Friday, June 25

5:31 PM
28

One  year without MJ 


பாப்  இசை உலகின் மன்னன்'  இந்த உலகம் இருக்கும் வரை இந்த பட்டம் இவர் ஒருவருக்குத்தான் பொருந்தும்.  இவர் இன்று நம்மிடையே இல்லை ஆனால் அவர் விட்டு சென்ற இசை, பாடல்கள், நடன முறைகள், நினைவுகள் கோடிக்கணக்கான இதயங்களில் என்றும்  வாழும்.....!!அவரது இசை நாடு, மொழி, மக்களை கடந்த உலக காவியம். 

சிறு வயது முதல் தீவிர ரசிகையான  எனக்கு அவரது முதல் நினைவுநாளில் இந்த பதிவை எழுத கிடைத்த வாய்ப்பை பெரும்பேறாக எண்ணுகிறேன்.  இசையால் ஒருவருக்கு ஆறுதலை, அமைதியை கொடுக்கமுடியும் என்பதை உணர்ந்து அனுபவித்தவள்.
அவரது முதல் ஆல்பம் முதல் கடைசி ஆல்பம் வரை உள்ள அனைத்து பாடல்களும் அசத்தலானவை. தனது 11  வயதிலேயே மேடையேறி பாட தொடங்கிய மைக்கேல் தனது 50 வது வயதுவரை ஓய்வின்றி இசைக்காக தனது வாழ்க்கையை அர்பணித்தார்.  


அவரின் வாழ்க்கை ஒரு மலர் படுக்கை அல்ல, முள் படுக்கை. முள்ளை  அவர் வைத்து கொண்டு ரோஜா மலரை நமக்கு பரிசளித்தவர்.  தந்தையுடன் மனகசப்பு, பல முறையற்ற   குற்றசாட்டுகள் , முதல் மனைவியுடன் விவாகரத்து,  உடம்பை சோதனைசாலையாக மாற்றிய பல ஆப்பரேஷன்கள்,  இன்னும் எழுத்தில் வடிக்க முடியாத அளவு மோசமான குற்றசாட்டுகள், பல தேவை அற்ற பிரசாரங்கள்......??!!  இதில் எவையெல்லாம்    உண்மை என்பது அவருக்கும், கடவுளுக்கும் தான் தெரியும்.  


ஒரு தொலைக்காட்சிக்கு அவர் கொடுத்த பேட்டியில், தனது நிலையை நன்றாக தெளிவு படுத்தினார். ஒரே  வார்த்தையில் தன் மேல் உள்ள குற்றசாட்டுகளுக்கு பதில் உரைத்தார் , ' நான் ஒரு பாவமும் அறியேன் ' என்று கண்ணில் நீர் வழிய ஒரு மகா கலைஞன் சொன்னதை பார்த்தபோது என் கண்ணீரை கட்டுபடுத்த நானும் வழி அறியேன்.  புத்தரையும், ஏசுவையுமே  குறை சொன்ன இந்த உலகம் இந்த சாதாரண மனிதனையா விட்டு வைக்க போகிறது?  " உங்களில் ஒரு குற்றமும் செய்யாதவர்கள் யாரும் இருந்தால்  அவர்களே முதல் கல்லை இவள் மேல் எறியுங்கள் " என்று ஒரு இடத்தில் ஏசுநாதர் கூறி இருப்பார்.  அது போல் ஒரு குறையும் இல்லாத  மனிதராக  நாம் இருந்தால்  அவரை குறை சொல்லலாம்  ஆனால் நாம்....???


சிறு வயதில் வெள்ளையர்களின் நிற பேத கொடுமைகளில் தொடங்கி  அவர் இந்த உலகை விட்டு மறைந்த பின்னும் இன்னும் அவரை வைத்து தொடரும் அவலங்கள்....?  மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட  யாருக்கும் உரிமை இல்லை, ஆனால் பிரபலம் என்றால் எதுவுமே செய்திதான்.  இவரை பொறுத்தவரை அவரது ஒவ்வொரு அசைவும் உலகத்தாரால் விமர்சிக்கப்பட்டது.  இந்த விமர்சனம் அவர் மறைந்த பின்னும் குறையவில்லை . ஒருவர் இறந்தபின் அவரது நிறைகளை மட்டுமே பேசபடுவதுதான் நாகரீகம்.  ஆனால் அவர் இறந்த பின் வந்த செய்திகள் அதனை விளம்பரத்திற்காக வெளி இட்டவர்களை அவரது ரசிகர்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.  அவரை வைத்தும், அவரது பாடல்களை கொண்டும் சாதாரண பிளாட்பார கடையில் இருந்து ஆல்பம் வெளியிட்ட பெரிய நிறுவனங்கள் வரை எதிர்பார்க்க முடியாத அளவிற்கு லாபம் சம்பாதித்தன,  இன்றும் சம்பாதித்து கொண்டுதான் இருக்கின்றன.  


அவரது நினைவாக ஒரு மியுசியம் கட்ட போகிறார்களாம். ஆனால் அதற்கு அடிக்கல் நாட்டும் முன்னரே, அதனால் ஒரு வருடத்திற்கு வர கூடிய வருவாய் இத்தனை  கோடி டாலர்கள் என்று கணக்கு போட்டு விட்டார்கள்.  என்ன உலகம்...??!! 


முக்கியமான ஒன்று என்னவென்றால் யாரை நம்பி தனது உடம்பை ஒப்படைத்து மருத்துவம்  பார்த்து கொண்டு இருந்தாரோ அவரே அவரது உயிரை பறிக்கும் காலனாக மாறியது.... ??


'make a little space, make a better place' என்று பாடிய அவருக்கு இந்த பூமியில் அப்படி ஒரு சிறந்த இடம் வாழ கிடைக்கவில்லை. அந்த உலகத்திலாவது அவர் விரும்பிய அந்த அமைதியான இடம் கிடைக்கட்டும்!!


                    ரசிகர்கள் 
                    உணருவார்கள், அந்த                                                                       
                    உயிரின் ஓசையை...! 
                    இப்போதும்  கேட்கிறது... 
                    'இந்த அமைதியும்,                               
                    ஆனந்தமும் 
                    கிடைக்கும் என்று முன்பே 
                    தெரிந்து இருந்தால் 
                    என்றோ மரித்திருப்பேன் !
                    வாழ்க என்பேன்...
                    இந்த இடம்,  நான் வர 
                    துணை புரிந்தவர்களை !!'   
                                
ஒவ்வொரு பாடலுமே ஒரு காவியம்தான்.  அனைத்தையும் விரிவாக சொல்வதை விட ஒரு நாலு பாடல்களை இங்கு குறிப்பிடுகிறேன்.


Thiriller   


1980 ம் ஆண்டில் இந்த பாடலை எடுக்க 50,000 டாலர்கள் செலவு ஆகியதாம்.  வசூலில் சாதனை படைத்த பாடல். பேய் படம் பார்த்து பயந்து வெளியில் வரும் தன் பெண் தோழியுடன் ரோட்டில் பாடி கதை சொல்லி கொண்டே வருவார்,  அப்படி ஒரு கல்லறையை  கடந்து வரும்போது, அங்குள்ள கல்லறையை திறந்து கொண்டு சடலங்கள் எழுந்து வருவது போலவும், பின் மைக்கேலுடன் சேர்ந்து நடனம் ஆடுவது போல் காட்சி அமைக்க பட்டிருக்கும்.  இந்த காட்சி அமைப்பும், மிரட்டும் இசையும், இன்று பார்க்கும் போதும் திகிலாக இருக்கும்.


Beat it .   


முதல் ராக் பாடல் இதுதான் என்று அறியப்பட்டது.  இதில் இடம் பெற்ற அனைத்து கலைஞர்களும் கருப்பு இன அமெரிக்க மக்களும், தென் ஆப்பிரிக்க இனத்தவர்களும் தான்.  'சண்டை வேண்டாம்'  என்ற பொருளில் பாடல் அமைக்க பட்டிருக்கும்.  இந்த பாடல் மைக்கேலின் சிறந்த பாடல் மட்டும் இல்லை அகில உலகத்தின் சிறந்த பாடல் என்ற பெயரை பெற்றது.


Smooth criminal 


ஒரு சூதாட்ட விடுதியில் நடப்பவற்றை வைத்து பாடல் எடுக்கப்பட்டு இருக்கும்.  அந்த விடுதியை சுற்றி நடனத்துடன் பாடல் மிக அற்புதமாக படமாக்க பட்டு இருக்கும்.   நடனம் ரொம்பவே வித்தியாசமாக இருக்கும்.     

Heal the World 


இந்த  பாடலில்  அதிர  வைக்கும்  இசையோ , அசத்தும்  நடன அசைவுகளோ இல்லை. ஆனால் மனதை நெகிழ செய்யும் காட்சிகள்,  ஆழ்மனதை ஊடுருவும் வரிகள்.  உலகில் போர் வேண்டாம் , அமைதி நிலவ வேண்டும் என்பதை சிறு குழந்தைகளை வைத்து மிக அருமையாக படமாக்கப்பட்டு  இருக்கும்.  ராணுவ வீரர்களின் கையில் குழந்தைகள் பூவை கொடுக்கும் காட்சியும், அதன்பின் அவர்கள் தங்கள்  கையில் பிடித்திருக்கும் துப்பாக்கியை கீழே  எறிவது போலவும் இடம்பெற்ற  காட்சிகள் புல்லரிக்க வைக்கும். 
அந்த பாடலில் உள்ள சில வரிகள் 
"Think about the generations and to say we want to make it a better world for our children and our children's children. So that they know 
it's a better world for them; and think if they can make it a better
place." 
"Make it a better place
For you and for me and the entire human race.
There are people dying
If you care enough for the living
Make a better place for 
You and for me"
அவரது நினைவுநாளில்  நான் எழுதும் இந்த பதிவை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.


   
           
Tweet

28 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...