விழிப்புணர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விழிப்புணர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூலை 17

கண்ணகிக்கும் காமம் உண்டு


அன்பின் புதிய வாசகர்கள்  பேசாப் பொருளா காமம்   அறிமுகப்பதிவு , 2 ஆம் பாகம்    வாசித்தப் பிறகு இப்பதிவைத்  தொடருவது ஒரு புரிதலைக் கொடுக்கும். நன்றி.

* * * * *

ஆலோசனைக்காக என்னிடம் வந்த ஒரு நடுத்தர வயது பெண்மணி மிகுந்த தயக்கத்திற்கு பிறகு  உணர்ச்சிகளால் தனக்கு  ஏற்படும் அவஸ்தையை கண்கலங்க கூறத் தொடங்கினார்... இதுவரை யாரிடமும் இதை பற்றி  சொல்லாத அவர் எனது தாம்பத்தியம் பதிவுகளை படித்தப்  பிறகு என்னை நாடி இருக்கிறார் ... அவரது கண்ணீர்  தன்னை விட வயது குறைந்த பெண்ணிடம் இதை சொல்கிறோமோ என்பதால் இருக்கலாமே தவிர பிரச்சனைக்கானது அல்ல என்பது புரிந்தது.    வசதிக்கு குறைவில்லாத வீடு, இந்த மாத லாபத்தை இரட்டிப்பாக்க வேறு எதில் இன்வெஸ்ட் பண்ணலாம் என்ற சிந்தனையில் தூங்க வரும் கணவர். முதுகு காட்டி உறங்கும் கணவரை பார்த்தபடி தூங்க முயற்சி செய்யும் ஒவ்வொரு இரவும் தூக்கமின்றியே கழிந்திருக்கிறது. எண்ணத்தை வேறு பக்கம் திருப்பி கடவுள் பூஜை தியானம் எல்லாம் முயற்சித்தும் தோல்வியே. உணர்ச்சிகளின் அதி உந்துதலில் ஏற்படுகிற  'ஆத்திரத்தில் உடல் உறுப்புகளை அப்படியே பிச்சி எறிஞ்சிடலாம்னு வெறி வருது, எனக்கு மட்டும் ஏன் இப்படி, நான் சராசரி பெண் இல்லையா எனக்கு காமவெறி பிடிச்சிருக்கா' என கேட்டவர் இறுதியாக 'நானும் கண்ணகிதான் மேடம், இவரை தவிர வேறு யாரையும் மனதாலும் நினைச்சது இல்லை'  என்று முடித்து மௌனமானபோது பல பெண்களின் பிரதிநிதியாக தான் எனக்கு அவர் தோன்றினார்.

'எல்லோருக்கும் இது இயல்புதான்  நீங்க உடலளவில் மிக  ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் அவ்வளவுதான் பெரிதாக வேறு ஒன்றும் இல்லை'  என்று சமாதானம் செய்து சில முக்கிய உபாயங்களைச்  சொல்லி அனுப்பினேன்.
பணம் செல்வாக்கு அந்தஸ்து புகழ் எல்லாம் இருந்தும்/இல்லாமலும்  உணர்ச்சிகளோடு ஒவ்வொரு நாளும் மல்லுகட்டுகிறார்கள் பெண்கள். வெளியே சொல்ல வாய்ப்பில்லாததால் பிறருக்கு தெரிய வாய்ப்பில்லை. பெரும்பாலான கணவர்கள்  மனைவியின் தேவையறிந்து நடந்துக் கொள்வதில்லை.  உணர்ச்சி ஏற்பட்டாலும் கணவன் தப்பா எடுத்துப்பாரோ   என தனக்குள் வைத்து புழுங்கி கொள்கிறாள்... கண்ணகி இல்லை என்றாகிவிடுவோமோ என்ற பயம் மனைவிகளுக்கு ! தனது மனைவி கண்ணகி மாதிரி இருக்கவேண்டும் என்பது  ஆண்களின் வசதிக்காக ஏற்படுத்தப் பட்டது.

கண்ணகி ஒரு டிஸைன்! பத்தினி  ஒரு பிராண்ட் !!  

சிறு வயதில் காலில் கட்டப்பட்ட  சிறிய  சங்கிலியை வளர்ந்த  பின்னும்  உடைக்கத்    தெரியாத கோவில் யானையின்  நிலைக்கு சற்றும் குறைந்தது இல்லை பெண்களின் நிலை. பிறந்தது  முதல் 'நீ இப்படி நடக்கணும்' என்ற சமூக சங்கலியால் கட்டி பயிற்றுவிக்கப்பட்ட  பெண்ணால் வளர்ந்து பின்னும் தன்னால் இச்சங்கிலியை உடைத்து வெளியேற இயலாது என்றே இருந்துவிடுகிறாள். அதிலும் குறிப்பாக தனது உடலுக்குள் நிகழும்/எழும்   உணர்வுகளையும் அலட்சியப் படுத்தி அடக்கிவிடுகிறாள்...அதன் கொடிய விளைவுகளை அவளும் அறிவதில்லை  சமூகமும் கண்டுக் கொள்வதில்லை... பிறன்மனை செய்திகள் வெளிவந்ததும் குய்யோ முறையோ என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறது...இந்த சமூகத்தால் அதிகபட்சம் இதை மட்டும்தான் செய்யமுடியும்...தீர்வுகளைத்  தேடத் தெரியாத முட்டாள் சமூகம் இது !

உணர்ச்சிகளுடன் போராடிப் போராடி தோற்று தனக்குள்ளேயே சுருண்டு  கணவனிடம் கூட தெரிவிக்க தைரியமற்று ஏதோ பெயருக்கு வாழ்ந்து ஒருநாள் செத்தேப்  போகிறாள். தைரியம் உள்ள பெண்களும் கண்ணகி கான்செப்ட்டுக்கு பிரச்சனையாகி விடும் என்று 'மறைவில் நடத்தி' பத்தினி பிராண்ட்டை காத்துக் கொள்கிறார்கள்.  தங்களுக்கு பிடித்த மாதிரி வாழும்  பெண்கள் மிக மிக சந்தோசமாக வாழ்கிறார்கள், மாறாக வாழ்வதைப்  போலவே  நடிக்கிறார்கள் கண்ணகிகள் !

ஒரிஜினல் கண்ணகி கதையில் திருமணம் முடிந்த சில நாட்களில் தாம்பத்தியம் என்றால் என்னவென்று முழுமையாக அறிவதற்குள் உணர்வுகளைத்  தூண்டிவிட்டவன் பிரிந்துச்  சென்றுவிடுகிறான். அதன் பிறகான ஒவ்வொரு இரவையும் இன்னதென்று தெரியாத உணர்ச்சிக்  குவியலுக்குள் புதையுண்டு விடியலில் உள்ளுக்குள் கனன்ற நெருப்பை நீரூற்றி அணைத்திருக்கக் கூடும்.  கணவன் வேறோருவளிடம் இருக்கிறான் அவளிடம் இன்பம் துய்க்கிறான்  என்பதும்  உணர்வுகளை அதிகப்படுத்தி இருக்கலாம், (இருந்தும் அத்தனையையும் உள்ளுக்குள் மறைத்து பிறந்தவீடு போதித்தவைகளை அடிப்பிறலாமல் நிறைவேற்றி இருக்கிறாள்)  ஒருநாள் திரும்பி வந்தவனைக்  கண்டு குதூகலித்த அவளது உணர்வுகளின் ஆர்ப்பரிப்பு,  அடுத்ததாக  கோவலன் மாண்டதும் இனி வரவே வழியில்லை என்றானப் பின் ஒட்டுமொத்த உடலியக்கமும் ஸ்தம்பித்து வெறுப்பை உமிழ அது கட்டுக்கடங்காத பெரும் நெருப்பாக மாறி இருக்கலாம்... ஆம் மதுரையை எரித்தது கண்ணகியின் காமமாகக்  கூட இருக்கலாம்,   ஆனால் கற்பு என்று சொன்னால் தானே  கண்ணகி தெய்வம் ஆவாள்.  ஆணாதிக்கச்  சமூகம் தனது  வசதிக்காக சிலப்பதிகாரம் எழுத  நமது சமூகம்  'புனிதம்' என்ற போர்வையை போர்த்திக் கொண்டது.   கோவலன் ஒருவனை மட்டுமே தனக்கானவனாக வரித்து காமத்தை தனக்குள் எரித்து அவன் நினைவாக மட்டுமே வாழ்ந்து மறைந்த தாசிக்குலத்தில் பிறந்த மாதவியை பத்தினி லிஸ்டில் சேர்க்க ஏனோ நம்மால் முடியவில்லை!?

கண்ணகி விசயத்தில்  இப்படியும் நடந்திருக்கலாம், மாதவியிடம் சென்று திரும்பிய கோவலனை ஏற்றுக் கொண்டதால் தான் கண்ணகி பத்தினியானாள், கண்ணகி பத்தினியாக வேண்டும் என்றால் மாதவி என்றொருவள் தேவை,  ஆண் செய்யும் துரோகத்தை மனைவி என்பவள் ஏற்றுக்  கொண்டாக வேண்டும் என்பதை பெண்களின் மனதில் பதிய வைக்க கிடைத்தவள் தான் இந்த கண்ணகி. நடக்கவே முடியவில்லை என்றாலும் கூடையில் சுமந்துச்  சென்று தாசி வீட்டில் விட்டால் தான் அவள் பத்தினி.  பெண்ணை தெய்வமாக்கி மூலையில் உட்கார வைப்பதன் பின்னணியில் இருப்பது ஆணின் பெருந்தன்மை அல்ல  ஆதி பயம்.

எல்லா காலத்திலும் கண்ணகிகள் இருக்கிறார்கள் , என்னவொன்று அவர்கள் மதுரைக்கு மாற்றாக தன்னையே எரித்துக் கொண்டிருக்கிறார்கள். சமயங்களில் உடன் இருப்பவர்களையும் சேர்த்து எரித்து விடுகிறார்கள்... ஏற்படும் அத்தனை சமூக அவலங்களுக்கும் இது மறைமுகக் காரணமாகிறது. குழந்தை வளர்ப்பில் இருந்து அவளது பொறுப்பில் இருக்கும் அத்தனையிலும் குளறுப்படிகள் ஏற்படுகின்றன. ஆரோக்கியம் குறைந்த வீடுகள் ஒட்டுமொத்த சமூகத்தையும் நோயாளியாக்கி விடுகிறது.

கற்பு என்ற ஒன்று இருக்கிறது என்றும் அதற்கு 'நெறி' வகுத்தவர்கள்  கண்டிப்பாக பெண்ணுடன் அன்னியோனியமாக சரிக்கு சமமான உரிமையை பகிர்ந்து வாழ்ந்தவர்களாக இருக்க முடியாது. கண்ணகி  வெளியே சென்று, திரும்பி வந்தால் ஏற்றுக் கொள்ளக் கூடிய கோவலன்கள் இருந்தால் அதுவே சம  தர்ம சமூகம் !

பெண்களின் காமம் பேசப்படுவதே இல்லை ஆண்களின் காமம் 'அவன் ஆம்பள அப்படித்தான்' என்பதில் மறைந்துவிடும். ஆனால் பெண்களின் காமம் வலுக்கட்டாயமாக ஆணுக்குள் அடக்கிவைக்கப் படுகிறது. அவனை மீறி வெளிப்படக் கூடாது அப்படி வெளிப்பட்டால் அது காம வெறி, அவளுக்கு பெயர் வேசி. நடுஇரவில் 'இப்படித்   திரும்பு' என்று கணவன் சொல்வதைப்  போல மனைவி சொல்ல முடியாது. காமத்தை மறைக்கத் தெரிந்தவள் மட்டுமே பத்தினி.   'அவனுக்கு தேவை என்றால் படு' என்பதே காலக்காலமாக பெண்ணின் மனதில் பதிய வைக்கப் பட்டிருக்கிறது. இதில் இருந்து வெளிவர பெண்ணும் விரும்புவதில்லை. சில பெண்கள் மட்டும் ஆணுக்கு கட்டுப்பட்டவள் இல்லை நான் சுதந்திரமானவள் என பிரகடனப்படுத்தி பெண்ணியவாதியாகிறார்கள். வெகுசீக்கிரத்தில் அவர்களும் பெண்ணுக்கு வியாதியாகி விடுகிறார்கள் !!??

குழந்தை வளர்ப்பிலும் வீட்டுப் பராமரிப்பிலும் பெண்களின் காமம் கரைந்துவிடுவதாக எண்ணும் ஆண்களும் ஏன் பெண்களுமே  மாறவேண்டும். ஆண் பெண் இருவருமே தனது தேவை எது என உணர்த்த வேண்டும் பரஸ்பர தேவைகளை வெளிப்படுத்தி திருப்தி அடைவதுதான் ஒரு நல்ல தாம்பத்தியம். சந்தோசமான தம்பதிகளிடம் வளரும் குழந்தைகளால் தான் நல்ல வீடும் நல்ல சமூகமும் உண்டாகும். 

அடக்கி வைக்கப்பட்ட பெண்ணின்  உணர்ச்சிகள்  கண்டிப்பாக ஒரு கட்டத்தில் வெளிப் பட்டேத் தீரும் ஆனால் அது எதிர்கொள்ளவே முடியாத உக்கிர கோபம் வெறுப்பு எரிச்சல் கலந்த  கடுஞ்சொற்களாக/வாதங்களாக  இருக்கும்.  எப்போதும் அமைதியாக இருப்பவள் ஏன் இன்று இவ்வாறு  நடக்கிறாள் என்ற குழப்பத்தில் ஆண் அதிர்ந்துப்  போவான், கூடவே அந்த பெண்ணுக்கும் தான் ஏன் இப்படி நடக்கிறோம் என்பது தெரியாதது தான் உச்சபட்ச பரிதாபம்.  விவாகரத்து கள்ளக்காதல் முதல் மாமியார் மருமகள் பிரச்சனைகள் வரை ஏதோ ஒரு வடிவத்தில் அங்கே பெண்களின் காமம் மறைந்திருக்கிறது. மனைவியை புரிந்து மதித்து உணர்வுகளை  திருப்திப்படுத்தும் ஆண்  இருக்கும் வீட்டில் அதே ஆண் சகல சந்தோசங்களையும் அனுபவிக்கிறான். அவன் வெளி விடும் ஒவ்வொரு மூச்சும் சந்தோஷத் தூறலாய் மழையாய் அந்த வீட்டை மூழ்கடிக்கும்.

மனைவிக்கும்  நடு இரவில் விழிப்பு ஏற்படும் என்பதைப்  புரிந்து உணர்ந்து நடக்கும் கணவன் இருக்கும் வீட்டில்தான்  நல்லவை மட்டுமே நடக்கும்!!!


                                                                              * * * * *

ஆண்கள் நெருங்கினால் விலகும்/வெறுக்கும்  பெண்களை குறித்தும் பேசியாக வேண்டுமே !

தொடர்ந்துப்  பேசுகிறேன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா.

திங்கள், டிசம்பர் 8

குடும்பப் பெண்களையும் விட்டு வைக்காத அபாயகரமான ஒரு போதைப் பழக்கம்

ஒரு குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு நபருக்குமே  விதவிதமான தனிப்பட்ட பிரச்சனைகள் சிக்கல்கள் இருக்கின்றன. மூன்று பேரே வசிக்கும் சிறிய குடும்பமாக இருந்தாலுமே ஒருவரின் மன சிக்கல் மற்றொருவருக்கு தெரியாத அளவிற்கே இன்றைய சூழல் இருக்கிறது.. எந்த வயதினராக இருந்தாலும் கண்டுக்கொள்ளப் படாமல்  தனித்து விடப்படும் ஆணோ பெண்ணோ, தவறான வழியை நோக்கி எளிதாக ஈர்க்கப்பட்டு விடுகின்றனர். ஒரு முறை தவறியவர்கள் மீண்டெழுவது கடினம். சம்பந்தப்பட்ட நபர் தவறான பழக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பதே அவரின் வீட்டினருக்கு தெரிவதில்லை, நிலைமை முற்றியபின் ஐயோ இப்படி ஆகிபோச்சே என்று அரற்றுவதில் பயனென்ன?!!

குடும்ப உறுப்பினரின் நடவடிக்கையில் சிறு மாற்றம் தெரிந்தாலும் உடனே எச்சரிக்கை ஆவது எத்தகைய அவசியம் என்பதை ஒரு பெண்ணின் பரிதாப வாழ்க்கை எனக்கு புரியவைத்துவிட்டது. மாணவர்கள் மட்டுமல்ல குடும்பப் பெண்களிடமும் தாராளமாக இப்பழக்கம் இருக்கிறது என்பதும் அதனால் அவர்களின் குழந்தைகள் படும் துன்பங்கள் மிக கொடுமை என்பதையும் நேரில் கண்டு  அதிர்ந்தேன். அதை பிறருக்கு தெரிவித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த கட்டுரை.

அபாயகரமான ஒரு போதைப் பழக்கம் / inhalant addiction ..


சிறுப் பிரச்சனைகளில் இருந்து வெளிவருவதாக எண்ணிக் கொண்டு போதையில் விழுந்து தீரா துன்பத்திற்கு ஆளாகி விடுகிறார்கள்.   

விலை மலிவு, எளிதாக கிடைக்கக் கூடிய ஒரு போதைப் பொருள் தான்  Whitener அல்லது correction fluid எனப்படும் வெண்ணிற திரவம்

சில துளிகளை கர்ச்சீபில் தெளித்து பின் அதை முகர்ந்து பார்ப்பதன் மூலமும் பாட்டிலை திறந்து ஆழ்ந்து உள்ளிளுப்பதன் மூலமும் போதை ஏற்படுகிறது. எல்லா டிபார்ட்மென்ட் ஸ்டோரிலும் எளிதாக கிடைக்கக் கூடியது. சிறு குழந்தைகள் சென்றும் வாங்கலாம், ஒரு சில கடைக்காரருக்கே இது ஒரு போதை பொருள் என தெரிய வாய்ப்பில்லை. தவிரவும் பான் மசாலா, பெட்டிக் கடைகளிலும் தெரிந்தே இப்பொருள் விற்கப் படுகிறது.  

பொதுவாக தட்டச்சு எந்திரங்கள் பயன்பாட்டில் ள்ள அலுவலகங்கள் மற்றும் வேறு இடங்களிலும் வலம் வந்தது இந்த வெண்ணிற திரவம். கம்பியுட்டர், பிரிண்டர், ஸ்கேனர் என்று மாறிய பின் இந்த fluid whitener பயன்பாடு  பள்ளி மாணவர்களிடையே அறிமுகமாகியது. தவறான எழுத்துக்களை அழிக்க  இந்த திரவத்தை நோட்டு புத்தகத்தில் தடவ அப்போது அதில் இருந்து வரும் வாசனை  மீண்டும் மீண்டும் அதையே நுகர  தூண்டியுள்ளது. அப்படித்தான்  ஆரம்பித்தது இந்த  போதை பழக்கம்..

அந்த பெண்ணிற்கு திருமணம் முடிந்து இரு குழந்தைகள் பிறந்த பிறகும் இப்பழக்கத்தை விடாமல் அதிகமாக நுகரத் தொடங்கினார். அதற்கு வசதியாக  சூழ்நிலைகளும் அமைந்தன. கணவர் இந்த பழக்கத்தை கண்டுப்பிடித்து கண்டிக்க ஆரம்பித்தார். சிறிது காலம் மறந்ததை போல இருந்துவிட்டு கணவர் வெளிநாடு சென்றதும் மீண்டும் ஆரம்பித்தாள். பாட்டில்களாக வாங்கி குவித்து இதுவரைக்கும் ஒரு லட்சத்திற்கும் மேல் செலவு செய்திருக்கிறாள் என்று அவளது தாய் சொன்னபோது என்னால் நம்பவே முடியவில்லை. குழந்தைகள் இருவரும் பாட்டி, தாத்தா வீட்டில் வளர்ந்து வருகிறார்கள். போதை மயக்கத்தில் இருக்கும்போது அருகில் வரும் குழந்தைகளை அடிப்பதும், கண்டபடி திட்டுவது, பொருட்களை அவர்கள் மீது வீசி எறிவதுமாக இருந்திருக்கிறாள், பயந்து போன இவளது தாய் பேரக்குழந்தைகளை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டார்கள்.

வசதிக்கு குறைவில்லாத வீடு, வேலைக்கு ஆட்கள், தனிமை எல்லாம் வாய்ப்பாக அமைய ஒரு நாளைக்கு நாலு, ஐந்து பாட்டில்கள் என காலியாயின. இவளது நடவடிக்கை மோசமாக செல்வதை புரிந்துக் கொண்ட கணவன் மாமியார் வீட்டிற்கு சென்று குழந்தைகளை மட்டும் பார்த்து விட்டு வெளிநாடு போய்விடுவானாம். ஆரம்பத்தில் இதில் என்ன இருக்கிறது என்ற இந்த பெண்ணின் ஆர்வம் இப்போது ஒரு மன நோயாளியாக்கி விட்டது. கணவனை, குழந்தைகளை பிரிந்தாள், ஆனால் தன்னால் தனது குடும்பமும் சிதறி போனது பிள்ளைகள் தவிப்பது என இவை  எதை பற்றியும் கவலையின்றி தனக்குள் சிரிக்கிறாள், பேசுகிறாள்...பேசிக்கொண்டே இருக்கிறாள் !!?

இவள் மட்டுமல்ல இவளை போல பலர் இன்று இந்த பழக்கத்திற்கு அடிமையாகி மீள முடியாமல் கிடக்கிறார்கள். நம் நாட்டில் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் மட்டும் இதற்கு அடிமையானோரின் எண்ணிக்கை 8000 சிறார்கள் என்கிறது ஒரு சர்வே. ஒவ்வொரு மாதமும் 30 சிறார்கள் போதை பொருள் மறுவாழ்வு மையத்திற்கு சிகிச்சைக்கென வருகிறார்கள். குடிசைப்பகுதி மற்றும் இளம் குற்றவாளிகள் மத்தியில் இப்பழக்கம் மிக வேகமாக பரவி வருகிறது.   

ஒரு 15ml bottle ரூபாய் 30/- க்கு கிடைக்கிறது. Whitener மட்டுமல்ல, நெயில் பாலிஷ் ரிமூவர் , ஷூ பாலிஷ் திரவம், பெயின்ட் தின்னர்  போன்றவற்றையும் முகர்ந்து மயக்க நிலைக்கு செல்கிறார்கள். இந்த பொருட்களில் உள்ள ரசாயனம் முகர்ந்த உடன் நேரடியாக மூளையை சென்றடைகிறது. இத்தகைய உடனடி போதை பல குற்றங்களை செய்யத் தூண்டுகிறது. காசு கேட்டு கொடுக்காத தந்தையை கத்தியால் குத்தியுள்ளான் சிறுவன் ஒருவன், காரணம் இந்த Whitener போதை. பல குற்றச்  சம்பவங்களின் பின்னணியில் இந்த Whitener பங்கு வகிக்கிறது.

தற்போதைய ஆய்வுகளின் படி மத்திய நடுத்தர குடும்பத்து பிள்ளைகளே இப் பழக்கத்திற்கு அதிகளவில் அடிமையாகின்றனர். ஆர்வகோளாரில் ஆரம்பிக்கும் பழக்கம் வாழ்க்கையின் அஸ்திபாரத்தையே ஆட்டம் காணச் செய்து விடுகிறது.

கேரள மாநில காவல்துறை நீதிமன்றத்தில் சமர்பித்த ஒரு அறிக்கையில் சொல்கிறது இந்த whitner முகர்தல் பழக்கம் நாளடைவில் குடிபழக்கத்திற்கு அடிமையாக்கிவிடும் என்று.


13முதல் 17 வயது மாணவர்கள் மத்தியில் இந்த Inhalant போதை பழக்கம் தடுக்க இயலாதபடி வேகமாக பரவிவருவதால் இதற்கெதிராக ஒரு பெட்டிஷன் நார்கொடிக்ஸ் மையத்தில் அளிக்கப்பட்டு உள்ளதாம் .இதைப்பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்குகள் மக்கள் மத்தியில் பரவ வேண்டும் .

பதின்ம வயது எதையாவது செய்து தனித் தன்மையை நிலைநாட்ட வைக்க முற்படும் வயது. அந்த வயதில் புதிய அனுபவங்களை மனம் நாடும். எல்லைகளையும் தடைகளையும் உடைக்க சொல்லும் பருவம். அதை கவனமுடன் கையாள வேண்டும். குறிப்பாக பெற்றோர் பிள்ளைகள் மத்தியில் அன்பாகவும், அனுசரணையுடனும்  நடந்துக் கொள்ளவேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதை உற்று கவனிக்க வேண்டும். இந்த Inhalant போதை பழக்க விஷயத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் தெருவோர பிள்ளைகள் இருவரும் அடிமையாகி உள்ளனர்

இதன் தீமைகள்

* இந்த வெண்ணிற விஷம் எழுத்துப் பிழைகளை  மட்டும் அழிப்பதில்லை !மனித மூளையின் ஞாபக சக்தியையும் அழிக்க வல்லது .

* மனநிலை பாதிப்பு ஏற்படும்.  இதயம், நுரையீரல்,மூளை,கிட்னி, ஈரல் போன்றவை பாதிக்கப்படும்.

* இந்த காரத் தன்மையுள்ள டொலூவீன்  மற்றும் trichloroethane,  நுகர்வுக்கு பின் எட்டு மணி நேரத்துக்கு போதைத் தன்மை உண்டாகும். இதிலுள்ள ஹைட்ரோ கார்பன்கள் இரத்தத்தில் உடனடியாக கலந்து மத்திய நரம்பு மண்டலத்தை அடைகின்றன. 

தனக்குள்ளே சிரிக்கும் செயல் ஒரு வித ஹாலுசினேஷன் நிலை, அதாவது  தன்னிலை மறப்பது . இந்த போதை பழக்கத்தின் விளைவுகளில் இதுவும் ஒன்று .

* தூக்கமின்மை, பேச்சு குளறுதல், தடுமாற்றம், ஞாபக மறதி ,மங்கலான பார்வை, தலைவலி, சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பது, முன்னுக்கு பின் முரணாக நடப்பது.

* இதய துடிப்பு சீராக இல்லாதவர்களுக்கு உடனடி மரணம் ஏற்பட அதிக வாய்பிருக்கிறது.

* தற்கொலை செய்துக் கொள்பவர்களில் 40 சதவீதத்தினர் இப்பழக்கம் மேற் கொண்டவர்கள் ஆவர். காரணம் தெரியாத பல தற்கொலைக்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்.

எவ்வாறு கண்டுபிடிக்கலாம்

அவர்களின் கர்ச்சீப்பில் வெண்ணிற/வேறு நிற கரை இருக்கிறதா, வாசனை வருகிறதா என கவனிக்கலாம். 

பிள்ளைகளின் ஆடைகளில் எண்ணெய், பெயிண்ட் கரை இருப்பதன் மூலமாக, வாய் பகுதியை சுற்றி புள்ளிகள் கொப்பளங்கள் ஏற்பட்டிருந்தால்,  கடுமையான ஜலதோஷம் மற்றும் சுவாசத்தில் கெமிக்கல் வாசனை தெரிவதன் மூலமாகவும் கண்டு உணரலாம்.
இதற்கென்று எந்த ஒரு தனிப்பட்ட மருத்துவமும் இல்லை என்பது இதன் சோகம்.


ஒருவர் தவறான பழக்கத்தில் ஈடுபட காரணம் எதுவாக இருந்தாலும் வீட்டினரின் அன்பும் அக்கறையும் கவனிப்பும் இருந்தால் மட்டும்தான் சரி செய்யமுடியும். உங்கள் குழந்தை இப்பழக்கத்திற்கு ஆளாகி இருப்பது தெரியவந்தால் முதலில் அவசரப்படாமல் உங்கள் குழந்தையை அமைதியாக அணுகுங்கள். ஆத்திரப்பட்டு வார்த்தைகளை கொட்டுவதோ, அடிப்பதோ கூடவே கூடாது. அவ்வாறு நடந்துக் கொண்டால் அவர்களின் இதயத் துடிப்பு அதிகரித்து மேலும் சிக்கலாகிவிடக் கூடும், எச்சரிக்கை. ஒரு முறை நுகர்வது கூட மரணத்திற்கு இட்டுச் செல்லும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

போதைக்கு அடிமையாக வெவ்வேறு காரணங்கள் இருந்தாலும் போதை பொருளின் தன்மை ஒன்றே , அது தீயது அதை தேர்வு செய்த பாதையும் தவறே !!


என்ன செய்யப் போகிறோம் நாம் ??!! குறைந்தபட்சம் நம் வீட்டுப் பிள்ளைகளை மட்டும் கவனித்தால் கூட போதும் !!

News :http://www.mid-day.com/articles/whitener-sniffing-teens-caught-with-us-made-pistol/15088096
                              * * * * * 


பின் குறிப்பு


இந்த போதைப் பொருளைப்  பற்றி எழுதி இதுவரை தெரியாதவர்களுக்கு தெரியவைத்து விடுவோமோ என்ற தயக்கத்திலேயே கடந்த மூன்று வருடமாக எழுதாமல் இருந்தேன். ஆனால் வெகு தாராளமாக இன்று பள்ளி கல்லூரிகளில் நடமாடுகிறது என்பதை அறிந்த பின்பே இதன் தீமைகளை பற்றி எழுதாமல் இருக்கக் கூடாது என்ற முடிவிற்கு வந்தேன். தயவு செய்து இப்பதிவை படித்தவர்கள் பிறருக்கும் இப்பழக்கத்தை பற்றி பகிர்ந்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். நன்றி.

இக்கட்டுரையை எழுத உறுதுணையாக இருந்த தோழி Angelin க்கு என் நன்றிகள்.

கௌசல்யா...

செவ்வாய், ஏப்ரல் 16

குழந்தைகளின் மீதான அதிக எதிர்ப்பார்ப்பு...ஆபத்து!!?

குழந்தைகளின் மீதான அதிக எதிர்ப்பார்ப்பு ஆபத்தில் முடிந்துவிட கூடும்...! குழந்தைகளை தங்கள் விருப்பத்திற்காக  வளைக்கப் பார்க்கும் பெற்றோரை எண்ணி எழுதப்பட்ட பதிவு மட்டுமே !

படத்தில் இருக்கும் இந்த சிறுவனின் நிலையில் தான் பெரும்பாலான  குழந்தைகள் இருக்கிறார்கள் !

பொம்மலாட்ட பொம்மைகளைப் போல இன்றைய குழந்தைகள் ஆட்டுவிக்கப்படுகிறார்கள் ! ஒரே குழந்தை அழகாய் ஆடணும், சுருதி பிசகாமல் பாடணும், விளையாடணும், நீச்சல் பழகணும், கராத்தே கத்துக்கணும்..... இவ்வளவும்  சிறப்பா பண்ணிட்டு படிப்பிலும்  முதல்ல வரணும் அப்படியே ஹிந்தி, ஆங்கிலம் சரளமா பேசணும் !!!??

என்ன கொடுமைங்க இது.  தங்களால் செய்ய முடியாததை தன் குழந்தையாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் சரி,  ஆனால் தாங்கள் அன்று அனுபவித்த சின்ன சின்ன சந்தோசங்களை  குழந்தைகளும் அனுபவிக்கணும்னு ஏன் யாருமே நினைக்கிறது இல்ல...?? 


போட்டிகள் நிறைந்த இன்றைய உலகின்  வேகத்திற்கு ஈடு கொடுக்க வேண்டுமே என்கிறார்கள். அதற்காக குழந்தைகளின் குழந்தைத்தனத்தை பணயம் வைக்கிறார்கள்.   அதன் வயதுக்கு ஏற்ற செயல்களை செய்யவிடாமல் அளவுக்கு அதிகமான அழுத்தம் கொடுத்து பெரிய மனிதர்களாக்காதீர்கள். அதன் விளைவை வெகு சீக்கிரம் நீங்கள் அனுபவிக்க நேரும் மிக கொடுமையாக...! வயதுக்கு மீறிய பேச்சுகள், செயல்கள் என்றுமே ஆபத்து ! என் குழந்தை எப்படி பேசுறா என்பது எல்லா நேரமும் சாதாரணமாக சொல்லி பெருமைப்படகூடிய விஷயம் அல்ல.  

குழந்தை  குழந்தையாகவே...

தன்  போக்கில் விளையாடும் ஒரு குழந்தையை சிறிது நேரம் கவனித்துப் பாருங்கள்...அத்தனை ஆச்சர்யங்கள் அற்புதங்கள் அங்கே தெரியும் ! ஒவ்வொரு குழந்தையும் மதிப்பிடமுடியா பொக்கிஷங்கள் !! குழந்தை குழந்தையாக இருப்பது மட்டும்தான் அழகு, மாறாக ஒரு பொம்மை போல நடத்துவது மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.  . குழந்தை செய்வதை எல்லாம் திறமை என்ற பெயரை சூட்டி மறைமுகமாக ஒரு வன்முறைக்கு பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறோம். 

மீடியாக்கள்  வேறு தன் பங்கிற்கு இந்த காரியத்தை கனகச்சிதமாக செய்கிறது

சமீபத்தில் ஒரு தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு 6 வயது குழந்தை ஆடிய ஆட்டம் எல்லோரையும் ஆரவார கூச்சலிட வைத்தது. முகநூலில் இந்த குழந்தையின் நடனத்தை ரசித்து பல ஆயிரம் ஷேர்ஸ், பலவித கமெண்ட்டுகள், அதிலும் ஒருவர் 'நீ நல்லா வருவே' என வாழ்த்த(?) எதில் நல்லா வர, குத்து பாட்டு நடிகையாகவா ? என்ன சொல்ல தெரியல. இந்த 'நல்லா வருவ' க்கு என்ன அர்த்தம்னும் புரியல.

பார்க்கும்  கண்ணை பொறுத்தது என்று எப்படி இதை ரசிப்பது. இன்றைய திரைப்படங்கள் நன்றாகவே நம் கண்ணையும் கருத்தையும் கெடுத்து வைத்திருக்கிறது. முகநூலில்  கருத்து சொன்னவர்களும் சிறு குழந்தை என்று எண்ணாமல் 'எப்படி இடுப்பை வளைக்குறா', கிறங்கடிக்குது கண்ணு, என்னமா கண் அடிக்கிறா என ஒவ்வொன்றாக வர்ணிக்கும் போது குழந்தையின் தாயால் அதை பாராட்டாக எண்ணி மகிழமுடிகிறது என்பது எனக்கு  ஆச்சர்யம் மட்டுமல்ல அதிர்ச்சி ! 
போனமாதம்  ஒரு விழாவிற்கு சென்றிருந்த இடத்தில் , 4 வயதிருக்கும் ஒரு பெண்குழந்தையை பார்த்து எனக்கு அருகில் இருந்த ஒரு  தோழி ,'செம கிளாமர் ' என கமென்ட் அடித்து சிரித்தார். காரணம் இது தான்,  இடுப்பு தெரியும்விதத்தில் அக்குழந்தை அணிந்திருந்த மாடர்ன் உடை. சிறு குழந்தையின் ஆடை அழகை ரசிக்கும் லட்சணம் இப்படி இருக்கு! அதுவும் ஒரு பெண்ணே ப்படினா... ஆண்கள் ?!!

சினிமா,  தொலைகாட்சி போன்றவற்றை  பார்த்து அதில் வருபவர்களை போல தனது குழந்தையும் இருக்கணும் என்பதை போன்ற போட்டி மனப்பான்மை ஒரு கட்டத்தில் அதீத பிடிவாதமாகி குழந்தையின் மீது அப்படியே திணிக்கப்படுகிறது. பெற்றோர்களின் விருப்பத்திற்கு குழந்தை ஒத்துழைக்காத போது கொடிய வார்த்தைகளால் அர்ச்சனை...இறுதியில் அடி !!?   

அதுவும் தவிர, இது போன்ற போட்டிகள், நிகழ்ச்சிகளினால்  கைத்தட்டு வாங்குவது தான் முக்கியம் என்பது  குழந்தையின் மனதில் ஆழமாக  பதிந்துவிடுகிறது...கிடைக்கும் கைத்தட்டுக்காக எவ்வளவு கஷ்டப்படவும் தயாராகிவிடுகிறார்கள். வளர வளர பிறர் நம்மை பாராட்டனும் என்பதை நோக்கித் தான் அதன் பயணம் இருக்கும். தன் சுயத்தை தொலைத்துவிட்டு அடுத்தவங்க புகழ, நல்ல(!) பெயர் எடுக்க என்று முயலுகிறது. இதில் ஏதோ ஒன்றில் தோல்வி என்றபோதில் தன்னையே காயப்படுத்திக் கொள்கிறது...சமயத்தில் தற்கொலை ! 

தேவையற்ற அதிக மன அழுத்தம்


நண்பர்  ஒருத்தர் சொன்னார், 'என் குழந்தை இப்பவே ஓஷோ புக்  படிக்கிறாள்' என்று... நம்மில் பலருக்கு புரிய கடினமான விஷயத்தை குழந்தையை  படிக்கவைக்க வேண்டியதன் அவசியம் என்னனு புரியல...?! ஒன்பது  வயது குழந்தைக்கு வேண்டிய புத்திமதிகளை பெற்றோர்கள் நீங்கள் சொல்லி வழிகாட்ட முடியாதா? யாரோ ஒருவர்  அன்று அவர் வாழ்ந்த சூழல், பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒன்று இன்றைய குழந்தைகளுக்கு எப்படி புரியும், எப்படி இன்றைய சூழலுக்கு சரியாக வரும்.  பெற்றோர்கள் நீங்கள் அதை படித்து அதில் குழந்தையின் வயதிற்கு  தேவையானதை மட்டும் அதன் மொழிக்கு ஏற்ற மாதிரி சொல்லி கொடுங்கள். அதை விட்டுவிட்டு ஒரு புத்தகத்தை கையில் கொடுத்து ' இதை படித்து தெளிவு படுத்திக்கொள், வாழ்வை தைரியமாக எதிர்கொள்'  என்பது சரியல்ல. சிறு குழந்தையின் மனதைக் கடினமாக்காதீர்கள் ! 

ஒவ்வொரு குழந்தையின் ரோல்மாடல் அவங்க பெற்றோர்கள் என்பதை பலர் மறந்துவிடுகிறார்கள். குழந்தைகளை  சிறந்தவர்களாக வடிவமைப்பது பெற்றோர்களின் கையில் தான் உள்ளது. விவேகானந்தர், பாரதி, காந்தி, ஓஷோ, புத்தர்,அரிச்சந்திரன் போன்றவர்களை முதலில் உங்களிடத்தில்  கண்டுக்கொள்ளட்டும்... கண்டு கற்றுக்கொள்ளட்டும்... உணரட்டும்...உங்களை மதிக்கட்டும் ! நாளை புத்தகத்தில் மகான்களை பற்றி படிக்கும் போது என் தந்தை என் தாயும் இவர்கள் வழி நடப்பவர்களே , இவர்களை போன்றவர்களே என பெருமைப்படட்டும். குறைந்தபட்சம் உங்கள் குழந்தைகள் முன் பொய் சொல்வதை தவிருங்கள் அது போதும்.

மாறாக,

மகான்களை பாடத்தில் படிக்க வைத்து பிள்ளைகளை சிறந்தவர்களாக்கி விடலாம் என்று மட்டும் எண்ணாதீர்கள். உங்களிடத்தில் காணமுடியாத  நல்லவைகள் வேறு இடத்தில் காணும் போது குழப்பம் தோன்றும், 'நாம மட்டும் ஏன் பின்பற்றணும்' என்ற கேள்வி எழும் ! உங்களிடத்தில் இல்லாத ஒன்றை வேறிடத்தில் காணும்போது உங்கள் மீதான மதிப்பின் சதவீதம் பற்றியும்  சற்று சிந்தியுங்கள் !!  அரிச்சந்திரன் கதையை கேட்டு பின்பற்றி நடந்தது என்பது அந்த காலம் ...இப்போதைய உலகம் வேறு...! விரல் நுனியில் உலகத்தை தொட்டுக் கொண்டிருக்கும் இவர்கள் நிறைய பேசுகிறார்கள், அதைவிட நிறைய யோசிக்கிறார்கள் ! 
  
எங்கையோ ஏதோ ஒரு குழந்தை திருக்குறளை மொத்தமாக ஒப்பிக்கிறது    என்பதற்காக உங்கள் குழந்தையையும் படுத்தி எடுக்காதீர்கள்.   ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் திறமை இருக்கும். அது எது என்று கண்டு அந்த வழியில் நடக்க விடுங்கள், வழிகாட்டுங்கள், வழிக்காட்டுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள்! மாறாக உங்கள் விருப்பதிற்காக குழந்தைகளை வளைக்க பார்க்காதீர்கள், ஒடிந்துவிடுவார்கள் ! 

பொருளாதாரத்தில்  உயர்ந்தவர்களாக, புகழ் பெற்றவர்களாக ஆகவேண்டும் என்று எண்ணி வளர்க்காமல் நல்ல மனிதர்களாக, அன்பு நிறைந்தவர்களாக, சமூக அக்கறை உள்ளவர்களாக வளருங்கள். அப்போதுதான் உங்களின் எதிர்காலம் நிம்மதியாக சந்தோசமாக கழியும்.

ஆரோக்கியமான சமூதாயம் நம் வீட்டில் இருந்துதான் ஆரம்பிக்கிறது என்பதை நினைவில் வைத்து நம் குழந்தைகளை அதன் இயல்பிலேயே வளர்த்து நம் நாட்டிற்கு நல்ல மகனை/மகளை கொடுப்போம். ஒரு சமூகம் சிறப்பாக கட்டமைக்கப்பட பெற்றோர்களின் பணி மிக முக்கியம் !

தயவுசெய்து குழந்தையை குழந்தையாக இருக்க விடுங்கள், வாழவிடுங்கள்...! உலகை தெரிந்துக் கொள்ள அதற்கு இன்னும் காலம் இருக்கிறது.. மூன்றே வருடத்தில் தென்னையை  வேண்டுமானால் காய்க்க வையுங்கள் குழந்தையை அல்ல !

குழந்தையின் வயதுக்கு  மீறி அதிகமாக திணிக்கும் போது அதை எதிர்கொள்ளமுடியாமல் சோர்ந்து  தன்னம்பிக்கையை  இழந்து விடுகிறது. சிறுவயதிலேயே பாராட்டுக்கு மயங்கும் குழந்தை அதே பாராட்டை வாழ்க்கையின் ஒவ்வொன்றிலும் எதிர்பார்க்கும் போது இந்த உலகின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல்... எரிச்சல், கோபம் , இயலாமை,விரக்தி, சுயபச்சாதாபம்  போன்றவைகள் மனதை ஆக்ரமித்து கடுமையான மன அழுத்தத்தில் விழுந்து விடுகிறார்கள்.

தனது குழந்தைக்குள்  இவ்வாறு நிகழ்வது பெரும்பாலான பெற்றோருக்கே தெரிவதில்லை. தன்னால் முடியவில்லை என்ற நிலையில் தன் வயதை ஒத்த அல்லது தன்னை விட வயது குறைந்த ஒன்றின் மீது தன் கோபத்தை பதிய வைக்கிறது. அது பாலியல் ரீதியிலாக கூட இருக்கலாம் என்பதே ஜீரணிக்க முடியாத அதிர்ச்சியுடன் கூடிய உண்மை !?

பின்குறிப்பு 

பாலியல் ரீதியில் பாதிக்கப்படும் குழந்தைகளை விட பாலியல் துன்புறுத்தலை நிகழ்த்துபவர்கள், வன்கொடுமையை ரசிப்பவர்கள் அதிகம். அவர்களின் ஆரம்பம் எங்கிருந்தும், இப்படியும் தொடங்கலாம் என்பதை இந்த பதிவு உணர்த்த முயலுகிறது. வேறு என்னவெல்லாம் காரணமாக இருக்கலாம்... தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன் .

தொடர்ந்து பேசுகிறேன்...
உங்களின் மனதோடு மட்டும்
கௌசல்யா  

புதன், பிப்ரவரி 6

விவசாயத்தால் விருது...! சாதித்த பட்டதாரி பெண் !!

திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த திருமதி அமலராணி அவர்கள் சிறந்த சாதனை ஒன்றை அமைதியாக செய்து முடித்திருக்கிறார். வேளாண் அதிகாரிகளின் மூலம் இவரது சாதனை அரசாங்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இதோ இன்று ஜனாதிபதியிடம் இருந்து கிருஷிகர்மான் விருதையும் ஒரு லட்ச ரூபாய் ரொக்க பரிசும் பெற்றுவிட்டார். அரசாங்கத்தின் பார்வையில் பட்ட இவரை பற்றி நாம் தெரிந்துகொள்வது காலத்தின் கட்டாயம் தான்,  ஆம் உயிர் வாழ உணவு அவசியம் என்பதால்...!! 

உணவு வேண்டும் ஆனால் அதை உண்டு பண்ணுபவனை பற்றி நமக்கு அக்கறை இல்லை.உலக மக்கள் பசியாற வெயிலிலும் மழையிலும் பாடுபட்டு உழைக்கும் உழவனின் உழைப்புக்கு ஒரு அங்கீகாரம் இது போன்ற விருதுகள் !


விவசாயத்தின் மீதுள்ள காதலால் கணவர் மருத்துவத்  தொழிலை கவனிக்க, இவர் வயலுக்கு வந்து விட்டார். ஒரு மகனும் ஒரு மகளும் மருத்துவ துறையிலும், இன்னொரு மகள் பிளஸ் 1ம் பயிலுகிறார். விவசாயத்தொழிலை தனது ஜீவனாக பாவிக்கும் இவர் ஆங்கில இலக்கியம் படித்தவர்.

சாதனை

விவசாயத்தில் அதிக மகசூலை பெற்று சாதிப்பவர்களுக்கு மத்திய வேளாண்மைத்துறை சார்பில் கிருஷிகர்மான் விருது வழங்கபடுகிறது. அது இந்த வருடம் இவருக்கு கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டில் தான் திருந்திய நெல் சாகுபடி முறையில் நெல் சாகுபடி செய்து இருக்கிறார் அவரது சீரிய முயற்சியின் பலனாக அதிக அளவாக ஏக்கருக்கு 18 ஆயிரத்து 143 கிலோ மகசூல் கிடைத்தது. விருதை குறிவைத்து இவர் விவசாயம் பார்க்கவில்லை, அவ்வபோது வேளாண் அதிகாரிகளின் ஆலோசனைகளை கேட்டு அதன் படி வேலை பார்த்திருக்கிறார்.

விருது பற்றி எதுவும் தெரியாத நிலையில் இவரது வயலில் விளைந்திருந்த கதிர்களை பார்த்த அதிகாரிகள் ஆச்சர்யத்துடன் அதன் அளவை குறித்து சென்றிருக்கிறார்கள் . அதற்கடுத்த வாரத்தில், தான் ஒரு சாதனை செய்திருக்கிறோம் என்று தகவல் கிடைக்க பெற்றிருக்கிறார் .ஜனாதிபதியின் கையால் விருதையும் வாங்கிவிட்டார்

இதில் இன்னொரு மகிழ்ச்சி என்னவென்றால் தேசிய அளவில் தமிழகத்தில் தான் ஒரு எக்டேரில் அதிக நெல் சாகுபடி செய்து உள்ளனர். எனவே இதை பாராட்டி தமிழகத்துக்கு 2 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.

இவரை மத்திய வேளாண் மந்திரி சரத்பவார், மத்திய வேளாண்துறை செயலாளர், தமிழக விவசாயத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, நெல்லை கலெக்டர் சி.சத்தியமூர்த்தி போன்ற பலரும் கௌரவித்து பாராட்டி உள்ளனர். வேளாண்மையில் இன்னும் அதிகமாக சாதிக்க வேண்டும் என்கிற ஆசை, வாய்ப்பு நிறைய இருக்கிறது என்கிறார் இவர்.

நெல் தவிர தென்னந்தோப்பு, காய்கறிகள் சாகுபடி, கரும்பு சாகுபடி போன்றவற்றையும் ஆர்வமுடன் செய்து வருகிறார். பெரிய அளவில் பூசணியை விளையவைத்து உள்ளூர் மக்களை ஆச்சர்யப்படுத்துகிறார்.

விவசாய தொழிலை கௌரவ குறைச்சலாக நினைக்கும் பலர் இருக்கும் நாட்டில் தான் இவரை போன்றவர்களும் இருக்கிறார்கள். விவசாய நிலபரப்பு குறைவதை பற்றியா ஆதங்கம் இவருக்கு நிறைய இருக்கிறது.

அதை குறித்து இவ்வாறு கூறுகிறார்...

" விளை நிலங்கள் வீடுகளாவது தடுக்கப்பட வேண்டும். மூணு ஆண்டுகள் தொடர்ந்து ஒரு நிலம் தரிசாக கிடந்தால் அதை வீட்டு மனையாக்கி விற்க நினைக்கிறார்கள். விவசாய நிலத்தை தரிசாக போட அரசு அனுமதிக்கக்கூடாது. இதில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். ஒரு புறம் மக்கள் தொகை பெருகுகிறது, மறுபுறம் விவசாயம் சுருங்குகிறது. இப்படியே போனால் பஞ்சத்தின் கொடுமையை மக்கள் நேரில் பார்க்க கூடிய காலம் விரைவில் வந்து விடும்.

"இன்னும் சில ஆண்டுகள் கழித்து நகரங்களுக்கு சென்றவர்கள் எல்லாம் கிராமங்களை தேடி ஓடி வரும் நிலை ஏற்படும்...அப்போது விவசாயத்துக்கு அப்படி ஒரு மவுசு கிடைக்கும்...வேலை இல்லாத படித்த ஆண்களும் பெண்களும் ஏர் பிடிக்கும் காலம் வந்தே தீரும் !! 

அதற்கு உதாரணமாக இந்த ஆண்டில் மழை பொய்த்து போனதை கூறலாம். வரும் ஆண்டிலும் இதே போன்று நிகழ்ந்தால் உணவு பஞ்சம் வந்து விடும். அப்போது ஒரு கிலோ அரிசி விலை 100 ரூபாய்க்கு கூட விற்கலாம். இதே போல் மற்ற விவசாய பொருட்களின் விலையும் உயரும். நல்ல விலை கிடைப்பதால் ஏராளமானவர்கள் மீண்டும் கழனிக்கு வருவார்கள்... தரிசு நிலங்கள் பசுமையாக மாறும். மீண்டும் பசுமை புரட்சி ஏற்படும்"                                                   

'பெண்களுக்கு ஏற்ற தொழில் விவசாயம் தான், குடும்பத்தை கவனிக்கவும் நேரம் கிடைக்கும், தேவைக்கு அதிகமாகவே வருமானமும் கிடைக்கும்' என்று பெண்களுக்கு ஒரு யோசனையும் சொல்கிறார். 

வேறு எந்த தொழிலை போலில்லாமல் இதில் உடல் உழைப்பு இருப்பதால் உடல் ஆரோக்கியமாக, சுறுசுறுப்பாக,  உற்சாகமான மனதுடன் நீடித்த இளமையுடன் இருக்கலாம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம் .

காலத்தின் கட்டாயம் 

விவசாயத்தில் இறங்குவது அவசியம் என்பதை உணர்ந்து இருக்கும் விளை நிலங்களை விற்காமல் இயன்றவரை விவசாயத்தில் ஈடுபட முயற்சி எடுப்போம். தெரியாத தொழில் என்று தயங்காமல் தெரிந்தவர்களின் ஆலோசனைகளை பெற்று தைரியமாக இறங்கலாம். விவசாயத்தை பொருத்தவரை வேளாண் அதிகாரிகள் நமக்கு உதவ தயாராகவே இருக்கிறார்கள், அவர்களை அணுகி தேவையான ஆலோசனைகளை பெற்றுகொள்ளலாம்.

நிலங்கள் இல்லாதவர்கள் பிறரிடம் குத்தகை பெற்று விவசாயம் செய்கிறார்கள்...தண்ணீர் தேவைக்கு நீர் மேலாண்மை திட்டம் உதவுகிறது. அறிவியல் தொழில்நுட்ப உதவியோடு செயல்படுத்தபடுகிறது. சொட்டுநீர் பாசனம், நுண நீர்ப் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் போன்ற பாசன முறைகளின் மூலம் குறைந்த நீரிலும் நிறைவான உற்பத்தி பெறமுடியும். விவசாயம் செய்யபோகும் நம் நிலத்தின் மண்ணையும், நீரையும் பரிசோதனை செய்வது நல்லது. வேளாண் அதிகாரிகளை அணுகினால் இவற்றை குறித்த விளக்கங்களை கூறி உதவுவார்கள்.

மேலும்

இயற்கை விவசாயம் செய்தால் பூச்சி மருந்து ,உரம் போன்றவற்றின் தேவை கணிசமாக குறையும். நெல் தவிர கம்பு, சோளம், உளுந்து,பயறு போன்ற  தானியங்களை விளைவிக்கலாம். காய்கறி தோட்டம் போட்டால் கூட நல்லது. ஏதோ ஒரு வகையில் இயற்கையுடன் நம்மை பிணைந்து கொள்வதின் மூலம் நம்மை ஆரோக்கியமாக வைத்து கொள்ள முடியும். அதே நேரம்  சுற்றுப்புறமும் சுகாதாரமாக மேன்மையுறும்.

ஆர்வம் உழைப்பு இருந்தால் விவசாயத்தில் வெற்றி பெறலாம். இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட்டு  பொருளாதார ரீதியாக பயன் பெற்று நம் நாட்டிற்கும் பயனுள்ளவர்களாவோம். நாமும் ஈடுபட்டு நம்மை சேர்ந்தவர்களையும் ஈடுபட செய்வோம்.

உறுதியுடன் முயன்றால் பசுமை உலகம் சாத்தியம் !!

வாழ்க விவசாயம்!

* * * * *

தகவல், படம் : இணையம்

வெள்ளி, செப்டம்பர் 14

ஒத்துழைப்பு தாருங்கள், திட்டத்தில் இணையுங்கள் !!

பிளாஸ்டிக் பயன்படுத்தாதீர்கள், சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவுங்கள், மரம் வளர்ப்போம் மழை பெறுவோம், வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் இப்படி மாய்ந்து மாய்ந்து அரசு பிரச்சாரம் செய்கிறது. ஆனால் ரசாயன உரம், பிளாஸ்டிக் என்று சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் அனைத்தையும் விற்பனை செய்ய அனுமதி அளித்திருக்கும் ஒரு முரண்பாட்டு மூட்டை அரசாங்கம்...!!

அரசை திருத்துவது நம் வேலை அல்ல எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும் ஆனால் தனி மனிதன் நம் கடமை ? தண்ணீருக்காக போர் போட்டால் சில அடிகளில் ஊற்றெடுக்கும் நிலத்தடி நீர், பல நூறு அடிகள் போடப்பட்டும் கல்லை கரைத்து துப்பிக்கொண்டிருக்கிறது. திரளும் கருமேகங்களை குளிர்வித்து கீழே கொண்டுவரும் திறனற்ற வறண்ட பூமி !!? கான்கிரீட் பூமியில் கண்ணுக்கு தெரியாத பசுமை !

பசுமைவிடியல் 

அமைதியாக இருந்தால் போதுமா ஏதாவது செய்ய வேண்டாமா என யோசித்ததின் முடிவில் பிறந்ததுதான்  'பசுமை விடியல்'

கடந்த சில மாதகாலமாக சிறு குழந்தை போல தவழ்ந்து நிமிர்ந்து எழுந்து மெல்ல அடி எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் இணைந்த தன்னார்வலர்களின் கரங்களை பிணைத்து கொண்டிருக்கும் தைரியத்தில் பசுமைவிடியல் பெரிய அளவில் செயல் பட திடங்கொண்டு  பல வியத்தகு முடிவுகளை எடுத்திருக்கிறது. முதலில் இரண்டு திட்டம் தொடங்கினோம்.

* 'தினம் ஒரு மரம்' திட்டம்

* 'இலவச மரக்கன்று' திட்டம் 

சில முயற்சிகள் செய்யலாம் 

தன்  வீடு தன் வேலை என்ற குறுகிய வட்டத்திற்குள் நாம் நின்றுவிடாமல் அதை தாண்டி வெளியே வந்து சில கடமைகளை இயன்றவரை செய்யலாமே. யாருக்கோ செய்யவேண்டாம். நம் குழந்தைகள் பேரன் பேத்திகள் நாளை வாழப்போகும் இடம் இது, இதை சரி செய்து கொடுக்க வேண்டியது நம் கடமை. 'வாழ தகுதியில்லாத பூமியை நமக்கு விட்டுச் சென்றுவிட்டார்கள் இரக்கமற்றவர்கள்' என்று நம்மை நம் குழந்தைகள் சபிக்க வேண்டுமா ??

வீட்டுக்குள் ரோஜா செம்பருத்தி குரோட்டன்ஸ் வளர்த்துவிட்டு நாங்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கிறோம் என்று திருப்தி பட்டுவிடக் கூடாது. 

*   நாம் வசிக்கும் தெருவின் ஓரத்தில்...

*   வீட்டு வாசலில், காம்பௌன்ட் உள்ளே...

* வீட்டை சுற்றி இடம் இல்லை என்றால் தெரிந்தவர்கள் வீட்டில் இடம் இருந்தால் வாங்கி கொடுத்து வைக்க சொல்லலாம். நீங்களே நட்டு, நேரம் கிடைக்கும் போது சென்று பார்த்து வரலாம்.    

* உறவினர்கள் வீட்டுக்கு செல்லும் போது  மரக்கன்றுகளை பரிசாக கொண்டு செல்லலாம்.

*  பள்ளி கல்லூரிகளுக்கு சென்று கொடுக்கலாம். முக்கியமாக உங்கள் குழந்தைகளிடம்(அவங்க பிறந்தநாளின் போது) கொடுத்து அவங்க பள்ளியில் நட சொல்லலாம். தினம் தண்ணீர் ஊற்றி எப்படி வளர்ந்திருக்கு என்று குழந்தைகளிடம் கேட்டு அவர்களின் ஆர்வத்தை தூண்டலாம்.

* விதைகள் சேகரித்து மலைவாசஸ்தலம் எங்காவது சென்றால் அங்கே விதைகளை  தூவிவிட்டு வரலாம். (இதெல்லாம் காக்கா, குருவி, பறவைகள் பண்ற வேலை அவைதான் இப்போ கண்ணுல படலையே)

 ஏதோ ஒரு விதத்தில் நமக்கு இயன்றவரை செய்து வரலாம்.

இப்படியும் சொன்னாங்க 

*  எங்க வீட்ல இடம் இல்ல... எங்க நட.
* தெருவுல போய் நடவா ? வேற வேலை இல்ல...பாக்குறவங்க என்ன நினைப்பாங்க.

இதெல்லாம் கூட பரவாயில்லை ஒரு காலேஜ் ப்ரோபசர் சொன்னார், "நீங்க நட்டு வச்சுட்டு போய்டுவீங்க, யாருங்க தண்ணீ ஊத்த? அதுக்கும் ஒரு ஆள நீங்களே ரெடி பண்ணி வச்சுட்டா நல்லது !!"

அவர் சொன்னப்போ சுர்ருன்னு கோபம் வந்துடுச்சு. ஆனாலும் அவர் சொன்னதுல என்ன தப்பு இருக்கு. அவர் பாட(பாடத்தை) கவனிப்பாரா செடிக்கு தண்ணி  ஊத்திட்டு இருப்பாரா? இருந்தாலும் நானும் விடாமல் "காலேஜ்க்குனு தோட்டக்காரங்க இருப்பாங்களே" னு கேட்டேன், "இதுவரை செய்றதுக்கு சம்பளம் கொடுப்போம், இது எக்ஸ்ட்ரா  வேலை"

இப்படி சொன்னதும் நான் வேற என்ன செய்ய "சரிங்க நான் ஆள் ரெடி பண்ணிட்டு உங்க கிட்ட பேசுறேன்"னு போன் வச்சுட்டேன்.

ஆக

கன்றை கொடுப்பது  சின்ன வேலை அதை பராமரிப்பதுதான் பெரிய வேலை என்ற ஒன்றை புரிய வச்சாங்க. அதன் பின் தான் மூன்றாவது திட்டம் உதயமானது. ஒரு கிராமத்தை தத்து எடுத்து அங்கே மரக்கன்றுகளை ஊரை சுற்றி நட்டு, தண்ணீர் ஊற்றி பராமரிக்க அங்க உள்ள சிலரை பணியில் அமர்த்தி பசுமைவிடியல் மூலமாக சம்பளம் கொடுப்பது என்று முடிவு செய்திருக்கிறோம். முதல் இரண்டு திட்டங்கள் படிப்படியாக செயல்படதொடங்கியதும் மூன்றாவது திட்டம் தொடங்க இருக்கிறோம். 

* * * * * * * * * *

முகநூலில் பார்த்து சிலர் போன் பண்ணிகேட்டது மனதிற்கு நிறைவாக இருந்தது. முக்கியமாக சென்னையில் கொடுப்பிங்களானு கேட்டாங்க. பிற மாவட்டங்களுக்கும் கொடுக்கிறதுக்காக சில ஏற்பாடுகள் செய்துகொண்டு இருக்கிறோம்...விரைவில் நல்ல செய்தியை  பகிர்கிறேன்

சந்தோசமான செய்தி ஒன்று 

இலவச மரக்கன்று அறிவித்த மூன்றாவது நாளில் Rotaract Club of Kovilpatti Chairman திரு செந்தில் குமார் என்னை தொடர்புகொண்டு பேசினார். "ஒரு வருடத்திற்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்து இருக்கிறோம். அதற்கு உங்களால் உதவ முடியுமா" என்று கேட்டார். இது போன்ற ஒரு வாய்ப்புக்காகத் தானே காத்திருக்கிறேன் என்பதால் சந்தோசமாக 'ஏற்பாடு செய்கிறேன்' என்றேன்.

உடனே "முதலில் அடுத்த வாரம் பத்தாயிரம் மரக்கன்று வேண்டும்" என்றார். 

ஒரே சமயத்தில் இவ்வளவு கன்றுகள் ரெடி செய்வது முதல் முறை என்பதால் கொஞ்சம் தயங்கினாலும் ,தயார் செய்து விட்டோம். அடுத்தவாரம் கொடுக்க போகிறோம்.

மரக்கன்றுகள் சென்று சேர போகும் இடம்

Junior Red Cross Convener
தென்காசி கல்வி மாவட்டம்
இ.மா. அரசு மேல்நிலை பள்ளி
பண்பொழில்.
* * * * * * * * * * * * * *                             

2 வது திட்டம் குறித்த பதிவு  - ஒரு புதிய முயற்சி -தினம் ஒரு மரம் 

அன்பின் உறவுகளே!!

 * இலவச மரக்கன்றுகள் பெற்று இயன்றவரை உங்களை சுற்றி இருக்கிற இடங்களில் நட முயற்சிசெய்யுங்கள்...
* தினம் ஒரு மரம் திட்டத்தில் அனைவரும் அவசியம் பங்குபெற வேண்டுகிறேன்.
தொடர்புக்கு tree@pasumaividiyal.org

உங்களின் மேலான ஒத்துழைப்பையும் ஆதரவையும்  நாடுகிறேன். 
 
மரம் நடுவோம், மண்ணை காப்போம்


பிரியங்களுடன்
கௌசல்யா


 

   

திங்கள், செப்டம்பர் 10

ஒரு புதிய முயற்சி - 'தினம் ஒரு மரம்'

அருமை இணைய உறவுகளே,

வணக்கம். 

சில நிமிடங்கள் உங்கள் பார்வையை இங்கே பதியுங்கள்...படித்து கடந்து செல்லும் முன் ஒரு உறுதியுடன் செல்வீர்கள் என நம்புகிறேன்.

சுற்றுச்சூழல் பாதுக்காப்புக்கென்று ஒரு புதுமையான திட்டம் 'தினம் ஒரு மரம்' யார் தொடங்கினாங்க? எப்படி? எதுக்கு? என்னவென்று கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்களேன்.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் இயங்கி கொண்டிருக்கும் EAST TRUST ஆல்  தொடங்கப்பட்ட 'பசுமைவிடியல் அமைப்பு' கடந்த சில மாதங்களாக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கென்று பல செயல்களை செய்துவருகின்றது. அதன் அடுத்தகட்ட ஒரு முயற்சிதான் 'தினம் ஒரு மரம்' என்ற திட்டம். நாம் வாழும் சமூகத்திற்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற தேடல், ஆர்வம் இருப்பவர்கள் பங்கு பெற ஒரு நல்ல சந்தர்ப்பம் .  

 

தினம் ஒரு மரம்!
பசுமை விடியல் குழுவின் புதிய பசுமைத் திட்டம்!

இத் திட்டத்தின் நோக்கம் என்ன?
பசுமை விடியல் சார்பில் உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் தினம் ஒரு மரம் நடப்பட வேண்டும்.

இத்திட்டத்தில் யார் யார் எல்லாம் பங்கு கொள்ளலாம்?
உலகில் பசுமை நிலைத்திருக்க விரும்பும் அனைத்து நல்ல உள்ளங்களும் பங்கு கொள்ளலாம்

இத்திட்டம் எப்படி செயல்படுகிறது?
ஒரு சங்கிலித் தொடர்போல, மரம் நடும் நண்பர்கள், தினம் தினம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
முதல் ஆர்வலரை பசுமைவிடியலே பரிந்துரை செய்து இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறது. முதல் நபர் மரத்தை நடும் முன்பே, அடுத்த நபரை பரிந்துரைக்க வேண்டும். அவர் நண்பராகவோ, உறவினராகவோ, பசுமை விடியல் அங்கத்தினராகவோ இருக்கலாம். அவர் அவருக்கடுத்த நபரை பரிந்துரைப்பார். இப்படியே தினம் ஒரு மரம் பசுமை விடியல் சார்பில் உலகில் எங்காவது ஒரு மூலையில் நடப்படும். வருடத்திற்கு 365 மரங்கள். சங்கிலித் தொடர்போல இந்த பணி தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இந்த சங்கிலித் தொடருக்குள் இணைவது எப்படி?
மிக எளிது. தினம் ஒரு மரம் திட்டத்தில் ஆர்வமுள்ளவர்கள் தங்கள் பெயரையும், ஊரையும் குறிப்பிட்டு tree@pasumaividiyal.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். உங்கள் பெயர் தினம் ஒரு மரம் ஆர்வலர்களின் பட்டியலில் இணைக்கப்படும். அந்தப் பட்டியலில் இருந்து உங்கள் பெயரை மற்றவர்கள் பரிந்துரைப்பார்கள். நீங்கள் அவர்கள் குறிப்பிடும் தேதியில் ஒரு மரம் நட வேண்டும்.

மரம் நடப்பட்டது என்பதை எப்படி உறுதி செய்வது?
 மரம் நடும் காட்சியை ஒரு புகைப்படமாக tree@pasumaividiyal.org என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப் புகைப்படம் தேதிவாரியாக ஒரே ஆல்பத்தின் கீழ் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரில் இணைக்கப்படும். இந்த ஆல்பம் மற்றவர்களை  நிச்சயம் ஊக்கப்படுத்தும்

                                                                               * * * * *                                                                      

விழிப்புணர்வு ஏற்படுத்துவதே...

உலகம் தற்போது இருக்கும் நிலையில் ஒருநாளைக்கு ஒரு மரம் நட்டால் போதுமா? என்ற கேள்வி சிலருக்கு ஏற்படக்கூடும். இத்திட்டம் ஒரு மரம் வைக்கணும் என்பதாக இருந்தாலும், உலகின் பல இடங்களில் இருந்தும் பலர் இணைந்து தினமும் தொடர்ச்சியாக செய்து வரும் போது பிறருக்கு நிச்சயம் ஒரு விழிப்புணர்வு ஏற்படும். 

இத்திட்டத்தின் நோக்கம் பலரை தட்டி எழுப்புவது தான். அவர் செய்துவிட்டார் நாமும் செய்வோம் என்ற மறைமுக ஊக்கப்படுத்துதல். மரம் நடுவது அனைவரின்  இன்றியமையாத கடமை என்றில்லாமல், அதை ஏன் செய்யவேண்டும், அதனால் என்ன பலன் என்ற கேள்வியை இன்னமும் கேட்கும் பலர் இங்கே உண்டு...! அப்படிபட்டவர்களிடத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டோம் என்பதே போதுமானது. பின் அவர்களாக தொடர்ந்து செய்ய தொடங்கிவிடுவார்கள்.

எந்த ஒன்றும் எல்லோரின் ஒத்துழைப்பு இன்றி செயல்வடிவம் பெற இயலாது என்பதை தெரிந்தே இருக்கிறோம்.  அதனால் உங்களின் மேலான ஆதரவையும், பங்கெடுப்பையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். சிறிதும் தயக்கம் இன்றி முழுமனதாக ஒத்துழைப்பு கொடுப்பீர்கள் என திடமாக நம்புகிறேன்.

இனிமேல் இது  'எங்க திட்டம்' இல்லை 'நம்ம திட்டம்'. 

இணைந்து செயலாற்றுவோம். 
                                    வாழ்த்தட்டும் இயற்கை !! வணங்கட்டும் தலைமுறை !!

தினம் ஒரு மரம்!
இந்த பூமி உள்ள வரை...
 
ஆம் சங்கிலித் தொடராக தினம் ஒரு மரம்.

இன்று நீங்கள், நாளை நண்பர், அடுத்த நாள் மற்றொருவர்!

ஆளுக்கொரு மரம்!
                                       மரம் நடுவோம்! 
                                                                           மண் காப்போம்!!

                                                                                      * * * * *

பிரியங்களுடன்

கௌசல்யா 
பசுமைவிடியல்.


வியாழன், ஜூன் 28

பள்ளிகளில் மாணவிகள் படும் சங்கடங்கள்...! ஒரு பார்வையும் தீர்வும் !!

ஒரு சமுதாயம் படித்த ஆண்களையும் படிக்காத பெண்களையும் கொண்டிருந்தால் முன்னேற்றம் அடைவதென்பது இயலாத காரியம். பெண் கல்வியே சமுதாய முன்னேற்றத்திற்கு சிறந்த வழி - பாரதியார்


மொத்த மக்கள்தொகையில் பாதிக்குபாதி இருக்கும் பெண்கள் கல்வி அறிவில் முன்பை விட இப்போது முன்னேற்றமான நிலையில் இருக்கிறார்கள் என முழுமையாக நிறைவு கொள்ள இயலவில்லை...காரணம் கல்வி நிலையங்களில் மாணவிகள் அனுபவிக்கும் சங்கடமான ஒரு பிரச்சனை. வெளியே பேசவே கூடாத ஒன்று  என்ற நிலை என்று மாறும் தெரியவில்லை...!!


2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக்கணக்கின் படி இந்தியளவில் படித்த பெண்கள் 65%. இது 2001 ஆம் ஆண்டு இருந்ததை விட 12% அதிகமாகும். அதே சமயம் 8 ஆம் வகுப்பில் படிப்பை விட்டு விலகும் பெண்களின் எண்ணிக்கை அதிகம். இதற்கு குடும்ப சூழ்நிலை மட்டும் காரணம் அல்ல பள்ளியில் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பான கழிப்பறையும், தண்ணீர் வசதியும் இல்லாதது !!? இந்தியாவில் உள்ள அரசு சார்ந்த அனைத்து வகையான பள்ளிகளிலும் 51% பள்ளிகளில் டாய்லெட் வசதியே  இல்லை. 74% பள்ளிகளில் தண்ணீர் வசதி இல்லையாம். இதனாலேயே 7 & 8 ஆம் வகுப்பு மாணவிகளில் (வயதுக்கு வந்துவிடுவதால்) 7% மாணவிகள் பள்ளியை விட்டு நின்று விடுகிறார்கள் என்ற காரணத்தை ஒரு செய்தியாக எண்ணி கடந்து போக முடியவில்லை.

பள்ளிகளில் கழிப்பறை எவ்வளவு இன்றியமையாதது என்பதில் சிறிதும் அக்கறை இன்றி இருக்கின்றன பள்ளி நிர்வாகமும், அரசும்...!  கிராம, நகர  தெருவோரங்கள் அசிங்கப்படும் அவல நிலைக்கு முக்கிய காரணம் ஆரம்ப பள்ளியில் கழிப்பறை பற்றிய கவனத்தை,விழிப்புணர்வை மாணவர்கள் மனதில் பதிய வைக்க தவறியதே...??!! கழிப்பறை இல்லாத அல்லது இருந்தும் சுகாதாரமற்ற பள்ளிகள் எவ்வாறு மாணவ, மாணவிகளுக்கு இதை பற்றிய விழிப்புணர்வை போதிக்கும்...?! நல்லவைகளின் ஆரம்பம் பள்ளி என்பது திரிந்து சமூக ஒழுங்கீனங்களின் ஆரம்பம் பள்ளிகள் என்றாகிவிட்டதோ...??!

ஏற்படும்  பிரச்சனைகள்

இன்றைய தினத்தில் நாள் ஒன்றுக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்...ஆனால் பள்ளி செல்லும் நம் குழந்தைகளோ சுகாதாரமற்ற கழிவறை பக்கம் போக தயங்கியே நீர் அருந்துவதில்லை...காலையில் வீட்டில் இருந்து கிளம்பும் அவர்கள், மீண்டும் வீடு வந்தபின்னே சிறுநீர் கழிக்கிறார்கள்...இவ்வாறு சிறுநீர் வெளியேறாமல் இருப்பதால் கிட்னி பாதிப்படைய கூடிய வாய்ப்பு இருக்கிறது...தண்ணீர் அருந்தாமல் தவிர்ப்பதால் வயிற்று கோளாறுகளுக்கு ஆளாக்கி விடுகிறார்கள். சுகாதாரமற்ற கழிப்பறையை பயன்படுத்துவதின் மூலம் நோய்தொற்று ஏற்பட்டு கருப்பப்பை பாதிப்படைவதுடன் வெள்ளைபடுதல், மலட்டுத்தன்மை உள்ளிட்ட அது தொடர்பான பல்வேறு துன்பங்களையும் அனுபவிக்க நேரும் என சொல்கிறார்கள்.
.
பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் போது இதை பற்றி அவசியம் விசாரிக்கவேண்டும்...சங்கடமின்றி 'அந்த மூன்று நாட்களை' கடந்து போக கூடிய அளவிற்கு அங்கே பாத்ரூம் வசதி இருக்கிறதா ?! அது சுத்தமாக இருக்கிறதா? இன்னும் சொல்ல போனால் தாய் அந்த இடத்திற்கு சென்று பார்த்து வரலாம்...அங்கே ஏதும் சரியில்லை என்றால் பள்ளி நிர்வாகத்திடம் சரி பண்ண சொல்ல வேண்டும். 

அரசின் இலவச சானிடரி நாப்கின்

தற்போது தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் வளர் இளம் பெண்களுக்கு சானிடரி நாப்கின் கொடுப்பதாக அறிவித்திருக்கிறது. பாராட்டப்பட வேண்டிய நல்ல விஷயம்...அதே நேரம் பெண்கள் பள்ளிகளில்/கல்லூரிகளில்  கழிப்பறை வசதி சரியான விதத்தில் இருக்கிறதா என அரசு கவனித்து நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும். கட்டாயம் எடுத்தாக  வேண்டும் !!

மாணவிகளின்  தவறு அல்ல !

மாணவிகள் உபயோகித்தப் பின் சானிடரி நாப்கின்களை நல்ல முறையில் டிஸ்போஸ் பண்ண வேண்டும். ஆனால் சரியான முறைப்படி செய்ய இயலாததால் டாய்லெட் மற்றும் கழிவு நீர் செல்லும் குழாய்களில் அவை அடைத்து கொண்டு பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடுகிறது...அகற்றுவதற்கு ஆள் கிடைப்பதில்லை. அடைத்து கொண்டதை அகற்ற தாமதமாகும் ஒவ்வொரு மணி நேரமும் சுகாதார கேடு  அதிகரிக்கிறது.

பள்ளி நிர்வாகம் இது குறித்து மாணவிகளிடம் கண்டிக்கும் நிலையில் அவர்கள் அந்த நாட்களில் பள்ளிக்கு செல்வதையே தவிர்த்துவிடுகிறார்கள்...இங்கே தவறு மாணவிகளிடம் இல்லை, பள்ளி நிர்வாகத்திடம் இருக்கிறது.


பள்ளி மாணவிகளை பொறுத்தவரை மாதம் தோறும் அல்லாமல் 2, 3, வெகு சிலருக்கு 5 மாதங்களுக்கு ஒரு முறை தான் மாதவிடாய் நிகழுகிறது...அது போன்ற சமயத்தில் அதிக அளவில் ரத்தபோக்கு இருக்கலாம். கிராமத்து மாணவிகளை பொறுத்தவரை துணியை பயன்படுத்துவார்கள், அதிகபடியான ரத்தபோக்கால் பெரும் அவதிப்பட நேரும். ஒரு நாள் முழுவதும் துணி அல்லது நாப்கின் மாற்றாமல் வகுப்பில் இருப்பது வெகு சிரமம். பிறருக்கு தெரியும் படி ஒருவேளை இருந்துவிட்டால் அதனால் ஏற்படக்கூடிய அசுயை, அவமானம் (?) போன்றவை அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும். உடல் ரீதியிலான பாதிப்புகளுடன் உளவியல் பாதிப்புக்கும் ஆளாகிறார்கள்...

உபயோகித்த நாப்கின்களை அகற்ற சரியான வழிவகை செய்தாக வேண்டும்.

என்னதான் வழி?!

2011 ஆம் ஆண்டு திருப்பூர்  ஜெய்வாபாய் நகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திரு. A.ஈஸ்வரன் என்பவர் மாணவிகள் சந்திக்கும் இத்தகைய பிரச்னைக்கு என்ன வழி என தீர யோசித்து ஒரு வழிமுறையை கண்டுபிடித்து வெற்றியும் பெற்று இருக்கிறார். பலரின் பாராட்டையும் பெற்று உள்ளார். இப்படியொரு வித்தியாசமான முயற்சியை பாராட்டி 1997 ஆம் ஆண்டு மங்கையர் மலர், மகளிர் சிந்தனை, மாலை மலர் போன்ற பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. செய்தி கேள்விப்பட்ட திருப்பூர் பகுதிகளில் உள்ள மில் கல்லூரிகளில் இருந்து வந்து இதை பார்வை இட்டு சென்று தங்கள் இடங்களிலும் அமைத்துள்ளனர். தற்போது தொழில் ரீதியாக மின்சாரம், எல்.பி.ஜி கேஸ் போன்றவை பயன்படுத்தி தயாரித்து பெண்கள் கல்லூரி பள்ளிகளுக்கு விற்று வருகிறார்கள்...!

அப்படியென்ன  கண்டுபிடிப்பு ?!

பழைய இரும்பு டிரம்மை சில மாற்றங்கள் செய்து புகை போக்கியுடன் கூடிய பாய்லராக வடிவமைத்து வைத்து அதன் இரு புறமும் 2 பாத்ரூம்களை கட்டி இருக்கிறார். பாத்ரூம் செல்லும் மாணவிகள் சிலிண்டரில் உள்ள சிறிய திறப்பானைத் திறந்து உபயோகபடுத்திய துணியை/நாப்கினை போட்டு விடலாம். பள்ளி முடிந்த மாலை நேரம் பாய்லரின் கீழேயுள்ள கதவைத்திறந்து மண்ணெண்ணெய் சிறிது ஊற்றி எரித்து விடலாம். புகை போக்கி மூலமாக புகை வெளியேறி விடும்...!


மத்திய அரசின் RMSA திட்டம் மூலமாக பெண்கள் பள்ளிகளில் கழிப்பறை கட்ட பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்...வெறும் கழிப்பறை மட்டும் கட்டுவதை விட இது போன்ற பாய்லர்களையும் சேர்த்து கட்ட தமிழக அரசும், கல்வித்துறையும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


ஆணென்ன ? பெண்ணென்ன ?

மாணவன் , மாணவி யாராக இருந்தாலும் வீட்டில் இருப்பதை விட பள்ளிகளில் தான் அவர்களின் பெரும்பாலான நேரம் கழிகிறது. அவர்களின் ஆரோக்கியத்திலும் பள்ளிகள் அக்கறை காட்டவேண்டும். ஒரு நாளைக்கு பள்ளி செல்லும் சிறுமி/சிறுவன் இரண்டு கிளாஸ் நீர் அருந்துவதே அதிகம். பெற்றோர் கொடுத்துவிடும் தண்ணீரையும் குடிக்காமல் மீதம் எடுத்து வருகிறார்கள்...கேட்டால் தண்ணீர் குடிக்க டைம் இல்ல, ஏதாவது ஒரு சாக்கு. இதை பெற்றோர்கள் நாம் கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாது. குழந்தைகளை தயங்காமல் தண்ணீர் அதிகம் குடிக்க சொல்லுங்க...பள்ளியில் இருக்கும் கழிவறை சம்பந்தப்பட்ட பிரச்னையை குழந்தைகள் சொல்ல மாட்டார்கள் நாம் தான்  அக்கறை எடுக்கவேண்டும்...தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளை அணுகி கழிவறை வசதிகள் எவ்வாறு இருக்கிறது என விசாரித்து கவனியுங்கள்.

பெண் குழந்தைகள் என்றால் மேற்கூறிய பாய்லர் பற்றி பள்ளிகளுக்கு எடுத்து கூறுங்கள். படிப்பில் மட்டும் அக்கறை கொள்ளாமல் அவர்களின் ஆரோக்கியத்திலும் சிறிது கவனம் கொள்ளுங்கள்.

                                                                  * * * * * * * * *

 தகவல்,படங்கள்  உதவி 

- நன்றி திரு. A. ஈஸ்வரன்,
  http://jaivabaieswaran.blogspot.in/2010/04/blog-post_14.html
                                   
  மற்றும் இணையம் 



வியாழன், ஏப்ரல் 19

துப்பு(பி) கெட்ட மனிதர்களே...!!

ஆறு மாதத்தில் மும்பை மாநகராட்சி பெற்ற வருவாய் 2.24 கோடி ரூபாய் !!எப்படி இந்த வருமானம் கிடைத்தது என தெரிந்தால் மற்ற மாநகராட்சியும் முயற்சி செய்யலாம். ஆமாம் எப்படி கிடைத்தது ?! எல்லாம் மும்பை மக்களின் கைங்கரியம் தான், இல்லை இல்லை வாய்(?) சாமார்த்தியம் தான்...!!? விசயம் ஒன்னும் பெரிசா இல்ல சின்னது தான், முடிஞ்ச வரை கண்ட இடத்துல துப்பி வைக்கணும், இதை மக்கள் ஒழுங்கா கடை பிடிச்சதால மாநகராட்சிக்கு வருமானம்...!! 

எந்த அளவு துப்பினாங்களோ அந்த அளவுக்கு வருமானம்தான். அப்படி மாஞ்சி மாஞ்சி துப்பிய மக்களின்  எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா 1 லட்சத்து 10 ஆயிரம் !! பொது இடத்தில் எச்சில் துப்பியதற்காக தலா 200 அபராதம் வாங்கி சேர்த்த பணம் ! இந்த தப்புக்காக இந்தளவு வருமானம் பார்க்க முடியுங்கிறது மக்களாகிய நமக்கு பெருமையோ பெருமை தான். நாடு பொருளாதாரத்துல முன்னேறனும்னா எவ்வளவு வேண்டுமானாலும் துப்புங்க...துப்பிகிட்டே இருங்க...

ஆனா விளைவு...??! தொடர்ந்து படிங்க...

தேசிய பழக்கம் ?!


பாக்கு, பான் பீடா, பான் மசாலா, புகையிலை, வெற்றிலை என எதையாவது மென்றுகொண்டே இருப்பது நம்மவர்களின் பழக்கமாகி விட்டது. இவ்வாறு மெல்லுவதால் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகம்...அசை போடுறதோட மட்டுமில்லாம போற வர்ற இடத்திலெல்லாம் துப்பி அசிங்கப்படுத்துகிறார்கள். கூடவே எச்சில் மூலம் பரவும் கிருமிகள் காற்றில் கலந்து காச நோயை ஏற்படுத்துகிறது...??!

மும்பையில் மட்டும் கடந்த வருடம் 9,168 பேர் இருமல் மற்றும் எச்சில் மூலம்  
பரவும் காச நோயால் பலியாகி உள்ளனர். இதனால்தான் பொது இடங்களில் எச்சில் துப்ப அங்கு தடை விதிக்கப்பட்டது. அபராதம் 200 ரூபாய் பிடிபட்டவர்கள் 6 மாதத்தில் ஒரு லட்சம் பேர் என்றால் பல லட்சம் பேர் தப்பி இருப்பார்கள்...!? யார் யார் எங்கே துப்புகிறார்கள் என உற்று பார்த்துக்கொண்டே இருக்கும் மாநகராட்சி ஊழியர்கள் நிலை பரிதாபம். 'உன் அப்பன் போட்ட ரோடா , நான் அப்படிதான் துப்புவேன்' என விதண்டாவாதம் பண்ணும் இந்திய குடிமகன்களையும் சமாளித்தாக வேண்டும்.


மாநகராட்சிதான் இதில் கவனம் செலுத்தணும் என்றில்லை.அவரவருக்கு சுயகட்டுப்பாடு, ஒழுக்கம் அவசியம். அவ்வாறு துப்புவர்களில் படித்தவர்கள், படிக்காதவர்கள் , ஏழை, பணக்காரன் என்ற எந்த பேதமும் இல்லை...மிக ஒற்றுமையாக எல்லோரும் சேர்ந்தே துப்பி கெடுக்கிறார்கள்.

'பொது இடத்தில் துப்புவது இந்தியர்களின் குணாதிசயம்' சொல்வது யாரோ சாதாரண நபர் அல்ல, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகளே !!

காச நோய் 

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 8 லட்சம் பேர் காச நோயால் பாதிக்கபடுகின்றனர். ஒரு நாளைக்கு 1000 பேரும்  ஆண்டுதோறும் 4 லட்சம் பேரும் இறக்கின்றனர். கடந்த மாதம் மார்ச் 24 ஆம் தேதி தேசிய உலக காசநோய் தினம் கொண்டாடினார்கள்...இதை கொண்டாட்டம் என்று சொல்லகூடாது 'காசநோயால் இறந்தவர்களை நினைவுகூர்ந்தார்கள்' என்பதே சரி. கொடிய நோயான இது விரைவில் பரவ கூடியது, முக்கியமாக காற்றின் மூலமாக...! காச நோய் பீடித்தவர்களின்  தும்மல், எச்சி, இருமல் மூலமாக பிறருக்கும் தொற்றி விடுகிறது.    

அறிகுறி 

இந்த  நோய் உள்ளவர்களுக்கு முதலில் பசியின்மை தோன்றும், பின் எடை குறைதல் மூச்சு திணறுதல், தொடர் இருமல், சளியுடன் ரத்தம் போன்றவை ஏற்படும்.    

யாருக்கெல்லாம் அதிக ஆபத்து?

80 % நுரையீரலை பாதிக்கிறது. இது போக எலும்பு, மூளை மற்றும் வயிறு போன்ற இடங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எய்ட்ஸ், சர்க்கரை நோய், கல்லீரல் நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள், எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் போன்றவர்களைத் தாக்கிறது.



முக்கியமாக, ஒவ்வொரு நோயாளியும் 10 லிருந்து 15 பேருக்கு பரப்பி விடுகிறார்கள்...!!?

ஒருவருக்கு தொடர்ந்து இருமல் இருந்தால் உடனடியாக சளியை பரிசோதனைக்கு கொடுக்க வேண்டும். அதுவும் காலையில் தூங்கி எழுந்ததும் முதலில் வரும் சளியை கொடுத்தால் தான் காசநோய் இருக்கிறதா இல்லையா என கண்டுபிடிக்க முடியும். ஆரம்பத்தில் கண்டுபிடித்துவிட்டால் 6 மாதத்தில் முழுமையாக குணப்படுத்தலாம்.

காசநோய்க்கான மாத்திரைகள் அனைத்தும் அரசு மருத்துமனைகளில் இலவசமாக கொடுக்கப்படுகிறது. காச நோய் பாதிக்கப் பட்ட பெண்களை வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கிற கொடுமையும் நடக்கிறது. சாதாரணமாக எச்சில் துப்புவதின் மூலம் ஆண், பெண், குழந்தைகள் என்று பாகுபாடு இல்லாமல் பரவகூடிய இந்த நோயின் மீது கவனம் கொள்வது மிக அவசியம். 

தயவு செய்து பொது இடங்களில் எச்சில் துப்புவதை தவிருங்கள்...சுத்தம் சுகாதாரம் பற்றி சிறிதாவது அக்கறை கொள்ளுங்கள்...


வாழ பிறந்தவர்கள் நாம், நோயினால் வாட பிறந்தவர்கள் அல்ல...!! 


நோய் வரும் முன் காப்போம்...நோயற்ற வாழ்க்கை வாழ்வோம்...கண்ட இடத்தில் எச்சில் துப்புவதை நிறுத்துவோம்...குறைந்தபட்சம் நிறுத்த முயற்சியாவது செய்வோம்...!!

                                                                   * * * * *


படங்கள்+தகவல் - நன்றி கூகுள்