Thursday, August 26

11:18 AM
37ஒரு சமுதாயம் நல்ல விதத்தில் இருப்பதற்கு இன்றைய குழந்தைகளின் வளர்ப்பு மிகவும் அவசியம், இவர்கள் தான் நாளைய சமுதாயம். அதனால் இந்த விசயத்தில் நாம்  அசட்டையாக இருக்காமல் இன்னும் அதிகமாக கவனம் எடுத்து கொள்வது காலத்தின் கட்டாயம்.    
இன்றைய அவசர உலகத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன்  செலவு செய்யும்  நேரம் மிகவும் குறைவு தான். குழந்தைகள் நம்முடன்  வீட்டில் இருக்கும் நேரத்தை விட ஸ்கூல், டியூஷன், playground , டான்ஸ் கிளாஸ், மியூசிக் கிளாஸ்  இந்த மாதிரி இன்னும் பல காரணங்களால் வெளியே தான் பல நேரத்தை செலவு செய்கிறார்கள். வீட்டில் இருக்கும் கொஞ்ச நேரத்தையும் தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ் போன்ற பொழுதுபோக்கு சாதனங்கள் அவர்களை ஆக்கிரமித்து கொள்கின்றன.


பெற்றோர்களும் நம்மை தொந்தரவு செய்யாமல்  விட்டால் சரி தான் என்று விட வேண்டியதாகி விடுகிறது. பெற்றோர்களையும் குறை சொல்ல முடியாது, பெரும்பாலான இளம் பெற்றோர்களில்  இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருப்பார்கள், அலுவலக களைப்புடன் வீட்டில் உள்ள வேலைகளையும் செய்ய வேண்டி இருப்பதால் சோர்ந்து விடுவார்கள். தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ளவே அவர்களுக்கு நேரம் கிடைப்பது இல்லை. இதில் குழந்தைகளுடன் இருக்க இயலாத நிலையே உள்ளது.

ஆனால் இதையே காரணமாக சொல்லி தங்களை தாங்களே சமாதானம்  செய்து கொள்வது சரி இல்லை.

சமுதாயதிற்கு நல்ல பிள்ளைகளை கொடுப்பது உங்கள் கடமை.  ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்ககூடிய 'தார்மீக பொறுப்பு' இளம் பெற்றோருக்கு இருக்கிறது. நம்முடைய அன்பான, கண்டிப்புடன் கூடிய அரவணைப்பில் வளராத பிள்ளைகளின் எதிர்காலம் நிச்சயமாக சுபிட்சமாக, வளமாக இருக்காது !!


'குழந்தை வளர்ப்பு பற்றிய திட்டமிடல்' இப்போது கண்டிப்பாக தேவை படுகிறது. குழந்தைகளை நோய்கள், விபத்துகள் இவற்றில் இருந்து பாதுகாத்து வளர்க்கணும்... நல்ல பழக்க வழக்கங்களை கற்று கொடுக்கணும், படிப்பு மற்றும் பள்ளி சம்பந்தமான விவகாரங்களை பார்த்துக்கொள்ளவேண்டும். இது மாதிரி இன்னும் பல உள்ளன..அவற்றை சொல்லி கொண்டே போகலாம். இந்த மாதிரியான விசயங்களை  பெற்றோர்கள் நேரடியாக கண்காணித்து வளர்க்க வேண்டும். அப்போதுதான் அடுத்த தலைமுறை ஆரோக்கியமானதாக  உருவாகும்.      

சர்வதேச கணக்கெடுப்பு ஒன்று சமீபத்தில் எடுக்கப்பட்டது. அதை படிக்கும் போதுதான் இன்றைய நமது நிலை அதிர்ச்சி அளிக்கிறது...அந்த விவரங்கள் கீழே.....

*  பெற்றோர் இருவரும் வேலை பார்க்கும் சராசரி குடும்பங்களில் ஒரு வாரம் முழுமைக்கும் ஒட்டுமொத்தக் குடும்பமும் ஒன்றாக இருந்து செலவழிக்கும் நேரம் வெறும் 45 நிமிடங்கள் மட்டும்தானாம்....??!!

*   சுமார் 5 முதல் 16  வயதுக்குட்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒருவர் வாரத்துக்கு இரண்டு நாள்களாவது தம் பெற்றோரை பார்க்காமலேயே உறங்கச் செல்கிறார்களாம்...??!

*   வெறும் 20 சதவீத குடும்பத்தினர்தான் வாரத்துக்கு ஒரு நாளோ இரண்டு நாட்களோ குடும்பத்துடன் மொத்தமாக அமர்ந்து காலை உணவோ மதிய உணவோ அல்லது இரவு உணவோ உட்கொள்கிறார்கள்...??! 

*   கிட்டத்தட்ட இரண்டாயிரம் பெற்றோரிடம் கணக்கெடுப்பு  நடத்தியதில் 50 சதவீதத்துக்கும் அதிகமான பெற்றோர் ஒத்து கொண்ட  ஒரே  கருத்து , 'தங்கள் குழந்தைகளின் ஒரே பொழுது போக்கு, தொலைக்காட்சி, கம்ப்யூட்டர் போன்ற நவீன சாதனங்கள்தான் ' என்பது தானாம்.....!!?

இது நிச்சயம் ஆரோக்கியமான சூழ்நிலை இல்லை. என்ன செய்ய போகிறோம் பெற்றோர்களே...!!? 

நாம் எல்லோருமே வாழ்கையில் நம் குழந்தைகளுக்கு மிக சிறந்த விசயங்கள் எல்லாவற்றையும் கிடைக்க செய்ய  வேண்டும் என்று தானே விரும்புவோம்..அப்படி நல்ல விசயங்களை கொடுத்து வளர்க்க செய்ய சில நல்ல வழி முறைகள் இருக்கின்றன. 

அவை என்ன வென்று தொடர்ந்து அடுத்த பதிவில் பார்ப்போம்...  


         ௦      
Tweet

37 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...