காமம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காமம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், மார்ச் 8

ஜமீலா - பெண்மை ஒரு விலைப்பொருள்...??!

மனதைப் பாதித்ததை எழுதவேண்டும்  என முடிவு செய்து விட்டேன் ஆனால் எப்படி ஆரம்பிப்பது என்ற குழப்பத்தில் முதல் வரியோடு மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கிறேன்,அதனால் நீங்களும் 'ஆரம்பத்தை' அசட்டை செய்துவிட்டு தொடர்ந்துப்  படிங்க. இந்த எழுத்தும் வாழ்க்கையும் ஒன்று , நமது எண்ணம் போல் வாழ்க்கை அமைவது இல்லை, சிந்திப்பதை எல்லாம் அப்படியே எழுத்தில் கொண்டு வர முடிவதும் இல்லை. ஏதோ வாழ்கிறோம், வெளியே நிறைவாய் வாழ்வதாய்  ஒரு போர்வையை சுற்றிக்கொண்டு வித்தை காட்டிக்கொண்டிருக்கிறோம். சுற்றி இருப்பவர்கள் நம்மை ரசிக்கிறார்களா அல்லது கேலிச்  செய்து  நகைக்கிறார்களா என்பதும் தெரியாது. ஆனாலும் அடுத்த நொடி என்ன நடக்கும் என்றே தெரியாத இந்த வாழ்வு ஆகச் சிறந்த ஒரு சுவாரசியம்.

சமீபத்தில் என்னை மிக யோசிக்க வைத்த ஒரு பெண்ணின் உணர்வுகளை வரிகளாக்கி பார்த்துவிடவேண்டும் என்ற எனது  விருப்பமே இந்த பதிவு. 

* * *


ஜமீலா எனது பெயர் 

அழகானவள் என்ற அர்த்தம் வருவதால் ஜமீலா என்ற பெயர் எனக்கு மிக பிடிக்கும். அதனால் ஜமீலா என்றே அழையுங்கள். 

சுயசரிதை எழுதவேண்டும் என எனக்கு ஒரு ஆசை...மற்றவர்கள் எழுதும் சுயசரிதையில் மனிதர்களின் மணம்(!) வீசும் ,எங்களது  சுயசரிதையின் எந்த பக்கத்தை திறந்தாலும் சமூகத்தின் நாற்றம் மூக்கைத்  துளைக்கும்.
ஆம் ஒவ்வொரு ஜமீலாவும் சுயசரிதை எழுதவேண்டும், எழுதினால் அங்கே பல பெரிய மனிதர்களின் கருப்புப்  பக்கங்கள், பச்சை வண்ணம் உடுத்திப்  பல்லைக்  காட்டிக்  கொண்டிருக்கும்...! ஏறக்குறைய அத்தனை ஜமீலாக்களின் கதையும் ஒரே மாதிரி தான் இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவை. என்னவொன்று  எங்களின் தேவை எது என்பதை வருபவர்கள்  முடிவு செய்கிறார்கள். இப்போது புரிந்திருக்குமே எனது தொழில் எது என்பது !

'பெண்' இந்த ஒரு வார்த்தைக்குத்  தான் எத்தனை வசீகரம் ! பெண்ணாய்  பிறக்க மாதவம் செய்துவிட வேண்டுமம்மா !  ஆனால்  ஒரு பெண் பெண்ணாக வாழ என்ன தவம் செய்யணும் !? பெண் என்றால் அவளிடம்  நால்வகை குணம் இருக்கணுமாம். நாலுமே இல்லாதவ  பெண் இல்லை என்றால் நானும் பெண் இல்லை ?! பூக்களைச்  சுற்றிவரும் வண்டுகள் தன் வழி மறப்பதில்லை, அது போல் பெண்ணைச்  சுற்றும் ஆண்களும் நிறுத்தப்  போவதில்லை. அப்படி நிறுத்திவிட்டால் என்னைப்  போன்றவர்களின் நிலை ! நானும் வாழ்ந்தாக வேண்டும் , பெண்மையை விலைப்  பேசி விற்கிறேன் என்கிறார்கள், என் வேலை எது என்பது என் முடிவு என் உரிமை தானே. அவர்களுக்கு என்ன தெரியும் எனக்குள்ளே கொதித்துக் கொண்டிருக்கும் நெருப்பைப்  பற்றி. அதனால் தான்  வந்தவனின் தணல் சுடுவதில்லை, தணித்து விடுகிறேன்...தணிந்தும் விடுகிறது...நெருப்பை நெருப்பால்...!!

சில நொடியில் களையப்படும், கலைக்கப்படும்  என தெரிந்தேப்  பார்த்துப்  பார்த்து அலங்கரிப்பேன்...சில நொடிகளாவது எனக்காய் செலவிடுவதில் எனக்கு கொள்ளை ஆசை...விற்பனை பொருளாச்சே, கறை(?) படிந்து இருந்தால் பார்க்க நன்றாகவா இருக்கும்...!?

வந்தவனுக்காகச்  சிரித்து, அவனுக்காக அழுது அவன் சொல்லும் காதல் வசனங்களுக்கு பொய்யாய் மயங்கி, பொய்யாய் கிறங்கி , பொய்யாய் உளறி ஒரு கட்டத்தில் உண்மையாகக்  காதலித்தும் விடுகிறேன்! காதலுடன் காலில் விழுந்து 'கரைத் தேற்ற வந்த கிருஷ்ணபகவான் நீ' என்றதும், கீதையை கையில் கொடுத்துவிட்டுச் சென்று விடுகிறான்  !!

அவ்வப்போது காதல் வந்துப்  போகிறது...எது காதல் என்ற குழப்பம் மட்டும் இன்னும் தீர்ந்தப்பாடில்லை....காதலைக் கரைக்கும் இடமும், காமத்தில் கரையும் இடமும் ஒன்றுப்  போலவேத் தெரிகிறது...ஏமாற்றங்கள் வலிகள் பழகிப் போயின...மரத்துப்போன மனதும் உடலும் சாய ஒரு தோளைத்   தேடித் தேடிச்  சோர்ந்துப் போகிறது...!!

என் குரலும் பேச்சும் கவிதை மாதிரி இருக்குனு வந்தவங்கச்  சொல்வாங்க...?! கவிதை எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணினது கூட இல்லை. என் வாழ்க்கை பலர் எழுதிய ஒரு கவிதை...பல வண்ணங்கள் குழைத்து பலரால் தீட்டப்பட்ட ஓவியம்..!! எனது  வாழ்க்கையை எழுதிப்  பார்க்கணும்னு தோணுது. இதை கவிதையா பார்க்காதிங்க, ஆமாம் இது கவிதை அல்ல என் வாழ்க்கை !!

அஞ்சு பத்துக்கு அலைந்தேன் 
சில காலம் 
ஒதுக்குப்புற முட்புதரில் முள்ளோடு முள்ளாய்
என்னைக்  கிடத்தியிருக்கிறேன் 
பல காலம்...


சிறிது ஒதுக்கிய மாராப்பு
சற்றுக்  கோணலான புன்னகை 
ஒட்டவைத்த முகத்தோடு
நெடுஞ்சாலை மரத்தோடு 
மரமாய் சில நாட்கள்...

செத்துப்போன குடிகாரக் கணவன் 
கொடுத்தப்  பரிசென உருக்குலைந்த உடல் 
ஏற்ற வேலை இதுவென ஆசி கூறி 
வாழ(?) வழிகாட்டினர்
ஊரில் உள்ள நல்லவர்கள் !
                                                 
குழந்தைகள் வீட்டில் பசியாற
ஊர் பசியாற்ற வாழ்த்தி
அனுப்பியது விதியும் !

ஆரம்பத்தில்
சரியாக படியாத வியாபாரம் 
இப்போது வெகு ஜோர்  
நினைவாய் சொல்லிவிடுவேன்
'அவசியம் அடுத்தமுறை வா
சிறிது குறைத்துக் கொள்கிறேன்
பணத்தை!' 
                     
தேர்ந்த வியாபாரி ஆனேன்
தேடிப்  போகவில்லை
தேடி வரவைக்கிறேன் வரவை...!?

சத்தியங்கள் பல மரணித்தலும்
சத்தியங்கள் சில உயிர்பித்தலும்
ஒரு சேர நிகழும் எனதருகில்...
இரண்டிலும் சாட்சி என்னவோ
பெண்தான் !

பணம் புகழ் திமிர் கர்வம் 
இதோ 
மண்டியிட்டுக்  கிடக்கின்றன
என் காலடியில்
சில உளறல்களின் வடிவில்...

சற்று முன்வரை ராமனாம்
சலிக்காமல் சொல்கிறார்கள்...
ஒரே விதமாய் வேடந்தரிக்க
எப்படி முடிகிறது 
ஆண்கள் எல்லோராலும் !?

ஒரே வசனம்
தவறாமல் ஒப்பித்தார்கள்
'மனைவி மனைவியாய்
நடந்துக் கொள்ள மாட்டாள்'

'ஒருநாளாவது நல்ல கணவனாய்
நடந்தது உண்டா நீ ?!'
கேட்க எழும் நாவை
அடக்கிக் கொள்வேன்
எனக்கு வியாபாரம் முக்கியம்  !

ஏனோ
பாறை வெடிப்புகளில்
பதுங்கிக்கொள்கிறது 
பலரது ஆண்மை!

ஏனோ
நால்வகை குணம் விற்று
விற்பனையாகிறது 
சிலரது பெண்மை !

இன்றும் 
எதிர்ப்பார்த்து 
வாசலில் காத்திருக்கிறேன் - அலங்கார
வசீகரங்களுடன்...
வசீகரன் தேவை இல்லை எனக்கு  
வசதி இருக்கிறவன் போதும் !


**************
விலைப்பொருளாகிப் போன பெண்மை  

பெண்களுக்கு என்றே பிரதானமாக உயர்வாக சொல்லப்படும் பெண்மை ஒரு சிலருக்கு மட்டும்  கடைத்  தெருவில் கூவிக்  கூவி விற்கப்படும் விற்பனை பொருளாக  மாறிவிடுகிறது...! காரணங்களை தேடினால் ஆதி மூலக்கதைகள் பலவற்றைச்  சொல்லி சமாதானம் செய்வார்கள்... ஆணை திருப்தி படுத்தவென்றேப்  படைக்கப்பட்ட பெண்கள் இருக்கும்போது பெண்ணை திருப்திப்படுத்த ஆண்கள் ஏன் இருக்க கூடாது என உரிமை பேசும் காலம் இது ...அவ்வாறும்(!) இருக்கிறார்கள் என்று தெரிய வரும் போது ஓரளவு சமாதானம் ஆகிவிட்டது மனது...!!  ஆணுக்கு பெண் இளைப்பில்லைக்  காண் !!

முன்பு இலை மறைக்  காயாக இருந்த சமூக அவலங்கள் இன்று வண்ண ஆடை உடுத்தி பூனை நடை நடக்கின்றன...பெண்களுக்கே  பெண்மையின்  அர்த்தம் புரியவில்லை. ஆதிக்க அடிமைத்தனத்தில் இருந்து எழுந்துவிட்டதாக எண்ணிக்கொண்டு ஆடை, ஆபரணங்கள், ஆடம்பர மோகம் இவற்றிற்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் பெண்கள் ஒரு பக்கம்...தன்னைத்  தானே விற்றுக்கொண்டு  பிழைப்பு நடத்தும் பெண்கள் மற்றொரு  பக்கம்... இதில் எங்கே இருக்கிறது பெண்மை...?!!

பாலியல் தொழிலில் ஈடுபட வறுமை ஒரு காரணம் ஆனால் இது மட்டுமே காரணம் அல்ல. சமூகத்தின் பாலியல் வறட்சி இவர்களை போன்றோர்களை உருவாக்கிவிடுகிறது . விபசாரம் ஒரு பாவம் என்று யார் சொன்னாலும் அது நடந்துக் கொண்டுதானே இருக்கிறது.  நாட்டில் பல பாவங்கள் அதிகரிக்காமல் போவதற்கு ஜமீலா  போன்றோர் ஒரு பெரிய காரணம் .

பாலியல் பற்றிய புரிதல் படித்தவர்களிடத்தில் கூட சரியாக இல்லை. உடலின் தேவைப் பூர்த்தியானால் அனைத்திலும் முழுமைப்  பெற்றுவிட்டதான ஒரு மாயைக்குள்  மனிதர்கள் சுலபமாக விழுந்து விடுகிறார்கள். ஆனால் உடலின் தேவை அன்றி மனதும் முழுமைப்  பெறவேண்டும். அடக்கி வைக்கப்படும் எது ஒன்றும் சிறு வாய்ப்புக்  கிடைத்தாலும் அதிக ஆக்ரோஷமாக வெளிப்படுவதைப்  போன்றது தான் காமத்தை அடக்கி வைப்பதும் !! மேலும் காமத்தை முறையாக அணுகவும் அறியவும் வேண்டும், மாறாக அச்சத்துடன் ஒரு குற்ற உணர்ச்சியுடன் அறிய முற்படும்போது, மனஅழுத்தம்  தான் அதிகரிக்கும். அறிதலும் புரிதலும் தெளிவும் இல்லாமல் தான் மனித புத்தி வக்கிரமாக காமத்தைப் பார்க்கிறது... அணுகுகிறது...!!!   

உடல் ஒரு இயந்திரம் என்றால் அதை இயக்கும்  கருவி மனது, மனதை வசீகரித்து, தூண்டி,  திருப்தி செய்துக் கொண்டே உடலை அணுகும் போது அங்கே காமம் அதிகரித்து அதிர்வுகள் ஏற்பட்டு, உச்சம் அடையும்போது மனம் உடல் இரண்டும் அமைதி அடையும்.

பாலியல் இச்சைகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது...! பாலுறவு மானுடத்தின் அடிப்படைத்  தேவை, அவை நிறைவானவையாக இல்லாதப்  போது நிறைவு எங்கே என்ற தேடல் சகஜம் தானே ?! தேடல் ஒன்றுடன் முடிவது இல்லை என்பது இயற்கை. தேவையை தீர்க்கும் அவசியம் ஏற்பட்டால் வடிகால்களைத்  தேடுகிறார்கள், சமயங்களில் வடிகாலாக மாறியும் விடுகிறார்கள். ஒன்றைக்  கொடுத்து ஒன்றைப்  பெறுவதுதானே வியாபாரம், வியாபாரம் போலாகிப்  போனது இன்றைய வாழ்க்கை !!

பெண்களால் முடியாது

ஆண்களைப்  போல பெண்கள் பாலியல் குறித்த விசயங்களைப்   பேசக்கூட முடியாது. நிறைவான பாலுறவு என்பது ஒரு அடிப்படை மானுடத்  தேவை. கண்டிப்பாக பெண்களுக்கும் பாலியல் இச்சைகள் உண்டு, காமத்தை நன்கு புரிந்தவள் அதை உணர்ந்து, சூழலுக்கு ஏற்பத்  தன்னைக்  காத்து அச்சூழலை  இலகுவாகக்  கடந்துச்  சென்றுவிடுவாள், ஆனால் அதை பற்றிய புரிதல் இல்லாத பெண் தன்னையும் தொலைத்து பெண் சமூகத்திற்கு அவப்பெயரை தேடிக் கொடுத்து விடுகிறாள். இன்றும் கற்பு ஒரு பொருள் என்ற ரீதியில் பெண்ணே யோசித்துக் கொண்டிருக்கிறாள், என்ன செய்வது அரைகுறையாக புரிந்துக் கொள்ளப்படும் எதுவுமே ஆபத்துத் தான்.

ஒரு மானுட ஆதார விஷயத்திற்கு எவ்வளவு முகமூடிகள், கதைப்பின்னல்கள், குடும்பம் என்கிற அமைப்புகள், வன்புணர்வுகள், அத்துமீறல்கள். பெண்களுக்கு கற்பு என்ற ஒன்றைக்  கற்பித்தவன் பெரிய சூத்ரதாரியாக இருந்திருக்க வேண்டும். மிக அழுத்தமான, ஆழமான அரசியலை வெகுச்   சுலபமாகத்  தள்ளிவிட்டு, அதன்மூலம் தன் தேவைகளைக்  காலங்காலமாக ஆண்கள் நிறைவேற்றிக் கொண்டு வருகிறார்கள்.  இன்று மேற்குலக நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட பாலியல் தொழிலாளிகள்  மீது பிரயோகிக்கப்படும் வக்கிரங்களை/ வன்முறையை எப்படிப் பார்ப்பது. தங்கள் துணையுடன் ஈடுபடமுடியாத fantasy க்களை வக்கிரமான எதிர்பார்ப்புக்களை காசு கொடுத்துப் பண்ணுகிறார்கள் என்றா? அவ்வளவு கொடுமைகள் திரை மறைவில் பெண்மைக்கு  இழைக்கப் படுகிறது, விதவிதமான உறவு நிலைகளை நிகழ்த்திப் பார்த்து தனது ஆழ்மன விகாரங்களை வெளிப்படுத்தி திருப்தி அடைகிறார்கள்.  விபசாரத்திற்காக நாடு விட்டு நாடு, சிறுமிகள் கடத்தல் வெகு காலமாக சர்வ சாதாரணமாக  நடந்துவருகிறது.   பெண்மை விலைப்  போவதைப்  பற்றி  யாருக்கும் அக்கறை இல்லை, ஏன் 'பெண்'ணுக்கே இல்லை.  

தற்போது பாலியல் தொழிலாளியைத்  தேடிப் போகவேண்டும்  என்கிற தேவைக்  குறைந்து  தங்களைச் சுற்றியேத்  தீர்த்துக் கொள்கிறார்களோ  என்ற ஒரு கேள்வியுடன் கட்டுரையை முடிக்கிறேன்.  கேள்வி புரியாதவர்களுக்கு  'பிறனில்  விழையாமை'  குறள்களை நினைவுப் படுத்துகிறேன்.  வள்ளுவர் இதை  ஆண்களுக்காக எழுதினாலும் விளக்கம் என்பது ஆண் பெண் இருவருக்கும் பொதுவே.






மகளிர் தின வாழ்த்துக்கள் !!

* * * * * * * * * 

தொடர்ந்து பேசுகிறேன்... 
உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா 



புதன், நவம்பர் 18

காமம் - பெண்ணின் தவிப்பும் ஆணின் புரிதலும் !!!

இதுவரை  பேசாப் பொருளா காமம் - அறிமுகம்  படிக்காதவர்கள்,  அதை படித்தப்பின்  இப்பதிவைப்  படித்தால்  தொடர்ச்சிப்  புரியும். நன்றி.

* * * * *

திருமணமானவர்களே இது உங்களுக்கான கேள்வி...

=> காமத்தை காதலோடு செய்கிறீர்களா ?

* இது என்னங்க கேள்வி ... காதல் இல்லாமலா காமம் வச்சுக்க முடியும்?

=> இன்னும் கொஞ்சம் நல்லா யோசிச்சு சொல்லுங்க ... உங்க காமத்தில் காதல் இருக்கிறதா?

* இது என்ன  குழப்பம் உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கான்ற மாதிரி??!! புரியலையே...

=> அப்ப இந்த கட்டுரை உங்களுக்குத்தான் தொடர்ந்து வாசிங்க...

* * * * *

காமத்தை காதலுடன் ரசித்து உணர்ந்தவர்கள் வாழ்க்கையை ரசித்து வாழ்கிறார்கள். மற்றவர்கள் வாழாமல் வாழ்க்கையுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள் !!

தம்பதியருக்கிடையில் காதல் என்று  தனியாக இருக்கவேண்டியதில்லை என்பது உங்களின் எண்ணமாக இருந்தால் உடனே மாற்றிக் கொள்ளுங்கள். புது தம்பதியர் இருவரும் காதல் இன்றி முதல்இரவு என்ற கட்டாயத்திற்காக உறவு வைத்துக் கொள்வதும் தற்கொலைக்கு முயலுவதும் ஒன்றுதான்.  காமத்தை கையாள கட்டாயம் அங்கே காதல் இருந்தாக வேண்டும். அத்தகைய குடும்ப உறவுகள் மட்டுமே நீடித்து நிலைத்து நிற்கும். பெரியோர்கள், நண்பர்கள் சொன்னார்கள் என்றும்  சம்பிரதாயமாம் என்றும் திருமணத்தன்று இரவே அவசர அவசரமாக நடந்து முடிவதற்கு பெயர் காமமும் அல்ல காதலும் அல்ல... முழுமையான தாம்பத்தியமும் அல்ல.  ஒரே வார்த்தையில் சொன்னால் அது ஒரு  'விபத்து' 

Lust is not a sin. பேசாப் பொருள் அல்ல காமம்


'காதலுடன் காமம்' என்பது உடலின் ஒவ்வொரு செல்லும் மென்மையாக தூண்டப்பட உணர்ச்சிகள் மலரைப்  போல மெல்ல விரிய, தானும் நுகர்ந்து துணையையும் நுகரவைக்கும் அற்புத அனுபவம்... வி(மு)டிந்த பின்னும் அடுத்து எப்போது எப்போது என ஏங்க வைக்கும்! சும்மா தொட்டதும் இந்த நிலை ஏற்பட்டுவிடாது, அதற்குத்தான் காதலை துணைக்கு அழைத்துக் கொள்ளவேண்டும் என்கின்றேன்.

வெறும் காமத்துடன் உடல்கள் ஒன்று சேர்ந்தால்   குழந்தை பெற்றுக் கொள்ளலாமே தவிர இறுதிவரை சந்தோசமாக குடும்பம் நடத்த முடியாது. அதுவும் மன அழுத்தம் மிகுந்த இன்றைய இயந்திர வாழ்க்கையில் காமம் மட்டும் என்றால் வேலைக்காகாது. அட ச்சே இவ்ளோதானா மேட்டர் இதுக்குத்தானா இவ்ளோ பில்ட்அப் என்று அசால்ட்டா தூக்கிப் போட்டுவிட்டு கண்டுக்காமப்  போயிக்கிட்டே இருப்பாள் பெண்! நேசத்திற்கும் வலுக்கட்டாயத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது!!

காதலையும் காமத்தையும் போட்டு குழம்பிக் கொள்ளாதீர்கள்.  ஒரு ஆண்,   தன் மனைவியுடன் படுக்கையில் இணைவதையே  காதல் என்கிறான். தன் மனைவியின் மீதான நேசத்தை இவ்வாறு, தான் வெளிப்படுத்துவதாக திருப்திப் பட்டுக் கொள்கிறான்.  என்னிடம் கவுன்செலிங்க்கு வந்த பெண் நாலு பக்கத்திற்கு கணவனின் மீது குறைகளை வாசித்தாள், அதன் மொத்த சாராம்சம் 'தன் மீது கணவருக்கு அன்பில்லை' என்பதே.  கணவனிடம் கேட்டபோது 'நான் அவளை எவ்ளோ நேசிக்கிறேன் தெரியுமா, வாரத்தில் இரண்டு மூணு  தடவை அவளுடன் உறவு வச்சுக்கிறேன், இப்படி என் அன்பை வெளிப்படுத்தியும் அவ புரிஞ்சுக்கலைனா நான் என்னங்க பண்ண'    என்று ரொம்பவே அப்பாவியாக(?) கேட்டார்.

நிறைய ஆண்கள் இவரை போன்றுத்தான் இருக்கிறார்கள். ஒரு பெண்ணிற்கு மகிழ்ச்சி என்பது செக்ஸ் ஆல் ஏற்படும்  என்பது மிக மிக தவறான புரிதல்.  உங்களைப்   பொருத்தவரை செக்ஸ் என்பது பெரிய மேட்டர் என்றால் பெண்ணோட  தேவையெல்லாம் ரொம்ப  சின்ன  மேட்டர். செல்ல வருடல், மென்மையான தொடுதல்,   கொஞ்சம் டைட்டான முரட்டுத்தனமான அணைப்பு, கொஞ்சலான பேச்சு, எண்ணிக்கை வைக்காமல் கிடைக்கும் முத்தம்... இப்படி ஆரம்பித்து மெல்ல மெல்ல முன்னேறி பெண்ணை உச்சத்திற்கு அழைத்துச் சென்று அப்படியே  ஆண் தனது தேவையை தீர்த்துக் கொள்வது ......இதுதான் முழுமையான செக்ஸ்! ஆணின் ஐந்து நிமிட காமம் பெண்ணிற்கு  வெறுப்பைத்தான் தரும்,  அத்தகைய உடலுறவை சந்தோஷம்/திருப்தி என்று எடுத்துக் கொள்வது ஆண்களின்  அறியாமை!!

பெண்ணின் தவிப்பும் ஆணின் தவறான புரிதலும் 

2 குடும்பங்களை உதாரணத்துக்குப்  பார்ப்போம். சிந்தைக்குள் குடும்பச் சிக்கல்கள்  அலைமோத தூக்கம் தொலைத்துப்  புரண்டுக்  கொண்டிருக்கும் மனைவி தனது தவிப்பு கணவனின் கைக்குள் தஞ்சமடைந்தால் குறையும் என முதுகுக்  காட்டி உறங்கும் கணவனை மெல்ல தன் பக்கம் திருப்ப, ஸ்பரிசம் பட்டு லேசாக அசையும்  கணவன், 'எனக்கு மூடில்லை தூங்க விடு' பட்டென்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு தூக்கத்தைத்  தொடருகிறான்.   அடுத்ததாக வேறு ஒரு குடும்பம் இதே மாதிரியான ஒரு சிச்சுவேசன், ஆனா  இந்த கணவன் கொஞ்சம் நல்லவன், அணைப்பிற்குத்  தவித்தவளைப் பிடித்து இழுத்து அவளது தவிப்பைப்  போக்குகிறேன் பேர்வழி என்று பெருந்தன்மையுடன் போராடி(?) தனது ஐந்து நிமிட தேவையை (மட்டுமே) பூர்த்தி செய்துவிட்டு அப்பாடா முடிந்தது கணவனின் கடமை என்று மீண்டும் மனைவிக்கு முதுகுகாட்டி தூங்கியே விடுகிறான்.  இந்த இரண்டு விதமான படுக்கையறை காட்சிகளிலும் நடந்தது என்ன ?!


அன்பான அணைப்பிற்கு மனைவி ஏங்குவதை காமம் என பொருள் கொள்ளும் விந்தையான கணவர்களைக்  கொண்டது தான்  நம் சமூகம்  !!

முதல் குடும்பத்தில்,  மனைவி அடிபட்ட வலிகொண்ட   உணர்வுடன்  அவமானத்தில் கூனிக் குறுகி இருப்பாள், இரண்டாவது குடும்பத்தில்,   மனைவியோ குழப்பத்தின் உச்சத்தில் இருப்பாள்...  இருவருக்குள்ளும் எழும் ஒரே கேள்வி 'நான் சும்மா அணைக்கத்தானே நெனைச்சேன்??!!' பதிலற்ற கேள்வியின் இறுதியில், இந்த இடத்தில்தான்  அவள் வெறுக்கத் தொடங்குகிறாள், காமத்தையும் புரிதலற்று அதனைக்  கையாளும் கணவனையும்...

விடியும்வரை தூக்கமின்றித்  தவித்து விடிந்ததும் அவமானம்  குழப்பம் மனதை வருத்த எரிச்சலுடன் கணவனின் மீது கோபத்தைக்  காட்டுவாள். காரணம் புரியாமல் அதை எதிர் கொள்ளும் ஆண், காலை நேர டென்ஷன் என்று மனதை சமாதானம் செய்துக் கொண்டு வேலைக்குச்  சென்றுவிடுவான். இரவு வீடு திரும்புகையில் வாசலிலேயே  எதிர்க்கொள்ள வேண்டியிருக்கும் அதே கோபத்தை வேறு ஏதோ ஒன்றைக்  காரணமாக வைத்து....... இச்சமயத்தில் ஆண் முழுதாக குழம்பி ' அப்படி நாம என்னத்தச்  செஞ்சுட்டோம், இவ இப்படி குதிக்கிறா'  என்று. இரவில் கணவன் சரியாக நடந்துக் கொள்ளாததுதான் காரணம் என்று பொதுவாக  எந்த பெண்ணும் வெளிப்படையாக சொல்ல மாட்டாள், சொல்லப்போனால் அவளுக்குமே தெரியாது, தனது எரிச்சலின்    நெருப்பு?  படுக்கையறையில் தான் புகைய ஆரம்பித்தது என்று.

காமத்தின் குணம் 

இப்படித்தான் பல தம்பதிகள் சிக்கலின் முதல் முடிச்சு எந்த இடத்தில் விழுந்தது என்று  தெரியாமலேயே மேலும் மேலும் முடிச்சுகளைப்  போட்டுக் கொண்டே சென்று சிக்கலைப்  பெரிதாக்கி ஒரு கட்டத்தில்  கோர்ட் படியேறி விடுகிறார்கள்.  விவாகரத்தும்  கிடைக்கிறது, அதன் பிறகு மறுமணம் நடக்கலாம், அங்கேயும் பிரச்னை ஏற்படலாம், மறுபடியும் விவாகரத்து  என்றால் கேலிக்கூத்தாகிவிடுமே என சகித்துக்கொண்டு காலத்தை ஓட்டலாம். இதுதான் இதுவேதான் இன்றைய நிஜம்... யதார்த்தம்!!

இப்போது புரிகிறதா காமத்தின் வலிமை என்னவென்று.  வெறும் ஐந்து நிமிட சுகம் தானே என்ற அலட்சியம் குடும்ப உறவுகளையே சிதைத்துவிடுகிறது.  ஆணின் அணுகுமுறையை பெண்ணும் பெண்ணின் தேவையை ஆணும் புரிந்து நடந்துக் கொள்ளவேண்டும். இதனை  சரியாக கையாளத் தெரிந்தவர்கள் மட்டும்தான் சந்தோசமாக வாழ்கிறார்கள், மற்றவர்கள் வாழ்வதாக நடிக்கிறார்கள்!!

காமம் - உடல், காதல் - மனம் இரண்டையும் ஒன்று சேர்த்தால் தான் அங்கே நிறைவு கிடைக்கும். ஆண் அல்லது பெண்  வெறும் காம இச்சையுடன்  மட்டும் துணையை அணுகும்போது எதிர்பாலினத்தை சந்தோசப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு தன் உச்சத்தை நோக்கிமட்டுமே செல்வார்கள்... இது அவர்களின் தவறல்ல காமத்தின் பிரத்தியேக குணம்.  ஆனால் காதலுடன் அணுகினால் வேறு சிந்தனையில்  துணை இருந்தாலும்   இழுத்துப் பிடித்து தன்னுடன் பிணைத்து வைத்துக் கொள்ளத் தூண்டும் காதல். அப்புறமென்ன  இருவரும் மற்றொருவருக்குள் கலக்கத் தொடங்கிவிடுவார்கள்.  இதில் இன்னொரு வசதியும் இருக்கிறது, காதலை துணைக்கு அழைத்ததுடன் தேமே என்று இருந்துவிட்டால் கூட  போதும், பிறகு காதல் மற்ற  வேலைகளைப்  பார்த்துக் கொள்ளும்.  காதலுக்கு இருக்கக் கூடிய வீரியம் இது.

காதலுடன் கூடும் போது ஒருவருக்குள் ஒருவர் சுலபமாக ஊடுருவ முடியும்...அது மனதென்றாலும், உடலென்றாலும்...! செல்ல வருடல் , சில பல முத்தங்கள், அன்பான பேச்சு, இறுக்கமான அணைப்பு இவை போதுமே உறவைத்  தொடங்க, இதைதான் காதல் என்கின்றேன். பலரும் உடலுடன் கூடுவதாக எண்ணி உடலுக்கு வெளியேதான் கூடுகிறார்கள்... அது செயற்கை , இயந்திரத்தனம். ஆண் பெண் படைப்பின் அர்த்தமே கூடுவதுதான். அதை இயந்திரத்தனமாக செய்யாமல் இயல்பாக மென்மையாக காதலுடன் செய்யுங்கள். காமம் உடலின் தேடலாக இல்லாமல் ஆன்மாவின் தேடலாக இருந்தால் கூடலுக்குப்பின் தியானத்தில் இருந்து எழுவதைப்  போன்ற ஒரு அனுபவம் கிடைக்கும்... நம்புவர்களுக்கு அங்கே கடவுளின் பிரசன்னமும் தெரியக்கூடும்!!

காமம் அழகானது அருமையானது அதில் முழுமை அடைந்தவர்களுக்கு...!!

விரல் நுனியில் கணினியில் தேடும் இருட்டறை சமாச்சாரம் அல்ல... தெருவோர புத்தகக்கடையில் விலை மலிவாய் கிடைப்பதும் அல்ல... பலரது மூளைக்குள் அமர்ந்துக்  கொண்டு பெண்களின் அங்கங்களை அளவெடுத்துக் கொண்டிருக்கும் சைத்தானும் அல்ல...காலங்காலமாய் அப்பாக்களும் அம்மாக்களும் இதற்காகவே கல்யாணம் முடித்ததாய் எண்ணி ஆற்றிய கடமையும் அல்ல... அரசமரத்தைச் சுற்றி வந்து அடிவயிற்றைத்  தொட்டுப் பார்க்கும் பெண்களின் வரமும் அல்ல ........ 'மனித பிறப்பின் அர்த்தத்தை அணு அணுவாக ரசித்து தானும் இன்புற்று தன்னைச்  சுற்றி இருக்கும் உயிர்களுக்கும் இன்பத்தைக் கொடுக்கும், வெகு சிலரே முழுதாய் உணர்ந்த ஒரு உன்னதம்' - காமம் !

* * * * * * * * * *

ஆணின் தேவை/அவசரத்தை சரியாகப்  புரிந்து உள்வாங்கிக்கொண்டு அதற்கேற்ற விதமாய் நயைந்தும் தளர்ந்தும் ஆணின் தீவிரத்தை தாமதம் செய்து பெண்மையை  முழுமையாய் உணர்த்தி தானும் இன்பத்தில் திளைத்து  ஆணையும் உச்சத்திற்கு அழைத்துச்  செல்வது பெண்ணின் கடமை. அது எவ்வாறு என்ற கேள்வி எழுந்தால் காத்திருங்கள் பதிலுக்காக... தொடர்ந்து தொடரை  வாசியுங்கள்...


தொடர்ந்து பேசுகிறேன்...
உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா


Painting & pic - thanks google

புத்தகப் பரிந்துரை :

written by Om swamy




திங்கள், மார்ச் 9

பேசாப் பொருளா ...காமம் !? ஒரு அறிமுகம்

'தாம்பத்தியம்' தொடர் தொடர்பாக வரும் மெயில்களை வாசிக்கும் போதும் கவுன்சிலிங் செய்யும்போதும்  தம்பதிகளின் சில பிரச்சனைகளை அறிந்து   ஆச்சர்யத்தின் எல்லைக்கு சென்றுவிடுகிறேன். இப்படியெல்லாமா  சந்தேகம் வரும்? இதுக்கூடவாத்  தெரியாது? அதுவும் குழந்தைகள் பிறந்து இத்தனை வருடம் கழித்தா? இதுக்காகவா விவாகரத்து?  என எழும் பல அந்தரங்கக் கேள்விகளுக்கு விடையாக தனியாக ஒரு தொடர் எழுதினால் என்ன என்று தோன்ற.... இதோ எழுதத்தொடங்கியே  விட்டேன்...

A lust that can be spoken of...

தொடருக்குள் போகும்முன் சில வரிகள் புரிதலுக்காக...

பாலியல் பற்றிய எனது முந்தைய கட்டுரைகளில் எப்படிங்க ஒரு பெண்ணா தைரியமா இதை எழுதுறிங்க, உங்க துணிச்சலை பாராட்டுகிறேன் என்ற ரீதியில் வரும் கேள்விகள் கோபத்தையும் சிரிப்பையும் ஒன்றாக வரவழைக்கும். உண்மையில் இதற்கான பாராட்டை ஒரு அவமானமாக உணருகிறேன். இயற்கையாக  ஆணைவிட அதிக மன தைரியம் கொண்ட பெண் தன் சம்பந்தப்பட்ட பாலியலை பேசுவதற்கு ஏன் தயங்க வேண்டும். பெண்ணின் உணர்வுகள் உணர்ச்சிகள் பெண்ணால் சொல்லப்படும்போது தான் முழுமை பெறும்.

பாலியல் உறவுகளைப் பற்றி ஆண் பேசலாம், பெண்ணின் அங்கங்களை வர்ணித்து கவிதைகள் எழுதலாம் ஆனால் இதையே ஒரு பெண் செய்தால் உடனே சமூகம் வெகுண்டு எழும் அப்பெண்ணை பழிக்கும் தூஷிக்கும். அவ்வளவு ஏன்  இதை வைத்தே அந்த பெண்ணின் தரத்தை அவர்களாகவே நிர்ணயித்துவிடுவார்கள். இதுதான் காலகாலமாக நடந்து வருகிறது.

பெண் இதையெல்லாம் செய்யக் கூடாது என்ற கட்டமைப்பை ஏற்படுத்தி அதை மீறும் பெண்களை பெண்ணியவாதி , புரட்சிப்பெண் என்று பெயரிட்டு சக பெண்களை விட்டு அவர்களை தள்ளியே வைத்திருக்கிறது இந்த உலகம்.   ஒரு  ஆண்  மருத்துவராக இருந்தாலுமே அவரால் உணர்ந்துக்கொள்ள முடியாத பல விசயங்கள் பெண்ணிடம் உண்டு என்பதை அறியும்போது தான் பெண் என்பவள் போகப்பொருள் அல்ல போற்றப் படவேண்டியவள், என்பதும்  பாலியல் அத்துமீறல்களுக்கு மறைமுகமாக பெண் எவ்வாறு காரணமாகிறாள்  என்பதையும் உலகம் புரிந்துக் கொள்ளும்.  

பாலியலைப்  பற்றி பெண்  எழுதினால் மட்டுமே இது சாத்தியமாகும். காமம், காதல் பற்றி பெண் அதிகம் பேசவேண்டும், அப்போதுதான் இதுவரை மறைத்து வைக்கப்பட்டுள்ள பக்கங்கள் புரட்டிப் பார்க்கப்படும். தற்போது இணையத்தில் இயங்கிவரும் அத்தனை பெண்களும் பாலியல் பற்றி எழுதவேண்டும், பேசவேண்டும்! அவ்வாறு பெண் பேச முன்வரும்போது இந்த உலகம் தனது வாயைகே  கொஞ்சம் மூடிக் கொள்ளட்டும். எனவே  இனியாவது அர்த்தமற்ற கேள்விகள் எழாமல்  இருக்கட்டும் !!!

பேசாப் பொருளா காமம்?   

அற்புதமான ஒரு விஷயம் எவ்வாறு  அசிங்கமான தவறான அருவருப்பான குற்றமாக தவிர்க்கக்கூடிய - மறைக்கக் கூடிய  ஒன்றாக மாறியது அல்லது மாற்றப்பட்டது... யாரால் ஏன் எப்போது என்ற கேள்விகள் எனக்குள் எழும் ...அதற்கான விடையை தேடும் ஒரு தேடல் இந்த தொடர் என்று சொல்வதை விட காமத்தைப்  பற்றிய அரைகுறை கணிப்புகளினால் சமூகத்தில் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளை அலசும் ஒரு தொடர் என்று வைத்துக்கொள்வோம்.



சித்தர்கள் யோகிகள் புனிதர்கள் முனிவர்கள் பெரியோர்கள் மூத்தோர்கள் ..... என அத்தனை ஆண்களும்  பெண் என்றால் பேய், பெண்ணுறுப்பு என்பது எமன்,  அருவருப்பு அசிங்கம் பாவத்தின் பிறப்பிடம்... அப்டியாக்கும்  இப்டியாக்கும் என்று இஷ்டத்திற்கு எக்கச்சக்கமாக எழுதி/பாடி வைத்துவிட்டு சென்றுவிட்டார்கள்.  அவ்வாறு எழுதியதன் ஒரு காரணம் என்னவென்றால் காமத்தின் மீதான பயம், எங்கே தான் இதிலேயே மூழ்கி விடுவோமோ என்ற பயம்.  காமத்தில் அவர்களால் முழுமைப்  பெற முடியவில்லை, அனுபவித்தால் தானே முழுமை பெற ... காமத்தை முழுமையாக  உணராமலேயே தூஷிப்பது ஆதிகாலம் தொட்டு இன்றுவரை தொடருகிறது. அதில் முழுமை பெற்றவர்  எவரும் காமத்தை நிந்திப்பதில்லை... அமைதியாகவே  இருப்பார்கள். அரைகுறைகள் தான் ஆட்டம் போடும்.  முன்பு பெண்ணை நேரடியாக நிந்தித்து சமாதானம் செய்துக் கொண்டவர்கள் இன்று கலாசாரத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்.    

 எதிர் பாலினத்திடம் ஈர்ப்பை ஏற்படுத்தியது இறைவன் (ஆன்மிகம்) என்றும் இயற்கை (நாத்தீகம்) என்றும் ஹார்மோன் (விஞ்ஞானம்) என்றும்  ஒவ்வொரு கூட்டமும்  ஒன்றை காரணமாக சொன்னாலும் அத்தனை பேரும் ஒன்றாக சொல்வது என்னனா 'காமம் தவறு'. தவறு என்றால் இறைவன் இயற்கை விஞ்ஞானம் அத்தனையும் தவறுதானே. ஈர்ப்பு ஏற்பட்டால்தான் உலகில் ஜனனம் நடைபெறும். உலகின் இயக்கத்திற்கு முக்கியக்  காரணமான ஒன்றிற்குத்தான் காமம் என்று பெயரிட்டு அதை தவறு என்றும் பேசாப்  பொருள் என்றும் மறைத்து வைத்திருக்கிறோம். மனிதன் என்றால் அவனுக்குள் காம உணர்வு எழவேண்டும், அந்த உணர்வை வெளிப்படுத்தும் முறையில்தான் மனிதர்கள் வேறுபடுகிறார்கள்.

இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்றவர்கள் தான் பூஜை அறைக்கதவை அடைத்துவிட்டும் கடவுள் படத்திற்குத்  திரையிட்டு மறைத்தும் உடலுறவு கொள்கிறார்கள். வேடிக்கை மனிதர்கள்! வானத்தை  கூரையாகக்  கொண்டவர்களும் உடலுறவுக் கொண்டு இவ்வுலகில் வாழத்தான்  செய்கிறார்கள். அங்கே எந்த சாஸ்திரமும் சம்பிரதாயமும் கடைபிடிக்கப் படவில்லை.  உறவு கொண்ட அன்று கோவிலுக்கு போனால் தீட்டு,தோஷம்  என்று கடவுளுக்கு சொந்தக்காரர்களாக காட்டிக் கொள்பவர்கள் இந்த கணினி யுகத்திலும் பஜனைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.  காம எண்ணங்களை  மனதில் வைத்துக்கொண்டு பூஜை செய்வதை விட அதை வெளியேற்றிவிட்டு பூஜை செய்வது பெட்டெர் என புரிந்து கொண்டவன் கடவுளின் கருவறையை பள்ளியறையாக்கினான் போலும். மனதில் குப்பையும் ஆடையில் தூய்மையுமாய் அத்தனை அக்கிரமங்களையும் ஆண்டவனின் பெயரால் செய்துக்கொண்டு. சின்னஞ்சிறுமிகளிடம் தங்களது வேட்கையை தணித்துக் கொள்ளும் மனித தன்மையற்ற ஈனனுக்கு  பெயர் பாதிரியார்.

புலன்களை அடக்குவது நல்லது என அறிந்ததாலேயே விரதம் என்ற ஒன்றை எல்லா மதத்தினரும்  ஏற்படுத்தினார்கள். ஆனால் நம்மவர்களோ எப்போதடா விரத காலம் முடியும், விட்டக்குறை தொட்டக்குறைகளை மறுபடியும்  புடிக்கலாம் என்ற எண்ணத்திலேயே பாதி நேரத்தைச்  செலவிடுகிறார்கள். 

பாலியல் உறவை தவிர்த்தால் தான் புனிதமாக முடியும் என்பது மனிதனாக ஏற்படுத்திக் கொண்ட ஒன்று. முற்றும் துறந்த சாமியார் என்று அழைப்பது சரியல்ல உண்மையில் தங்களின்  ஆசைக்கு முற்றும்(The End) போடாதவர்களே இன்றைய சாமியார்கள். ஆரம்பத்தில் கடவுளே சரணம் என்றுதான் வருகிறார்கள்...போகப்  போக தங்களின் புலன்களிடம் தோற்றுப் போய் விடுகிறார்கள், அப்புறமென்ன அச்சு பிச்சுனு ஏடாகூடமாக நடந்து நம் போன்றோரிடம் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள். புலன் அடக்கம் என்பது எவ்வாறு ஏற்படும், புலன்களை திருப்திப் படுத்திய பின்தானே. எவ்வாறு திருப்திப் படுத்துவது? இதற்குத்தான் ஈர்ப்பு என்ற ஒன்று  ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.  

அவரவருக்கு ஒரு நியாயங்களை கட்டுகளை வைத்து பேசுகிறார்களேத்  தவிர பொதுவான ஒரு நியதி எல்லோருக்கும் ஏற்றதான ஒன்றை யாரும் சொல்வதில்லை , காமத்தையும் இவ்வாறேதான் பாவிக்கிறார்கள். இறைவனுக்கு காமம் ஆகாதென்றால் ஏன் கோவில் பிரகாரங்களில் கோபுரங்களில் உடலுறவு காட்சிகள். இல்லை இது வேறு காரணத்திற்காக வைக்கப்பட்டது என்று ஆயிரம் காரணங்களைக்  கூறினாலும் ஒரே காரணம் இறைவனின் விருப்பம் ஆண் பெண் ஈர்ப்பு. உண்ணக்கூடாத கனியை ஏன் உண்டாக்குவானேன், பிறகு  அதை உண்ணாதே என்று ஏன் சொல்வானேன், எல்லாவற்றிலும் ஏதோ ஒரு சூட்சமம் இருக்கிறது தானே!

ஆன்மீகத்திற்கு எதிரானதா  காமம்.

துறவிகளுக்கும்  புனிதர்களுக்கும் காம உணர்வு எழும், அடக்கிப் பழகினார்கள் அதனால் சாதாரண மக்களிடம் இருந்து தனித்துத்  தெரிந்தார்கள். ஆசைக் கொள்ளாதே என்று உபதேசித்தாலும் அவருக்குள்ளும் ஒரு ஆசை இருக்கத்தானேச்  செய்தது, உலக மக்களை உய்விக்க வேண்டுமென்ற ஆசை சொல்லப் போனால் இது சாதாரண ஆசையல்ல பேராசை ! இவ்வாறுதான் காமம் தவிர் தவிர் என்று சொல்லும் போதே காமத்தை எண்ணியவர்களாயினர். காமத்தை உணராமல் மனிதன் வாழவே முடியாது இயற்கையாக எழும் உணர்வை சாதாரணமாக அடக்கமுடியாது அதற்கு மிகுந்த பயிற்சி வேண்டும். புத்தனும் அனுபவித்து அறிந்தப் பின்பே அடக்கினான். வயிற்றில் பசி இறுதி மூச்சு வரை இருப்பதைப்  போல காமப் பசியும் இருக்கும், அப்படியெல்லாம் இல்லை நான் உத்தமனாக்கும் என்று சாதிக்கிறவர்கள் ஒன்று பொய் சொல்ல வேண்டும் அல்லது உடல் மனதளவில் ஆரோக்கியக்  குறைபாடுகள்  கொண்டவராக இருக்கவேண்டும் 

ஒன்றை முழுமையாக உணராமல் அனுபவிக்காமல் அதை ஒரேயடியாக  மறுத்தோ ஏற்றோ  பேச இயலாது. பேசினாலும் அரைவேக்காட்டுத்தனமாக இருக்கும், அத்தகைய அரைகுறைகள் நிரம்பியது தான் நமது சமூகம். காமம் என்றாலே மூன்றாந்தர புத்தகங்களில் இருப்பவை மட்டும் தான் என அடித்து பேசுவார்கள் மெத்த படித்த மேதாவிகள்.  காமம் சரியாகப் புரிந்துக் கொள்ளப் படாததுதான்,  குடும்பத்தில் அதிகரித்து வரும்  விவாகரத்துகள், பாலியல் வன்கொடுமைகள் அனைத்திற்கும் காரணம்.

பின் குறிப்பு:-

குடும்பம் முதல் எல்லாவற்றிலும் நடைபெறும் 'குற்றங்களுக்கு' பின்னால் ஒரு காரணமாக காமம் இருக்கிறது என்பதை நான் சொல்லவில்லை மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒன்றை பற்றி என் அறிவுக்கு எட்டிய அளவிற்கு எழுதுகிறேன்...சொற்குற்றம் பொருள் குற்றம் இருந்தால் சொல்லுங்கள், சரி படுத்தித்  தெளிவுப் படுத்திகிறேன். அதற்காக விளக்கம் சொல்கிறேன் பேர்வழி என்று படுத்தி எடுக்காதீர்கள் என அன்பாக வேண்டுகிறேன்.  :-)

கண்டது கேட்டது உணர்ந்தது என எல்லா அனுபவங்களும் சேர்ந்த இந்த தொடரை  மொத்தமாக எழுதி வைத்து வெளியிடலாம் என்ற கான்செப்ட் ஒத்துவரவில்லை... (ஏற்கனவே ஏகப்பட்டது டிராப்ட்ல ஒரு பாராவுடன்  நிற்கிறது) :-) எனவே எழுதி உடனுக்கு உடன் வெளியிடுகிறேன், continunity விட்டுப் போச்சே  என திட்டாதீர்கள். இது கதையல்ல கட்டுரை தானே சோ அட்ஜெஸ்ட்டுங்க  பிளீஸ் ...


தொடர்ந்து பேசுகிறேன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா



Paintings - Thanks Google