பதிவுலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவுலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜனவரி 23

திருநெல்வேலியில் பேஸ்புக், வலைப்பதிவு நண்பர்கள் சங்கமத் திருவிழா

அன்பு நண்பர்களே! 

திருநெல்வேலியில் பதிவர்கள் சந்திப்பு நடந்த பிறகு தற்போது பெரியளவில் நடக்க இருக்கும் ஒரு சந்திப்பு ‘தெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம்’
பேஸ்புக் நண்பர்கள் அதிக அளவில் கலந்துக் கொள்வதால் பெயரை முகநூல் நண்பர்கள் என்று வைத்துவிட்டோம்.  தவிர இப்போது நம்ம பதிவர்கள் எல்லோரும் பதிவுலகத்தை விட அதிக நேரம் பேஸ்புக்கில் தானே இருக்கிறோம். அந்த வகையில் பார்த்தாலும் இந்த பெயர் சரிதானே !! :-)




நாள் - 25/1 /2015 ஞாயிற்றுக் கிழமை அன்று (நாளை மறுநாள்)

இடம் -  பதிவர் சந்திப்பு நடந்த அதே ஜானகிராம்  ஹோட்டலில் பெரிய ஹாலில் நடக்க இருக்கிறது. ஹோட்டலுக்கு வெகு அருகில்தான் ரயில் நிலையமும், பேருந்து நிலையமும் இருப்பதால் வெளியூர் நண்பர்களுக்கு வசதியாக இருக்கும். 

இந்த சங்கமத்தை நடத்துவதில் பெரும் பணியாற்றிக் கொண்டிருப்பவர்  எங்க மண்ணின் மைந்தன் எழுத்தாளர் திரு.நாறும்பூ நாதன் அவர்கள். என்னிடம் பேசும் ஒவ்வொரு முறையும் விழா குறித்த செய்திகள், தகவல்களை விரிவாக பகிர்ந்துக் கொள்வார். இது போன்ற பல நிகழ்ச்சிகளை நடத்திய அனுபவமிக்கவர்.
(கத்துக்குட்டியா இருந்தாலும் எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுறதே நம்ம பொழப்பாப் போச்சு :-) ஆனா அவரு முதல் முறையாக ஒரு நிகழ்ச்சியை நடத்தப் போற மாதிரியே படப்படப்பாகப்  பேசுவார். என்ன இருந்தாலும் பெரியவங்க பெரியவங்கதான்) 

கடந்த மூன்று மாதங்களாக நடத்தப் பட்ட ஆலோசனைக் கூட்டங்களில் நண்பர்கள் கலந்துக் கொண்டு அதன் அடிப்படையில் நிகழ்ச்சிநிரல் வடிவமைக்கப் பட்டுள்ளது. அனுபவமிக்கவர்களுக்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இளைஞர்களுக்கும் கொடுக்கப்படுவது ஆரோக்கியமான நட்பை பலப்படுத்தும் என்பதை சங்கம ஏற்பாடுகளை கவனித்து புரிந்துக்கொண்டேன்.  

வெறும் சந்திப்பாக மட்டும் இல்லாமல் இரு புத்தகங்கள் வெளியீடும், இணைய உலகத்தின் எதிர்ப்பார்ப்புகள் சில பற்றியும் இங்கே பகிரப் பட இருக்கின்றன. பல்வேறு மத இன மொழியினரை இணையம் இணைத்து வைத்திருக்கிறது என்ற சிறப்புடன் மட்டுமே நாம் நின்றுவிடாமல் இந்த சந்தர்ப்பத்தை ஆக்கபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு நடைபெறப்போகும் இந்த சங்கமம் ஒரு ஆரம்பமாக இருக்கும் என்பதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி.

நிகழ்ச்சி நிரல் 

கரிசல்குயில் இசை நிகழ்ச்சியுடன் துவக்கம்.
உறுப்பினர் பதிவு
வரவேற்புரை: இரா.நாறும்பூநாதன்.
முகநூல் நண்பர்கள் சுய அறிமுகம் (தன்னோட பெயர்,ஊர்,பணி, இயங்கும் துறை இதை மட்டுமே சொல்ல வேண்டும்.)
இரண்டு நூல்கள் வெளியீடு.
1.திரு.விமலன் எழுதிய "பந்தக்கால்"
2.திரு.மொஹம்மத் மதார் எழுதிய "வல்லினம் நீ உச்சரித்தால்..."
சிறப்பு விருந்தினர்கள்
எழுத்தாளர்கள் திரு.வண்ணதாசன்,கலாப்ரியா,உதயசங்கர்,மாதவராஜ்,தேவேந்திரபூபதி,சௌந்திரமகாதேவன்,இரா.எட்வின் மற்றும் மனநல மருத்துவர் ராமானுஜம்,கதிர் ஆகியோர் வலைத்தள பதிவுகள் பற்றி எளிமையான துவக்கவுரை

நண்பர்கள் கலந்துரையாடல்.
நன்றியுரை: திரு.மணிகண்டன்.
பிற்பகல் 2 மணி : மதிய உணவு.
நிறைவு.

நிகழ்வை ஒழுங்குபடுத்துபவர்கள் :-  
திரு.சுப்ரா.வே.சுப்ரமணியன்
திருமதி.ருபீனா ராஜ்குமார்
திரு.அனில் புஷ்பதாஸ்

நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்குபவர் :-  
குறும்பட இயக்குனர் நெல்லை முத்தமிழ்.

நூறு பேருக்கு குறைவில்லாமல் வருவதாக தெரிகிறது. சுத்துப்பட்டி மாவட்ட மக்களை தவிர்த்து தொலைவில் இருந்து யாரெல்லாம் வராங்கனு பார்த்தால் (இதுவரை பெயர்  கொடுத்துத்தவர்கள்) கத்தாரில் இருந்து திருவாளர்கள் ஜூமாலி ரசூல், சென்னையில் இருந்து ராஜதுரை தமயந்தி, திருச்சியில் இருந்து இரா.எட்வின், கம்பத்தில் இருந்து சுருளிப்பட்டி சிவாஜி, மதுரையில் இருந்து விசுவேஸ்வரன், குமரி மாவட்டம் தக்கலையில் இருந்து தக்கலை ஹலிமா, நாகர்கோவில் பாபு,விருதுநகரில் இருந்து மணிமாறன், சிவகாசியில் இருந்து ரெங்கசாமி மற்றும்    ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து நம்ம ரத்னவேல் ஐயாவும் அம்மாவும் வராங்க.  அப்புறம் சில படைப்புகளும் அங்கே விற்பனைக்கு வைக்கப் பட இருப்பதாக இருக்கிறது, இதெல்லாம் அவங்க அவங்க பொறுப்பு மட்டுமே. 


சந்திப்பு குறித்த நேரத்தில் துவங்க நண்பர்கள் ஒத்துழைக்க வேண்டும் . தொலைவில் இருந்து நண்பர்கள் வருவதால் அவர்கள் ஊர் திரும்ப வசதியாக மதியம் 2 மணிக்கு நிகழ்ச்சியை கண்டிப்பாக நிறைவு செய்து விட வேண்டும் என்ற முனைப்பில் ஒழுங்கு செய்யப் பட்டிருக்கிறது. நிகழ்ச்சி முடிந்தாலும் நாம நம் நண்பர்களுடன் எவ்ளோ பேசணுமோ போட்டோ எடுத்துகனுமோ எடுத்துக்க வேண்டியதுதான். எழுத்துக்களின் மூலமே பார்த்து பேசிப் பழகிய உள்ளங்கள் நேரில் என்றால் உற்சாகம் அளவிட முடியாதல்லவா...

சங்கமம் குறித்து பேஸ்புக் அப்டேட்ஸ் பார்த்தே பல நண்பர்கள் வருவதாக தெரிவித்தார்கள்...அதனால் தனிப்பட்ட அழைப்பு இல்லையே என்று எண்ணாமல் நம் குடும்ப விழாவாக எண்ணி வாருங்கள், வருகையை நாளை மதியத்திற்குள் உறுதி செய்துக் கொண்டால் உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும். 

தொடர்பிற்கு - திரு.நாறும்பூநாதன் - 9629487873 

பல பெரிய படைப்பாளிகள் வாழ்ந்த, வாழும் நமது தெக்கத்தி மண்ணில் இன்னும் வெளியே தெரியாத படைப்பாளிகள் இருக்கக்கூடும், அத்தகையவர்கள் பலருக்கு தெரியாமல் பதிவுலகில் இருக்கலாம் அல்லது பேஸ்புக்கில் சில வரிகள் எழுதுவதுடன் நின்றிருக்கலாம். இந்த சங்கமம் அத்தகையவர்களை இனம் கண்டு உற்சாகப் படுத்தக் கூடிய ஒரு இடம். எனவே இது போன்ற அருமையான ஒரு சந்தர்ப்பத்தை நண்பர்கள் யாரும் தவறவிட்டுடக் க்கூடாது.  கண்டுக் கொள்ளப் படாத எழுத்துக்கள் இங்கே தெரிந்தக் கொள்ளப்படலாம். யாருக்கு தெரியும் இந்த சங்கமம் முடிந்ததும் பல எழுத்தாளர்கள் அடையாளம் கண்டு வெளிஉலகம் இழுத்துக் கொண்டுப் போகலாம். ஆம் ஆச்சரியங்கள் அதிசயங்கள் தானாக ஏற்படும் என்றில்லையே...நாமாகக் கூட ஏற்படுத்தலாம் !! 

புதிய கதவுகள் திறக்கட்டும் !!

வாழ்த்துக்கள் !!!
   
நன்றி!


ப்ரியங்களுடன் 
கௌசல்யா 



வியாழன், டிசம்பர் 4

இவள் ஒரு தேவதை ...!



பதிவுலகம் எனக்கு நிறைய நல்ல உறவுகளை கொடுத்திருக்கிறது. சகோதர உறவு என்பதிலும் தன்முனைப்பு தலைத்தூக்கும் நட்புகள் வந்த வேகத்தில் நின்றும் விடும். மனம் பார்த்து மலர்ந்த நட்பு ஒன்று தான் தொடரும் நிலைக்கும் என்பதற்கு உதாரணமாகவும் சொல் செயல் எண்ணம் அனைத்திலும் சக மனிதர்களின் மீதான அக்கறை, அன்பும்  கொண்ட எனக்கு தெரிந்தவர் ஒருவர் உண்டு.

இருவருக்குமான சந்திப்பு எப்போது எப்படி ஏற்பட்டது என்ற நினைவு கூட எனக்கு இல்லை, சாதாரணமான விசாரிப்பில் ஆரம்பித்து இருவரின் அலைவரிசை ஒன்றாக இருக்க நட்பு மேலும் இறுகியது.  வெறும் பொழுது போக்கிற்கான ஒன்றாக இருக்காது எங்களின் பேச்சுக்கள். அவரிடமிருந்து ஏதாவது ஒரு செய்தி பேஸ்புக் இன்பாக்சில் எனக்காக எப்போதும் காத்திருக்கும். அந்த செய்தி நிச்சயமாக அவரை பற்றியதாகவோ பரஸ்பர நலம் விசாரிப்பாகவோ இருந்ததில்லை.  உலகின் ஏதோ ஒரு மூலையில் யாருக்கோ நடந்த பிரச்சனை, காஸா பற்றியதோ, மலாலாவின் பேச்சை குறித்தோ, மாவோயிஸ்ட் பற்றியதோ, ஒபாமா, மோடி, பெண்ணியவாதிகள் ,பேஸ்புக் பிரபலங்கள்  என்று யாரை பற்றியும் இருக்கலாம். மதம் சாதி அரசியல் சினிமா  இப்படி எல்லாவற்றையும்  பற்றிய வருத்தங்கள் கோபங்கள் கவலைகள் எல்லாம்  தாங்கியவை அவை.

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை பற்றி நிறைய எழுதுங்க என்று என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் இருக்கும் வித விதமான போதை பழக்கத்தை பற்றியும் நிறைய பேசுவோம். அப்படிப்பட்ட ஒரு கட்டுரைதான் அடுத்ததாக எழுத இருக்கிறோம்.    

சமூகத்திற்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற வேட்கை கொண்டவர்கள் செய்யும் சிறு செயலையும் நாம் கட்டாயம் ஊக்குவிக்கவேண்டும் அப்படிப்பட்ட ஒன்றை தான் நான் அவருக்கு செய்துக் கொண்டிருக்கிறேன் என நினைக்கிறேன். அதனால் தான் பசுமைவிடியல், நலம் என்ற இரண்டு பேஸ்புக் தளத்திலும் அவரை இணைத்துக் கொண்டேன். இதை மட்டும்தான் நான் செய்தேன், அதற்கு பின்னர் அவர் செய்து வருவது மிக பெரிய காரியங்கள். 

என்டோசல்பான் குறித்து ஒவ்வொரு நிமிடமும் பதறும் ஒரே ஜீவன் இவர் ஒருவராகத்தான் இருக்கும். வெளிநாட்டில் தடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லிகள் நம் நாட்டில் தாராளமாக நடமாடுவதை பற்றி ஏன் ஏன் இப்படி என்று கேள்வி எழுப்பிக் கொண்டே இருப்பார், என்ன பதில் சொல்வேன் நான். கேள்வி கேட்பதுடன் நிற்காமல் ஆங்கில தளங்களில் வெளிவரும் விழிப்புணர்வு கட்டுரைகளை தமிழில் மொழி பெயர்த்து இரு  பேஸ்புக் பக்கங்களில் வெளியிடுவார்.  அதில் பல நமது தமிழ் பத்திரிகைகளில், பிற சமூக தளங்களில்  வெளிவராதவைகளாக  இருக்கும். (பிறகு வேறு யாரோ ஒருவரின் பெயரில் வெளிவந்துவிடும்)

அழகாக மொழிபெயர்த்து எனக்கு மெயில் செய்துவிட்டு பிழைத் திருத்தம் செய்து வெளியிடுங்க என்று குழந்தை மாதிரி சிரிப்பார். சீரியஸான கட்டுரையிலும் smily போட்டு வைப்பார், கசப்பு மருந்தை சிரித்துக் கொண்டே கொடுப்பதை போல...குழந்தை உள்ளம் கொண்டவரா இவ்வளவு சிக்கலான விசயங்களை புட்டு புட்டு வைக்கிறார் என அடிக்கடி என்னை ஆச்சர்யபடவைப்பார்.  

வெளிநாட்டில் வாழ்ந்தாலும் மூச்சிலும் பேச்சிலும்  நம் நாட்டின் மீதான அன்பும் அக்கறையும்  வெளிப்படும். இவருடன் பழகி நான் தெரிந்துக் கொண்டதும் கற்றுக் கொண்டதும் நிறைய நிறைய. விழிப்புணர்வு கட்டுரையை வெளியிட்டு பெரிதாக என்ன நடந்துவிடப் போகிறது என சோர்ந்துப் போகும் போதெல்லாம் இவரது பேச்சு எனக்கு ஒரு டானிக். மரம் நடுவது என்பது நட்டவர்களுடன் நின்றுவிடும் ஆனால் மரம் ஏன் நடவேண்டும் என்ற விழிப்புணர்வை அவர்களின் மனதில் விதைத்துவிட்டால் அது அவர்களின் சந்ததி வரை தெளிவை கொண்டுச் செல்லும் என்பதில் இருக்கும் நம்பிக்கைதான் அவரை எழுத வைக்கிறது. 

வீட்டுத்தோட்டம்  போடுவதில் வெளிநாடுகளில் பல முறைகளை பின்பற்றுகிறார்கள். அதை எளிய தமிழில் மொழி பெயர்த்து என்போன்ற தோட்ட விரும்பிகளை உற்சாகப் படுத்திக் கொண்டிருக்கிறார்.. வீட்டுத்தோட்டம் குறித்து மெயில் மூலம் கேட்கப்படும் சந்தேகங்கள், விளக்கங்களுக்கு உடனே பதில் அனுப்பி விடுவார். இத்தனை ஷேர் போயாச்சு என்று இருவரும் ஒருவருக்கொருவர் சொல்லி சந்தோசபட்டுக் கொள்வோம்.

கைவினைப் பொருட்கள் செய்வதிலும் திறமையானவர், அதிலும் வீணாக தூக்கி எறியும் பல பொருட்கள் இவரது கைவண்ணத்தில் அழகாகும்...சுற்றுப் புற சூழலின் மீதான அக்கறையை மீள் பயன்பாடு மூலமாக தெரிவிப்பார். தான் செய்த பொருட்களை நண்பர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்து மகிழ்வார்.  fish pand இல் மிதக்கும் மீன்கள் , ஜெஸ்சி பூனை எல்லாம் இவரது அன்பு செல்வங்கள் ! அவரது நட்புகள் செல்லப் பெயர் வைத்துத்தான் இவரை அழைப்பார்கள். அதிலும் நம்ம கவிதாயினி குழந்தைநிலா ஹேமா ‘மீனம்மா’ என்று அழைப்பது அழகோ அழகு !!      

போனில் அடிக்கடி என்னை அழைத்து பேசுவார்...அவரது எழுத்தைப் போலவே அவரது பேச்சும் அவ்ளோ இனிமை. சொற்களுக்கு வலிக்குமோ என்று தயங்கித்தயங்கி உதிரும் வார்த்தைகளில், மழலைக் கொஞ்சும் பேச்சில் பலமுறை சொக்கிப் போய் கிடந்திருக்கிறேன் நான். பெயரில் மட்டுமல்ல அழகிலும் குணத்திலும் பண்பிலும் உண்மையில் இவள் ஒரு தேவதை. தேவதைக்கு தெரிந்தவள் என்பதில் எனக்கும் நிறைய பெருமை!! ஆம், எல்லோருக்கும் அருகிலும் ஒரு தேவதை இருக்கத்தான் செய்கிறது...அதை கண்டுணர்ந்தவர்களே வரங்களைப் பெறுகிறார்கள் !!!   

இவரை பற்றி இன்னைக்கு எழுத ஸ்பெஷல் காரணம் என்னனா இன்னைக்குத்தான் அந்த அழகு தேவதையின் பிறந்தநாள் !

என் பிரிய தோழி Angelin க்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள் !!!!

    



                                                                    



                                                                        





புதன், மார்ச் 26

சும்மா ஒரு ஹாய் ஒரு ஹலோ ...!

just want to say hi ,hello

அன்பு உறவுகளுக்கு வணக்கம்

பதிவுகள் எழுதி ரொம்ப நாள்(மாசம்) ஆச்சு ...இனியாவது  தொடர்ந்து எழுத லாம் என இருக்கிறேன், அப்படி தீவிரமாக  பதிவுகள் எழுதுறதுக்கு முன்னாடி உங்களுக்கு ஒரு ஹாய் சொல்ல இந்த பதிவு . எப்படி இருக்கிறீர்கள் ? நலம் தானே !  எங்கே ஆள காணும் என்று நலம் விசாரித்த நட்புகளுக்கு எம் அன்பான நன்றிகள்!

மே மாதம் வரை மாணவர்களுக்கு தேர்வு டென்ஷன்... நமக்கு தேர்தல் டென்ஷன் ! (யார் வந்தா நமக்கென்ன என்று இருப்பவர்களுக்கு எந்நாளும் நன்னாளே) சமூக தளங்கள் தான் தேர்தல் முடிவை உறுதிச்  செய்யப்  போவதைப்  போல பரபரப்பாக இருக்கிறது. அரசியல் நக்கல் , நையாண்டிகள் , நிறைய பிளாஷ்பேக் கதைகள் என்று சூடு பிடித்து விட்டது. என்னைபோல அரசியல் கிலோ என்ன விலை என்பவர்களுக்குத் தான் இவங்கலாம் எதை பத்தி யாரை பத்தி பேசுறாங்கனு ஒரே குழப்பமாக இருக்கிறது .  ஜனநாயக கடமையைச்  சிறப்பாக ஆற்றிக் கொண்டிருக்கும்  சக வலைத்தள நண்பர்களுக்கு என் வாழ்த்துகள்.

வாழ்க்கை ஏதாவது  ஒரு பாடத்தை நமக்கு தினமும்  சொல்லிக் கொடுத்து கொண்டே இருந்தாலும் அத்தனை பேருமா அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்கிறோம், வெகு  சிலரே  கற்றுக் கொள்கிறார்கள், பலர் கற்க தவறி விடுகிறார்கள். ஒருவேளை நாம தவறவிட்டாலும் நம்ம கூட இருக்கிறவங்க கற்றுக் கொடுத்துடுவாங்கப்  போல. சிரிக்கத் தெரிந்த  மனிதனாச்சே நாம ,      சங்கடங்கள்  சிரமங்களைச்  சிரித்தே கடந்து விடலாம் என்று எண்ணினால், எங்கே சிரிக்க விடுகிறார்கள்...நம்மைச்  சுற்றி இருக்கிறவர்கள். எப்பொழுதும் எதையாவது பேசி, விவாதம் என்ற பெயரில் நம்மள குழப்பி,  கழுத்து சுளுக்குற அளவு கருத்துச்  சொல்லி...னு என்னவோ போங்க ரொம்பவேப்  படுத்தி எடுக்குறாங்க. அவங்க கூட பழகிப்  பழகி நமக்கும் அதே  பழக்கம் தொத்திகிடுச்சு (இல்லைனாலும் ஒன்னும் தெரியாதாக்கும்) அதிலும் முக்கியமா இந்த பதிவுலகம்  வந்ததில் இருந்து  வெளில யார் கிட்ட பேசினாலும் பதிவுல எழுதுற  மாதிரியே பேசிக்கிட்டு இருக்கிறேன். ரொம்ப நாள் கழிச்சு என்னோட காலேஜ் பிரெண்ட் ஒருத்திய  சந்திச்சேன், 'என்ன நீ என்னவோ மாதிரி பேசுற, நிறுத்தி நிதானமா,  முன்ன எல்லாம் இப்படி பேச மாட்டியே' கேட்ட பிறகு தான் எனக்கே இது புரியுது. :-)

சமீபத்துல கோர்ட்க்கு ஒரு கேஸ்ல சாட்சியாகப்  போனேன்...    எதிர்தரப்பு  வக்கீல் என்கிட்ட வந்து , நான் யாருக்காக போனேனோ அவரை  குற்றவாளி அப்டி இப்டினு சொல்லி, இதுக்கு என்ன பதில் சொல்ரிங்கனு கேட்க, டக்னு  'இப்டி நீங்க சொல்வதை வன்மையாகக்  கண்டிக்கிறேன்' னு சொல்லிட்டேன்,  வக்கீல் முறைக்க... கோர்ட் மொத்தமும் சிரிக்க...நீதிபதியும் லேசா சிரிச்சிக்கிட்டே , 'இங்க நாந்தான்மா கண்டிக்கணும், நீங்க கண்டிக்கக்கூடாது' என்று சொல்ல...நாக்க நான் கடிக்க...சில நொடிகள் கழிச்சி , 'அப்ப எதிர் வக்கீல் சொல்வதை வன்மையாக மறுக்கிறேன்' என்றேன் மெதுவாக !  (அங்க வச்சா நான் எழுதிய கண்டனம் போஸ்ட் ஞாபகத்துக்கு  வரணும்)  ஒரு வழியாக  விசாரணை  முடிஞ்சு வெளில வர,  எங்க தரப்பு வக்கீல், உள்ள போறதுக்கு முன்னாடி அவ்ளோ யோசிச்சிங்க, இப்படி தைரியமாகப்  பேசுவிங்கனு  நான் எதிர்பார்க்கல...முக்கிய சாட்சி உங்களோட இந்த ஒரு பதில் போதும் கேஸ் ஜெயிச்சிடும்னு  சொல்றாரு. (தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக முடிந்தது) 

பார்த்திங்களா, இந்த பதிவுலகம் எப்படி என்னை வளர்த்து விட்டுருக்குதுனு ! 

இப்படி இங்கே நான் கற்றதும் பெற்றதும் நிறைய நிறைய  ! கடந்த நாலு மாதமாக எழுதுவதில் ஒரு பெரிய இடைவெளி விழுந்துவிட்டது. பிற வேலைகள்,பிரயாணங்கள்  அதிகரித்து விட்டதால் மனமும் சோர்ந்துப் போய்விட்டது. . மறுபடி இதோ இன்று எழுதும் போது அதே பழைய உற்சாகம் ! அதுதான் இந்த பதிவுலகின் விந்தை. பழைய நண்பர்களை பார்த்ததும் வருமே ஒரு குஷி, அந்த மாதிரி !!!

பதிவுலகம் வரலைனாலும் டேப்லெட் மூலம் பேஸ்புக்  செக் பண்ணிட்டு இருப்பேன், பசுமைவிடியல் தளத்தில் அப்டேட் பண்ணுவேன். ஆனா  ஒரு  இம்சை ! ஓபன் பண்ணிய  கொஞ்ச நேரத்துல  இன்பாக்ஸ்ல  வந்து ' நீங்க ஆன்லைன் இருக்குறது தெரியும் , ஏன் பதில் சொல்ல மாட்டேன்கிறிங்க' என்பார்கள் சில துப்பறிவாளர்கள்! 'ஹாய், நல்லா இருக்கிங்களா?' ன்ற கேள்விக்கு எத்தனை முறைதாங்க பதில் சொல்றது. நிஜமா முடியல !!  அதை விட ஒரு சகோதரர் கேட்டார், 'என்னங்க இத்தனை மணிக்கு பேஸ்புக்ல இருக்கிங்க...அதும் ஒரு பெண்ணா இருந்துகிட்டு ?!'  என்ன கொடுமைங்க இது ?? நான் என்ன ரோட்லையா ராத்திரி 1 மணிக்கு தனியா நின்னேன். அப்படியே நின்னாலும் அது அவங்கவங்க  சொந்த விஷயம்... இவங்கள மாதிரியானவங்க கற்காலத்த விட்டு வெளில வரமாட்டாங்க போல !

அடிக்கடி கணவருடன் இரவு நேரத்தில் வெளியூர் பயணம் செல்லும்  சூழல் , வண்டி ஓட்டுற அவர் தூங்கக்கூடாதேனு  பேஸ்புக் அப்டேட்ஸ் படிச்சு அதை பத்தி பேசிக்கிட்டுப்  போவோம். அப்படியே ஊரும் வந்துவிடும்.....இதைப்   பத்தி எல்லாம் தெரியாம அடுத்தவங்களின் தனிப்பட்ட விசயத்தில்  மூக்கை நுழைக்கும் அதிக பிரசங்கிகள் எப்போ திருந்தப்  போகுதோ தெரியல . உங்களுக்கு தோணலாம் ,இந்த மாதிரி ஆட்களை பிளாக் பண்ணி இருக்கலாமே என்று , அப்படியும் கொஞ்ச  பேரை பிளாக் பண்ணியாச்சு,  எதுக்கும் நாம  கொஞ்ச நாள் ஒதுங்கி இருப்போம்னு  டீஆக்டிவேட் பண்ணி வச்சேன்... அப்போதான் தெரியுது வெளியுலகம் ரொம்ப அழகு என்று !! இப்படி அடிக்கடி வெளியுலகம் போய்வருவது  எல்லோருக்கும் நல்லது !! :-)

வாட்ஸ்அப் என்றொரு இனிய இம்சை

ஒருநாள்  ரெஸ்டாரென்ட் ஒன்றில் ஆர்டர் கொடுத்துவிட்டு டேப்லெட்டில் கேம்ஸ் விளையாடிகிட்டு இருந்தேன். அந்த பக்கம் வந்த ஒருத்தர் , நீங்க வாட்ஸ்அப்ல இருக்கிங்களா என்றார். நான் ரொம்ப வேகமா இல்லைங்க பேஸ்புக் ல இருக்கேன் சொன்னேன் . ஓ ! மீ டூ பட் வாட்ஸ்அப் இஸ் த பெஸ்ட் அப்டி இப்டி னு எடுத்துவிட்டுக்கிட்டே  இருந்தார். அப்டி என்னடா அதுல இருக்கும் ரொம்ப ஆர்வமாகி   கற்போம்  பிரபு தம்பிக்கு கால் பண்ணேன் , ஆண்ட்ராயிடு போன்ல இது ஒரு ஆப்ஸ் , fb இன்பாக்ஸ் மாதிரி சாட் பண்ணிக்கலாம் .போட்டோஸ், விடியோஸ் ஷேர் பண்ணிக்கலாம் என்று அவர்   சொன்னதையே விரிவாகச்   சொன்னான். சரி அதையும் என்னனு பார்த்திடலாம்னு டவுன்லோட் பண்ணி  யூஸ் பண்ணிகிட்டு இருக்கேன். டைப் பண்ணப்  பொறுமை இல்லைனாச்  சொல்ல வேண்டியதைப்  பேசி அனுப்பிடலாம் என்பது எனக்கு ரொம்ப புடிச்சுப் போச்சு.  முக்கியமா,  பிடித்தவர்கள் குரலை லைவா கேட்பதும்  நினைத்தப்போது எல்லாம் மறுபடி போட்டு கேட்பதும் ஒரு அலாதி குஷி!! :-)

வாட்ஸ்அப் நிஜமா பெஸ்ட். ஆனா பாருங்க இதுலயும்  அதே இம்சை ! ஓபன் பண்ணதும் 'ஆன்லைன்' னு காட்டிக் கொடுத்துவிடும். நான் இரண்டு நாளா இத ஓபன் பண்ணவே இல்லன்னு சத்தியம் எல்லாம் செய்ய  முடியாது. Last seen ல   மாட்டி அசடு வழிய வேண்டியதுதான். இதுக்கும் ஒரு வழி இருக்குனு இப்போதான் கண்டுப்பிடிச்சேன்  "WhatsApp-இல் ‘Last Seen’ நேரத்தை மறைப்பது எப்படி?  ன்ற போஸ்ட்ல சொன்னபடி செட்டிங்க்ஸ் செஞ்சுக்கலாம். 

சில பேர் இதை மொபைல் என்பதையே மறந்துடுவாங்க, இஷ்டத்துக்கு வீடியோ, சாங் , படங்கள்னு அனுப்புவாங்க, மெமரி வேகமா காலியாகி நான்  ஓபன் பண்றப்போ  'மரியாதையா  ரீசார்ஜ் பண்ணப்  போறியா இல்லையா'னு மிரட்டுது ஆன்ட்ராயிடு! பார்வேர்ட் மெசெஜ் ஒரு நாலு பக்கம் அளவுக்கு அனுப்புவாங்க, எல்லாம் படிச்சு நம்ம அறிவை வளர்த்துக்கவாம், இதையெல்லாம் முதல்ல அவங்க படிப்பாங்களானு தெரியல. அதைவிட  'இதை அப்டியே 108 முறை எழுதி அனுப்புங்க உடனே நல்லது நடக்கும்' என்ற அப்போதைய போஸ்ட் கார்ட் டைப்  மெசெஜ அப்படியே  வாட்ஸ்அப்ல அனுப்பி கொல்றாங்க. அறிவியல் வளர்ந்தாலும் இவங்க இன்னும் வளரலையே நினைக்குறப்போ அழவா சிரிக்கவா தெரியல.  இப்போ முடிவு பண்ணிட்டேன் இது போல அவஸ்தை படுத்துற அன்பு நபர்களை பிளாக் பண்ணியே ஆகணும்னு, ஏன் பண்ணினனு கேட்க மாட்டாங்க (நம்புங்க) அப்படியே கேட்டாலும் சொல்லிக்கலாம், என் போன்  என் உரிமை ! :-)  இந்த பாலிஸிய ஏன்  எல்லா இடத்திலும் பாலோ பண்ண முடியறதில்லை என்பது தான் நம்ம பலவீனம். ஆனா கண்டிப்பா  பாலோ பண்ணனும் ஏன்னா நம்ம ஹெல்த் முக்கியமில்லையா !

அவசியமான விசயங்களைக்  கேட்பதற்கும், சொல்வதற்கும் உபயோகப் படுத்துவதற்கு பதிலாக  ஹாய், ஹலோ, நலமா, என்ன பண்றிங்க , இப்போ பிரீயா, சாப்டிங்களா, என்று கேள்வியா கேட்டு வதைப்பது எந்த விதத்தில் நியாயம். அதுவும் ஒரே கேள்வியை தினமும்...பல பேர் கேட்டா நிலைமை அவ்ளோதான். இயந்திர வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஓட்டம், நிற்க நேரம் இன்றி ஓடிக்  கொண்டே இருக்கும் இந்த வாழ்க்கையில் எங்கே நிதானமாக பதில் சொல்ல முடிகிறது. அன்பு அதீத அன்பாக மாறி எதிர்பார்ப்புகள் அதிகரித்து இறுதியில் மன வருத்தத்தில் முடிந்து விடுகிறது. அன்பையும் அளவோடு செலுத்துவது  நல்லது அது நட்பாக இருந்தாலும் நெருங்கிய உறவாக இருந்தாலும்... அதிக உரிமை அதிக மன கசப்பு.  (அனுபவம்)

மேலும் இது போன்ற நவீன வசதிகள் அதிகரிக்க அதிகரிக்க நம்முடைய பிரைவசி பறிப்  போனது போல் இருக்கிறது. நம்ம வீட்டு கிச்சனை மத்தவங்க  எட்டி பாக்குற ஒரு பீல் (பெட்ரூம்னு சொன்னா மட்டும் மக்கள் புரிஞ்சுத்  திருந்திட போறாங்களா என்ன) நம்மளை யாரோ பின்தொடருகிற ஒரு உணர்வு எப்போதும் இருந்துக் கொண்டே இருப்பது நல்லாவா இருக்கு. தியேட்டர், ரெஸ்டாரென்ட், ஷாப்பிங் மால் , ஆபீஸ், துணி கடை, பாத்திர கடை , சூப்பர் மார்கெட் னு எங்க பார்த்தாலும் கேமரா, கெடுபிடி  !! பாதுகாப்பு என்ற பெயரில் தனி மனிதனின் சுதந்திரம் சுத்தமாக  பறிப்  போய்விட்டது.

எது எப்படி இருந்தாலும் நம் வாழ்க்கை நம் உரிமை என்று போய்க் கொண்டே இருக்கவேண்டும் ... அப்போது தான் நிம்மதி சாஸ்வதம். அவ்வாறு போகும் போது  எதிர்படும் எல்லா உயிர்களிடத்தும் சிறு  புன்னகை ஒன்றை உதிர்த்துச் செல்வோம் ... அது போதும் (ஒரு ஹாய் சொல்றேன்னு சொல்லிட்டு என்னை மாதிரி இப்படி கதைச்  சொல்லிக்கிட்டு இருக்கப்படாது) :-)



உலகம் அழகானது...அன்பு உயர்வானது  ...அன்பால் உலகை ஆளுவோம் !!


பிரியங்களுடன்
'மனதோடு மட்டும்'
கௌசல்யா

     


புதன், ஆகஸ்ட் 14

நமக்கே நமக்கான திருவிழா - சென்னையில் 'பதிவர்கள் சந்திப்பு'


சென்ற வருடம் போலவே இந்த வருடமும் சென்னையில் பதிவர்களின் சங்கமம் நடைபெற இருக்கிறது. பதிவர்கள் கூடும் திருவிழா பற்றி பதிவுலகிலும் பேஸ்புக்கிலும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. களைக்கட்டத் தொடங்கிவிட்ட இந்த அற்புத நிகழ்வைப் பற்றி பலரும் பதிவிட்டு சந்திப்புப் பற்றி தெரியாத பலருக்கும் கொண்டு போய் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது பதிவர்களாகிய நமது கடமையும் கூட என்பது என் கருத்து.  

முன்பை போல் இல்லாமல் இப்போது தான் பதிவுலகம் என்ற ஒன்று இருப்பது வெளியே கொஞ்சம் தெரிய தொடங்கி இருக்கிறது. பதிவர்களுக்கென்று ஒரு அங்கீகாரம் தேவை என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பதை விட இது போன்ற நிகழ்வுகளில் கலந்துக்கொண்டும் அல்லது இதை பற்றிய செய்திகளைப்  பலருக்குக்   கொண்டுச்  செல்வதின் மூலம் பதிவுலகத்தின் இருப்பு மற்றவர்களுக்கும்  தெரிய வரும். 

பதிவுலகம் முன்பு போலில்லை, பதிவர்கள் பலர் பேஸ்புக் , ஜி பிளஸ் , டுவிட்டர் என்று போய்விட்டார்கள் என்ற பொதுவான ஒரு குறை உண்டு, எங்கே சென்றாலும் பதிவர்கள் எழுதிக் கொண்டுத்  தானே இருக்கிறார்கள் என்பது ஒரு ஆறுதல். ஆனால் இனியும் அப்படி இல்லாது தொடர்ந்து நிறைய கதைகள், கட்டுரைகள், கவிதைகள், பயண அனுபவங்கள்,  வெளிவர வேண்டும். எழுதுவதைக்  குறைத்துக் கொண்டவர்கள் மீண்டும் எழுத இது போன்ற சந்திப்புகள் நிச்சயம் ஒரு உத்வேகம் கொடுக்கும்.

பத்திரிகை உலகமும், அரசியல் , திரைத்துறை போன்றவையும்  இங்கே நடப்பதை கவனிக்க தொடங்கி ரொம்ப நாளாகிறது. பதிவர்களின் பல கதைகள், கவிதைகள், கட்டுரைகள் பத்திரிகை உலகில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பேஸ்புக் டுவிட்டர் ஸ்டேட்ஸ்கள் வராத மாத வார இதழ்கள் குறைவு தான்.அப்படி பட்ட முக்கியத்துவம் பெற்ற இடத்தில் இருக்கும் நாம் நமக்கே நமக்காக நடைபெற இருக்கும் இந்த மாபெரும் சந்திப்பில் கலந்துக் கொள்வதன் மூலம் நமது ஒற்றுமை உலகறியட்டும். 

சந்திப்புக்கான ஏற்பாடுகள்

ஒவ்வொன்றையும் மிக அருமையாக திட்டமிட்டு , வாரமொருமுறை கலந்தாலோசித்து, கட்டுக்கோப்புடன் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.  தனித்  தனி குழுவாக பிரித்து அவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்திருக்கிறார்கள் , யாருக்கெல்லாம் என்ன பொறுப்பு என்பதை இங்கே http://www.tamilbloggers.info/2013/07/blog-post_30.html சென்று பார்க்கலாம் ! 

விழா நடைபெறும் இடம்

சென்னை வடபழனியில் கமலா தியேட்டர் அருகில் உள்ள CINE MUSICIAN'S UNION' க்கு சொந்தமான கட்டிடம் .

இதுவரை தங்கள் பெயரை உறுதி செய்தவர்கள் தவிர மேலும் கலந்துக் கொள்ள விரும்புவர்கள் தொடர்பு கொள்ள

ரமணி ஐயா: svramanni08@gmail.com
அலைபேசி: 9344109558
திரு.தமிழ்வாசி பிரகாஷ் : thaiprakash1@gmail.com
அலைபேசி 9080780981

பதிவர்கள் தெரிவிக்க வேண்டிய விபரங்கள் 
வலைத்  தளம் பெயர், முகவரி (blog  name & blog url address)
தொடர்பு மின்னஞ்சல்  முகவரி
தொலைபேசி எண் 
ஊர் பெயர் 
முதல் நாள் வருகையா என்ற விபரம்

இந்த வருடம் பதிவர்களின் அறிமுகம் , கவிதை நூல் வெளிஈட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என்பதுடன் பதிவர்களின் தனிப்பட்ட திறமையை வெளிக்காட்டவும் ஒரு நிகழ்வு வைக்கலாம் என உள்ளார்கள்.
எழுத்தில்  தங்கள் திறமையை காட்டியவர்கள் பாட்டு, நடனம் , மிமிக்ரி, நடிப்பு , குழு நாடகம் இப்படி பல வற்றிலும் கலந்து, கலக்க இது ஒரு நல்ல வாய்ப்பு. இதில் ஆர்வம் உள்ளவர்கள், நூல் வெளியிட விருப்பம் உள்ளவர்கள் கவிஞர் மதுமதி அவர்களிடம்   மின்னஞ்சலில் தெரிவியுங்கள். (விரைவாக)
 kavimadhumathi@gmail.com 
அலைபேசி : 989124021

நிகழ்ச்சிநிரல்  பற்றிய குறிப்புகளுடன் கூடிய அழைப்பிதழ் விரைவில் வெளியிடப் பட இருக்கிறது. 

விழா குழுவினரிடம் ஒரு வேண்டுகோள் - 

இந்நிகழ்வை பத்திரிகை, தொலைகாட்சியிடம் ஏன் கொண்டுச் செல்லக் கூடாது. அங்கே வரும் பலரும்  பத்திரிகை , ஊடகத்துறையுடன் தொடர்பு உள்ளவர்கள் அல்லவா, அவர்களின் மூலமாக கொண்டுப்  போகலாமே...இதை விளம்பரம் என்று தயவுசெய்து எண்ணக்கூடாது. மறைமுகமாக அவர்களுக்கும் பதிவர்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்றபோது நம்மைப் பற்றி மக்களிடம் கொண்டு சேர்ப்பது அவர்களின் கடமை தானே ? இதற்கான முயற்சியை எடுக்கலாமே என்பதே எனது வேண்டுகோள்.    

அன்புள்ளம்  கொண்ட பதிவுலக நட்புகளே!

வருடம் ஒரு முறை நடப்பது என்பது சிறப்பு என்றாலும் மாதம் ஒரு முறையாவது பதிவர்களின் சிறு சிறு  சந்திப்பு நடைபெறவேண்டும். வெறும் சந்திப்பாக மட்டும் இல்லாமல், பதிவுலகை கட்டுக் கோப்புடன் கொண்டு செல்வதற்கும், நம்மில் யாருக்காவது எந்த உதவியாவது தேவை என்றால் அனைவரும் ஒன்றிணைந்து உதவுவதும் என்று இருந்தால் நன்றாக இருக்கும்.

மேலும் இந்த வருடம்,   

200 பேருக்குமேல் வருவதாக அறிகிறேன். இதற்கு  ஆகும் செலவு ஒரு லட்சத்தை தாண்டக் கூடும், செலவினை யாரெல்லாம் செய்ய இருக்கிறார்கள் என தெரியவில்லை, இருப்பினும் நமது பங்களிப்பு சிறிதாவது இருந்தால் நன்றாக இருக்கும்.  பணம் என்றாலே பிரச்சனை எழும், இருந்தும்  கடந்த வருட சந்திப்பு முடிந்ததும் வரவு செலவு கணக்கை தெளிவாக விரிவாக பதிவிட்டு இருந்தார்கள். நான் கூட நினைத்தேன், இவ்வளவு விரிவாக தெரிவிக்க வேண்டுமா என்று, ஆனால் இது அவசியமானது என்று விழா குழுவினர் இதற்காக சிரத்தை எடுத்து செய்ததை மனமார பாராட்டுகிறேன். 

மேலும் சென்ற  வருட விழா தொடர்பான வேறு வகை விமர்சனங்கள் அங்கே இங்கே என்று எழுந்தன. இருப்பினும் விழா அமைப்பினர் அத்தனைக்கும் பதில் தெரிவித்ததையும் நாம் அறிவோம். அது போன்றவை இந்த வருடமும் எழலாம் என்ற ஐயம் சிலருக்கு இருக்கலாம்.  ஒரு நாலு பேரை வைத்து சந்திப்பு நடத்துவதே  சிரமம் என்கிற போது நூறு பேருக்கு மேல் கூடும் ஒரு இடத்தில் சலசலப்புகள் வரும் , முடிந்த பின்னரும்  எதிர்வினைகள் எழத்தான் செய்யும்.  எதையும் நாம் பெரிதுப் படுத்தாமல் இருந்தாலே போதுமானது  யார் பிரபலம் யார் சீனியர் ஜூனியர் என்பதை விட பதிவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றில் சிறந்தவர்கள் தான் என்ற ஒரு எண்ணம் நமக்குள் இருந்தால் மட்டும் போதும், எந்த ஈகோ பிரச்னையும் எழாது.  

தவிரவும் பங்குப்  பெரும் அனைவரும், விழா அமைப்பினர் தான் எல்லாம் செய்யவேண்டும் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பதை விட இது நமக்கான விழா நாமும் இயன்றவரை சமமான/சரியான  ஒத்துழைப்பு, ஈடுபாடு  கொடுப்பது நல்லது. நிச்சயம் மிக சிறப்பான ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது. எனது உறவுகளிடம் இதை பகிர்ந்துக்  கொள்வது எனக்கு ஒரு நிறைவை கொடுக்கும் என்பதால் இதைச் சொல்கிறேன். 

யாரெல்லாம் வருவார்கள் என்னவெல்லாம் சுவாரசியங்கள்  நடக்கப் போகின்றது என்ற ஆவல், நாள் நெருங்க நெருங்க அதிகமாகிக் கொண்டேச் செல்கிறது.

சாதி, மத, இன,கொள்கை வேறுபாடுகள் இன்றி பதிவர்கள் என்ற ஒரே ஒரு  அடையாளத்தோடு மட்டும் நடக்க போகும் இதில் கலந்துகொண்டு தமிழ் பதிவுலகை பெருமைப்படுத்தபோகும் அத்தனை உறவுகளுக்கும் என் வாழ்த்துகள். அனைத்தும் குறைவின்றி நடைபெற்று முடிய எல்லாம் வல்ல தேவனிடம் என் பிரார்த்தனைகள் ! சந்திப்பை திருவிழாப் போல் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் நேச உறவுகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்...! விழா மிகச் சிறப்பான வெற்றி பெறட்டும்  ...! 

                               ஓங்குக தமிழ் பதிவுலக மக்களின் ஒற்றுமை !!

                                                        * * *

                                               வெல்க தமிழ் !!!

                                                        * * *

திங்கள், அக்டோபர் 8

பிரபஞ்ச காதலன் !



பதிவர்களைப்  பற்றி விமர்சனம் எழுதவேண்டும் என முடிவு செய்து முதல் பதிவராக உணவு உலகம் சங்கரலிங்கம் அவர்களைப்  பற்றி எழுதினேன். அதன் பின் தொடர்ந்து எழுதணும் , ஆனால் சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை. இரண்டாவதாக எழுதவேண்டும் என குறித்து வைத்திருந்த ஒருவரின் பதிவுகளில் இருந்து 'இந்த பதிவை பற்றி சொல்லலாம்' என சிலவற்றைக்  குறித்து எழுதி வைப்பேன், மறுநாளே அவர் வேறு ஒரு போஸ்ட் எழுதி விடுவார், அது இதை விட சிறப்பா இருக்கும்...ஏற்கனவே எழுதியதை டெலீட் பண்ணிட்டு புது போஸ்டை பற்றி எழுதி வைப்பேன், இப்படியே கடந்த பல மாதங்களாக மாத்தி மாத்தி எழுதி எழுதி ஒரு வழியாகி(?!) விட்டேன்...!!

இப்படியே நாட்கள் போய் கொண்டு இருந்ததே தவிர விமர்சனப்  பதிவு வெளியிடவே இல்லை, (இவரை பற்றி எழுதி விட்டு தான் மற்றவர்களை பற்றி எழுதணும்னு  முடிவு வேற பண்ணி வச்சிட்டேன்) பதிவரைப் பற்றிய விமர்சனம் தானே பதிவுகள் எதுக்கு, பதிவுகளை விட்டுடுவோம்னு இப்பதான் ஒரு புதுசா  ஞானோதயம் வந்து இதோ எழுதிட்டேன்...இனி படிக்கிற உங்க பாடு...!! என்னிடம் மாட்டிக்கொண்ட அந்த பதிவர் பாடு ?!

யார் அந்த பதிவர் ?

தமிழ்ல சுமாரா எழுதுற எனக்கு இவரது எழுத்துக்கள் ஒரு பெரிய தாக்கத்தை கொடுத்தது. பொதுவாக  அனைத்து புத்தகங்களும் விரும்பிப்  படிப்பேன் ஆனால் குறிப்பிட்ட எந்த எழுத்தாளரின்  எழுத்திற்கும் தீவிர வாசகி இல்லை. பதிவுலகம் வந்த புதிதில் பல தளங்கள் சுற்றி வந்த போது தற்செயலாக இவரது கவிதை ஒன்றைப்  படித்தேன்...என்னமோ ரொம்ப பிடிச்சது...அதிலிருந்து ஆன்லைன் வரும்போதெல்லாம் இவர் தளம் செல்வது வழக்கமாகிவிட்டது...நேரம் கிடைத்தால் படிக்க வரும் நான், பின்பு இவரது எழுத்தைப்  படிப்பதற்காக நேரத்தை ஒதுக்க தொடங்கினேன்...!

ஒரு தடவை படிக்க ஆரம்பிச்சா மறுபடி அங்க இருந்து வெளில வர்றது ரொம்ப சிரமம்னு லேட்டா புரிஞ்சது  :)

ஒவ்வொருவருக்கும் சுஜாதா,ஜெயகாந்தன், தி.ஜானகிராமன்,பாலகுமாரன்  மாதிரி எனக்கு இவர் !!

இவர்தான் அவர்...

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை அருகிலிருக்கும் குருக்கத்தி இவரது சொந்த ஊர் என்றாலும் இவர் பிறந்தது தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர், இவர் தற்போது வசிப்பது துபாயில்...வாரியர் என்ற பெயரில் எழுதிவரும் திரு.தேவா  இன்று வரை 475 பதிவுகள் எழுதியுள்ளார். தமிழின் மேல் தீராக்  காதல் கொண்ட இவரது எழுத்துக்கள்  ஒவ்வொன்றும்  செந்தமிழால் செதுக்கி சீர்திருத்த சிந்தனையால் வடித்த அற்புத படைப்புகள்...


பாலகுமாரனின் எழுத்துகள் பால் ஈர்க்கப்பட்டு அவரது தீவிர ரசிகராக இருப்பவர். இவரது எழுத்துக்களில் பாலகுமாரனின் தன்மை இருப்பது இயல்பு என்று  வெளிப்படையாக ஒத்துக்கொள்வார். தனது பதிவுகளுக்கு தேர்ந்தெடுக்கும் படங்கள் இவரது படைப்பை பிரதிபலிப்பதாக, ஆயிரம் அர்த்தங்கள் உள்ளடக்கியதாக இருப்பது ஆச்சர்யம்...!

வானத்தின் தூரங்களை
என் எண்ணங்களால் அளந்துவிடுவேன்
கற்பனையில் வரும் வார்த்தைகளுக்கு
அலங்காரம் செய்து கவிதைகள் என்பேன்
தனிமையில் இருந்து கொண்டே
உற்சாக ஊர்வலங்கள் செல்வேன்
கனவுகளில் எனக்கான காதலியின்
கைப் பிடித்து போகாத தூரங்கள் போய் வருவேன்

இறை என்ற விசயத்தை....என்னுள்ளே
தேக்கி வைத்து நான் ஏகாந்த புருஷனென்பேன்
புல்லோடு சர்ச்சைகள் செய்வேன்
புயலோடு காதல் செய்வேன்
கடலோடு காவியம் பேசுவேன்
மெல்ல நடக்கையில் 

சிறகு விரித்து பறந்தே போய்விடுவேன்...!

இப்படி தன்னைத் தானே கவிதையில் விமர்சிக்கிறார். உண்மையும் அதுதான் என்பதைப்  போல அவரது எழுத்துக்கள் இருக்கும். எழுதுவதை சுவாசமாக எண்ணுபவர். 

காதல் 

மரம், செடி, பூ, மழை, காற்று, நதி, நிலா, மொட்டை மாடி என்று எதன் மீதும் காதல் கொள்வார். காதலிப்பதுடன் நில்லாமல் கவிதைகளாக எழுதி தள்ளுவார்...படிக்கும் பலருக்கும் இவர் காதலை பெற்ற பெண் யாராக இருக்கும் என்ற ஆவல் ஏற்படுவது இயல்பு. ஆனால் அப்படி உருகி உருகி இவர் எழுத்தில் கொண்டு வந்திருப்பது ஒரு மலை, சிறு பூ, ஒரு வண்ணத்துபூச்சி, நதி இவை மீதான காதலாக கூட  இருக்கலாம். இயற்கையை இவர் அளவுக்கு நேசிக்க வேண்டுமென்றால் நாம் இவரது கண்ணால் காண வேண்டும், உணரவேண்டும்...!!  பிரபஞ்சக்  காதலன் இவர் !!

//உடலோடு சம்பந்தப்படாமல் நாம் நேசிக்கும் எல்லாமே காதல்தான்...உடல் வரும்போதுதான் அங்கே சுயநலங்கள் உயிர்த்துக் கொண்டு உண்மையை அழித்து விடுகின்றன.....//

காதல் மொழி பேசிக்கொண்டே மறுபக்கம்  'ஏனடா வீளுகிறாய் எழு' என்ற புரட்சி கொந்தளிக்கும் வரிகளை வீசி திணறடிப்பார்...!

ஈழம் 

தனி ஈழம் கிடைத்தே தீரும் என அழுத்தமாக பதிவு செய்வார். ஈழ மக்களுக்காக இவர் எழுதிய பதிவுகள், கவிதைகளைப்  படிக்கும் போது இமைகள் நனைவதை தவிர்க்க முடியாது. அந்த எழுச்சியை நம் மீதும் ஏற்றிவிடுவார். தமிழனாய் பிறந்ததை பெருமையாக எண்ணுகிறேன் என ஒவ்வொரு முறையும் சொல்லி ஆனந்தப்   பட்டுக்கொள்ளும் இவரது தமிழ் காதல் படிக்கும் நம்மையும் பெருமைக்  கொள்ளச் செய்யும்...

ஆன்மிகம்

சிவனின் ருத்ரதாண்டவம் இவரது எழுத்தில் !! ஆன்மீகத்தை பற்றிய இவர் எழுத்துக்களை வாசிக்கும் போது தேர்ந்த முதிர்ச்சி தெரியும்...சாமியாராக போய்விடுவாரோ என்று கூட தோன்றவைக்கும். ஆனால் இவரது தேடல்கள் தொலைந்துப்  போன ஒன்றை தேடுவதாக இல்லை...பிரபஞ்சத் தேடல் ! கடவுளைப் பற்றியதான   தேடல்,  இப்போது மனிதர்களின் தேடலாக மாறி இருக்கிறது ! இரண்டும் வேறல்ல என்பதைப்  போன்ற எழுத்தை நான் இதுக்கு மேல சொல்லக் கூடாது, அவை படித்து உணரக்கூடியவை !

ஆன்மிகம் தொடர்பான பதிவுகள் சாதாரணமாக எழுதியதை போல் அல்லாமல் ஆழ்ந்த தியானத்தில்  அமர்ந்தபின் எழுதியதை போல் இருக்கும், ஆழ்ந்து வாசித்தால் நாமும் தியான நிலைக்குள் ஆட்படுவது சத்தியம் ! இதை  அநேக தடவைகள் நான் உணர்ந்திருக்கிறேன்.

காமம் பற்றி குறிப்பிடும் வரிகளில் ஒரு நளினமும் நாகரீகமும் இருக்கும்...ஆன்மீகத்தையும்  காமத்தையும் இணைத்து இதோ ஒரு சில வரிகள்,

//பிரபஞ்ச சூட்சுமத்தின் இத்தியாதிகளை தன்னுள் நிறைத்து வைத்திருக்கும் காமமென்னும் கடலை நாம் கடந்த இடம்.

மோகத்தில் மேகங்கள் உரசி பெருமழை பெய்விப்பது போல தாகத்தில் நாம் உரசி...சாந்தியடைந்து தட்சிணாமூர்த்தி தத்துவத்தை கற்று தேர்ந்து கலவி செய்த இடம். இருந்ததனை இருந்ததுபோல இருந்து காட்டி வாய் பேசாமல் பிரபஞ்ச ரகசியத்தின் நிழல்தனை தொட்ட இடம்...!

நானற்று, நீயுமற்று வெறுமனே இருந்து மூல இருப்பினை உணரவைத்த காமத்தின் உச்சத்தில் கடவுளைக் கண்டோம் என்று மானசீகமாய் எழுதி கையெழுத்திட்ட ஒரு மடம்
.//

//விழிகளால் தீட்சைக் கொடுத்து காதலை எனக்குள் ஊற்றி, உள்ளுக்குள் அழுத்தமாய் இருந்த எல்லா ஆளுமைகளையும் அவள் உடைத்துப் போட சரணாகதியில் இறைவனின் பாதம் தேடும் பக்தனாய் நான் எனக்குள் கதறத் தொடங்கி இருந்தேன். காமம் உடல் வழியே உச்சம் தேடி அந்த உச்சத்தின் வழியே கடவுள் என்னும் சூட்சுமத்தை உணரும் ஒரு வழிமுறை... , //

இவரது எல்லா பதிவுகளையும் படித்தாலும், சிலவற்றுக்கு கமென்ட் எப்படி, என்ன  போடனு யோசிச்சிக்கிட்டே வெளில வந்துடுவேன். ஏதோ நாம ஒன்னை எழுத அது அந்த படைப்பையே திசைத்  திருப்பிக்  கெடுத்துவிடுமோனு  ஒரு பயம் தான் !! :)  என்னை மாதிரிதான் நிறைய பேர் இருக்காங்கனு நினைக்கிறேன் . :)
 

அவரது படைப்புகளில் சில அறிமுகங்கள்...

ரஜினியின் தீவிர ரசிகர். அவர் நடித்த படங்களை விட ரஜினி என்ற மனிதரின் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். பல பதிவுகள் இவரைப்  பற்றி எழுதி இருக்கிறார். அதில் ஒன்று  ரஜினி என்னும் வசீகரம் 

தனது 200 வது பதிவில் தந்தையைப்  பற்றி எழுதி இருப்பார், படித்தவர்கள் கண்கலங்காமல் வெளிவர இயலாது. உணர்வுப்  பூர்வமான உணர்ச்சி கலவை அப்பா 

காதலை ரசித்துக்  கொண்டாடுபவர்களுக்காக  சுவாசமே காதலாக  

கவிதைகள் அதிலும் காதல் கவிதைகளின் ரசிகரா நீங்கள், அப்படினா கண்டிப்பா இந்த காதல் கவிதைகள் படித்துப்  பாருங்கள். காதலை உணருவீர்கள், காதலிக்க தொடங்கிவிடுவீர்கள்

ஆன்மிகம் என்பது மதம் சம்பந்தப்பட்டதா இல்லையா என உங்களுக்குள் ஒரு கேள்வி இருந்தால் அவசியம் இங்கே கிளிக் செய்யுங்கள், படித்து முடித்ததும் பதிலும் கிடைக்கும் கூடவே ஒரு தெளிவும் பிறக்கும்.

ஆன்மிகம் எழுதியவர் இந்த கிராமத்தான் தானா என வியக்கவைக்கும்,
கிராமத்தாய்ங்க தான்  நாங்க 

கண்களை கலங்கவைத்து, மனதை கொந்தளிக்க வைக்கும் ஈழம் 

எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு வீரத்தமிழச்சி இந்த வெட்டுடையாள் 

லோக்கல் தமிழ், சென்னை தமிழ், அந்த தமிழ், இந்த தமிழ்னு பல விதமா எழுதுற திறமையை நிஜமா பாராட்டனும். அப்புறம் சீரியஸ், நக்கல், நையாண்டி, தெய்வீகம், அன்பு, பாசம், காதல், சிநேகம், வீரம்,செண்டிமெண்ட், கோபம், துக்கம், ஆதங்கம், ஆவேசம், ஏக்கம் அப்டி இப்டின்னு எல்லாம் உணர்ச்சியையும் கலந்துக்  கட்டி எழுதுற இவரது எழுத்தை இதுவரை படிக்கவில்லை என்றால் லைப்ல எதையோ மிஸ் பண்ணிட்டீங்கனு அர்த்தம் !

இன்னும் எழுதிக்கொண்டே போகலாம், ஆனால் முடிச்சாகனுமே என்ற ஒரு யோசனையிலும் எப்படி முடிக்க என்ற தர்மசங்கடத்திலும், ஒருவழியாக முடிக்கிறேன்.

அப்புறம் விமர்சனம் என்றால் நிறைகுறைகளை சொல்லணும். நிறை சொல்லிட்டேன், குறையும் சொல்லிடுறேன். (இங்க சொன்னா தான் உண்டு) :)

தேவா, 

* உங்களின் சில படைப்புகளின் பொருள் எல்லோராலும் புரிந்துக்கொள்ள முடியாதவை, கொஞ்சம் எளிய நடையில் இருந்தால்  புரிந்துக்கொள்ள முடியும். சாதாரண தமிழையே சிறிது ஆங்கிலம் கலந்து சொன்னால் தான் புரிகிறது. ஆன்மிகம் பற்றியவை செந்தமிழில் இருந்தால் போதுமானது, ஆனால் அன்றாட சம்பவங்களை பற்றி எழுதும் போது  எளிய முறையை கையாண்டால் நன்றாக இருக்கும். வேகமாக படித்து கடந்து செல்லும் மனநிலையில் தான் இங்கே பலரும் இருக்கிறார்கள், தவிரவும் மற்றவர்கள் படிக்கவேண்டும் என்று தானே இங்கே எழுதுகிறோம்.

ஒரு படைப்பாளியின் படைப்பு பலருக்கும் சென்று சேர்ந்தால் தான் அந்த படைப்பு முழுமை பெறும்.  நல்ல எழுத்துக்களை பலர் அறியாமல் போனால் மோசமான எழுத்துக்கள் தான் இங்கே பரவி நிரவி இருக்கும். நாளைய தலைமுறைகள் அத்தகைய எழுத்துக்களைப்  படித்துவிட்டு இதுதான் நம் முன்னோர்களின் நிலை என்று எண்ணிவிட கூடிய ஆபத்து இருக்கிறது. கம்பனையும் வள்ளுவனையும் பாரதியையும் இன்றைய தலைமுறையில் எத்தனை பேருக்கு தெரியும்...??! அந்த எழுத்துக்களை புரிந்துகொள்ளக் கூடிய அளவில் இல்லை இன்றைய நம் கல்விமுறை...!! புத்தகம் படிக்கும் வழக்கம் குறைந்துவிட்ட இந்நாளில் இணையம் ஒன்றே அவர்கள் முன் இருக்கிறது. இங்கே நல்ல எழுத்துக்கள் அதிகம் படிக்கப்படணும், படிக்க வைக்கப்படணும்.

* 'புரிதல் உள்ள ஒருவர், இருவர் என் எழுத்தை படித்தால் போதும்' என்று எண்ணாதீர்கள். எளிய தமிழில் அதிகம் எழுதுங்கள்.

பாரதி அவர் வாழ்ந்த காலத்தில் அவ்வளவாக கொண்டாடப்படவில்லை காரணம் அவர்களை விட்டு தனித்து தெரிந்தார்...!!சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட நீங்கள், சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை எழுதிவிட்டேன் என்பதுடன் நின்றுவிடக்கூடாது...!!

*  அப்புறம் ஒரு தொடர் பதிவை முடித்துவிட்டு அடுத்ததை தொடர்ந்தால் வாசகர்களுக்கு தொடர்ச்சி புரியும். (முன்னாடி என்ன படிச்சோம்னு மறந்து போய்  மீண்டும் தேடிப்  பிடித்து படிக்கிறேன்)

*  சிறந்த தளங்களின் பதிவுகளை படித்தால் அங்கே உங்களின் கருத்துகளை பதிய வைக்கலாம். பதிவுலகில் எழுதுவதை பலர் குறைத்து கொண்டிருக்கிறார்கள். உங்களது கருத்துக்கள் அவர்களை உத்வேகம், உற்சாகம் கொள்ள வைக்கலாம். இதற்காக உங்களின் நேரத்தில் கொஞ்சம் இதுக்கு  ஒதுக்கினால் என்ன ?! 

இணைய உறவுகளுக்கு ஒரு வேண்டுகோள் 

இணையத்தில் நல்லதும் கெட்டதுமாய் பல விசயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. நமக்கு நல்லது எது என தேடி எடுத்துக்கொள்வதை போல இவரை போன்றோரின் எழுத்துகளையும் தேடி எடுக்கவேண்டும்.

அங்கே சென்று பின்னூட்டம் இட வேண்டும் என சொல்லவில்லை ஆனால் அவசியம் படியுங்கள்...இது வேண்டுகோள் அல்ல விருப்பம்...நான் சுவைத்த நல்ல தமிழை, நல்ல பண்பை , நல்ல எழுத்தை நீங்களும் சுவைத்து பாருங்கள் !! மோசமான எழுத்துக்களும் மலிந்து கிடக்கும் இங்கே இவரை போன்றோரது எழுத்துக்களை நாம் கவனிக்கத்  தவறிவிடக்கூடாது.

படைப்பாளிகள் பலர் அவர்கள் வாழும் காலத்தில் கண்டுகொள்ளப்படாமல் போய்விட்ட துர்பாக்கிய நிலை நாம் அறிந்ததே...! அதே தவறை இவரை போன்றோருக்கும் நாம் செய்துவிட கூடாது...நம்மால் கண்டுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கபட்டால் மேலும் பலர் வெளி வருவார்கள்...நம்மால் நல்ல எழுத்தை படைக்க இயலாவிட்டாலும் படைப்பாளிகளை உற்சாகப்படுத்துவோம்...ஒரு சமூகம் நல்ல எழுத்தாளர்களாலேயே கட்டமைக்கப் படுகிறது.

பின் குறிப்பு 

இனி எப்படியாவது தொடர்ந்து எனக்கு தெரிந்த படைப்பாளிகளை பற்றி எழுதவேண்டும். மூணாவதாக  ஒருத்தரை எழுதனும்னு முடிவு பண்ணி இருக்கிறேன்...! அவர் ரொம்ப பிரபலமா தான் இருந்தாரு, இப்போ கொஞ்ச நாளா சிலருக்கு பிராபளமா தெரிய ஆரம்பிச்சு இருக்காரு...!! (நான் எழுதினதுக்கு அப்புறம் எனக்கும் பிராபளமா ஆகிடுவாரோ !?) முடிவு பண்ணியாச்சு பார்ப்போம். அப்புறம் இந்த தடவை சீக்கிரம் எழுதிடுவேன்னு நினைக்கிறேன் :-)




பிரியங்களுடன்
கௌசல்யா 

செவ்வாய், செப்டம்பர் 4

பதிவுலகத்தில் முகமூடி மனிதர்கள்...! உறவுகளை கொச்சைப்படுத்தாதிங்க...!


இரண்டு வருடங்களுக்கு மேலாக பதிவுலகம் மூலம் பெற்றவை நிறைய அனுபவங்கள், படிப்பினைகள், நட்புகள், சகோதர உறவுகள் பெயரில்  மனிதர்கள் ! ஆம் மனிதர்கள்...பல்வேறு விதமான முகங்கள் கொண்ட மனிதர்கள்...இணையத்துக்கு வெளியே இருக்கும் அதே மனிதர்கள் தானே இங்கேயும், இவர்களை படித்தவர்கள், பண்பட்டவர்கள் என்று எண்ணினால் அது நம்பியவர்களின் தவறு என்கிறது பதிவுலகம். அதிலும் சகோதர உறவு பாராட்டி பழகியவர்களின் நிஜ(?)முகம் பற்றி தெரியவரும் போது பெண்கள் அடையும் மனவேதனை மிக அதிகம்.

சகோதரி என்று அழைத்தால் மனதிலும் அவ்வாறுதான் எண்ணுவார்கள் என்பதற்கு மாறாக அதே பெண்ணை பற்றி தன் நண்பர்கள் மத்தியில் குறிப்பிட்டு கிண்டல் செய்து மகிழ்கிறார்கள் என்று தெரியவரும் போது 'உறவுகளின் உன்னதம்' தெரியாத உன்மத்தர்கள் என்று சொல்வது தான் சரி. இதை பற்றிய ஒரு ஆதங்கம் தான் இந்த பதிவு.

பதிவுலகத்தில் ஒருவரைவிட ஒருவர் பெரியவர் என்று காட்டிகொள்வதில் நடக்கும் ஈகோ யுத்தத்தில் சகோதர உறவுகளும் தப்புவதில்லை.  

அண்ணன் என்ன? தம்பி என்ன? 

பொதுவாக  நம்ம ஊர் வளர்ப்பு எப்படி என்றால் அண்ணனோட நண்பர்கள் வீட்டுக்கு வந்தால் அம்மா சொல்வாங்க 'அண்ணன்னு கூப்பிடு' நாமளும் அதையே பாலோ பண்ணுவோம் (ஒன்னு இரண்டு, அண்ணன் பிரண்டை லவ் பண்ணி செட்டில் ஆகிடுவாங்க...அது வேற விஷயம்!) :)

அண்ணன் தம்பியருடன் பிறந்த பெண்கள் பிற ஆண்களுடன் சகஜமாக பேசுவார்கள், தயங்க மாட்டார்கள்.  தன்னைவிட  மூத்தவர்களை அண்ணன் என்றும் இளையவர்களை பெயர் சொல்லியும் தம்பி என்றும் அழைப்பார்கள். கூட பிறந்தவர்கள் எல்லோரும் பெண்களாக இருந்தால் அவர்கள் அவ்வளவு சீக்கிரமாக வெளி ஆண்களுடன் பழக மாட்டார்கள் என நினைக்கிறேன்.

பதிவுலகம் பொருத்தவரை புதிதாக பேசக்கூடிய ஆண்களிடம் ஒரு பாதுகாப்புக்காக அண்ணன், சகோனு சொல்லிக்கிறோமா அல்லது எதுக்கு வம்பு இப்படியே கூப்டுவோம் என்றோ இருக்கலாம்...அவரவர் விருப்பம்.

என் சகோதரர்கள் 

'செல்வா ஸ்பீகிங்' செல்வா அண்ணனை முதல் அறிமுகத்தின் போது சார்னு கூப்ட்டு பேசிட்டு, கிளம்புற சமயம் 'சார்னு சொன்னா நல்லா இல்ல, உங்களை அண்ணன்னு சொல்லட்டுமா' என கேட்டேன்... அவரும் 'தன்னியனானேன் தங்க்ஸ்' என்று கூறிவிட்டார். அப்புறம் என்ன, ஒரு வருஷமா இரண்டு பேரும் பேசாம இருந்த நாட்கள் ரொம்ப குறைவு என்ற அளவுக்கு ஆகிபோச்சு. என்னை  உற்சாகபடுத்தி எனது சமூக சேவைகள் தொடர உறுதுணையாக இருக்கும் அருமையான அண்ணன் இவர்...! 

இன்னொருத்தர்  'உணவு உலகம்' சங்கரலிங்கம் அண்ணா  'என்கூட பிறந்தவங்க எல்லோரும் ஆண்கள் , அக்கா தங்கை கூட பிறக்கலைன்னு வருத்தம் நிறைய உண்டு அந்த குறை இனி இல்லை'னு சொல்லி உரிமையாக தங்கையாக்கி கொண்டவர். டிரஸ்ட் தொடங்க தைரியம் கொடுத்த அன்பான நல்ல மனிதர் !

அப்புறம் ஒருத்தரிடம் முதல் முறையா சாட்டில் பேச, உடனே அவர் உங்க போன் நம்பர் கொடுங்க, டைப் பண்ண பொறுமை இல்லன்னு சொல்ல, "அடடா என்ன இது, ஆரம்பமே இப்படி, மத்தவங்க சொல்ற மாதிரி ஆள் ஒரு மாதிரி தானோ" என யோசிச்சு 'சரி பார்த்துக்கலாம்'னு நம்பர் கொடுத்து பரஸ்பரம் அறிமுகம், பதிவுலகம் என்று பேச்சு போனது. அப்புறம் எப்போவாவது பேசி கொண்டதுண்டு. "என்கிட்டே பேசுறதா வெளில சொல்லாதிங்க, உங்களையும் ஒரு லிஸ்ட்ல சேர்த்துடுவாங்க" என்று சிரித்துக்கொண்டே ஒருநாள் சொன்னார். பதிவுலகத்துல ரொம்ப நல்ல பேர் தான் எடுத்திருக்கிறார் போலன்னு உள்ளுக்குள் ஒரு உதறல். பேர் சொல்லி பேசிக்கொள்வோமே தவிர நண்பர் என்றோ, சகோதரன் என்றோ சொல்லிகொண்டது இல்லை. ஒருநாள் போன் செய்து சொன்னார், "கௌசல்யா உங்களுக்கு மருமகள் பிறந்திருக்கிறாள்" 

உறவுகளை எப்படி கையாளணும் என்கிற பண்பு தெரிந்தவர். முக்கியமாக முகமூடி போட்டுக்கொள்ளாதவர். தன்னை குறித்து யாரும் எதுவும் சொல்லிக்கொண்டு போகட்டும், கவலை இல்லை. நான் நானாகத்தான் இருப்பேன் என்பவர். சகோதரன் என்ற முகமூடி அணிந்து உள்ளுக்குள் வக்கிர எண்ணம் கொண்டவர்கள் மத்தியில் இவர் வித்தியாசமாக தெரிந்தார்.

பதிவுலகின் மூலம் நிறைய தம்பிகள் இருக்கிறார்கள்...பசுமைவிடியல் சம்பந்தப்பட்ட விசயங்களில் அவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பதில் எனக்கு மகிழ்வுடன் ஒரு நிறைவு இருக்கு. பதிவுலகம் எனக்கு இதுபோன்ற நல்ல சகோதர உறவுகளை கொடுத்திருப்பதில் பெருமைபடுகிறேன்.

உறவுகளின் உன்னதம்

பொண்ணுங்க தங்களை டீஸ் பண்ற ஆண்களை திட்டும்போது 'அக்கா தங்கச்சி கூட பொறக்கலையா'னு கேட்பாங்க. அப்படி பிறந்திருந்தா சகோதர உறவின் அருமை தெரிந்திருக்கும், இப்படி இன்னொரு பெண்ணை டீஸ் பண்ண மாட்ட, அவளையும் உன் சகோதரியாக தான் நினைக்க தோணும் அப்டின்னு அர்த்தம் . (பெரும்பாலான வீடுகளில் ஒரு குழந்தை என்பதால்  இனி இப்படி திட்ட முடியாது போல...!?)

ஒரு  பெண் ஆணுடன் சகஜமாக பேசுகிறாள் என்பதால் அவளை பற்றி அடுத்தவரிடம் எப்படியும் பேசலாம் என்கிற உரிமையை யார் கொடுத்தார்கள்...?!

பேச்சுக்கு பேச்சு சகோ, அக்கா என்று அழைத்து பழகியவர்கள் தன் நண்பர்களிடம் பேசும் போது அந்த  பெண்ணை குறித்து விமர்சிப்பது எத்தகைய துரோக செயல் ! வெறும் உதட்டளவில் மட்டும் தானா உறவுகள் ??!  இவர்களை பற்றிய உண்மை தெரியும் போது அந்த பெண்ணின் மனநிலை ??! இப்படி பட்டவர்கள்  பெண்களை கேலி செய்யட்டும் தவறில்லை, அதற்காக சகோதர உறவு கொண்டாடாமல் சாதாரணமாக யாரோ எவரோ என்று பேசிவிட்டு போகலாம். 

இங்கே ஒரு நடிப்பு அங்கே ஒரு நடிப்பு என்று ஆளுக்கொரு வேடம் தரிக்கும் இவர்களை போன்றவர்கள் பிறரை மட்டுமல்ல தங்களையும் ஏமாற்றி கொள்கிறார்கள்...!!

சகோதரன்

சகோதர  அன்பு சாதாரணமானது அல்ல...அண்ணனை அப்பா ஸ்தானத்திலும் தம்பியை மகனாகவும் பாவிக்கிறவள் பெண். உடன் பிறந்தவர், அடுத்தவர் என்ற பேதம் சகோதர அன்பிற்கு கிடையாது. அண்ணன் என்றால் அண்ணன் தான் அதை தவிர்த்து வேறு எதையும் யோசிக்க மாட்டாள் ஒரு நல்ல பெண்...ஒரு குழந்தையாய் விசயங்களை பகிர்வதாகட்டும், சிக்கல்களை சொல்வதற்காகட்டும் முதலில் சகோதரனை தான் தேடுவாள்.

நட்புகளிடம் சொந்த விசயங்களை பகிர மிக யோசிப்பவள், தன்னை சகோதரி என்று அழைக்கும் ஆணிடம்  தயங்காமல் கூறிவிடுவாள். சகோதர பாசம் துரோகமிழைக்காது  என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை.

சகோதர அன்பு ஒருவர் செய்யும் தவறினை எளிதாக கண்டுபிடித்து ஒருவரை நல்வழி படுத்தவும் , சரியான பாதையில் வழிநடத்தி செல்லவும் உதவும். 

உலகின் உன்னத உறவு சுயநலமில்லாத உறவு, ஆதரவாய் தோள் கொடுக்கும் உறவு சகோதர உறவு. இந்த உறவு அமையபெற்றவர்கள் பாக்கியசாலிகள் என்றெல்லாம் சொல்வார்கள் ஆனால் இதே உறவை சிலர் தங்கள் விருப்பம் போல் கையாளுவது ஏனோ தெரியவில்லை.

கிடைத்த நல்ல உறவை தக்கவைத்துக்கொள்ள தவறிவிடுகிறார்கள். எதிர்பார்ப்பு எதுவும் இன்றி தன்னை நேசிக்கும் உன்னத உறவை  ஈகோ, பொறாமை, சுயநலம், தற்பெருமை போன்றவற்றுக்காக இழந்துவிடுகிறார்கள்.

சகோதரி ஸ்தானத்தில் வைத்து பேசிகொண்டிருக்கும் ஒரு பெண்ணை பலர் முன்னிலையில் நகைச்சுவை என்ற பெயரில் விமர்சித்து கேலி பொருளாக்குவது, பிற ஆண்களுடன் இணைத்து பேசுவது போன்றதை தன் உடன் பிறந்த சகோதரிக்கும் செய்வார்களா ?! நிச்சயம் செய்ய மாட்டார்கள். உடன்பிறப்பின் மானத்தை  மட்டும் தான் காப்பார்கள், பிற பெண்கள் எப்படி போனால் நமக்கென்ன, யாரோ தானே என்ற இளக்காரம் !! இப்படி பட்ட வக்கிர புத்தி இருக்கிற ஆண்கள் யாரையும் சகோதரி என்று அழைக்காமல் இருப்பது உத்தமம்.

ஆண் பெண் யாராக இருந்தாலும்...

பெண்களை மட்டம் தட்டி பேசணும், அதுவும் பொது இடத்தில் என்றால் போதும் சில ஆண்களுக்கு எங்கிருந்து வீரம்(?) வருகிறதோ தெரியவில்லை...பெண்களை குறைத்து பேசி தங்களுக்கான மதிப்பை உயர்த்தி கொள்கிறார்களாம். எப்படி புரியும் அந்த இடத்தில் தான் தங்களது மதிப்பு குறைய போகிறது என்று !!

வேடம் கலைந்தபின் அவர்களின் ஒவ்வொரு நாளும் நரகலின் மீது தான் என்பது மட்டும் உண்மை.

மனதில் சகோதரி என்று எண்ணாமல் வாயினால் அந்த வார்த்தையை உச்சரிக்க எப்படி முடிகிறது. யாரிடம் வேண்டுமானாலும் முகமூடி இட்டு நடியுங்கள். சகோதரனாய் எண்ணி பழகும் பெண்ணுக்கு எதிராக நடந்து சகோதர உறவை தயவுசெய்து கொச்சைபடுத்தாதீர்கள்.
                                                      
பதிவுலகம் என்று இல்லை வெளியிடங்களிலும், ஆண், பெண் எல்லோருக்கும் நிஜ முகம் வேறு என்பதை மனதின் ஒரு ஓரத்தில் வைத்தே பழக வேண்டிய நிலை தற்போது இருக்கிறது . வெளியில் தெரியும் முகம் தான் உண்மையானது என்று முழுமையாக நம்பி ஏதோ ஒரு சூழ்நிலையில் உண்மை தெரிந்து வேதனை படுவதை விட, எத்தகைய மனிதர்களிடத்தும் பழக நம்மை தயார் படுத்தி வைத்துகொள்வது நலம். 
                                                      
                                                         மனிதன் இங்கும் அங்கும் 
எதையோ தேடி
ஓடிக்கொண்டே இருக்கிறான்...
சத்தியமாக என்றோ 
தொலைத்த மனிதம் தேடி அல்ல !                    உத்தமர் வேடம் கன கச்சிதம்
கலையாத வரை... 
பேச்சிலும் புழு நெளிகிறது
கலைந்த பின்...!
                                                          
சக மனிதனை கீறிக் கிழிப்பது
பொழுதுப் போக்காம்...
நகைச்சுவை என்ற                                                சப்பைக்கட்டுகள் 
ஆறுதலாம்...!
                                                         
                                                           நம்பிக்கையுடன் பகிர்வதை
அடுத்தவருக்கு 
கடத்திவிடும்
நரம்பில்லா 
நம்பிக்கை துரோகி...!
பாழும் மனதினுள்ளே
பலவித வஞ்சகங்கள்..
பாழும் மனிதா
வாழும் வரை பொய்யன்
கொள்ளி இன்றி வெந்துச் சாவாய்
பிறரின் வயிற்றெரிச்சல் தீயில்...!
                                                   
உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசும் உறவுகளை
ஒவ்வொன்றாக
களைய முயன்றால்  
அனாதையாகிவிடுவேன் 
ஒருவருமின்றி...!

அதனால்  
கச்சிதமாக பொருந்தும்
முகமூடி ஒன்றைத் 
தேடி எடுத்து
பத்திரப்படுத்திக் கொண்டேன்
தேவைப்படுகிறது
இனி எனக்கும்...!?

 * * * * * * * * * * * * * * * * *



படம் -நன்றி கூகுள் 

திங்கள், ஆகஸ்ட் 6

முகநூலில் இப்படியும் நடக்கிறது...!? கேட்டால் கிடைக்கும் !!



முகநூல் பல நல்ல விசயங்களுக்கு பயன்பட்டு வருகிறது என்பது பலருக்கு தெரிந்திருக்கலாம், சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்...அப்படி தெரியாத நல்லவைகளில்  ஒன்றை பற்றியதே இந்த பதிவு.

முக நூலில் ரொம்ப இம்சை படுத்துவது ஒன்னு இருக்குதுனா அது குரூப் தான். நம்மை ஏதேதோ (நம்ம டேஸ்டுக்கு கொஞ்சமும் ஒத்துவராத)குரூப்புகளில் இணைத்து விட்டுடுவாங்க. அப்புறம் அங்க  யாராவது லேசா தும்மினாலும் நமக்கு நோட்டிபிகேசன் வந்து விழும்...இப்படி ஏகப்பட்டதுகள் சேர்ந்து அதுல நம்ம பிரண்ட்ஸ் கொடுத்த கமெண்ட்ஸ் பத்தி எங்க இருக்குனு கண்ணுல விளக்கெண்ணை ஊத்தி தேடனும்...என்னை(?) கேட்காம எதுலையும் சேர்க்காதிங்கனு அன்பா(!) மிரட்டியும் பார்த்தாச்சு...யாரும் கேட்கிறதா இல்ல...

இந்த மாதிரியான நிலையில (கற்போம்) பிரபு ஒருநாள் 'அக்கா இந்த குரூப்ல சேருங்க'னு ஒரு லிங்க் அனுப்பினான்...'என்னடா இது சோதனை' சரி தம்பி சொல்றானேன்னு போய் பார்த்தேன்...'கேட்டால் கிடைக்கும்' னு தலைப்பு இருந்துச்சு...ஆயிரக்கணக்குல மெம்பெர்ஸ் இருந்தாங்க...ஆன்லைன் ஷாப்பிங் போலனு  தோணிச்சு...என்னதான் பண்றாங்கன்னு கொஞ்சம் படிச்சு பார்த்தேன்...

அடடா...!! எவ்ளோ பெரிய விஷயத்தை அமைதியா பண்ணிட்டு வராங்க இதை போய் கிண்டல் பண்ணினோமே, என் தலைல இரண்டு தட்டு தட்டி ஜாயின் பட்டனை கிளிக் பண்ணினேன்...உடனே என்னை சேர்த்துக்கல...கேபிள் சார் பொறுமையா, யார் இது? என்ன ஏதுன்னு யோசிச்சு பார்த்து இரண்டுநாள் கழிச்சு சரி சரி சேர்த்துக்கிறோம்னு இணைத்துவிட்டார்...!!  

'கேட்டால் கிடைக்கும்' அப்படினா ??

தலைப்பே இது எதற்காக என்பதை நமக்கு சொல்லி விடுகிறது...கேட்காம இருந்தா எப்படி கிடைக்கும் என்பதும் இதில் அடங்கி இருக்கிறது...!!

தங்களை பற்றி சொல்லும் போது இப்படி சொல்கிறார்கள்...

"சமூகத்தில் நடக்கும் சிறு சிறு தவறுகளை, அநியாயங்களை, பிரச்னைகளை தட்டிக்கேட்டுப் பழகுவோம். அப்போதுதான் ஒரு நேர்மையான சமுதாயத்தை நம்மால் உருவாக்க முடியும்...!"

இந்த குழுமம் ஆரம்பித்து (31 july 2011) ஒரு வருடம் ஆகிறது...இதுவரை 1,495 உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்...தொடர்ந்து இணைந்து கொண்டிருக்கின்றனர்...திரு கேபிள்சங்கர் அவர்களும் திரு சுரேகா அவர்களும் இணைந்து இதை ஆரம்பித்து இருக்கிறார்கள்...திட்டமிடல் கூட்டம் ஒன்றும் வைக்கிறார்கள் அதில் உறுப்பினர்கள் கலந்து கொண்டு திட்டங்களை வரைமுறைப் படுத்திக்கலாம். வீதியில் இறங்கி உதவி செய்ய இவர்கள் சிறிதும் தயங்குவதில்லை என்பதை அங்கே பகிரப்படும் செய்திகளை வைத்து புரிந்து கொள்ளமுடியும்...

அரசு குழாய்ல தண்ணி வரலையா?, வாங்கின பொருளின் தரம் குறைவா  இருக்கா ? கேஸ் சிலிண்டர் கொண்டு வருபவர்கள் எக்ஸ்ட்ரா கேட்டு பிரச்னை பண்றாங்களா? அரசு துறையின் முக்கியமா போன் நம்பர் வேணுமா ?அவசரமாக யாருக்கேனும் ரத்தம் தேவையா ?இன்னும் நிறைய...  இப்படி பல பல சிக்கல்கள்/பிரச்சனைகள்  எதாக இருந்தாலும் இங்கே பகிரலாம்...ஒன்றை பகிர்ந்ததும் ஆளாளுக்கு ஓடி வந்து உதவுறாங்க...ஆலோசனை சொல்றாங்க...பிரமிப்பாக இருக்கிறது...!! 

உறுப்பினர்கள் பலரும் பல துறைகளை சார்ந்தவர்களாக இருப்பதால் அங்கே சொல்லப்பட்ட பிரசனைகளுக்கு வேண்டிய ஆலோசனைகளை உடனுக்கு உடன் அவர்களே தருகிறார்கள்...அதை தவிர வெளியே சென்று தீர்க்க பட வேண்டியவை திரு. சுரேகா அவர்களின் வழிகாட்டுதலின்படி தீர்க்கபடுகிறது...இருந்த இடத்திலேயே பிரச்சனை தீர்க்கப்படுவது புதுமை மட்டுமல்ல, இப்போதைய அவசியத்  தேவையும் கூட... அப்படி தீர்க்கப்பட்ட ஒரு விஷயம் தான் கீழே சொல்லப்பட்டிருப்பது...'கேட்டால் கிடைக்கும்' குழுவினரின் அதிரடி செயலுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு சாம்பிள் மட்டுமே !!

இத்தகைய சிறந்த ஒரு குழுமத்தை பற்றி என்னிடம் கூறி என்னை அதில் சேர சொன்ன  பிரபுவுக்கு என் நன்றிகள்.

திரு சுரேகா அவர்களின் தளத்தில் இருந்து அவர்களின் அனுமதியுடன் இங்கே அப்பதிவு வெளியிடபடுகிறது...படித்து பாருங்கள்...

'கேட்டால் கிடைக்கும்' குழுமத்தில் உறுப்பினராகுங்கள்...தகவல்களை பரிமாறுங்கள்...ஆலோசனை செய்யுங்கள்...பயன் பெறுங்கள்...

நல்லதொரு நாளைய சமுதாயத்தை இன்றே நாம் வடிவமைப்போம்...!!
                                                             
                                                ASK...YOU WILL GET IT !!

**************************************************************************
திரு சுரேகா அவர்களின் பதிவு
----------------------------------------------

கேட்டால் கிடைக்கும் – முகப்புத்தகத்தில் நானும் , நண்பர் கேபிள் சங்கரும் உருவாக்கிய ஒரு குழுமம். அதில் நிறைய பேர் உறுப்பினர்களாக ஆனார்கள். அவற்றில் ஒருவர் பாலாஜி ஸ்ரீராமன்.
கடந்த ஜூன் 29 அன்று.. கேட்டால் கிடைக்கும் குழுமத்தில் அவர் தன் பிரச்னையை கீழ்க்கண்டவாறு பகிர்ந்திருந்தார்.

Dear All,


I was unemployed for 5 months and despite the advice from my friends, I decided to join NIIT and now I'm suffering. I paid the money for the MCITP Course on 3rd of April and they did not schedule a single class until May 15. I decided to quit after asking for a class for multiple times and everytime I get the same response saying it'll be scheduled from next week (And it never was). So, I quit (saying that my brother is getting maried and I'll not be in Chennai - but the actual reason was I got a new job) and now I'm struggling to collect the refund money. I paid 26000+ and from 15th May, they say like the refund will be processed by the month end and initially they said I'll get the money by June 1st week. When I asked on June 1st week, they said June 15. Again, they said June 20 and When I called on June 20, they said the old employees were transferred and a new guy has taken care. He said that the refund has been processed and I'll get the money today (29th June). When I called today, they said the same story - month end process and you'll get that by July 4th or 6th (This time they're not even sure of the date!). I hardly belive that the money will be ready by July 4 or 6 - they'll have another excuse for that anyway. Can someone help me getting this process a little faster? I tried sending a feedback via the NIIT site, but after submitting the feedback, "The page cannot be displayed" Error comes up! My Student ID was: S130030500006. NIIT Adyar Center Number: 044-42116419.



NIIT யில் படிக்கச் சேர்ந்தபோதே முழுத்தொகையையும் கட்டிவிட்டார். ஆனால், அவர்கள் ஒரு வகுப்புகூட எடுக்கவில்லை. இப்படியே ஒன்றரை மாதம் ஓட்டிவிட்டார்கள். பின்னர் இவருக்கும் வேறு வேலை கிடைக்க, நான் படிக்க விரும்பவில்லை. நீங்களும் ஒரு வகுப்பும் எடுக்கவில்லை ஆகவே என் தொகை ரூபாய் 26,000த்தை திருப்பிக்கொடுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அவர்களும் நீண்ட ஆலோசனைக்குப்பின், புத்தகத்துக்கான தொகையாக ரூபாய் 6,000த்தைக் கழித்துக்கொண்டு மிச்சத்தைத் தருவதாகச் சொல்லி இழுத்தடித்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான் அவர் நம்மிடம் சொன்னார்.

நான் அவரை அங்கு செல்லச்சொல்லி, அவர்களிடம் முறையாகக் கேட்டுவிட்டு பின்னர் எனக்கு தொலைபேசச் சொன்னேன். பேசினார். பின்னர் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, NIIT ஆட்களிடம் பேசினேன். முதலில் ஒருவர்,

'எங்க பணம் ரிட்டர்ன் பாலிஸி படி… ப்ராஸஸ் நடந்துக்கிட்டிருக்கு சார்.. சீக்கிரம் வந்துரும். இன்னும் ஒரு வாரத்தில் கொடுத்துருவோம்' என்றார்.

நான் உடனே..

'ஓக்கே.. ஒரு வாரத்தில் கொடுத்துருங்க.. ஆனா. அவர் கட்டின முழுத்தொகையையும் கொடுங்க!' என்றேன்.

'இல்லை சார் அப்படி செய்யமுடியாது.. எங்க கம்பெனி ரூல்ஸ்படி.. ஒருத்தர் சேந்ததுக்கு அப்புறம் விலகினா, புக் அமௌண்ட்டை திருப்பித்தரமாட்டோம். அவருக்கு நாங்க புக் கொடுத்துட்டோமே…' என்றார்.

'நீங்க க்ளாஸே எடுக்காம அவருக்கு புக் கொடுத்திருக்கீங்க..! அதை அவர் பயன்படுத்தவே இல்லை. அதனால்..புக்கைத்திருப்பித்தரச்சொல்லிடுறேன். முழுத்தொகையையும் கொடுத்திடுங்க!' என்றேன்.

'அது எங்க ரூல்ஸ்படி செய்யமுடியாது சார்' என்று மீண்டும் சொன்னார்.

நான் ஆரம்பித்தேன்.

பாலாஜிக்குன்னு ஒரு ரூல்ஸ் இருக்கு... அதன்படி.. ஒரு இன்ஸ்ட்டிட்யூட்டில் காசு வாங்கிக்கிட்டு பாடமே நடத்தாம இருந்தா, அந்தக் காசை திருப்பி வாங்கிடுவார் தெரியுமா?' என்றேன்.

'என்ன சார் இப்படி பேசுறீங்க..? பாலாஜிக்கு என்ன தனி ரூல்ஸ்' என்றார். 

'அப்போ, என்ஐஐடி-க்கு மட்டும் என்ன தனி ரூல்ஸ்.... ஒரு சேவையை செய்யறதுக்குத்தான் காசு வாங்கணும். செய்யாத சேவைக்கு எதுக்கு உங்களுக்கு காசு? இப்படி எந்த விதத்திலும் நீங்க பணம் வாங்க நுகர்வோர் சட்டத்தில் இடமில்லை' என்று கொஞ்சம் காட்டமாகப் பேசினேன்.

'நான் எங்க சீனியர்கிட்ட கன்சல்ட் பண்ணிட்டு சொல்றேன் சார்' என்றார்.

பிறகு அடுத்த வாரத்தில் மீண்டும் பாலாஜி அங்கு சென்றார். இதோ அதோ என்றார்கள். மீண்டும் நான் அழைத்து 'இந்த வாரம் பணம் வராவிட்டால், எங்கள் குழுமத்திலிருக்கும் 1400 பேரில் குறைந்தது 50 பேராவது மொத்தமாக NIIT க்கு வருவோம்' என்றேன்.

நான்கு நாட்களில், பாலாஜி போன் செய்தார்.
‘சார்! நினைச்சே பாக்கலை..புக்கு காசையும் சேத்தே ஒரே செக்கா கொடுத்திட்டாங்க.. நானும் புக்கை திரும்பக்கொடுத்திட்டேன். நான் கொடுத்த மொத்தப்பணமும் திரும்ப வந்துடுச்சு! மிக்க நன்றி சார்! கேட்டால் கிடைக்கும் குழுமத்துக்கு நன்றி' என்றார்.

நாங்கள்தான் சொல்லிக்கொண்டே இருக்கிறோம்.

                          கேட்டால் கிடைக்கும்.!
************************************************************************
பின்குறிப்பு:

குழுமத்தை பற்றி எனது தளத்தில் பகிரவேண்டும் என்று விரும்பினேன்...அவர்களிடம் தெரியபடுத்தியதும் முழு மனதுடன் சம்மதம் தெரிவித்தார்கள்...

நன்றிகள் - திரு.சுரேகா & திரு.கேபிள்சங்கர்
http://www.surekaa.com/2012/07/blog-post_31.html 



படம் - கூகுள்