இப்ப நம்ம நாட்டில மக்களுக்கு ஒரு விசயத்தில் என்ன முடிவு எடுக்கலாம் என்பதில் ஒரு குழப்பம் இருக்கும். அது தான் யாருக்கு வோட் போடுவது...? குழப்பம் என்று ஏன் சொல்றேனா ஒவ்வொரு நாளும் அரசியல்வாதிகளின் கூட்டணி பற்றிய முடிவுகளும், கொள்கைகளும் மாறிக்கொண்டே இருக்கிறதே. நாளைக்கு யார் எந்த பக்கம் போவாங்க ? இல்ல மறுபக்கம் போனவங்க மறுநாள் திரும்பி வருவாங்களா ? இல்லை அன்னைக்கே திரும்பி வந்துருவாங்களா ? எத்தனை சீட் கொடுத்தா இந்த கட்சி இங்கேயே இருக்கும் ? இப்படி ஏகப்பட்ட குழப்பங்கள் அரங்கேறும் நேரம் இது...!
மக்களும் பாவம் என்ன செய்வாங்க...சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்கப்பா... நாங்களும் எங்க ஜனநாயக கடமையை ஆற்ற ரெடி ஆக வேண்டாமா? இல்லைனா மக்களே ஒண்ணு பண்ணுங்க தேர்தலுக்கு ஒருநாள் முன் வரை எந்த செய்தித்தாளையும் படிக்காதிங்க, தொலைக்காட்சி செய்தி சானல் பக்கம் திரும்பி கூட பார்ககாதிங்க...!? தேர்தல் அன்னைக்கு காலையில் பேப்பர் பார்த்து முடிவு பண்ணிகோங்க.....எந்த கட்சில யார் இருக்காங்க ? யாரும் யாரும் கூட்டணி என்று ?
மக்களும் பாவம் என்ன செய்வாங்க...சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்கப்பா... நாங்களும் எங்க ஜனநாயக கடமையை ஆற்ற ரெடி ஆக வேண்டாமா? இல்லைனா மக்களே ஒண்ணு பண்ணுங்க தேர்தலுக்கு ஒருநாள் முன் வரை எந்த செய்தித்தாளையும் படிக்காதிங்க, தொலைக்காட்சி செய்தி சானல் பக்கம் திரும்பி கூட பார்ககாதிங்க...!? தேர்தல் அன்னைக்கு காலையில் பேப்பர் பார்த்து முடிவு பண்ணிகோங்க.....எந்த கட்சில யார் இருக்காங்க ? யாரும் யாரும் கூட்டணி என்று ?
தேர்தலில் ஆளும் கட்சி ஜெயித்தால் ஊழல்கள் இன்னும் பூதாகரமாக நடைபெறும், எதிர் கட்சி ஜெயித்தால் இப்போதைய ஆளுங்கட்சியின் பழைய வழக்குகள் தூசி தட்டப்படும் அல்லது புதிதாக வழக்குகள் போடப்படும் !!? பழிவாங்கும் படலம் ஆரம்பமாகும், வேற உருப்படியாக உடனே எந்த நல்ல மாற்றமும் ஏற்படாது என்பது திண்ணம். இப்போது நடைமுறையில் இருக்கும் சில நல்ல(?) விசயங்கள் அனைத்தும் நிறுத்தப்படும்.....
இப்ப இருக்கிற நாட்டின் நிலைமையை பற்றி புதுசா நான் சொல்ல தேவை இல்லை எல்லோருக்கும் நல்லாவே தெரியும்...மிக முக்கியமாக சொல்லணும் என்றால், உணவு, நீர், மின்சாரம் இவற்றின் நிலை, விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட்களாக மாற, விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காமல், பயிர் செய்வது குறைந்து போனதுக்கு, நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டமும் ஒரு காரணம், இத்திட்டத்தால் சிறு தொழில்கள் பலவற்றிற்கும் தொழிலாளர்கள் வேலைக்கு வருவதும் குறைந்து விட்டது. தென் தமிழகத்தில் பல சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன...இன்னும் பல தொழிற்சாலைகள் மூடக்கூடிய நிலையில்...!குறைவான கட்டுபாடற்ற மின்விநியோகத்தால் பெரும் அவதிக்குள்ளாகும் பொதுமக்கள், மின்சாரத்தை வைத்து நடைபெறும் தொழில்கள் !?
நீர் ஆதாரங்களை பெருக்குவதற்கான தீவிர முயற்சிகள் எடுக்கப்படாமை...காவிரி, முல்லை பெரியாறு பற்றிய அக்கறை இன்மை, தமிழக மீனவர்களின் நலனில் நிரந்தர தீர்வு எட்டப்படாமை, கச்சதீவை கண்டுகொள்ளாமை, விலைவாசி உயர்வு, மிக முக்கியமாக எங்கும் மலிந்து போய்விட்ட ஊழல்கள்...சொல்லிக்கொண்டே போகலாம்.....
தமிழகத்தின் கடன் சுமை 1 லட்சம் கோடியாம் !! இது என்ன கணக்குங்க ?!!
'மக்கள் கொடுத்த அதிகாரத்தை மக்கள் விரோத செயல்களுக்காக பயன்படுத்தி கொண்டது அரசு' என்பதை மக்கள் புரிந்து கொண்டுவிட்டார்கள் !!
உண்மையில் என்னங்க நடக்குது நம்ம நாட்டில ?
ஒவ்வொரு அரசியல்வாதி பற்றியும் ஒரு தனி அபிப்பிராயம் வைத்து இருப்போம், அதை நொறுக்கிற மாதிரி ஒவ்வொரு தேர்தலின் போதும் அவர்கள் நடந்து கொள்ளும் போது ஏற்படும் மனஅழுத்தம் சொல்லிமுடியல...அரசியல் பத்தி சுத்தமா அக்கறையே இல்லாத எனக்கே இப்படினா தலைவா, தலைவினு அவங்களையே நம்பி தன் சொந்த குடும்பத்தை கண்டுக்காம அலைந்து கொண்டிருக்கிற தொண்டனுக்கு எப்படி இருக்கும்.....? அப்படிபட்டவர்கள் யாரும் இப்ப இல்லைன்னு மட்டும் சொல்லிடாதிங்க...தெருவில் போய் நின்னு யாராவது ஒரு தலைவனை ஒழிக என்று சொல்லி பாருங்க...!? இப்பவும் பிரியாணி, பணத்துக்கு மட்டும் தொண்டனாக இல்லாமல் உண்மையான உணர்வுள்ள தொண்டர்கள் இருக்கிறார்கள். அதனால் தான் இன்னும் தலைவர்கள் தலைவர்களாக இருக்கிறார்கள்.
தொண்டர்களின் விசுவாசத்திற்கு ஒரு சிறந்த உதாரணம் !!?
மத்திய அரசில் இருந்து தி.மு.க விலகிய செய்தி பரவியதும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். அப்புறம் மறுபடி இணைந்தது அதற்கும் பட்டாசு வெடித்து ஆர்பரிக்கின்றனர். இது என்ன கண்மூடித்தனமான பக்தி என்று புரியவில்லை...ஒருவேளை இப்படி பண்ண சொல்லி மேலிடத்தின் உத்தரவாக இருக்குமா ?ஆமாம் தமிழகத்தில் மொத்தம் எத்தனை காங்கிரஸ் இருக்கிறது ?? (நிஜமா எனக்கு சரியா தெரியலைங்க ,தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்களேன்...)
தொண்டர்களின் அரசியல் நிலைப்பாடு என்ன ? தலைவர்கள் என்ன சொன்னாலும் ஆமாம் என்று தலையாட்டும் ஆட்டு மந்தைகளா இவர்கள் ?? சுய சிந்தனை, சுய மரியாதை என்ன என்பதே தெரியாத இவர்கள் யார் ?
நம் நாட்டின் அரசியல் இப்படி எள்ளி நகையாடும் கேலிக்கூத்தாகி போன காரணம் என்ன ?? எதைத்தான் சகித்து கொள்வது என்ற வரைமுறை கிடையாதா ? வெறும் பார்வையாளர்களாக இருந்து வேடிக்கை பார்க்கும் சுயநலம் எதில் போய் முடியும் ? யோசித்தே தீரவேண்டிய நிலையில் தற்போது இருக்கிறோம்.
என்ன காரணம் ?
அரசியலில் அரங்கேறும் அத்தனை அசிங்கங்களுக்கும் ஒரே காரணம் மக்களின் சகிப்புத்தன்மை ! இன்னும் தெளிவா சொல்லணும் என்றால் எதையும் கண்டுக்காம வாய் மூடி கொண்டிருக்கிற நாம் தான். நம்முடைய இந்த சகிப்புத்தன்மையை அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திகொண்டார்கள்...விளைவு மலிந்துவிட்ட ஊழல்கள்...தட்டிகேட்க ஆள் இல்லாத இடத்தில் தவறுகள் தாண்டவமாடும் என்பது தெரிந்தது தானே...? இதை ஒத்துக்கொள்ள முடியாத நாம் அவர்களை நேரம் கிடைக்கும் போது குறைசொல்லி அல்லது விமர்சனம் செய்து நம் மனதை சமாதானப்படுத்திக் கொள்கிறோம்.
அரசியல்வாதிகள் இப்படியே இருக்கிறார்களே இவர்கள் மாறவே மாட்டார்களா...? மக்கள் ஏன் ஒட்டுமொத்தமாக இவர்களை புறகணிக்கக்கூடாது ?? சமீபகாலமாக இப்படி ஒரு கேள்வி அடிக்கடி எழுகிறது.
நமது சுதந்திரம், நாட்டின் மீது தீவிர பற்றுக் கொண்ட முன்னோர்களின் உயிர் இழப்பாலும், தியாகத்தாலும் கிடைத்தது என்பதை நாம் மறக்ககூடாது. முன்னோர்கள் சுதந்திரத்துக்காக போராடியது, தங்களுக்கு அடுத்துவரும் தலைமுறையினராவது சுதந்திரக்காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்க்காகத்தான். நாம் ஏன் இனி அடுத்துவரும் நம் வாரிசுகள் ஊழலற்ற சிறந்த நாட்டில் வாழட்டும் என்று அதற்காக பாடுபடக்கூடாது ?
தட்டிகேட்க வக்கில்லாத நமக்கு குறை சொல்ல மட்டும் என்ன தகுதி இருக்கிறது...? யோசியுங்கள் !!
உடனடி தேவை ஒரு எழுச்சி !
மக்களின் மித மிஞ்சிய சகிப்புத்தன்மைதான் தற்போது கியூபாவிலும், துனிசியாவிலும் புரட்சியாக உருவெடுத்தது. நமக்கான நேரம் எப்போது...? யார் முன்னெடுப்பது ? சாதி, மத வேறுபாட்டால் சிதறி கிடக்கிற மக்கள் சக்தியை இணைக்க தெளிந்த நோக்கமும், திட சிந்தனை கொண்ட இளைஞர்கள் வேண்டும்.....உள்ளத்தில் புரட்சி வேட்கை கொண்ட வேங்கைகள் இருக்கின்றன.....ஆனால் அடையாளம் காணப்படாமல் எங்கோ ஒரு மூலையில்.....! அவர்கள் வெளியே வரவேண்டும்.....இயலாமையால் வெம்பி கிடக்கிற இளைஞர்களை ஒன்று சேர்க்கவேண்டும்.....!
நம்மிடையே பல பாரதிகளும், வாஞ்சிநாதன்களும், கட்டபொம்மன்களும், குமரன்களும் இன்னும் பல வேங்கைகளும் கொந்தளிக்கும் நெருப்பை நெஞ்சில் வைத்துக்கொண்டு பரவிக்கிடக்கிறார்கள். இவர்களை ஒன்று சேர்க்கும் சக்தி எது ?
இணைக்கும் ஒற்றை மந்திரச்சொல் தமிழன் !
நமது மண்ணின் மீதும் தமிழனின் மீதும் அக்கறை இருக்கிறது என்று வெறும் வாயை மென்று கொண்டும், வெட்டிப் பேச்சு பேசி பொழுதை போக்கி கொண்டும் இருக்காமல் அடுத்து என்ன செய்யலாம் என்று காரியத்தில் இறங்குவது நம் உடலிலும் சூடாகத்தான் ரத்தம் ஓடுகிறது என்பதை உறுதிபடுத்தும்.
"தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?"
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?"
ஊழலற்ற இந்தியாவை, தமிழகத்தை உருவாக்குவது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமை !!
