மாடித் தோட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாடித் தோட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மார்ச் 18

வீட்டுத்தோட்டம் ரொம்ப ரொம்ப ஈசிதான் - 5 இயற்கை உரம் தயாரிப்பு

வீட்டுத்தோட்டம் போடுவதே ரசாயன உரத்தில் இருந்து தப்புவதற்கு தான். அதனால் காய்கறி தோட்டத்துக்கு வேதி உரம் எதையும் வாங்கி போட்டுடாதிங்க. உரம், மருந்து , வளர்ச்சி ஊக்கி என அனைத்தையும் இயற்கை முறையில் நாமே தயாரிக்கலாம்.

இயற்கை உரம் என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது மாடு!! அடடா சிட்டியில் மாட்டுக்கு எங்க போகனு கேட்கிறீங்களா? மாட்டின் பயன்பாடு  தெரிந்துவிட்டால் எங்கே கிடைக்கும் என்று அந்த இடங்களை தேடிச் சென்று விடுவீர்கள். அவை கிடைக்கும் வாய்ப்பு பெற்றவர்கள் அது தொடர்பான முறைகளையும் இயலாதவர்கள் அது தவிர்த்த வேறு முறைகளை கையாளலாம், அதில் ஒன்றுதான் சமையலறை  கழிவுகள்  உரம். இந்த வீட்டுத்தோட்டம் தொடர் 'சுலபமாக' தோட்டம் போடுவதை பற்றியது என்பதால் கையில்/அருகில்  கிடைப்பதை வைத்தே சிறப்பாகச் செய்ய முயற்சி செய்வோம். 

Compost bin - Khamba




கிச்சனில் சேரும் காய்கறிக் கழிவுகளை இதில் போடவேண்டும். மூன்று பாகமாக இருக்கும் இதில் முதலில் மேலே உள்ள பாகத்தில் செய்தித்தாளை விரித்து அதன் மீது கழிவுகளை போட்டு வாருங்கள். கழிவுகள் போடப் பட்டதும் மற்றொரு செய்தித்தாளை கழிவுகளின் மேல் விரித்து khamba மூடியை மூடுங்கள். ஒரு பாகம் நிரம்பியதும் அப்படியே தூக்கி கீழ் பாகமாக வைத்துவிட்டு காலியாக இருப்பதை மேலே வைத்து இப்போது இதில் கழிவுகளை சேகரியுங்கள். மிச்ச இரண்டும் நிரம்புவதற்குள் முதலில் போடப்பட்டது உரமாகியிருக்கும்.  பொதுவாக உரமாக மாற  மூன்று  மாதம் ஆகும்.

khamba இல் காய்ந்த இலைச் சருகுகள், காய்கறிக்  கழிவுகள் போன்றவற்றை போடலாம்.  முடிந்தால் வாரம் ஒரு முறை ஒரு சிறிய குச்சியால் கழிவுகளை கிளறிவிடுங்கள். கழிவுகளில் maggot எனப்படும் சிறு புழுக்கள் உருவாகும், இவைகள் தான் கழிவுகளை மக்க வைப்பவை. உரமாகியதும் இவை பெரும்பாலும் மடிந்துவிடும் அல்லது flies ஆக மாறி வெளியேறிவிடும். kampa முறையில் காய்கறிக்கழிவுகளை உரமாக்குவதால் bad smell ஏதும் இல்லை.



Khambaவில் உரம் தயாரிக்க  சில டிப்ஸ்

* மரத்தூளும் தேங்காய் நார் கழிவும்(coco peat)  காய்கறிக்கழிவில் உள்ள  அதிக நீரை எடுத்துக் கொண்டு உரமாவதை துரிதப் படுத்தும். எனவே இவற்றில் எது கிடைத்தாலும் வாங்கி கழிவுகளின் மீது தூவி விடுங்கள்.

* உரமாவதை துரிதப் படுத்த புளித்த தயிர் / பஞ்சகவ்யா/ தண்ணீரில் கரைத்த சாணம் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

* maggots அதிகம் இருந்தால் அதன் உற்பத்தியை கட்டுப்படுத்த சிறிதளவு வேப்பந்தூள் அல்லது மிளகாய்த் தூளை தூவலாம்.

* உரம் அதிக ஈரமாக இருந்தால் நிழலான இடத்தில் இரண்டுநாள் உலர்த்தலாம்.

* கழிவுகளை மேல் விளிம்பு வரை போட்டு அடைக்கக் கூடாது, காற்று செல்ல வசதியாக சிறிது இடம் இருக்க வேண்டும்.

* உரத்திற்கு நைட்ரஜன் (சமையலறை கழிவுகள்) கார்பன்(காய்ந்த இலைகள்) இரண்டும் தேவை... இலைகள் கிடைக்கவில்லைஎன்றால் பழைய செய்தித்தாள் (கிழித்து தண்ணீரில் நனைத்தது) உபயோகிக்கலாம்.

* காய்கறி, பழக் கழிவுகளை அப்படியே போடாமல் பெரிய துண்டுகளை சிறிதாக்கி போடுங்கள்.  

மூன்று மாதம் கழித்து உரம் தயாராகியதும் கடைகளில் கிடைக்கும் vegitable basket(துளைகள் உள்ளது) வைத்து  உரத்தை சலித்து எடுத்து சேமித்து வைத்து தேவைப்படும்போது உபயோகிக்கலாம். Khamba கிடைக்க வாய்ப்பில்லாதவர்கள் மண் பானையை பயன்படுத்துங்கள். அதில் காற்று உள்ளே செல்ல சிறு துளைகளை கவனமாக ஏற்படுத்தவேண்டும். இரண்டு துளைகள் போடமுடிந்தாலும் போதும். (சந்தேகம் இருந்தால் கமெண்டுங்க அல்லது மெயிலுங்க)

செடிகள்  செழிப்பாக  வளர ...

* காலாவதியான மாத்திரைகளை தூள் செய்து போடலாம். உபயோகம் இல்லாத டானிக், சிரப் போன்றவற்றை தண்ணீரில் கரைத்து ஊற்றலாம்.(பூச்செடிகளுக்கு மட்டும்)


* வீட்டில் சேகரமாகும் டீத்தூள் தவிர அருகில் டீக்கடை இருந்தால் அவர்களிடம் ஒரு பிளாஸ்டிக் பக்கெட் கொடுத்து அதில் உபயோகித்த டீத்தூளை போடச்சொல்லுங்கள். (கடைக்காரர் நண்பராக இருந்தால் வசதி) :-)

* அதே  மாதிரி பரோட்டா கடையில் ஒரு பிளாஸ்டிக் பையை கொடுத்து வைத்தால் முட்டை ஓடுகளை வாங்கிக்கொள்ளலாம். இதை தூள் செய்து போடலாம்.கால்சியம் சத்து செடிகளுக்கு அவசியம். 

முள்ளங்கி  

* வாழைப்பழத்தோல் சிறந்த உரம். காயவைத்து துண்டுகளாக கட் பண்ணி மிக்ஸியில் போட்டு தூளாக்கி செடிகளுக்கு தூவலாம். முக்கியமாக தக்காளிக்கு அவசியம் போடவேண்டும். செடிகளுக்கு தேவையான  பொட்டாசியம் சத்தை இது கொடுக்கும்.

* அரிசி ஊறவைத்த/கழுவும் நீரையும், சாதம் வடித்த நீரை ஆறவைத்தும்   ஊற்றலாம். 

* கடைகளில் கடலைப் பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு என்று கிடைக்கும். அதை வாங்கி அப்படியே நொறுக்கி போடலாம், ஊறவைத்து கரைத்தும்  போடலாம். ஒரு செடிக்கு ஒரு ஸ்பூன் அளவு என்று வைத்துக் கொள்ளுங்கள்.

* ஒவ்வொரு செடிக்கும் ஒரு ஸ்பூன் எப்சம் சால்ட்டை தண்ணீரில் கரைத்து ஊற்றலாம். இந்த சால்ட் மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

மீன்கழிவில் இருந்து வளர்ச்சி ஊக்கி

மீனை  சுத்தப்படுத்தியதும் வீணாகும் மீன் கழிவை சேகரித்து  (கடைகளில் கிடைக்கும்) அதே அளவிற்கு வெல்லம் சேர்த்து ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் போட்டு அதன் மூடியால்  டைட்டாக  மூடி விடுங்கள். இரண்டு நாள் கழித்து திறந்து லேசாக கிளறி விடுங்கள். பிறகு மறுபடியும் நன்றாக மூடி அப்படியே வைத்துவிடுங்கள். bad smell இருக்கவே இருக்காது.  இருபது நாட்கள் கழித்து எண்ணெய் போன்று மேலே மிதப்பதை வடித்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். மீன் வளர்ச்சி ஊக்கி ரெடி.  ஒரு லிட்டர் வளர்ச்சி ஊக்கி, பத்து லிட்டர் தண்ணீர் (1:10) சேர்த்து செடிகளுக்கு தெளிக்கவும், செடி அருகில் ஊற்றவும் செய்யலாம். தேவைப் படும்போது தயாரித்து பயன்படுத்துங்கள்.

பிளாஸ்டிக் கவரில் முட்டைகோஸ் 
படித்ததை அனுபவத்தில் அறிந்து, பயன்பெற்று இங்கே பகிர்கிறேன். எல்லோருக்கும் எல்லாம் வசதி படவில்லை என்றாலும், வீட்டுத்தோட்டம் தொடரில் சொல்லப்பட்டிருப்பதில் உங்களுக்கு சௌகரியப்படுவதை மட்டும் பார்த்துக்கொண்டால் போதுமானது.

நேரம் இருந்தால் வீட்டுத் தோட்டம் பற்றிய இந்த வீடியோ பாருங்க...
   
http://www.youtube.com/watch?v=FBmLZ0zwu88

நான் Khamba வை கோயம்புத்தூரில் வாங்கினேன். இதை பற்றிய விவரங்கள் தேவையென்றால் கோவை தெலுங்குப் பாளையத்தை சேர்ந்த திரு. ராஜேந்திரன் அவர்களை தொடர்புக் கொள்ளுங்கள் அவரின் மொபைல் எண் : 9944309603.

ஆன்லைனில் வாங்க பிளீஸ் கிளிக் - www.dailydump.org

Happy Gardening ...


பிரியங்களுடன்
கௌசல்யா
mail id : kousalyaraj10@gmail.com

படங்கள் - எங்கள் பால்கனி தோட்டத்தில் எடுத்தவை 



வியாழன், ஜனவரி 29

'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 4


இதற்கு முந்தையப்  பதிவுகள்

வீட்டுத்தோட்டம் - 1 
வீட்டுத்தோட்டம் - 2 
வீட்டுத்தோட்டம் - 3

வீட்டுத் தோட்டம் என்பது சுவையான, சத்துள்ள, இரசாயனத்தன்மை அற்ற காய்கறிகளை உற்பத்திச்  செய்வது மட்டுமல்ல...பழையப்  பொருட்களை மறு சுழற்சிச்  செய்வதும் தான். பழைய பிவிசி பைப் , பிளாஸ்டி டப்பாக்கள் , பெயின்ட் வாளி, ஓட்டை உடைசல் பாத்திரங்கள், அட்டைப் பெட்டிகள்  மட்டுமல்ல வீணாக குப்பைக்கு போகும் சமையலறைக்  கழிவுகள், காய்கறிக் கழிவுகள், காய்ந்த இலைத் தழைகள், முட்டை ஓடு, தேயிலை, காபித்  தூள் கழிவுகள் போன்றவற்றை மறுஉபயோகம் செய்வதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு மிக பெரிய  நன்மையை செய்தவர்களாகிறோம். (இனி யாரும் உங்களைப் பார்த்து நீ பொறந்த இந்த மண்ணுக்கு பெருசா என்ன  செஞ்சனுக்  கேக்கவே முடியாது) :-)

ஊரில் எங்களின்  சொந்த வீட்டைச்  சுற்றி நிறைய இடம் அதுவும் வளமான செம்மண் இருப்பதால் தொட்டிகளில் காய்கறித்தோட்டம் போட வாய்ப்பில்லை.  ஆனால் தொட்டியில் வளர்த்துப் பார்க்க  ஒரு சந்தர்ப்பம் தற்போது அமையவே பயன்படுத்திக் கொண்டேன். இது எனக்கு முற்றிலும் ஒரு இனிய அனுபவமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. அவற்றை இங்கே பகிருகிறேன். நிச்சயமாக  எனது இந்த அனுபவங்கள் உங்களுக்குப்  பயன்படும். 
  
பால்கனித் தோட்டம்

ஒரு சொந்த வேலையாக உடுமலைபேட்டையில்  ஏழு  மாதம் தங்கவேண்டிய சூழல். மாடியில் வீடு, முன்னாடி சிறிய பால்கனி, நல்ல காற்றோட்டமான இடம் மனதை வசீகரிக்கத்  தோட்ட வேலையை ஆரம்பித்துவிட்டேன். தினமும் ஒரு மணி நேரம் இங்கே செலவுச்  செய்கிறேன். நான்கு மாதம் ஆகிறது... தற்போது இங்கே இருப்பவை பாகற்காய், சுரைக்காய், தட்டைபயிறு, சௌசௌ, அவரைக்காய் போன்ற கொடி வகைகள், தக்காளி, மிளகாய், கத்தரிக்காய், முட்டைகோஸ், முள்ளங்கி போன்ற செடி வகைகள், மணத்தக்காளி, மஞ்சள் கரிசிலாங்கண்ணி, பச்சை, சிகப்பு பசலை கீரைகள், பாலக் கீரை,  புளிச்சக் கீரை, பொன்னாங்கண்ணி, புதினா  போன்ற கீரை வகைகள், பிரண்டை, லெமன் கிராஸ், வெற்றிலை , துளசி, சோற்றுக் கற்றாழை, கற்பூரவல்லி (ஓமவல்லி) போன்ற மூலிகைகள் இவை தவிர  அன்னாசி , 2 ரோஜா செடிகள், changing ரோஸ் ஒன்று, செவ்வந்தி, இரண்டு வகை செம்பருத்தி, நான்கு வகை குரோட்டன்ஸ், மற்றும் ஒரு அவகோடா, ஒரு செண்பக மரக்கன்று, செவ்வாழை கன்று, இரண்டு பாக்கு மரக்கன்றும் (ஊர் போனதும் மண் தரையில் எடுத்து வைக்கவேண்டும்) இருக்கின்றன.  

இயற்கை முறையில் மாடித்தோட்டம் ,
அட்டைப் பெட்டியில் பாகற்காய் கொடி  

அனைத்தும் பிளாஸ்டிக் தொட்டிகள், அட்டைப் பெட்டிகள்,  மினரல் வாட்டர் கேன்கள், அரிசி சாக்குகள் , பிளாஸ்டிக் கவர்கள் தவிர கையில் கிடைக்கும் எந்த பொருளும் தொட்டியாக மாறிவிடும். இளநீர் குடிச்சதும் அவற்றையும்    தொட்டியாக மாற்றியாச்சு.

முக்கியமாக இவை எதற்கும் மண் போடவில்லை. உடுமலைபேட்டை,பொள்ளாச்சியை சுற்றி  தேங்காய் நார் கழிவு (coco peat) கம்பெனிகள் இருப்பதால் அவர்களிடம் coco peat blocks வாங்கி
அதனுடன் ஊரில் இருந்து கொண்டு வந்த மக்கிய ஆட்டுச் சாணம் கலந்திருக்கிறேன். இவை இரண்டும் தவிர கிச்சன் கழிவுகள் அனைத்தையும் உரமாக மாற்றிப் போட்டுவிடுவேன்.  அரிசி கழுவிய தண்ணீர், மீன், சிக்கன், மட்டன் கழுவிய தண்ணீர் , முட்டை ஓடுகள் என அனைத்தும் பால்கனிக்கு வந்துவிடும். தேங்காய் நார் கழிவு, நீரை பிடித்துவைத்து கொள்வதால் மூன்று  நாள் தண்ணீர் ஊற்றவில்லை என்றாலும் செடிகள் வாடுவதில்லை. coco peat இன் எடை லேசாக இருப்பதால்  தொட்டிகளின் கனம் தாங்காமல் வாடகை வீட்டு மாடி பால்கனி  டமால்னு கீழே விழுந்துவிடும் என்ற பயம் இல்லவே இல்லை :-)

மனதோடு மட்டும் - மாடித்தோட்டம்
மிதிப் பாகற்காய் என்ற ஒரு வகை , சுவை மிகுந்தது 

பூக்கள் பூக்கத் தொடங்கியதும் வண்ணத்துப்பூச்சிகள் வந்து குடித்தனம் நடத்தத் தொடங்கிவிட்டன. தேன்சிட்டு ஒன்று ரெகுலர் விசிட்டர்,  வீட்டினுள்ளே பரவும் பூக்களின் மணம்  அவ்ளோ ரம்யம் !! தக்காளி, பாகற்காய், அவரைக்காய் காய்த்து தற்போது சமையலறைக்கும் வந்துவிட்டன. புதினாவை இருமுறை துவையலுக்கும் மூன்று முறை பிரியாணிக்கு சேர்க்கவும் பறித்தாகிவிட்டது. பறிக்கப்  பறிக்க வேக வேகமாக வளருவதே ஒரு அழகுதான்.

செடிகளில் எறும்பு தெரிந்தால் மஞ்சள் பொடி, பெருங்காயத்தூள் தூவுவேன். பூச்சிகள் இருந்தால் பூண்டு,பச்சை மிளகாய், இஞ்சி மூன்றையும் அரைத்து சாறு  எடுத்து தண்ணீர் கலந்துத்  தெளிப்பேன்.  வேப்ப இலைகளை அரைத்து கலந்த தண்ணீரையும் தெளிக்கலாம். இன்னும் பல முறைகள் இருக்கின்றன...அடுத்தடுத்த பதிவுகளில் ஒவ்வொன்றாகச்  சொல்கிறேன்.

மாடியில் தோட்டம் போடுவதால் பூச்சிகளின் தொல்லை சுமார் 70 சதவீதம் குறையும் என்கிறார்கள்.

எளிய பந்தல்  முறை


கொடி படர ஆரம்பித்தப்போது ...

பாகற்காய் பந்தல் போட பால்கனியில் வசதி இல்லை. ஸ்லாபில் மழை நீர் வடிய அரை அடி நீள பிவிசி பைப் இரு பக்கமும் இருந்தது.  இரண்டுக்குமாய் கட்டுக்கம்பியை இழுத்துக்  கட்டினேன். (4 அடி நீளத்திற்கு கட்டு கம்பியை 14 துண்டு  வெட்டி வைத்துக் கொண்டேன்)  ஓரத்தில் இருந்து ஒவ்வொரு கம்பியாக  கட்டி தொங்க விட்டேன். கீழ் நுனியில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை கட்டினேன்,   கம்பி வளையாமல் ஸ்ட்ரைடாக இருப்பதற்காக. (பாட்டில்களில் cocopeat + compost  நிரப்பி புதினா,தக்காளி , பசலை கீரைகளை நட்டு வைத்திருக்கிறேன்) இப்படி வரிசையாக ஏழு  கம்பிகளையும் கட்டி பாட்டில்களைத்  தொங்க விட்ட பின் குறுக்காக  மிச்ச ஏழு கம்பிகளையும் சிறிது இடைவெளி விட்டு கட்டினேன்.  குறுக்கும் நெடுக்கும் இணைக்க கம்பியை சிறிது வளைத்து ஒரு சுற்று சுற்றினால் போதும். அவ்வளவுதான்.  பந்தல் ரெடி.  இருக்கும் இடத்திற்கு ஏற்ப நமது கற்பனையை சிறிது கலந்தால் போதும், எத்தகைய சிறு இடத்திலும் தோட்டம் போட்டுவிடலாம்.

காய்கறிக் கழிவு உரம்

கடைகளில் இதற்கென மண் கலன்கள் கிடைக்கின்றன. கிடைக்காதவர்கள் வீட்டில் இருப்பதை வைத்தே தயாரிக்கலாம். மண் தொட்டி, மண்பானையையும் பயன்படுத்தலாம். நான் பழைய இருபது லிட்டர் மினரல் வாட் கேன் ஒன்றின் அடி பகுதியில் சிறு துளை இட்டு அதனடியில் ஒரு பிளாஸ்டிக் பிளேட்  என தயார் செய்தேன்.. மேல் பகுதி வழியாக கழிவுகளை போட்டுக் கொண்டு வர  கழிவு நீர் பிளேட்டில் சேகரமாகும். வாரம் ஒரு முறை அதை எடுத்து தண்ணீர் கலந்துச்  செடிகளுக்கு ஊற்றலாம். கழிவு நீர் வீரியம் ஜாஸ்தி என்பதால் அப்படியே ஊற்றக் கூடாது, செடி கருகிவிடும்.  maggot எனப்படும் புழுக்கள் கழிவுகளில் உருவாகும், இவைதான் கழிவுகளை மக்க வைப்பவை. கழிவுகள் போடப்பட்டதும் கேனின் வாய் பகுதியை மூடி விட  வேண்டும். ஒரு நீளமான குச்சியால் கிளறிவிடலாம்.  கேன் நிறைந்ததும் அடுத்த கேனில் போட்டுவரவேண்டும்.  அறுபது நாளில் அதிகபட்சம் மூன்று மாதத்தில் உரம் தயாராகிவிடும். கருமைநிறமாக மாறி இருக்கும் உரத்தை கேனின் வாய்பகுதி வழியாக எடுக்கலாம்.

( காய்கறிக் கழிவுகளை உரமாக மாற்றும்  Kamba என்னும் compost bin ஒன்றை கோயம்புத்தூரில் வாங்கினேன். அதைப்  பற்றிய விவரம்  அடுத்த பதிவில்...)

இயற்கையான முறையில் விளைந்த காய்கறிகள் வெறும் உணவு பொருள் மட்டுமல்ல, நமது ஆரோக்கியத்தை பாதுகாக்கும் மூலிகை மருந்துப் பொருள்கள்.

இந்த காய்கறிகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மருத்துவச்  செலவு மிச்சம் என்பதை விரைவில் தெரிந்துக் கொள்வீர்கள்.


தோட்டம் போடுவது பொழுதுபோக்கு, சந்தோசம்  தவிர தேவையான காய்கறிகள்,பழங்கள்  கைக்கெட்டும் தூரத்தில் ப்ரெஷாக கிடைக்கும் என்றளவில் இருந்த என் எண்ணம் பசுமைவிடியல் அமைப்பு ஆரம்பித்ததும் இயற்கையின் மீதான ஈடுபாடு தீவிரமடைந்து தற்போது இயற்கை விவசாயம் செய்ய  நிலம் வாங்குவதில் முடிந்திருக்கிறது. அது மட்டுமில்லாமல்  பலரையும் வீட்டுத்தோட்டத்தின் பால் அவசியம் இழுத்தே ஆகவேண்டும் என்ற விருப்பத்தில் எனக்கு தெரிந்த குறிப்புகள் தகவல்களை பலர் கேட்க, சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.  

பசுமைவிடியல் பேஸ்புக் தளத்திலும் பகிர்ந்து வருகிறேன்.  வீட்டுத்தோட்டம் பற்றிய இந்த தொடரைத்  தொடர்ந்து எழுத உங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இயலாது...படித்துவிட்டு தோன்றும் சந்தேகங்கள் , உங்களுக்கு தெரிந்த தகவல்களை மெயில், கமென்ட் மூலமாக தெரிவியுங்கள். பலரையும் இதில் ஈடுபட வைப்போம். வெறும் நாலே  மாதத்தில் சிறிய இடத்தில்  பால்கனியில் இத்தனை வகையான செடிக் கொடிகளை வளர்ப்பது சாத்தியம் என்றால் உங்களாலும் முடியும் தானே  ... இதுவரை வீட்டுத்தோட்டம் போடவில்லை என்றால் இன்றேனும் ஆரம்பியுங்கள்...

வீட்டுத் தோட்டம்


ஆரோக்கியமான குடும்பமாக எல்லோரின் குடும்பமும் இருக்கவேண்டும் என்ற நமது விருப்பம் சிறிதாவது நிறைவேறும் என்ற  நம்பிக்கையில் ...

ப்ரியங்களுடன்
'மனதோடு மட்டும் ' கௌசல்யா

மெயில் ஐடி : kousalyaraj10@gmail.com


திங்கள், மார்ச் 15

மொட்டைமாடியில் தோட்டம்

பொதுவாகவே இதில் நல்ல விஷயம் நிறைய உள்ளது. மாடியில் தோட்டம் போடுவதால் வெயில் காலத்திலும் வீடு சில்லுனு இருப்பதை உணரலாம். சுத்தமான காற்று, பசுமை, குளுமை இவை எல்லாம் இலவசமாக கிடைக்கும். இதற்காக பார்க்,பீச் தேடிப்  போகவேண்டாம்.

வீட்டுத்தோட்டம் - உணவே மருந்து - நலம் நம் தோட்டத்தில்
                                                   என் வீட்டுத்  தோட்டத்து தக்காளி :-) 

செடி,கொடிகளின் மீது ஆர்வம் கொஞ்சம் இருந்தால் மட்டும் போதும். என்னங்க மாடியில் தோட்டம் போட நீங்க ரெடியா?

தேவையானவை என்று பார்த்தால் பிளாஸ்டிக் சாக், மண் கலவை (ஏற்கனவே தொட்டியில் ரோஜாசெடி தலைப்பில் மண்கலவை பற்றி விரிவாக கூறியுள்ளேன்), பந்தல் போட சணல் கயறு,சிறிய குச்சிகள், காய்கறி விதைகள். விதைகளை நைட் முழுவதும் சாணி கரைத்த தண்ணிரில் ஊறவைத்தால் நல்லது.

மண் நிரப்பிய சாக்கை மாடியில் இடைவெளி விட்டு வைத்து அதில் விதைகளை ஊன்ற வேண்டும். நீர் குறைந்த அளவு
ஊற்றினால் போதும். விதை வளரும்முன் கொடி வகைகளுக்கு பந்தல் போடவேண்டும். மாடி கைப்பிடி சுவர் ஓரமாக இரண்டு பெரிய கம்புகளை பத்து அடி இடைவெளியில் வைக்க வேண்டும். கயிறையும் பத்தரை அடியாக வெட்டி வைக்கவும். பின் ஒரு கம்பில் கயிறின் ஒரு முனையை கட்டி விட்டு அடுத்த முனையை இன்னொரு கம்பில் கட்டவேண்டும். இப்படியே கால் அடி இடைவெளிவிட்டு உங்களுக்கு வேண்டிய அளவிற்கு கட்டியபின் இனி குறுக்காக அதே மாதிரி இடைவெளிவிட்டு கட்ட வேண்டும். பந்தல் வேலை முடிந்தது. பிறகு கொடி வளர்ந்ததும் இதன் மேல் விட்டு படரவைக்கவேண்டியது தான்.

உங்கள் வசதிக்கு ஏற்ப கயறுக்கு பதிலாக கம்பியும் கட்டலாம். ஒருமுறை பந்தல் போட்டால் போதும், மேலும் மேலும் புதிதாக கொடிவகைகளை படரவைக்கலாம். சுவர் ஓரமாக உள்ளதை அப்படியே தலைக்குமேல் மாற்றி பந்தலாக போடலாம். இதில் ஒரு வசதி என்னன்னா பந்தலின் அடியில் மற்ற கத்தரி, வெண்டை, தக்காளி, கீரை வகை செடிகளை வைக்கலாம். ஒவ்வொரு சாக்கிலும் செடியின்  அருகில் சிறு குச்சியை நட்டு  வைத்தால் செடி சாயாமல் நிமிர்ந்து வளரும். செடி சாயும்போது கயிறு அல்லது  நூலால் குச்சியுடன் சேர்த்துக்  கட்டிவிடலாம்.


பொன்னாங்கண்ணி கீரையை சிறிய தண்டுகளாக ஒடித்து அப்படியே நட்டாலே போதும் வளர்ந்துவிடும். புதினாவையும் இந்த முறையில் வளர்க்கலாம். கொத்தமல்லிஐ பாதிவரை கட்பண்ணிய பின் வேறுடன் கூடிய பகுதி ஐ நட்டால் அதுவும் வளரும்.

கீரைக்கு வேர் அதிகம் போகாது என்பதால் பிளாஸ்டிக் சாக்கை பிரித்து தரையில் விரித்து செங்கலை சுற்றிவரை வைத்து அதில் மண் பரப்பி கீரையை நடலாம்.

இதே பிளாஸ்டிக் சாக்கில் முருங்கை மரத்தை கூட வளர்க்கமுடியும்
என்பது கூட என் அனுபவம்தான். சென்னையில் வாடகை வீட்டில் குடிஇருந்தபோது குறைந்த இடத்தில் இப்படித்தான் தோட்டம் போட்டோம்.

பூச்சித்  தொல்லை இருந்தால் வேப்ப எண்ணெய் கலந்த நீரை தெளித்தால் போதும், மண்புழு உரத்தை போட்டால் நல்லது. இந்த உரத்தைப்  பற்றிய எனது பதிவைப்  பாருங்கள்.

செடிகளுக்கு நீர் ஊற்றுவது கண்டிப்பாக  பெரிய வேலையாக  இருக்காது. ஏன்னா எல்லோர் வீட்டிலும் மாடியில் தான் water tank இருக்கும் ஓகேயா. வேற சந்தேகம் இருந்தால் மெயில் பண்ணுங்க வெயிட் பண்ணிட்டு இருக்கிறேன் பதில் சொல்ல.

மாடியில் இடம் இருந்தால் சின்னதாக  water fountain பண்ணலாம். அதை பற்றி பிறகு சொல்கிறேன். இது எல்லாம் பண்ணியப் பிறகு பாருங்கள்... சொர்க்கம் வேறு எங்கும் இல்லை நம் வீட்டு மொட்டை மாடியில் தான் என்பதை உணருவீர்கள்.