பெண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், நவம்பர் 3

இந்த பெண்களே இப்படித்தான்...!!!



பெண்கள் எப்போதும் அதிகம் பேசிக்கொண்டிருப்பார்கள் என்ற பொதுவான ஒரு பேச்சு/எண்ணம் உண்டு.  பெரும்பாலானப் பேச்சுக்கள் ஆண்களால் பல நேரம் புரிந்துக்கொள்ளப் படுவதில்லை. ஏன் பிற பெண்களுக்கே புரிவதில்லை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதம்.

பெண் ஒரு ஆணை புரிந்துக் கொண்ட அளவு அந்த பெண்ணை ஆணால் புரிந்துக்கொள்ள முடிவதில்லை. அதற்கு ஆண் முயலுவதில்லை என்பதே உண்மை. பொறுமையும் இல்லை. பாரதியை செல்லம்மா புரிந்துக்கொண்ட அளவு அவர் புரிந்துக்கொண்டாரா? இவ்வளவு ஏன் நம் தாயை நம் தந்தை புரிந்துக் கொண்டிருப்பாரா ? நிச்சயமாக இல்லை. முழுவதும் புரிந்துக் கொள்ள இயலாது பெண் மனதை. 

தன் மனைவிக்கு எது பிடிக்கும் என்றேத் தெரியாமல் முப்பது வருட தாம்பத்தியத்தை கடந்துவிடும் ஆண்கள் பல பேர். ஆனால் ஒரு பெண் ஒரு ஆணுடன் பேசும் அரைமணி நேரத்தில் அவனது முழு குணத்தையும் எடைப்போட்டு விடுவாள். தான் என்ன புரிந்துக் கொண்டோம் என்பதை அந்த ஆணிடம் கடைசிவரை தெரிவிக்கவும் விரும்பமாட்டாள்.  

ஆணுடனான பெண்ணின் பேச்சுக்கள் 

அதிகம் பேசுவாள் ஆனால் அர்த்தமே இருக்காது என்பார்கள். அந்த அர்த்தம் பிறருக்கு சீக்கிரம் பிடிபடாது அதுதான் நிஜம். ஒரு பெண் பேசிக்கொண்டே இருக்கும் வரை பிரச்சனை இல்லை. எந்த இடத்தில் மௌனிக்கிறாளோ   அங்கே அவள் மனதில் எதிரில் இருக்கும் நபரை பற்றிய எதிர்மறை எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும். இதை ஆண்கள் புரிந்துக்கொள்ளாமல் நம்ம பேச்சை ரசிக்கிறாள் போல என்று தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்கள் அந்த ஆணைப் பார்த்து அங்கே பெண்மை நகைக்கவேச் செய்யும்...!

* உன்னைத் தவிர வேறு எந்த பெண்ணுடனும் பேசுவது இல்லை என்று சொல்லும் எந்த ஆணையும் பெண் நம்ப மாட்டாள், அவளுக்கு நன்கு தெரியும் இது சுத்தப்பொய் என்று. 

* சுயத்தம்பட்டம் அடிக்கும் ஆணை எந்த பெண்ணுக்கும் பிடிக்காது. அப்படிப் பட்ட ஆண்கூட பேசும் போது பெரும்பாலும் அமைதியாகவே இருப்பாள், ஒரு கட்டத்துக்கு மேல் இவளும் கூட சேர்ந்து கொண்டு 'ஆமாம் நீங்க ஆஹா, ஓஹோ' என்பாள், நம்மள புகழ்கிறாள் போல என்று அந்த ஆண் இன்னும் அதிகமா உளற அன்றே அந்த ஆணின் நட்பிற்கு முற்றுப்புள்ளி  வைத்துவிடுவாள். 

* அதே நேரம் அதிகமாக தன்னை புகழ்கிற எந்த ஆணையும் பிடிக்காது. இது தெரியாமல் 'உன் குரல் குயில் மாதிரி இருக்கு, நீ அப்படியாக்கும், இப்படியாக்கும்' என்று கதை விடுகிற ஆணை தவிர்க்க மாட்டாள் , தொடர்ந்துப் பேசுவாள் ஆனால் மனதில் அவன் மேல் மரியாதை சுத்தமாக இருக்காது...!

மறைமுகமாக பேசுகிறாள் ஏன் ?

பெண் பல நேரம் சுத்தி வளைத்து பேசுவாள், நேரடியாக எதையும் சொல்ல மாட்டாள். எதிரில் இருக்கும் ஆணுக்கு பொருள் புலப்பட அதிக சிரமப்படும் அளவிற்கு இருக்கும். ஆனால் பெண்கள் தெளிவாகத்தான் இருப்பார்கள், ஆண்கள் ஊகிக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.  இதை கொஞ்சம் யோசித்து பார்த்தால் பல நல்ல விசயங்கள் அதில் மறைந்திருப்பதை உணரலாம். 

=> சில சிக்கலான விஷயத்தை நேரடியாக சொல்லும்போது அதை எதிர்கொள்கிற பக்குவம் எதிரில் இருக்கும் நபருக்கு இல்லாமல் இருக்கும். விசயத்தையும் சொல்லணும் அதேநேரம் அவங்க மனதும் பாதிக்கக் கூடாது என்பதற்காக சுத்தி வளைத்துச் சொல்வாள். இது போல் எல்லோரிடமும் பேச மாட்டாள் பெரும்பாலும் தனக்கு பிடித்தவர்களிடம் மட்டும். உறவை வளர்ப்பதற்கு இது உதவும். 

=> தவிரவும் எதிரில் இருப்பவர் அதிக கோபப்படுபவராக இருந்தால் அப்படிப் பட்டவர்களிடம் எதை ஒன்றையும் சுத்தி வளைத்துத் தான் பேசுவாள், இதன் மூலம் அவர்களின் கோபத்தைத் தவிர்க்க பார்க்கிறாள் என்பது பொருள்.

=>கருத்து வேறுபாடு ஏற்படாமல் இருக்கவும் அவர் மீது ஆதிக்கம் செலுத்தாமல், இணைந்துப் போக விரும்புவதால் இப்படி பேசுவாள். மொத்தத்தில் அவருடனான சண்டையை தவிர்க்கவே இது போன்ற பேச்சினை கையாளுகிறாள். 

=> இத்தகைய மறைமுகப் பேச்சை ஒரு பெண் மற்றொரு பெண்ணிடம் பேசினால் அப்பெண் புரிந்துக் கொள்கிறாள், ஆனால் ஆண்களால் இது முடிவதில்லை. ஆண்களுக்கு இந்த மறைமுக பேச்சை புரிந்துக்கொள்ளும் ஆற்றல் சுத்தமாக இல்லை...! தர்மசங்கடம் என்ன என்றால் ஆணும் தனது மறைமுகப் பேச்சை புரிந்துக்கொள்ளணும் என்று எதிர்பார்த்து ஏமாந்துப் போய்விடுகிறாள்...!!
  
இதில் சில நேரம் சிக்கலும் ஏற்பட்டு விடும் 

ஆண்களைப் பொறுத்தவரை நேரடியாக பேசிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போய்விடுவார்கள்.

=> பெண்களின் இது போன்ற பேச்சு அவர்களுக்கு குழப்பத்தைக் கொடுத்து விடுகிறது, இப்பேச்சில் முதிர்ச்சி இல்லை,நோக்கமும் இல்லை என்று சலிப்புடன் கூடிய வெறுப்பு ஏற்பட்டு விடுகிறது. சம்பந்தப்பட்ட பெண்ணின் மீது குறையையும் , குற்றத்தையும் வைத்துவிடுகின்றனர் ஆண்கள். முடிவில்  பெண்ணுடன் கருத்துவேறுபாடுகளை  ஏற்படுத்திவிடுகிறது. 

=> தவிரவும் வேலை செய்யும் இடத்தில் இது போன்ற பேச்சுக்கள் அவ்வளவாக வரவேற்கப்படுவதில்லை. அங்கே நேரடியான பதில்கள் தான் வேண்டும். அப்போதுதான் சம்பந்தப்பட்டவர்களிடம் சரியாகப் போய் சேரும். 

=> வேலை செய்யும் இடத்தில் ஒரு ஆணிடம் இப்படி பேசி அது புரியவில்லை என்றாலும் புரிந்ததுபோல் ஆமாம் என்று சொல்லிவிடுவார்கள். இதை வைத்து பெண் முடிவுக்கு வந்துவிட கூடிய விபரீதம் இருக்கிறது. அதனால் அங்கே இது போன்ற பேச்சுக்களை பெண்கள் தவிர்ப்பது நல்லது. 

சூப்பர் பவர் 

*ஒரு பிரச்சனையின் முடிவு தவறாக போய்விட்டால் அதையே சிந்தித்துக்கொண்டு சோர்ந்து விட மாட்டார்கள் அடுத்த ஆல்டர்நேடிவ் எதுவென பார்த்துகொண்டு போய்க் கொண்டே இருப்பார்கள்...!  கைவசம் எப்பவும் பல ஆல்டர்நேடிவ் ஐடியாக்கள் இருக்கும் !! 

* எத்தகைய சிக்கலான விசயத்தையும் வெகு சுலபமாக தாண்டிச் சென்று விடுவார்கள். பிறரின் பார்வையில் பெண் அதையே நினைத்து புலம்பிக் கொண்டிருப்பது போல் தோன்றும் உண்மையில் அவள் மனது இதில் இருந்து எப்படி வெளியில் வருவது என்பதைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கும் இதை ஆண்கள் அறிய மாட்டார்கள். 

* சமாளிப்பதில் வல்லவர்கள். தவறு செய்திருந்தாலும் அதை அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் மனசுக்கு பிடித்தவர்களிடத்தில் மட்டும் விரைவில் தவறை ஒப்பு கொண்டு சரணாகதி அடைந்துவிடுவார்கள்...!!

* பெண்கள் ரகசியத்தை காப்பாற்ற தெரியாதவர்கள் என்பார்கள். உண்மைதான் சிறு சிறு அல்ப விஷயத்தை மனதில் வைத்துக்கொள்ள மாட்டார்கள் வெளியில் சொல்லி விடுவார்கள் ஆனால் முக்கியமான அல்லது தங்களை  பற்றிய ரகசியத்தை உயிர் போனாலும் வெளிவிட மாட்டார்கள்...! மிக நெருங்கியவர்களிடம் கூட சொல்லமாட்டார்கள். 

* ஒரு விஷயத்தை மறைக்கணும் என்று ஒரு முறை முடிவு செய்துவிட்டால் இறைவனே முயன்றாலும் தெரிந்துக் கொள்ள முடியாது.  

* பெண்களின் மனம் ஒரு சமயத்தில் பல விஷயங்களை அசை போடும். ஒவ்வொரு விசயத்திற்கும் பல தீர்வுகளை யோசித்து வைத்து விடுவார்கள். (என்ன ஒன்று சமயத்தில் இதில் எந்த தீர்வு சரியாக வரும் என்பதை செலக்ட்  பண்ணாமல் விட்டுவிடுவார்கள். ஆண்கள் தான் பெண்கள் சொல்லும் தீர்வுகளை கவனம் எடுத்து கேட்டுக்கொள்ளவேண்டும்.) 

சில கேள்விகள் வேறு அர்த்தங்கள் !

* ஆணிடம் ஒன்றை எதிர்பார்த்து வேறு ஒன்றை பேசுவார்கள்...நீ என்னை விரும்புகிறாயா என்ற கேள்வி கேட்டால் ஆமாம் இல்லை என்ற நேரடி பதிலுக்காக இருக்காது...அன்பு காட்டுவதில் எங்கையோ தவறி விட்டாய் என்பதை குறிப்பால் உணர்த்தவே இந்த கேள்வி...!

* கோபமாக இல்லை என்று சொன்னால் ரொம்ப கோபமான இருக்கிறேன், சமாதானப்படுத்து என்று அர்த்தம்.

* எனக்கு மனசு சரியில்லை வருத்தமாக இருக்கிறது என்றால் நீயும் வருந்து என்று அர்த்தம்.

* 'எந்த அளவிற்கு என்னை பிடிக்கும்' என்று கேட்டால் அவனுக்கு பிடிக்காத எதையோ செய்திருக்கிறாள், 'என்னை பிடிக்கும் அல்லவா அட்ஜஸ்ட் பண்ணிக்கோ' என்று அர்த்தம் !

* 'பாக்கெட்டில் எவ்வளவு பணம் இருக்கிறது' என்று கேட்டால் ஏதோ விலை உயர்ந்த பொருள் வாங்க அடி போடுகிறாள் என்று அர்த்தம் !! :)

* 'அழகாக இருக்கிறேனா' என்று கேட்டால், தான் மட்டும் உன் கண்ணிற்கு அழகாக தெரியவேண்டும் என்று அர்த்தம். :)

இப்படி பெண்ணின் பேச்சிற்குப் பின்னால் இருக்கும் உண்மையான அர்த்தம் புரியாமல் அவஸ்தைப்படும் ஆண்களுக்கு இப்ப முடிஞ்ச அளவிற்கு ஏதோ சிலவற்றை சொல்லி இருக்கிறேன். ஒரு அகராதி தொகுக்கும் அளவிற்கு உள்ளதால் இனி வரும் காலங்களில் சொல்லலாம் என நினைக்கிறேன்...! :)) எதற்கும் கொஞ்சம் பார்த்துப் பக்குவமா நடந்துகோங்க...ஏன்னா பெண் ஒரு புதிர் !!





படங்கள்- நன்றி கூகுள் 

திங்கள், செப்டம்பர் 12

'தலையணை மந்திரம்' எனும் கவர்ச்சி நல்லுணர்வுகளின் வெளிப்பாடா?! தாம்பத்தியம் - 26

முன்குறிப்பு :
எனது கடந்த தாம்பத்தியம் தொடரில் சகோ.திரு.அப்பாதுரை அவர்கள் ஒரு பின்னூட்டம் இட்டு இருந்தார்...

//தலையணை மந்திரம் என்ற ஜாடிக்குள் இருக்கும் கவர்ச்சி - நல்லுணர்வுகளின் தீவிர வெளிப்பாடு தானே? தலையணை மந்திரத்துக்கு வாழ்நாள் முழுதும் நிலைக்கும் சக்தி இருந்தால் திருமண உறவுகள் செழிக்குமோ?//

எதையும் நேர்மறையாகப் பார்க்கும் அவரது பண்பிற்கு வணக்கங்கள்.

தலையணை மந்திரம் - அவசியம் தேவை

தலையணை மந்திரம் என்பதின் பின்னால் இருக்கும் கவர்ச்சி திருமண உறவைக்  கெடாமல் வைத்திருக்கும் என்பதில் எனக்கு முழு உடன்பாடு இல்லை. ஒரு மனைவி, கணவனை வசீகரித்து மகிழ கூடிய இடம் தனியறை. இந்த இடத்தில் ஒரு கணவன் தன் மனைவியின் அன்பு பிடிக்குள் அல்லது கட்டுபாட்டுக்குள் போய்விடுவான் என்பது இயல்பு. ஆனால் இந்நிலை அந்நேரம் மட்டுமா அல்லது விடிந்த பின்னருமா என்பது அவரவர் மனநிலைகளைப்  பொறுத்தது. 

மனைவி கணவனை கவர்ச்சியின் மூலம் மட்டுமே தன்னைச்  சுற்றி வரும்படி செய்வது என்பது மிக நல்லதா இல்லையா என்பதே இந்த பதிவில் என் முன் நிற்கும் கேள்வி ? இந்த ஈர்ப்பு சரியென்றால் அவர்களின் வாழ்க்கையில் எடுக்கப்படும் எந்த தீர்மானமும் ஒருதலைபட்சமாகப்  போய்விடக்கூடிய ஆபத்து இருக்கிறது...அப்படி இல்ல, ஒருவரை ஒருவர் கலந்துதான் முடிவு பண்றோம் என்று சொன்னாலும் இறுதி முடிவு சந்தேகமே இல்லாமல் மனைவியுடையதாகவே இருக்கும். ஒருவேளை மனைவியின் முடிவு தவறான தீர்வாக போய்விட்டால்...!?

முந்தைய தலைமுறையில் 

முழுமையான தாம்பத்தியதிற்கு தம்பதிகளின் அன்னியோனியம் மிக முக்கியம், தலையணை மந்திரத்துக்கு வாழ்நாள் முழுதும் நீடிக்கும் சக்தி இருந்திருக்கலாம், ஒரு காலத்தில்...!

அன்றைய பெரியோர்கள் திருமணம் முடிந்தப்  பெண்களுக்குச்  சிலவற்றை அறிவுறுத்தினார்கள்...ஆண்கள் கவனம் வேறு பக்கம் சிதறி விடக்  கூடாது என்பதற்காக சில வார்த்தைகளைச்  சொல்லி வைத்தார்கள். நன்கு கவனிக்கவும்...! வார்த்தைகள் தான் 'தலையணை மந்திரங்கள்' இல்லை. இவை காலப்  போக்கில் ஆணை வசியப்படுத்தும் ஒரு கவர்ச்சி ஆயுதமாக வலுப்பெற்று விட்டன...!!

'அக்கம்பக்கம் திரும்ப விட்டுடாத, உன்னையேச்  சுத்தி வர்ற மாதிரிப்  பக்குவமா நடந்துக்க' என்று சொன்னதின் பின்னால் சில அந்தரங்க சூட்சமங்கள் இருக்கிறது. "ஆண்களின் உடம்பில் வயதாகி ஆயுள் முடியும் வரை கூட விந்து அணுக்கள் சுரக்கும் , எனவே அதன் உந்துதலால் அவர்கள் பெண்ணுடன் இறுதிவரை உறவுக்  கொள்ளவே விரும்புவார்கள். இதற்கு மனைவி நீ சரியாய் ஒத்துழைக்கலைனா வீட்டுக்காரன் அடுத்த பக்கம் திரும்பிவிடுவான்...அதனால உன் அழகால, பேச்சால, வருடுதலால், தொடுதலால், இன்னும் பிறவற்றால் கணவனைப்  பார்த்துக்கோ ,கைக்குள்ள போட்டு வச்சுக்க" என்பது தான் அவர்கள் சொன்னதின் உட்கருத்து.

ஆனால் இன்று அதற்கு வாய்ப்புகள் மிக குறைவு. இன்றைய குடும்பங்கள் இருக்கின்ற சூழல்,பொருளாதாரத்தை நோக்கிய ஓட்டம், சுயநலம் மிகுந்த மனிதர்கள், கவனத்தைத்  திசைத்  திருப்பக்கூடிய ஊடகங்களின் ஆக்கிரமிப்பு, தொலைத்  தொடர்பு வசதிகள், பெருகிவிட்ட ஆடம்பர மோகம், இவற்றின்  பிடியில் சிக்கிக்கொண்ட தம்பதிகள், தங்களுக்கு என்று செலவிடும் நேரம் மிக மிகக்  குறைந்துவிட்டது.அவர்களின் அந்தரங்கமும் அள்ளித்  தெளித்த கோலம் போன்றே ஆகிவிட்டது !

அதனால் இன்றையக்  காலகட்டத்திற்கு அந்த அறிவுரை, மந்திரம் எல்லாம் உதவாது. இத்தகைய மந்திரத்துக்கு (கவர்ச்சிக்கு) மயங்கும் ஆண்கள் இருந்துவிட்டால் நாட்டில் கள்ள உறவுகள், விவாகரத்துக்கள் அதிகரித்து இருக்காதே ?!! இது போன்றவை வீட்டிற்கு வெளியே  மிக தாராளமாக கிடைக்கக்கூடிய காலம் இது. எனவே உடல் கவர்ச்சி மட்டும் போதாது என்பதே எனது உறுதியான முடிவு.

* தலையணை(?) தேவையின்றி போனில் கூட மந்திரம் போட்டு மாங்காய் பறித்துவிடும் காலமிது.

'அகத்தில் அன்பில்லாத பெண்டிரை மனதாலும் தீண்டேன்' என ஆண்கள் உணரும்வரை அவர்களுக்கு ஏற்றபடி இன்றைய பெண்கள் மாறித்தான் ஆகவேண்டும்...!!



இப்போதைய தலையணை மந்திரம்,

* கணவனின் குடும்பத்தினரை கணவனை விட்டு தூரத்  தள்ளி வைக்க, முக்கியமாக கணவனின் பெற்றோர்களை...

* தன் தனிப்பட்ட விருப்பத்தை, தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள

* தன் தவறுகளைக்  கண்டுக்கொள்ளாமல் இருக்க

* தன் சுயத்தைத்  திருப்திப்படுத்த

* பெருமைக்காக

இவை போன்றவைகளுக்காகப்  பயன்படுகிறது. குடும்பத்தின் நல்வாழ்வுக்காக என்பது இப்போது மிக குறைவு !

ஒரு உதாரணம் 

சென்னையில் இருக்கும் மகளுக்கு இங்கிருக்கும் தாய் ஒருவர் செல்பேசினார் , அதுவும் பொது இடத்தில் பஸ்ஸில் !!

என் பதிவுக்கு பாய்ண்ட்ஸ் தேவைப்படுவதால் இப்போதெல்லாம் பொது  இடத்தில் என் காதுகள் கூர்மையாகி விடுகிறது .(அதாங்க ஒட்டு கேட்கிறது)

///"என்னடி எங்க அது (மருமகனைத் தான் !) எங்க ஊர் சுத்தப்  போயாச்சா  ? இன்னைக்கு லீவ் தானே கூட மாட ஒத்தாசைக்கு வச்சுக்கலையா நீ தனியாக்  கிடந்துக்  கஷ்டபடுற(?)"

''சரி சரி எப்போ கடைக்குப்  போன, அவருக்குப்  பிடிச்ச புடவையா ? ஏண்டி இப்படி இருக்கிற?.....அது உனக்கு பிடிச்சாலுமேப்  பிடிக்கலச்  சொல்லு.....அப்பத்தான் எல்லாம் உன் விருப்பப்படி என்று ஆகும்.....ஓ ! நாத்தனார் பையன் வந்திருக்கானா .....அதுதான் கேட்கிறதுக்கு எல்லாம் ம் கொட்ற? (மகளை பேச விட்டாத்தான?) அவன் எதுக்கு இங்கே வரான், இன்டர்வியூவா ஏதோ ஒரு சாக்கு கிளம்பி வந்துறாங்க.....உன் வீட்ல என்ன கொட்டியாக்  கிடக்கு? பரவாயில்லைன்னு சமாளிக்காத.....எல்லாம் உன் நல்லதுக்கு(?) தான் சொல்றேன்"

"இன்னைக்கு இன்டர்வியூ, நாளைக்கு வேலைக் கிடைச்சு, 'வெளிலத்  தங்கினா செலவு ஆகும் இங்கேயே இருக்கட்டும்' னு இவர் சொல்லப்  போறார்.....அதுக்கு முன்னாடி உஷாரா இருந்துக்கோ.....இவங்க எல்லோரையும் பத்து அடி தள்ளி வை, சொல்றதுக்  கேட்குதா முந்தானையில முடிஞ்சி வச்சுக்கோ...இல்லை உன்னை தெருவுக்குக்  கொண்டு வந்துவிடுவான்.....சாயந்தரம் அந்தாளு வந்ததும், நல்லா டிரஸ் பண்ணிட்டு சினிமா ஏதும் போய்ட்டுவா, அனுசரணையா(!) நடந்துக்க.....தகுந்த நேரம் பார்த்து நாத்தனார் மகனைப்  பத்திச்  சொல்லு !"///

இதுபோல பல உதாரணங்கள் இருக்கிறது. போதாததுக்கு டிவி சீரியல்கள் வேற இப்படி நிறையச்  சொல்லிக்  கொடுக்கிறது...!!
  
இது போன்ற எந்த தவறான ஆலோசனைக்கும் தயவுசெய்துச்  செவிசாய்த்து விடாதீர்கள். உங்கள் குடும்ப சந்தோசம் உங்கள் கையில் மட்டும் !! தவறான வழிமுறைகள் எதையும் கைக்கொண்டு குடும்பத்தை நாடகமேடையாக மாற்றிவிடாதீர்கள். நித்தம் ஒரு வேஷம், நித்தம் ஒரு நாடகம் என்பதாக இருக்குமே தவிர குடும்பமாக இருக்காது...!

(உடல் கவர்ச்சி தாண்டிய மந்திரங்கள் பற்றி போனப் பதிவில் சொல்லிவிட்டேன் , நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்)



மெல்ல
என்
தலைகோதி
கை
விரல்களை
சொடுக்கெடுக்கும்
உன் தளர்ந்த விரல்கள்
மட்டும் போதுமடி
என் வயோதிகம்
பிழைத்துக்கொள்ளும்!!

அழகான குடும்ப வாழ்க்கைக்கு ஒருவரின் மேல் ஒருவருக்கு ஒரு ஈர்ப்பு இருந்தாக வேண்டியது அவசியம். முக்கியமாக கணவனும், மனைவியை தன் அன்புப்பிடிக்குள் வைத்தாக வேண்டும். கணவனின் பிடிக்குள் மனைவி இல்லாவிட்டால் எடுத்ததுக்கு எல்லாம் எதிர்வாதம் கிளம்பும். அதை தவிர்க்க மனைவியின் பிரியத்தைச்  சம்பாதியுங்கள். மனைவியை அதிகமாக நேசிக்கிறேன் என்று எண்ணி கொண்டிருந்தால் மட்டும் போதாது, அதை சொல்லில்,செயலில் வெளிப்படுத்துங்கள் !

தாம்பத்தியம் ஒரு வீணை , அதை மீட்டும் விதமாக மீட்டுங்கள் ! சுகமான இசை வெள்ளத்தில் மூழ்கி, வாழ்வை ரசித்து,உணர்ந்து,மகிழ்ந்து வாழுங்கள் ! வாழ்த்துக்கள் !!

*******************************************************************

தம்பதிகளுக்குள் உடல் , மனம் காரணமாக ஏதோ சிறு விருப்பமின்மை என்றாலும் விரைவில் சலித்து வெறுப்பின் எல்லைக்கு போய்விடுகிறார்கள். ஒருவேளை இந்த விருப்பமின்மைகள் மூன்று, நான்கு முறை என தொடர்ந்தால் மனவிரிசல் அதிகரித்து வேறு வடிகால்களை(?) தேடிக் கொள்கிறார்கள்.  

அடுத்த பதிவில் 'இல்லறத்திற்கு உடலுறவு ஏன் அவசியம் ?'  தொடர்ந்து பேசுவோம்...காத்திருங்கள் !!

*******************************************************************


நினைவிற்காக !

ஏற்கனவே விளக்கமாகச்  சொல்லி இருக்கிறேன்...மீண்டும் ஞாபகப் படுத்துகிறேன் . எனது இந்த தொடர் கணவன், மனைவி பற்றியது...ஆண் பெண் என்ற பிரிவினை/பேதம் பற்றி இங்கே பேசப்படவில்லை.பெண்ணைக்  குறைச்  சொல்லி எழுதப்பட்டு இருக்கிறது என்று யாரும் பொங்கிடாதிங்க !? எதைப்  பற்றிச்   சொல்கிறேன் என்றே புரியாமல் விமர்சிப்பவர்களை என்னவென்று சொல்வது...!? தொடரில் சில உண்மைகளைச்  சொல்லும் போது எனக்கும் கசக்கவே  செய்கிறது.

குற்றாலமலையில் இருக்கிற ஆணாதிக்க ஞானசித்தர் வேற 'எது என்றாலும் வெளிப்படையாகச் சொல்லிடு, இல்லைனா பாவம் சேர்ந்துடும்'னு பயமுறுத்துகிறார்...!!! :))


                                                                           *****************

தொடர்ந்து பேசுகிறேன் 
கௌசல்யா  

வெள்ளி, ஜூன் 18

எல்லாம் பெண்ணாலே ...?! தாம்பத்தியம் பாகம் 8



முந்தைய பதிவு குறைகள் அல்ல பிழைகள் 

மன நிறைவு 



மனைவி, கணவன் இருவரிடமே இருந்த நிறை,குறைகளை முடிந்தவரை பலவாறு விவரித்து விட்டேன்.  ஆனால் ஒரு குடும்பம் நல்லா நடப்பதற்கு இவற்றை பார்ப்பது மட்டுமே சரியாக  இருக்காது,   இதில் யார் பக்கம் தவறுகள் அதிகமாக இருக்கிறது என்றும், யார் சரி செய்துக்  கொள்ள வேண்டும் என்பதையும் பார்க்கவேண்டும்.  

ஆவதும் பெண்ணால்...கெட்டவை அழிவதும் பெண்ணால் !


நான் முன்பே சொன்ன மாதிரி பெண்ணால் மட்டும்தான் பிரச்னை எது வந்தாலும் அதை நன்கு அலசி ஆராய்ந்து ஒரு நல்ல தீர்மானத்துக்கு  விரைவிலும் சுலபமாகவும் வரமுடியும்.  அதேபோல்தான் ஒரு குறையோ அல்லது அனைத்து குறைகளையுமே  ஒரு கணவன் பெற்று இருந்தாலும் அந்த பெண் , அந்த மனைவி நினைத்தால் , மனது வைத்தால் கண்டிப்பாக தனது கணவனை சரிபடுத்த முடியும். (விதிவிலக்குகள் இருக்கலாம்) 

அந்த மனைவி என்னால் மாற்ற முடியவில்லை என்று சொன்னால், ஒன்று மனைவி குறைச்  சொல்லும் அளவிற்கு, அந்த கணவன் மீது தவறு இல்லாமல் இருக்கும் அல்லது அந்த பெண் திருத்த முயற்சிக்கவில்லை என்றுதான் அர்த்தம்....??! யாருமே குறைகளுடன் இருக்கவேண்டும் என்று வரம் வாங்கி பிறப்பது இல்லை, வளர்ந்த சூழ்நிலையால் இடையில் ஏற்பட்ட பிழை தான் இக்குறைகள்!! பெண் நினைத்தால் மாற்ற  முடியும்!!

                      நல்லவை ஆவதும் பெண்ணாலே....!
                      கெட்டவை அழிவதும் பெண்ணாலே. ...!!

இப்படித்தான் அந்த வார்த்தைக்கு அர்த்தம் இருந்து இருக்க வேண்டும்!  

ஆண்களை மட்டுமே குறை சொல்வதை பெருந்தன்மையாக விட்டு விட்டு,  நம் குடும்பம் சந்தோசமாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்,  என்பதை பற்றி மட்டும் கவனித்து சரி செய்து கொண்டால் உங்கள் தாம்பத்தியத்தில் தினமும் தீபாவளிதான்.....!!

அன்பு செலுத்துவதில் அன்னையாகவும், பரிவு காட்டுவதில் சகோதரியாகவும், ஆலோசனை சொல்வதில் தோழியாகவும், நாலு சுவற்றுக்குள் மனைவியாகவும் நீங்கள் நடந்துக்  கொள்ளும்போது எப்படிப்பட்ட கணவனும் உங்கள் மேல் உயிரையே வைப்பான்....!   இந்த வார்த்தைகள் பழையவைதான், ஆனால் எந்த காலமும் பொருந்தக்  கூடியவை!!

ஒரு சிலரின் வீட்டில் திருமணம் ஆன புதிதில் மனைவி செலுத்தும் அதிக அன்பே கணவரின் மனதில் பின்னாளில் வெறுப்பை ஏற்படுத்தி விடும் ??!! அது எப்படி ?  ஒரு உண்மை சம்பவம்.....

திருமணம் ஆன புதிதில் கணவன், மனைவி இருவரில் அந்த மனைவி தனக்கு தன் பிறந்த வீட்டில் கிடைக்காத அன்பை எல்லாம் சேர்த்து மொத்தமாக கணவன் மேல் செலுத்த தொடங்கினாள்.  அன்பை கொடுக்கவில்லை...... அன்பால் அவனை மூழ்கடித்தாள்...... !! அவன் உலகை மறந்தான்.....! மனைவியின் மெய் அன்பால் திணறித்தான் போனான்!!   

எல்லாம் ஒரு குழந்தை பிறக்கும் வரைதான்..?  அவளது பெரும் பொழுதுகள் அந்த குழந்தையுடன் தான் கழிந்தன. இருந்தும் தன் கணவனுக்கு செய்யும் பணிவிடையில் எந்த குறையும் வைக்க வில்லை.   அவள் எப்போதும் போல் அதே அளவு அன்பைத்தான் அவன் மேல் செலுத்தினாள்.  ஆனால் அவன் மனதிலோ வெறுமை படர்ந்தது.  தனக்கு கிடைக்கவேண்டிய அன்பில் பங்கு போட வந்த ஒரு எதிரியாகத்தான், தன் குழந்தையை பார்க்கத்  தொடங்கினான்.  மனைவி பேச அருகில் வந்தால்,  வெறுப்பை கொட்டியது அவனது நாவு ...! 

                  காரணம் அறியா பேதை அவள்....
                         கெஞ்சினாள்.... 
                  குழைந்தாள்... பரிதவித்தாள்...
                         ஒருநாள் பகல் பொழுதில் மனைவி
                   உணவு வைத்துக்  கொண்டு, 
                         இருந்த நேரம்,  குழந்தை அழுததால் 
                   விரைந்து ஓடினாள் தூக்குவதற்கு,  
                          அதற்கு முன் எழுந்த அக்கணவன் 
                   சிறிதும் யோசிக்காமல் எடுத்து, 
                          வீசி எறிந்தான் குழந்தையை தரையில்...? 
                    மனைவியோ பதறி அதற்கு முன் 
                           தரையில், தான் விழுந்து அக்குழந்தையை 
                    அவள் மடியில் தாங்கினாள்....????!!  

விழுந்த அதிர்ச்சியில் குழந்தை அழவில்லை சிறிது நேரம்...? பின் இவள் சுதாரித்து , தூக்கிக்கொண்டு ஓடினாள் டாக்டரிடம்...?? 

அதற்கு பிறகு தன் கணவனை பயத்துடன் பார்க்க தொடங்கி விட்டாள். ஆனால் அந்த கணவனிடம் எவ்வித மன பிறழ்ச்சியும் இல்லை.  அலுவலகத்திலும் நன்கு பணிபுரிவதால்  அங்கே அவனுக்கு மிகவும் நல்ல பெயர்... !? எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன், உறவினர்கள் நண்பர்களிடமும் நல்ல பெயர்தான்....!!  பின் ஏன் இப்படி???

மனைவியின் அதிக அன்பு கூட ஒருத்தரை இப்படி மாற்றுமா??  பதில் தெரியவில்லை. குழந்தைக்கு 8  மாதம் ஆகும் வரை  பொறுத்து பார்த்த, அந்த மனைவி தனது பெற்றோர்களை வரவழைத்து தனது வீட்டிற்கு பக்கத்தில் ஒரு வீட்டை பார்த்து அவர்களை அங்கே இருக்குமாறு வேண்டிக்  கொண்டு தனது குழந்தையை அவர்களிடம் விட்டுவிட்டாள்.  கணவன் வீட்டில் இருக்கும் வரைக்கும் ஒன்னும் தெரியாததுப்போல் இருந்துக்  கொண்டு அவன் அலுவலகம் சென்றதும் குழந்தையைப்  பார்க்க ஓடிவிடுவாள்.  கணவனிடம், 'ஊரில் இருக்கும் பெற்றோரிடம் குழந்தையை விட்டு விட்டேன், உங்களை மட்டும் கவனித்துக்  கொள்கிறேன் அது போதும் எனக்கு' ,என்று கூறி விட்டாள். 

இப்படியே இரண்டு மாதம் போய்விட்டது. கணவனும் மனைவி தன் மேல் இவ்வளவு அன்பு வைத்து இருக்கிறாளே  என்ற பெருமிதத்தில் மனம் நிம்மதி அடைந்து விட்டான். அவனுக்குள்ளும் குழந்தை மேல் பாசம் இல்லாமல் எப்படி இருக்கும் ?  தனக்கு கிடைக்க வேண்டிய அன்பு எங்கேயும் போகவில்லை என்று திருப்தியில் ஒரு நாள் 'குழந்தையை தூக்கி வருவோம்' என்று மனைவியை அழைக்க இவளோ மகிழ்ச்சி தாண்டவமாட, ' நீங்க வேலைக்கு போங்க .  நான் போய் அழைத்து வருகிறேன்' ,என்று அவனை வழியனுப்பி வைத்துவிட்டு குழந்தையையும், பெற்றோர்களையும் அழைத்து வந்து விட்டாள் .

இது ஏதோ கதை இல்லை என் நெருங்கிய உறவினர் வீட்டில் நடந்த உண்மை சம்பவம் தான். அவள் அனுமதிப்  பெற்றே இதை எழுதுகிறேன்.

பெண் மனது வைத்தால் எந்த பிரச்சனையையும் சரி பண்ண முடியும் என்பதற்காகதான் இதை ஒரு உதாரணமாக சொல்ல வேண்டி வந்தது.

விவாகரத்து கேட்டு கோர்ட்க்கு போக வேண்டிய ஒரு குடும்பம் இன்று சந்தோஷக்  கடலில் திளைக்கிறது !!  

பெண்ணுரிமை , பெண் அடிமைத்தனம்

ஒரு சாதாரண குடும்ப வாழ்க்கைக்கு மேலே குறிப்பிட்ட இந்த வார்த்தைகள் அவசியம் இல்லை என்பது என் கருத்து. குடும்பத்தில்  ஆணை விட நான் எந்த விதத்தில் குறைந்து விட்டேன் என்று ஒவ்வொரு பெண்ணும் கொடி பிடித்தால் அங்கே குடும்பம் நடக்காது.  தினமும் பட்டிமன்றம்  தான் நடக்கும்!!  வெளியில் வேண்டுமானால் உரிமை கேட்டு சண்டை போடட்டும். வீட்டில் அது தேவை இல்லை.  

நாலு சுவற்றுக்குள் தன் கணவனுக்கு கட்டுப்பட்டு  இருப்பதால் யாரும் உங்களை குறைத்து மதிப்பிட போவதில்லை. இதில் அடிமை, அடக்கு முறை என்ற வார்த்தைக்கு வேலை இல்லை. அன்பால் கட்டுண்டு,   வீட்டில் இருப்பவர்கள் தான் வெளியில் ராணியாக உலா வருகிறார்கள்.

 "கொண்டவன் துணை இருந்தால் , கூரை ஏறி கத்தலாம்..!!!"  -நன்றி ஆனந்தி 

தவறான கண்ணோட்டம்

ஒரு பெண் ஒழுக்கத்தில் தவறி விட்டால், உடனே யாரும் இந்த 'பெண்களே இப்படித்தான்' என்று மொத்தமாக தூற்றுவது இல்லை. ஆனால் ஆண்கள் அதே தவறை செய்தால் நம் பார்வையே வேறு விதமாக இருக்கிறது.  இந்த பட்டியலில் தனது கணவனையும் சில பெண்கள் சேர்ப்பதை பார்க்கும் போது தான் ஆண்கள் மேல் பரிதாபம் ஏற்படுகிறது.  என்ன பாவம் செய்தார்கள்? இந்த ஆண்கள்..!   

அவர்களுக்கு எப்பவும் அதே எண்ணம் தான் இருக்குமா?  வேற ஒன்றை பற்றியும் அவர்கள் நினைக்க மாட்டார்களா?  இல்லை அவர்கள் பிறந்ததே அதற்குத்தானா?  இந்த மாதிரியான எண்ணம் என்று மாறுமோ தெரியவில்லை??  


ஒரு 50   வயது அம்மாள் ஒருவரிடம் அவர்களது திருமணம் ஆன மகளை பற்றி விசாரிக்கும் போது , 'இருவரும் எப்படி இருக்கிறார்கள் ? பிரச்சனை ஒன்றும்  இல்லையே ' என்று நான் சாதாரணமாக கேட்க அவர்களோ 'அவளுக்கு என்ன அவனே கதி என்று இருக்கிறாள், ரொம்ப நல்லவனாம், அடிக்கடி சொல்லி மாய்ந்துப்  போகிறாள்.  அந்த பெருமையில் வீட்டிற்கு நான் போனாலும் என்னிடம் சரியாக பேசுவதில்லை. எவ்வளவு காலத்திற்கு இவள் பேச்சை கேட்பான்?  எல்லாம் இவளுக்கு இளமை இருக்கும் வரைக்கும் தான்' என்று அவர்கள் அடுக்கிக்  கொண்டே போக நான் வெறுத்து விட்டேன்.  


ஒரு தாயே இப்படி பேசுவார் என்று எதிர் பார்க்கவில்லை என்பதை விட ஆண்களைப்  பற்றி அவர்கள் சொன்ன வார்த்தையை ஜீரணிக்க முடியவில்லை. வயதான காலத்திலும் பல தம்பதியர் எதை வைத்து ஒற்றுமையாக வாழ்கின்றனர்? பரஸ்பர அன்பினால் அல்லவா? புரியாத இவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியப்போவதில்லை. 


ஆண்களுக்கும் எல்லை கோடுகள் இருக்கின்றன. அவர்களும் ஒரு தாயின் வயிற்றில் உருவானவர்கள் தான், சகோதரிகளுடன் பிறந்தவர்கள் தான்.  ஒரு சிலர் தவறு செய்தார்கள் என்பதற்காக ஒட்டு மொத்த ஆண்களையும் அதே பார்வையில் பார்ப்பது முட்டாள்தனம் என்பது தான் என் கருத்து.


தாம்பத்தியம் தொடர் பதிவின் அடுத்த தலைப்பு இனி, தொடரும்....!! இயன்றால் நாளையே!! 
   

திங்கள், மே 17

பெண்களின் அறியாமை - தாம்பத்தியம் -2

கணவனின் மென்மையான அணைப்பில்தான்  ஒரு பெண் 'தான் பாதுகாப்பாக' இருப்பதாக உணருகிறாள்.  எல்லோருக்கும் அந்த பாதுகாப்பு உணர்வு கடைசிவரை கிடைக்கிறதா? இல்லை என்று தான் சொல்லமுடிகிறது.  ஏன் இல்லை, காரணம் என்ன என்பதை பற்றிய ஒரு பகிர்வுதான் இந்த தாம்பத்தியம் என்ற தொடர் பதிவு!     

தான் யார் என்பதும் , தனது மதிப்பு என்ன என்பதையும் அறியாமல் இருக்கிறாள் பெண். பெண்களின் அறியாமை
ignorance of women


தாம்பத்தியம் சுகமானதாக இருப்பதற்கு பெரும் பங்கு வகிப்பது பெண்கள்தான்.  பெண்மை அங்கே  திருப்தி அடையவில்லை என்றால் அந்த வீடு வாழ தகுதி அற்றதாகி விடுகிறது,  ஒரு குடும்பத்தின் கெளரவமே அந்த குடும்பத்தின் பெண்ணின் கையில் தான் இருக்கிறது,  வீடு சொர்க்கமாவதும், நரகமாவதும் அந்த பெண்ணை பொறுத்துத் தான் அமைகிறது.  முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் கணவன் ராமனாக இருப்பதும் கிருஷ்ணனாக மாறுவதும் கூட அந்த மனைவியை வைத்துதான் இருக்கிறது என்பது என் கருத்து. கணவனுக்கு எல்லாமுமாக ஒரு மனைவி இருந்து விட்டால் அந்த கணவனுக்கு வேறு எண்ணங்கள் வரக்கூடிய வாய்ப்புகள் மிகவும் குறைவு.  


அதனால் தாம்பத்தியம் என்று பார்க்கும்போது முதலில் பெண்களின் பலம், பலவீனங்கள் போன்றவற்றை கொஞ்சம் சுருக்கமாக (இயன்றவரை) பகிர்வது  சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.   


(நான் எழுதுவது அனைத்தும் சொந்த மற்றும் பிறரின் அனுபவங்களின் அடிப்படையில் அமைந்தவைதான்.    தவிர இது யார் மனதையும் புண்படுத்தாது என்று நம்புகிறேன். யார் மனதையும் கஷ்டப்படுத்துவது என் நோக்கம் அல்ல,  தாம்பத்தியத்தில் தடுமாறிக்  கொண்டிருக்கும்  ஒரு சில மனங்களில் ஒரு மனதை மட்டுமாவது  எனது ஏதாவது ஒரு வரி கொஞ்சம் தொட்டுவிடாதா  என்ற ஒரு நப்பாசை தான் காரணம்)      

பெண்களின் அறியாமை :

பெண்கள் இன்று பல துறைகளில் முன்னேறி இருந்தாலும் இன்னும் அவர்களுக்குள் இருக்கும் அறியாமை போகவில்லை என்று தோன்றுகிறது. நான் அறியாமை என்று சொல்வதின் அர்த்தம் எது என்றால், ' தங்களை பற்றி இன்னும் சரியாக அறிந்துக் கொள்ளவில்லை ', என்று சொல்வேன்.  

நீண்ட காலமாக பெண்ணுரிமை இயக்கங்கள் தொடர்ந்து சம உரிமை வேண்டும் என்று போராடி வருகின்றன,  அது எதற்காக.......?  பெண்கள் எப்போது தாழ்ந்து போனார்கள்? இப்போது உயர்த்தணும் என்று போராடுவதற்கு.  உண்மையில் பெண்கள் ஆண்களை விட 'எப்போதுமே ஒரு படி மேலே தான்' அப்படி இருக்கும்போது எதற்கு சம உரிமை என்று கேட்டு தங்கள் இடத்தை விட்டு கீழே  இறங்கி வர வேண்டும்.     


குழந்தை பேறு என்ற மகத்தான சக்தி நம்மிடம் இருக்கும்போது நாம் எப்படி ஆண்களுக்கு குறைந்து போவோம்...!?   அவர்களைவிட மேலே மேலே தான்!! ஆண்கள்  உடலளவில் பலமுள்ளவர்களாக இருந்தாலும் மனவலிமையில் பெண்களுக்கு ஈடாக மாட்டார்கள்.  இதை பெண்கள் மனதில் வைத்து கொண்டால் சரிசமமாக   சண்டைக்கு போக மாட்டார்கள், பரவாயில்லை  என்று விட்டுக் கொடுத்துவிடுவார்கள்!!      

சம வயது உடைய ஆண், பெண் இரண்டு பேரில் ஆணை விட பெண்ணின் அறிவு வளர்ச்சி, மன முதிர்ச்சி  அதிகமாக இருக்கும்,  இதை நான் சொல்லவில்லை விஞ்ஞானம் சொல்கிறது. அதனால் தான் திருமணத்திற்கு பெண்  தேடும்போது 2 , 3  வயதாவது குறைந்த பெண்ணை நம் பெரியவர்கள் முடிவு செய்கிறார்கள்.  வயது அதிகமான பெண்ணை மனம் முடித்த ஒரு சிலர்  பாவம் அந்த பெண்ணிற்குக்  கட்டுப்பட்டுப்   போக வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.  

பெண்களுக்கே தங்களை பற்றிய தாழ்வுமனப்பான்மை  அதிகமாக இருப்பதால் தான் இன்னும் பலர் முன்னேறாமல் தங்கள் திறமைகளை தங்களுக்குள் போட்டு புதைத்து விட்டு வெறும் சவமாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.  

பெண்களின் சிறப்பு  இயல்புகள்  :

இயல்பிலேயே பொறுமை, விடாமுயற்சி, உறுதி, உழைப்பு, தன்னம்பிக்கை, தைரியம் ஆகிய திறமைகளை பெற்றவர்கள்தான்.  தவிர தாய்மை, அன்பு, கருணை, தயாளகுணம், விருந்தோம்பல்,  புன்னகை என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றில் சில குணாதிசியங்களை மட்டும் பார்போம்.  


நவீன ஜான்சிராணிகள்!


நமக்கு ஆண் உடை தரித்து வாளெடுத்து   போரிட்ட ஒரு ஜான்சிராணியை நன்றாக தெரியும். அவர் இருந்த  அப்போதைய இக்கட்டான சூழ்நிலையில் வாளேடுத்து போரிட்டு   ஆகவேண்டும் என்ற கட்டாயம், எனவே துணிந்து போரிட்டார்.  இன்றுவரை வீரப்பெண்மணி என்று புகழுகிறோம்.  


ஆனால் எல்லா பெண்களுக்குள்ளும் ஒரு ஜான்சிராணி இருக்கத்தான் செய்கிறாள்.  தேவைப்பட்டால் போரிடவும் தயங்க மாட்டாள்.   உண்மையில் அன்றைய ஜான்சிராணிக்கு   குறிக்கோள் ஒன்று,  போர்க்களம் ஒன்று.   ஆனால் இன்றைய பெண்களுக்குக்கோ தினம் தினம் பலவித போராட்டங்கள், விதவிதமான போர்களங்கள், அத்தனையையும் தனி ஒருவளாக சமாளிக்கும் ஆற்றல் பெற்றவள்!!           


கரண்டிப் பிடிக்கும் அதே கையால் துப்பாக்கி பிடிக்கவும் தயங்காதவள் பெண்!
  
தைரியம்:

பெண்களின் தைரியத்தை பலர் நேரில் பார்த்திருக்கலாம், சிலர் அவர்களால் வாழ்க்கையில் மேல் நிலைக்கு வந்திருக்கலாம்,  பல ஆண்களின் வெற்றிக்கு பின்னால் பெண்கள் இருந்திருக்கிறார்கள்.  உதாரணமாக குடும்பத்தில் திடீரென்று  பிரச்சனை வந்து விட்டால் கலங்கி விடாமல் முதலில் சுதாரித்து எழுபவள் பெண்..........!  கணவனையும் சோர்ந்து விடாமல் பார்த்துக் கொண்டு, பிரச்சனைக்கு என்ன தீர்வு என்று ஆராயத்  தொடங்கி விடுபவள் பெண்.........!  தன் புன்சிரிப்பால் சூழ்நிலையை மாற்றி அடுத்த கட்டத்திற்கு போக தன் கணவனை ஊக்கப்படுத்துபவள் பெண்........!  பிரச்சனை பொருளாதாரமாக இருந்துவிட்டால் கொஞ்சமும் தயங்காமல் தன் கையில்  இருக்கும் தங்க வளையலை கழட்டி கணவனிடம் கொடுத்து நிலைமையை சமாளிக்க சொல்லுபவளும் பெண்.........! பிரச்சனை  தங்கள் குழந்தைகளுக்கு தெரியக்கூடாது என்று  மறைத்து   அவர்களை உற்சாகமாக இருக்குமாறு பார்த்துக்கொள்பவளும்  பெண்தான் !! 


இவ்வாறு  பெண்களின் சமயோசித்த செயல்களைச்  சொல்லிக்கொண்டே போகலாம்.  

பெண்ணடிமை:

பெண்கள் ஆணுக்கு அடிமையாக அடங்கி இருந்தார்கள் என்பதை முழுமையாக ஏற்றுக்  கொள்ளமுடியாது,  அப்படி ஒரு நிலைமை இருந்திருந்தால் பல பெண்கள் அந்த காலத்தில் சில பல புரட்சிகள் படைத்திருக்க முடியாது!  (உதாரணங்களை அடுக்கிக்  கொண்டிருந்தால் தாம்பத்தியம் என்ற படைப்பு வேறு பாதையில்  பயணிக்கத்  தொடங்கிவிடும், அதனால் ஒரு வரி தகவல் மட்டும் போதும் என்று நினைக்கிறேன்)  பலரும் வீட்டை விட்டு வெளியில் வந்து பல வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு புகழ் பெற்று இருந்தார்கள்.  வீட்டில் இருந்த பெண்களும் நல்ல குடும்ப தலைவிகளாக இருந்து தத்தம் பிள்ளைகளை நன்மக்களாக வளர்த்து உயர்த்தினார்கள்.

பெண்களின் மனநிலை எந்த காலத்திலும் ஒன்று தான்,  மாற்றங்கள் சூழ்நிலையை  பொறுத்து மாறுமே தவிர பெண், பெண்ணாகத்தான் எப்போதும் பரிமளிக்கிறாள்.  

தான் எப்படி வாழவேண்டும் என்பதை அந்த பெண்தான் தீர்மானிக்கவேண்டும்.   கோபுரகலசமாகவா?   குத்துவிளக்காகவா?  அல்லது சாதாரண தெருவிளக்காகவா?  என்பது அவள் முடிவிலும், அவள் வாழும் வாழ்க்கையை பொறுத்தும்தான் இருக்கிறது!
   
கணவன், மனைவி உறவு பாதிக்கப் படுவது ஏதோ ஒருநாள் பிரச்சனையால் மட்டும்  ஏற்படுவது இல்லை, இதற்கு பல காரணங்கள் இருக்கின்றது.  மிக முக்கியமான காரணமாக இருப்பது ஆண், பெண் வளர்ந்த விதம்தான்.   
 
பெண்கள் வளர்ந்த விதம்:


முதலில் பெண்கள் வளர்ந்த விதத்தில் இரண்டு வகைகளை கொஞ்சமாக பார்ப்போம்.    பெண்களை அதிகமாக அடக்கி வைப்பது எப்படி தவறோ அந்த அளவிற்கு சுதந்திரம் கொடுத்து வளர்ப்பதும் தவறு என்பது என் கருத்து.  

அடக்கி வைத்து வளர்க்கப்படும் பெண்கள் எப்போது இதில் இருந்து மீள வழி பிறக்கும் என்ற எண்ணத்திலேயே வளருவார்கள், பின் திருமணம் முடிந்ததும் தன் மேல் திணிக்கப்பட்ட அடக்கு முறையை தன் கணவன் மேல் காட்ட தொடங்குவார்கள்,   ஒருவகையில் இதை  superiority complex என்றுகூட சொல்லலாம்.   தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற ஒரு வித மயக்கத்தில் நடப்பார்கள், தனது அடிமைத்தன  வளர்ப்பு கணவனுக்கு தெரிந்து விடக்கூடாது என்பதில் தொடங்கி தன் பேச்சை மட்டும்தான் கேட்கவேண்டும் என்பதில் முடியும். எதை எடுத்தாலும் சண்டை, சச்சரவு என்று தான் இருக்கும். ஒவ்வொரு சண்டையின் முடிவிலும் தற்கொலை என்ற ஆயுதம் பிரவோகிக்கப்படும்.   கணவன் அப்பாவி ஆக இருந்துவிட்டால் தப்பித்து விடுவார்,  மாறாக விவரமானவராக இருந்து  விட்டால் தினம் இங்கே தாம்பத்தியம் பயங்கரமாக அடி வாங்கும்.

மாறாக சுதந்திரமாக செல்லமாக வளர்க்கப்பட்ட பெண்களில் சிலர் திருமணத்திற்கு பிறகு கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுகிறார்கள்.  புகுந்த வீட்டினரை எதிரிகளாக பார்க்கிறார்கள்,  மாமியார், மருமகள் சண்டையே இந்த வீட்டில் தான் அதிகமாக நடக்கிறது.  தனது விருப்பத்திற்கு ஏற்ப நடக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தை தனது கணவனிடம் காட்ட தொடங்குவாள்,  கொஞ்சம் கொஞ்சமாக தன் கணவனை தனிக்குடித்தனம் போகத்   தூண்டுவாள், கணவன் ஆரம்பத்தில் தவித்தாலும் வேறு வழி இன்றி இதற்கு உடன்பட்டு விடுவான்.  

தனியாக போனாலும் பிரச்சனை தீர்ந்து விட்டது என்றால் இல்லை என்பது பல அனுபவசாலிகளின் பதில்.  கணவன் தன்னை எப்போதும் தாங்கவேண்டும்,  சின்ன தலைவலி என்றாலும் ஓடி வந்து உபசாரம் செய்யவேண்டும்,  தன்னை ஆகா, ஓகோ என்று புகழவேண்டும், ரோட்டில் போகும்போது சும்மா கூட வேறு பெண்ணை ஏறிட்டுப்  பார்த்து விடக்  கூடாது என்பது  மாதிரி highly possessive ஆக இருப்பார்கள்.  மொத்தத்தில் இங்கே தாம்பத்தியம் தள்ளாடும்.

பெற்றோர்களால் பாதிக்கப்படும் பெண்கள்:


கருத்து வேறுபாடுகள் நிறைந்த எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருக்கும் பெற்றோர்களுக்கு மகளாக பிறந்து வளர்ந்த பெண்ணின் மனம் கவலைகள், குழப்பங்கள் நிறைந்ததாகவே  இருக்கும். வெளிப்பார்வைக்கு சகஜமானவளாக தோன்றினாலும், அவளது மனம் அடிக்கடி தனிமையையே நாடும்.  எதிர்காலத்தை பற்றிய பயம் அதிகமாகவே இருக்கும். படிப்பிலும் கவனம் இருக்காது, மிக குறைந்த அளவிலேயே தோழியர் இருப்பர்.  வெளி இடங்களில் சிரித்து பேசியபடியும், வீட்டில் எப்போதும் இறுக்கமாக, அமைதியாக  இருப்பார்கள். ஏன் வீட்டிற்கு வருகிறோமோ என்ற எண்ணம் ஒவ்வொருமுறை வீடு திரும்பும்போதும் மனதில் எழும்.  

கற்பனையாக ஒரு துணையை உருவாக்கி அதனுடன் சந்தோசமாக  வாழ்வதாக கருதி எப்போதும் ஒரு கற்பனை உலகில் வலம் வந்து சுகம் காணுவார்கள்.   இவர்களில் ஒரு சிலர் தாழ்வு மனப்பான்மையுடனும்,  ஒரு சிலர் உயர்வான மனப்பான்மையுடனும்   இருப்பார்கள்.  இவர்களது எதிர்கால திருமண வாழ்கையில் இதன் பாதிப்பு நிச்சயமாக   எதிரொலிக்கும்.   அந்த புகுந்த வீடும், கணவனும்  எவ்வளவு நன்றாக, நல்லவனாக  இருந்தாலும் இந்த மோசமான பாதிப்பு கண்டிப்பாக சில நேரங்களில் வெளிப்பட்டே தீரும்.....!!     

பல தாம்பத்தியங்கள் தடுமாற இந்த மாதிரி பாதிக்கப்பட்ட பெண்களும் ஒரு காரணம்!?   ஆனால் இந்த அடிப்படை காரணம் அந்த கணவனுக்கு முழுவதுமாக தெரிய வாய்ப்பில்லை என்றே சொல்லவேண்டும்.  அந்த பெண்ணிற்கும் தனது ஆழ்மனதில் பதிந்தவைதான் தனது நிகழ்கால குழப்பங்களுக்கு காரணம் என்பதை உணர்ந்தாலும் பெரும்பாலும் அவளது பலவீனம் அதை ஒத்துக் கொள்ள விடுவது இல்லை.   விளைவு நல்ல குடும்பம், நல்ல கணவன் கிடைத்தும் அற்புதமான இந்த தாம்பத்தியம் உடைய தொடங்கிவிடுகிறது.........!!

               தவிரவும் ஒரு சில பெண்களின் குணங்கள்,  பெற்றோர்கள் மட்டும் உறவினர்களின் தவறான வழிகாட்டுதல்,  சொல்லப்போனால் பக்கத்து வீட்டினர்கூட குடும்பம் பிளவுப்பட காரணமாக  இருந்து விடுகிறார்கள்.   அதில் முக்கியமான ஒரு சிலவற்றை தொடர்ந்து அடுத்த பதிவில் பார்க்கலாம்.   தொடர்ந்து வரும் சில தலைப்புக்கள்,  


பெண்களின் மனோபாவங்கள் 
ஆண்களின் சிறப்பியல்புகள் 
ஆண்களின் மனோபாவங்கள் 
திருமண பந்தம் (இரு குடும்பங்களின் இணைப்பு விழா)
கருத்து வேறுபாடுகள் ( பிரிவு, விவாகரத்து)
தீர்வுதான் என்ன? 
சுகமான தாம்பத்தியம் இப்படித்தான் இருக்கும்.


தொடர்ந்து படியுங்கள், இதனை குறித்த உங்களது விமர்சனங்களையும் (அர்ச்சனைகளையும்),  மேலான ஆலோசனைகளையும்,   கருத்துகளையும் தயவுசெய்து தெரிவியுங்கள் அப்போதுதான் என்னால் பிற தலைப்புகளை நன்றாக தொடரமுடியும்.  


 காத்திருங்கள்.........!!    எழுத்துக்களை சுவாசிக்க... மன்னிக்கவும் வாசிக்க......!!!  

பிரியங்களுடன் 
உங்களின் 'மனதோடு மட்டும்
கௌசல்யா