Monday, January 24

12:01 PM
43
முந்தைய பதிவில் குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு என்பதை பற்றியும், அதில் இருந்து நம் பிள்ளைகளை எப்படி பாதுகாத்துக்கொள்வது  என்பதை பற்றியும் சொல்லி இருந்தேன். அதற்கு பலரும் பின்னூட்டங்களின் மூலம் தங்களது கருத்துக்களை கூறியிருந்தனர்.அப்படி வந்தவை எனக்கு வெறும் பின்னூட்டங்களாக தெரியவில்லை...ஒவ்வொருவரின் ஆழமான உணர்வுகளாக வெளி வந்திருந்தன....அதில் ஒரு இரண்டு  பின்னூட்டங்களை பற்றி மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

அதில் சகோதரர்  ஜோதிஜி அவர்கள் இதற்கு கடுமையான தண்டனைகள் என்று இருந்தால் தவறு செய்ய என்னும் நபர்கள் அச்சம் கொண்டு இந்த செயலை தவிர்ப்பார்களா என்று ஒரு கேள்வி எழுப்பி இருந்தார். மேலோட்டமாக பார்க்கும் போது சரி என்று தோன்றினாலும், சமீபத்தில் அரேபிய நாட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்வை கேட்டறிந்த பின் தண்டனைக்கு பலன் இருக்குமா என்று யோசிக்க வேண்டியதாகிவிட்டது. கடுமையான தண்டனைகளுக்கு பெயர் பெற்ற அரேபிய நாட்டிலேயே இத்தகைய குற்றம் சாதாரணமாக நடைபெறும்  போது தண்டனை மட்டுமே இதற்கு ஒரே தீர்வாக இருக்க முடியாது என்றே தோன்றுகிறது. தவிரவும் நம்ம நாட்டில் இச்செயலுக்கு, 

*  தண்டனை என்று பார்த்தால் பெண்கள் பாதிக்கபட்டால் கொடுக்கப்படும் அதே 7  ஆண்டு முதல் 10  ஆண்டுகள் சிறைவாசம்தான்  குழந்தைகள் பாதிக்கபட்டாலும் என்கின்றனர்...?! 

இது மட்டும் போதாது இந்த விசயத்தில் தண்டனை இன்னும் கடுமையாக்கப்படணும்.   

2002  வது ஆண்டின் கணக்கின் படி 89 ,000 குழந்தைகள் பாதிக்க பட்டுள்ளனர். இந்த கணக்கு வெளியில் வந்தவை மட்டுமே வராதவை எத்தனை ஆயிரமோ....?! 

என்  மனதை மிக பாதித்த மற்றொரு பின்னூட்டம் சகோதரர் அப்பாதுரை அவர்கள் கொடுத்து இருந்தார்.

//பெண்களைப் போலவே, maybe more often and discreetly, ஆண்கள் இளம் வயதுப் பாலியல் கொடுமைகளில் பாதிக்கப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன். இதற்கு மதம், கலாசாரம், அறிவு (அறியாமை), சூழல் என்று பல காரணங்கள். பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்படுத்தும் வக்கிரங்கள் கற்பனை செய்யக்கூட முடியாத அளவுக்கு வடிவெடுக்கின்றன. பாலியல் வக்கிரங்களிடையே வளர்ந்தவன் என்ற முறையில் இவை சாகும் வரை அழியாத வடுக்கள் என்று அனுபவத்தோடு சொல்வேன். அறியாத வயது என்றாலும், அறிந்த பின் தொலையாத கொடுமை. எத்தனை எழுதினாலும் எச்சரித்தாலும் வீட்டுப் பூனை பாலைத் திருடிக் குடிக்கும் பொழுது ஒன்றுமே செய்ய முடியாது. புதைந்து போன எலும்புகளை, நினைவுகளைத் தோண்டிய, தூண்டிய பதிவு.//

ஒவ்வொரு வரிகளும் வேதனை தாங்கி இருந்ததை உணரமுடிந்தது. ஆண் குழந்தைகளும் அதிகமாக பாதிக்கபடுகிறார்கள் என்பதை இவரது பின்னூட்டம் ஊர்சிதப் படுத்தியது.  

இந்த பதிவிற்கு மிக நெருங்கிய சிறுகதை ஒன்றை இவர் எழுதி இருக்கிறார்.....மனம் நடுங்க செய்ய கூடிய  ஒரு விஷயத்தை கருவாக எடுத்து சிறிதும் ஆபாசம் இன்றி எழுதி இருக்கிறார். தயவுசெய்து அதை அனைவரும் படியுங்கள்... 

அந்த கதை படிக்க  இங்கே செல்லுங்கள்.  மற்றொரு வேதனையான அனுபவம் ஒன்று 

மேலும் எனது பதிவை படித்து விட்டு ஒரு சகோதரி மெயில் மூலம் தனது இன்றைய நிலையை மிகுந்த துயரத்துடன் எழுதி இருந்தார். மிக பெரிய மடலின் சுருக்கத்தை மட்டுமே இங்கே பகிர்கின்றேன் (அவர்களின் அனுமதியுடன் ) அவரது பெயர் சுசீலா, ஆந்திர மாநில தலைநகரில் வசிக்கிறார், படித்த பட்டதாரி பெண்,  பல்கலைகழகத்தில் படிப்பிற்காக தங்க மெடல் வாங்கியவர், பெரிய கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.   திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தைகள் இல்லை, முக்கியமாக கணவன் மனைவியருக்குள் எது நடக்க வேண்டுமோ அது இன்று வரை நடக்கவில்லை...!? 

காரணம் சிறு வயதில் அந்த பெண் அனுபவித்திருந்த பாலியல் துன்புறுத்தல்கள் ??! நெருங்கிய உறவினர் ஒருவரால் பத்து வயதில் ஏற்படுத்தப்பட்ட கொடுமைகள் இந்த பெண்ணின் மனதில் ஆற்றாமல் வடுவாக இருந்திருக்கிறது. இப்படி வடு ஒன்று இருப்பதை,  முதல் இரவில் கணவனின் முதல் தொடுதலின்  போதுதான் இவரே உணர்ந்திருக்கிறார். ஒவ்வொரு நாள் இரவிலும் கணவனின் அருகாமை என்றாலே உடலில் ஒரு படபடப்பு சேர்ந்து கொண்டு , முகம் எல்லாம் வியர்த்து அலறி அடித்து படுக்கையின் ஓரமாக ஒரு குழந்தை போல் சுருண்டு படுத்து கொள்வாராம். 

ஆரம்பத்தில் இவரது கணவன், புது பெண்தானே போக போக சரியாகி விடும் என்று மனதை தேற்றி கொண்டுள்ளார், மாதகணக்கில் தொடரவும், வற்புறுத்தி  மருத்துவரிடம் அழைத்து சென்று உள்ளார். தொடர்ந்த சிகிச்சைகளின் மூலம் உடல் சிறிது தேறி வந்திருக்கிறது, மனமோ அதே பழைய நிலையில் !!? நல்ல வேளை இவருக்கு அமைந்த கணவன் நல்லவராக இருப்பதால் காலப்போக்கில் மனைவி சரியாகி விடுவாள் என்ற நம்பிக்கையில் நாட்களை நகர்த்தி கொண்டுவருகிறார்.

இந்த பெண்ணின் மடல் ஒரு உதாரணம் தான் , இது போல் இன்னும் எத்தனையோ.....?? பாவம் ஓரிடம்  பழி ஓரிடம்  என்பது போல், தவறு செய்தவன் எங்கோ நிம்மதியாக இருக்கிறான், இந்த பெண்ணை போன்றவர்கள் வாழ வகையற்று நரகத்தில் உழன்று கொண்டிருக்கிறார்கள். 

இந்த பிரச்சனை முந்தைய பதிவில் சொன்ன மாதிரி உளவியல் நோய் உள்ளவர்களால் மட்டும் ஏற்படுவது இல்லை. சாதாரணமாக குடும்ப வாழ்வில் இருப்பவர்களும் சில சூழ்நிலைகளில் இந்த பாவத்தை செய்ய நேரிடுகிறது என்பது நிதர்சனம்.  சூழ்நிலைகள்

*  திருமணம் முடிந்த பின்னர் மனைவி பிரசவத்திற்காக தாய் வீடு சென்ற சமயங்களில்.....

*  விவாகரத்தான கணவர்கள் தனிமையில் இருக்கும் போது.....

*  மனைவி இறந்த சமயங்களில்.....

* மனைவி நோய்வாய்ப்பட்ட சமயங்களில்..... 

*  பணியில் இருக்கும் இல்லாத ஒரு சில வயதானவர்கள் (தனிமை கிடைத்தால்)....

இது போன்ற சூழ்நிலைகளில் இருக்கும் ஒரு சிலர் சந்தர்ப்பம் வாய்த்தால் தவறவே செய்கிறார்கள். தங்களுக்கு வசதியாக சிறுவர், சிறுமிகளை பயன்படுத்திக்கொள்(கொல்)கின்றனர்.

தீர்வு என்ன ?? 

சகோதரர் ரஜின் அவர்கள் இந்த பாதக செயலுக்கு தீர்வு ஒன்றை தனது பின்னூட்டத்தில் சொல்லி இருந்தார். 

//இப்படிப்பட்ட கிராதகர்களை முன்னோக்கும் போதும்,எப்படி எதிர்கொள்ளவேண்டும் என கற்றுத்தருவது அவசியமான ஒன்று,,,

இதை ஸ்பெஷல் கோச்கள்,மனநலமருத்துவர்கள் கொண்டு,பள்ளிகளே வாரமோ,அல்லது மாதம் ஒரு முறையோ வகுப்புகள் நடத்தினால் நன்மை பயக்கும்...
செய்வார்களா?//
  
மிகவும் சரியான யோசனையாக எனக்கு தெரிந்தது...பள்ளிகளின்  மூலமாக இந்த பிரச்சனையின் தீவிரத்தை பிள்ளைகள் உணரும்படி அறிவுறுத்த வேண்டும்.  பொதுவாக பெற்றோர்களின் அறிவுரைகளை விட ஆசிரியர்களின் அறிவுறுத்தல் பிள்ளைகளின் மனதில் நன்றாக பதிந்து விடும். தவிரவும் சக மாணவர்களுடன் இது பற்றி அவர்கள் கலந்து பேசிக்கொள்ளவும் எதுவாக இருக்கும்.

நம்  பிள்ளைகள் எந்த வித மோசமான பாதகத்திற்க்கும் ஆளாகிவிடாமல் அவர்களை பாதுகாத்து காப்பாற்றுவது நம் ஒவ்வொருவரின் கடமை.  அவர்களின் எதிர்காலத்திற்காக சொத்துக்களை சேர்த்து வைக்க காட்டும் தீவிரத்தை, அவர்களின் நிகழ்கால வளர்ப்பிலும் கொஞ்சம் காட்டுங்கள்.  

எதிர்கால சமூதாயம் சிறப்பாக அமைய பதிவுலகத்தில் இருக்கும் நாம் அனைவரும் நம்மால் முடிந்தவரை ஒத்துழைப்பு கொடுப்போம்.....

இந்த பிரச்சனை சம்பந்த பட்ட பதிவுகளை தேடி எடுத்து படியுங்கள், பலரிடம் இத்தகைய பதிவுகளை கொண்டு போய் சேருங்கள், பிரச்சனையின் தீவிரம் பலரையும் சென்று அடைய உதவுங்கள்.  
படம் - நன்றி கூகுள் 


Tweet

43 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...