மாடித்தோட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாடித்தோட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூலை 11

வீட்டுத்தோட்டம் - தக்காளி வளர்ப்பதில் சில எளிய முறைகள் + டிப்ஸ்

ஒரு தக்காளி செடியில் இருந்து வேறு சில தக்காளி செடிகளை உருவாக்கலாம்...

ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா ? எனக்கு முதலில் இதை கேள்விப்  பட்டபோது அவ்வாறுதான் இருந்தது. தோட்டக்கலையைப்  பொறுத்தவரை நாம் தினமும் புதுப்  புது பாடங்களைக்  கற்றுக் கொண்டே இருக்கலாம். நாம சும்மா இருந்தாலும், இந்த இயற்கை தூண்டிக் கொண்டே இருக்கும் இப்படி முயற்சி செய்யலாமா அப்படி முயற்சி செய்யலாமா என்று! இயற்கையின் தூண்டுதலால் மேலும் மேலும் பல வளர்ப்பு முறைகளை முயற்சித்து பார்த்துக் கொண்டிருப்பேன். அதில் ஒரு முறை தான் தக்காளிக் கிளைகளின் மூலம் புது செடியை உருவாக்குவது... இந்த முறைப்படி பயிரிடுவதால் வருடம் முழுவதும் தக்காளிக்குத்  தட்டுப்பாடில்லை.

க்ளோனிங் முறை

தக்காளியின் ஒவ்வொரு கிளைக்கும் தனியாக வேர்களை பரப்பக்  கூடிய அளவிற்குப்  போதுமான செல்கள் இருக்கின்றன என்பது ஒரு அதிசயம்.
ஒரு தக்காளி செடியில் இருந்து இரண்டு மடங்கு அறுவடையை எடுத்துவிடலாம். ஒரு தக்காளி விதை முளைத்து பலன் தர 2 மாதம் ஆகிறது ஆனால் இந்த முறை  என்றால் 1 மாதம் போதும்.

கிளைகளை கட் பண்ணும் முறை

வளர்ந்தச்  செடியின் பக்கக்  கிளைகளை சிறு கத்தி அல்லது சிசர் வைத்து நறுக்கி எடுத்து மேலே  இரண்டு இலைகளை மட்டும் விட்டுவிட்டு இலை பூ மொட்டு போன்ற மற்றவற்றை அகற்றிவிடவேண்டும்.  கிளைத்தண்டு  ஆறு இஞ்ச் நீளம் இருந்தால் நலம்.

என் வீட்டுத்தோட்டத்து தக்காளி செடி

நாலு இஞ்ச் உயரம் மட்டுமே உள்ள சிறிய தொட்டியை எடுத்துக்கொண்டு அதில் கோகோபீட் மண்புழு உரம் கலந்த மண்ணை நிரப்பி நடுவே விரல்  வைத்து ஒரு துளை ஏற்படுத்தி அதில் தக்காளி தண்டை வைத்து மெதுவாக மண்ணை அழுத்திவிடுங்கள்...இந்த தொட்டியை ஜன்னலின் ஓரத்தில் வெயில் படும் இடத்தில் வைத்து தண்ணீர் தெளிக்க வேண்டும் போதுமான அளவிற்கு வெயில் கிடைத்ததும்(ஒரு வாரம் போதும்)  வேறு தொட்டிக்கு  இடம் மாற்றிவிடுங்கள்.  அவ்வளவுதான். இதன் தாய்ச்செடி  காய்த்து முடியும் நேரத்தில் இது பலன் கொடுக்கத் தொடங்கி விடும்...

மற்றொரு முறை

pic-google

மேலே இரு இலைகளை விட்டுவிட்டு  நறுக்கப்பட்ட கிளையை   நீர் நிரம்பிய கண்ணாடி  ஜாடி அல்லது டம்ளரில் வைத்து  விடுங்கள். இதனை ஜன்னல் ஓரத்தில் வைத்து தினமும் நீரை மட்டும் மாற்றி வாருங்கள், நான்கு நாளில்  வேர் விட ஆரம்பித்து விடும் நன்கு வேர் விட்டதும்  வேறு தொட்டிக்கு மாற்றிவிடுங்கள்.  இந்த முறையில் செடி பலன் தர சிறிது காலம் அதிகமாகுமே தவிர உற்பத்தியில் எந்த குறைவும் இருக்காது.

இந்த இரு  முறைகளின் படி செய்து வந்தால்  வருடம் முழுவதும் நம் வீட்டில் இருந்து தக்காளி  பழங்களைப்  பறித்துக் கொண்டே இருக்கலாம்.

என் வீட்டுத்தோட்டம் - பறிக்க தயார் நிலையில்

தக்காளிச் செடியில்  பூச்சிகள் தாக்கத் தொடங்கியதும் செடியின் அந்த பகுதி  'சிஸ்டமின்' என்ற ஹார்மோனை சுரந்து பூச்சிகள் மேலும் முன்னேறாதபடி தடுத்துவிடுகின்றன. இது தக்காளியின்   சிறப்பு குணம். 

 பொதுவான டிப்ஸ் 

 * விதைகளை  கடையில் வாங்குவதை தவிருங்கள். வீட்டில் இருக்கும்  நன்கு கனிந்த  தக்காளியை  பிசைந்து விதைகளை சேகரித்து  கோகோபீட்+மண்+மண்புழு உரம் நிரப்பிய தொட்டியில் போட்டு நீர் தெளித்து வந்தால் போதும் விதைகள் முளைத்து விடும். சிறிது வளர்ந்ததும்   வேருடன் அப்படியே எடுத்து தனித்தனியாக வேறு வேறு தொட்டிகளில் நட்டு விடுங்கள்.தக்காளியை குறுக்கு வாட்டில் வெட்டி மண்ணில் புதைத்து வைத்தாலும்போதும் விதைகள்முளைத்து வந்துவிடும்.

* குளிர் காலத்தில் வீட்டினுள் இருக்கும் தக்காளி செடிக்கு தண்ணீரும் உரமும் தவறாது கொடுத்து வரவேண்டும். தண்ணீர் ஊற்றும் போது லேசாக செடியை அசைத்து விட்டால் மகரந்த சேர்க்கைக்கு உதவியாக இருக்கும்.

* பக்கக் கிளைகளை   எடுத்துவிடுவது தாய்செடிக்கு மிக சிறந்த நன்மையை  கொடுக்கிறது , சத்துக்கள் பிற கிளைகளுக்கு பரவுவது தடுக்கப் பட்டு தாய் செடி மிகுந்த செழிப்புடன் வளரும். விரைவில் பூ பூத்து காய் காய்ப்பதுடன் மட்டுமல்லாமல் அகன்று விரிந்தும் உயரமாகவும் வளரும்.

* தக்காளி செடி நடும் போதே அதனுடன் ஒரு குச்சியைச்  சேர்த்து கட்டிவிடுங்கள்... இல்லையென்றால் செடி காற்றில் அசைந்து மண்ணில்  வேர் பிடிப்பது பாதிக்கப்படும்.

* முட்டை ஓடுகளை சேகரித்து வைத்துக் கொண்டு மிக்ஸ்யில் போட்டு தூள் செய்துக்கொள்ளுங்கள்.வாரத்திற்கு ஒருமுறை  ஒரு ஸ்பூன் ஒரு செடிக்கு என கொடுங்கள் . முட்டை ஓட்டில்  கால்சியம் இருப்பதால்  தக்காளி செடிக்கு நல்ல ஊட்டத்தை கொடுக்கிறது.

* வாழைப்பழத்  தோல்களை சிறிதுச்  சிறிதாக நறுக்கிக்   காய வைத்து மிக்ஸ்யில் போட்டு தூளாக்கி வைத்துக் கொள்ளுங்கள்...இதையும் ஒரு ஸ்பூன் வீதம் 

* சத்துக்களை உறிஞ்சிவிடும் எனச் சொல்லப்படும் suckers என்பவை செடியின் பக்கவாட்டில் வளருவது.  அவை சிறிதாக வளரும்போதே   அதனை கிள்ளி  அகற்றிவிடுங்கள். இது காய் கொடுக்காது என்பதால் இதனை வளரவிடுவது சரியல்ல. இதனை அகற்றியப்பிறகு   செடியின் வளர்ச்சி அபரீதமாக இருக்கும், தக்காளியும் நிறைய காய்க்கும்.

(pic - google) sucker

* தக்காளிச் செடியைப் பொறுத்தவரை பூச்சிகளை அழிக்க தக்காளி இலைகளே போதும். இலைகளில் இருக்கும் விஷம் பூச்சிகளை கொன்றுவிடும், பூச்சிகள் தென்பட்டால் இலைகளை அரைத்து சாறு எடுத்து பூச்சிகளின் மீது தெளிக்கவேண்டும்.

* தவிர 3G (greenchilli, ginger, garlic)என்று சுருக்கமாக சொல்லப்படுகிற பூண்டு +இஞ்சி+பச்சை மிளகாய் மூன்றையும் சம அளவு எடுத்து மிக்ஸியில் அரைத்து  வடிகட்டிய  சாறை  தண்ணீர்(1-10)  சேர்த்து  கலந்து செடியின் மீது  தெளித்தால் பூச்சிகள்  அழிந்துவிடும்.  

* பழுத்த ,காய்ந்த இலைகளை உடனுக்குடன் அகற்றிவிடுங்கள்.  அழுகிய  தண்டுகள் கிளைகளையும் எடுத்துவிடுங்கள். செடி எப்பொழுதும் சுத்தமாக பசுமையாக இருக்குமாறுப்  பார்த்துக் கொள்ளுங்கள்.

* தக்காளிக்கு வெயில் மிக பிடிக்கும். 14 - 18 மணி நேர நேரடி சூரிய ஒளி கட்டாயம் தேவை. பசுமைக்குடிலில்  செடிகள் இருந்தால் செயற்கையான முறையிலாவது வெளிச்சம் வர செய்யவேண்டும்.

* காய் காய்க்கத் தொடங்கியதும்  தண்ணீர்  விடுவதை முறைப்படுத்த வேண்டும். ஆழமாக வேர் வரை தண்ணீர் சென்று தொட்டியின் துவாரங்கள் மூலம் வெளியேறுகிறதா என கண்காணிக்க வேண்டும். துளைகள் அடைத்திருந்தால் சிறு குச்சியால் குத்தி சரிப்  படுத்த வேண்டும்.

* எப்போது தண்ணீர் ஊற்றினாலும் செடியின் மீது தெளிப்பதை போல ஊற்றவேண்டும்...இலை, தண்டு கிளைகள் தண்ணீரால் நனைவது சிறப்பு.

* தக்காளிச்  செடியை நடும்போது ஆழமாக நடவேண்டும், அப்போதுதான் நிறைய வேர்கள் உருவாக்கி செடியை பலமுள்ளதாக்கும்.தொட்டியின் ஆழம் கம்மியாக இருந்தால் செடியை சிறிது வளைத்து மண் அணைத்து வைக்கலாம். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, மண்ணுக்குள் வைக்கப்போகும்  செடியின் பக்கக் கிளைகளை அகற்றிவிடவேண்டும்.

இப்போதைக்கு இவைப்  போதும் என நினைக்கிறேன் ... ஆரம்ப நிலையில் இருக்கும் வீட்டுத் தோட்ட ஆர்வலர்களுக்காகப்  பதிவை எளிமையாக்கி இருக்கிறேன்... வேறு சந்தேகங்கள் ஏதும் இருப்பின் கமென்ட்,மெயிலில் கேளுங்கள். நன்றி.


Happy Gardening !!
மெயில் ஐடி : kousalyaraj10@gmail.com 

பிரியங்களுடன் 
கௌசல்யா 

* * * * * * * * 
புதியதாக தோட்டம் போடப் போகிறவர்களுக்காக-

*தோட்டத்திற்கு தேவையான கருவிகள் (Tools) வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

*மண் கலவை (Potting mix) செம்மண்,கோகோபீட், மண்புழு உரம்,காய்ந்த சாணத்தூள் அனைத்தையும் சரியான அளவில் கலந்து இங்கே  விற்பனை செய்கிறார்கள். வாங்கி தொட்டியில் போட்டு  செடியை நட்டு வைத்தால் போதும். மிகவும் சுலபம். 

புத்தகப் பரிந்துரைOrganic Home Gardening Made Easy written by Sujit Chakrabarty


செவ்வாய், ஜனவரி 20

வீட்டுத்தோட்டம் ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் 3

முந்தையப் பதிவுகள்

வீட்டுத்தோட்டம் - அனுபவம் 1 
வீட்டுத்தோட்டம் - அனுபவம் 2 

வீட்டுத்தோட்டம் ஏன் அவசியம் என்ற கேள்வி கேட்டவர்களுக்காக
இந்த எச்சரிக்கை ரிப்போர்ட் :-

'எண்டோசல்பான்' என்ற  பூச்சிக்கொல்லியை  2 ஆம் நிலை விஷப் பொருள் என்று உலக சுகாதார நிறுவனமும் முதல் நிலையில் 2 ஆம் பிரிவை சேர்ந்த விஷப் பொருள் என அமெரிக்கச் சுற்றுச்சூழல் கழகமும் அறிவித்திருக்கிறது. ஆனால் உலக அளவில் எண்டோசல்பான் தயாரிப்பில் இந்தியா தான் முதலிடத்தில் இருக்கிறது...!! 

மேலும்

தடை செய்யப்பட்ட  இரசாயன பூச்சிக்கொல்லி  மருந்துகள் நமது உடலில் இருப்பதாக மத்திய அரசின் உணவு தரக்கட்டுப்பாடு அமைச்சகம் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  Cypermethrinheptachlor, quinalphos, aldrin, chlorodane, dichlorvas, cypermethrin ஆகியவை அரசால் தடை செய்யப்பட்ட இரசாயன பூச்சிமருந்துகள் காலிப்ளவர் முட்டைகோஸ் கத்திரிக்காய் வெண்டைக்காய் போன்ற காய்கறிகளின் மீதும் பிற தானியங்களின் மீதும் தெளிக்கப்பட்டிருக்கின்றன என்றும்  கடைகளில் விற்கப் படும் காய்கறிகளில் அதிகளவு அதாவது ஆயிரம் மடங்கு இரசாயனப் பூச்சிக் கொல்லிகள் இருப்பதாகவும்  கண்டறியப்பட்டுள்ளன .

Home Garden

* கத்திரிக்காயில் மட்டும் சாதாரண அளவை விட 860% தடை செய்யப்பட பூச்சிக்கொல்லி மருந்துகளின் தடயம் இருந்ததாம். இதற்கு அடுத்த இடத்தில் காலிபிளவரும் மூன்றாம் இடத்தில் முட்டை கோஸ் இருக்கிறதாம்.

இந்த இரசாயனப்  பூச்சி மருந்துகள் அனைத்துமே neurotoxins அதாவது நரம்பு மண்டலத்தை தாக்கிப்  பாதிப்புக்குள்ளாகும் நச்சுப் பொருள்கள். மேலும் இவை நாளமில்லா சுரப்பிகள் ஈரல் சிறுநீரகம் அனைத்தையும் பாதிப்பவை. உணவில் நச்சுத்தன்மை மற்றும் பல ஒவ்வாமை(அலர்ஜி), ஆஸ்துமா ஆகியவற்றின் மூலக்காரணம் இந்த தடைச் செய்யப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகளே !

கர்ப்பிணிப்பெண்கள் இவ்வாறான பூச்சிக்கொல்லிகள் கலந்த உணவுகளை சாப்பிடுவதால் மரபணு மாற்றங்கள் placenta மூலம் கருவையும் தாக்குகின்றன. ஆப்பிள் சாப்பிட்டால் நோய் வராது என்பதெல்லாம்  அந்தகாலம். ஆப்பிள் , ஆரஞ்சு பழங்களில் பூச்சிக் கொல்லி மருந்துகள் தடை செய்யப்பட்ட அளவினை விட 140% அதிகம் இருக்கின்றன.
இதோடு மட்டுமல்லாமல் மூன்று மடங்குக்கும் அதிக அளவு இரசாயனப்  பூச்சி மருந்துக்  கலவையில்  பழங்கள், காய்கறிகள் கீரைகளை  முக்கி எடுத்த பின்னர்தான் கடைகளுக்கு  விற்பனைக்கு அனுப்புகிறார்களாம். விரைவாக அழுகி விடக் கூடாது என்பதற்காக...!

பெரிய சூப்பர் மார்கெட்டுகளில் பளப்பளப்பாக பிளாஸ்டிக் கவர்களில் இருப்பவை சுத்தமானவை என்று நம்பிவிடாதீர்கள். அதில் எவ்வளவு இரசாயனம், மெழுகுப்பூச்சு இருக்குமோ ?  
(Reference :Times of India)

மேலும்

2025 ஆம் ஆண்டிற்குள் பிறக்கும்  இரண்டு குழந்தைகளில் ஒருவர் (பிறக்கும் குழந்தைகளில் பாதி பேர்) ஆட்டிசம் பாதிப்பிற்குள்ளாவார்கள் என்ற  அதிர்ச்சித்  தகவலை ஆய்வாளர்கள் சமீபத்தில் வெளியிட்டு இருக்கின்றனர். பாதிப்பிற்குக்  காரணமாக கூறப்படுவது மான்சான்டோ !! இந்நிறுவனத்தின் அரும் பெரும் கண்டுப்பிடிப்பான க்ளைஃபோசேட் களைக்கொல்லி ஒரு எமன்.



நேரம் இருப்பின் இந்த லிங்க் சென்று படித்துப் பாருங்கள்.

தாவரங்களைத்  தாக்கும் பூச்சிகளில் இரண்டு வகை உண்டு ஒன்று நன்மை செய்யும் பூச்சி, மற்றொன்று தீமைச்  செய்யும் பூச்சி. சைவ பூச்சி, அசைவ பூச்சி என்றும் சொல்வார்கள். நன்மை செய்யும் பூச்சி, அசைவ இனம் பிற பூச்சிகளை ஸ்வாஹா செய்யும், இதனால் தாவரத்திற்குப்  பாதிப்பு இல்லை. இவற்றில் நன்மை செய்யும் பூச்சி இலையின் மேலே இருக்கும், தீமை செய்யும் பூச்சி இலையின் அடியில் இருக்கும். நாம் என்ன செய்கிறோம் பூச்சி மருந்து அடித்து நன்மைச்  செய்யும் பூச்சிகளைக்  கொன்றுவிடுகிறோம்,  (இது சின்ன உதாரணம்தான், தொடர்ந்து பூச்சிகளின் நன்மை, தீமை பற்றி பகிர்கிறேன்)

இவ்வளவும் தெரிந்துக்கொண்ட பிறகாவது  நாம் விழித்துக் கொள்ளாவிட்டால் எப்படி? நம் வீட்டிற்குப்  பாதிப்பில்லை என்று இனிமேலும் மெத்தனமாக இருக்கக் கூடாது. நமது குழந்தைகள்/சந்ததிகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிட்டது?? பணத்தை மட்டும் சம்பாதித்துக் கொண்டிருந்தால் போதாது. நம் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர வேண்டும். என்ன செய்ய போகிறோம் என்று கேள்வி கேட்டுக் கொண்டிருப்பதை விட ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற முடிவிற்கு வருவோம். தொடர்ந்து வாசிங்க, அந்த ஏதாவது என்ன என்று இப்போது உங்களுக்கு  புரியும்.

ஒன்றே செய் அதை இன்றே செய் 

ஒரே வழி இயற்கைக்கு மாறுவது தான் ! இயற்கைக்கு மாறுவது என்றால் இயற்கையை  நோக்கி நாம் சென்றாக வேண்டும், செயற்கையை தவிர்க்கவேண்டும் என்பதே. அபரீத விஞ்ஞான அறிவியல் வளர்ச்சியின் மறுபக்கம் வேதனையானது என்பதை   ஒத்துக் கொண்டு இயற்கையிடம் சரண் அடைந்தே ஆகவேண்டும்.  சேர்ந்தாற்போல் ஒரு வாரம் எந்தவித உடல் உபாதையும் இன்றி நம்மால் இருக்க இயலவில்லை என்பதை மறுக்க முடியாது. மாத வருமானத்தில் ஒரு கணிசமான அளவு பணம் மருத்துவத்திற்காக செலவாகிறது.  இது ஏன் என்று என்றாவது யோசித்திருக்கிறோமா ? டாக்டரை பார்க்கிறோம், ஊசி போடுகிறார், சரி ஆனதும் அத்தோடு விட்டுவிடுகிறோம்...ஆனால் ஒவ்வொரு முறை காய்ச்சல், அலர்ஜி, வலி ஏற்படும் போதும் உள்ளுறுப்புகளில் ஏதோ பிரச்சனை இருக்கலாம் என நாம் எண்ணுவதே இல்லை. 'நோய் நாடி நோய் முதல் நாடி' என்ற குறளின் பொருளை மறந்தேவிட்டோம்.

எவ்வாறு இயற்கையை நோக்கிச் செல்வது

இது பெரிய வித்தை எல்லாம் இல்லை, நமது சுற்றுப்புறத்தை பசுமைச்  சூழ இருக்குமாறுப்  பார்த்துக் கொண்டாலே போதும். மேலும் இரசாயன உரம், பூச்சிக் கொல்லிகள் போடப்பட்டவைகளை அறவேத்  தவிர்க்க வேண்டும். இயற்கை முறையில் விளைந்த தானியங்கள்,காய்கறிகளை மட்டும் சாப்பிடுவதன் மூலம் நமது ஆரோக்கியம் மேம்படும். ஆனால் எல்லோருக்கும் இது சாத்தியப்படுமா என்பது சந்தேகம்தான். இருப்பினும் ஏதாவது செய்தாகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம். இதற்கான ஒரே தீர்வுதான்  வீட்டுத்தோட்டம். நெருக்கடி மிகுந்த அப்பார்ட்மென்டிலும் தோட்டம் போட வழிமுறைகள் இருக்கின்றன.  பலர் இணைந்தும் செய்யலாம்.

இயற்கையான முறையில் விளைந்த காய்கறிகள் வெறும் உணவு பொருள் மட்டுமல்ல, நமது ஆரோக்கியத்தை பாதுகாக்கும் மூலிகை மருந்துப் பொருள்கள்.

இந்த காய்கறிகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மருத்துவ செலவு மிச்சம் என்பதை விரைவில் தெரிந்துக் கொள்வீர்கள்.

how old are you என்ற ஒரு மலையாளப் படத்தை பலரும் பார்த்திருக்கலாம், ரசித்திருக்கலாம். அட இப்படியுமா என ஆச்சர்யப்பட்டிருக்கலாம். அந்த படத்தை தமிழில் ஜோதிகாவை வைத்து எடுப்பதையும் கேள்விப்  பட்டிருக்கலாம். நிச்சயமாக அதில் சொல்லப்பட்ட விஷயம் பலரின்  மனதை பாதித்திருக்கும்,  மலையாளப் படம்  பார்க்காதவர்கள் தமிழில் வெளி வந்த பிறகாவது கட்டாயம் பாருங்கள்.

நடிகை மஞ்சுவாரியரின் முக்கியமான மேடைப் பேச்சு உங்களின் பார்வைக்காக...




வீட்டுத்தோட்டம் காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து தோட்டம் போடத் தொடங்குங்கள்...சந்தேகங்கள் கேள்விகள் இருப்பின் எனது மெயில் ஐடியில் அல்லது கமெண்டில் தெரிவியுங்கள். பதில் சொல்லக்  காத்திருக்கிறேன்.



ப்ரியங்களுடன்...
கௌசல்யா.
மெயில் ஐடி : kousalyaraj10@gmail.com


தகவல் உதவி :Angelin 
படம்:கூகிள்