மின்சாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மின்சாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஆகஸ்ட் 16

மின்சாரம் - மகிழ்ச்சியான செய்திகள்

நம் நாட்டில் இப்ப இருக்கும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்றுதான் 'மின்தட்டுப்பாடு'.  நம்ம அரசும் என்ன என்னவோ முயற்சி செய்தாலும் (உண்மை தாங்க ) இதை மட்டும் சரி படுத்தவே  முடியவில்லை...??!! தினம் இரண்டு மணி நேரம் இல்லை மூணு மணி நேரம் விருப்பம் போல் கரண்ட் கட் தான். ஆனால் மின் உற்பத்திக்காக பல இடங்களில் மின் காற்றாலைகளை  நிறுவி வந்தாலும் பிரச்சனை தீர்ந்த பாடில்லை. ஆனால் மின் உற்பத்தியை அதிகரிக்க செய்ய சில வழிமுறைகள் இருக்கின்றன. அதை இங்கே பார்க்கலாம். 

அதில் முக்கியமான ஒன்றுதான் 'மரபு சாரா எரிசக்தி'. அதாவது விவசாய கழிவுகள், நெல் உமி, தேங்காய் மட்டை, காடுகளின் கழிவுகள், கோதுமை கழிவு, குப்பை இவைகளில் இருந்தும்  மின் உற்பத்தி பண்ண முடியும், இவை எல்லாம் மரபு சாரா எரிசக்திகள். இவற்றில் இருந்து எல்லாம் மின்சாரம் தயாரிக்க முடியும் என்பதே பலருக்கும் தெரியாத  புது தகவல்  என்று நினைக்கிறேன். (ஒருவேளை உங்களுக்கு தெரிந்து இருந்தால் விவரங்களை சொல்லுங்கள் , உபயோகமாக இருக்கும் )

பல பொறியாளர்கள் பரிந்துரை செய்தும், நம் தமிழ் நாடு அரசு இவற்றில் இருந்து மின் உற்பத்தி செய்ய இதுவரை முயற்சி எடுத்ததாக  தெரியவில்லை ??  காரணம் தெரியவில்லை...?? ஆந்திராவில் நெல் உமியில் இருந்து மின்சாரம் தயாரிக்கக்கூடிய  45 மின் உற்பத்தி நிலையங்கள் 4 வருடங்களாக செயல்பட்டு வருகின்றன...??!!  அங்கே அனுபவமிக்க பொறியாளர்களின் ஆலோசனையினை   பெற்று அதன்படி வெகு ஜோராக மின் உற்பத்தி செயல்படுத்தபட்டு வருகிறது. இன்று 45 நிலையங்களில் ஒவ்வொன்றும் தலா 6  மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. இது கொஞ்சம் மகிழ்ச்சியான செய்திதான். 

மின் உற்பத்தி செய்வது ஒரு பக்கம் இருக்கட்டும்......இருக்கும் மின்சாரத்தை எப்படி எல்லாம் வீணாக்குகிறோம் என்பது தெரிந்தால் நம்முடைய ரத்த அழுத்தம் இன்னும் அதிகமாகும்.....

முறையற்ற மின் விநியோகம்

மின்சாரத்தை கொண்டு போய் விநியோகம் செய்யும் வழிமுறைகளினால் மட்டும் 30௦%  மின்சாரம் வீணாகிறது என்பதே அந்த  அதிர்ச்சியான செய்தி. ஆனால் பெருமையான விஷயம் என்னனா இந்த ஒழுங்கற்ற மின் விநியோகத்தால் மின்சாரத்தை வீணாக்குவதில் உலகத்திலேயே இந்தியாவிற்க்குதான் முதல் இடமாம்..... என்ன கொடுமைங்க இது ??!!

இதிலும் தமிழகத்தின் நிலை இன்னும் மோசம். மத்திய மின்சார ஆய்வு நிறுவனம் தமிழகத்தில் தற்போது செயல்பட்டுக் கொண்டு இருக்கும் ட்ரான்ஸ்பார்மர்களை  மாற்றச் சொல்லி 5 வருடம் ஆகிறதாம்....இதுவரை மாற்றவில்லை. ( இன்னும் பல வருடம் ஆகும்....?! முதல் இடத்தை அவ்வளவு சீக்கிரம் இழக்க மனசு வராதே  ??)

கழிவில் இருந்து மின்சாரம்

இந்த முறையில் ஆஸ்திரேலியா தனது மின் தேவையை பெருமளவு பூர்த்தி செய்கிறது.  கழிவு நீரை வடிகட்டி, அதில் இருக்கும் கழிவுகளை உருண்டைகளாக்கி  , அதில் இருந்து மின்சாரம் தயாரிப்பதுதான் 'கழிவு நீர் மின் உற்பத்தி'. இந்த முறையை நாம் செயல்   படுத்தினால் நமக்கு இரண்டு விதத்தில் ஆதாயம்.



 'பல கோடி  ரூபாய்' செலவு செய்து கூவத்தை சுத்தபடுத்த போவதற்காக  சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்து இருக்கிறது 'தமிழகம்'.  அதற்கு மாற்றாக  கூவத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடிவெடுத்தால் கூவமும்  சுத்தமாகும், நமக்கு மின்சாரமும் கிடைக்கும். அதற்காக கூவம் கரைகளின் ஓரத்தில்  பெரிய அளவிலான 'நீரேற்று நிலையங்களை' அமைத்து கூவம் நீரை சுத்திகரிக்கவேண்டும். பின்னர்  அந்த சுத்திகரிக்கபட்ட நீரை தொழிற்சாலை தேவைகளுக்கும், சேகரித்த  கழிவு உருண்டைகளை  மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுத்தி கொள்ளலாம்.  (ஒரு கல்லில் இரண்டு மாங்காய் )

சூரிய ஒளி மின்சாரம்



சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும்.  இதற்கு கட்டிடங்களின் உச்சியில் சூரிய ஒளி மின்சாரத்துக்கான 'சோலார் பேனல்' களை பொருத்தினால் போதும். ஆரம்ப முதலீடு காஸ்ட்லி என்றாலும் எதிர்காலத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்று தொலைநோக்கு பார்வையோடு பார்க்கும் போது , 'இதுதான் நிரந்தர தீர்வு' என்று அடித்து சொல்லலாம்.

இவை எல்லாம் அரசாங்கம் மட்டும் தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதை நம்பி இருப்பதற்கு பதில் நம்மால் முடிந்தவரை இவற்றை நாமே செய்து கொள்ள முடியும் என்று ஒரு குடும்பம் நிரூபித்து உள்ளது. இங்கே இல்லை பக்கத்தில் பெங்களூருவில் தான் அந்த அற்புதம்.

சிவகுமார் என்பவர் கர்நாடக மாநில அறிவியல் மற்றும் தொழிநுட்பத்துறையில் முதுநிலை விஞ்ஞானி. அவரது மனைவி திருமதி சுமா. இவர்களின் இல்லத்தில் தான் அந்த அதிசயம்.  10 வருடங்கள் முன் வீடு கட்டியதில் இருந்து இன்று வரை 'மின் இணைப்போ', 'குடிநீர் இணைப்போ', 'சமையல் எரிவாயு இணைப்போ' இல்லை...!! மாற்றாக சூரிய ஒளியும், மழை நீரும் தான்....!!??

வீட்டின் ஒவ்வொரு அறையின் கூரையிலும் நேரடியாக சூரிய ஒளி ஊடுருவும் வகையில் அந்த கட்டிடம் வடிவமைக்க பட்டுள்ளது. மின்சார தேவைக்கு 10 வருடங்களுக்கு முன் 7000  ரூபாய்  செலவில் மொட்டை மாடியில் 'சூரிய ஒளி மின் உற்பத்தி சிஸ்டத்தை' அமைத்துள்ளார்.

மழைநீர் சேகரிப்பு




தண்ணீர் தேவைக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த வழி 'மழைநீர் சேகரிப்பு'  தான். 45 ஆயிரம் லிட்டர் மழைநீரை சேகரிக்கும் தொட்டிகள் அமைத்து அதை சுத்திகரிக்க பில்டரை அவரே வடிவமைத்துள்ளார்.  அந்த 'பில்டர்'தான் இப்போது மாநில அரசுகளால் பரிந்துரை செய்யபடுகிறது.  இவர்கள் வீட்டை உதாரணமாக வைத்து மழைநீர் சேகரிப்பு முறையை வீட்டில்  அனைவரும் ஒரு மாதத்தில் அமைக்க வேண்டும் என்று சட்டமே போட்டு விட்டதாம் அரசாங்கம்.

ஆனால் நம்ம ஊர்ல போடப்பட்ட மழை நீர் சேகரிப்பு திட்டம் என்ன ஆச்சுனு... எப்படி சொல்ல....ஆரம்பத்தில் நல்லாத்தான் இருந்தது...மக்களிடம் சரியான விழிப்புணர்வை  ஏற்படுத்தாமல் போய்விட்டதால், ஏதோ கடமைக்கு செய்வது போல் மக்கள் செயல் படுத்தினார்களே  ஒழிய முழு மனதுடன் , முழு ஈடுபாட்டுடன் செய்யவில்லை....

எந்த ஒரு 'நல்லதுமே ஒரு வீட்டில் இருந்துதான்' தொடங்குகிறது என்பார்கள். அரசாங்கத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி குரல் கொடுப்பது அவசியம் தான்.  அதே சமயம் நம்மால் முடிந்தவரை தேவைகளை பூர்த்தி செய்ய முன் வரலாமே....

அடுக்குமாடி குடியிருப்பவர்களில் சேரும் கழிவு நீரை அவர்களே தகுந்த ஆட்களை வைத்து தேவையான மின்சாரம் தயாரித்து, மிச்ச நீரை செடிகளுக்கு உபயோகபடுத்தி கொள்ளலாம். வழிமுறைகளை சொல்லி கொடுக்க பொறியாளர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.  முயற்சியை நாம்தான் எடுக்க வேண்டும் 

சொந்த வீடு வைத்து இருப்பவர்கள் கொஞ்சம் 'இச்செய்தியை செவிமடுத்து, (செல் எடுத்து') சம்பந்த பட்டவர்களிடம் பேசி உங்கள் வீட்டையும்  மற்றவர்களுக்கு முன் உதாரணமாக்கி காட்டுங்களேன் எனதருமை பதிவுலக தோழர்களே....

நன்றி ஜூனியர் விகடன்