உளவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உளவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூலை 17

கண்ணகிக்கும் காமம் உண்டு


அன்பின் புதிய வாசகர்கள்  பேசாப் பொருளா காமம்   அறிமுகப்பதிவு , 2 ஆம் பாகம்    வாசித்தப் பிறகு இப்பதிவைத்  தொடருவது ஒரு புரிதலைக் கொடுக்கும். நன்றி.

* * * * *

ஆலோசனைக்காக என்னிடம் வந்த ஒரு நடுத்தர வயது பெண்மணி மிகுந்த தயக்கத்திற்கு பிறகு  உணர்ச்சிகளால் தனக்கு  ஏற்படும் அவஸ்தையை கண்கலங்க கூறத் தொடங்கினார்... இதுவரை யாரிடமும் இதை பற்றி  சொல்லாத அவர் எனது தாம்பத்தியம் பதிவுகளை படித்தப்  பிறகு என்னை நாடி இருக்கிறார் ... அவரது கண்ணீர்  தன்னை விட வயது குறைந்த பெண்ணிடம் இதை சொல்கிறோமோ என்பதால் இருக்கலாமே தவிர பிரச்சனைக்கானது அல்ல என்பது புரிந்தது.    வசதிக்கு குறைவில்லாத வீடு, இந்த மாத லாபத்தை இரட்டிப்பாக்க வேறு எதில் இன்வெஸ்ட் பண்ணலாம் என்ற சிந்தனையில் தூங்க வரும் கணவர். முதுகு காட்டி உறங்கும் கணவரை பார்த்தபடி தூங்க முயற்சி செய்யும் ஒவ்வொரு இரவும் தூக்கமின்றியே கழிந்திருக்கிறது. எண்ணத்தை வேறு பக்கம் திருப்பி கடவுள் பூஜை தியானம் எல்லாம் முயற்சித்தும் தோல்வியே. உணர்ச்சிகளின் அதி உந்துதலில் ஏற்படுகிற  'ஆத்திரத்தில் உடல் உறுப்புகளை அப்படியே பிச்சி எறிஞ்சிடலாம்னு வெறி வருது, எனக்கு மட்டும் ஏன் இப்படி, நான் சராசரி பெண் இல்லையா எனக்கு காமவெறி பிடிச்சிருக்கா' என கேட்டவர் இறுதியாக 'நானும் கண்ணகிதான் மேடம், இவரை தவிர வேறு யாரையும் மனதாலும் நினைச்சது இல்லை'  என்று முடித்து மௌனமானபோது பல பெண்களின் பிரதிநிதியாக தான் எனக்கு அவர் தோன்றினார்.

'எல்லோருக்கும் இது இயல்புதான்  நீங்க உடலளவில் மிக  ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் அவ்வளவுதான் பெரிதாக வேறு ஒன்றும் இல்லை'  என்று சமாதானம் செய்து சில முக்கிய உபாயங்களைச்  சொல்லி அனுப்பினேன்.
பணம் செல்வாக்கு அந்தஸ்து புகழ் எல்லாம் இருந்தும்/இல்லாமலும்  உணர்ச்சிகளோடு ஒவ்வொரு நாளும் மல்லுகட்டுகிறார்கள் பெண்கள். வெளியே சொல்ல வாய்ப்பில்லாததால் பிறருக்கு தெரிய வாய்ப்பில்லை. பெரும்பாலான கணவர்கள்  மனைவியின் தேவையறிந்து நடந்துக் கொள்வதில்லை.  உணர்ச்சி ஏற்பட்டாலும் கணவன் தப்பா எடுத்துப்பாரோ   என தனக்குள் வைத்து புழுங்கி கொள்கிறாள்... கண்ணகி இல்லை என்றாகிவிடுவோமோ என்ற பயம் மனைவிகளுக்கு ! தனது மனைவி கண்ணகி மாதிரி இருக்கவேண்டும் என்பது  ஆண்களின் வசதிக்காக ஏற்படுத்தப் பட்டது.

கண்ணகி ஒரு டிஸைன்! பத்தினி  ஒரு பிராண்ட் !!  

சிறு வயதில் காலில் கட்டப்பட்ட  சிறிய  சங்கிலியை வளர்ந்த  பின்னும்  உடைக்கத்    தெரியாத கோவில் யானையின்  நிலைக்கு சற்றும் குறைந்தது இல்லை பெண்களின் நிலை. பிறந்தது  முதல் 'நீ இப்படி நடக்கணும்' என்ற சமூக சங்கலியால் கட்டி பயிற்றுவிக்கப்பட்ட  பெண்ணால் வளர்ந்து பின்னும் தன்னால் இச்சங்கிலியை உடைத்து வெளியேற இயலாது என்றே இருந்துவிடுகிறாள். அதிலும் குறிப்பாக தனது உடலுக்குள் நிகழும்/எழும்   உணர்வுகளையும் அலட்சியப் படுத்தி அடக்கிவிடுகிறாள்...அதன் கொடிய விளைவுகளை அவளும் அறிவதில்லை  சமூகமும் கண்டுக் கொள்வதில்லை... பிறன்மனை செய்திகள் வெளிவந்ததும் குய்யோ முறையோ என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறது...இந்த சமூகத்தால் அதிகபட்சம் இதை மட்டும்தான் செய்யமுடியும்...தீர்வுகளைத்  தேடத் தெரியாத முட்டாள் சமூகம் இது !

உணர்ச்சிகளுடன் போராடிப் போராடி தோற்று தனக்குள்ளேயே சுருண்டு  கணவனிடம் கூட தெரிவிக்க தைரியமற்று ஏதோ பெயருக்கு வாழ்ந்து ஒருநாள் செத்தேப்  போகிறாள். தைரியம் உள்ள பெண்களும் கண்ணகி கான்செப்ட்டுக்கு பிரச்சனையாகி விடும் என்று 'மறைவில் நடத்தி' பத்தினி பிராண்ட்டை காத்துக் கொள்கிறார்கள்.  தங்களுக்கு பிடித்த மாதிரி வாழும்  பெண்கள் மிக மிக சந்தோசமாக வாழ்கிறார்கள், மாறாக வாழ்வதைப்  போலவே  நடிக்கிறார்கள் கண்ணகிகள் !

ஒரிஜினல் கண்ணகி கதையில் திருமணம் முடிந்த சில நாட்களில் தாம்பத்தியம் என்றால் என்னவென்று முழுமையாக அறிவதற்குள் உணர்வுகளைத்  தூண்டிவிட்டவன் பிரிந்துச்  சென்றுவிடுகிறான். அதன் பிறகான ஒவ்வொரு இரவையும் இன்னதென்று தெரியாத உணர்ச்சிக்  குவியலுக்குள் புதையுண்டு விடியலில் உள்ளுக்குள் கனன்ற நெருப்பை நீரூற்றி அணைத்திருக்கக் கூடும்.  கணவன் வேறோருவளிடம் இருக்கிறான் அவளிடம் இன்பம் துய்க்கிறான்  என்பதும்  உணர்வுகளை அதிகப்படுத்தி இருக்கலாம், (இருந்தும் அத்தனையையும் உள்ளுக்குள் மறைத்து பிறந்தவீடு போதித்தவைகளை அடிப்பிறலாமல் நிறைவேற்றி இருக்கிறாள்)  ஒருநாள் திரும்பி வந்தவனைக்  கண்டு குதூகலித்த அவளது உணர்வுகளின் ஆர்ப்பரிப்பு,  அடுத்ததாக  கோவலன் மாண்டதும் இனி வரவே வழியில்லை என்றானப் பின் ஒட்டுமொத்த உடலியக்கமும் ஸ்தம்பித்து வெறுப்பை உமிழ அது கட்டுக்கடங்காத பெரும் நெருப்பாக மாறி இருக்கலாம்... ஆம் மதுரையை எரித்தது கண்ணகியின் காமமாகக்  கூட இருக்கலாம்,   ஆனால் கற்பு என்று சொன்னால் தானே  கண்ணகி தெய்வம் ஆவாள்.  ஆணாதிக்கச்  சமூகம் தனது  வசதிக்காக சிலப்பதிகாரம் எழுத  நமது சமூகம்  'புனிதம்' என்ற போர்வையை போர்த்திக் கொண்டது.   கோவலன் ஒருவனை மட்டுமே தனக்கானவனாக வரித்து காமத்தை தனக்குள் எரித்து அவன் நினைவாக மட்டுமே வாழ்ந்து மறைந்த தாசிக்குலத்தில் பிறந்த மாதவியை பத்தினி லிஸ்டில் சேர்க்க ஏனோ நம்மால் முடியவில்லை!?

கண்ணகி விசயத்தில்  இப்படியும் நடந்திருக்கலாம், மாதவியிடம் சென்று திரும்பிய கோவலனை ஏற்றுக் கொண்டதால் தான் கண்ணகி பத்தினியானாள், கண்ணகி பத்தினியாக வேண்டும் என்றால் மாதவி என்றொருவள் தேவை,  ஆண் செய்யும் துரோகத்தை மனைவி என்பவள் ஏற்றுக்  கொண்டாக வேண்டும் என்பதை பெண்களின் மனதில் பதிய வைக்க கிடைத்தவள் தான் இந்த கண்ணகி. நடக்கவே முடியவில்லை என்றாலும் கூடையில் சுமந்துச்  சென்று தாசி வீட்டில் விட்டால் தான் அவள் பத்தினி.  பெண்ணை தெய்வமாக்கி மூலையில் உட்கார வைப்பதன் பின்னணியில் இருப்பது ஆணின் பெருந்தன்மை அல்ல  ஆதி பயம்.

எல்லா காலத்திலும் கண்ணகிகள் இருக்கிறார்கள் , என்னவொன்று அவர்கள் மதுரைக்கு மாற்றாக தன்னையே எரித்துக் கொண்டிருக்கிறார்கள். சமயங்களில் உடன் இருப்பவர்களையும் சேர்த்து எரித்து விடுகிறார்கள்... ஏற்படும் அத்தனை சமூக அவலங்களுக்கும் இது மறைமுகக் காரணமாகிறது. குழந்தை வளர்ப்பில் இருந்து அவளது பொறுப்பில் இருக்கும் அத்தனையிலும் குளறுப்படிகள் ஏற்படுகின்றன. ஆரோக்கியம் குறைந்த வீடுகள் ஒட்டுமொத்த சமூகத்தையும் நோயாளியாக்கி விடுகிறது.

கற்பு என்ற ஒன்று இருக்கிறது என்றும் அதற்கு 'நெறி' வகுத்தவர்கள்  கண்டிப்பாக பெண்ணுடன் அன்னியோனியமாக சரிக்கு சமமான உரிமையை பகிர்ந்து வாழ்ந்தவர்களாக இருக்க முடியாது. கண்ணகி  வெளியே சென்று, திரும்பி வந்தால் ஏற்றுக் கொள்ளக் கூடிய கோவலன்கள் இருந்தால் அதுவே சம  தர்ம சமூகம் !

பெண்களின் காமம் பேசப்படுவதே இல்லை ஆண்களின் காமம் 'அவன் ஆம்பள அப்படித்தான்' என்பதில் மறைந்துவிடும். ஆனால் பெண்களின் காமம் வலுக்கட்டாயமாக ஆணுக்குள் அடக்கிவைக்கப் படுகிறது. அவனை மீறி வெளிப்படக் கூடாது அப்படி வெளிப்பட்டால் அது காம வெறி, அவளுக்கு பெயர் வேசி. நடுஇரவில் 'இப்படித்   திரும்பு' என்று கணவன் சொல்வதைப்  போல மனைவி சொல்ல முடியாது. காமத்தை மறைக்கத் தெரிந்தவள் மட்டுமே பத்தினி.   'அவனுக்கு தேவை என்றால் படு' என்பதே காலக்காலமாக பெண்ணின் மனதில் பதிய வைக்கப் பட்டிருக்கிறது. இதில் இருந்து வெளிவர பெண்ணும் விரும்புவதில்லை. சில பெண்கள் மட்டும் ஆணுக்கு கட்டுப்பட்டவள் இல்லை நான் சுதந்திரமானவள் என பிரகடனப்படுத்தி பெண்ணியவாதியாகிறார்கள். வெகுசீக்கிரத்தில் அவர்களும் பெண்ணுக்கு வியாதியாகி விடுகிறார்கள் !!??

குழந்தை வளர்ப்பிலும் வீட்டுப் பராமரிப்பிலும் பெண்களின் காமம் கரைந்துவிடுவதாக எண்ணும் ஆண்களும் ஏன் பெண்களுமே  மாறவேண்டும். ஆண் பெண் இருவருமே தனது தேவை எது என உணர்த்த வேண்டும் பரஸ்பர தேவைகளை வெளிப்படுத்தி திருப்தி அடைவதுதான் ஒரு நல்ல தாம்பத்தியம். சந்தோசமான தம்பதிகளிடம் வளரும் குழந்தைகளால் தான் நல்ல வீடும் நல்ல சமூகமும் உண்டாகும். 

அடக்கி வைக்கப்பட்ட பெண்ணின்  உணர்ச்சிகள்  கண்டிப்பாக ஒரு கட்டத்தில் வெளிப் பட்டேத் தீரும் ஆனால் அது எதிர்கொள்ளவே முடியாத உக்கிர கோபம் வெறுப்பு எரிச்சல் கலந்த  கடுஞ்சொற்களாக/வாதங்களாக  இருக்கும்.  எப்போதும் அமைதியாக இருப்பவள் ஏன் இன்று இவ்வாறு  நடக்கிறாள் என்ற குழப்பத்தில் ஆண் அதிர்ந்துப்  போவான், கூடவே அந்த பெண்ணுக்கும் தான் ஏன் இப்படி நடக்கிறோம் என்பது தெரியாதது தான் உச்சபட்ச பரிதாபம்.  விவாகரத்து கள்ளக்காதல் முதல் மாமியார் மருமகள் பிரச்சனைகள் வரை ஏதோ ஒரு வடிவத்தில் அங்கே பெண்களின் காமம் மறைந்திருக்கிறது. மனைவியை புரிந்து மதித்து உணர்வுகளை  திருப்திப்படுத்தும் ஆண்  இருக்கும் வீட்டில் அதே ஆண் சகல சந்தோசங்களையும் அனுபவிக்கிறான். அவன் வெளி விடும் ஒவ்வொரு மூச்சும் சந்தோஷத் தூறலாய் மழையாய் அந்த வீட்டை மூழ்கடிக்கும்.

மனைவிக்கும்  நடு இரவில் விழிப்பு ஏற்படும் என்பதைப்  புரிந்து உணர்ந்து நடக்கும் கணவன் இருக்கும் வீட்டில்தான்  நல்லவை மட்டுமே நடக்கும்!!!


                                                                              * * * * *

ஆண்கள் நெருங்கினால் விலகும்/வெறுக்கும்  பெண்களை குறித்தும் பேசியாக வேண்டுமே !

தொடர்ந்துப்  பேசுகிறேன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா.

புதன், செப்டம்பர் 21

கொடூரங்களின் மத்தியில் !!


'ரத்தமும் சதையும் கொண்ட உயிரினம் நாம் ' என்பதை இந்த உலகம் அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது...!!காதுகளில் இனி வரும் காலங்களில் துப்பாக்கி சத்தங்கள், மனித ஓலங்கள், கூக்குரல்கள், ஒப்பாரிகள், அபயகுரல்கள் இவை மட்டும் கேட்கக்கூடும்.

தொலைகாட்சி, திரைப்படங்கள், பத்திரிகைகள் எங்கும் கொலை, குண்டுவெடிப்பு, ரத்த சிதறல்கள், ரத்தம் தோய்ந்த உடல் பாகங்கள் !!இன்று இவை எல்லாம் நம் கண்களுக்கு மிக பழகிவிட்டது. இவற்றை  பார்த்து  சாதாரணமாக கடந்து போகக்கூடிய பக்குவத்தை பெற்றுவிட்டோம்...!?  



வரவேற்பரையில்...


குண்டுவெடிப்பில் பல உயிர்கள் கை வேறு கால் வேறாக வெட்டுப்பட்டு, உடம்பு சிதைந்து துடித்து கொண்டிருக்கும் காட்சிகளை வரவேற்பறையில் தொலைகாட்சியில் ஸ்நாக்ஸ் கொறித்துக்கொண்டே பார்க்கிறோம். நிச்சயமாக அந்நேரம் நமது விழிகளில் எவ்வித உணர்ச்சியும் இருக்காது. அதிகபட்சம் அது போன்ற ஒரு காட்சி, நம் வீட்டில் நடந்தால் மட்டுமே துடிக்கிறோம்...!! ஆனால் இனி நம் வீட்டில் நடந்தாலும் வெகு இயல்பாய் தாண்டி சென்றுவிடுவோம் என்றே தோன்றுகிறது.

திரைப்படங்கள் 

சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன்...?! ஆரம்பம் முதல் இறுதிவரை தொடர்ந்து துப்பாக்கி ஒலித்துகொண்டே இருக்கிறது. ரொம்பவே சாதாரணமாக கதாநாயகன்(?) நாலு பேரை கொலை செய்வது எப்படி என்று கற்பனை செய்து ரசிக்கிறார். படம் பார்ப்போருக்கும் எப்போது அவர்களை சுட்டுகொல்வார் என்ற ஆவலை தூண்டியது இயக்குனரின் திறமை...!? காட்சிகளில் ஒவ்வொருவரும் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்து விழுவதை கூட்டம் ஆர்பரித்து ரசித்து கை தட்டுகிறது. போலீஸ்,ரௌடி,நண்பன்,எதிரி, சகமனிதன் என்று சகட்டுமேனிக்கு துப்பாக்கி வெடித்துக்கொண்டே இருக்கிறது. ஹீரோ கடைசியில் போலீஸ் அதிகாரியை நோக்கி துப்பாக்கியை நீட்டியதுடன் (கிளைமாக்சில் ரத்தம் வேண்டாம் என்று விட்டுவிட்டார் போலும்) சுபம் !!

தியேட்டரை விட்டு வெளியே வந்த கூட்டத்தில் ஒருவர், 'ஹீரோ நல்லவரா கெட்டவரா ?'

* நல்லவர் என்றால் ஏன் கொலை செய்கிறார் ?
* கெட்டவர் என்றால் இவரை ஏன் யாரும் கொல்லவில்லை ?

(நிழல் என்று நன்கு தெரிந்தும் இது போன்ற சந்தேகங்கள் எழுவது ஏனோ ?!)
காட்சிகளை பற்றி சிறிது நேரமாவது பேசுகிறோம்,விவாதிக்கிறோம், அவை நம் மனதில் கொஞ்சமாவது பதியாமல் இருக்காது.

திரைப்படம் பொழுதுபோக்கு தான், இல்லை என்று சொல்லவில்லை. பொழுது போக்காய் கொலை செய்வதை ரசிக்கும் நம் மக்களின் மனநிலை ?!! இது இந்த ஒரு படத்துக்கான விமர்சனம் இல்லை...இதை விட கொடுமையான  படங்களும் இருக்கிறது.

வன்முறையை தூண்டும் விதமாக காட்சிபடுத்தபடும் அல்லது நடைபெறும் எதுவும் சட்டத்தின் பார்வையில் தவறா? இல்லையா ? என்ற சந்தேகம் ஏனோ தேவையில்லாமல் இப்போது வருகிறது.

வன்முறை திரைப்படங்களில் அனுமதி என்கிற அளவுகோலின் அளவு யாருக்காவது தெரியுமா?? சென்சார் என்ற ஒன்று இருக்கிறதா, இல்லை இருந்தும் இல்லையா ??

ரோட்டில் நாலு பேரு ஒருத்தனை வெட்டி வீசினால் அதையும் கண்டு சுலபமாக கடந்து போக கூடிய மனபக்குவம்(?) வந்துவிடுகிறது ?!  காரணம் பலமுறை இத்தகைய காட்சிகளை கண்டு சலித்துவிட்டது அல்லது மனது மரத்துவிட்டது. 

ஐயகோ நம் குழந்தைகள் !!?


ஒருவன் வன்முறையில் ஈடுபடுகிறான் என்றால் அந்த எண்ணம் நேற்றோ இன்றோ தற்செயலாக, அந்த நிமிடத்தில் ஏற்படுவது இல்லை.....சிறுவயதில் அவன் மனதில் எவையெல்லாம் விதைக்கபடுகிறதோ, அவை வளர்ந்து இன்று மரமாக நிற்கிறது.....!?

எல்லா குழந்தைகளும் போட்டி போட்டுக்கொண்டு பிளே ஸ்டேஷன், கம்ப்யூட்டர் கேம்ஸ் என்று விளையாடுகின்றன...கவனமா பாருங்க! அதிகமா அவங்க விளையாடுவது ஷூட்டிங் அல்லது பைட்டிங்  கேம்ஸ் ஆக இருக்கும்.                                      அடுத்தவனை அடிக்கணும் அல்லது கொல்லணும் !!? பைக் ரேஸ் கேம்ல கூட பக்கத்தில் போறவனை காலால் உதைக்கிறமாதிரி ஒரு செட் அப் இருக்கும். பசங்களும் ஒரு வெறியோட உதைசிட்டே சீறி பாய்வாங்க...'நாம ஜெயிக்கணும்னா அடுத்தவனை எட்டி உதைக்கணும்' என்கிற அருமையான தத்துவத்தை பயிலுகிறார்கள் இன்றைய நம் குழந்தைகள் !!?

சுற்றிலும் நடக்கும் இத்தகைய காட்சிகளை பார்த்து வளரும் நம் குழந்தைகளின் மனதில் இக்காட்சிகள் விதைக்கபடுகின்றன. எதிரிகள் பல வடிவங்களில் சுற்றிலும் இருக்கின்றன, இவைகளில் இருந்து நம் குழந்தைகளை எப்படி பாதுகாக்க போகிறோம் ??!

முதியோர் இல்லம் அதிகம், ஏன்?

இந்த காலத்தில் முதியோர் இல்லங்கள் பெருகிவிட்டன என்று வருத்த படுகிறோம். இதில் அதிர்ச்சி, ஆதங்கம் அடைய ஏதும் இல்லை. பெற்றோர்களின் மீது இயல்பாய் இருக்ககூடிய அன்பு பாசம் எல்லாம் எங்கே போனது ?? வன்முறைகளை பார்த்து பார்த்து பழகி போன மனதில் அன்பு, பாசம் போன்ற உணர்ச்சிகள் மரத்துபோனபின் எங்கிருந்து வரும் அக்கறை...?  
இன்றைய குழந்தைகள் இளைஞர்களை மட்டும் குறை சொல்லி நம் தவறுகளை மூடி மறைக்கிறோம்.

நரவேட்டைகளை ரசித்து கைத்தட்ட கூடிய இச்சூழ்நிலையில் வளரும் குழந்தைகள் இப்படிதான் இருப்பார்கள்...!!

அறிவியல் வளர்ந்து விட்டது, இது இன்றைய தலைமுறை என்று பெருமை பட்டுக் கொண்டால் இதன் விளைவை நாம் அனுபவித்துதான் ஆகவேண்டும். 


குழந்தைகளுக்கு நல்ல சூழ்நிலைகளை ஏற்படுத்தி கொடுக்கிறோமா? 

வெளி உலகம் எதையும் கற்றுக்கொடுக்கட்டும் , ஆனால் வீட்டினுள் நல்ல சூழ்நிலைகளை இயன்றவரை ஏற்படுத்தி கொடுக்கலாமே... உயிரின் மதிப்பை உணர செய்யுங்கள். லவ்  பேர்ட்ஸ், நாய், கலர் மீன்கள்,புறா  போன்றவற்றை வாங்கி கொடுங்கள்...அவற்றை பராமரிக்கவும், உணவளிக்கவும் வேண்டும் என பொறுப்புகளை அவர்களிடம் கொடுங்கள்...மிகுந்த ஈடுபாட்டுடன் செய்வார்கள். தினமும் சிறிது நேரம் கண்டிப்பாக அவற்றுடன் இருக்க செய்யுங்கள்...

வளர்க்க வசதி படவில்லை என்றால் மொட்டை மாடியில் ஒரு அகன்ற பாத்திரத்தில் நீர் நிறைத்து வைக்க சொல்லுங்கள். கூடவே சிறிது உணவு பொருளையும் ஒரு தட்டில் வைத்தால் காக்கா, குருவி, மைனா போன்ற பறவை இனங்கள் (பறவைகள் இருந்தால் ?!) வந்து உணவருந்தி விட்டு செல்லும். தினமும் தொடர்ந்து வைத்து வந்தால் அவையும் தவறாது வந்து விடும். பார்க்கவே மிக அற்புத காட்சியாக இருக்கும். குழந்தைகளும் மிக உற்சாகமாகி விடுவார்கள். ஏதாவது பறவைக்கு சிறு அடிபட்டு ரத்தம் வந்தாலும் துடித்து போய் மருந்திட்டு ஆற்றுவார்கள் . அனுபவத்தில் உணர்ந்த அற்புதம் இது !!

'படிக்கவே நேரமில்லை இதுல இது வேறையா' என்று புத்தகத்தை கையில் திணிக்காதீர்கள்...படிப்பை விட மிக மிக முக்கியம் மனித நேயம்! பிற உயிர்களிடத்து அன்பு ! இளம் வயதில் பிற உயிர்களிடம் அன்பை காட்டட்டும்...! நம் குழந்தைகள் வீட்டில் இருக்கும் பல இயந்திரங்களுடன் ஒன்றாக வளர கூடாது...!குழந்தைகள் ஈடு இணையில்லாத மதிப்புள்ள உயிர்கள் !! நாளைய சமுதாயம் அன்பு, பாசம், கருணை, இரக்கம் போன்ற உணர்ச்சிகள் நிறைந்து காணபடட்டும்.

  


செவ்வாய், அக்டோபர் 5

உடல் மீதான உள்ளத்தின் ஆதிக்கம்


நம் மன ஓட்டத்தை சிலநேரம் நம்மாலேயே புரிந்துக்கொள்ள முடியாது. மனதை ஒருமுக படுத்துவதால் பல அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்று நிருபித்தவர்கள் பலர்.  ஒரு தவறான செயலை நாம் செய்ய முயலும் போது உள்ளிருந்து ஒரு குரல் 'வேண்டாம் இதை செய்யாதே ' என்று கட்டளை இடும். இதைதான் நாம் மனசாட்சி என்று சொல்கிறோம். உண்மையில் மனம் நம்மை பெரும்பாலும் தவறிழைக்க விடுவதில்லை. அப்படியே தவறு செய்தாலும் சில நேரங்களில் அடிக்கடி நம் செய்த தவறை சுட்டி காட்டி உணர்த்தி கொண்டே இருக்கும். அந்த உறுத்தல் அதிகமாக இருந்துவிட்டால் நம்மால் சாப்பிடமுடியாது...தூங்க முடியாது...நிலை கொள்ளாமல் தவித்து போய் விடுவோம் . கடைசியில் கடவுளிடம் முறையிட்டு மன்னிப்பு கேட்டு நம் மனதை சாந்தப்படுத்தி கொள்வோம்.  

இப்படி நம் உடலின் மீது  உள்ளத்தின் ஆதிக்கம் பல நேரம் வழி நடத்தும். இப்படிப்பட்ட மனதின் உணர்வுகளை தட்டி எழுப்புவதின் மூலம் நம் உடலின் நோய்களை கூட குணபடுத்த  முடியும் என்று நிரூபித்தவர்தான் மருத்துவர் 'சிக்மன்ட் பிராய்ட்' .

நோய்களை  குணமாக்க முடியுமா?

படுக்கையில் கிடந்த ஒருவரின் உள்ளத்தை தட்டி எழுப்பி, அடி மனதில்  இருக்கும் விவகாரங்களை வெளியே இழுத்து  பேச்சின் மூலம் அவரது நரம்புகளை சரிபடுத்தி அவரை நோயில் இருந்து குணபடுத்த முடியும் என்பது ஆச்சரியமான உண்மை.  உள்ளத்தை நன்கு புரிந்துக்கொண்டு அதற்கேற்ப செயல்பட்டால் உடலுக்கு ஏற்படும் வியாதிகளையும் குணப்படுத்த  முடியும். இந்த  கருத்துக்கு 'பிராய்டிசம்' என்று பெயர். உளவியல் படித்தவர்களுக்கு அறிமுகமானவர், படிப்பவர்களுக்கு தவிர்க்க முடியாத முக்கியமானவர் பிராய்ட். இவரால் தான் 'மனநல மருத்துவம்'  என்று ஒரு தனி துறையே உருவாகப்பட்டது.    

கனவுகள் ஆழ்மனத்தின்  வெளிப்பாடே...!

கனவுகள் காணாத மனிதர்கள் என்று யாருமே இல்லை. தனது ஆசைகள் நிறைவேற வேண்டும் என்று கற்பனை செய்து கனவு காணுவது என்பது வேறு.  ஆனால் நாம் தூங்கும் போது வரும் கனவுகள், நம் மனதின் எண்ணங்களை பிரதி பலிப்பவை. மனிதனின் மனதிற்கும், தூக்க நேரத்தில் உருவாகும் கனவுகளுக்கும் பிரிக்க முடியாத தொடர்பு உண்டு. ஒரு நாளில் எட்டு மணி நேரம் நாம் தூங்குகிறோம் என்றால் அதில் கிட்டதட்ட 90 நிமிசங்கள் வரை கனவு காண்கிறோம் என்று அறிவியல் ஆய்வுகள் உறுதிபடுத்துகின்றன. சிலருக்கு ஒரு கனவு முடிந்து...வேறொரு கனவு....என்று பல கனவுகள் விடியும் வரை கூட தொடருவது உண்டு.  

இப்படி இயற்கையாக ஏற்படும் கனவு நிலையை மனிதனுக்கு செயற்கையாக ஏற்படுத்தினால் அவன் மனதில் மறைத்து வைத்திருக்கும் பல விசயங்களை வெளிக்கொணர முடியும் என்பதுதான் மனோதத்துவம்.

ஆழ்மனம்

ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதிலும் ஆசைகள், ஏக்கங்கள் போன்றவை புதைந்து கிடக்கின்றன. அந்த ஆழ்மனதில் இருந்து வெளிவருபவைதான் கனவுகள், இந்த கனவுகள் மனிதன் விழித்திருக்கும் போது வருவதில்லை. தூங்கும் போதுதான் மனக்கதவுகள் திறந்துக்கொள்கின்றன . ஆழ்மனம் செயல் பட தொடங்குகிறது. அது மூடிய கண்ணுக்குள் காட்சிகளாக உருவெடுக்கிறது.

பொதுவாக நாம் விழித்திருக்கும் போது நமது மனம் பலவற்றை சிந்தித்திக்கொண்டுதான் இருக்கும் அந்த நேரம் நம் வாயில் இருந்து வெளி வரும் சொற்களில் உண்மைத்தன்மையை தேடுவது சிரமம். சரியான உள்ள உணர்வை வெளிப்படுத்தாது ...ஆனால் ஆழ்மனதை கனவு காணும் படி செயற்கையாக தட்டி எழுப்பி பேச வைக்கும் போது உண்மையைத் தவிர வேறு எதுவும் வெளி வராது.....

இந்த செயற்கை தூக்கம் ஒரு விதமான மயக்கம் ஆகும். உடலில் அடி பட்டு ரத்தம் வெளியேறுவதால் ஏற்படும்  மயக்கத்திற்கும், தூக்க நிலைபோல் காணப்படும் மயக்கத்திற்கும் வித்தியாசம் உண்டு.  இந்த மயக்கத்தால் அந்த மனிதனுக்கோ அல்லது அவனது உடலுக்கோ எந்த விதமான இழப்பும் ஏற்படுவதில்லை. 

உடலில் ஏற்படும் நோய்களை பெரும்பாலும் கண்டு பிடித்து மருத்துவம் பார்த்துவிடாம். ஆனால் உள்ளத்திற்குள் நடக்கும் போராட்டங்கள் தான் பெரிய அளவில் மனநோயை ஏற்படுத்துகிறது. இதனை வெளியில் இருந்து பார்க்கும் பிறருக்கு புரிந்துகொள்வது சிரமம். இன்றைய காலகட்டத்தில் மனதால் ஏற்பட கூடிய நோய்கள்தான் உலகின் பல பாகங்களிலும் வேகமாக பரவி வருகிறது. 

கொலை பாதகம் , பாலியல் வன்முறை, வன்மம், பழிவாங்குதல், பிறரின் துன்பத்தை கண்டு ரசித்தல், மிருக உணர்ச்சி இவை அனைத்தும் ஆழ்மனதில் மறைந்திருக்கும், வெளியில் தெரியாது. பிரச்சனைக்குரிய மனிதனை  பற்றிய உண்மையின் முழு வடிவத்தையும் பெற வேண்டும் என்றால் அவனது மனதை தான் முதலில் ஆராயவேண்டும்.  இதை  கண்டுபிடித்து சரி பண்ணகூடியதுதான்  'ஆழ்நிலை கனவு மயக்கம்'.  

மாறாக இந்த மயக்கம் சாதாரண மனிதனுக்கு நன்மையை தான் செய்கிறது. மனிதனுக்கு இருக்கும் பயம், கவலை போன்ற உணர்வுகளில் இருந்து அவனை விடுவிக்கிறது, மேலும் மன அழுத்தம் காரணமான ஏற்படும் உடல் சோர்வுகள், மன குழப்பங்கள் போன்றவற்றில் இருந்து மனிதனை வெளி கொண்டுவர இந்த மயக்க மாகிய கனவு நிலை மிகவும் உதவுகிறது.  

கனவு நிலையின் மூன்று கட்டங்கள். 

முதல் நிலை அறிவைச் சார்ந்தது, இரண்டாவது அறிவு சாராத நிலை, மூன்றாவது குழப்பம் நிறைந்த நிலையாகும். இந்த மூன்று நிலைகளின் அடிப்படையின் வித்தியாசத்தை உணராமல் செயல்பட்டால் உண்மையை கண்டுபிடிக்க முடியாத நிலைக்கு மருத்துவர் தள்ளபடுவார். 

*  முதல் நிலையில் சம்பந்த பட்ட மனிதனின் மனதில் இருக்கும் பயத்தையும், கவலைகளையும், குழப்பங்களையும்  அங்கிருந்து விடுவிக்கவேண்டும். இது முதல் நிலை. 

*   இரண்டாவது நிலையில் அம்மனிதனின் பேச்சில் ஒரு தெளிவு இருக்காது, வார்த்தைகளும் தொடர்பின்றி இருக்கும். எனவே அந்த கட்டத்தில் இருந்து அந்த மனிதனை வெளியே கொண்டு வர வேண்டும். 

*  முக்கியமான இறுதி நிலையும் உச்ச கட்ட நிலையும் இது தான். இந்த கட்டத்திற்கு அந்த மனிதனை கொண்டு சென்று விட்டால் அவனது ஆழ்மனதில் புதையுண்டு கிடைக்கும் அத்தனை விசயங்களும் மருத்துவருக்கு எளிதில் கிடைத்து விடும். அவனை பாதித்து இருக்கும் விசயங்கள் அனைத்தையும் அவனே தெளிவாக சொல்லி விடுவான். 

இந்த மூன்று நிலைகளையும் ஒரு மருத்துவர் சரியாக பொறுமையாக கையாண்டுவிட்டார் என்றால் அவரது மருத்துவம் வெற்றி தான். 

சிக்மண்ட் பிராய்ட் இந்த மருத்துவத்தை பற்றி விரிவாக எழுதிய ஒரு நூலின் பெயர்தான் INTERPRETATION OF DREAMS. 






வாசலில் நான் வரைந்த  கோலம்