மொட்டை மாடி தோட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மொட்டை மாடி தோட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூன் 13

'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2

வீட்டுத் தோட்டம் முதல் பாகத்திற்கு கருத்துக்கள் தெரிவித்த நட்புகளுக்கு நன்றி...மேலும் சிலவற்றை சிறிய அளவில் இங்கே விளக்கி இருக்கிறேன்...தொடரும் பதிவுகளில் ஒவ்வொன்றை குறித்தும் தனித் தனியாக பகிர்கிறேன்...

உருளை கிழங்கு

                                                              (photo courtesy - Siva)

உருளைகிழங்கை பாதியாக கட் பண்ணி, கட் செய்த பகுதியை மண்ணில் புதைத்து வைக்க வேண்டும்...ஓரளவு முளைவிட்ட கிழங்காக இருந்தால் நல்லது. இல்லைஎன்றாலும் பரவாயில்லை.நன்றாக விளைந்ததாக இருந்தா ஒகே.

சேப்பங்கிழங்கு



சேப்பங்கிழங்கை முழுசா அப்படியே ஊன்றி வைக்க வேண்டும். இதன் இலைகள் மிக பெரிதாக அகலமாக  பார்க்க ரொம்ப அழகாக இருக்கும்.

இந்த இலையை பொடியாக அரிந்து, புளியுடன் சேர்த்து  சமைத்து சாப்பிடலாம்.மூல நோய் உள்ளவர்களுக்கு நல்ல மருந்தாகும்.பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமடையும். வண்டு, பூரான் போன்ற விஷப் பூச்சிகள் கடித்த இடத்தில் இந்த இலையின் சாரை பூசினால் விஷம் நீங்கி வலி குறையும். கடைகளில் இலை(கீரை) கிடைக்காது என்பதால் அவசியம் வீட்டில் வளர்த்து பயன் பெறுங்கள்.

தக்காளி, மிளகாய், கத்தரி


நன்கு பழுத்த தக்காளியை எடுத்து பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் நன்கு தக்காளியை பிசைந்து விட வேண்டும்....விதைகள் தனியே பிரியும்...பின் நீரை வடித்து எடுத்து சிறிது மண் அல்லது சாம்பலுடன் சேர்த்து கலந்து பேப்பரில் காய வைத்துவிட வேண்டும்...

நன்கு முற்றிய கத்தரிக்காய்  வாங்கி விதைகளை பிரித்து சாம்பல்/மண் கலந்து காய வைத்து எடுத்துக்  கொள்ள வேண்டும்

பச்சை மிளகாய்க்கு வத்தலில் இருக்கும் விதைகளை உதிர்த்து எடுத்துக்கொள்ளலாம்.

விதைக்கும் முறை 

விதைகள் நன்கு காய்ந்ததும் விதைக்க வேண்டியதுதான்...காய்ந்த விதைகளை முதலில் மொத்தமாக ஒரு தொட்டியில் மண்ணை லேசாக கிளறி விட்டு தூவி தண்ணீர் ஊற்றவும்...செடி முளைத்து அரை அடி உயரம்  வந்ததும், வேருடன் பிடுங்கி தொட்டி/சாக்குக்கு ஒன்று அல்லது இரண்டாக  நட்டு விட வேண்டும்...


தக்காளி காய்க்கத்  தொடங்கியதும் கனம் தாங்காமல் செடி ஒடிய கூடும் என்பதால் செடி வைக்கும் போதே அதன் அருகில் ஒரு சிறிய கம்பை நட்டு விடுங்கள், காய்க்கும் சமயம் கம்புடன் இணைத்து கட்டி விட வேண்டும்.

பழுத்த பாகற்காய் விதைகளை எடுத்து நன்கு காய வைத்துக்கொள்ளவும். ஒரு தொட்டியில் ஆறு விதைகள் வரை ஊன்றலாம். முக்கியமாக இது போன்ற கொடி வகைகளுக்கு பந்தல் தேவைப்படும். அதுக்கும் சிம்பிளா ஒரு வழி இருக்கு. 

பந்தல் முறை  

கிணற்றில் தண்ணீர் இறைக்கும் கயிறு கடைகளில் கிடைக்கும். அதை வாங்கவும்...இரண்டு மூங்கில் கம்புகளை எடுத்து மொட்டை மாடி கைப்பிடி சுவரின் மேல் சாய்த்தது போல் இடைவெளி(ஒரு ஏழு அடி) விட்டு தனி தனியாக வைக்க வேண்டும்...கயிறை எடுத்து இரண்டு கம்புகளையும் இணைக்கும் விதமாய் முதலில் அகலவாக்கில் 10 இன்ச் இடைவெளியில் வரிசையாக கம்புகளை சுற்றி கட்டிக்  கொண்டே வர வேண்டும்.  பின் அதே மாதிரி நீள வாக்கில் கட்ட வேண்டும்...இப்போது கட்டங்கட்டமான அமைப்பில் பந்தல் தயாராகி இருக்கும். பாகற்காய் கொடியை இதன் மேல் எடுத்து படர விட்டுட வேண்டியது தான், முடிந்தது வேலை.

கயிறுக்கு  பதிலாக கட்டு கம்பிகளையும் உபயோகப் படுத்தலாம்.சிறு சிறு கம்புகள் இருந்தால் குறுக்கும் நெடுக்குமாக வைத்து கட்டியும் பந்தல் போடலாம். வீட்டில் கிடைப்பதை வச்சு உங்க கற்பனையை கொஞ்சம் சேர்த்து கோங்க...அவ்வளவுதான் !

மற்றொரு பந்தல் முறை 

நாலு சிமென்ட் சாக்கில் மணலை நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை  ஆழமாக நட்டு வைத்து மூலைக்கு ஒன்றாக நாலு சாக்குகளையும் வைத்து கயிறு/கம்பிகளை கட்டியும் பந்தல் போடலாம்...இதில் கூடுதல் வசதி என்னனா இந்த பந்தலின் கீழ் விழும் நிழலில் பிற தொட்டி செடிகளை வைத்து விடலாம். மொட்டை மாடி முழு அளவிற்கும்  கூட இப்படி பந்தல் போட்டு பீர்கன் , பாகை, புடலை, சுரைக்காய் போன்றவற்றை படர விடலாம்...மாடி முழுமையும் குளிர்ச்சியாகவும்  இருக்கும்.

 உரம்  

இரண்டு பெரிய பிளாஸ்டிக் பக்கெட் அல்லது பிளாஸ்டிக் சாக்கில் சமையலறை கழிவுகள்/காய்ந்த இலைகள் போன்றவற்றை சேகரித்து போட்டு கொண்டே வரவேண்டும்...ஒன்று நிரம்பியதும் மற்றொன்றில் போட்டு வர வேண்டும்...முதலில் போட்டு வைத்தது கொஞ்ச நாளில் மக்கியதும் அதை எடுத்து, செடிகள் இருக்கும் தொட்டியின் மணலை லேசாக கிளறி மக்கிய காய்கறி கழிவை கொஞ்சம் அள்ளி போடலாம்...மீன்,மாமிசம் கழுவிய தண்ணீரை ஒரு நாள் முழுதும் அப்படியே வைத்திருந்து மறுநாள் செடிக்கு விடலாம்.நன்கு வளரும். காய் கழுவிய தண்ணீர், அரிசி கழுவிய தண்ணீர் எதையும் வீணா சாக்கடையில்  கொட்டாமல் , செடிகளுக்கு ஊற்றுங்கள்... 

பாத்ரூம் கழிவு நீர், துணி துவைக்கும் தண்ணீரையும் சுத்திகரித்து தொட்டி செடிகளுக்கு ஊற்றலாம்...(நேரடியாக ஊற்றக்கூடாது) சுத்திகரித்துனு சொன்னதும் என்னவோ பெரிய மேட்டர் போலன்னு நினைச்சுடாதிங்க...ரொம்ப சிம்பிள் தான்.

கழிவு நீரை சுத்திகரித்தல்

சோப்பு தண்ணீர் /கழிவு நீரில் சோடியம் கார்பனேட், சோடியம் பை கார்பனேட், ஆசிட் சிலரி, டிரை சோடியம் பாஸ்பேட், யூரியா, டினோபால் போன்ற வேதிப் பொருட்கள் உள்ளன...இதை அப்படியே செடிகளுக்கு விடுவது நல்லதல்ல...எனவே இதை ரொம்ப எளிதான வழியில் சுத்திகரிக்கலாம்...

சொந்த வீட்டில் வசிப்பவர்கள், கழிவு நீர் வெளியேறும் இடத்தில் 2 அடி  நீள அகலத்துக்கு ஒரு  தொட்டி மாதிரி கட்டி அதில் மண், உடைத்த செங்கல் துண்டுகள், கருங்கல் ஜல்லி போன்றவற்றை போட்டு கல்வாழை, சேப்பங்கிழங்கு போன்றவற்றை நட்டு வைக்கவேண்டும்...விரைவில் வளர்ந்து  விடும்...கழிவு நீரில் இருக்கும் வேதி பொருட்களை உறிஞ்சிக்கொண்டு சுத்தமான தண்ணீரை வெளியேற்றிவிடும்...நீர் வெளியேற ஒரு சிறுகுழாய்யை தொட்டியில் வைத்துவிட்டால் போதும்...கழிவு நீர் தொட்டிலில் விழுந்த சில நிமிடங்களில் சுத்திகரிக்கப்பட்ட நீர் வெளியே வர தொடங்கும்...சிறு குழாய் வழியாக வரும் நீரை மற்றொரு தொட்டி அல்லது பிளாஸ்டிக் வாளியில் மொத்தமாக சேகரித்து செடிகளுக்கு ஊற்றலாம்... 

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் ஒரு சிமென்ட் தொட்டியை கடையில் வாங்கி அதன் அடியில் துளையிட்டு சிறு குழாயை செருக வேண்டும். அவ்வளவு தான் . மற்றபடி மேலே கூறிய அதே மெதட் தான். கருங்கல்  ஜல்லியில் உருவாகும் ஒருவித பாசியில் உள்ள பாக்டீரியாக்கள், குளியல் அறை நீரில் கலந்துள்ள பாஸ்பேட், சோடியம் என பல உப்புகளையும் தின்றுவிடும்.  சுத்திகரிக்கப்பட்ட இந்த நீரில் காய்கறிகள் நன்கு வளரும்.

ஸ்பெஷல் கேர் 

விதைக்காக கடைகளை தேடி  வருந்துபவர்களுக்கும் /தூரமாக இருக்கிறது யார் போய் வாங்குறது என்பவர்களுக்கும் தான்   இந்த குறிப்பிட்ட வகைகளை மட்டும் கூறினேன்...மற்றவர்கள் கடைகளில் வாங்கி பயிரிடலாம்.

தரையில் கனம் கூடிய பிளாஸ்டிக் சாக்குகளை(தார்பாலின் சீட்) விரித்து நாலு பக்கமும் செங்கல்களை வரிசையாக அடுக்கி வைத்தபின் மண் போட்டு கீரை விதைகளை பரந்த நிலையில் விதைக்கலாம்...தரையில் நீர் இறங்கி  விடும் என்பது போன்ற அச்சம் தேவையில்லை, ஒன்றும் ஆகாது...இப்படி செய்வதால் கீழே வீட்டிற்கு குளிர்ச்சி இலவசம் என்பது ப்ளஸ்  !!

* தினமும் செடிகளுடன் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும், அதனுடன் பேசவும் , தடவி கொடுக்கவும் என்று அதையும் ஒரு உயிராக மதித்து பழகி வந்தோம் என்றால் நிச்சயம் நல்ல வளர்ச்சி இருக்கும்...

* பெரிய விதைகளை ஒருநாள் முன்னதாக ஊற வைக்க வேண்டும்...சாணி  கிடைத்தால் அதை கரைத்து அதில் ஊறவைக்கலாம், இல்லையென்றால் சாதாரண தண்ணீர் போதும்.

* வாரத்துக்கு ஒரு முறை சுற்றி இருக்கும் மண்ணை மட்டும் லேசாக கிளறி விடுங்கள்.

*மண்புழு உரம் ஆன்லைனில் கிடைக்கும். ஒரு செடிக்கு இரண்டு ஸ்பூன் என்றளவில் போட்டால் போதும். அந்த உரத்தில் மண்புழு முட்டைகள் இருக்கும் மண்ணில் போட்டதும் கொஞ்சநாளில் புழுக்களாக மாறி மண்ணிற்கு மேலும் சத்துக்களை கொடுக்கும் . 

அக்கறையும், கவனமும் இருந்தால் ரசாயன வேதி உரம் இல்லாத , பூச்சி மருந்து போடாத காய்கறிகளை நம் வீட்டில் இருந்தே பெற முடியும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சில மெனக்கிடல்கள் அவசியமாகிறது.

நீங்க சொல்றது எல்லாம் சரிதாங்க, ஒரு பத்துநாள் ஊருக்கு போய்ட்டோம்னா செடிகள் நெலம அதோ கதிதான் , அதுக்கு என்ன சொல்ல போறீங்கன்னு கேக்குறீங்களா? கவலையே படாதிங்க அதுக்கும் கைவசம் சில செட் அப் வேலைகள் இருக்கு !! அது என்னனு அடுத்த பாகத்தில் சொல்றேன்...சரிதானா ?! அதுவரைக்கும் வெயிட் பண்ணுங்க... 

உற்சாகமான வீட்டுத்  தோட்டத்திற்கு என் வாழ்த்துகள்...கலக்குங்க !!
                                                               * * * * *
அப்புறம்...

வீட்டுத் தோட்டத்தை ரொம்ப ஆசையா பார்த்துப்  பார்த்து செஞ்சிட்டு வர்ற இருவரின் பதிவை அவசியம் படிங்க...இதுக்கு முந்திய பதிவிற்கு பின்னூட்டம் போட்டதின் மூலமாக அந்த இரு தளங்களை காணக்  கூடிய நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்தது...

* துளசி மேடம் தளம் - http://thulasidhalam.blogspot.co.nz/2012/05/yam.html

* சிவா என்பவரின் தளம் - http://thooddam.blogspot.in

நீங்களும் சென்று பாருங்க...மறக்காதிங்க பிளீஸ் !!

                                                                   * * * * *


Happy Gardening !!

பிரியங்களுடன் 
உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா 

படங்கள் - நன்றி கூகுள் 


புத்தகப் பரிந்துரை : Your One Stop Guide to Growing Plants at Home 

திங்கள், ஜூன் 11

'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...!! அறிமுகம் - 1

கொஞ்சம் கேளுங்க... 

பதிவுக்கு உள்ள போறதுக்கு முன்னாடி உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்...தோட்டம் போடுவதில் ஆர்வம் இல்லாதவர்களும் இனி கொஞ்சம் நேரம் ஒதுக்கணும் என்பதே இந்த பதிவின் நோக்கம்...ஆர்வம் இல்லைனாலும் எல்லோருக்கும் இது அவசியம் என்பது காலத்தின் கட்டாயம். 'மண்ணுல கை வச்சிட்டு, தினம் தண்ணி ஊத்திட்டு இது பெரிய பிராசஸ் நமக்கு ஒத்து வராது'னு சொல்றவங்க முதலில் கட்டுரையைப்  படிங்க...ஏன்னா முக்கியமா இது உங்களுக்காகவே...!!


அனைவரின் வீட்டிலும் எது இருக்கோ இல்லையோ கண்டிப்பா 'டென்ஷன்' இருக்கும். சின்ன பையன் கூட "போம்மா நானே டென்ஷன்ல இருக்குறேன், நீங்க வேற அதச்  செய் இதச்  செய்னு சொல்லிட்டு " இப்படி யாரைக்  கேட்டாலும், யார்கிட்ட பேசினாலும் இந்த டென்ஷன் என்ற வார்த்தை சொல்லாத ஆள் இல்லை...காரணம் இன்றைய பரபரப்பான சூழல்...!! இப்படி எல்லோருமே எதையோ நோக்கி ஓடிக்கிட்டே இருந்தா உங்களை யார் கவனிக்கிறது...உடலையும் மனதையும் ஒரு சேர மகிழ்விக்கிற, உற்சாக படுத்துற, ஆரோக்கியம் கொடுக்கிற ஒண்ணு  இருக்குனா அது தோட்டம் போடுவதுதான்...காய்கறிகள், பூக்களைப்  பறிக்கும் போது  நம் கை வழியே கடத்தப்படும் உற்சாகம் மனதை சென்றடைவதை அனுபவத்தில் உணரமுடியும்...!!

ரசாயன உரங்கள் போட்டு வளர்க்கப்படும் காய்கறிகளில் சுவையும் இல்லை சத்தும் இல்லை...நன்கு கழுவிக்  சமைங்க அப்டின்னு சொல்றபோதே இதுல ஏதும் விஷத்தன்மை இருக்குமோனு பயமா இருக்கு !?

சென்னை உட்பட பல ஊர்களில்  முழுவதும் இயற்கை உரங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகள் என தனி கடைகள் வந்துவிட்டன.  ஆனால் எல்லோராலும் அங்கே சென்று வாங்க இயலாது. 

எதுக்கு  தயக்கம்?!

'நீங்க சொல்றது எல்லாம் சரிதான்,ஆனா எங்க வீட்ல இடம் இல்லைங்க' என சாமார்த்தியமா தப்பிக்க கூடாது...தூங்க, சமைக்க, டிவி பார்க்க, அரட்டை அடிக்க எல்லாம் இடம் இருக்குதுல அது மாதிரி இதுக்கும்  ஒரு இடத்தை ஒதுக்குங்க...மாடி,பால்கனி,தாழ்வாரம், திண்ணை, வெயில்படுற ஜன்னல் திண்டு இப்படி எவ்வளவோ இடம் இருக்கே...!! வெயில் படுற மாதிரி எந்த இடம் இருந்தாலும் தோட்டம் போடலாம்...அங்கேயும் இடபற்றாக்குறை இருந்தாலும் கவலை இல்லை, அடுக்கு முறைல செடி வளர்க்கலாம்...! நீங்க மனசு வச்சு வேலைல இறங்குங்க முதல்ல, அப்புறம் பாருங்க இவ்ளோ இடம் நம்ம வீட்ல இருக்குதான்னு ஆச்சர்யமா இருக்கும்...?!!

ஓகே...! ஒருவழியா இடம் ரெடி பண்ணிடலாம்னு நம்பிக்கை வந்துடுச்சா? அடுத்தது விதை, எங்க வாங்க, மண், உரம், இதுக்கு என்ன பண்ணனு ஒரு தயக்கம் வருதா? தயக்கம் ஏதும் தேவையில்லை...உங்களுக்காகவே சில சுலபமான வழிமுறைகள் இருக்கு...கொஞ்சம் ஆர்வம், உழைப்பு இருந்தா போதும்...தண்ணி வசதி இல்லைன்னு சொல்றீங்களா...அதுக்கும் பல ஐடியா கை வசம் இருக்கு...தொடர்ந்து படிங்க...அதை பத்தியும் சொல்றேன்...நம்ம உடல் ஆரோக்கியம் பத்திய விசயத்துல இனியும் தயக்கம் காட்டலாமா?! ஏதாவது சாக்கு போக்கு சொல்லிச்  சமாளிக்காம தைரியமா காரியத்தில் இறங்குங்க...கலக்கிடலாம்...!!

எளிய முறையில் வீட்டிலேயே காய்கறி உற்பத்தி
ஆரம்பத்துல தோட்டக்  கலைல நமக்கு அனுபவம் வர்ற வரை வீட்ல கிடைக்கிற விதைகளை வைத்தே பயிரிடலாம்...ஓரளவு நம்மாலும் பெரிய அளவில் காய்கறி உற்பத்திப்  பண்ண முடியும்னு நம்பிக்கை வந்த பிறகு வெளி கடைகளில் விதைகள் வாங்கி கொள்ளலாம். நம் சமையல் அறையில்  இருப்பதை வைத்து முதலில் வேலையை ஆரம்பிங்க...உங்க வீட்டை பசுமை வீடா மாத்தாம உங்களை விடுறதா இல்ல... 


அடடா பேசிட்டே இருக்கேனே, சரி சரி வாங்க வாங்க... ஏற்கனவே நாம ரொம்ப லேட்...இனியும் தாமதிக்காம வேலையில இறங்குவோம்...காய்கறிகளை பயிரிடுவோம்...சத்தான உணவை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோம்...! ஒகே தயாரா...? அப்டியே படிக்க படிக்க கற்பனை பண்ணி மனதில் பதிய வச்சுகோங்க...அப்பத்தான் உடனே காரியத்தில் இறங்கக்கூடிய ஒரு உத்வேகம் வரும்...

அடிப்படை தேவைகள் 

* மண் அல்லது சிமென்ட் தொட்டி
* பிளாஸ்டிக் அரிசி சாக்
* பழைய பிளாஸ்டிக் வாளி (அடியில் சிறுதுளை போடவும்)
* பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் (பாதிக்கு மேல் கட் பண்ணியது)   

20 லிட்டர் பழைய மினரல் வாட்டர் கேன் பழையபொருட்கள் கடையில் குறைந்த விலைக்கு கிடைக்கும், கிடைத்தால் அதையும் யூஸ் பண்ணிக்கலாம். (HORIZONTAL OR VERTICAL ஆக எப்படியும் கட் பண்ணிக்கலாம் உங்க விருப்பம்) 

ஓகே!  இதில் எவையெல்லாம் கை வசம் இருக்கிறதோ அவற்றை எடுத்து கொள்ளுங்கள். (எந்த பொருளையும் காய்கறி பயிரிட ஏற்றதாக மாற்றுவது உங்க கிரியேட்டிவிட்டியை பொறுத்தது...)வாங்கி வந்த மண் தொட்டியை ஒருநாள் முழுவதும் நீர் தெளித்து ஊற வையுங்கள். பிளாஸ்டிக் அரிசி சாக்கை வெளிப்புறமாக சுருட்டி அல்லது பாதி அளவாக மடித்து கொள்ளுங்க. 

செடிகள் வளர்க்க செம்மண் சிறந்தது என்றாலுமே எல்லா இடத்திலும் அந்த மண் கிடைக்காது. அதனால இருக்கிற மண்ணை வளப்படுத்த சில முறைகளை கையாண்டால் போதும்.  முதலில் மண்ணை மொத்தமாக தரையில் கொட்டி அதில் உள்ள கள், குச்சிகளை எடுத்து போட்டுவிட்டு அதனுடன் காய்ந்த சாணம் கிடைத்தால் தூள் செய்து கலந்து  வைத்து கொள்ளுங்கள்.(இல்லை என்றாலும் பரவாயில்லை), மணல் ஒரு பங்கு சேர்த்து கொள்ளுங்கள்.

காய்ந்த அல்லது பச்சை இலைகள் (வேப்பமர இலைகள் என்றால் மிகவும் நல்லது) சேகரித்து சாக்/தொட்டியின் பாதி அளவு வரை நிரப்பி பிறகு மண்ணைப்  போட்டு நிரப்புங்கள்...இலைகள்  மக்கி உரமாகி விடும்...அதிகபடியான நீர் வெளியேற, அடிப்புறம் சிறுதுளை இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்...வேப்பங்காய்கள், கொட்டைகள் கிடைத்தால் அதை தூள் செய்து போடலாம். மிக சிறந்த உரம் இது. பூச்சி கொல்லியும் கூட !

தக்காளி, சின்ன வெங்காயம் , கத்தரி, பாகற்காய், புதினா, கீரை , கொத்தமல்லி, பச்சை மிளகாய் , உருளைகிழங்கு ,சேப்பங்கிழங்கு இவைகளுக்கு தேவையான விதை என்று வேறு எங்கும்  தேடிபோக வேண்டாம் என்பது ஒரு வசதி.

ஒவ்வொன்றையையும் தனி தனியாக பார்க்கலாம்...

புதினா,கீரை

புதினா இலைகளை ஆய்ந்த பின் இருக்கும் தண்டுகள், கீரைகளில் பொன்னாங்கண்ணி தண்டுகளை சேகரித்து தொட்டி மண்ணில் சிறிது இடைவெளி விட்டு ஆழ ஊன்றி விடுங்கள் (2 இஞ்ச் மண்ணின் உள்ளே போனா போதும்), பின் தண்ணீர் தெளித்து விடுங்கள்...வெயில் அதிகம் இருந்தால் துளிர் வரும் வரை ஒரு நாளுக்கு இரண்டு முறை நீர் தெளிக்க வேண்டும். பின் ஒருவேளை ஊற்றினால் போதும்.   

கொத்தமல்லி

கடையில் வாங்கும் போது வேருடன் இருந்தால் கட் பண்ணி சமையலுக்கு எடுத்தது போக வேர் பகுதியை மண்ணில் அப்படியே புதைத்து விடலாம். தண்டுக்கீரை(முளைக்கீரை) பொதுவாக வேருடன் தான் விற்பார்கள் என்பதால் அதையும் இந்த முறையில் வளர்க்கலாம். முழு மல்லி(தனியா) விதையை இரண்டாக பிரித்து தான் விதைக்கணும்...மண்ணில் தூவி மண்ணோடு நன்கு கலந்து விடவேண்டும்...

சின்ன வெங்காயம்

வெங்காயத்தை தனி தனியாக பிரித்து மண்ணில் தலை கீழாக ஊன்ற வேண்டும்...மண்ணிற்கு  மேல் தெரிய கூடாது...வளர வளர பார்க்க அழகாக இருக்கும்...வெங்காய தாள் பழுத்து வாடுவதை வைத்து வெங்காயம் விளைந்துவிட்டதை தெரிந்து கொள்ளலாம். (அதுக்காக சரியா தண்ணீர் ஊத்தாம வாடி போனதை வச்சு வெங்காயம் விளைஞ்சிடுச்சுனு முடிவு பண்ணிக்க படாது) சில வெங்காய செடிகளை பாதி விளைச்சலின் போதே வேரோடு பிடுங்கி நன்கு அலசி சுத்தபடுத்தி தாளோட(spring onion) பொடியாக அரிஞ்சி பொரியல் செய்து சாப்பிடலாம்...உடம்பிற்கு அவ்வளவு நல்லது...

ஓகே...இன்னைக்கு இவ்வளவு போதும்...

காலை அல்லது மாலையில் ஒரு அரை மணி நேரம் இதற்காக செலவு செய்தால் போதும்... மனதுக்கும் உடலுக்கும் சிறந்த பயிற்சி இதை விட வேறு என்ன இருக்கிறது...?!

உற்சாகமாக ஈடுபடுங்கள்... 

சந்தோசமான  வீட்டுத் தோட்டத்துக்கு என் வாழ்த்துக்கள்...

உருளை கிழங்கு நம்ம வீட்லையேவா ?? எப்படி ??  அடுத்த பதிவில் பார்த்துடுவோம்...!


பின் குறிப்பு 

தோழிகள் சிலர் என்னிடம் 'எங்களுக்கும் வீட்ல விளையவச்சு அதைப்  பறிச்சு சமைக்கணும்னு தான் ஆசை , ஆனா அந்த உரம், இந்த மண் போடணும் அப்டி இப்படினு பெரிசா சொல்றாங்க...ஈசியான வேலை மாதிரி சொல்லி தந்தா நல்லா இருக்கும்' என கேட்டுகொண்டதின் காரணமாக இந்த பதிவை எளிமையாக  எழுதி இருக்கிறேன்...படித்துவிட்டு சந்தேகம் ஏதும் இருப்பின் கேட்கவும்...காத்திருக்கிறேன். நன்றி.

பிரியங்களுடன்
கௌசல்யா 

படங்கள்  - நன்றி கூகுள்