பதிவு திருட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவு திருட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜூன் 7

அறிவைத் திருடாதே...! இணையதள பதிவு திருடர்களுக்கு கண்டனம் !!


பதிவுலகத்தில் இருக்கும் சிலருக்கு ஒருநாளில் இரண்டு பதிவுக்கு அதிகமாக எழுத இயலும்...ஆனால் என் போன்ற வெகு சிலருக்கு வாரத்திற்கு இரு பதிவு என்பதே அதிகம். இந்நிலையில் கொஞ்சமும் மனசாட்சி இன்றி எனது பதிவுகளை எவ்வித அனுமதியும் பெறாமல் சுலபமாக திருடி தங்கள் தளத்தில் வெளியிடுகிறார்கள்...இதில் எனது பார்வைக்கு வராதவை எத்தனையோ !!?   எங்கிருந்தும் யார் பதிவையும் சுலபமாக இரு நிமிடத்தில் இடம் மாற்றிவிடலாம்...அவ்வாறு செய்வது தவறு என்று பதிவு திருடர்களுக்கு ஏனோ உரைப்பது இல்லை. ஒருவரின் சொந்த கருத்தை அவரறியாமல் திருடுவது அநாகரீகம், அசிங்கம், கேவலம் ...!!

எது ஒன்றும் எங்கிருந்தாவது எடுத்ததாகத்தான் இருக்கும். ரிஷி மூலம் எது என்று யாருக்கும் தெரியாது. ஒரு பதிவை அப்படியே காப்பி செய்து போடுவதை விட அதில் இருக்கும் மூல கருத்தை எடுத்துகொண்டு அத்துடன் தங்களின் சொந்த கருத்துக்களையும் சேர்த்து எழுதுவது ஏற்புடையது. 

அதை விட்டுவிட்டு  ஒரு எழுத்துக்கூட விடாமல் அப்படியே காபி செய்து வெளியிடுவதை பார்க்கும் போது எரிச்சல் தாள முடியவில்லை. இப்போது தான் தெரிகிறது என் போன்ற நிலையை ஏற்கனவே சந்தித்த மற்றவர்களின் நிலை...! சகோதரி ஜலீலா அவர்கள் அப்போது எத்தனை வேதனை அடைந்திருப்பார்கள் என்பதை உணருகிறேன். அடுத்தவர்களின் வயிற்றேரிச்சலை கொட்டி திருடர்கள் கண்ட பலன் என்னவோ???

காப்பி  ரைட் வாங்கி வச்சுகோங்கனு நண்பர்கள்  சொன்னாங்க...'நானும் எடுத்து வச்சிருக்கிறேன்' அப்டின்னு சொல்லிக்கலாம்...ஆனா அதை வச்சு கோர்ட்ல கேசா போட முடியும்...?! வேதனை !!

சொந்த(நொந்த) அனுபவங்கள்... 

* முக நூலில் தன்னை சமூக சேவகர் என்று ஒருவர் கூறி கொள்வார், குழந்தைகள் சம்பந்தப்பட்ட எனது பதிவுகளின் சில பாராக்களை காப்பி செய்து முக நூலில் போட்டு இருந்தார். எனது பெயர், லிங்க் எதுவும் இல்லை...அவரது நண்பர்களும் இவர் சொன்ன கருத்து என்று ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி இருந்தார்கள், அதை அனுசரித்து இவரும் பதில் கூறி இருந்தார். தொடர்ந்து இங்கிருந்து காப்பி பண்ணி ஸ்டேடஸ் தொடர்ந்து போட்டு கொண்டே இருந்தார்...எனக்கு அதீதமாக படவே, இன்பாக்சில் சுட்டி காட்டினேன், உடனே 'சாரி' என்றதுடன் என் தள லிங்கை அங்கே குறிப்பிட்டார். ஆனால் சற்று நேரத்தில் லிங்க் குறிப்பிட்ட அந்த ஸ்டேடஸ் டெலீட் செய்யப்பட்டு விட்டது... ஏன் இந்த ஈகோ ?! லிங்க் குறிப்பிட்டால் எங்கே தான் அதுவரை போட்டு வந்த பெரிய மனிதன் வேடம் கலைந்துவிடும் என்ற அச்சமா ?!! மனதில் சேவை எண்ணம் சிறிதும் இல்லாத, இவர் ஒரு சமூக சேவகர் ?!

* தனி நபர் வளர்த்த காடு பற்றி நான் எழுதிய மற்றொரு பதிவு முக நூலில் சுற்றி வருகிறது...ஆனால் வேறு ஒருவரின் பெயரில்...??! இது எந்த விதத்தில் நியாயம் என புரியவில்லை. நானே எனது இந்த பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று தான் எழுதி இருந்தேன். ஆனால் லிங்க் , என் பெயர் போடவில்லை என்றாலும் பரவாயில்லை , வேறு ஒருவர் பெயரில் வெளிவருவது  படு அபத்தம் !!?

அந்த பதிவை எழுத எனக்கு  மூன்று வாரம் ஆகியது. The Times of India வில் வந்த செய்தியை பார்த்து அது குறித்த வேறு விரிவான தகவல்கள்  இணையத்தில் இருக்கிறதா என தேடி, மொழிபெயர்த்து என் கருத்துக்களையும் கலந்து எழுதினேன். ஜாதவ் பயேங் போட்டோ தேட இரண்டு நாள் ஆச்சு... இப்படி சிரமப்பட்டு எழுதிய ஒன்றை கொஞ்சமும் வெட்கமில்லாமல் தங்களது பெயரை போட்டு வெளியிடுகிறார்கள்.

கூகுள்ல 'ஜாதவ் பயேங்' என்று டைப் பண்ணினா என் பதிவு மட்டும் தான் இருக்கும் என்பதை பார்க்கலாம்...தமிழ் பிளாக்கில் அவரை பற்றி இதுவரை வேறு யாரும் எழுதவில்லை என்று நினைக்கிறேன் (இருந்தால் லிங்க் கொடுக்கவும்)

* மெதுபக்கோடா என்கிற  முக நூல் தளம் ஒன்று சில நாட்களாக எனது தாம்பத்தியம் பதிவுகளை அப்படியே காபி செய்து வெளியிட்டு வருகிறது...அங்கிருந்து பல இடங்களுக்கு பகிரப்பட்டு சென்று கொண்டிருக்கிறது...இப்படி பலராலும் பிற இடங்களுக்கு செல்வது எனக்கு  மன உளைச்சலை கொடுக்கிறது. இதை பலர் ஷேர் செய்வதின் மூலம் அவர்களும் இத்திருட்டுக்கு உடந்தையாகிறார்கள்.

இப்படி மொத்தமாக காபி செய்து போடுவதை விட இன்னார் எழுதியது, இந்த லிங்கில் இருக்கிறது படித்து கொள்ளுங்கள் என்று லிங்க் கொடுக்கலாம்...எல்லோருக்கும் பயன்படதானே எழுதுகிறோம் போய் சேரட்டும் என விட முடியவில்லை...சிலரும், நல்ல விஷயம் தானே பகிரப்படுகிறது என்று சொல்கிறார்கள். கொஞ்சம் யோசித்து பாருங்கள் ஒரு படைப்பாளி, தன் படைப்பு மற்றவர் பெயரில் வெளியாவதை பார்க்கும் போது எவ்வளவு கோபம் வரும்? அது தானே எனக்கும்...

மேலும் இந்த தொடரை புத்தகமாக போட இருக்கிறேன்...! நாளை அதை படிப்பவர்கள்  என்னை திருடியாக(?) பார்க்கப்படவும் வாய்ப்பு  இருக்கிறது...!!???  ( வேடிக்கை அல்ல, இப்படியும் நடக்கலாம்...மக்களே !!)

* இந்த பதிவை நேற்று காலையில் எழுதி முடித்தேன்...அதற்குள் மாலையில் சௌந்தர் மெயில் பண்ணி சொல்றான், 'அக்கா உங்க கவிதை இங்க இருக்கு, இது தான் லிங்க்' என்று !! இது ஒரு பெண்(!) சௌந்தர் அங்கே சென்று இது வேறு ஒருவரின் கவிதை, குறைந்த பட்சம் அவங்க பேராவது குறிப்பிடுங்கள் என்று போட்ட அத்தனை கம்மெண்டும் உடனுக்கு உடன் டெலீட் செய்யப்பட்டுவிட்டது...(எவ்வளவு உஷாரா இருக்காங்க ?!)
    
எனது  பல நாள் சிந்தனை, உழைப்பு இப்படி ஒரு நொடியில் திருடபடுவது மனதை மிக வருத்துகிறது...தயவு செய்து பிறரை வேதனைபடுத்தும் எந்த காரியத்தையும் செய்யாதீர்கள்...

பதிவை பாதுகாத்துக்கொள்ள என்ன வழி மேற்கொண்டாலும் பிரயோசனம் இல்லை. எல்லாவற்றுக்கும் குறுக்கு வழி கண்டுபிடித்து விடுகிறார்கள் திருடர்கள்!!

சுத்த  அயோக்கியத்தனம்

சிலர் நல்ல விஷயம் தானே பகிரப்படுகிறது என்று சொல்கிறார்கள். கொஞ்சம் யோசித்து பாருங்கள் ஒரு படைப்பாளி, தன் படைப்பு மற்றவர் பெயரில் வெளியாவதை பார்க்கும் போது எவ்வளவு கோபம் வரும்? 

பிறருடைய உழைப்பை, கருத்துக்களை,கற்பனைகளை, படைப்புகளை  திருடி தன்னுடைய பெயரை போடுவது என்பது (வெளிபடையா சொல்ல முடியவில்லை) அவ்வளவு கேவலம்.

எந்த  உரிமையில் தன்னுடையது என்று கூறுகிறார்கள்...கொஞ்சங்கூட யோசிக்க மாட்டார்களா?? அடிப்படை நாகரீகம் என்பதே இல்லாமல் போய்விட்ட மட ஜென்மங்களா...?

தகவல் எடுக்கப்பட்ட எனது தளத்தின் லிங்க் குறிப்பிடாமல் இருப்பது

என் கருத்தை அப்படியே தனது கருத்தாக திரித்து கூறுவது

காபி பேஸ்ட் செய்வது

ஒரு சில எழுத்துக்களை மட்டும் மாற்றுவது.

இது  போன்ற எதுவாக இருந்தாலும் தவறு தான்.

முகநூலில் ஒருத்தர் வெளியிட்ட கவிதை, கட்டுரை படிக்கிறவங்க கொஞ்சம் யோசிங்க...இதை வெளியிட்டவர் இந்த மாதிரி எழுத கூடியவர் தானா ? பிளாக் ஏதும் வச்சி அதில் எழுதி இருக்கிறாரா ??  ஒருவேளை வேறு இடத்தில் இருந்து எடுத்தது போல சந்தேகம் வந்தால்/தெரிந்தால் கம்மேண்டில் அதை குறிப்பிடுங்கள்...நண்பர் தானே என்றும் , நேரமின்மை என்றும் ஒருவரின் தவறுக்கு துணை போகாதீர்கள்.
வேண்டுகோள் 

இது  போன்றவை இனி தொடர்ந்து கொண்டே இருந்தால் பிரைவசி செட்டிங்க்ஸ் மூலமாக  குறிப்பிட்ட சிலர் மட்டும் படிக்குமாறு செய்யலாம் என நினைக்கிறேன்...

'மனதோடு மட்டும்' தளத்தில்  உள்ள ஆக்கங்கள் , கட்டுரைகள், தொடர்கள், கவிதைகள் போன்றவற்றை புத்தகமாக வெளியிட உள்ளேன். ஆகவே பதிவில் உள்ளவைகள் எக்காரணம் கொண்டும் என் அனுமதி இன்றி இனிமேல் பிரதி எடுக்க கூடாது என்பதை இங்கே வேண்டுகோளாக வைக்கிறேன்.

                                                                 * * * * *
 
எனது பதிவுகளை என் அனுமதி  இன்றி பிரதி எடுத்து அவர்களின் பதிவு போல் வெளியிட்ட அத்தனை பேர் மேலும்  என் கண்டனத்தை வன்மையாக இங்கே பதிவு செய்கிறேன்...

                                                                 * * * * *
இரண்டு திருடல்களை மட்டும் இங்கே பகிர்ந்துள்ளேன்.

இந்த படத்தில் உள்ளது என் கவிதை - என்னவனே....!

கவிதை இங்கே - http://sanvishblue.blogspot.in/2010/11/blog-post_5550.html

இந்தப் பதிவை திருடியவர் - Nayaki Krishna

இந்த படத்தில் உள்ளது என் பதிவு - தாம்பத்தியம் - பாகம் 25 - போடுங்க ' தலையணை மந்திரம் ' !?

பதிவு இங்கே - http://www.kousalyaraj.com/2011/08/25.html

இந்த பதிவை திருடியவர்[கள்] - மெது பக்கோடா

இன்னும் நிறைய முகப்புத்தகத்தில் உலாவுகின்றன.

நன்றிகள் : 

* தாம்பத்தியம் பதிவுகள் எங்கே திருடப்பட்டன என்பதை கண்டு அங்கே சென்று பல எதிர்ப்பு கமெண்டுகளை பதிவு செய்த தம்பி புவனேஷ்க்கு என் நன்றிகள். இவரது தளம் பிரியமுடன் புவனேஷ்

* வாசல் தளத்தின் பதிவுகள் வெளியிட பட்ட இடத்தை கண்டு எனக்கு தெரிவித்த தம்பி சௌந்தருக்கும் என் நன்றிகள்.

* Screen shot photos எடுத்து கொடுத்த தம்பி பிரபுவுக்கு என் நன்றிகள்.
                                                                    * * * * *

படம் - நன்றி கூகுள்