் நாட்களில் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருப்பதை  உணருவீர்கள். இந்த உறவு சரியாக இருக்கும் பட்சத்தில்,  தேவையில்லை  யோகாவும், தியானமும் இதைவிட சிறந்த உடற்பயிற்சியும் வேறில்லை....என்று நான் சொல்லவில்லை மருத்துவர்கள் சொல்கிறார்கள் .

உறவு என்ன என்று தெரியவைக்க இப்போது மீடியாக்கள் முக்கியமாக இணையம் இருக்கிறது. ஆண்கள் மட்டும் தான் தெரிந்து வைத்திருப்பார்கள் என்று சொல்ல இயலாது, கணவன் மூலமாக அல்லது காதலன் மூலமாக சில பெண்களும் தெரிந்து வைத்திருக்கலாம். இந்த பட்சத்தில் மன அளவில், உடல் அளவில் அதை உணர , அனுபவிக்க விரும்புவது  இயல்புதான். முறையாக கிடைக்க வேண்டிய ஒன்று முறையற்ற  விதத்திலாவது கிடைத்துதானே ஆகும், அதுதானே நியதி....?! சந்தர்ப்பம் வாய்த்தவர்கள்  பெறுகிறார்கள், முடியாதவர்கள் மருகுகிறார்கள். மற்றபடி  மனதை சமாதானப்படுத்திக்   கொண்டு வாழ்கிறார்கள் என்பது குறிப்பிட்ட அளவு வரை தான். (இந்த அளவு நல்ல குடும்ப உறவில் இருப்பவர்களை குறிப்பிடாது.)

கணவர்களின் புரிதலுக்காக

குழந்தை பெற்றுத் தர வேண்டும் என்று மட்டும் எண்ணாமல் அவளது உணர்வுகளுக்கும் ஒரு வடிகாலாய் அந்த பெண்ணின் கணவன் இருந்தாக வேண்டும். கணவனால் முழு  இன்பம் கிடைக்கப்  பெறாதவர்கள் அல்லது அந்த உச்சகட்டம் என்ற நிலையை அறியாதவர்கள் தான் வெகு சுலபமாக தவறான உறவில் விழுகிறார்கள். ஒரு பெண் வேறு ஆணுடன் தொடர்புக்  கொள்ள நேரிடும் போது, அந்த ஆண் முதலில் இந்த பெண்ணை தனது பிடிக்குள் அல்லது கட்டுபாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று தான் விரும்புவான். முழுவதுமாக அவள் மனதை தானே ஆக்கிரமிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவன் கையாளும் முக்கியமான ஒன்று தான் இந்த கிளைமாக்ஸ் உணர்வை அந்த பெண்ணை அடையச் செய்வது. ஒரு முறை இதை உணர்ந்த/அனுபவித்த  பெண் (தனது கணவனால் கிடைக்காத அல்லது இதுவரை சரியாக உணராத அந்த ஒன்றை ) இவன் தன்னை எவ்வளவு சந்தோசமாக வைத்திருக்கிறான் என்று எண்ணி முழுவதுமாக புதியவனை விரும்ப தொடங்கி விடுகிறாள். (தவறுகள் தெய்வீகமாகி விடுகின்றன....!?) 

மனைவியரின்  புரிதலுக்காக

ஆண் மட்டுமே இயங்க வேண்டும் என்பதுதான் இந்திய பெண்களின் மனோபாவம் !? ஆனால் இந்த மனோபாவம் சிறிது மாற வேண்டும். மனைவியரும் தங்கள் கணவனின் விருப்பம் அறிந்து நடந்து கொண்டால் நன்றாக இருக்கும். (இதை பற்றி ஏற்கனவே முந்தைய பல பதிவுகளில் சொல்லி விட்டேன்)   வீட்டில் கிடைக்காத ஏதோ ஒன்று (மனம்  அல்லது உடல்  சம்பந்தப் பட்டதாக இருக்கலாம்) வெளியே  கிடைக்கிறது என்று தான் பல நல்ல கணவர்களும் தவறுகிறார்கள்....அது என்னவென்று அறிந்து சரி செய்துக்  கொள்ளவேண்டியது அந்த மனைவியின் கடமை. ஒரு முறை தவற விட்டுவிட்டால் திரும்பப்  பெறுவது மிக கடினம் என்பதை பெண்கள் (மனைவியர் ) மறந்து விடக் கூடாது.

பெண்கள் நடுத்தர வயதை கடந்தாலும் இன்னும்  சொல்லப்  போனால் மெனோபாஸ் நிலை வந்த பின்னரும் கூட உறவில் முழுமையாக ஈடுபட முடியும். பெண்களின் (மனைவியரின்) ஒத்துழைப்பு கிடைக்காததால் தான் நடுத்தர வயதைத்  தாண்டிய பல ஆண்களும் தவறான வேறு வழிகளை எண்ணத்  தொடங்குகிறார்கள்.

அதிலும் பெண்களின் முழு ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே  இருவரும்  உச்சகட்டத்தை அடைய முடியும் என்பதை பெண்கள் மறந்து விடக்  கூடாது. உடலும்  மனமும் இணைந்து  
ஈடுபடும் போது தான் பெண்களுக்கும் இன்பம் அதிகரிக்கிறது.

ஒரு கருத்து 

கணவன், மனைவி  இருவரும் பொதுவான ஒன்றை புரிந்துக்  கொள்ள வேண்டும். தவறு செய்யும் யாரும் கணவன்/மனைவி பிடிக்கவில்லை என்பதற்காக மற்றொரு உறவை ஏற்படுத்திக்  கொள்வதில்லை.....'வேறொரு நபரையும் பிடித்து இருக்கிறது' என்பதற்காகத்  தான் தவறுகிறார்கள்....??!! 

கணவன் அல்லது மனைவி பாதை தவறுவது எதனால்.....??!

எந்த ஒரு குறிப்பிட்ட காரணத்தையும் சொல்ல இயலாது ஆனால் பொதுவாக சில காரணங்களை கூற முடியும் அதில் முக்கியமான ஒன்று....

ஒருத்தருக்கு மற்றொருவர் மீதான அதிகப்படியான பொசசிவ்னெஸ் என்கிற அதீத அன்பு (தமிழில் அர்த்தம் சரியா என்று  தெரியவில்லை மன்னிக்கவும்) ....!!

* ஒருவர் மீது ஒருவருக்கு அதிகப்படியான காதல் இருப்பது எப்படி தவறாகும்....?
* அதீத அன்பு எப்படி பாதை மாற காரணம் ஆகும்....??

இப்படி நீங்கள் யோசிக்கலாம். ஆனால் உண்மைதான்...அது எப்படி என்று அடுத்த பதிவில் பார்ப்போம்....

தாம்பத்தியத்தின் அடுத்த பாகம் நாளை மறுநாள்....




  வாசலில் புதிய தொடர் இனியது காதல்...!