பெண்ணியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண்ணியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், டிசம்பர் 23

பெண்ணியவாதிகள் சிலரின் ஆதிக்க வக்கிரங்கள்...!!?




எனக்கு இந்த ஒரு விசயத்தில் மட்டும் எப்பொழுதும்  ஒரே குழப்பம் இந்த பெண்ணியவாதிகள் ஆண்களுக்கு எதிரானவர்களா பெண்களுக்கு  எதிரானவர்களா? பெண்ணுக்கு இழிவு ஏற்பட்டுவிட்டது என்றதும் சிலிர்த்து எழும் பெண்ணியவாதிகள் என்கிற ஒரு குரூப், தங்களின் எழுத்து, பேச்சின் வாயிலாக 'ஏய் ஆணாதிக்க வர்க்கமே' என ஆரம்பித்து கிழி கிழி என கிழித்துத் தொங்கவிட்டுவிடுவார்கள்... இதை நன்றாக கூர்ந்துக் கவனித்தோம் என்றால் அங்கே பரிதாபமாகத் தொங்கிக் கொண்டிருப்பது சாட்சாத்  பெண்மை?! பெண்ணுரிமையை  பேணுகிறோம் என்று கூறிக் கொண்டே பெண்மையை இழிவுப்படுத்துவதில் பெண்ணியவாதிகளுக்கு நிகர் அவர்களேதான்.   

ஆம் போற்றப்படவேண்டியவள் தூற்றப்படுகிறாள் ஆண்களாலும் ஒரு சில பெண்களாலும்... அவர்கள் பெண்ணுக்குரிய மதிப்பை, மாண்பை குறைத்துக்கொள்ள சிறிதும் அஞ்சுவதில்லை. சிலரின் போகப்பொருள் சிலரின் கேலிப் பொருள் சிலரின் பொழுதுபோக்கு இப்படி பெண்மையை எப்படியும் பயன்படுத்திக்கொள்ளலாம், உண்மையில்  இதை தட்டிக் கேட்கவும் கண்டிக்கவும் யாருமில்லை. ஆண்கள் தான் தங்களுக்கு எதிரிகள் என்று எண்ணிக் கொண்டே சில பெண்கள் நடந்துக் கொள்ளும் விதம் சகபெண்களாலேயே சகித்துக்கொள்ள முடிவதில்லை.

பெண்ணுரிமை பெண்ணியம் பேசுபவர்கள் தங்களின் தன்முனைப்பை பொதுவெளியில் நிலைநாட்ட துடிக்கிறார்களே  தவிர சக பெண்ணிற்கு உதவுவதாக இல்லை. அதிலும் இவர்களின்  கருத்துகள் பெண்ணை மேலும் மேலும் அவமானப் படுத்துவதாகத்தான் இருக்கிறது. இவர்களை போன்றோரின் கருத்துகளால் பெண் என்றாலே இப்படித்தான் என்ற எண்ணத்தை வலுவாக எல்லோரின் மனதிலும் பதிய வைக்கிறார்கள். எந்தவொரு பெண்ணுக்கெதிரான நிகழ்வு என்றாலும் சம்பந்தப்பட்ட நிகழ்வின் முன் பின் சூழல்கள்  எதையும் அலசி ஆராயாமல் பொத்தாம் பொதுவாக ஆணாதிக்கம் என குற்றம் சாட்டுவது அவர்களின் முக்கியமான பொழுதுப் போக்கு.

தற்போது பரபரப்பான விசயமாக மாறிப் போன பீப் சாங் பிரச்சனையில்  சம்பந்தப் பட்டவர்களின் மீது வழக்குகள், கைது நடவடிக்கை என வந்துக் கொண்டிருக்கும் செய்திகள் ஓகே ரகம் என்றால் இதை குறித்து எழுதப்பட்ட விமர்சனங்கள் ஐயகோ ரகம். நிர்மலா கொற்றவை, லீனா மணிமேகலை, குட்டி ரேவதி போன்றோரின் எழுத்துக்களை படிக்க நேர்ந்தது.  அதிலும்  கொற்றவை எழுதிய கட்டுரையை மூன்று பாராக்களுக்கு மேல் இயல்பாக  படிக்க இயலவில்லை.  முன்பு நண்பர் ஒருவர்  எழுதிய கிராமத்து கதையில் சில வசைச்  சொற்கள் இடம் பெற்றிருந்தன, கதையை வாசிக்கும் போதே, 'இது போன்ற வார்த்தைகளை நானும் வாசிக்க நேர்ந்துவிட்டது, ஏன் இந்த வார்த்தைகள் போடாமல் எழுத முடியாதா' என்றதற்கு கிராமத்து மனிதர்கள் சாதாரணமாக உபயோகிக்கும் வார்த்தைகளான இவை  இருந்தால் தான் கதை அதன் இயல்பு குன்றாமல் இருக்கும் என்று அவர் சொன்ன சமாதானத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.   கண்களாலும் மனதாலும் வாசித்து பெரிய பாவத்தை செய்ததைப் போல படபடப்பாகிவிட்டது.  

ஒரு ஊருக்கு சாதாரணமாக சொல்லாக தெரிவது பிற ஊர்களுக்கு தவறு, குற்றமாக இருப்பது யதார்த்தம் என்றாலும் பாலியலை மட்டுப்படுத்தும் கேவலப்படுத்தும் வார்த்தைகளை பொதுவெளியில் இயங்குபவர்கள் தவிர்த்தல் நலம் என்பது எனது கருத்து. உடல் ரீதியில் பெண்ணை துன்புறுத்துவதற்கும் உடல் உறுப்பு வார்த்தைகளை பிரயோகிப்பதற்கும் உள்ள ஒரே வித்தியாசம் முன்னது உடலை வருத்துகிறது பின்னது  மனதை வருத்துகிறது. இரண்டுக்குமான வலி என்பது பொது.

அதுபோன்ற ஒரு வலி, பதட்டம்  கொற்றவை அவர்களின் கட்டுரையை படிக்கும் போது ஏற்பட்டது. எதை சிம்பு அனிருத் செய்ததாக குற்றம் சாட்டுகிறோமோ அதே வார்த்தையை பலமுறை பலவிதமாக அழுத்தம் திருத்தமாக சொல்வதுதான் எதிர்வினையா ? ஆண் சொன்ன போது தவறாக தெரிந்த ஒன்று பெண் சொன்னதும் சரி என்றாகிவிடுமா? 

முற்போக்கு பெண்ணியவாதிகள் 

சிம்பு அனிருத் செய்ததற்கு அவர்கள் வீட்டுப் பெண்களை தெருவுக்கு இழுத்து 'அந்த வார்த்தைக்கு அபிநயம் பிடித்து ஆடுவாயா' என்றெல்லாம் கேவலப்படுத்துவது கொஞ்சமும் நியாயம் இல்லை... எந்தவொரு வாக்குவாதத்தின் போதும்  பிறர் வீட்டுப் பெண்களின் பத்தினித்  தன்மையை விலை பேசுவது ஆண்களின்  அதிகபட்ச தாக்குதலாக இருக்கும் அதுபோன்ற ஒன்றை பெண்ணியவாதிகளும் செய்வது வேதனை. ஒட்டுமொத்த தாக்குதலும் சிம்பு அனிருத் வீட்டு பெண்களை நோக்கி மட்டுமே வசதியாக அந்த வீட்டு ஆண்களை மறந்துவிட்டார். பெண்ணுக்கு சார்பாக பேசுகிறோம் என்ற போர்வையில் பெண்மையை விலைபேசுவது வக்கிரத்தின் உச்சம்?! இதுதானா  பெண்ணியம்??!!   

ஆணோ பெண்ணோ சிந்தனையில் நாகரீகம் இருந்தால் தான் வார்த்தை பிரயோகமும் நாகரீகமாக இருக்கும் மாறாக சிந்தனையே வக்கிரமாக இருந்தால் அவர்களின் செயலும் அவ்வாறே... மனதில் இத்தனை அசிங்கத்தை வைத்துக் கொண்டிருக்கும் எவ்வாறு இவர்களால் பொதுவெளியில் பிறரை நேர்மையாக எதிர்க் கொள்ளமுடியும்.  சிம்பு அனிருத் இருவரின் வளர்ப்பு சரியில்லை, பண்பு இல்லை இப்படி ஏகப்பட்ட இல்லைகளை சொன்னவரின் எழுத்தில்  'எதுவுமே' இல்லை. 

அந்த பாடலை பற்றிய இவரது விமர்சனம் அருவருப்பாக குமட்டலை ஏற்படுத்துகிறது... இங்கே லிங்க் கொடுப்பது இந்த பதிவின் உண்மைத் தன்மைக்காகத்தான்,    http://saavinudhadugal.blogspot.qa/2015/12/blog-post.html

பாதிக்கப்படும் பெண்களுக்கு பக்கபலமாக இருப்பது பெண்ணியவாதிகள் என்பது  பலரின் எண்ணமாக இருந்தால் இனியாவது மாற்றிக் கொள்ளுங்கள். பெண்ணியவாதிகளையும் பிற பெண்களையும் ஒன்றாக இணைத்து இனிமேலும் தயவுசெய்து பேசாதீர்கள்.  ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடுவில் பிளவை ஏற்படுத்தவே  பிறந்தவர்கள் அவர்கள்.   'பெண் மேக்கப் செய்வது ஆணை உடலுறவுக்கு அழைப்பதற்காக' என்று பகிரங்கமாக பொது ஊடகத்தில் டாக்டர் ஷாலினியால் சொல்லமுடிகிறது என்றால் பெண்ணியவாதிகளுக்கு இந்த சமூகம் கொடுத்து வைத்திருக்கும் அந்தஸ்தை புரிந்துக் கொள்ளலாம். நாளையே  ஒரு ஆண் இப்படி சொன்னால் இதே ஷாலினி 'என்ன ஒரு ஆணாதிக்க வக்கிரம் என்று அந்த ஆணை நோக்கி  வாளையும் வீசக் கூடும்.    

பெண்ணியவாதிகள், சமூகம் விதித்த கட்டுப்பாடுகளில் இருந்து வெளியே வருவதாக எண்ணிக் கொண்டு சமூகத்திற்கு எதிர் திசையில் போகிறார்கள், எதிர்த்து செய்கிறார்கள். ஆறறிவு உள்ள மனிதர்கள் என்பதை மறந்துவிட்டு சுய சிந்தனை அற்று வாய்க்கு வந்ததையும்  நினைப்பதை எல்லாம் பேசுவதும் உடல் உறுப்புகளை இழிவு செய்வதும் சாதி மத ரீதியிலான தாக்குதலுமா  கருத்து சுதந்திரம் ? 

பெண்களை பற்றிய கட்டுரையில் சாதிக்கு என்ன வேலை, இவ்வாறுதான் சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் எதற்கோ எதையோ இழுத்து பத்தாததுக்கு பெரியாரையும் துணைக்கு அழைத்துக் கொள்வார்கள். அவர் ஏதோ அப்போதையை சூழலுக்கு தனக்கு சரி தவறு என்று பட்டதை எல்லாம் சொல்லி எழுதி வைத்துவிட்டு போய்விட்டார். அப்போதைய சூழலா இப்போதும்  இருக்கிறது? 

ரொம்ப வெளிப்படையாக பேசுவது தான் பெண்ணுரிமை என்ற கட்டமைப்பை இவர்களாக ஏற்படுத்திக்  கொள்வார்கள் , இத்தகையவர்களுக்கு  ஆதரவாக சில ஆண்கள் இருப்பார்கள், ஆனால்  அவர்களுக்கு தெரியாது தங்களையும் சேர்த்தே தான் பெண்ணியவாதிகள் திட்டித் தீர்க்கிறார்கள் என்று. பெண்ணியவாதிகளின் கட்டுரைகள் கவிதைகளை பகிர்ந்தும் விருப்ப கருத்திட்டும்  தான் ஆணாதிக்கவாதி அல்ல என்று காட்டிக் கொள்வதில்  ஆண்களுக்கு அவ்வளவு விருப்பம். பெண்ணியவாதிகள் என்ன சொன்னாலும் வாவ் என்ன ஒரு தைரியமான எழுத்து என்று ஜால்ரா தட்டும் ஆண்கள் பாவம் ... பச்சை பச்சையா பெண் பேசினால் அது தைரியம்,வீரம்  என்றால் தெருகுழாயடியில் சண்டைப் பிடிப்பவர்கள் அத்தனை பேருமே வீரம் செறிந்த போராளிகள்தான் (ஜான்சிராணி வேலுநாச்சியார் போன்றோர்  மன்னிக்க) 

பெண்ணியவாதிகள் பேசாமல் இருந்தாலே போதும், ஆண்களை சாடுவதாக கூறிக் கொண்டே அத்தனை எதிர் வினையும் பெண்களின் மேல் மட்டுமே காட்டும் இவர்கள் தான் முற்போக்கு பெண்ணியவாதிகள். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண் வர்க்கத்தை வார்த்தைகளால் வன்கொடுமை செய்து வக்கிரங்களை பரப்பும் இத்தகைய பெண்ணியவாதிகளுக்கு கட்டுப்பாடு ஒன்றும் கிடையாதா ? 

பெண்கள் சாதாரணமாக பேசவும்  எழுதவும்  கூசும் வார்த்தைகளை சுலபமாக கையாளத் தெரிவதில் என்ன பெருமை வேண்டிக் கிடக்கு... ... ஒரு ஆண் எப்படி இருக்கவேண்டும் என பாடம் எடுத்தவர்கள் ஒரு பெண் எப்படி இருக்கவேண்டும் என்று தெரியாமலா இருப்பார்கள்... ஆனால் தான் தனித்து தெரியவேண்டும் என்பதன் வெளிப்பாடு தான் அந்த வீட்டுக்கு பெண்களை வார்த்தையால் வம்புக்கு இழுத்தது... 

இப்படி பட்ட முற்போக்கு பெண்ணியம் பேசத்தெரியாத பெண்கள் நிறைய நிறைய  எழுதவேண்டும் என்பதே இந்த பதிவின் மூலம் எனது சிறு வேண்டுகோள்...அப்போதுதான் பெண் என்றால் யார் அவள் எழுத்து எவ்வளவு நாகரிகமானது என்பதை உலகம் தெரிந்துக் கொள்ளும் மாறாக முற்போக்கு பெண்ணியவாதிகள் சூழ் இணையம் மிக ஆபத்தானது... பெண் பற்றிய இவர்களது கருத்துக்களை வைத்து பெண் என்றால் இவர்களைப் போன்றோர் தான் என்ற தவறான பிம்பத்தை உடைத்தாக வேண்டும்... ஆண் என்றால் பெண் மோகம் கொண்டு அலைபவன் மட்டும்தான் என்ற கருத்தியலையும் பெண் தான் உடைக்கவேண்டும். இன்னும் எத்தனை காலத்திற்கு தான் மனு சாஸ்திரத்தையும் பெரியார் சொன்னதையும் கட்டி அழுவார்களோ தெரியவில்லை.

பிறரைவிட பொதுவெளியில் இயங்கும் ஆண் பெண் இருவருக்குமே பொறுப்புகள் அதிகம் இருக்கிறது. தகுந்த காரணக்  காரியம் இல்லாமல் போகிறபோக்கில் ஒரு கருத்தை தெளித்துவிட்டு போய்விட முடியாது... சுற்றி சுழலும் உலகத்திற்கு பதில் சொல்லியாக வேண்டும். மாறாக என்  எழுத்து என் உரிமை என்று உளறிக் கொண்டிருந்தால் பிறரால் தவிர்க்கப் படுவார்கள் அல்லது  கேலிக்கு ஆளாகி விரைவில் காணாமல் போய்விடுவார்கள்.

பெண்களை மேலும் மேலும் இழிவுப்படுத்தும் முற்போக்கு பெண்ணியவாதிகளுக்கு எனது  வன்மையான கண்டனங்கள் !!!


pic - google

புதன், செப்டம்பர் 10

ஜீன்ஸ் பெண்களுக்கு தைரியத்தைக் கொடுக்கிறது - விகடன் கட்டுரையின் அபத்தம்!?




ஜீன்ஸ் பெண்களுக்கு தைரியத்தைக் கொடுக்கிறது -  விகடன் கட்டுரையின் அபத்தம்!?

பெண்களுக்கு தைரியத்தைக் கொடுப்பது ஜீன்ஸ் ஆ புடவையா என்று பட்டிமன்றம் வைத்தால் தோற்பது புடவையாக இருக்குமோ என்று புடவைகளின் சார்பாகப்  புலம்ப ஆரம்பித்ததின் விளைவே எனது இக்கட்டுரை! மூன்று வருடங்களுக்கு முன் ‘ஆபத்தான கலாச்சாரம்’ என்று நான் எழுதியப்  பதிவுக்கு ஒரு தோழி எதிர்பதிவு(கள்) எழுதி இருந்தார், அதில் ஜீன்ஸ் உடையை ஆஹா ஓஹோன்னுப்  புகழ்ந்துத்  தள்ளினார். வெளிநாட்டில் வசிக்கும் அவர் அப்படி எழுதியதில் எனக்கு பெரிதாக வியப்பேதுமில்லை... அதற்குப்பின் ஜீன்ஸைப்  பற்றி அதிசயப்படும்படியான ஒரு எழுத்தை இப்போதுதான் படிக்கிறேன். ஆனந்த விகடனில் ‘பேசாத பேச்செல்லாம்’ தொடரின் போன வார(3-9-14) கட்டுரையை தெரியாமப்படிச்சுத் தொலைச்சுட்டேன், அதுல இருந்து மண்டைக்குள்ள ஒரு வண்டு பிராண்டிக்கிட்டே இருக்கு. சரி நம்ம கருத்து என்னாங்கிறதையும் பதிய வச்சுடுவோம்னு இதோ எழுதியே முடிச்சுட்டேன். அந்த மகா அற்புதக் கட்டுரையை படிக்காதவங்களுக்காக அதுல சிலவரிகள அங்க இங்கக்  குறிப்பிட்டு இருக்கிறேன். (நன்றி விகடன்)

அந்த கட்டுரையாசிரியர் தனது ஆறு வயது மகளுக்கு , தனக்குப்  பிடித்த உடையை தேர்ந்தெடுக்கும் உரிமை/சுதந்திரத்தைக்  கொடுத்திருக்கிறார் என்பதை கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தார். பாராட்டவேண்டிய ஒரே விஷயம் இதுமட்டும்தான். அதுக்குபிறகு அந்த கட்டுரை சென்றவிதம் ஒரு வித எரிச்சலை ஏற்படுத்தியது......   அந்த பெண் குழந்தை விளையாடுறப்ப தன்னோட டிரஸ் மேல ஒரு துண்டை தாவணியா  போட்டுக்கிட்டுச்  சமைக்கிற மாதிரி, குழந்தை(பொம்மை) வளர்க்குற மாதிரியும் விளையாண்டுச்சாம், அதே குழந்தை குட்டி டிரௌசர் போட ஆரம்பிச்சப்ப ரொம்ப வீரமா தைரியமா கைல கேமரா புடிச்சிட்டு காடு  மலை எல்லாம் சுத்துவேன்னு சொல்லிச்சாம். இதுல இருந்து கட்டுரையாசிரியர்  புரிஞ்சிகிட்டது என்னனா “சர்வ நிச்சயமா நம் உடைக்கும் , நம் எண்ணத்துக்கும் தொடர்பு இருக்கு” அப்டின்றதானாம்...புடவைக்  கட்டுனா சமையல்கட்டோட நம்ம எண்ணம் நின்னு போயிடுமாம். புடவைல இருந்து அப்டியே சுடி, சல்வார்னு ஒவ்வொன்னா மாறி ஜீன்ஸ் போட்டப்போ மனசு அப்டியே ச்ச்ச்சும்மா ஜிவ்வுனு அதோ அந்த பறவையப்  போல பற, இதோ இந்த மானைப்  போல ஓடு, எமனே எதிர்ல வந்தாலும் எட்டி உத ன்ற மாதிரி வீரமும் தைரியமும் நமக்குள்ள போட்டிப் போட்டு வந்துடுமாம். 

‘புடவைய கட்டிண்ட்டு இனியும் வீட்டுக்குள்ள கோழையைப்  போல அடங்கி கிடக்காதிங்க பெண்களே... ஜீன்ஸ் போட்டுக்கிட்டு சுதந்திர வானில் ஒரு பறவையாய் பறந்துத்திரியுங்கள்’ என்று பெண்களுக்கு அறைகூவல் விடுக்கும் இவரை கண்டிப்பாக  பெண்ணிய இயக்கங்கள் எல்லாம் ஒன்னுக் கூடி ஒரு பாராட்டுவிழா நடத்தியே ஆகணும். புடவையைப்  பத்தி ஒரு பெரிய லெக்ட்சர் வேறக்  கொடுத்திருந்தாங்க, அப்டியே அசந்தேப்  போயிட்டேன்.

புடவை என்னும் மகாஇம்சை

புடவைக்  கட்டுனா நிமிசத்துக்கு ஒரு முறை இழுத்து இழுத்து விட்டுகிட்டு, வயிறு,இடிப்பு தெரியுதான்னு அட்ஜெஸ்ட் பண்ணுவதால வேலைல கவனம் சிதறிப் போயிடுமாம். குனிய முடியாது, வேகமா நடக்க முடியாது, வண்டி ஓட்ட முடியாது பஸ்ல ஏற முடியாது... இப்படி ஏகப்பட்ட முடியாதுகள் !!! அதைவிட முக்கியமா  வேலைக்கு போறப்  பெண்கள் ரெஸ்ட் ரூம் போறதும், நாப்கின் மாத்துறதும் மகா கொடுமையா இருக்குமாம். புடவை ஈரமாயிட்டாக்  காயுற வரை அங்கேயே நிக்கணுமாம் என்று எழுதியது எல்லாம் ரொம்பவே ஓவர்! . சொல்லப்போனால் இது போன்ற சமயத்தில் புடவை ஒருவிதத்தில் வசதியும் சுகாதாரமானதும் என்பது பெண்களுக்கு புரியும், பெண்ணியவாதிகளுக்குப் புரியாது. (அதுவும் தவிர புடவை கசங்கிடும் என்றும் காரணம் சொல்லமுடியாது, ஏன்னா அந்த நாட்களில் மொட மொடன்னு கஞ்சிப்  போட்ட காட்டன் புடவையோ, பட்டு புடவையோ நாம கட்ட மாட்டோம்)

கடைசியா நம்மூர் காலநிலைக்கு புடவை கொஞ்சமும் செட் ஆகாதுன்னு ஒரே போடா போட்டாங்க...(ஜீன்ஸ் அப்படியே ச்ச்சும்மா சில்லுனு இருக்குமாமாம்)

* பெண்கள் பிறர் முன் கம்பீரமா தெரியனுமா, ஜீன்ஸ் அணியுங்கள்!

* தேங்காய் வேணுமா, ஜீன்ஸ் போடுங்க, அதாவது தென்னை மரத்துல ஏறி தேங்காய் பறிக்கச் சொன்னாலும் பறிக்கத் தோணும்.

* ஓடலாம் ஆடலாம் மலை ஏறலாம் பைக் ஓட்டலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். (சமையல் மட்டும் செய்யக்கூடாது, தெய்வக்குத்தம் ஆகிடும் ஆமா)

* வெட்கம் பயம் கண்டிப்பாக  இருக்கவே இருக்காது. துணிச்சல் பொங்கும். எவனாவது கிண்டல் பண்ணினாலும் என்னடா நினைச்சுட்டு இருக்கேனு சட்டையைப்  புடிச்சு கேட்க முடியும். ஆனா தாவணி, சேலை கட்டினா பயத்துல நடுங்கியேச்  செத்துடுவாள். (இந்த இடத்துல சமீபத்திய பாலியல் கொடுமைகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை)L

* யாரையும் லவ் பண்ணலாம், அதுமட்டுமில்லாம லவ் பண்றதப்  பத்தி வீட்ல சொல்ற அளவுக்கு தைரியத்தையும் ஜீன்ஸ் கொடுக்கும். (ஜீன்ஸ் போடும் பெண்களின் பெற்றோர்கள் கொடுத்து வச்சவங்க)

ம்ம்...என்னத்த சொல்ல !! இப்படியெல்லாம் ஜீன்ஸ்ஸோட பெருமைகளைப்  பாயிண்ட் பாயிண்டா புட்டுப் புட்டு வச்சது சாட்சாத் அந்த கட்டுரையாசிரியரே தான். (அடைப்பு குறிக்குள் இருப்பது மட்டும் அடியேன்)

இவ்வளவையும் சொல்லிட்டு பாலியல் வன்முறை உடையால் ஏற்படுவது இல்லை என்று சில கருத்துக்களையம்  சொல்லி இருந்தாங்க. எனது கருத்தும் இதே தான் என்றாலும், ஜீன்ஸ் குறித்தான அவர்களின் எண்ணத்திற்கு சாதகமாகவே இக்கருத்தையும் சொன்னதாக எனக்கு தோன்றியது.

ஆகச் சிறந்த கட்டுரையின் இறுதி வரியில் 'சோர்வைத் தொடருவதும், புத்துணர்ச்சியுடன் ஓடத்தொடங்குவதும் நம் தேர்வில் இருக்கிறது தோழிகளே' என்று அந்த கட்டுரையை முடித்திருப்பதன் மூலம் ஜீன்ஸ் மட்டுமே தேர்ந்தெடுங்கள் என்று குறிப்பால் உணர்த்திவிட்டார். (ஒருவேளை ஜீன்ஸ் கடை ஏதும் புதுசா திறந்திருக்கிறாரா என்று தெரியவில்லை)J

பெண்ணியம் மட்டுமே பேசும் பெண்களே...

பூ, பொட்டு, புடவை, வளையல், கம்மல் இதெல்லாம் போட்டுக் கொள்வது பெண்ணடிமைத்தனம் என்றுச் சொல்லி இதை எல்லாம் தவிர்த்து ஜீன்ஸ் போட்டு இதுதான் பெண்ணியம் அப்படினு என்ன கர்மத்தையும் சொல்லிக்கோங்க...ஆனால்  நமது பாரம்பரியத்தை நமது அடையாளத்தை கேலிச்  செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். 

ஜீன்ஸ் என்பது மேல்நாட்டினர் உடை, அவர்கள் நாட்டின் குளிர்காலத்திற்கு ஏற்றாற்போல் வடிவமைத்திருக்கிறார்கள். அன்றில் இருந்து இன்று வரை ஒவ்வொன்றாக அவர்களை பின்பற்றி வருவது ஒன்று மட்டும் தான் நாகரீகம் என்று இருப்பவர்கள் இருந்துவிட்டு போங்கள், ஜனநாயக நாடு இது, ஆனால் நமது பாரம்பரிய உடையை அவமானப்படுத்துவது என்ற உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது ??!!

பெண்கள் என்றால் அவங்க ஓடணும் , பாடணும் , ஆடணும் என்று புதிதாக  ஒரு பிம்பத்தை பெண்ணுக்கு ஏற்படுத்தும் இது போன்ற முயற்சிகள் தேவையற்றது. ஒரு கட்டுரை நல்லதை விதைக்காவிட்டாலும் பரவாயில்லை அபத்தங்களைப்  பேசாமலாவது இருக்கலாம்.

நீங்கள் புதுமையானவர்கள் என்பதற்காக நம் பழமையைக்  குறைச் சொல்லாதீர்கள்...பலரும் பெரிதும் மதிக்கும் மேற்குலகமே இன்று நம்மை பார்த்து மாறிக் கொண்டிருக்கிறார்கள்...ஏன் நாமே இன்று இயற்கை விவசாயம், கம்பு சோளம், திணை, குதிரவாலி, சாமை என்று மாறிக் கொண்டிருக்கிறோமே...!

எந்த உடையாக இருந்தாலும் அதை அணிபவரின் அப்போதைய மனநிலையைப் பொறுத்தே அன்றைய அவரது செயல்பாடு இருக்கலாம். அதற்காக  உடை அணிந்ததும் வீரம் வரும் என்பது எல்லாம் மகா அபத்தம். ஒருவரின் கல்வி, அறிவு, திறமை இவை தராத தைரியத்தையா உடை கொடுத்துவிடும். அவயங்களை மிகவும் இறுக்கிப் பிடிக்காத நாகரீகமான எந்த உடையும் பெண்ணுக்கு கம்பீரத்தைக்  கொடுக்கும். அனைத்தையும் விட அவரவர் உடலுக்கு பொருத்தமான உடையை தேர்ந்தெடுத்து அணிவது மிக முக்கியம். ஜீன்ஸ், சுடி, சல்வார், புடவை எதாக இருந்தாலும் அணியும் விதத்தைப்  பொருத்தே பெண்ணுக்கு அழகையும் கம்பீரத்தையும் கொடுக்கும். நாம் பார்க்கும் வேலைக்கு ஏற்ப உடையை தேர்ந்தெடுத்து அணியலாம், உடலுக்கு சிறிதும் பொருந்தாத உடைகளை அணிந்தால் அதுவே கேலிக்கூத்தாகிவிடும், அது புடவையாக இருந்தாலுமே!

நவநாகரீக உடைகள் மட்டும்தான் பெண்ணுக்கு தைரியத்தைக்  கொடுக்கும் என்று குருட்டாம்போக்கில் எழுதப் படும் இது போன்ற கட்டுரைகள் உண்மையில் ஆபத்தானவை.

பெண்களின் சாதனை உடையால் மட்டுமே நிர்ணயிக்கப் படுவதில்லை  

புடவை கட்டத்தெரியாது (தெரியும்ன்றது வேற விஷயம்) என்று சொல்வதே 90களில் பெருமையாகத்  தெரிந்தது, ஆனால் நகரங்களில் இப்போது புடவையே தேவையில்லை என்று தூக்கி எறிவதைபோன்ற எழுத்துக்கள், பேச்சுகள் அதிகரித்து வருவதைப் போல இருக்கிறது. பொருளாதாரத் தேவைக்கென்று யாரையும் சார்ந்து நிற்காமல் சுயத்தொழில் மூலமாக உழைத்து தன் குடும்பத்தை உயர்த்தி உன்னத நிலைக்கு கொண்டுவந்த பல பெண்கள் இன்று நம் கண்முன்னே பெண்மையைப்  பெருமைப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கிராமங்களில் இன்று எந்த பெண்ணும் வருமானம் இல்லாமல் இருப்பதில்லை, விவசாயம் , பீடி , செங்கல் தயாரிப்பு போன்ற தொழில்கள் முதல் மகளிர் குழுக்கள் மூலம் லோன் பெற்று சுயத்தொழில் ஆரம்பித்து   அசத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பலரும் நவநாகரீக உடை அணிந்தவர்கள் அல்ல.

அதுவும் தவிர கட்டுரையில் குறிப்பிட்ட மாதிரி, புடவை கட்ட நேரமாகும் என்பது எல்லாம் ஒரு காரணமே இல்லை, இன்றைய பெண்கள் மேக்கப் என்ற பெயரில் முகத்திற்கு மட்டும் செலவு செய்யும் நேரம் குறைந்தபட்சம் ஒருமணிநேரம் (நீயா நானா ல இளம்பெண்கள்  சொன்ன ஸ்டேட்மென்ட்). முகத்துக்கு அவ்ளோ நேரம் செலவு பண்ற பெண்கள் புடவை கட்ட ஒரு பத்து நிமிஷம் செலவு செய்வதில் தப்பில்லை. 

புடவைக்கு ஆதரவாக என்பதற்காக இப்பதிவினை நான் எழுதவில்லை, புடவை பெண்ணடிமைத்தனத்தின் அடையாளம் என்பது போன்றுக்  குறிப்பிட்டு இருக்கும் இந்த கட்டுரையை குறித்த எனது கோபத்தை, ஆதங்கத்தை இங்கே வரிகளாக்கி இருக்கிறேன். அவ்வளவே! 

இறுதியாக 

ஜீன்ஸ் அணிவதால் உடல் ரீதியிலான பல பிரிச்னைகள் ஏற்படக்கூடும் என்பது  மருத்துவர்களின் கடுமையான  எச்சரிக்கை .  மக்கள் நலனில் அக்கறை இருக்கிறது என்பதை போன்று 'டாக்டர் விகடன்' வெளியிடும் விகடன் குழுமம் இது போன்றப்  படு அபத்தமான கட்டுரையை எப்படி பிரசுரித்தது என்று புரியவில்லை. இளைஞர்கள் பலர் விரும்பிப்  படிக்கும் பிரபலமான பத்திரிக்கையான விகடனின் இந்நிலை வருத்ததிற்குரியது.  

ஜீன்ஸ் அணிவதால் ஏற்படும் உடல் உபாதைகள் குறித்துத்  தெரிந்துக் கொள்ள இணையத்தில் ஏராளமான கட்டுரைகள் குவிந்துக்  கிடக்கின்றன.  படித்துப் பாருங்கள் . 

கட்டுரையாசிரியர் ப்ரியா தம்பி அவர்களே! 

உங்களுக்கு சரியென்றுப் படுவதை ஒட்டுமொத்த பெண்களின் கருத்தாக எழுதுவது எப்படி சரியாகும். ஜீன்ஸ் தைரியம் தரும் என்று எழுதி இளம் சமுதாயத்தைக்  குழப்பாதீர்கள். பெண்களின் ஆடை இன்னைக்கு கடும் விமர்சனத்துக்கும் விவாதத்திற்கு உள்ளாகிவிட்டது என்பதை மனதில் வைத்து அதீத அக்கறையுடன் எழுத வேண்டிய சூழலில் இருக்கிறோம்...உங்களை பலரும் வாசிக்கிறார்கள் என்று ஒரு சார்பாக மட்டும் தயவு செய்து இனியும் எழுதி விடாதீர்கள். மிக அருமையான ஆளுமை நீங்கள், வாய்ப்பை சரிவர பயன்படுத்திக் கொள்ளுங்கள். பெண்களைப்  பற்றி பேச நிறைய இருக்கிறது, எதுவும் பேசப்படாமல் போய்விடக் கூடாது ...தொடர்ந்து பேசுங்கள்...நாங்கள் பேசாத பேச்சையெல்லாம் ...! நன்றி தோழி.



பிரியங்களுடன் 

கௌசல்யா