விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, பிப்ரவரி 13

'சினிமா' அவ்வளவு முக்கியமானதா என்ன ?!


இன்றைய சூழலில் எது முக்கியமோ இல்லையோ  சினிமா ரொம்ப ரொம்ப முக்கியம்... அப்படின்னு பத்திரிக்கை ஊடகங்கள் சமூக வலைத் தளங்கள் சொல்கின்றன.  சமூகத்தில் பல்வேறு  பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்து கண்முன்னால் நின்றாலும் அனைத்தையும்    அசட்டை செய்து  தமிழ் கூறும் நல்லுலகம் கேளிக்கையின் பின் மட்டுமே போய்  கொண்டிருக்கிறது.  சினிமாக்கள் பற்றிய செய்திகள் , கருத்துக்கள் , தத்துவம் ஆதங்கம்,கோபம்  என்று எங்கும் இதே  பேச்சு ! வலைத்தளங்களில் விழிப்புணர்வு பேசியவர்களும் சினிமா விமர்சனத்தை  கையில் எடுத்தது காலத்தின் கஷ்டம்  !! 

முன்பு சினிமா விமர்சனத்தை ஒரு சிலர் எழுதினார்கள், இன்று பெரும்பாலோர் இதே வேலையாக இருக்கின்றனர். கொடுமை என்னவென்றால் படைப்பாளிகள், எழுத்தாளர்கள் கூட சினிமா பற்றி எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டதுதான். சினிமாவை பற்றி  எழுதினால் பலரால் தாம் கவனிக்கப் படுவோம் என்பதால் கூட இருக்கலாம் என்றே எனக்கு தோன்றுகிறது. 

விழிப்புணர்வுப்  பதிவு என்றால் ஒரு செகண்டில் கடந்து செல்பவர்கள் சினிமா என்றால் மட்டும் அதீத கவனம்?  மக்களின் மனநிலையை புரிந்த சினிமாக்காரர்களும் தங்கள் மனம் போனப்படி ஒவ்வொரு நாளும்  ஒரு  கதையை பின்னி இளைஞர்களின் நேரத்தை பணத்தைப்  பறிக்கிறார்கள். சினிமா ஒரு பொழுதுப்போக்கு என்பது மாறி பலரின் பொழுதை வீணாகப் போக்கிக் கொண்டிருக்கிறது. 

உலக நாடுகள் சினிமாவை கையாளுவதற்கும் இந்தியர்கள் அதிலும் தமிழர்கள் கையாளுவதற்கும் அதிக வித்தியாசம் உண்டு. மற்றவர்களுக்கு எப்படியோ ஆனால் தமிழர்களுக்கு சினிமாதான் சுவாசம் வாசம் எல்லாம். ஐந்து முதல்வர்களை கொடுத்த பெருமை போதாதென்று நாளைய முதல்வர்களையும் சினிமாவிற்குள் தான் தேடிக் கொண்டிருக்கிறோம். சினிமா பிரபலங்கள் யாரிடமும் ஒரு நன்றியோ மன்னிப்போ கேட்டுவிட்டால் அவ்வளவுதான் என் ஹீரோ மனசு மாதிரி யாருக்கு வரும் என்று புகழ்ந்து அந்த ஹீரோவை தெய்வமாக்கி விடுவார்கள் ரசிகர்கள்.  கேமராவிற்கு முன்னால் என் நாடு என் மக்கள் என்று வேற ஒருத்தர் சொல்லிக் கொடுத்த வசனத்தை பேசியவுடன் தமிழன் இங்கே தலைவானு  உணர்ச்சிவசப்படுவான் . கோவில் கட்டுவான் சிலை வைப்பான் பாலுத்துவான் பைத்தியமாவான் செத்தும் போவான் ... மகா கேவலம்!!?

இதையெல்லாம் விட கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் சமூக வலைத்தளங்களில் உலவும் படித்தவர்கள் புரியும் அதிகப் பிரசங்கித்தனங்கள் தான் சகிக்க முடியவில்லை. இவங்களே  தங்களை  இணைய மொன்னைகள் நொன்னைகள் வெண்ணைகள் தொன்னைகள் என்று அழைத்துக் கொல்லுவார்கள். சினிமாவை சினிமாவாக மட்டும் பார்க்காமல் டாக்டரேட் வாங்குமளவு ஏ(க்)கப்பட்ட ஆராய்ச்சிகள் புரிவார்கள் !!  

இன்றைய விமர்சனங்களின் தரம் ?!

'ஐ' படம் பற்றி ஒரு பேஸ்புக் பிரபலம் இப்படி விமர்சனம் செய்திருந்தார், எமியின் மார்பகத்தை (இதை விட நாகரீகமாக எனக்கு சொல்ல தெரியல) நம்பி மட்டுமே படம் எடுத்திருக்கிறார் இயக்குனர் என்று. மூன்று மணி நேர படத்தில் இவ்வளவோ காட்சிகள் இருக்க இவர் கண்ணுக்கு இப்படி. நடிகையை தீவிரமாக ரசித்து வரிக்கு வரி ஆபாசமாக விமர்சனம் எழுதியதோடு மட்டுமில்லாமல் படத்தில் பெண்களை மோசமாக சித்தரிச்சிருக்காங்கனு வேற வருத்தப்படுறாரு இன்னொரு நல்லவர். இவர்களை போன்றவர்கள் இணையம் முழுவதும் நிறைந்திருக்கிறார்கள். அப்புறம் 'ஐ' படத்துல வில்லன்கள் பழிவாங்கல் காட்சிகளை பார்த்து குழந்தைகள் பயப்படுவாங்க கூட்டிட்டு போகாதிங்கன்னு ஒருத்தரோட அட்வைஸ்.  படம்  பார்த்திட்டு இருக்கும்போது பக்கத்துல ஒரு சின்ன பையன் வில்லன் HULK மாதிரி மாறிட்டான்னு சிரித்தான். ஆங்கிலப் படங்கள் கார்ட்டூன்கள் என பார்த்து பழகிவிட்டார்கள் இன்றைய குழந்தைகள். ரத்தம் தெறித்து விழும் பல சினிமாக்களின் கொடூரக் காட்சிகளுக்கு இது தேவலாம்.

செல்போன் கேமரால ஒரு செல்பி கூட சரியா எடுக்கத் தெரியாத ஆட்கள் எல்லாம் கேமரா கோணத்தை பத்தி இரண்டு பக்கத்துக்கு விமர்சனம் எழுதுறாங்க...கொடுமை! ஒன்றை பற்றி பேச அதை குறித்த அறிவு தேவையில்லை ஆனா விமர்சிப்பதற்கு அதை பற்றிய அடிப்படை கொஞ்சமாவது தெரிந்திருப்பது நல்லது. குறை மட்டும் சொல்வதற்கு பெயர் விமர்சனம் அல்ல,  இணையவாசிகள் பொழுதை சந்தோசமாக கழிக்க வேண்டும் என்று படம் பார்க்க போவதாக தெரியவில்லை. ஏதோ ஒரு குறையை கண்டுப் புடிச்சு சொல்றவங்களைத்தான் இந்த தமிழ் கூறும் இணைய உலகம் அறிவாளியா நினைச்சுக்குமாம்னு வரிஞ்சு கட்டிட்டு எழுதி தள்ளுறாங்க...

காடு என்று ஒரு படம், காட்டை பற்றி மரத்தை பற்றி மலைமக்களின் வாழ்வுரிமையை பற்றிய படம். அங்குள்ள  மனிதர்கள் மிருகங்கள், பறவைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதையும் , மரங்கள் வெட்டப்படுவதையும் அரசாங்கம் கவனிப்பதில்லை என்பதை இப்படம் சிறிது தொட்டு சென்றது. சமுத்திரக்கனி பேசும் வசனங்கள் அருமை ரகம்.  இப்படத்தை விமர்சனம் செய்த ஒரு மேதாவி ‘இதில் காதல் காட்சிகள் அவ்வளவாக ஈர்க்கவில்லை, இருவருக்குமிடையிலான காதல் சரியாக சொல்லப் படவில்லை என்று தனது அறிவுக்கு எட்டியதை சொல்லி இருந்தார்.

தலைப்புலேயே காடு  எதை  பற்றிய படம் என்று தெரிகிறதே இருந்தும் ஒரு சினிமானா இதெல்லாம் இருக்கணும் என்று இவர்களாக ஒரு இலக்கணத்தை வரையறுத்துக் கொள்வார்கள்.    

சிஜி வெளிநாட்டுக்காரணுது மாதிரி இல்ல கிராபிக்ஸ்ல அவனுங்கள அடிச்சிக்க முடியாது , இப்டி எடிட் பண்ணி இருக்கலாம், திரைக்கதையை வேறு விதமா கொண்டு போய் இருக்கலாம்  என்று ஏகப்பட்ட லாம்கள் சொல்றவங்களுக்கு ஒன்னு மட்டும் ஏன் புரியமாட்டேங்குது, பணம் போட்டு படம் எடுக்கிறவங்க  அவங்களுக்கு பிடிச்ச மாதிரி, தெரிஞ்ச அளவுக்கு தானே எடுப்பாங்கனு.

நிறைய எதிர்ப்பார்த்து போனேன், டிக்கெட், வண்டிக்கு பெட்ரோல், பார்க்கிங் செலவு, பாப்கான், ஐஸ்க்ரீம் செலவு என ஒரு லிஸ்ட் போட்டு அத்தனையும் வீணா போச்சே என்பார்கள். உங்களுக்காக நீங்க   பண்ணிய  செலவுக்கு ஒரு நடிகனோ இயக்குனரோ எப்படி  பொறுப்பாக முடியும்? அவங்களா கையை புடிச்சு இழுத்துட்டு வந்து படத்தை பாருங்கனு  சொன்னாங்க....உங்களுக்கு பொழுது போகலன்னு போகலாம், அல்லது பேஸ்புக்கு ஒரு ஸ்டேடஸ் தேத்தலாம்னு போலாம் தானே...

சினிமா துறையினரைப் பொறுத்தவரை அது அவங்க  தொழில். தொழிலுக்காக ஆயிரம் பொய்  சொல்லுவாங்க.  படத்தை ப்ரோமோட் பண்ண என்ன ஜிகினா வேலையும் காட்டத்தான் செய்வாங்க,  ஆஹா ஓஹோன்னு பண்ற விளம்பரத்தை பார்த்து ஏமாந்து படம் பார்த்துட்டு இது நொட்டை  இது நொள்ளை குறை  மட்டுமே சொன்னா எப்படி? ஆறு வாரத்துல சிவப்பா மாறலாம்னு கூடத்தான் விளம்பரம் பண்றாங்க ... அப்டி யாராவது மாறி இருக்காங்களா, இல்ல சிவப்பா மாத்தலையேன்னு யாரும் வாங்காம இருக்காங்களா?

சினிமா மூலமா சமூக சேவையா செய்ய வராங்க ...சினிமா என்பது ஒரு கற்பனை உலகம், நம்மவங்க  சாதாரண புத்திசாலியா இருப்பாங்க  ஆனா  தியேட்டர்க்குள்ள  போனதும் டக்குனு  அதிமேதாவியா மாறிடுவாங்க. லாஜிக்னு ஒன்ன கிளைமாக்ஸ் வரைக்கும் தேடோ தேடுன்னு தேடி அது கிடைக்காதது தன்னோட தவறுனு கூட புரிஞ்சுக்காம லாஜிக்கே இல்லாம படம் எடுத்திருக்கானுங்க முட்டாப்பசங்கனு திட்டுவாங்க பாருங்க...., வேடிக்கை !! கேளிக்கை சினிமாவில் மெசெஜ் இருந்தே ஆகணும்  என்ற எதிர்பார்ப்பும் அதீதம்தான். பேஸ்புக்கில் இரண்டு வரி  மெசெஜ் சொல்ல முடியாத ஆட்கள் எல்லாம் சினிமாவில் மெசேஜ் தேடுவாங்க :-) 

ஒரு நடிகனோட ரசிகர்கள்  அடுத்த நடிகனை இழுத்துப் போட்டு கதற கதற வார்த்தை  வன்கொடுமை பண்ணுவாங்க. அப்புறம் அந்த நடிகனோட ரசிகர்கள் இந்த நடிகனை உண்டு இல்லன்னு பண்ண இப்படியே படம்  வெளிவந்த ஒரு வாரத்துக்கு ரணகளமா  இருக்கும். அதுக்கப்பறம் தான் வேற படம் வேற நடிகன் கிடைச்சிடுவானே.... சக மனிதனை படு ஆபாசமான வார்த்தைகளால் குத்திக் கிழிக்கும் உரிமையை  யார்  கொடுத்தாங்களோ தெரியல,... என்றாவது அதே வார்த்தைகள் திரும்பி அவர்கள்  மீதே எறியப்பட்டால் அன்றி அந்த வலி எவருக்கும் புரிய வாய்ப்பே  இல்லை.   

உங்களின் எதிர்மறையான விமர்சனமே தரமற்ற சினிமாவையும் பிரபலப் படுத்திவிடுகிறது.  ஆபாசமான காட்சிகள், வசனங்கள் என்ன என்ன இருக்கிறது உடை விலகுவது வரை  மிக தெளிவாக எடுத்துச் சொல்லி விமர்சித்து விடுகிறீர்கள். இசை படத்தை எடுத்த சூர்யாவுக்கு கூட  தெரியாது நாம இவ்ளோ ஆபாசமா காட்சிகள் வச்சோமான்னு ஆனா நம்ம விமர்சன சிங்கங்கள் அக்குவேறு ஆணிவேரா பிரிச்சு எரிஞ்சிட்டாங்க ... தேமேனு இருந்தவங்களையும் பார்க்க வச்ச புண்ணியம் உங்களுக்கு, இந்த லட்சணத்தில் தான் பல படங்கள் ஹிட்டாவுது. 'என்னை அறிந்தால்' அழகான தமிழ் டைட்டில் ஆனால் படத்துல ஏகப்பட்ட   ஆங்கில வசனங்கள், புரியவேயில்லை. கிளைமாக்ஸ்ல வில்லனை சர் சர்னு சீவித்தள்ளார் அஜித், திக்குன்னு இருந்துச்சு.,  அரைத்த மாவையே அரைத்ததை தவிர வேறு என்ன இருக்குனு எல்லோரும் ஆஹா ஓஹோ சொல்றாங்கன்னு கடைசிவரை என் புத்திக்கு எட்டவேயில்லை.

அதிகபிரசங்கித்தனமான சினிமா விமர்சனம் தேவையா ?

நாட்டுல எவ்வளவோ நடக்குற மாதிரி சினிமாக்களும்   வரட்டும் போகட்டும். நல்ல படங்களை ரசிக்கலாம் பாராட்டலாம் மாறாக அதை பற்றி மட்டுமே பேசி பேசி எழுதி எழுதி இதை தவிர வேறு ஒன்றுமே முக்கியம் இல்லை என்பதை போல ஏன் செய்யவேண்டும். விமர்சிக்கிறேன் பேர்வழினு வேலை மெனக்கிட்டு பக்கம் பக்கமா எழுத அதை ஒரு நூறு பேர் படிக்க அதுல பாதி பேர் அந்த சினிமாவ  பார்க்க, பார்த்த அவர்கள் மறுபடி அதே படத்தை விமர்சிக்க என்று விமர்சனங்கள் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. வெள்ளிக்கிழமை வந்தால்  போதும் எங்கும் புதுப்படங்களை பற்றிய அப்டேட்ஸ் தான். அன்னைக்கு  முக்கியமானவர்  யாராவது இறந்தாலும் கண்டுக்கொள்ளப் படமாட்டார்கள் என்பதே உண்மை...

சினிமாவை பற்றி இணையம் எங்கும் பேசி  இன்றைய இளைய சமூகத்தையும் அதை நோக்கி 'மட்டுமே' திருப்பும் வேலையை நீங்கள் செய்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதாவது புரிகிறதா?   

நம் மாணவர்களிடம் பாட புத்தகங்கள் தவிர  வேறு புத்தக வாசிப்பு என்ற ஒன்று சுத்தமாக இல்லை, பாடங்களை தவிர்த்து வெளி உலகம் எதுவும் அவர்களுக்குத் தெரியவில்லை, தெரிய வைக்கப்படவும் இல்லை. இதுதான் நம் கல்வியின் நிலை.  வகுப்பு பாடங்களுக்கு அடுத்ததாக அவர்களுக்கு அதிகம் தெரிபவை சினிமா ...சினிமா மட்டுமே ! எந்த நடிகன் எந்த படம் எந்த காட்சியில் சிறப்பாக நடித்தான் என்பது முதல் குறிப்பிட்ட வசனங்கள் வரை அவர்களுக்கு மனப்பாடம். பள்ளி, கல்லூரி மாணவர்களின் விளையாட்டு, பொழுதுப் போக்கின் இடங்களை  சினிமா பிடித்துக் கொண்டது.. அவர்களின் பேஸ்புக் டிவிட்டர் இன்ஸ்டாகிராம் வாட்ஸ்அப் தளங்களை பார்த்தாலே இதை தெரிந்து கொள்ளலாம். அவர்களின் ஸ்டேடஸ், கமென்ட்ஸ் இன்பாக்ஸ் மெசெஜ்களில் அதிகம் பேசப்படுபவை சினிமாவை பற்றி மட்டுமே.

சினிமாவும் தனது பங்குக்கு பாடல் வெளியீடு, First Look, டீசர், டிரைலர் என்று ஒரு படத்தை குறித்த செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு இளைய சமுதாயத்தினரை சினிமாவை சுற்றியே வலம் வர செய்கிறது. ரிலீஸ் ஆனதும் சமூக வலைதளங்களில் வேறு விமர்சனம் என்ற பெயரில் அக்குவேறு ஆணிவேராக படத்தைப் பிரித்து ஆராய்கிறார்கள். இவ்வாறு ஒவ்வொரு படத்திற்கும் இந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து பள்ளி கல்லூரி  மாணவர்களை அங்கே இங்கே திரும்பவிடாமல் சினிமாவைச் சுற்றியே சுழற்றிச் சுழற்றி  அடிக்கிறது.  இந்த சிக்கலில் இருந்து மாணவ சமூகம் என்று மீளுவது , யார் மீட்பது ??  

பிற துறைகளை போல திரைத்துறையும் பலருக்கு வாழ்வளிக்கிறது, அதை நம்பி பல குடும்பங்கள் ஜீவிக்கின்றன, அவ்வளவு ஏன்  இணையத்தில் சாதாரணமாக எழுத வந்த பலருக்கும்  ஒரு அடையாளம் கொடுத்திருக்கும் ஒரு நல்ல தொழில் சினிமா, அவ்வளவே. இதைத் தாண்டி தலைமேல் தூக்கிவச்சு கொண்டாடியே ஆகணும் என்ற எந்தவித அவசியமும் இல்லை.

சமூக ஊடகங்களில் இயங்குபவர்களுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து நமது மாணவ சமுதாயம் சரியான பாதையில்  செல்ல உதவவேண்டும்.  நம் வீட்டு குழந்தைகளும் இங்கேதான் உலவிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.  சினிமாவை தாண்டியும் உலகம் இருக்கிறது, அங்கே தான் தங்கள் வாழ்க்கைக்கான பொருள் புதைந்துக் கிடக்கிறது என்பதை மாணவர்கள் உணரும் காலம் வரவேண்டும்.

தெருவில் இறங்கி புரட்சியோ, மரக்கன்று நட்டு சமூக சேவையோ செய்யவேண்டும் என்று கூட இல்லை, சினிமாவைப்  பற்றி பொதுவெளியில் அதிகமாக பேசுவதை நிறுத்தினாலே போதும், சமூகத்திற்கு மிக பெரிய நன்மை செய்தவர்களாக  ஆவோம், (இந்த பதிவை எழுதிய என்னையும் சேர்த்தேதான் சொல்கிறேன்)
  
எங்களுக்கு எது தெரியுமோ அதை தான் பேசுவோம், எழுதுவோம் என பிடிவாதம் பிடிப்பவர்களை ஒன்றும் செய்ய  முடியாது, ஆனால் அவர்கள் இனிமேலாவது கொஞ்சம் யோசிக்கலாமே...!


திங்கள், ஜூன் 27

கழுகு பற்றி என்ன தெரியும் உங்களுக்கு ?!



கழுகு என்ற ஒரு விழிப்புணர்வு தளம் இருப்பது பலருக்கு தெரியும், சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்...அந்த சிலருக்காக எனது இந்த பதிவு. பொதுவா விழிப்புணர்வு அப்படின்னு அடிக்கடி சொல்றோமே அந்த பொருள் தான் என்ன ? சிலருக்கு இந்த சொல்லே ஒரு சலிப்பை கொடுக்கிறது, இதன் பொருள் புரியாமலேயே !!  சிம்பிளா சொல்லணும் என்றால் விழிப்புணர்வு என்பது எச்சரிக்கையாக இருப்பது, எதை பற்றியும் அதிக விவரங்களை தெரிந்து வைத்துகொள்வது, தெரியாதவர்களுக்கு எடுத்துசொல்லி புரியவைப்பது.

உதாரணமாக ரத்ததானம் செய்ய சொல்லும் போது மக்களிடம் ரத்தம் கொடுக்கணும் என்று பொதுவாக சொல்கிறோம் என்றால் 'ஐயையோ ரத்தம் எடுத்தா நான் என்ன ஆவேன்' என்ற அச்சம் வருவது மக்களின் பொது இயல்பு. ஆனால் அவர்களிடம் ரத்தம் எடுத்தா ஒன்றும் ஆகாது, மிக குறைந்த அளவு  தான் எடுப்பாங்க, அதுவும் குறிப்பிட்ட நாளில் மீண்டும் ஊறி விடும், என்று கூடுதல் தகவல்களையும் சேர்த்து எடுத்து சொன்னா அதற்கு பெயர் தான் விழிப்புணர்வு. 

ஒரே வரியில் சொல்லணும் என்றால் 'உணர்வுகளை விழித்தெழ வைப்பது' 

இத்தகைய ஒரு அளப்பரிய செயலை தான் கழுகு செய்து கொண்டிருக்கிறது. கல்வி, மருத்துவம், அரசியல், அறிவியல்,தனி மனித ஒழுக்கம், குழந்தை வளர்ப்பு,  இப்படி பலவற்றிலும் விழிப்புணர்வு பதிவுகள் எழுதுகிறார்கள் கழுகு தோழமைகள்.
    
யார் நடத்துகிறார்கள் ?

துபாயில் இருக்கும் தேவா அவர்கள், சென்னையில் இருக்கும் விஜய் மற்றும் சௌந்தர் இவர்கள் மூவரும் சேர்ந்து தொடங்கினார்கள். இப்போது  முப்பதுக்கும் மேற்பட்ட  தோழமைகள் கழுகுடன் கைகோர்த்து இருக்கிறார்கள் ...கட்டுரைகள்  வடிவமைப்பது , செய்திகளை சேகரித்து  தருவது , விவாதங்களை முன்னிறுத்தி  நடத்தி  செல்வது, பிரபலங்களிடம் பேட்டி எடுப்பது, போன்ற பலவேறு வேலைகளை பலரும் பிரித்து வைத்துகொண்டு செயல் படுத்தி கொண்டு வருகிறார்கள்.இத்தனை வேலைகளையும் அவர்கள் தங்களின் சொந்த அலுவலக பணிகளுக்கு மத்தியில் இந்த சமூகத்திற்காக மேற்கொள்கிறார்கள் என்பது பாராட்ட படவேண்டிய ஒன்று.இவர்கள் அனைவரையும் ஒன்றிணைப்பது என்ற பெரிய பொறுப்பான வேலையை தேவா அவர்கள் திறம்பட செய்துகொண்டு வருகிறார்.   

ஏன் தேவை ?

விழிப்புணர்வு நமக்கு தேவையானதா என்று பார்த்தால் அது நிச்சயம் நமக்கு தேவை, ஆனால் சிலர் சொல்லலாம் நான் விழிப்புணர்வுடன்  தான் இருக்கிறேன் என்று..... ஆனால் அது நிச்சயம் போதுமானதாக இருக்காது.

நம் சமூகம் பழமை பற்று மிகுந்த ஒன்று, சாதீய எண்ணமும், ஆழமாக பதிந்த தேவையற்ற மூட நம்பிக்கைகளும் வாழ்வை பற்றிய பயம், கவலையும் சேர்ந்து சாகாமலேயே செத்தவர்களாக ஆக்கி வைத்திருக்கிறது என்பது தான் இன்றைய நிதர்சனம்.

சிந்தனையை தெளிவடைய செய்யும் திருக்குறளும், மற்றும் பல இலக்கிய நூல்களும் இருந்தாலும் அது எல்லோரையும் சென்றடைவது இல்லை...ஏன் படித்தவர்களே அதன் வழித்தடம் ஒற்றி நடக்க இயலாத நிலையில் இருக்கிறோம். அவரவருக்கு தனிப்பட்ட கொள்கைகள் , கருத்துக்கள் ! படித்தவர்கள் நிலையே இது என்றால் படிக்காதவர்களை பற்றி என்ன சொல்வது. மக்கள் முன்னேற்றத்துக்கு ஏற்ற கொள்கைகளையும் கருத்துக்களையும் வகுப்பது யார் ? அதை  மக்களிடம் கொண்டு செல்வது யார் ? 

விழிப்புணர்வு அவசியம் 


* நமது அடிப்படை உரிமைகள் எவை என்பதை பற்றி இங்கே எத்தனை பேருக்கு சரியாக தெரியும்.

* சட்டங்கள் பற்றிய முழு தெளிவு இருக்கிறதா ?

* அரசியல் பற்றிய அடிப்படை அறிவு ?

* பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் என்ன, அதற்கு தீர்வு என்ன, அதை பற்றி பெண்ணுரிமை இயக்கங்கள் என்ன சொல்கிறது ? என்ன செய்கிறது ?
இப்படி நிறைய ????

சுதந்திரம் பெற்று ஆண்டுகள் பல ஆகியும் ஒவ்வொரு தேர்தலுக்கும் 'ஒட்டு போடுங்கள்' என்று தெரு தெருவாக அறிவிப்பது வருந்தகூடிய ஒன்று. காரணம் ஒட்டு போடுவதின் அவசியத்தை, விழிப்புணர்வை  மக்களிடம் சரியான முறையில் இன்னும் கொண்டு செல்லாதது தான்.

ஊத வேண்டிய சங்கை ஊதினால் போதும் , விடிகிற போது விடியட்டும் அல்லது குறைந்த பட்சம் ஒரு விழிப்பாவது ஏற்படட்டுமே என்ற நோக்கத்தில் ஆரம்பிக்க பட்டது தான் கழுகு என்கிற தளம். 

மேடை போட்டு பிறர் பாராட்ட வேண்டும், பரிசு வழங்க வேண்டும் தம் பெயர் பிரபலம் அடைய வேண்டும் என்பது போன்ற சுயநலம் சிறிதும் இன்றி விழிப்புணர்வு என்ற ஒன்றே லட்சியம் . யார் என்ன சொல்வார்கள், மாற்று கருத்து வந்தால் என்ன செய்வது என்று அஞ்சி ஒடுங்கி முடங்குவதை விட உண்மை எதுவென்று காட்டிட துணிந்து செய்பவர்கள் ஒரு சிலரே. அந்த ஒரு சிலர் சேர்ந்து சீரிய நிலையில் தெளிவான சிந்தனையோடு சிறப்பாக கால் ஊன்றி தன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் கழுகின் சிறகை வலுபடுத்துவது நல் மனம் படைத்த ஒவ்வொருவரின் கடமை. மீளா தூக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் அறியாமையில் ஊறிய மக்களை / சமுதாயத்தை எழுப்புவது என்பது எளிய காரியம் அன்று . 

தமிழன் நாம் என்பதே மறந்து பிறர் சொல்லும் போதுதான் 'ஓஹோ நாம் தமிழர்' என்று விழித்து எழுகிறான்.  ஏதோ ஒரு போராட்டம் புரட்சி திடிரென்று வரும் போது தான் 'தன் இனம் இது' என்பது போல உணர்வு கொள்கிறான். தன் இனத்தை நினைவு படுத்தவே இது போன்ற நிகழ்வுகள் தேவை படுகிறது என்னும் போது விழிப்புணர்வு எவ்வளவு அவசியமாகிறது என்பது புரியும். 

விழிப்புணர்வு வேற சமூக சேவை வேற !

விழிப்புணர்வு வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா களத்தில் இறங்கி போராட வேண்டும் என்ற ஒரு வாதம் கழுகின் முன் வைக்கப்பட்டது. உண்மைதான் களத்தில் இறங்கி போராடுவதின் மூலம் மக்களை உடனே சென்று அடைய முடியும். ஆனால் தொடர்ந்து விழிப்புடன் வைத்துகொள்வது மிக அவசியம். உதவி செய்ய ஆள் இருக்கிறது என்று சோம்பி திரிய கூடிய மந்த புத்தி படைத்த மனித இனம் தானே நாம், மனிதனின் ஆழ்மனதை தட்டி எழுப்பவேண்டும்.....அதில் நல்லவைகளை ஆழமாக பதிய வைக்கவேண்டும்.....இதை செய்வது தான் விழிப்புணர்வு.  

இரண்டும் ஒன்று போல் பாவித்து குழம்பி கொள்பவர்கள் பலர். விழிப்புணர்வை  யார் வேண்டும் என்றாலும் எங்கே இருந்தும் ஏற்படுத்த முடியும்...அதற்கு தேவை ஆர்வமும், பல துறைகளை பற்றிய தெளிவும்,புரிதலும் தான். ஆனால் சமூக சேவை என்பது களத்தில் சென்று செயல்படுவது. கண்முன் ஒருத்தர் கஷ்டபடுகிறார் என்றால் என்ன பிரச்சனை பண உதவியா, வேற என்ன தேவை என்று பார்த்து செய்து கொடுப்பது. இது அப்போதைய உடனடி தீர்வாகும். அத்துடன் நின்றுவிடும். ஆனால் விழிப்புணர்வு என்பது சம்பந்த பட்ட மனிதனுடன் நின்றுவிடாமல் காலத்திற்கும் அவனது சந்ததிக்கும் ஆலோசனை சென்று சேரும். புத்தியை தெளிவடைய வைத்துவிட்டால் போதுமே, அவன் வாழ்க்கையை அவன் பார்த்துக்கொள்வான், பிறர் தயவு தேவையில்லை. இதை தான் கழுகு அமைதியாக செய்து கொண்டிருக்கிறது. 

"குளிரில் நடுங்கும் பிச்சைகாரனுக்கு வீடு அல்லது குறைந்த பட்சம் ஒரு ஸ்வெட்டர் வாங்கி கொடுப்பது சமூக சேவை என்ற கருத்தினை கொண்டால்.....

பிச்சைக்காரனே உருவாகாமல் இருக்க எல்லா சாத்தியக்கூறுகளையும் மனித மூளைக்குள் விதைப்பதற்கு பெயர் தான் விழிப்புணர்வு.....!" 
                                                                                                                                (நன்றி-தேவா)


மனித மனம் என்றும் நிறைவு அடைவதில்லை பொருளாதார தேவை மற்றும் வேறு சில காரணங்களால்.  ஆனால் ஓரளவு தன்னிறைவு அடைந்த மனிதன் முடிந்தவரை சில விழிப்புணர்வு விதைகளையாவது தூவி விட்டு செல்லலாம், பின் நீர் ஊற்ற வேறு யாரேனும் வருவார்கள்.....சூழல் சரியாக இருக்கும்பட்சத்தில் தன்னால் முளைத்துவிடகூடும்...!!

விழிப்புணர்வு விதைகளை மனங்களில் தூவும் வேலையை இப்போது செய்துகொண்டிருக்கும்   அதே நேரம், தேவைபட்டால் களத்தில் இறங்கி போராடவும் கழுகு தயங்காது.....! அதற்கு வேண்டிய போராட்டகுணம், தைரியம், தோழமைகளின் பலம் அனைத்தும் ஒருங்கே தன்னகத்தே கொண்டிருக்கிறது.....திறக்கப்பட வேண்டிய கதவுகள்  தட்டிபார்த்தும் திறக்கவில்லை என்றால் உடைத்து திறக்ககூடிய ஆற்றல் கொண்டவர்கள் தோழமைகள்...

உயரிய திட்ட வரைமுறைகள் 

நோக்கம் இருக்கிறது என்பதற்காக ஒழுங்கற்ற விதத்தில் ஏனோ தானோ வென்று தளம் செயல் படவில்லை. நேர்த்தியாக, சீராக, கட்டுபாடுடன், ஒழுங்குடன், தங்களுக்கு என்ற விதிமுறைகளுடன் செயல் பட்டுகொண்டிருக்கிறது. இந்த தளத்திற்கு குழு என்ற ஒரு அமைப்பும், மீட்டிங் ஹால் என்ற மற்றொரு முக்கிய அமைப்பும் இயங்கி வருகிறது. 

கழுகின் முக்கிய உறுப்பினர்கள் 

தேவா - தீராத சமூக முன்னேற்ற வேட்கை கொண்டவர். இருப்பது கடல் தாண்டி என்றாலும் நினைவுகளால் தாய்நாட்டை ஒரு கணமும் பிரியாதவர். நாட்டின் மீது கொண்ட அதிக பற்றின் காரணமாகவே இந்த தளத்தை உருவாக்கி நடத்திக்கொண்டு வருகிறார். 

சௌந்தர் - மிக முக்கிய பங்கு இவரது...வெளிநாட்டில் இருந்து தேவா  இயக்க இவர் இங்கிருந்து கழுகின் பல பணிகளை ஒருங்கிணைக்கிறார்.

கொக்கரக்கோ - சௌமியன் பல துறை சம்பந்தப்பட்ட விசயங்களை விரல் நுனியில் தெரிந்து வைத்திருப்பவர். கழுகில் இவரது பணி மிக அதிகம்.

சமீர் அஹமத் - கழுகின் செயல்கள் அனைத்திலும் பக்க பலமாக இருக்கிறார்.

மகேஸ்வரி - பல கட்டுரைகள் எழுதி தருவதும், விவாதங்களில் கலந்துகொள்வதும் என்று உற்சாகமாக செயலாற்றி வரும் இவர் கழுகின் இன்றியமையாத தோழமை.  

ஆனந்தி - விவாதங்களை உற்சாகபடுத்துவதில் இவங்க ஸ்டைல் தனி. தினம் திருக்குறள் சொல்லி அன்றைய பொழுதை தொடக்கி வைப்பவர்.

எஸ்.கே - எஸ்.கே குழுவின் திட்டமிடுதலில் பங்கெடுத்துக் கொள்வதோடு, வலுவான விவாதங்களை முன்னெடுத்து வைப்பார். மேலும் பிற வலைத்தளங்களில் வெளி வந்த நல்ல பதிவுகள் மிகைப்பட்ட பேரால் வாசிக்கபடாமல் இருப்பதை குழுவினருக்கு அடையாளம் காட்டும் பணியும் செய்து வருகிறார்.

கல்பனா - இவர் கழுகின் விவாதங்களில் ஆர்வமுடன் கலந்து தனது கருத்துக்களை எடுத்துவைக்க தவறமாட்டார்.

இன்னும் பல இளம்புயல்கள் ஆர்வமாக பங்கேற்று செயலாற்றி கொண்டிருக்கிறார்கள்.முப்பது பேரை பத்தியும்  சொன்னா பதிவு தொடர்தான் போட வேண்டி வரும் என்பதால் இத்துடன் முடிக்கிறேன்...!!

இவர்கள் ஒருவருக்கும் ஒருவர், எந்த உறவும் இல்லை என்றாலும்  ஒரு குடும்பம் போல் செயல் பட்டுவருவது வரவேற்க்கதக்க ஒன்று.

குழு 

குழுவில் இணைய விரும்புவர்களுக்கு சில விதிமுறைகள் இருக்கிறது...
அதை ஏற்றுகொண்டவர்கள் இணைந்து கொள்ளலாம். விவாதத்திலும் கலந்து கொள்ளலாம், கருத்து வெளியிட இயலாதவர்கள் நடக்கும் விவாதங்களை மெயிலின் மூலம் அறிந்துகொள்ளலாம். முதலில் நமக்கே பல விசயங்களில் தெளிவு இல்லாமல் இருக்கும், அதை சரி படுத்திக்கொள்ளவும், ஒரே நேரத்தில் பல துறைகளை பற்றிய செய்திகளை தகவல்களை தெரிந்து கொள்ளவும் முடியும். 

இதனை பற்றி இன்னும் விவரங்கள் தேவை என்றால் கீழே  உள்ள சுட்டியை கிளிக்கவும். 


எல்லோருக்கும் சமூகத்திற்காக ஏதாவது செய்யவேண்டும் என்கிற ஆர்வம் உள்ளுக்குள் இருக்கும், ஆனால் வாய்ப்பு இல்லை என்ற ஒரு நிலை இருந்தால் தங்களது வேலை நேரத்தில் ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி இத்தள கட்டுரையை படித்து இவர்களை உற்சாக படுத்துங்கள். கழுகு இன்னும் அதிக முனைப்போடு செயல்பட உதவியாக இருக்கும்.  இது ஒன்றும் பெரிய காரியம் இல்லையே, உடனே கழுகை தொடருங்கள்...கட்டுரைகளை வாசித்து உங்கள் குறைகளையும் நிறைகளையும் வெளிப்படையாக சொல்லுங்கள்.  கழுகு உங்களுக்கு பதில் சொல்ல காத்திருக்கிறது...!

பல நல்ல பதிவுகளை படித்து நம்மை இன்னும் அதிகமாக தெளிவு படுத்திகொள்வோம்...கழுகு தளத்தில்  இணையுங்கள். கழுகின் சிறகை வலுபடுத்துங்கள்......!! 



செவ்வாய், ஜனவரி 11

இன்று ஒரு பதிவர் - விமர்சனம் - 1


பதிவுலகத்தில் சினிமா துறையை பற்றியும் புதிதாக வெளியாகும் சினிமாக்கள் பற்றியும் விமர்சனங்கள் எழுதபடுகின்றன. பதிவுலகத்தில் இருந்துகொண்டு பதிவர்கள் பற்றியும் , பதிவுகள் பற்றியும் விமர்சனம் எழுதினால் என்ன என்று தோன்றியதின் விளைவே இந்த பதிவு. இனி இது போல் தொடந்து பதிவுகள் வெளியிடப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்.....?!! அவ்வாறு விமர்ச்சிக்கும் போது நிறைகள், குறைகள் இரண்டும் அலசப்படும். (எதுக்கு இந்த வேண்டாத  வேலை என்று உள்ளிருந்து ஒரு குரல் வந்தாலும் இப்போதைக்கு என் முடிவை மாத்திக்கிற மாதிரி இல்லை...!!?)

பதிவர் - ஒரு சின்ன அறிமுகம் 

முதலில் இந்த வாரம் என்னிடம் வகையாக வந்து மாட்டியவர் எங்க ஊர்க்காரர் ஒருவர் தான். இவர் ரொம்ப பெரிய ஆள்.  நாள் தவறாமல் செய்திதாளில் வலம் வருபவர்...அதை விட அதிகமாக  ஊர் முழுவதும் வலம் வருபவர்...! இவர் ஒரு இடத்திற்கு வந்தால் அங்கே ஏதோ விபரீதம்  (சம்பந்த பட்டவங்களுக்கு...!?),  நல்ல காரியம் (மக்களுக்கு...!?) நடக்க போகிறது என்று அர்த்தம். சினிமாவில் ஹீரோ அதிரடியா சாகசம் பண்ணினா உடனே நாம அடிக்கிற விசில் என்ன ? கைதட்டல் என்ன ? ஆனா இவர் சத்தமே இல்லாமல் பல நல்ல விசயங்களை அதிரடியாக செய்து கொண்டு வருகிறார்.


                                                          (இடது  புறம் நிற்பவர்)

யார் இவர் ?

இவரது பெயர் திரு.அ.ரா.சங்கரலிங்கம் அவர்கள் . திருநெல்வேலி மாநகராட்சியில் உணவு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். பொது  சுகாதாரம், உணவு பாதுகாப்பு துறையில் 26   ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். இந்த அனுபவங்கள் அனைத்தையும் உலகத்திற்கு எடுத்துச் சொல்லனும் என்கிற தீராத வேட்கையுடன் இருக்கிறவர். 

இவரது நண்பர் திரு. ஜோசப்  சார் அவர்களின் விருப்பத்தின்  காரணமாக வலையுலகில் கால் பதித்து எழுதி வருகிறார் . பல அதிர்ச்சி தரக்கூடிய தகவல்களை அனாயசமாக சொல்லி தெளிவு படுத்துகிறார். 

எத்தகைய பதிவுகள் ?! 

உணவு பொருள்களில் கலப்படம் எவ்வாறு எல்லாம் கலக்கப்படுகிறது, எந்த பொருளில் என்ன கலப்படம் செய்யப்பட்டு இருக்கிறது ? அவற்றை  எப்படி கண்டறிவது ? எப்படி தவிர்ப்பது என்று பல விசயங்களை  பற்றியும்  எழுதி வருகிறார். நெல்லையில் இவர் தலைமையில் செய்யப்படும் ஆய்வுகள், இவர் கலந்து கொள்ளும் கூட்டங்கள், கலந்துரையாடல்கள்  போன்றவற்றை பற்றியும் அதை குறித்து பத்திரிகைகளில் வந்த செய்திகள், வீடியோக்களையும்  பதிவில் இணைத்திருக்கிறார். 

இரண்டு நாளுக்கு முன்பு ஆங்கிலத்திலும்  பதிவுகளை வெளியிட எண்ணி புதிதாக ஆங்கில மொழி பேசும் தளம் ஒன்றும்  தொடங்கி இருக்கிறார். தமிழில் பதிவிடும் போதெல்லாம் அப்படியே ஆங்கிலத்திலும் வெளி வரும் என்று சொல்லி இருக்கிறார். தமிழ் தெரியாதவர்களுக்கும்  உதவியாக  இருக்கும்.
அதன் லிங்க் http://way2foodsafety.blogspot.com/

அனைத்து பதிவுகளுமே நாம் படித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இருநூறு பதிவுகளை எட்ட போகிறார்...எந்த பதிவு முக்கியம் என்று குறிப்பிட்டு சொல்வது மிக கடினம்.  

* தயிரில் கலப்படம் என்ற பதிவை படித்து ஆச்சரியம் ஆகிவிட்டது...அந்த பதிவின் லிங்க்  

* இவரது இந்த பதிவை பார்த்தால் ஆப்பிள் மேல்  ஒரு பயம் கலந்த மரியாதை வருவது நிச்சயம். 

* இவரது அதிரடி நடவடிக்கைக்கு ஒரு சாம்பிள் இதோ, http://unavuulagam.blogspot.com/2010_11_01_archive.html

* தூதுவாளை மிட்டாயில் கலப்படம்...மிக கொடுமைங்க இது. பாதிக்கபடுவது குழந்தைகள் என்கிற போது மனம் பதைக்கிறது...இதையும் படிங்க http://unavuulagam.blogspot.com/2010/11/blog-post_14.html 


சிறிய டீ கடை முதல் பெரிய  ஹோட்டல் வரை சென்று ஆய்வு செய்து உணவு பொருளில் கலப்படம் செய்ய பட்டோ அல்லது சுகாதார மற்ற வகையில் வைக்க பட்டிருந்தாலோ உடனே அதிரடியாக எதிரான நடவடிக்கை எடுக்கிறார். பல கடைகள் சீல் வைக்க பட்டு இருக்கின்றன. இவர் ஆய்வு செய்கிறார் என்றால் பல கடைகளின் உரிமையாளர்களுக்கும் வயிற்றில் புளியை கரைக்கும். 

உலகத்திற்க்கே அல்வா கொடுக்கிற திருநெல்வேலியில் இருக்கிற அல்வா கடைகளையும்  இவர் விட்டு வைக்கவில்லை.....! சமீபத்தில் ஒரு பிரபல கடையை அடைத்து சீல் வைத்தவர்.    

நேரில் இவரிடம் பலரும் கேட்கும்  கேள்விகளில் முக்கியமான ஒன்று,

இத்தனை ரெய்டுகள், இத்தனை வழக்குகள், அத்தனையும் செய்யும் போது மிரட்டல் வராதா ?? அடியாட்கள் வரமாட்டார்களா ?? என்று 

அதற்கு இவரின் அதிரடி பதில் " வராமல் என்ன, வரத்தான் செய்யும், அதையும் சமாளிக்க தெரிய வேண்டும், அதுதான்  சாமார்த்தியம்" என்பது தான்.

விருதுகள் 

இவரது சீரிய பணிக்காக பல விருதுகள் வாங்கி கொண்டே இருக்கிறார்...!! எண்ணிக்கை அவருக்கே தெரியாது என்று நினைக்கிறேன்.  

ஒரு பதிவில் விருது வாங்கியதை பற்றி குறிப்பிட்டு இந்த விருதுகள் எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்றாலுமே பதிவிற்கு வருகை தரும் நண்பர்கள் தரும் ஊக்கம் ஒரு அலாதி மகிழ்ச்சிதான் என்று சொல்லி இருப்பார். 

ஒரு வேண்டுகோள் நண்பர்களே 

தனது ஓய்வில்லாத வேலைகளுக்கு நடுவிலும் நேரம் ஒதுக்கி, பதிவுகளை எழுதி மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தணும் என்கிற இவரது ஆர்வம் பாராட்டபடகூடியது.  

இவர் நமது தளத்துக்கு வருவாரா, பின்னூட்டம் இடுவாரா என்று யோசிக்காமல் நமக்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பாக இதை கருதி இந்த நல்ல மனிதரை நாம் உற்சாகபடுத்த வேண்டும். 

நல்ல அதிகாரிகள் நம்மிடையே இல்லையே என்கிற ஆதங்கம் நம்மில் பலருக்கும் இருக்கும், நமக்கு இப்போது அறிமுகமாகிற இவரை உற்சாகபடுத்துவத்தின் மூலம் சிறிது நிம்மதி நமக்கு ஏற்படுவது நிச்சயம். 
   
நேரம் கிடைக்கும் போது அவசியம் எல்லோரும் இவரது தளம் சென்று பதிவுகளை படிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.

நல்ல விஷயம், நல்ல மனிதர் எங்கே இருந்தாலும் தேடி கண்டுபிடிச்சி முதலில் பாராட்டுவது பதிவுலகம் தான் என்பதை மற்றவர் தெரிந்து கொள்ள கிடைத்த ஒரு சந்தர்ப்பம்  இது.
  
நிறைகள், குறைகள் :

இவரது தளத்தை பொறுத்தவரை நிறைகள் தான் நிறைய இருக்கிறது...குறைகள் எதுவும் தெரியவில்லை. குறைகள் ஏதும் உங்களுக்கு தெரிந்தாலும் சொல்லுங்கள், அதை ஏற்று கொண்டு சரி செய்து கொள்ள கூடிய உயரிய நல்ல பண்பு கொண்டவர்.   

லேட்டஸ்ட் செய்தி 

நேற்று நெல்லை நகரில் இருந்த அனைத்து கட்சி சம்பந்த பட்ட போர்டுகள் (விளம்பர பலகைகள் ) அகற்றபட்டன. 

 பின் குறிப்பு 

ஒரு வழியாக  முதல் விமர்சனம் திருப்தியா முடிந்தது...அடுத்த பதிவர் யார் என்று முடிவு செய்து விட்டேன்...அவரை பற்றிய விமர்சனம் விரைவில்...க்ளு - அவர் ஒரு பிரபல ஆண் பதிவர் !!?


பிரியங்களுடன்
கௌசல்யா 



சனி, நவம்பர் 27

பதிவர் எழுதிய நூல் - ஒரு அறிமுகம்


இந்த பதிவு வாழ்க்கைக்கு மிக அவசியமான விஷயத்தை பற்றி விரிவாக சொல்லகூடிய ஒரு நூலை பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.  தமிழில் அந்தரங்க உறவை பற்றி பல நூல்கள் வெளி வந்திருக்கலாம், ஆனால் நான் குறிப்பிட கூடிய இந்த நூல் மற்றவற்றை விட சற்று மாறுபட்டது என்று சொல்வேன். இந்த நூலை பற்றி நான் சொல்வதற்கு ஒரு முக்கியமான காரணம் அவர் சக பதிவர் என்பதுதான். அவரது பதிவுகள் பலவற்றை நான் படித்து இருக்கிறேன். பதிவுகளை நகைச்சுவையுடனும்,  நவீன அறிவியல் ஆய்வுகள் பாலியல் உறவுகள்  பற்றி என்ன சொல்கிறது என்பதையும் விரிவான விளக்கத்துடன் எழுதி இருப்பார். அவரது அந்த பதிவுகள் தான் இன்று அவரை ஒரு எழுத்தாளராகவும் உயர்த்தி  இருக்கிறது.

யார் இவர்.....? 

அவரது பெயர் ஹரிநாராயணன், அவர் பத்மஹரி என்ற பெயரில் பதிவுகள் எழுதி வருகிறார். கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலிருப்பு கிராமம் தான் இவரது சொந்த ஊர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உயிரிதொழில்நுட்பவியலில் முதுகலைப்பட்டம் பயின்று முதலிடத்தையும், தங்கபதக்கத்தையும் வென்றவர். தற்போது ஜப்பானில் புற்றுநோய் ஸ்டெம் செல் குறித்த ஆய்வை (Ph.D) தொடர்ந்து வருகிறார். பெண்களின் மார்பகப்புற்று நோய்க்கான அடிப்படைக் காரணங்களை அறியும் முயற்சியில்  ஈடுபட்டுள்ளார். ஒரு தமிழனாய் இவரது ஆய்வு பயணம் மேலும் தொடர்ந்து சாதனை நிகழ்த்த நாம் இவரை வாழ்த்துவோம்.

நூலை குறித்த எனது விமர்சனம்

 உலகின் பல்வேறு நாடுகளில் நடத்தப்படும் அறிவியல் மற்றும் மருத்துவ துறை சார்ந்த ஆய்வுகளில் இருந்து மிக முக்கியமான தகவல்களைத் தொகுத்து எழுதப்பட்ட தமிழின் முதல் நூல் என்பதில் சந்தேகம் இல்லை. கொஞ்சமும் ஆபாச கலப்பு இல்லாமல்,  மிக எளிமையான எழுத்து நடையில் எழுத பட்டிருக்கிறது. மேலும் செக்ஸ் என்பது உடம்பில் ஏற்படும் ரசாயன மாற்றத்தால் தான் என்பது எல்லோருக்கும் தெரியும். இதை ஒரு ஆராய்ச்சியாளரான இவர்  அறிவியலுடன் சம்பந்த படுத்தி எழுதி இருப்பது செக்ஸ் பற்றிய குழப்பங்களையும், பயத்தையும் கண்டிப்பாக போக்கும் என்பது நூலை படித்த பின் எனக்கு தோன்றிய ஒரு எண்ணம்.

செக்ஸ் பற்றி பேசுவதே பெரிய குற்றம் என்ற மனோபாவம் நம்மிடையே இருப்பதால் தான் பல புரிதல்கள்  இல்லாமல் தாம்பத்தியம் பல வீடுகளில்  தள்ளாடி கொண்டு இருக்கிறது. சில தெளிவுகள் நிச்சயம் தேவை. அதற்கு இந்த நூல் கண்டிப்பாக உதவும்.

ஹார்மோன்களுடன் தொடர்புடைய சில நோய்கள், பாலியல் உறவுகளின் இயல்பு, பாலியல் வக்கிரங்கள், குற்றங்கள் போன்றவற்றையும், திருநங்கைகள், ஓரினச்சேர்கையாளர்கள், பாலியல் குற்றவாளிகள் உருவாக காரணம் என்ன என்பதையும் எழுதியுள்ளார். இவற்றை  பற்றி சமீபத்திய ஆய்வுகள் என்ன சொல்கிறது என்பதையும் சேர்த்து எழுதி இருப்பதன் மூலம்  சொல்லப்பட்டு இருக்கும் விசயத்தின் நம்பகத்தன்மையை புரிந்து கொள்ளமுடிகிறது.


மேலும் சில சுவாரசிய துளிகள்

* கள்ளகாதல் எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் ஒரு காரணமாக மரபணுக்கள் இருக்கின்றன என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது...

40 %  மரபணுக்கள் காரணம்
60 %  வளர்க்கப்பட்ட விதம் மற்றும் சுற்றுபுறசூழல்

மரபணுக்களில் இருந்தால் இதை தவிர்க்க என்ன செய்யலாம் என்பதற்கு தீர்வையும் சொல்லி இருக்கிறார்.

* பெண்கள் வயதாக வயதாக பிறருக்கு உதவுவதையும், சேவை செய்வதையும் விரும்புகிறார்கள் என்பதை ஆய்வு சொல்கிறது.

*  திருமணதிற்கு பின் பலவருடங்களாக தான் குடும்பத்துக்கு உழைக்கும் பெண்கள் முதுமையில் அவர்களுடைய ஆசாபாசங்கள், லட்சியங்கள் போன்றவற்றிற்காக அதிக நேரம் செலவிடவே விரும்புகிறார்கள்...... தீர செயல்களை புரிய துணிகிறார்கள்...!

* பெண்கள் உள்ளுணர்வு மிக்கவர்கள், முகபாவங்கள் சைகைகள் போன்றவற்றில் ஒளிந்திருக்கும் பேசாத வார்த்தைகளின் அர்த்தங்களை கண்டறியும் திறன் பெற்றவர்கள் என்பதை ஆய்வுகள் நிரூபிக்கின்றன...


நூலின் உள்ளே…..
பாலியல் சுவாரசியங்கள்!
முத்தமும் வைரஸும்.
மதுவும் செக்ஸும்…..
அரிதான பாலியல் உடலியக்கங்களும், விளைவுகளும்!
திருநங்கைகள்/அரவாணிகள் பற்றிய முழுவிவரங்கள்; அறிவியல் பின்புலத்திலிருந்து மருத்துவம் வரை…..
ஓரினச்சேர்க்கையாளர்கள்; ஏன் பிறக்கிறார்கள், எப்படி உருவாகிறார்கள் இன்னும் பல தகவல்கள்…..
சமுதாயத்தின் சில பாலியல் பேரவலங்கள்/வக்கிரங்களும், தீர்வுகளும்!
கள்ள உறவுகள்; அதிர வைக்கும் அறிவியல் பின்புலம், உளவியல் காரணங்கள் மற்றும் தீர்வுகள்…..
பீடோஃபீலியா; குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை: காரணங்கள், தீர்வுகள்…..
பாலியல் புதிர்கள்!
உச்சகட்டம்; புதிரா புனிதமா?: உச்சகட்டம் குறித்த பலவகையான விளக்கங்கள் மற்றும் பயன்கள்…..
இதில் முத்தமும் வைரசும் என்பதை படிக்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.....முத்தம் கொடுத்தால் பரவுகிற கிருமி ஒண்ணு இருக்கிறதாம்...(இதற்கு மேல் இங்கே விரிவாக சொன்னால் நூலை படிக்கும் போது சுவாரசியம் இருக்காது... ) ஆனால் ஒரே ஆடவனை/கணவனை  கர்ப்பம் தரிப்பதற்கு ஆறு மாதங்களுக்கு  முன் மனைவி முத்தமிட்டால் சைட்டோமேகாலோ வைரசுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை அப்பெண் பெற்று விடுகிறாள் என்கிறது ஆய்வு.  கருவுற்றபின் பிறக்க போகும் குழந்தையையும் ஆபத்தான வைரசிடம் இருந்து காப்பாற்றுகிறதாம்.


(முத்தம் கொடுப்பதிலும் கலந்திருக்கிறது
காதல் வைரஸ். ஒருவனுக்கு ஒருத்தி என்ற
கலாச்சாரம்தான் சரியானது என்பதை 
அறிவியலும் அங்கீகரிக்கும் அதிசயம்.....!)

ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரம் தான் சரி என்பதை அறிவியலும் அங்கீகரிக்கிறதை புரிந்து கொள்ள முடிகிறது....! (இந்த இடத்தில் லிவிங் டுகெதர்  நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பில்லைங்க ......?!)  

ஜேம்ஸ்பாண்டையும் விட்டுவைக்கவில்லை இவர்....! ஒவ்வொரு தலைப்பும் வித்தியாசம் தான், படிக்கவும்  வெகு சுவாரசியமாக இருக்கிறது.

சமீப காலமாக  மருத்துவரிடம்  கவுன்செல்லிங் செல்வது அதிகரித்து வருகிறது , அப்படி செல்பவர்கள் இந்த நூலை படித்தால் தெளிவு பெறுவார்கள் என்பது நிச்சயம்....

ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டு இருக்கிறது...
நூலின் விலையும் அதிகம் இல்லை 130/- மட்டுமே  

இந்த நூல் கிடைக்குமிடம்:
Blackhole Media  Publication Limited,
No.7/1, 3-rd Avenue, Ashok nagar,
Chennai-600 083. India
மேலும் அனைத்து ஊர்களிலும் இந்த நூல் கிடைக்கிறது.

இந்த நூல் வேண்டுவோர், உடனே தொடர்பு கொள்க.மின்னஞ்சல்:admin@blackholemedia.in  
செல்பேசி:+91 9600086474 ,+91 9600123146