திங்கள், நவம்பர் 21

10:55 AM
30


பக்கத்துல ஒரு மனுசன் ஐயோ அம்மானு கதறிட்டு கிடந்தாலும் காது கேட்காத மாதிரியே ஒரு சிலரு இருந்தாலும், ஐயோ பாவம்னு அனுதாப பட, உதவி செய்ய கோடி பேர் இருக்கிறாங்க...அதுவும் என்ன போல அடுத்தவங்களுக்காக உசுற கைல பிடிச்சிட்டு ஓடிட்டு இருக்கிறதாலத்தான் நாட்ல மழையே பெய்யுது...ஆங் !மழைன்னு சொன்னப்ப ஞாபகம் வருது, அப்ப அப்ப என் உசுற இந்த மழைதான் காப்பாத்திட்டு வருது...இதுவும் என்னை கைவிட்டுடா என் நிலமை அவ்ளோதான்.

யார் இப்படி தன்னந்தனியா புலம்பரதுன்னு யோசிக்கிறீங்களா...?! நான்தான் ஆறு...ம்...வற்றாத ஜீவ நதினு நீங்க பெருமையா பேசுற தாமிரபரணி தான் நானு !! என்னடா ஒரு ஆறு புலம்புதுன்னு சிரிக்காதிங்க...முழுசா படிச்சா என்னை இப்படி புலம்ப வைக்கிறதே உங்களை போன்ற சில மனுசங்கதானு புரிஞ்சி தலை குனிவீங்க...!

நானும் யாராவது என்ன காப்பாத்த வருவாங்களானு காத்து கிடந்ததுதான் மிச்சம், ஒருத்தரும் எட்டி பார்க்கல...?! கலெக்டர், மந்திரி, எம்எல்ஏனு  பெரிய பெரிய ஆளுங்கலாம் என்ன கண்டுக்காம போனாலும் பொது சனங்க எம்மேல எம்புட்டு பாசம் வச்சிருக்காங்க தெரியுமா...?! ஆனா பாவம், அவங்க ரொம்ப அப்பாவிங்க, என் நிலைய பாத்து கண்கலங்கிறதோட முடிச்சுகுவாங்க, அதுதான் இங்க வந்தா நீங்களாவது என் நிலமைய பார்த்து என்னை காப்பாத்துவீங்கனு வந்திருக்கேன்...

பெருமையும், சீரழிவும்

திருநெல்வேலி அல்வாக்கே என்னாலத்தான் ருசி (ஒரு சுய விளம்பரந்தேன் !) அப்படின்னு வெளில பேசிகிறாங்க ! ஆனா இப்போ இருக்கிற தண்ணிய குடிச்சி பாருங்க, சப்புன்னு இருக்கும்...!? முன்னாடி எல்லாம் காடு கழனிக்கு போற விவசாய சனங்க, தண்ணிய அப்படியே அள்ளி குடிச்சி, 'ஆஹா எம்புட்டு ருசி சோறு கூட வேணாம்ல, வயிறு நிறைஞ்சு போச்சு'னு சந்தோசமா சொல்லுவாக...ம்...அதெல்லாம் ஒரு காலம் !


பொதிகை மலையில் பொறந்து அப்படியே நெல்லையை செழிப்பாக்கிட்டு, தூத்துக்குடி மாவட்டம் புன்னை காயல்ல போய் கடலோட கலந்துடுறேன்.....போற பாதை எல்லாம் செழிப்பா பச்சை பசேல்னு இருக்கும்...ஆனா இப்போ கரையோரத்தில கால் வைக்க முடியாத படி சேறும், சகதியுமா குப்பையும், கூளமா நிறைஞ்சு கிடக்குது...ஆத்துல சில இடத்தில அமலை செடிவேற நிறைய வளந்து மூடி கிடக்குது. மாநகராட்சி ஊருக்குள்ள பன்றிகள வளர்க்க தடை போட்டதால அதுங்க எல்லாம் என் கரையோர ஊர்கள்ல குடும்பமா கும்மாளம் போடுதுங்க...இதால கொசுங்க பெருகி போச்சு குழந்தை குட்டிகளுக்கு நோய் வந்திடுமேனு எனக்குதான் கவலையா இருக்கு...

ஆலை கழிவையும் கொண்டு வந்து கொட்டுறாங்க...தொழிற்சாலை கழிவு நீரை ஆத்துல விடுறாங்க...இதை எல்லாம் யாரு கண்டுகிறாங்க ? தட்டி கேட்குறதும் இல்ல ?!

அட படுபாவிகளா !

இன்னொரு பக்கம் என் மடியில கை வைக்கிற பாவிகளை என்னனு சொல்ல ...அவனுங்கள அந்த காமாட்சிதான் பாக்கணும் ! ஜே சி பி எந்திரத்தை வச்சு மணலை அள்ளி கொண்டு போறாங்க...ஐயோ ! எனக்கு வலிக்குதேனு கத்தி கதறினாலும் அரக்க சென்மங்க காதுல எங்க விழுது...?! இதை பாக்குற சனங்களோ இவன் உருபடுவானானு சாபம் போடுறாங்க...ஆனா எப்படி எதுக் கிறதுன்னு அவங்க பயப்படுறத பார்த்து என் வலியை பொறுத்துகிறேங்க...! 


இந்த மணல் கேரளாவுக்கு லாரி லாரியா போவுது...அந்த சனங்க ரொம்ப புத்திசாலிங்க, எங்க இருந்து மணல் வந்தா என்ன, நம்மூரை நல்லா பார்த்துபோம்னு இருக்காங்க...அங்கிருந்து மாலத்தீவுக்கு வேற போகுதாம்...இது எனக்கெப்படி தெரியும்னு பாக்குறீங்களா, இந்த லாரி டிரைவர்கள் பேசுவதை அப்ப அப்ப கொஞ்சம் கேட்பேன், இப்படிதான் என் பொது அறிவு வளருதுங்க...!

ஆமாம் தெரியாமத்தான் கேட்குறேன், மணலை அள்ளி வேற வேற இடத்தில மலையா குவிச்சு வச்சிருக்காங்களே, அரசாங்கத்தோட ஆளுக யாரும் பார்த்து எப்படி ஆத்து மணல் இங்க வந்ததுன்னு கேட்க மாட்டாங்களா ? இதை பறிமுதல் செய்ய சட்டத்தில இடம் இல்லையா ? (ஓட்டைதான் இருக்குனு சொல்றீங்களா, நீங்க சொன்னா சரிதான் !) 

என்ன ஒரு புத்திசாலித்தனம் ?!


எங்க ஊரு பக்கம் சொல்வாங்க..."கள்ளன் பெருசா, காப்பான் பெருசா" னு. இந்த கள்ளங்க எப்படி எல்லாம் பிளான் போடுறாங்க தெரியுமா... 'மணல் எடுக்க தடை போடுறீங்க சரி, ஆனா நாங்க ஆத்து பக்கத்துல நிலம் வாங்கி, அப்புறம் அந்த பட்டா இடத்தில மணலை வேண்டிய மட்டும் அள்ளுவோம், இப்ப என்ன பண்ணுவீங்களாம்'னு சிரிக்கிறானுங்க...?! அட முட்டா பசங்களே! இப்படி நிலத்த வாங்கி கடும் ஆழத்துல தோண்டுறீங்களே, நாளைக்கு ஆத்துல வெள்ளம் வந்தா ஊருக்குள்ள வந்துடுமேனு கொஞ்சமாவது யோசிசீங்களா...?!! உங்க சுயநலத்துக்காக எத்தன பேர் உசிரோட விளையாடுறீங்க...!? நீங்க நல்லா இருப்பீங்களா !கைவிட்டுடாதிங்க...

இது ஏதோ புலம்பல்னு கண்டுக்காம விட்டுடாதிங்க...பறந்து விரிந்து ஊருக்கு நடுவில கம்பீரமா ஓட்டிட்டு இருந்த நான், இன்னும் கொஞ்ச நாள்ல ஒரு கோடா , ஒரு புள்ளியா சுருங்கி போனாலும் போய்டுவேன்...! மணல் எடுக்குற சாக்குல எங்களை கொஞ்ச கொஞ்சமா ஆக்கிரமிச்சிட்டு இருக்கிற மணல் கொள்ளையர்களை கூட்டமா சேர்ந்து தட்டி கேளுங்க, போராட்டம் பண்ணுங்க ...ஆரம்பத்தில எதிர்ப்பு இருந்தாலும் தொடர்ந்து நீங்க கொடுக்கிற டார்ச்சர்ல அவனுங்க இந்த கொள்ளை தொழிலையே மறந்துறணும்...ஊர் கூடி தேர் இழுத்தா தேர் நகராமலா போய்டும்...!? முயன்றுதான் பாருங்களேன்...!!

இது என்னோட தனிப்பட்ட வேதனைனு இல்ல, என்னப் போல பல ஆறுகளும் இப்படி தான் அழிஞ்சிட்டு வருது...சனங்களின் தாகத்தை தீர்த்து, விவசாயத்துக்கு உதவி செஞ்சி, ஊருக்கே சோறு போடுற எங்க நிலைமை ரொம்ப மோசமா போயிட்டே இருக்குது...! இனியாச்சும் யாராவது கவனம் எடுத்து, சீரழிஞ்சி செத்துக்கிட்டு இருக்கிற எங்கள வாழ வையுங்கனு என் எல்லா உடன்பிறப்பு சார்பில கேட்டுகிறேன்...

இப்ப மழைகாலம் வேற எல்லா தண்ணியும் கெட்டு போய் கிடக்கு...பிளாஸ்டிக் கேன்ல வாங்கினாலும் அதையும் சுட வச்சு குடிங்க...எங்க ஊருகாரவுக உணவு உலகத்தில சங்கரலிங்கம் ஐயாவோட இந்த பதிவை படிச்சி பாருங்க...அவர் சொல்றது உங்க நல்லதுக்கு தான்னு நினைச்சி அதை அப்படியே கடைபிடிங்க... உங்க புள்ள குட்டிகளை நோய் நொடி அண்டாம பத்திரமா பார்த்துகோங்க சனங்களே...

இத்தனை நேரம் பொறுமையா என் வேதனைகளை கேட்ட உங்க நல்ல மனசுக்கு நீங்க எல்லோரும் ரொம்ப நல்லா இருக்கணும்னு மனசார வாழ்த்துறேன்...முடிஞ்சா மத்தவுககிட்டையும் இதை கொஞ்சம் எடுத்து சொல்லுங்க...உங்களுக்கு புண்ணியமா போகும்...!

இப்படிக்கு 
தாமிரபரணி ஆறு
திருநெல்வேலி.

* * * * * * * * *தலைப்பு - நன்றி சங்கரலிங்கம் அண்ணா    
படங்கள் - நன்றி கூகுள்     
Tweet

30 கருத்துகள்:

 1. உங்கள் சமூக சிந்தனைக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. இதைப் போன்று நெல்லை மக்கள் ஒவ்வொருவரும் சிந்தித்தால், நதியும் நாடும் வளம் பெறும்.

  பதிலளிநீக்கு
 3. இப்படி அழுத என் சிஸ்டர் வைகையோட குரலை யாரும் கவனிக்காமதான் வறண்டு போயிட்டது. நான் வற்றாதவங்கற பெருமைய காப்பாத்திட்டிருக்கேன். அதையும் கெடுத்துடாதீங்கப்பா... -நதியின் அந்தராத்மாவாகவே ஒலித்திருக்கிறீர்கள். மனதைத் தொட்டது....

  பதிலளிநீக்கு
 4. தமிழக ஆறுகளின் அத்தனையும் இப்படித்தான் இருக்கிறது...

  இதைக்காப்பற்ற அரசு என்ன செய்யபோகிறதோ....  ஒரு கவிதை...

  எங்கள் ஆற்றில்
  இடைவிடாமல் ஓடிக்கொண்டிருக்கிறது..
  மணல் லாரிகள்...!

  பதிலளிநீக்கு
 5. மணல் லாரிகளும் பெரும்பாலும் அரசியல்வாதிகளுக்கு சொந்தமானது. இது ஒரு ஆற்றின் குரல் மட்டும் அல்ல. இந்த பூமியின் கதறல். வேறு வழியே இல்லாத போது நம்மை அழித்து தன் புதிய பாதையை அமைக்கும் இந்த நதிகள். தூரத்தில் இல்லை அந்த நாட்கள்.

  பதிலளிநீக்கு
 6. ஆறு தன் நிலையை எடுத்து சொல்லிவிட்டது,துயர் துடைக்க வேண்டியது மக்களின் பொறுப்பு.

  பதிலளிநீக்கு
 7. கண் கலங்க வைத்த பதிவு. அன்னை தாமிரபரணியை மணலுக்காக சுரண்டுவதும், கழிவுகளை கலக்க விடுவதும் மிகவும் கொடுமை.

  பதிலளிநீக்கு
 8. சும்மா பெருமைக்கு ஆறுகளை
  பெண்ணாய் பாவித்துவரும் நம்மவர்கள்..
  ஆற்றுமணலை அதிகப்படியாக அள்ளுவதன் மூலம்
  துகிலுரியும் குற்றம் செய்கிறார்கள் என்பதை அழகாய்
  ஆழமாய் சொல்லி விட்டீர்கள் சகோதரி...

  பரணி பாடி வந்த தாமிரபரணி இன்று நிலைகெட்டு
  தன் சீர்கெட்டு போவது மனம் வேதனைக்குரியது..
  மூன்று மாவட்டங்களுக்கு கருணை புரியும் பரணியை
  வறண்டு போகும் முன் மணல் கொள்ளையை நிறுத்திக் கொள்ளுங்கள்...
  அருமை அருமை...

  பதிலளிநீக்கு
 9. கம்பீரமா ஓட்டிட்டு இருந்த நான், இன்னும் கொஞ்ச நாள்ல ஒரு கோடா , ஒரு புள்ளியா சுருங்கி போனாலும் போய்டுவேன்...! //

  மொத்த பதிவுக்கும் இந்த ஒரு வரி போதும்

  பதிலளிநீக்கு
 10. தாமிரபரணி மட்டுமா புலம்புது, இங்க பாலாறு செத்தே போச்சு

  பதிலளிநீக்கு
 11. என்ன ரசனையான வரிகள். எல்லா நதிகளின் கதியும் இதே நிலையில்தானே?

  பதிலளிநீக்கு
 12. பெயரில்லா11:29 PM, நவம்பர் 21, 2011

  கம்பீரமா ஓட்டிட்டு இருந்த நான், இன்னும் கொஞ்ச நாள்ல ஒரு கோடா , ஒரு புள்ளியா சுருங்கி போனாலும் போய்டுவேன்//

  உங்களுக்குள் உள்ள ஆக்ரோஷ ஆதங்க கவி இதில் எட்டிப்பார்க்கிறார்... கடைசியாய் தாமிரபரணியில் வெள்ளம் வந்த போது பாதிக்கப்பட்டேன்...

  இப்போது உங்கள் பதிவின் பாதிப்பில்...மனதை தொட்ட பதிவு...

  பதிலளிநீக்கு
 13. இதுதான் மண்ணின் பாசம்.சம்பந்தப்பட்டவர்கள் காதுகளுக்கு இந்த ஓலம் கேட்டால் நல்லது கௌசி !

  பதிலளிநீக்கு
 14. ஒரு காலத்துல கூவம் கூட ஜீவநதியாகத்தான் இருந்தது...

  பதிலளிநீக்கு
 15. @@ FOOD...

  நீங்கள் கொடுக்கும் உற்சாகத்திற்கு நன்றிகள் அண்ணா.

  பதிலளிநீக்கு
 16. @@ கணேஷ் said...

  //இப்படி அழுத என் சிஸ்டர் வைகையோட குரலை யாரும் கவனிக்காமதான் வறண்டு போயிட்டது. நான் வற்றாதவங்கற பெருமைய காப்பாத்திட்டிருக்கேன்.//

  வைகை வறண்டு போய்விட்டது...!!இது போன்ற செய்திகள் இனி தொடரும் போல இருக்கிறது...அரசு நதிகளை காப்பாற்ற உடனடியாக போர்கால நடவடிக்கை போல எதுவும் முயற்சி மேற்கொண்டால் நல்லது.

  நன்றிகள் கணேஷ்.

  பதிலளிநீக்கு
 17. @@ கவிதை வீதி... // சௌந்தர் // said...

  //ஒரு கவிதை...

  எங்கள் ஆற்றில்
  இடைவிடாமல் ஓடிக்கொண்டிருக்கிறது..
  மணல் லாரிகள்...!//

  ம்...கவிதை நிதர்சனம் !!

  மணல் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காத வரை ஆறுகளின் நிலை மிக பரிதாபம் தான்.

  நன்றிகள் சௌந்தர்.

  பதிலளிநீக்கு
 18. @@ நண்டு @நொரண்டு -ஈரோடு...

  நன்றிகள்

  பதிலளிநீக்கு
 19. @@ Prabu Krishna said...

  //மணல் லாரிகளும் பெரும்பாலும் அரசியல்வாதிகளுக்கு சொந்தமானது. இது ஒரு ஆற்றின் குரல் மட்டும் அல்ல. இந்த பூமியின் கதறல்.//

  சில லாரிகளை பொது மக்கள் அடையாளம் காட்டினாலும் அவை கண்டுகொள்ளபடாமல் இருக்கின்றன...!! :(

  உணர்விற்கு நன்றி பிரபு

  பதிலளிநீக்கு
 20. @@ asiya omar said...

  //ஆறு தன் நிலையை எடுத்து சொல்லிவிட்டது,துயர் துடைக்க வேண்டியது மக்களின் பொறுப்பு.//

  உண்மை தோழி. மக்கள் முழு அளவில் தங்கள் எதிர்ப்பை காட்டினால் ஒருவேளை இவ்விசயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படலாம் என தோணுகிறது.

  நன்றிகள்

  பதிலளிநீக்கு
 21. @@ துபாய் ராஜா...

  நன்றிகள் ராஜா.

  பதிலளிநீக்கு
 22. @@ மகேந்திரன் said...

  //மூன்று மாவட்டங்களுக்கு கருணை புரியும் பரணி//

  உண்மையினை உரைத்து உங்கள் வருத்தத்தை தெரிவித்து விட்டீர்கள். இனி வரும் காலம் எப்படி இருக்குமோ தெரியவில்லை.

  கருத்துக்களுக்கு நன்றி மகேந்திரன்.

  பதிலளிநீக்கு
 23. @@ suryajeeva said...

  //தாமிரபரணி மட்டுமா புலம்புது, இங்க பாலாறு செத்தே போச்சு//

  எனக்கு தெரிந்து பாலாறில் எப்போதும் தண்ணீரை நான் பார்த்ததில்லை !! :(

  எங்கு காணினும் மணல் மணல் மட்டுமே ...இப்போ அதுவாவது இருக்கா இல்லையா ?!!

  நன்றி சூர்யா

  பதிலளிநீக்கு
 24. @@ Lakshmi said...

  //என்ன ரசனையான வரிகள். எல்லா நதிகளின் கதியும் இதே நிலையில்தானே?//

  கண் முன்னால் இந்த நதி பாழாகி போய் கொண்டிருப்பதை காணுகிறேனே...?! மற்றவையும் இதே நிலைதான் என்னும் போது ஏன் இதை குறித்த நடவடிக்கைகள் இன்னும் முழுவீச்சில் எடுக்க படவில்லை ?! :(

  கேள்விகள் நம்மிடம் பதில்கள் எவ்விடம் ?

  நன்றிகள் அம்மா

  பதிலளிநீக்கு
 25. @@ ரெவெரி said...

  கருதிட்டமைக்கு நன்றிகள்.

  நீங்களும் நம்ம ஊர்காரர் தானா?

  பதிலளிநீக்கு
 26. @@ Philosophy Prabhakaran said...

  நன்றிகள் பிரபாகர்.

  பதிலளிநீக்கு
 27. வலைச்சரத்தில் உங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன். நேரம் இருப்பின் வாருங்கள், இல்லாவிட்டாலும் வந்துடுங்க

  சமுதாய சிற்பிகள் நம்முடன் - பெருமைகொள் வலையுலகே

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...