கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், பிப்ரவரி 17

மாணவர்களை தரம் பிரிக்கும் தமிழக பள்ளிக் கல்வித்துறை...??!



குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற   கனவுகளுடன் தேடித் தேடி பள்ளிகளில் சேர்த்தால் மட்டும் போதாது  அங்கே நமது  குழந்தைகளுக்கு உளவியல் பிரச்சனைகள் ஏதும் ஏற்படுகிறதா எனவும் கண்காணிப்பதும் இன்றைக்கு அவசியமாகிவிட்டது. 

எனது மகன்  படிக்கும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பிளஸ் 2 படிக்கும் மாணவர்களில் டாப்பர்ஸ்(Toppers), ஸ்லோலேனர்ஸ்(slow learners) என்ற பிரிவுகள்  உண்டாம். அதாவது  மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை தரம் பிரிக்கிறார்கள். பாடங்கள் அனைத்தும் நடத்தி முடித்திவிட்ட நிலையில் ஸ்லோலேனர்ஸ் தினமும் பள்ளிக்கு சென்று தனியாக படிக்க வைக்கப் படுகிறார்கள். டாப்பர்ஸ்(முதல் நிலை மாணவர்கள்) தேர்வுகளின் போது மட்டும் வகுப்பிற்கு செல்கிறார்கள், தவிர எப்போது வேண்டுமானாலும் வரலாம் போகலாம் என்ற ஸ்பெஷல் சுதந்திரம் உண்டு. பாடங்கள்  குறித்த சந்தேகங்களை கேட்டு தெளிவு படுத்திக் கொள்ளவென்று தனி சலுகை வேறு .

இந்த முறை கீழ் சாதி மேல் சாதி என்ற பிரிவினைக்கு சிறிதும் குறைந்ததில்லை என்றே எனக்கு தோன்றுகிறது. ஸ்லோலேனர்ஸ் என்பவர்கள் பிறரின் பார்வையில் படிக்காத முட்டாள்கள் எதற்கு லாயக்கேற்றவர்கள்..  இது அவர்களின் மனதில் எத்தகைய எதிர்மறை எண்ணங்களை எல்லாம் ஏற்படுத்தும் என்று சிறிது சிந்தித்துப் பார்த்தால் புரியும். ஆசிரியர் அடித்தால் உடனே பள்ளிக்கு சென்று சண்டை போடுவதில் காட்டும் வேகத்தை பெற்றோர்கள் இதை குறித்தும் காட்டவேண்டும். அடிபட்ட புண் ஆறிவிடும். ஆனால் மனதில் ஏற்பட்ட காயம் ??! அவர்களின் எதிர்காலத்தை முடக்கிவிடும் செயல் இது.

எல்லா பெற்றோர்களுக்கும் இதைப் பற்றி தெரியுமா என தெரியவில்லை தெரிந்தாலும் வருத்தப்பட இதில் என்ன இருக்கிறது, நல்லதுதானே அப்படியாவது படிப்பார்களே என்ற எண்ணம் இருந்தால் ஸ்லோலேனர்ஸ் லிஸ்டில் இருக்கும் ஒரு மாணவனை அழைத்து சாதாரணமாக விசாரித்துப் பாருங்கள், அந்த எண்ணத்தை உடனடியாக மாற்றிக் கொள்வீர்கள்,

எனது மகனின் நண்பனிடம் இது பற்றி விசாரித்தேன், அவன் சொன்னதில் இருந்து ...

* முதல்நிலை மாணவர்களிடம் நகைச்சுவையாக பேசினாலும் நோஸ்கட் பண்ணுவார்கள். ரொம்ப கஷ்டமாக இருக்கும்.  படிப்பின் மீது இருந்த கொஞ்ச ஆர்வமும் குறைந்துவிட்டது.

* ஆசிரியரின் 'என் தலையெழுத்து முட்டாள் பசங்க உங்களை வச்சு மேய்க்கணும்' என்ற  புலம்பலை அடிக்கடி கேட்க நேரும்.

* பள்ளிகளுக்கிடையே நடைபெறும் district level , state level விளையாட்டுப் போட்டிகளுக்கு Toppers மட்டுமே அனுப்பப்படுவார்களாம். (இந்த மாணவன் ஒரு foot boll player) திறமை இருந்தும் ஸ்லோலேனர்ஸ் விளையாட்டில் தவிர்க்கப் படுகிறார்கள்.

* சாதாரண குறும்புகளும் ஸ்லோலேனர்ஸ் செய்யும் போது பெரிதுப் படுத்தி பார்க்கப் படுகின்றன.

* மாணவர்களிடையே நட்பு இருக்கும் ஆனால் ஒற்றுமை இருக்காது !!

* பள்ளிக்குள்  உள்ளே ஏற்படும் வெறுப்பு வெளியிடங்களிலும் எதிரொலிக்கும்.

ஸ்லோலேனர்ஸ் என்ற பதம் மாணவர்களின் மனதை புண்படுத்தும் என்பதை உணர்ந்த ஆசிரியை ஒருவர் late blumers என்று மாற்றினார் .

என்றும் கூறினான்.

மாணவர்களிடம் பாகுபாடு காட்டும் போது அவர்களுக்குள் போட்டி பொறாமைகள் ஏற்படுகின்றன. ஒரு கட்டத்தில் இவை கைகலப்புக்கு கொண்டு செல்லும். இளவயது குற்றங்களின் காரணம் இன்றைய பள்ளிகளில் அல்லவா இருக்கிறது என்றெல்லாம் எண்ணி தனியார் பள்ளிகளில் நடக்கும் இந்த கொடுமையை  அரசு கவனிக்காதா தட்டி கேட்காதா என் மனம்  புழுங்கினேன்.

ஆனால்,  தற்போது தமிழக பள்ளி கல்வித்துறையே தரம் பிரிக்கச்சொல்லி  அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது என்பதை செய்திகளின் மூலம் அறிந்து அதிர்ந்தே விட்டேன்.

அரசு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் பள்ளிக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் உள்ள சில மட்டும் உங்கள் பார்வைக்கு...

* அரையாண்டு தேர்வு முடிவின் அடிப்படையில் முதல் இடை கடை என்று மாணவர்களை பிரிக்க வேண்டும்.

* கடைநிலை மாணவர்கள் சிறிதும் சிந்தனையில்லாத பரிதாபத்திற்குரியவர்கள்.

* இதில் நம்பர் 1 & 2 பிரிவுகள் டிவி பக்கமே திரும்ப கூடாது. அதே தரத்தில் உள்ள பிற மாணவர்களுடன்  மட்டுமே பேச வேண்டும். கடை நிலை மாணவர்களுடன் பிற மாணவர்கள் பேசக் கூடாது.

* பத்தாம் வகுப்பு மாணவர்கள் 10 நிமிடங்களுக்குள் மதிய உணவை உண்டு முடித்துவிட வேண்டும். உடனே படிக்க ஆரம்பிக்க வேண்டும்.

இந்த ரீதியில் தொடரும் அரசின் விளக்கெண்ணை அறிக்கையை இதுக்கு மேல் சொல்லவே வெறுப்பாக இருக்கிறது. 100/100 தேர்ச்சி விகிதம் இருக்கவேண்டுமென்றால் இதையெல்லாம் கண்டிப்பாக செய்யுங்கள் என்று ஆசிரியர்களுக்கு கட்டளை இட்டிருக்கிறது.

மாணவர்களுக்கு நல்லது செய்வதாக எண்ணிக் கொண்டு விடப் பட்ட இந்த அறிக்கை முட்டாள்தனத்தின் உச்சம். பெருந்தகை காமராஜர் அவர்களின் வரலாறு தெரியாத இது போன்றவர்கள் கல்வித்துறையில் இருப்பதே சாபக்கேடு.  விஞ்ஞானிகள் முதல் விளையாட்டு வீரர்கள் வரை பலர் பள்ளி இறுதியை கூட முடிக்காமல் வாழ்க்கையில் சாதித்ததை கல்வித்துறைக்கு யார் எடுத்துச் சொல்வது.

மதிப்பெண்களை வைத்து மாணவர்களின் தரத்தை நிர்ணயிப்பதும்  அதையும் பள்ளிக் கல்வித்துறையே வழிமொழிவதும் இங்கே மட்டும்தான் நடக்கும் . ஒரு வகுப்பில் படிக்கும் மாணவர்களை நீ அறிவாளி நீ முட்டாள் நீ எதுக்கும் லாயக்கற்றவன் என மற்றவர்கள் முன்னாள் சுட்டிக்காட்டி பிரித்து வைத்த பின்னர் அவர்களுக்குள் ஒற்றுமை என்பது எப்படி இருக்கும். அரையாண்டுத் தேர்வு முடிவுக்கு பிறகு நேற்று வரை நண்பனாக தோளில் கைப் போட்டுப் பேசிக் கொண்டிருந்தவனிடம் இனி அவனிடம் பேசாதே என்பது எத்தகைய மன உளைச்சலை ஏற்படுத்தும். அதிர்ச்சி அவமானம் தாழ்வு மனப்பான்மை அனைத்தும் ஒரு சேர மனதை தாக்க வெளியே சிரித்து உள்ளே அழும்  நிலை பரிதாபம். தனது நண்பன் தன்னைவிட இரண்டு மார்க் அதிகமாக எடுத்தாலே முகத்தை தூக்கி வைத்துக் கொள்ளும் டீன் ஏஜ் பருவம் இது.  அதும் தவிர பெற்றோர்களே நீ வீக் என்று பள்ளியே சொல்லிடுச்சே என குத்தி காட்டும் விபரீதமும் இருக்கிறது.

நன்றாக படிப்பவர்களுடன் பிற மாணவர்களும் கலந்து அமர்ந்து படிக்கும் முந்தைய குரூப் ஸ்டெடி முறை நல்லதொரு முறை. மாறாக     சமத்துவத்தை சொல்லிக் கொடுக்க வேண்டிய பள்ளிகளை மாணவர்களை தரம் பிரிக்கச்  சொல்லும் பள்ளி கல்வித்துறையின் செயல்  கடும் கண்டனத்திற்குரியது.  (இன்று மதிப்பெண்கள் அடிப்படையில் தரம் பிரிப்பார்கள் நாளை சாதி, மத அடிப்படையில் பிரித்தாளும் பிரிப்பார்கள்)



Slow learners  மன உளைச்சலை ஏற்படுத்தும் இம்முறை Toppers மாணவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கும் என்பதே உண்மை.  தரம் பிரிப்பதை பற்றி பிளஸ் 2 படிக்கும் என் மகனிடம் கேட்டேன்,

'Toppers க்கு அதிக  பிரசர் இருக்கும். பள்ளியின் கெளரவமே உன் கைல தான் இருக்குன்ற மாதிரி ஓவர் பில்டப், டார்சர் எல்லாம் இருக்கும். ஒட்டுமொத்த ஆசிரியர்கள், பள்ளியின் கவனமும் நம்ம மேலேயே  இருந்தால் சுதந்திரமாக இயல்பாக நடக்க முடியாது.  இப்போ என்னை எடுத்துக்கோங்க இந்த இரண்டு category  பத்தியும் நான் கேர் பண்ணமாட்டேன். நான் free bird, படிக்கிறதும் படிக்காததும் என் இஷ்டம், யாரும் வலுகட்டாயமா என்மேல பிரஷரை ஏத்த முடியாது, சோ சந்தோசமா இருக்கிறேன்' என்று கூறினான்.  இந்த மனப்பக்குவம் எல்லா மாணவர்களுக்கும் இருக்குமா என்று சொல்ல முடியாது.

 குழந்தைகளுக்கு இந்த மனப்பக்குவத்தை ஏற்படுத்துவது பெற்றோரின் கையில் இருக்கிறது. ஒருபோதும் என் மகனை நான் படி படி என்று வற்புறுத்த மாட்டேன், படிப்பு வாழ்க்கையின் ஒரு பகுதி, அதுவே வாழ்க்கையல்ல என்றே சிறு வயதில் இருந்தே சொல்லி வந்திருக்கிறேன். என் மகனும் டியுஷன்,ஸ்பெஷல் கிளாஸ் என்று இதுவரை போனதில்லை, பத்தாம் வகுப்பில் 468 மார்க் எடுத்தான், அவ்வாறே  பிளஸ் 2 விலும் எடுப்பான்,  மேல்படிப்பு என்ன என்பதையும் அவன் முடிவு செய்திருக்கிறான்.  அதனால் அதற்கேற்றாற்போல் மார்க்  எடுக்கவேண்டும் என்று படிக்கிறான். அது போதும்.

பெற்றோர்கள் தங்கள்  பிள்ளைகளின் மனதை பக்குவபடுத்தி வைத்துவிட்டால் பள்ளியும், கல்வித்துறையும் மாத்தி மாத்தி எத்தகைய பிரஷர் கொடுத்தாலும் அது நம் குழந்தைகளை சிறிதும் பாதிக்க வாய்ப்பில்லை.  பள்ளிகளுடன் மல்லு கட்டுவதை விட  இது சுலபம் அல்லவா ?!

இதோ தேர்வு நெருங்கியே  விட்டது. டிவி, கிரிக்கெட் பார்க்கட்டும் தப்பில்லை. மாணவர்களுக்கு தேர்வை பற்றிய பயம் அதிகம் இருக்கும், அதை களைந்து அவர்களின் மனதை ரிலாக்ஸ் ஆக  இருக்குமாறு மட்டும் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.  மதிப்பெண்ணை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நம்புங்கள் !! அவர்கள் உங்கள் குழந்தைகள் !!





திங்கள், பிப்ரவரி 27

நடந்த கொலையில் மாணவன் மட்டுமா குற்றவாளி !?


பெற்றோர் ஆசிரியர் மாணவர்கள் என அனைவரையும் மனம் பதற செய்த ஒரு சம்பவம் சமீபத்தில் சென்னையில் நடந்த ஆசிரியை கொலை ! 15 வயது மாணவன் கத்தியை தூக்கினான், கொலை செய்தான் என்பதை ஒரு செய்தி என்றமட்டில் கடந்து செல்ல இயலவில்லை. இதுகுறித்த பலரின் கருத்துக்கள்,  ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்...அதில் சில

* சினிமா , டிவி தான் காரணம்

*கல்வி நிலையங்கள் பணம் பறிப்பதில் மட்டும் குறியாக இருக்கின்றன...ஒழுக்கத்தை கற்று கொடுப்பதில்லை...?!

* ஆசிரியர்களின் அதிக கண்டிப்பு, பொறுப்பற்றத்தன்மை.

நடக்கும் எந்த ஒரு தவறுக்கும் மனிதன் தன்னை விடுத்து பிற மனிதர்கள் மீது பிற சூழல்களின் மீது பழியை போட்டுவிட்டு தப்பித்து விடுகிறான்.

இந்த சிறுவனின் இத்தகைய கொலை பாதக செயலுக்கு இங்கே குறிப்பிட பட்ட மூன்று காரணங்களும் சரிதானா?!!


மாணவனை குறித்த ஒரு பார்வை 


ஆசிரியையை கிட்டத்தட்ட 14 இடங்களில் கத்தியால் குத்தியிருக்கிறான் ! எத்தகைய வன்மம் மனதை ஆக்கிரமித்து இருந்தால் இவ்வாறு மாறி மாறி தனது ஆத்திரம் தீரும் வரை குத்தியிருப்பான். சிறு அடியோ ரத்தமோ பார்த்தால் மனம் பதறகூடிய வயதில் ஆசிரியையின் உடலில் இருந்து ரத்தம் கொப்பளித்து வந்ததை பார்த்தும், அவர்கள் அலறி துடித்ததை கண்டும் சிறிதும் தயக்கமோ பயமோ இன்றி தொடர்ந்து குத்திக்கொண்டு இருந்திருக்கிறான். நிச்சயமாக ஒரு நாளில் ஏற்பட்டதாக இருந்திருக்க முடியாது. பல நாட்களாக மனதிற்குள் சிந்தித்து இருக்கிறான், இரண்டு நாட்களாக கத்தியுடன் வகுப்பிற்கு வந்திருக்கிறான். சந்தர்ப்பம் கிடைத்ததும் முடித்துவிட்டான்.ஒருவகையில்  திட்டமிட்ட கொலை !!


சினிமாவே காரணம் 

கொலை செய்ய காரணம் தான் அடிக்கடிப் பார்க்கும் வன்முறை காட்சிகள் நிறைந்த தமிழ், ஆங்கிலப் படங்கள் காரணம் அதிலும் 'அக்கினிபத்' படத்தில் ஹீரோ வில்லனை கத்தியால் நெற்றியில் குத்தும் காட்சி தனது நெஞ்சில் ஆழமாக பதிவானது எனவும் கூறியிருக்கிறான்.

இவன் கூறுவதை வைத்துப் பார்க்கும் போது, தனது ஆத்திரத்தை கோபத்தை எவ்வாறு தீர்த்து கொள்ளலாம் என சினிமா வழி காட்டி இருக்கிறது அவ்வளவு தான். ஆனால் இதை வைத்தே சினிமாதான் கொலைக்கே காரணம் என்பது சரியா ?! சினிமா காரணம் என்பதும் அந்த கத்தியை தயாரித்தவன் தான் கொலைக்கு காரணம் என்பதும் ஒன்றுதான். அந்த சினிமாவால் பாதிப்பு என்றால் படம்  பார்த்த அனைவருமே கொலையாளிகளாக மாறியிருப்பார்களே ?! காந்தி படம் பார்த்த அனைவரும் மகாத்மாவாக மாறியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் ?!

கத்தியின் மூலம் தனது ஆத்திரத்தை தீர்த்துக்க முடியும்னு ஐடியா கொடுத்த சினிமாவை விட அந்த ஆத்திரம் ஏற்பட அடிப்படை காரணம் என்ன என்பதுதான் இங்கே மிக முக்கியம்

இந்த ஆசிரியை என்றில்லை இவனது கோபத்தை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அழிக்க வேண்டும் என்ற முடிவுதான் எடுப்பான். இன்னும் வேறு யார் மீதெல்லாம் வெறுப்பு கொண்டுள்ளான் என தெரியவில்லை.சொல்லபோனால் இவனை கிண்டல் செய்த சக மாணவர்களும் இதற்கு இலக்காயிருக்கலாம். நல்லவேளை இவனிடம் கத்திக்கு பதில் துப்பாக்கி இல்லை


ஆசிரியை கண்டிப்பது தவறு

ஒரு சாராரின் கருத்து என்னவென்றால் இறந்த ஆசிரியையின் அதீத கண்டிப்பு ! தன் மாணவர்களின் படிப்பின் மீது எவ்வளவு அக்கறை இருந்தால் பாடத்தில் வீக்காக இருக்கும் ஏழு பேரை தனியாக வரச்சொல்லி வகுப்பு எடுத்திருப்பார். சரியாக படிக்கவில்லை என்றால் பெயிலாகி விடுவாய் என்று ஆசிரியர்கள் சொல்வது சகஜம். அப்படி சொன்னாலாவது அக்கறைகொண்டு படிப்பான் என்ற விதத்தில் தான்.

ஒருமாணவன் படித்து தேர்ச்சி பெறவேண்டும் என்ற இயல்பான அக்கறையில் கொடுக்கப்படும் கண்டிப்பை குற்றம் சொல்வது எந்தவிதத்தில் நியாயம் ?

இந்த சம்பவத்தால் நம் ஆசிரியர்களின் மனம் பாதிக்கபடகூடும்.  யார் படிச்சா என்ன படிக்காவிட்டால் என்ன பாடத்தை நடத்துவதுடன் எங்கள் வேலை முடிந்தது என நம் ஆசிரியர்கள் யோசிக்க தொடங்கிவிடுவார்களோ என அஞ்சுகிறேன். அப்படி யோசிக்க மாட்டார்கள் என நம்புவோம்.

பெற்றோர்களின் பேச்சை கேட்காத பிள்ளைகள் கூட அவர்களின் ஆசிரியர்களின் கண்டிப்புடன் கூடிய வழிகாட்டுதலால் நன்கு படிக்கிறார்கள் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.

அப்படி இருக்கும் போது மாணவன் செய்யும் தவறுக்கு /குற்றங்களுக்கு ஆசிரியர்களையும், பள்ளிகளையும் குறை சொல்லி கொண்டிருப்பது ஒட்டுமொத்த ஆசிரியர்களை பற்றியும் மக்களின் மனதில் தவறான எண்ணத்தை விதைத்துவிட கூடிய ஆபத்து இருக்கிறது. இது நல்லதுக்கு இல்லை.


பள்ளிகள் என்னதான் செய்யும் ?

இரண்டு நாட்களாக கத்தியை தனது பையில் வைத்து கொண்டே வகுப்பில் இருந்திருக்கிறான். இதை ஏன் ஆசிரியர்கள் செக் பண்ணவில்லை என்று கேள்வி கேட்பது எல்லாம் ஏற்புடையதா?  வகுப்பில் ஒரு பீரியட் நேரத்தில் பாடத்தை நடத்தவும், கேள்விகள் கேட்டு சந்தேகங்கள் தெளிவு படுத்தவும் நேரம் சரியாக இருக்கும். இதில் வகுப்பில் இருக்கும் 40,50 மாணவர்களை ஒவ்வொருவராக உற்று கவனிப்பது முடிகிற காரியமா?

குடும்பத்தில் இருக்கும் ஒரு பிள்ளையின் நடவடிக்கையை கவனிக்க முடியாத பெற்றோர்கள் தான் இத்தகைய வினாவை எழுப்புகிறார்கள் என்பது எனக்கு கூடுதல் ஆச்சர்யம் !?

தனது ஒரு மகன்/மகள் என்ன செய்கிறார்கள் , எங்கே போகிறார்கள் யாருடன் பழகுகிறார்கள் என்றெல்லாம் கவனிக்க இயலாத பெற்றோர்கள் தான் 40, 50 பேரை கட்டிகாக்கும் ஆசிரியர்களை கேள்வி கேட்கிறார்கள்...!

மாணவனின் பெற்றோரின் குணாதிசியங்கள், வளரும் விதம், சுற்றுப் புறச்சூழல்கள், மரபு, புறவிசை தாக்கம் இன்னும் பிற. இவ்வளவும் சரியாக இருந்தால்தான் பள்ளிகள் விதைப்பவை பலமுள்ளதாக மாறும். இவைகளில் ஏதாவது முரண்பாடுகள், கோளாறுகள் இருப்பின் பள்ளியும் ஆசிரியர்களும் எவ்வளவுதான் நல்லதை போதித்தாலும் அவை அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர்தான். பள்ளிகளை குறை கூறுபவர்கள் இதனை புரிந்து கொள்ளவேண்டும், தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவேண்டும்.


இன்றைய கல்வி 

கல்வி முறையில் இருக்கும் பல குளறுபாடுகள் நம் மாணவர்களை மிகுந்த சோர்வடைய செய்கிறது...10 , 12 ஆம் வகுப்பு மாணவர்கள் படும் பாடுகள் சொல்லி முடியாது...அதுவும் ஒன்பதாம் வகுப்பு பாடத்தை பிப்ரவரிக்கு முன்பே முடித்து தேர்வு வைத்து விட்டு பத்தாம் வகுப்பு பாடத்தை எடுக்க தொடங்கிவிடுகிறார்கள்...கோடைவிடுமுறை கிடையாது. எதற்கு இத்தகைய போராட்டம்...?! புத்தகத்தை மட்டும் மனபாடம் செய்து அப்படியே வெளிக்கொணரும் கல்வி முறை மாற்றி அமைக்கப்படவேண்டும். ஒரு இறுக்கமான சூழல் மாணவர்களிடையே நிலவுகிறது, சுதந்திரமாக படிக்கும் வாய்ப்பு கொடுக்க படவேண்டும்...அதிகரிக்கும் மாணவர்களின் மனஉளைச்சல், மன அழுத்தம் போன்றவற்றை பற்றி அரசு கல்வித்துறை அக்கறை கொள்ளவேண்டும்.


இன்றைய பள்ளிகள்

அதிக மதிப்பெண்கள் எடுக்க நிர்பந்திக்கபடுகிறார்கள்...படிப்பில் போட்டி மனப்பான்மையை, ஏற்ற தாழ்வுகளை  அதிகம் வளர்க்கின்றன. தனது பள்ளி பெயர் எடுக்க வேண்டும் என்பது இதில் ஒன்று. முன்பு கல்வி கற்றுகொடுக்கும் முழு பொறுப்பும் அவர்களுடையதாக இருந்தது. இன்று பெற்றோர்களையும் இதில் பங்குகொள்ள வைக்கிறார்கள், வீட்டிலும் சொல்லி கொடுக்க சொல்லி வற்புறுத்துவது அதிகம். பள்ளியில் இருந்து சோர்ந்து போய் வருபவர்கள் வீட்டிலும் அதே முறையிலான மற்றொரு வகுப்பு சூழ்நிலை வெறுக்க வைக்கிறது. வீடு அல்லது டியூசன் ! விளையாட்டையும் குறிப்பிட்ட நேரம் கொடுத்து முடிக்க சொல்லும் போது வெறுப்பின் உச்சத்துக்கே போய் விடுகிறார்கள்.


இன்றைய பெற்றோர்கள் 

நேற்றைய குழந்தைகள் நாம் என்பதை மறந்து விடுகிறோம்...தான் கற்காத கல்வியை தனது பிள்ளை கற்க வேண்டும் என்பதில் முடிந்துவிடுகிறது ஒரு குழந்தையின் எதிர்காலம்.

எதிலும் தனது குழந்தை முதன்மையாக வர வேண்டும் என ஆசை படுவதில்  தவறில்லை, அதற்காக பெரும் சுமையை வைப்பதுபோல் எப்போது படி படி என வற்புறுத்தி கொண்டே இருப்பது மன அழுத்தத்தை கொடுத்து விடும். ஒன்றிரண்டு மதிப்பெண்கள் குறைந்து விட்டாலும், வாழ்க்கையே தொலைந்து விட்டது என்று பெற்றோர் கொள்ளும் பதற்றம் அப்படியே அவர்களது பிள்ளைகளையும் தொற்றிக்கொள்கிறது.

இன்றைக்கு பெரும்பாலான வீட்டில் ஒரு குழந்தைதான். ஒரே குழந்தை ஆடவும் செய்யணும், பாடவும் செய்யணும், படிக்கவும் செய்யணும், விளையாட்டிலும்,இசையிலும் தேர்ச்சி பெறணும் என்பதெல்லாம் மிக அதிகபடியான எதிர்பார்ப்புகள்.

இங்கே சம்பந்தப்பட்ட மாணவன், மூன்று பெண்பிள்ளைகளுக்கு நடுவில் ஒரே ஆண் , நம் சமூகத்து வழக்கப்படி(?) ஒட்டு மொத்த குடும்பமே போட்டி போட்டு செல்லம் கொடுத்திருக்கிறது...தனி அறை, டிவி, கம்பியூட்டர், செலவுக்கு பணம் இப்படி வளர்க்கப்பட்டவனுக்கு , பள்ளியில் ஆசிரியையின் கண்டிப்பு வெறுப்பை ஏற்படுத்துவதில் ஆச்சர்யம் இல்லையே ?!!

குழந்தையுடன் நேரத்தை செலவு செய்ய முடியாத பெற்றோர்கள் தங்களது குற்றத்தை மறைக்க குழந்தைகள் கேட்டதை உடனே  வாங்கிகொடுத்து பழக்கி  விடுகிறார்கள்...வெளி உலகத்தில் தாங்கள் கேட்டது கிடைக்கவில்லை என்றபோது எதிர்க்க தொடங்குகிறார்கள்...!

இன்றைய குழந்தைகள் என்ன தவறு செய்தாலும் பெற்றோர்கள் உடனே சுட்டி காட்டபடுவது சினிமா டிவியை தான்...! இந்த சினிமா, டிவியை குழந்தைகளிடம் முதலில் அறிமுகம் செய்வது யார் ? இவை இரண்டும் சரியான வழியை காட்டவில்லை என்றால் அவற்றை ஏன் பிள்ளைகளிடம் அறிமுகம் செய்கிறீர்கள்...?! வீட்டில் இருக்கும் டிவியை எடுத்துவிடுங்கள்...சினிமாவிற்கு போவதற்கு எவ்வாறு முடியும், நீங்கள் பணம் கொடுக்கவில்லை என்றால்...ஒரு பதினைந்து வயது பிள்ளையிடம் பணம் எப்படி வருகிறது பெற்றோர்கள் கொடுக்காமல்...


குழந்தைகள் மனம் பாதிக்கபடுவதற்கு சினிமா, டிவி ஒரு காரணமாக இருக்கலாம், ஆனால் அது மட்டுமே காரணம் அல்ல. பெற்றோர் இடையே நடக்கும் கருத்துவேறுபாடு சண்டைகள் ! அவர்கள் இடையே நடக்கும் அடி உதையும் வன்முறைதான். அப்போது பேசப்படும் அவதூறான பேச்சுக்கள் கூட குழந்தைகள் வயதிற்கு ஆபாசம் தான்...!


என்னதான் தீர்வு?!

குழந்தைகளை குழந்தைகளாக இருக்கவிடுவதில்லை இன்றைய பள்ளிகளும் பெற்றோர்களும் !!?

சுற்றிலும் எங்கும் வன்முறைகள் காட்சிகள் சகஜமாகி விட்ட இன்றைய சூழ்நிலையில் அதில் இருந்து நம் குழந்தைகளை பாதுகாப்பது முக்கியம்..  பெரிய மனிதர்கள் பலரின் வாழ்க்கை வரலாறை குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ளவேண்டும்...! விருப்பம் போல் விளையாட அனுமதியுங்கள்...படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை முதலில் உணரவேண்டும், அது வாழ்வில் ஒரு பகுதி மட்டுமே.  ஒழுக்கம், பண்பாடு,விருந்தோம்பல், நன்னடத்தை, பெரியோரை மதித்தல், இப்படி நல்ல விசயங்களை கற்றுகொடுக்க வேண்டிய முக்கிய கடமை பெற்றோருக்கு இருக்கிறது...குழந்தைகளுடன் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள்...!

அவர்களுக்காகவே வாழ்கிறோம் என்று தம்பட்டம் அடிப்பது முக்கியம் அல்ல 'அருகில் உடலாலும், தூரத்தில் உணர்வுகளாலும்' உங்கள் குழந்தையை  தொட்டு கொண்டே  வாழுங்கள்...!!

பள்ளிகள், அரசாங்கம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் இப்படி எல்லா இடத்திலும் இருக்கும் குறைகள் சீர் செய்யப்படவேண்டும்...இன்றைய மாணவர்களின் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு காரணம் அவர்கள் மட்டும் அல்ல என்பதை அழுத்தமாக சொல்லி கட்டுரையை முடிக்கிறேன்.

எனது இப்பதிவு கழுகில் வெளிவந்தது

பின்குறிப்பு 

இன்றைய மாணவர்களின் ஆபத்தான மனநிலை குறித்த ஒரு பார்வை இப்பதிவின் தொடர்ச்சியாக நாளை வெளிவரும்...

* * *


படங்கள் - நன்றி கூகுள் 

திங்கள், டிசம்பர் 13

என் பார்வையில் - சமகால கல்வி



நண்பர் தேவா   சமகால கல்வி என்பதை பற்றி ஒரு பதிவை எழுத சொல்லி இருந்தார். ஏற்கனவே சகோதரர்கள்  எஸ் கே , பாபுசெல்வா ஆகியோர் எழுதி இருக்கிறார்கள். நானும் எனக்கு தெரிந்த இன்றைய கல்வியின் நிலைபற்றி இங்கே சொல்ல முயற்சித்து  இருக்கிறேன்..படித்துவிட்டு சொல்லுங்கள். 

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது கல்வி, விவசாயம், மருத்துவம் என்ற இவை மூன்றையே சார்ந்து இருக்கிறது. இதில் முதல் இடத்தில் இருக்கும் கல்வி இன்று எந்த நிலையில் இருக்கிறது ? உண்மையில் இன்றைய கல்வியால் மாணவர்கள் பயன் பெறுகிறார்களா?? இல்லையா ?? என்ற கேள்விகளை முன் வைத்து பதிவை தொடருகிறேன்.

இன்றைய மாணவர்கள் 

இன்றைய இளைய சமுதாயத்தினர் மிகவும் வித்தியாசமான பார்வை உள்ளவர்களாக  இருக்கிறார்கள். அவர்கள் கிராமப்புறங்களில் உள்ளவர்களாக இருந்தாலும் சரி, நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் என்றாலும் சரி ஒரே கோணத்தில் தான் பார்க்கிறார்கள். எல்லோருமே நல்ல வேலையில் சேர வேண்டும், வாழ்க்கையில் மேலும் மேலும் முன்னேறவேண்டும் என்பதையுமே லட்சியமாக வைத்துள்ளனர். இப்படி பட்ட தாகத்துடன் இருப்பவர்களுக்கு நல்ல வழி காட்டுவதும், அதற்கான வாய்ப்பை உருவாக்கி தருவதும் நம் அரசாங்கத்தின் கடமை மட்டும் அல்ல, சமுதாயத்தின் பொறுப்பும் கூடத்தான்.

இப்போது நம்மிடையே இருக்கும் கல்வி கற்பிக்கும் முறை என்பது பல விதங்களில் இருக்கிறது. ஆங்கிலோ இந்தியன்  முறை, மெட்ரிகுலேஷன், ஸ்டேட் போர்டு, சென்ட்ரல் போர்டு (CBSC) என்று பலவித  பள்ளிகள் மூலமாக கல்வி கற்றுக்கொடுக்க படுகிறது. பாடங்கள் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. இதில் உள்ள சிரமங்கள் ஏற்ற தாழ்வுகளை மனதில் வைத்து தான் நமது அரசாங்கம் சமச்சீர் கல்வி ஒன்றை சில வகுப்புகள் வரை தற்போது கொண்டு வந்துள்ளது....அதிலும் அடுத்த வருடத்தில் இருந்து தமிழகம் முழுதும் உள்ள பள்ளிகளுக்கும் ஒரே விதமான பாட திட்டங்கள் கொண்ட ஒரு சமச்சீர் கல்வியை கொண்டு வர போவதாக ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

பாடத்திட்டங்கள் ஒன்றாக இருக்கும்...தேர்வுகளும் அனைவருக்கும் ஒன்றாக  நடக்கும். நல்ல ஒரு முடிவு தான். மேலும் பாடங்களை பயிற்றுவிக்கும் முறைகளையும் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.

பயிற்றுவிக்கும் முறை 

கடந்த வருடத்தில் இருந்து ஒரு சிறந்த முறை ACTIVE LEARNING METHOD (ALM) ஒன்று நமது அரசாங்க பள்ளிகளில் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது என்பது பலருக்கும்  தெரியுமா என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்த வரையில் எளிய முறையில் சொல்கிறேன்,

ஒரு சப்ஜெக்டில் ஒரு பாடம் ஆசிரியரால் எடுக்க படும் முன்னரே மாணவர்கள் பல சிறு குழுக்களாக பிரிக்க வைக்க படுகிறார்கள்....அதில் படிப்பில் கொஞ்சம் பின் தங்கிய மாணவன், நன்கு படிக்கும் மாணவன் என்று கலந்து குழுக்களை பிரிக்கிறார்கள். ஒவ்வொரு குழுவும் தங்களுக்குள் அந்த புதிய பாடத்தை படிக்க வேண்டும், யாருக்கு எந்த இடத்தில் சந்தேகம் வருகிறதோ அந்த இடத்தில் அடிகோடிட்டு கொண்டே வரவேண்டும். பின் எல்லோரும் அந்த பாடத்தை முடித்ததும் ஆசிரியர் பாடம் நடத்தி ஒவ்வொருத்தரின் சந்தேகங்களை தீர்த்து வைக்கிறார். (கார்டு ஒன்று  கொடுக்கபடுகிறது அதில் உள்ள பாடங்களை வரிசையாக முடித்து கொண்டே வர வேண்டும், ஒன்றில் தெளிவில்லாமல் அடுத்ததிற்கு போக இயலாது என்று நினைக்கிறேன்)

இதன் மூலம் ஒரு சின்ன வார்த்தைக்கு அர்த்தம் தெரியலைனாலும், அதனுடன் சேர்ந்த பிற அர்த்தங்களையும் விளக்க வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர் இருக்கிறார். முன்பு  மொத்தமாக எல்லோரையும் அமரவைத்து புத்தகத்தை வாசித்து, அர்த்தங்களை மட்டும் சொல்லி கொடுத்துவிட்டு, சிலரின் சந்தேகங்களை விளக்குவதுடன் முடிந்துவிடும். சிலர் மட்டும் தான் சந்தேகம் கேட்பார்கள்...எழுந்து சந்தேகம் கேட்கவும் தயக்கம் இருக்கும்...ஆனால் இந்த புதிய முறையில் அனைவரின் சந்தேகமும்  தெளிவிக்க பட வாய்ப்பு இருக்கிறது. ஒரு பாடம் முடிந்த பின் அதில் சில கேள்விகள் எழுப்பப்பட்டு அதற்கும் விளக்கம் கொடுக்க படுகிறது. இதில் ஒரு பாடம் நன்கு புரிந்த பின்னே அடுத்த பாடத்திற்கு செல்ல கூடிய வாய்ப்பு வருகிறது.

தவிரவும் ஆசிரியர்களின் பணி சுமை இதனால் கூடுவது போல் இருந்தாலும் மாணவர்களின் படிப்பு நன்றாக இருக்கிறது என்பது உண்மை. (அப்படி படித்த சில மாணவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்)

பெற்றோரின் ஆங்கில பள்ளி மோகம்

நம்ம ஊர்ல என்னதான் அரசாங்க பள்ளியில் நன்றாக சொல்லி கொடுத்தாலும் ஆங்கில பள்ளியின் மேல் உள்ள மோகம் குறைய போவது இல்லை. இந்த இடத்தில் நாம் ஒன்றை புரிந்து கொள்வது கிடையாது . அரசாங்க பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள் பி எட், ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களாகத்தான் இருப்பார்கள்....ஆனால் சில ஆங்கில பள்ளிகளில் ஒரு டிகிரி முடிச்சிருந்தால் கூட போதும் பணிக்கு அமர்த்தி விடுகிறார்கள். (அவர்கள் தான் குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்பார்கள்) 

இங்கே ஒரு பிரபலமான பள்ளியில் தன் குழந்தையை பள்ளிக்கு அழைத்து கொண்டு வரும் தாயார் ஒருவர்  டிகிரி முடித்திருக்கிறார்கள் என்பதை மட்டும் வைத்து வேலைக்கு சேர்த்து கொண்டார்கள், முறையான பயிற்சி இல்லாமல் எப்படி இவர்களால் நன்றாக சொல்லி கொடுக்க முடியும்.....?!! ஆனால் இது தெரிந்துமே நாம் அந்த மாதிரி பள்ளியில் சேர்ப்பதற்கு தான் முயலுகிறோம் (நான் உள்பட) காரணம் பிரபலமான பள்ளி என்ற ஒரு பெருமையும், நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையும் தான்....! இந்த மாதிரி ஆசிரியர்களின் சம்பளமும் குறைவு  தான் ஆனால் அரசாங்க பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் இவர்களை விட மூன்று மடங்கு அதிகம். (அதிக சம்பளம் வாங்கிரவங்களை விட குறைந்த சம்பளம் வாங்கிற ஆசிரியர்கள் கடினமாக அதிக உழைப்பை கொடுத்து  சொல்லி கொடுப்பார்கள் என்பது என்ன நம்பிக்கையோ தெரியவில்லை....! என்ன லாஜிக்....? )

மாண்டிசொரி கல்வி முறை  

முன்பு இத்தாலியில் கொலை கொள்ளை போன்ற பாதகங்கள் அதிகம் நடைபெற்று கொண்டிருந்த ஒரு கால கட்டத்தில் ஆசிரியர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து ஒரு மாநாட்டை நடத்தினர். பிள்ளைகளுக்கு கல்வியில் சில மாறுதல்களை கொண்டு வரலாமா ? அதன் மூலம் அவர்களின் மனோபாவம் மாறி இந்த மாதிரியான  செயல்கள் இனி நடைபெறுவதை தடுக்க முடியுமா என்றும் பலவாறாக வாதிட்டனர். முதல் இரண்டு நாளாக விவாதங்கள் நடைபெற்றன, முடிவுகள் ஒன்றும் எட்டப்படவில்லை. மூன்றாம் நாள் ஒரு பெண்மணி எழுந்து தனது கருத்துகளை கூறலானார்.........  

" நீங்கள் போதிக்கும் பாடங்களை மாற்றுவது ஒரு தீர்வு ஆகாது....அதற்கு பதில் மாணவர்களின் அடிப்படை குண நலன்களை அறிய முயல வேண்டும் "

" எல்லா குழந்தைகளும் ஒரே குண நலன்களை பெற்று இருப்பது இல்லை. உதாரணமாக ஜீரண சக்தி நன்றாக இருக்கும் ஒரு குழந்தைக்கு வெறும் கஞ்சியை மட்டுமே உணவாக கொடுத்து வந்தால் பலமற்றவனாக மாறி விடுவான். அப்புறம் ஜீரண சக்தி சரியாக இல்லாதவனுக்கு ஆரம்பத்திலேயே கடின உணவை கொடுத்தால் விபரீதமாகிவிடும். பலவீனமானவனுக்கு மெது மெதுவாக முதலில் கஞ்சி போன்ற லேசான ஆகாரம் கொடுத்து ஜீரண சக்தியை உண்டாக்கி, பிறகே கடினமான புஷ்டியான உணவு கொடுக்க படவேண்டும் "

" இதே போன்று தான் கல்வியையும் புகட்ட வேண்டும்....குழந்தைகளின் இயற்கையை அறியாமல் போதிப்பது தவறு...! "

இவரது இந்த கருத்து அங்குள்ளவர்களால் ஏற்று கொள்ளப்பட்டது. உண்மையில் இவர் ஆசிரியர் இல்லை, இவர் ஒரு மருத்துவர்...! இவரது இந்த ஆலோசனை ஏற்று கொள்ள பட்டு, இவரது தலைமையின் கீழ் ஒரு பள்ளி கூடம் ஏற்படுத்தி தீய குணங்களும், கெட்ட பழக்க வழக்கங்களும் கொண்ட அடங்காத பிள்ளைகளை எல்லாம் அதில் சேர்த்தனர். அந்த பெண்மணி அந்த பிள்ளைகளை வைத்து நடத்தின பல ஆராய்ச்சிகளின் முடிவில் அநேக விசயங்களை அறிந்து புதிதாக கல்வி கற்பிக்கும் முறை   ஒன்றை கையாள தொடங்கினார். அதன்பின் அந்த பிள்ளைகளின் துர் குணங்கள் மறைய தொடங்கின...! 

அந்த பெண்மணியி பெயர் தான் மாண்டிசொரி, அவர் தோற்றுவித்த கல்வி முறையின் பெயர் தான் மாண்டசொரி கல்விமுறை.  

இந்த முறையில் சில சிறப்புகள்

* மாணவ மாணவியர்கள் தன் ஆசிரியைகளை ஆன்ட்டி என்று தான் அழைக்க வேண்டும். இந்த உறவு முறையினால் இவர்களுக்கும் இடையில் ஒரு புரிதல் வர வாய்ப்பு இருக்கிறது. பயம் என்பது குறைந்து மரியாதை, நேசம்  வளருகிறது.

*  ஒரு பாடம் எடுத்து முடித்ததும், மாணவர்கள் பாடத்தை பற்றிய ஒரு கட்டுரை தயார் செய்து செமினார் மாதிரி பிரசென்ட் பண்ணவேண்டும். இதே முறையில் சிறு குழந்தைகளுக்கு ஒரு பண்டிகை, மிருகம், பறவை இப்படி எதை பற்றியாவது ஒரு நாலு  வரிகளாவது சொல்ல வேண்டும். இது ஆரம்பத்தில் இருந்து சொல்லி கொடுக்க படுவதால் மேடை கூச்சம் என்பது சுத்தமாக போய் விடும். மேலும் சம்பந்த பட்ட பாடத்தை பற்றிய தெளிவும் அதிகரிக்கும் என்பது நிச்சயம்.

* ஒவ்வொருத்தருக்கும் அவர்களது செயல் திறனுக்கு ஏற்றபடி சொல்லிகொடுக்க படுகிறது.

* உணவு உண்பதில் இருந்து சுத்தமாக தங்களை பேணி கொள்வது வரை ஒரு தாய் சொல்லி கொடுப்பது போல் சொல்லி கொடுக்கிறார்கள். நல்ல பழக்கவழக்கங்கள், ஒழுக்கம், முக்கியமாக நான் கவனித்தது சரியான தொடுதல், தவறான தொடுதல் என்பதை கூட குழந்தைகள் புரிந்து கொள்ளும் விதத்தில் சொல்லிகொடுக்கிறார்கள்.

முன்னேற வழிகாட்டுங்கள்

பிற மொழிகள் கற்றுகொடுக்க படுவதிற்கு ஊக்கம் கொடுக்க படவேண்டும். நம் நாட்டில் குறிப்பாக தமிழ் நாட்டில் ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்கி உள்ளன. இதில்  வேலை வாய்ப்பும் அதிகம்.  ஒரு மாணவன் ஜப்பான் மொழியோ கொரிய மொழியோ படித்துவிட்டு , என்ஜினியரிங் படிப்போ அல்லது பட்டப்படிப்போ படித்தால் போதும் இந்த நிறுவனங்களில் உடனே வேலையுடன் அதிக சம்பளமும் நிச்சயம். ஜப்பான் மொழி படித்த மாணவன் ஜப்பான் சென்றாலும் அங்கே ரோபோடிக் என்ஜினியரிங் படித்தால் மிக உன்னத நிலைக்கு போய்விடலாம்.  

ஆனால் இந்த மாதிரி வேற்று மொழிகள் மத்திய கல்வி திட்டத்தில் தான் இருக்கிறது...!? பணக்கார மாணவர்கள் மட்டுமே நிறைய பணம் கொடுத்து தனியார் பள்ளிகளில்(CBSC)  சேர்ந்து படித்து விடுகிறார்கள்.  இதை நமது மாநில கல்வி திட்டத்தில் கொண்டு வந்தால்,  திறமை, ஆர்வம் இருந்தும்  அதிக பணம் கொடுத்து படிக்க வசதி இல்லாத மாணவர்களும் பயன் பெறுவார்கள். நம்ம நாட்டில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் நம் மக்கள் தான் அதிகம் இருப்பார்கள்...! இங்கே படித்துவிட்டு அதிக சம்பளத்திற்காக வெளிநாட்டை தேடி போக வேண்டிய நிலையும் நம் மக்களுக்கு ஏற்படாது.    

குறைகள் களைய பட வேண்டும்

குறிப்பாக இன்றைய நமது அரசாங்க பள்ளிகள் பற்றி பார்க்கும் போது நல்ல முன்னேற்றம் தெரிகிற்து...கல்வியை எளிதாக்கவும், அதில் ஆர்வம் வருவதற்கும், இதனால் எதிர்காலத்தில் மாணவர்களுக்கு பயன்  கிடைக்கணும் என்ற நோக்கத்தில் இப்போது மேற்கொண்டு வருகிற முயற்சிகள் பாராட்ட பட வேண்டியவைதான்.  ஆனால் வேறு சில களையப்பட வேண்டிய குறைகள் மலிந்து கிடக்கின்றன அதையும் அரசாங்கம் கவனத்தில் கொண்டு செயல் பட்டால் எதிர்காலத்தில் அரசாங்க பள்ளியில் பிள்ளைகளை சேர்க்க இடம் கிடைக்காமல் கூட போய்விடலாம்....!!  

பின் குறிப்பு.

கல்வியை கற்க இன்றைய மாணவர்கள் தயார்தான், ஆனால் அதை சரியான விதத்தில் அவர்களிடம் கொண்டு போய் சேர்க்கவேண்டும். இங்கே குறிப்பிட பட்டுள்ள சில தகவல்கள் என் பார்வையில் சரி என்று பட்டவைதான். தவறுகள் குறைகள் ஏதும் இருப்பின் சொல்லுங்கள் திருத்தி கொள்கிறேன். (ரொம்ப முயற்சி பண்ணியும் பதிவு கொஞ்சம் பெரிதாகி  விட்டது...பொறுத்துகொள்ளுங்கள்)