சனி, நவம்பர் 19

10:07 AM
16நவம்பர் 14 குழந்தைகள் தினம்,  'முன்னாள் பாரத பிரதமர் நேரு குழந்தைகள் மிக நேசித்ததால், அவரது பிறந்த தினத்தை குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்' இத்தினம் கொண்டாடபடுவதின் காரணம் நமக்கு தெரிந்து இது ஒன்றுதான். ஆனால் உண்மையில் குழந்தைகளின் கையில் தான் ஒரு நாட்டின் எதிர்காலம் உள்ளது என்பதை உணர்த்தவே இந்த தினம்.


விழா

இத்தினம் முக்கியமாக பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடபடும். ஆசிரியர்களை பொறுத்தவரை விழாவினை எப்படி சிறப்பாக நடத்துவது என்பதிலும், பல்வேறு போட்டிகளுக்கு தங்களை தயார்படுத்தி கொள்வதில் குழந்தைகளின் சிந்தனைகள் இருக்கும்...ஆனால் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு எந்தவித சலனமும் இன்றி வருடத்தின் மற்றொரு நாள் இது என்பதாக போய்விடுகிறது...!!? 

'குழந்தைகள் தினம்' கொண்டாடுவது முக்கியம் இல்லை...குழந்தைகளை கொண்டாடுவோம் முதலில்...!!

சிறையில் நம் குழந்தைகள் 

சிறைபட்ட வண்ணத்துபூச்சி பார்க்க அழகாக இருக்கும் ஆனால் அதன் சிறகுகள் ஒடிக்கபட்டிருப்பதை அது அறியாது. இன்றைய குழந்தைகளும் தாங்களாகவே சிறைக்குள் சென்று கதவை மூடி கொண்டார்கள்.கம்ப்யூட்டர் கேம்ஸ், தொலைக்காட்சி இன்னும் பிற அறிவியல் சாதனங்களின் ஆக்கிரமிப்பில் அடைபட்டு கிடக்கிறார்கள்.ஒரு சிலர் தமது வேலைக்கு இடைஞ்சல் வந்துவிட கூடாது என்று அந்த கதவை தட்டுவது இல்லை, அப்புறம் எங்கே திறப்பது...?!

உடலுக்கு சுறுசுறுப்பை தரும் விளையாட்டுகள் சுத்தமாக குறைந்துவிட்டன...பாட்டி, தாத்தாவிடம் கதை கேட்கும் கொடுப்பினை நம் குழந்தைகளுக்கு இல்லை...ஜங்க் புட் சாப்பிட்டு உடம்பை கெடுத்துகொள்ளும் தவறான பழக்கம்...உறவினர்கள் வீட்டுக்கு செல்லும் பழக்கம் இல்லை, தங்களின் உறவுகள் யார் எவர் என்றே அறியாத பரிதாபம் !   

பல வீடுகளில் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட தனிமை சிறையில் குழந்தைகள் ! சில நிமிட நேரங்கள் கூட குழந்தைகளிடம் செலவு பண்ண நேரம் இன்றி பொருளாதார தேடலுக்கு பின்னே சில பெற்றோர்கள் !

கண்ணில் தெரியுது வானம் என்று நாம் சொல்லிக்கொண்டிருக்கும் போது இவர்கள் தொட்டே விடுகிறார்கள்...எங்கும் வேகம்...எதிலும் வேகம் என்று இருக்கிற இவர்களை நாம் கவனமாக பாதுகாக்க வேண்டாமா...?!! உணவு, உடை, படிப்பு கொடுப்பதுடன் தங்கள் கடமை முடிந்துவிடுகிறது என்று எண்ணுவது தவறு அல்லவா ? நல்ல சமுதாயத்தை உருவாக்குவதும் ஒவ்வொரு பெற்றோரின் முக்கிய கடமை தானே ?!

பாட்டு, நடன போட்டிகள்

எல்லா டிவி சேனல்களிலும் ஏதாவது குழந்தைகளுக்கான போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. தங்கள் குழந்தையும் பங்குபெறவேண்டும் என்ற சில பெற்றோரின் ஆர்வத்தில் தவறு இல்லை. ஆனால் இதற்காக தன் அன்றாட வேலைகளை தங்கள் விருப்பபடி செய்யவிடாமல் பெற்றோர்  இழுத்த இழுப்புகெல்லாம் இழுபடும் பிள்ளைகள் பாவம்.தன் குழந்தை ஜெயிக்கவேண்டும் என்று திணிக்கபடுபவை, தோல்வி அடைந்துவிட்டால் பெற்றோரின் அதிக எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ய இயலாமல் மன அழுத்தத்தில் விழ வைத்துவிடுகிறது. தவிர பலர் முன் தோற்றுவிட்டோம் என்பது ஒருவித சுயபச்சாதாபத்தை, தாழ்வுமனப்பான்மையை  ஏற்படுத்திவிடுகிறது. அதிலும் போட்டியில் எலிமிநேஷன் என்றதும் அவர்கள் முகத்தில் தெரியும் அச்சமும், செலக்ட் ஆகவில்லை என்றால் ஏற்படும் கலக்கமும் டிவியில் பார்க்கும் நமக்கே வேதனையாக இருக்கும்.

வெற்றி தோல்வி இரண்டையும் சமமாக எதிர்கொள்ளகூடிய அளவிற்கு மனதை தயார் செய்த பின்னர் இது போன்ற போட்டிகளில் பங்கு  கொள்ளவைப்பது நல்லது. 

அர்த்தம் புரிகிறதோ இல்லையோ குழந்தைகள் பாட்டு போட்டியில் பாடும் இன்றைய ஒரு சில சினிமா பாடல்கள் கேட்கும் போது சங்கடமாகவும், கூச்சத்தில் நெளியவும் வைக்கிறது. இது போன்ற பாடல்களுக்கு பதிலாக பாரதியார், பாரதிதாசன், பாடல்களோ, ஆழ்வார், நாயன்மார்களின் பாசுரங்கள் இன்னும் பல... இவைகளை பாட வைக்கலாமே...அதன் மூலம் அப்பாடல்கள் மனதில் பதியும்...மனதில் பதியும் அவை அவர்களை நல் வழிபடுத்தும் !! 

சில பள்ளிகளில் சினிமா பாடல்களுக்கு குழந்தைகளை ஆட வைப்பதில்லை, அது போன்ற பள்ளிகளை பாராட்டலாம்.

குழந்தைகளை குழந்தைகளாக எண்ணாமல் இதை செய் அதை செய் என்று வறுபுறுத்தி வயதுக்கு மீறியவற்றை செய்யும் போது நம் மனது மகிழவே செய்கிறது...ரசிக்கிறோம்...அதே குழந்தைகள் நாளை பெற்றோரை எதிர்த்து நடக்கும் போது அதையும் ரசிக்க நம்மால் முடியுமா ?! 

என்னவெல்லாம் செய்யலாம்...?!


குழந்தைகள் தினத்தன்று ஆதரவற்ற குழந்தைகளை பள்ளி குழந்தைகளுடன் இணைத்து பெரிய விழாவாக கொண்டாடலாம். அப்போது ஆதரவற்ற குழந்தைகள் என்று ஒரு இனம்(?) இருக்கிறதா என்பது நம் குழந்தைகளுக்கு தெரியவரும்...அவர்களை அணைத்து செல்லவேண்டும், அவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் வளர இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.

உலகெங்கும் குழந்தைகள் மீதான குற்றங்கள்/கொடுமைகள்  பெருகிவிட்டன...இதை பற்றி யாரும் பெரிதாக அக்கறை பட்டதாக தெரியவில்லை...அங்கே ஒன்றும் இங்கே ஒன்றும் தானே நடக்கிறது என்று மெத்தனமாக இருக்கும் இந்த நிலை மாறினால் நல்லது.

குழந்தைகள் தினம் கொண்டாடும் நம் இந்திய அரசு குழந்தைகள் மீதான குற்றங்களை தடுக்க பெரிய அளவில் எந்த முயற்சியும் எடுத்து வருவதாக எனக்கு தெரியவில்லை...(தெரிந்தவர்கள் சொல்லலாமே...)குழந்தைகளுக்கு என்று நல சங்கங்கள் இருக்கிறதா ? அவை என்ன செய்கின்றன ?! குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தட்டி கேட்கவோ அல்லது அவற்றை களையவோ முயற்சி செய்கிறதா சங்கங்களும், அரசும் ?!!

மூன்று வயது குழந்தையும் பாலியல் கொடுமைக்கு ஆளாகிறது...இதை குறித்த விழிப்புணர்வு பெற்றோர்களுக்கும் வேண்டும்...பள்ளிகளில் குழந்தைகளுக்கு அடுத்தவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் பற்றியும் குட் டச், பேட் டச் பற்றியும் சொல்லி கொடுக்க வேண்டும். ஒருவர் தவறான இடத்தில் தொடுகிறார் என்றால் உடனே எதிர்ப்பை காட்ட தெரிய வேண்டும், பெற்றோரிடம் சொல்லவேண்டும் என்பதை அவர்களுக்கு நாம் அறிவுறுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு தண்டனை கடுமையாக்க பட்டால் இவை குறையுமா ? 

இவர்களும் குழந்தைகளே !

* முறையான கல்வி பெற வசதி இல்லாதவர்கள்
* ஆதரவற்ற அநாதை குழந்தைகள் 
* பாலியல் கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகள் 
* குழந்தை தொழிலாளர்கள் 
* சரிவிகித ஊட்டச்சத்து இன்றி நோயில் பிடியில் அவதிப்படும் குழந்தைகள்   
* பிச்சை எடுக்கும்(எடுக்க வைக்கப்படும்) குழந்தைகள்
* குப்பை பொறுக்கும் குழந்தைகள் 

ஆதரவின்றி தெருவில் சுற்றிக்கொண்டிருக்கும் குழந்தைகள் அநேகர் !இத்தகைய குழந்தைகளை பார்க்கும் போது நம்மால் இயன்ற ஒரு உதவியை செய்யலாம், அவர்களிடம் பேசி சம்மதிக்க வைத்து பள்ளிகளில் சேர்த்துவிடலாம்...அல்லது இதற்கென இருக்கும் தொண்டு நிறுவனங்களை தொடர்பு கொண்டு இவர்களை ஒப்படைக்கலாம். நமக்கென்ன வந்தது, இதை செய்ய போனால் வேறு ஏதும் பிரச்சனை வந்துவிடுமோ என அச்சம் கொள்ளாமல் இயன்றவரை நமக்கு தெரிந்தவர்கள் மூலமாக நல்ல இடங்களில் சேர்த்துவிடுவது நல் இதயம் உள்ள எல்லோரின் கடமை.

தொண்டு நிறுவனங்களின் வேலை இதுவென ஒதுங்கி கொள்ளாமல், தனி நபர் ஒவ்வொருவரும் உதவ முன் வரவேண்டும்.

நம்மில் பலரும் செய்வது பிறந்த நாள், நினைவுநாளின் போது அநாதை ஆசிரமங்களுக்கு சென்று இனிப்பும், உணவும் கொடுப்பது, இத்துடன் கடமை முடிந்துவிடுகிறது என்று நமது சுயம் திருப்தி பட்டு கொள்கிறது.உணவு மட்டும் அவர்களை திருப்தி படுத்தி விடுமா ? ஒரு சிலர் இத்தகைய நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட தொகையை கொடுப்பதும் உண்டு. ஆனால் இவை மட்டும் போதுமா ?!! யோசியுங்கள் !!

நம் குழந்தைகளின் மீது வைக்கும் அதே அன்பை பிற ஆதரவற்ற குழந்தைகளின் மீதும் செலுத்துவோம். அக்குழந்தைகளுக்கும் இப்பூமியில் அனைத்தையும் பெறவும், வாழவும் உரிமை இருக்கிறது...!! அவ்வுரிமையை நாம் மதிப்போம்...எந்த குழந்தைகளாக இருந்தாலும் குழந்தைகளை குழந்தைகளாக மட்டுமே பார்ப்போம்...!! அவர்கள் நலனில் அக்கறை காட்டுவோம்...!!

இக்கட்டுரை அதீதத்தில் வெளிவந்தது...நன்றி அதீதம்.

வருடம் தவறாமல் குழந்தைகள் தினம் கொண்டாடபவர்களே ! இனிமேல் தினங்களை விட்டு விட்டு குழந்தைகளை எப்போது கொண்டாட போகிறீர்கள் ?
                                                                  -கவிக்கோ அப்துல் ரகுமான்

நாளை நவம்பர் 20 ஆம் தேதி சர்வதேச குழந்தைகள் தினம்...உலகம் முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாட படுகிறது...!

நம் குழந்தைகளை நாம் கொண்டாடுவோம்...! அனைத்து குழந்தை செல்வங்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்...Tweet

16 கருத்துகள்:

 1. குழந்தைகள் தின வாழ்த்துக்கள். சிறந்த பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி.


  நம்ம தளத்தில்:
  நமது உலகத்தை(பூமி) இப்படி யாரும் பார்த்திருக்க மாட்டிங்க?

  பதிலளிநீக்கு
 2. குழந்தை பருவத்தில் நாம் செய்ய முடியாததை நம் குழந்தை மேல் திணித்தல்..
  நாம் நம் பெற்றோரிடம் அனுபவித்ததை நம் குழந்தைக்கும் செய்யும் ராகிங்

  தேவை சமுதாய மாற்றம்...

  பதிலளிநீக்கு
 3. /.எந்த குழந்தைகளாக இருந்தாலும் குழந்தைகளை குழந்தைகளாக மட்டுமே பார்ப்போம்...!! அவர்கள் நலனில் அக்கறை காட்டுவோம்...!!//

  அழகாக சொல்லியிருக்கீங்க .அதீதம் இதழில் வெளியானதற்கு வாழ்த்துக்கள் .பதிவில் உள்ள ஒவ்வொரு வரியையும் மேற்கோள் காட்டி பதில் எழுத வேண்டும் என் ஆசை ,அற்புதமான கட்டுரைக்கு பாராட்டுக்கள் ,தொடருங்கள் .

  பதிலளிநீக்கு
 4. அப்துல் ரகுமான் மேற்கோள் அருமை! குழந்தைகள் நலம் உங்களுக்கு நெருக்கமானது போலத் தோன்றுகிறது.
  (உலகக் குழந்தைகள் தொகையில் இந்தியா 25% என்று எங்கோ படித்த நினைவு. பிள்ளைகள் புகைப்படம் கண்ணில் ஒற்றிக் கொள்ளும் படி இருக்கிறது.)

  பதிலளிநீக்கு
 5. குழந்தை களின் இன்றைய நிலையும், பெற்றோரின் அவல நிலை
  யும், இனி, இந்நிலை நீங்க செய்ய
  வேண்டிய வழிமுறைகளையும்
  தெளிவு படுத்தியுள்ளீர்
  அருமை நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 6. @@ நண்டு @நொரண்டு -ஈரோடு...

  நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 7. @@ தமிழ்வாசி - Prakash...

  நன்றி பிரகாஷ்.

  பதிலளிநீக்கு
 8. @@ suryajeeva said...

  //குழந்தை பருவத்தில் நாம் செய்ய முடியாததை நம் குழந்தை மேல் திணித்தல்..
  நாம் நம் பெற்றோரிடம் அனுபவித்ததை நம் குழந்தைக்கும் செய்யும் ராகிங்//

  அருமையா சொல்றீங்க சூர்யா.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 9. @@ சிநேகிதி...

  நன்றி தோழி.

  பதிலளிநீக்கு
 10. @@ angelin...

  வாழ்த்துக்கு நன்றி தோழி.

  பதிலளிநீக்கு
 11. @@ முனைவர்.இரா.குணசீலன்...

  நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 12. @@ அப்பாதுரை said...

  //குழந்தைகள் நலம் உங்களுக்கு நெருக்கமானது போலத் தோன்றுகிறது.//

  புரிதலுக்கு மிக்க நன்றிகள் சகோ.

  பதிலளிநீக்கு
 13. @@ புலவர் சா இராமாநுசம்...

  இன்றைய குழந்தைகளுக்கு வசதி வாய்ப்புகள் பெருகிய அதே நேரம் சுமைகளும் அதிகரித்ததை போல இருக்கிறது...

  நன்றிகள் அப்பா.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...