பூமியில் காணப்படும் செடி, கொடி, மரங்கள் முதல் மிருகங்கள், பறவைகள், பூச்சி இனங்கள் போன்றவற்றுடன் மனிதனும் இணைந்த இணைப்பே பல்லுயிரியம் (Bio diversity) எனப்படுகிறது. இவை அனைத்தும் சரிவிகிதத்தில் இருக்கவேண்டும்.
ஆனால்... மனிதனை தவிர மற்றவை அனைத்தும் தங்கள் பங்கை சிறப்பாக செய்து வரும் போது 'ஆறறிவு படைத்த மனிதன்' தனது சுயநலத்திற்க்காக மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும் பிறவற்றுக்கு ஆபத்தாக முடிந்துவிடுகிறது.
எங்கும் படபடவென்று தன சிறகுகளை விரித்து சுறுசுறுப்பாக பறந்து கொண்டிருக்கும் சிட்டுகுருவி இன்று எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. கிராமங்களிலும் காணமுடிவதில்லை.
உலக சிட்டுக்குருவிகள் தினம்
அழிவினை நோக்கி சென்றுகொண்டிருக்கும் ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு தினத்தை ஏற்படுத்தி கொண்டாடி கொண்டிருக்கிறோம். வெறும் நினைவுகளை மட்டுமே அசை போட்டு கொண்டிருக்கும் இந்நிலை நிச்சயமாக மனித வாழ்க்கைக்கு நிறைவை தராது. மனிதனை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒவ்வொன்றும் மனிதனை விட்டு விடைபெற்று சென்று கொண்டிருப்பது காலத்தின் கோலம் அன்றி வேறென்ன...?! பாலையும் தண்ணீரையும் பிரித்தறியும் அன்ன பறவையை காவியங்களில் பார்த்திருக்கலாம், அவை கற்பனைதானோ !?
எங்கும் மனிதர்கள்...ஒருவரோடு ஒருவர் இடித்துகொள்ளும் அளவிற்கு பெருகிவிட்டார்கள்...அதனால் பிற உயிரினங்கள் தங்களுக்கான இடம் பறிபோய்விட்டது என்ற வருத்தத்தில் அழிந்து போய் கொண்டிருக்கின்றனவோ என்னவோ...?
மனிதன் சற்றும் யோசிக்காமல் மரங்களை வெட்டுகிறான், மணலை அள்ளி ஆறுகளை அழிக்கிறான், சுற்றுபுறத்தை மாசு படுத்துகிறான், பசுமை காடுகளை பாலைவனமாக மாற்றிவிட்டன...நம்முடன் இருந்த பல உயிரினங்கள் ஒவ்வொன்றாக நம்மை விட்டு விலகி போய்கொண்டே இருக்கின்றன...
இயற்கை ஆர்வலர்கள் இதனை பாதுகாக்க தற்போது கணக்கெடுப்பதாக இருக்கிறார்கள்...! கண் கெட்ட பின்.......என்றாகிவிட்டது. சக உயிரில் அக்கறை இல்லாதவர்கள் சக மனிதனை எவ்வாறு மதிப்பார்கள் என தெரியவில்லை...
அழிய என்ன காரணம் ?!
செல்போன் கதிரியக்கத்தால் குருவிகளின் கருத்தரிக்கும் தன்மை பாதிக்க படுவதாக சொல்லபட்டாலும் மாசுபட்ட சுற்றுப்புறசூழலும், முன்பு எங்கும் சிந்தி சிதறி கிடந்த உணவு தானியங்களின் பற்றாக்குறையும் ஒரு முக்கிய காரணம். முன்பு நிலத்தை சிறிது தோண்டினாலும் மண் புழுக்களை பார்க்கலாம், ஆனால் இப்போது வேதி உரங்கள் போடப்பட்ட மண்ணில் உயிர் சத்து இல்லாமல் புழுக்களை காணமுடிவதில்லை. மேலும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஈயம் கலவாத பெட்ரோல் புழு பூச்சிகளை அழித்துவிடுகிறது, குஞ்சு குருவிகளுக்கு இவை நல்லதொரு உணவு.
சோடியம் விளக்குகளாலும் அழிகின்றன என சொல்கிறார்கள். ஆனால் இவை மட்டும் தான் உண்மையான காரணங்களா என தெரியவில்லை. மனிதரின் அலட்சியம் ஒன்று மட்டும்தான் காரணம் என நினைக்க தோன்றுகிறது. ஒரு பொருள் காணவில்லை என்றானபின் தான் அதன் மேல் அதிக அக்கறை வந்து தேட தொடங்குகிறோம்...அது போன்றுதான் மனிதனை எப்போதும் சுத்தி சுத்தி வந்து வளையமிட்ட சிட்டுக்குருவிகளை சட்டை செய்யாமல் இருந்தோம்...வெகு தாமதமாக அவை குறைந்து போனதை உணர்ந்து 'அடடா இப்படி ஆகிபோச்சே என்ன செய்யலாம்' என தவிக்கிறான் மனிதன்...?!
சிட்டுகுருவிகளுக்காக ஒரு செல்ட்டர் ஒன்று அமைத்து வளர்க்கலாம் (முக்கியமாக செல்போன் டவர் இல்லாத இடத்தில் )என யோசித்தேன். அவ்வாறு வளர்க்கலாமா ? இது போன்ற கூண்டுகளில் அவை வளருமா? என பலரிடமும் ஆலோசனை கேட்ட பின்னே முயற்சிகள் மேற்கொண்டேன். . வெளியிடங்களில் அவை அழிந்துவருகின்றன என்பதால் இயன்றவரை ஒரு பத்து குருவிகளையாவது பாதுகாக்கலாம் என சொந்த ஊரில் மரங்கள் அடர்ந்த எங்களின் பண்ணை வீட்டில் பெரிய மரங்களை உள்ளடக்கி பிரமாண்ட கம்பி வலை கூண்டு ஒன்றை அமைக்க ஏற்பாடுகள் செய்து விட்டேன். பறவைகள் அதனுள் சுதந்திரமாக பறக்ககூடிய அளவில் இருக்கவேண்டும் எனவும் அதன் உள்ளேயே பறவைகளுக்கான உணவு, நீர் போன்றவற்றை தினமும் வைத்து பராமரிக்கவேண்டும் என்ற அளவிலே நிர்மாணித்தேன்...!
ஆனால்...
சிட்டுகுருவி தேவை என பலரிடம் மூன்று மாதங்களுக்கும் மேலாக கேட்டு கொண்டிருக்கிறேன். கிராம புறங்களில் இதற்கென இருப்பவர்களிடம் சொல்லி வைத்தேன், பிடித்து தாருங்கள் பணம் கொடுத்து பெற்றுகொள்கிறேன் என்று...இதுவரை ஒரு சிட்டுக்குருவியும் கிடைக்கவில்லை...?!!
காணக் கிடைக்கவில்லை என்ற பதில்களை விட எங்கே தேடுவது என்பதே கேள்வி குறியாகிவிட்டது. நமது சிறுவயதில் இருந்து நம்முடன் ஒன்றாக வாழ்ந்து வந்துகொண்டிருந்த ஒரு இனம் இன்று முற்றிலும் அழியும் கட்டத்திற்கு வந்துவிட்டது...நாளை நம் குழந்தைகள் சிட்டுக்குருவியை புகைப் படங்களில் மட்டுமே பார்ப்பார்கள் என்பது நிச்சயம்...!
தேடுதல் தொடரும்...கிடைக்கும் வரை...!!!
பின் குறிப்பு
உலக சிட்டுக்குருவிகள் தின வாழ்த்துக்கள் பரிமாறிக்கொள்ளும் இந்நாளில் மீதம் இருக்கும் இயற்கையின் அரிய உயிரினங்களையாவது அழிய தொடங்கும் முன்பே அவற்றின் மீது அக்கறை செலுத்த தொடங்குவோம்...!
படங்கள் - நன்றி கூகுள்

