தொடர் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொடர் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜனவரி 3

திரும்பி பார்க்கிறேன் - 2010



கடந்த வருடத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை பற்றி ஒரு தொடர் பதிவாக எழுத சொல்லி தோழி ஆசியா உமர் அழைப்பு விடுத்து இருந்தார். அவருக்கு முதலில் எனது நன்றிகள். இந்த மாதிரி தொடர் பதிவுகள் எழுத  சொல்லி அழைப்பு வந்தால் கொஞ்சம் தயக்கம் வரும் சரியா எழுதி விடுவோமா என்று. இப்பவும் அந்த தயக்கத்துடன் தான் எழுதி இருக்கிறேன். படிச்சிட்டு சொல்லுங்க.

2010 இல் நடந்த இனிமையான நிகழ்வுகள் பல அதில் மிக முக்கியமா இங்கே சொல்ல விரும்புவது பதிவுலகத்திற்கு நான் வந்தது தான்.

அறிமுகம்

இந்த மாதிரி ஒரு உலகம் இருக்கிறது என்றே முதலில் எனக்கு தெரியாது...!? தொழில் ரீதியாக ஏற்பட்ட மன அழுத்தத்திற்காக என்னை ஆசுவாச படுத்திக்கொள்ள ஒரு space தேவைப்பட்ட நேரத்தில் என் கணவர் தான் ப்ளாக் எழுத சொல்லி யோசனை சொன்னார். அதற்கு முன் வரை இணையம் என்பது புதிதாக ரீலீஸ் ஆகும் படங்களை நோகாமல் பார்ப்பதற்கு தான் பயன்பட்டுவந்தது...! எனக்கு என்ன தெரியும், என்னால் எழுத முடியுமா என்ற சந்தேகம் தொடக்கத்தில் இருந்தது...! 'என்கிட்டே புலம்புறதை எல்லாம் எழுது அதுவே போதும்', என்று உற்சாகம் கொடுத்தது என் கணவர்தான்...?!!

2010 இல்  நல்ல நிகழ்வுகள்,பிடித்த நல்ல விஷயம் 
   
2009 டிசம்பரில் ப்ளாக் தொடங்கினாலும் சரியாக எழுத ஆரம்பித்தது 2010 மார்ச்சில் இருந்து தான். முதலில் மனம் என்று தான் டைட்டில் வைத்தேன்...அப்புறம் தான் அதில் ஏதோ மிஸ்ஸிங் என்று தோன்றியது அப்புறம் தான் 'மனதோடு மட்டும்' என்றானது, கவிதைகளும் இதில் எழுதி வந்தேன்...கவிதைகள் தனியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் உருவானது தான் 'வாசல்'

'மனதோடு மட்டும்' தளத்தில் எனக்கு மிக பிடித்த ஒரு தொடர் என்றால் தாம்பத்தியம் என்று சொல்வேன். இந்த தொடர் எழுத முக்கிய காரணம் சில பெற்றோர்களின் கருத்து வேறுபாட்டால் தடுமாறும் பிள்ளைகளின் நிலையை பற்றிய வருத்தம் தான். இந்த தொடரில் எழுதப்பட்ட கருத்துக்கள் பெரும்பாலும் நான் படித்த, கேள்விப்பட்ட, பார்த்த சில அனுபவங்கள் தான்.

மறக்க முடியாத சம்பவம் 

அப்புறம் சில விழிப்புணர்வு பதிவுகள் விரும்பி எழுதினேன், இனியும் நிறைய எழுத வேண்டும் என்று இருக்கிறேன். 'கண்டனம்' என்ற தலைப்பில் எழுதிய சில பதிவுகள் விமர்சனதிற்கு உட்பட்டன. அதிலும் முக்கியமாக நான் எழுதிய ஆபத்தான கலாச்சாரம் என்ற பதிவுக்கு எதிர் பதிவு எழுதும் அளவிற்கு சென்றது நான் எதிர்பார்க்காத ஒன்று.  அதற்கு பின் பல காரசாரமான விவாதங்கள், மோதல்கள் என்று மூன்று  வாரத்திற்கு   பதிவுலகம் இதை பற்றியே பேசும் அளவிற்கு போய்விட்டதுதான்  ஆச்சரியம். அதிலும் பல பதிவர்களும் லிவிங் டுகெதர் என்ற தலைப்பில் பல பதிவுகளை எழுதி தங்களின்  கருத்துகளை,ஆதங்கங்களை, கோபங்களை வெளிபடுத்தி இருந்தனர். அதன் மூலம் பல நல்ல கருத்துக்கள் வெளி கொணரப்பட்டன என்பதே உண்மை.

மற்றொரு பதிவு 'பெண் பதிவர்கள் என்பவர்கள் கேலி பொருளா ?' ஒரு குழுமத்தில் பெண் பதிவர்களை கேலி செய்து போடபட்டதிற்கு எதிராக எழுதப்பட்ட ஒரு பதிவு. எனது பதிவில் பலரும் தங்களது கண்டனத்தை அந்த தளத்திற்கு எதிராக தெரிவித்திருந்ததின் பலனாக சம்பந்த பட்ட குழுமத்தில் இருந்த அந்த கேலி சித்திரம் நீக்கப்பட்டது. அந்த நேரத்தில் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த சக பதிவர்களுக்கு இந்த நேரத்தில் மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லி கொள்கிறேன்.

மற்றும் நான் எழுதிய 'மரங்களை வெட்டுங்கள்' என்ற ஒரு பதிவு சூறாவளிபோல் பல இடங்களையும் சுற்றி வந்தது. பல பதிவர்களுக்கும் பலரால்  மெயிலின் மூலம் இந்த பதிவு சென்றதை அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். கருவேலமரம் என்று கூகுளில் தேடினால் பலரும் என் பதிவை அப்படியே அவர்கள் பெயரில் வெளியிட்டு  இருப்பதை பார்த்தேன் . இதில் ஒரு ரசிக்க தகுந்த ஒன்றையும் பார்த்தேன், ஒரு குழுமத்தில் இந்த பதிவு வெளிநாட்டில் வாழும் தமிழர் ஒருவர் தன் தாய் நாட்டின் மீது கொண்ட பற்றின் காரணமாக இந்த பதிவை எழுதி இருக்கிறார் என்று இருந்தது. எப்படியோ ஒரு விழிப்புணர்வு பதிவு பலரையும்  சென்று அடைந்திருப்பதை பார்க்கும் போது  பதிவுலகம் முயன்றால் நல்ல விதைகளை விதைத்தால்  அது நிச்சயம் பலன் தரும் என்பதை எனக்கு உணர்த்தியது.

பெரிய சந்தோசம்

ஒரு புது உலகத்திற்குள் நுழைந்தது போன்ற உணர்வை தருகிறது இந்த பதிவுலகம்...பல நட்புகள் கிடைத்தன. ஆண் பெண் நட்பு கத்தியில் நடப்பதை போன்றது என்பார்கள் ஆனால் இங்கே எனக்கு கிடைத்த நட்புகள் மிக உன்னதமானவை தங்களது எல்லை எது என்பதை உணர்ந்த நாகரிகமானவர்கள். அன்பான தோழிகள், சகோதரர்கள் என்று எனது உறவுகள் எனக்கு உற்சாகத்தையும் வாழ்க்கையின் மேல் இன்னும் அதிக பிடிப்பையும் கொடுத்தன என்று சொன்னால் அது மிகையில்லை.

பிடித்த நல்ல மனிதர்கள் 

நண்பர்களில் முக்கியமானவராக ஒருவரை சொல்லவேண்டும் என்றால் தேவா என்று சொல்வேன். அவரது எழுத்துகளின் ரசிகை, தொடரும் அவர் பதிவுகளின் தீவிர வாசகி, அவரது எழுத்துகள் எனக்கு படிப்பினையை கொடுக்கிறது என்பதே உண்மை. (நல்ல தமிழை கற்றுக்கொள்ள அவரது பதிவை தொடர்ந்து படிக்கலாம்) அப்புறம் கே ஆர் பி செந்தில் , நர்சிம், ஈரோடு கதிர், பா.ராஜாராமன், இராமசாமி,பத்மஹரி,ஆதிரன்(மகேந்திரன்),அப்பாதுரை ,வானம்பாடிகள் பாலா, எஸ்.கே,விஜய், எஸ்.வி ,யோவ் ,ராமலக்ஷ்மி,தேனம்மை,  பத்மா ,முத்துலட்சுமி ,மனோ சாமிநாதன் இவங்க எழுத்துக்கள் மிக பிடிக்கும்.


எனது உடன் பிறக்காத சகோதரர்கள்  சௌந்தர்,கணேஷ். அப்புறம் சித்ரா,  ஹேமா, ஆசியா,வானதி, ஆனந்தி,தெய்வசுகந்தி, அப்பாவி தங்கமணி,ஜலீலா கமால்,இந்திரா,   நிலாமதி, சசிகுமார்,  LK , பாலாஜி, பாபு, செல்வா,ரமேஷ், terror ,அருண் பிரசாத்,சங்கவி, r.கோபி,அன்பரசன் மேலும் பலர் இருக்கிறார்கள் சொல்வதற்கு இங்கே இடம் கொள்ளாத அளவிற்கு...! இத்தகைய உறவுகளை கொடுத்த இந்த ஆண்டிற்கு (2010 ) நான் நன்றி சொல்லி கொள்கிறேன்.

இன்னும் சாதிக்க வேண்டியவை என்று சொல்லணும் என்றால் இந்த நட்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும், இன்னும் பல நல்ல பதிவுகளை எழுதவேண்டும், இந்த பதிவுலகத்தில் நானும் இருக்கிறேன் என்ற பெருமை கெடாமல் பார்த்து கொள்ள வேண்டும், முக்கியமாக பதிவுலகம் விட்டு செல்லும்  போது மனதில் ஒரு நிறைவுடன் விடை பெறணும் என்பதே !

சொந்த வாழ்வில் சாதிக்க விரும்பும் எண்ணங்கள் என்றால் சில லட்சியங்கள் இருக்கிறது பொதுவாழ்வில் குறிப்பா சமூக சேவையில் ஈடுபடனும் என்ற எண்ணம் நிறைவேற இப்போது முயற்சி எடுத்திட்டு வருகிறேன்.....அது நிறைவேறனும் என்பதே புது வருடத்தின்  எனது முதல் முக்கியமான பிராத்தனை.  

என் டைரியே !

உனக்கு என் மேல் மிகுந்த கோபம் 
உன்  பக்கங்கள் அதிக சுமையாகி விட்டது என்று !
உன் மேனி முழுவதும் பல நினைவுகள் 
எழுத்துக்களாய் இன்பச் சுமைகளாய்  !
என் மனச் சுமையை குறைக்கிறேன் என்று
புரிந்து கொள்ளேன் நீ !! 

இந்த தொடரை தொடர மத்தவங்கள  அழைக்கணும் என்பது விதிமுறையாம்...?!!  எல்லோரையும் அழைத்து யோசிக்க வைக்கணும் என்று ஒரு ஆசைதான். ஆனா பத்து பேரை மட்டும் தான் என்பதால் ரொம்ப கஷ்டப்பட்டு இவங்களை முன் மொழிகிறேன்......

சௌந்தர்
கணேஷ்
பாலாஜி சரவணன் 
இம்சை அரசன் பாபு
செல்வா  
வெறும்பய 
ஆனந்தி (அன்புடன் ஆனந்தி)
ஹேமா 
காயத்ரி (கவிநா)
தெய்வசுகந்தி

மேலும் தொடரை பற்றிய விவரங்கள் தெரிந்து கொள்ள இங்கே கிளிக்கவும் 
  


வெள்ளி, ஆகஸ்ட் 6

பதிவுலகில் இவள்...!


எனக்கு இந்த தொடர் பதிவு என்றால் கொஞ்சம் யோசனைதான்...நாம என்னத்தை  உருப்படியா தொடர போறோம்  என்று.  ஆனால் நண்பர் LK என்னையும் தொடர அழைத்ததை மதித்து இந்த பதிவை எழுதுகிறேன். இனி கேள்விகளும் அதற்கு  என் பதில்களும்....



1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
   
கௌசல்யா 

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

என் உண்மையான பெயரும் அதேதான். 

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி

என் கணவர் சொல்லித்தான் எழுத தொடங்கினேன். ( நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரிடம் எதை பற்றியாவது சொல்லி புலம்பிட்டு இருப்பேன். அவர்தான், ' என்னிடம் சொல்வதை வலைபதிவுலகில் சொல் ..... 'யாம்(ன்)  பெற்ற இன்பம் பெருக வையகம்'  என்றார். அவர் தப்பிச்சிட்டார்.....ஆனா நீங்க எல்லோரும்....??)  

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

அப்படி எல்லாம் ஒன்றும் தெரியாது. ஏதோ எழுதணும் என்று மட்டும்தான் ஆரம்பத்தில் எழுதினேன், பின்னர்தான் பிற தளங்களை பார்த்து தமிளிஷில் இணைந்தேன்....அதில் LK அவர்கள் முதலில்   summit பண்ணி ஆரம்பித்து வைத்தார்....தொடர்ந்து கொண்டு இருக்கிறேன்.....  பிரபலம் பற்றிய வார்த்தையில் எனக்கு உடன்பாடு இல்லை. எதை வைத்து 'பிரபலம்'  என்பது கணிக்க படுகிறது என்பதில் எனக்கு சில விளக்கங்கள் தேவை படுவதால், அதை பற்றி இன்று வரை யோசிக்கவில்லை.  

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

 யார் எழுதினாலும் அதில் சொந்த விசயங்கள் கண்டிப்பாக கலந்தே இருக்கும்....சில அனுபவம் கலப்பதை தவிர்க்க இயலாது. நானும் அப்படி சிலவற்றை பகிர்ந்து இருக்கிறேன்.  விளைவுகள் என்ன என்று அதை படித்தவர்களுக்கு தானே தெரியும். 

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பொழுது போக்காகத்தான் எழுத தொடங்கினேன். ஆனால் இந்த எழுத்தால் சில நல்லவைகளும் நடந்து கொண்டு இருக்கிறது. தாம்பத்தியம், கள்ளகாதல் போன்ற  பதிவை படித்த சிலர் மெயிலின்  மூலம் என்னிடம்  தொடர்பு கொண்டு ஆலோசனைகளையும், சந்தேகங்களையும் கேட்கிறார்கள். அப்போதுதான் புரிந்தது.... இனி பொழுதுபோக்கு என்று நினைத்து எழுதாமல் பிறருக்கு பயன்படணும் என்று... கொஞ்சம் அதிகமாக கவனம்  எடுத்து எழுதிக்கொண்டு இருக்கிறேன்.    

சம்பாதிக்கிறதா அப்படினா....? 

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

 இரண்டு வலை பதிவுகள் உள்ளன.  சிந்தனைக்கு 'மனதோடு மட்டும்',  மனதை கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண 'வாசல்' 

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பிறரின் மீது பொறாமை அப்படி என்று எல்லாம் இல்லை, ஆனால் நகைசுவையாக  எழுதுபவர்களின் பதிவை மிகவும் விரும்பி படிப்பேன்.  கோபம் என்று பார்த்தால் சில நேரம் வந்தது உண்டு, எழுத்தின் வலிமையை  புரிந்து  கொள்ளாமல் அதை வைத்து தங்கள் சொந்த விருப்பு வெறுப்புக்காக அரசியல் செய்பவர்களை எண்ணி கோபம் வரும்.    

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..      

தமிளிஷில் இணைவதற்கு முன், முதன்  முதலில் என்னை பாராட்டியவர் ஆதிரன் (  மகேந்திரன் ) அவர்கள் தான்.  இன்றும்  எனக்கு ஒரு நல்ல நண்பர். அந்த பாராட்டு என்னை இன்னும் அதிகமாக சிந்தித்து எழுத தூண்டியது. 





அந்த பாராட்டு...,
//this is very glad to know you write this article with the heading 'kalla kaathal'.
thanks.

சமூகத்தின் மிக முக்கியமான உளவியல் பிரச்சனை இது. சரியான கோணத்தில் நுழைந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். நன்றி//


April 18, 2010 2:03 PM//
    
 10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்.

சக பதிவர்களுக்கு இங்கே ஒன்றை சொல்லி கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.  நாம் நட்புக்காக என்று மட்டும் பார்க்காமல் நல்ல பதிவுகள் எங்கே இருந்தாலும் அதை கவனித்து அவர்களையும் உங்கள் வாக்குகளாலும், பின்னூட்டத்தாலும் ஊக்கபடுத்துகள். பின்னூட்டம் எழுத நேரம் இல்லை என்றாலும் வாக்கையாவது அளித்து,  அந்த பதிவு பலரை சென்று அடைய  உதவுங்கள். 


எல்லோருமே ஒரு சிறு அங்கீகாரத்திற்காக தான் காத்து இருக்கிறோம்...அந்த அங்கீகாரத்தை நாம் பிறருக்கும் கொஞ்சம் கொடுப்போமே....! 


பல நல்ல பதிவுகள் சரியாக கவனிக்க படாமலேயே போய்விடுகிறது...ஒரு சில சாதாரண பதிவுக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவு என்னை சில சமயம் அதிர்ச்சி அடைய  செய்கிறது...நட்பை ஆதரிக்க வேண்டியதுதான்...(ஆனால் கண்ணை மூடிக்கொண்டு அல்ல )   


"தேவையான நேரம் கொடுக்க படாத அங்கீகாரம், இருட்டு அறையில்.... மெழுகுவர்த்தி இருந்தும்  ஏற்றி வைக்க படாமல் இருப்பதை போன்றது...."


பதிவுலகம் எனக்கு, பல நல்ல நட்புகளையும், அன்பான உறவுகளையும் கொடுத்து இருக்கிறது... அதற்காக உண்மையில் பெருமை படுகிறேன். 


"உரிமையாக கடிந்து கொள்ளவும், 
 தவறுகளை சுட்டி காட்டவும், 
 பொழுது போக்கிற்காக பேசாமல் 
 கருத்துகளை பரிமாறி கொள்ள பேசுகிற, 
 முகவரியும் முகமும் தேவை இல்லை 
 'அகம் ஒன்றே அகமகிழ்ச்சி' என்று 
 பிடிவாதம் பிடித்து நட்பை வளர்த்து 
 கொண்டு இருக்கிற, உங்கள் அனைவரின் 
 நட்பிற்கு ஈடாக வேறு ஒன்று 
 இந்த உலகில் இருப்பதாக 
 எனக்கு தெரியவில்லை..."


இந்த தொடர் பதிவை பெரும்பாலும் பலரும் எழுதி விட்டார்கள் என்று நினைக்கிறேன்.... நண்பர் LK அழைத்ததில் இன்னும் தொடராமல் இருக்கும் நண்பர் தேவா இனி தொடருமாறு அழைக்கிறேன்....( அப்பாடி... நான் அழைக்க ஒருத்தராவது கிடைச்சாரே) 


 ( தம்பி சௌந்தர் சொன்னதுக்காக பயந்து இந்த பதிவை எழுதவில்லை....அந்த கட்சியில் இருந்து என்னை நீக்கிவிட்டாலும் கவலையில்லை....புது கட்சி தொடங்கிவிடுவேன் என்று இதன் மூலம் சொல்லி கொள்கிறேன்....!!)