திங்கள், மார்ச் 9

10:49 AM
20

'தாம்பத்தியம்' தொடர் தொடர்பாக வரும் மெயில்களை வாசிக்கும்போதும் கவுன்சிலிங் செய்யும்போது தம்பதிகளின் சில பிரச்சனைகளை அறிந்து   ஆச்சர்யத்தின் எல்லைக்கு சென்றுவிடுவேன். இப்படியெல்லாமா  சந்தேகம் வரும்? இதுக்கூடவா தெரியாது? அதுவும் குழந்தைகள் பிறந்து இத்தனை வருடம் கழித்தா? இதுக்காகவா விவாகரத்து?  என எழும் பல அந்தரங்கக் கேள்விகளுக்கு விடையாக தனியாக ஒரு தொடர் எழுதினால் என்ன என்று தோன்ற.... இதோ எழுதத்தொடங்கியே  விட்டேன்...


தொடருக்குள் போகும்முன் சில வரிகள் புரிதலுக்காக...

பாலியல் பற்றிய எனது முந்தைய கட்டுரைகளில் எப்படிங்க ஒரு பெண்ணா தைரியமா இதை எழுதுறிங்க, உங்க துணிச்சலை பாராட்டுகிறேன் என்ற ரீதியில் வரும் கேள்விகள் கோபத்தையும் சிரிப்பையும் ஒன்றாக வரவழைக்கும். உண்மையில் இதற்கான பாராட்டை ஒரு அவமானமாக உணருகிறேன். இயற்கையாக  ஆணைவிட அதிக மன தைரியம் கொண்ட பெண் தன் சம்பந்தப்பட்ட பாலியலை பேசுவதற்கு ஏன் தயங்க வேண்டும். பெண்ணின் உணர்வுகள் உணர்ச்சிகள் பெண்ணால் சொல்லப்படும்போது தான் முழுமை பெறும்.

பாலியல் உறவுகளைப் பற்றி ஆண் பேசலாம், பெண்ணின் அங்கங்களை வர்ணித்து கவிதைகள் எழுதலாம் ஆனால் இதையே ஒரு பெண் செய்தால் உடனே சமூகம் வெகுண்டு எழும் அப்பெண்ணை பழிக்கும் தூஷிக்கும். அவ்வளவு ஏன்  இதை வைத்தே அந்த பெண்ணின் தரத்தை அவர்களாகவே நிர்ணயித்துவிடுவார்கள். இதுதான் காலகாலமாக நடந்து வருகிறது.

பெண் இதையெல்லாம் செய்யக் கூடாது என்ற கட்டமைப்பை ஏற்படுத்தி அதை மீறும் பெண்களை பெண்ணியவாதி , புரட்சிப்பெண் என்று பெயரிட்டு சக பெண்களை விட்டு அவர்களை தள்ளியே வைத்திருக்கிறது இந்த உலகம்.   ஒரு  ஆண்  மருத்துவராக இருந்தாலுமே அவரால் உணர்ந்துக்கொள்ள முடியாத பல விசயங்கள் பெண்ணிடம் உண்டு என்பதை அறியும்போது தான் பெண் என்பவள் போகப்பொருள் அல்ல போற்றப் படவேண்டியவள், என்பதும்  பாலியல் அத்துமீறல்களுக்கு மறைமுகமாக பெண் எவ்வாறு காரணமாகிறாள்  என்பதையும் உலகம் புரிந்துக் கொள்ளும்.  

பாலியலை பற்றி பெண்கள்  எழுதினால் மட்டுமே இது சாத்தியமாகும். காமம், காதல் பற்றி பெண் அதிகம் பேசவேண்டும், அப்போதுதான் இதுவரை மறைத்து வைக்கப்பட்டுள்ள பக்கங்கள் புரட்டிப் பார்க்கப்படும். தற்போது இணையத்தில் இயங்கிவரும் அத்தனை பெண்களும் பாலியல் பற்றி எழுதவேண்டும், பேசவேண்டும்! அவ்வாறு பெண்கள் பேச முன்வரும்போது இந்த உலகம் தனது வாயை கொஞ்சம் மூடிக் கொள்ளட்டும்.  எனவே இனியாவது அர்த்தமற்ற கேள்விகள் எழாமல்  இருக்கட்டும் !!!

பேசாப் பொருளா காமம்?   

அற்புதமான ஒரு விஷயம் எப்படி அசிங்கமான தவறான அருவருப்பான குற்றமாக தவிர்க்கக் கூடிய - மறைக்கக் கூடிய  ஒன்றாக மாறியது அல்லது மாற்றப்பட்டது... யாரால் ஏன் எப்போது என்ற கேள்விகள் எனக்குள் எழும் ...அதற்கான விடையை தேடும் ஒரு தேடல் இந்த தொடர் என்று சொல்வதை விட காமத்தை பற்றிய அரைகுறை கணிப்புகளினால் சமூகத்தில் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளை அலசும் ஒரு தொடர் என்று வைத்துக்கொள்வோம்.



சித்தர்கள் யோகிகள் புனிதர்கள் முனிவர்கள் பெரியோர்கள் மூத்தோர்கள் ..... என அத்தனை ஆண்களும்  பெண் என்றால் பேய், பெண்ணுறுப்பு என்பது எமன்,  அருவருப்பு அசிங்கம் பாவத்தின் பிறப்பிடம்... அப்டியாக்கும்  இப்டியாக்கும் என்று இஷ்டத்திற்கு எக்கச்சக்கமாக எழுதி/பாடி வைத்துவிட்டு சென்றுவிட்டார்கள்.  அவ்வாறு எழுதியதன் ஒரு காரணம் என்னவென்றால் காமத்தின் மீதான பயம் எங்கே தான் இதிலேயே மூழ்கி விடுவோமோ என்ற பயம்.  காமத்தில் அவர்களால் முழுமை பெற முடியவில்லை, அனுபவித்தால் தானே முழுமை பெற ... காமத்தை முழுமையாக  உணராமலேயே தூஷிப்பது ஆதிகாலம் தொட்டு இன்றுவரை தொடருகிறது. அதில் முழுமை பெற்றவர்  எவரும் காமத்தை நிந்திப்பதில்லை... அமைதியாகவே  இருப்பார்கள். அரைகுறைகள் தான் ஆட்டம் போடும்.  முன்பு பெண்ணை நேரடியாக நிந்தித்து சமாதானம் செய்துக் கொண்டவர்கள் இன்று கலாசாரத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்.    

 எதிர் பாலினத்திடம் ஈர்ப்பை ஏற்படுத்தியது இறைவன் (ஆன்மிகம்) என்றும் இயற்கை (நாத்தீகம்) என்றும் ஹார்மோன் (விஞ்ஞானம்) என்றும்  ஒவ்வொரு கூட்டமும்  ஒன்றை காரணமாக சொன்னாலும் அத்தனை பேரும் ஒன்றாக சொல்வது என்னனா 'காமம் தவறு'. தவறு என்றால் இறைவன் இயற்கை விஞ்ஞானம் அத்தனையும் தவறுதானே. ஈர்ப்பு ஏற்பட்டால்தான் உலகில் ஜனனம் நடைபெறும். உலகின் இயக்கத்திற்கு முக்கியக்  காரணமான ஒன்றிற்குத்தான் காமம் என்று பெயரிட்டு அதை தவறு என்றும் பேசா பொருள் என்றும் மறைத்து வைத்திருக்கிறோம். மனிதன் என்றால் அவனுக்குள் காம உணர்வு எழவேண்டும், அந்த உணர்வை வெளிப்படுத்தும் முறையில்தான் மனிதர்கள் வேறுபடுகிறார்கள்.

இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்றவர்கள் தான் பூஜை அறைக்கதவை அடைத்துவிட்டும் கடவுள் படத்திற்கு திரையிட்டு மறைத்தும் உடலுறவு கொள்கிறார்கள். வேடிக்கை மனிதர்கள்! வானத்தை  கூரையாக கொண்டவர்களும் உடலுறவுக் கொண்டு இவ்வுலகில் வாழத்தான்  செய்கிறார்கள். அங்கே எந்த சாஸ்திரமும் சம்பிரதாயமும் கடைபிடிக்கப் படவில்லை.  உறவு கொண்ட அன்று கோவிலுக்கு போனால் தீட்டு,தோஷம்  என்று கடவுளுக்கு சொந்தக்காரர்களாக காட்டிக் கொள்பவர்கள் இந்த கணினி யுகத்திலும் பஜனைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.  காம எண்ணங்களை  மனதில் வைத்துக்கொண்டு பூஜை செய்வதை விட அதை வெளியேற்றிவிட்டு பூஜை செய்வது பெட்டெர் என புரிந்து கொண்டவன் கடவுளின் கருவறையை பள்ளியறையாக்கினான் போலும். மனதில் குப்பையும் ஆடையில் தூய்மையுமாய் அத்தனை அக்கிரமங்களையும் ஆண்டவனின் பெயரால் செய்துக்கொண்டு. சின்னஞ்சிறுமிகளிடம் தங்களது வேட்கையை தணித்துக் கொள்ளும் மனித தன்மையற்ற ஈனர்களுக்கு பெயர் பாதிரியார்.

புலன்களை அடக்குவது நல்லது என அறிந்ததாலேயே விரதம் என்ற ஒன்றை எல்லா மதத்தினரும்  ஏற்படுத்தினார்கள். ஆனால் நம்மவர்களோ எப்போதடா விரத காலம் முடியும், விட்டக்குறை தொட்டக்குறைகளை மறுபடியும்  புடிக்கலாம் என்ற எண்ணத்திலேயே பாதி நேரத்தைச்  செலவிடுகிறார்கள். 

பாலியல் உறவை தவிர்த்தால் தான் புனிதமாக முடியும் என்பது மனிதனாக ஏற்படுத்திக் கொண்ட ஒன்று. முற்றும் துறந்த சாமியார் என்று அழைப்பது சரியல்ல உண்மையில் தங்களின்  ஆசைக்கு முற்றும்(The End) போடாதவர்களே இன்றைய சாமியார்கள். ஆரம்பத்தில் கடவுளே சரணம் என்றுதான் வருகிறார்கள்...போக போக தங்களின் புலன்களிடம் தோற்றுப் போய் விடுகிறார்கள், அப்புறமென்ன அச்சு பிச்சுனு ஏடாகூடமாக நடந்து நம் போன்றோரிடம் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள். புலன் அடக்கம் என்பது எவ்வாறு ஏற்படும், புலன்களை திருப்திப் படுத்திய பின்தானே. எவ்வாறு திருப்திப் படுத்துவது? இதற்குத்தான் ஈர்ப்பு என்ற ஒன்று  ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.  

அவரவருக்கு ஒரு நியாயங்களை கட்டுகளை வைத்து பேசுகிறார்களே தவிர பொதுவான ஒரு நியதி எல்லோருக்கும் ஏற்றதான ஒன்றை யாரும் சொல்வதில்லை , காமத்தையும் இவ்வாறேதான் பாவிக்கிறார்கள். இறைவனுக்கு காமம் ஆகாதென்றால் ஏன் கோவில் பிரகாரங்களில் கோபுரங்களில் உடலுறவு காட்சிகள். இல்லை இது வேறு காரணத்திற்காக வைக்கப்பட்டது என்று ஆயிரம் காரணங்களை கூறினாலும் ஒரே காரணம் இறைவனின் விருப்பம் ஆண் பெண் ஈர்ப்பு. உண்ணக்கூடாத கனியை ஏன் உண்டாக்குவானேன், பிறகு  அதை உண்ணாதே என்று ஏன் சொல்வானேன், எல்லாவற்றிலும் ஏதோ ஒரு சூட்சமம் இருக்கிறது தானே.

ஆன்மீகத்திற்கு எதிரானதா  காமம்.

துறவிகளுக்கும்  புனிதர்களுக்கும் காம உணர்வு எழும், அடக்கிப் பழகினார்கள் அதனால் சாதாரண மக்களிடம் இருந்து தனித்துத்  தெரிந்தார்கள். ஆசைக் கொள்ளாதே என்று உபதேசித்தாலும் அவருக்குள்ளும் ஒரு ஆசை இருக்கத்தானே செய்தது, உலக மக்களை உய்விக்க வேண்டுமென்ற ஆசை சொல்லப் போனால் இது சாதாரண ஆசையல்ல பேராசை ! இவ்வாறுதான் காமம் தவிர் தவிர் என்று சொல்லும் போதே காமத்தை எண்ணியவர்களாயினர். காமத்தை உணராமல் மனிதன் வாழவே முடியாது இயற்கையாக எழும் உணர்வை சாதாரணமாக அடக்கமுடியாது அதற்கு மிகுந்த பயிற்சி வேண்டும். புத்தனும் அனுபவித்து அறிந்தப் பின்பே அடக்கினான். வயிற்றில் பசி இறுதி மூச்சு வரை இருப்பதை போல காமப் பசியும் இருக்கும், அப்படியெல்லாம் இல்லை நான் உத்தமனாக்கும் என்று சாதிக்கிறவர்கள் ஒன்று பொய் சொல்ல வேண்டும் அல்லது உடல் மனதளவில் ஆரோக்கியக்  குறைபாடுகள்  கொண்டவராக இருக்கவேண்டும் 

ஒன்றை முழுமையாக உணராமல் அனுபவிக்காமல் அதை ஒரேயடியாக  மறுத்தோ ஏற்றோ  பேச இயலாது. பேசினாலும் அரைவேக்காட்டுத்தனமாக இருக்கும் அத்தகைய அரைகுறைகள் நிரம்பியது தான் நமது சமூகம். காமம் என்றாலே மூன்றாந்தர புத்தகங்களில் இருப்பவை மட்டும் தான் என அடித்து பேசுவார்கள் மெத்த படித்த மேதாவிகள்.  காமம் சரியாகப் புரிந்துக் கொள்ளப் படாததுதான்,  குடும்பத்தில் அதிகரித்து வரும்  விவாகரத்துகள், பாலியல் வன்கொடுமைகள் அனைத்திற்கும் காரணம்.

பின் குறிப்பு:-

குடும்பம் முதல் எல்லாவற்றிலும் நடைபெறும் 'குற்றங்களுக்கு' பின்னால் ஒரு காரணமாக காமம் இருக்கிறது என்பதை நான் சொல்லவில்லை மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒன்றை பற்றி என் அறிவுக்கு எட்டிய அளவிற்கு எழுதுகிறேன்...சொற்குற்றம் பொருள் குற்றம் இருந்தால் சொல்லுங்கள், சரி படுத்தி தெளிவுப் படுத்திகிறேன். அதற்காக விளக்கம் சொல்கிறேன் பேர்வழி என்று படுத்தி எடுக்காதீர்கள் என அன்பாக வேண்டுகிறேன்.  :-)

கண்டது கேட்டது உணர்ந்தது என எல்லா அனுபவங்களும் சேர்ந்த இந்த தொடரை  மொத்தமாக எழுதி வைத்து வெளியிடலாம் என்ற கான்செப்ட் ஒத்துவரவில்லை... (ஏற்கனவே ஏகப்பட்டது டிராப்ட்ல ஒரு பாராவுடன்  நிற்கிறது) :-) எனவே எழுதி உடனுக்கு உடன் வெளியிடுகிறேன், continunity விட்டுப் போச்சே  என திட்டாதீர்கள். இது கதையல்ல கட்டுரை தானே சோ அட்ஜெஸ்ட்டுங்க  பிளீஸ் ...


தொடர்ந்து பேசுகிறேன்...
உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா



Paintings - Thanks Google 
Tweet

20 கருத்துகள்:

  1. என் பார்வையில் காமம் என்ற சொல் ஆண்களைப் பொறுத்தவரையில் இரண்டு விதமாக பார்க்கப்படுகின்றது. இருபது வயதில் ஆர்வம். முப்பது வயதில் ஈர்ப்பு, நாற்பது வயதில் வெறித்தனம் ஐம்பது வயதில் இயலாமையின் வெளிப்பாடு.

    ஆர்வம் என்பது அது என்ன? என்ற தேடலின் துவக்கம். அப்போது கிடைக்கும் வழிகாட்டுதல் அனைத்தும் கிசுகிசு பாணியில் தொடங்கி சரியாக வளர்க்கப்படாத குழந்தைகள் தவறான பாதையில் செல்வதன் துவக்கம்.

    முப்பது வயதில் நிச்சயம் குழந்தைகள் பிறந்து இருக்கும். குழந்தைகள் இருக்கும் போது மனைவியிடம் கிடைக்காத ஒத்துழைப்பு மேலும் மேலும் ஈர்ப்பை உருவாக்குவது. இது தொடர்பாக உருவாகும் பிரச்சனைகள்.

    நாற்பது வயதில் ஐந்து வருட வித்தியாசத்தில் உள்ள பெரும்பாலான நம் பெண்கள் ஆர்வம் குறைந்து, புனிதம் என்ற போர்வையில் உறங்கத் தொடங்க இங்கே தான வெறித்தனமும் குடும்பப் பிரச்சனைகளும் தொடங்குகின்றது. நன்றாக வாழ்ந்த குடும்பங்கள் திசை மாறுவது இந்த இடத்தில் தான்.

    ஐம்பது வயதில் இயலாமையை ஒத்துக் கொள்ள முடியாத நிலையில் இதை அவமானமாக கருதிக் பொது இடங்களில் நடமாடும் பெண்களை வெறித்துப் பார்ப்பது முதல் சில்மிஷ விசயங்களில் ஈடுபட்டு தர்மஅடி வாங்குவது வரைக்கும்.

    நான் பார்த்தவரைக்கும் கேள்விப்பட்ட வரைக்கும் எத்தனை தத்துவங்கள் பேசினாலும், ஆடம்பர விசயங்களில் நாட்டம் இருந்தாலும், பெண்ணுரிமை குறித்து வாய் கிழிய பேசினாலும் கற்பு உறவு போன்ற வார்த்தைகளை பெண்கள் இன்னமும் ஒரு சின்ன வட்டத்திற்குள் (மனைவியாக வாழ்பவர்) பார்ப்பதால் தறிகெட்டு ஆண்டுகள் அலையத் துவங்குகின்றார்கள். நான் பணிபுரியும் தொழிற்சாலையில் நூற்றில் ஐம்பது பெண்கள் சார்ந்த பிரச்சனைகள் இப்படித்தான் உள்ளது.

    ஆண்களுக்கு காமத்தை அணுகத் தெரியாமல் தவிக்கின்றார்கள்.
    பெண்களோ குழந்தைகள் வளர வளர காமம் தேவையில்லை என்று கருதுகின்றார்கள்.

    பிரச்சனையின் தொடக்கமும் இங்கே தான். முடிவில்லா பாதையிது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /முப்பது வயதில் நிச்சயம் குழந்தைகள் பிறந்து இருக்கும். குழந்தைகள் இருக்கும் போது மனைவியிடம் கிடைக்காத ஒத்துழைப்பு மேலும் மேலும் ஈர்ப்பை உருவாக்குவது. இது தொடர்பாக உருவாகும் பிரச்சனைகள்.

      நாற்பது வயதில் ஐந்து வருட வித்தியாசத்தில் உள்ள பெரும்பாலான நம் பெண்கள் ஆர்வம் குறைந்து, புனிதம் என்ற போர்வையில் உறங்கத் தொடங்க இங்கே தான வெறித்தனமும் குடும்பப் பிரச்சனைகளும் தொடங்குகின்றது. நன்றாக வாழ்ந்த குடும்பங்கள் திசை மாறுவது இந்த இடத்தில் தான்.//

      30 வயது காலகட்டத்தில் பெண்ணின் மனநிலை மாறுபடுகிறது , குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது வெறும் சாக்குபோக்கு. பெண்ணுக்கு ஆர்வம் இருந்தால் அருகில் தூங்கும் குழந்தையின் மேல் சும்மாவாச்சும் ஒரு போர்வையை போர்த்திவிட்டு கூட கணவனுடன் ஒத்துழைக்க முடியும். இதில் ஒரு சுவாரசியம் என்னனா போர்வையை போர்த்துவதில் வெளிப்படும் கள்ளத்தனம் உறவிற்கு நல்ல தொடக்கத்தையும், தனி ஈர்ப்பை ஏற்படுத்தும். படு ரொமண்டிக்காக நடக்கும் அந்த உறவில் காமத்தை விட காதலே மிகுந்திருக்கும். ஆனால் ஏன் பல பெண்கள் குழந்தைகளை சாக்கிட்டு மறுக்கிறாள் என்றால் வலியுடனான பிரசவம் அதை தொடர்ந்த குழந்தை வளர்ப்பினால் (2 -3 வருடங்கள்) மன உடலளவில் சோர்ந்திருக்கும் அவளை சில முன் விளையாட்டுகளின் மூலம் உற்சாகப் படுத்தவேண்டும். இதை ஆண் செய்யத் தவறும் பட்சத்தில் உறவையே வெறுக்கிறாள். ஆணின் ஐந்து நிமிட உறவில் பெண்ணிற்கு எந்த இன்பமும் கிடைக்காது என்பதை முதலில் ஆண் புரிந்துக் கொள்ளவேண்டும்.

      * நாற்பது வயது - ஆண் வேலை, தொழில் என பிசியாக ஓடிக் கொண்டிருப்பான், தனித்து விடப் பட்ட பெண் (வேலை பார்க்கும் பெண்ணாக இருந்தாலும்) குழந்தைகளை பெத்தாச்சு, வளர்ச்சாச்சு இனி வேறென்ன ... தான் யார்? இந்த வீட்டில் தனது முக்கியத்துவம் என்ன ? என தன்னைப் யோசிக்கத் தொடங்கும் காலம் இது. இரவில் மட்டும் தன்னை தேடும் கணவனை வெறுக்க முடியாவிட்டாலும் உறவை தவிர்த்து கணவனுக்கு தனது முக்கியத்துவத்தை உணர்த்துவாள். புரிந்துக் கொள்ளாத கேஸ்கள் உறவு பிடிக்கவில்லை போல என நினைத்துக் கொள்கிறார்கள். எந்த வயதிலும் ஒரு பெண்ணால் உடலுறவில் சிறப்பாக இயங்க முடியும். அவளை மனதளவில் திருப்தி செய்ய ஆண் முயலாததுதான் பல சிக்கலுக்கு காரணம் !!!

      பெண்களை அணுக தெரிந்துக் கொண்டால் போதும், காமத்தில் முழுமை அடைந்து அதை அழகாக கடந்து சென்றுவிடலாம்... குடும்பம் எந்தவித சிக்கலிலும் இல்லாமல் செல்ல இருபாலரும் எதிர்பாலினத்தவரை குறித்த சில பொதுவானவைகளை மட்டும் தெரிந்துக் கொண்டுவிட்டால் போதும். இதை குறித்தும் எழுத முயற்சிக்கிறேன்.

      * * *

      இங்கே நீங்கள் குறிப்பிட்ட அத்தனையும் இத்தொடரை நான் இன்னும் நன்றாக தொடர உதவும் ... கருத்துகளை பகிர்ந்தமைக்கு அன்புடன் என் நன்றிகள்!

      நீக்கு
    2. வணக்கம்
      ம்.... காமம் இது வார்த்தையும்மல்ல.
      வாக்யமும்மில்லை.
      வாழ்க்கை!
      இது மெதுவாகவே புரியும்
      அதுவும் எல்லோருக்குமே புரியாது. இதை உணர்ந்தவர் ஞானியாவார்.
      எதோனோடுவேண்டுமானாலும் போட்டிபோட்டு வெல்லலாம் ஆனால் காமத்திடம் அது நடக்காது
      ஏனெனில் அது தெய்வீகதன்மை கொண்டதாகும் இந்த தெய்வீகதன்மையைகூட எல்லோராலும் உணரும்
      பாக்யம்கிட்டாது.
      இதையே முனிவர்களும்
      சூட்ஷமமாக உறைக்கின்றனர். பெண்ணின் பாலிந்திரியம் விடும்போதெல்லாம் பேணிவலம் மேல்னோக்கி அவத்தில்நில்லு!
      ஆணின் விந்தில் கோடிக்கனக்கான உயிரனுக்கள் இருந்தாலும்
      இலக்கையடையும் பாக்யம் அத்துனை கோடியில் ஒண்றிர்க்கோ அல்லது இரண்டிர்கோதான் கிடைக்கும். மற்ற உயிரனுக்கள் அனைத்தும் செத்துமடியும்.
      காமத்தை கடக்க இரண்டுவரியில்......
      அதை எதிர்த்து போரிடாதே. அது ஶ்ரீ நாராயிணன் பானம் எதிர்த்து நின்றால் உலகத்தையும் தூலாக்கிவிடும். அதுவே அதன் முன் நிராயுதபானியாய் மண்டியிட்டால் நீயே......
      அதன்போக்கில் செல் நிச்சயம் ஒருநாள் கரையேருவாய்!

      காமத்தை கடக்கயிதுவே வழி
      நன்றியுடன்.....

      நீக்கு
  2. இளைஞர்களிடையே - கல்யாணமாகி குழந்தைகள் பெற்றவர்களுக்கு இடையே செக்ஸ் பற்றி இருக்கும் அறியாமை பிரமிக்க வைப்பவை. Ignorance is bliss for many a people. Educated are not excluded from this august (stupid) club. செயற்கையான திரையை விலக்கி இளைஞர்களுக்கு நல்ல பாதையைக் காட்டுமாறு தோழி கௌசல்யாவைக் கேட்டுக்கொள்கிறேன். இது நீண்ட நாட்களாக ஒதுக்கப்பட்ட ஒரு சமூகப் பணி. Fear not. Pl go ahead. Even if your guidance helps a dozen people, I will call it a big success. Cheers.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் வார்த்தைகள் எனக்கு ஒரு நிறைவை கொடுக்கிறது... என்னால் இயன்றவரை எழுத முயற்சிக்கிறேன்... தொடர்ந்து வாசித்து வாருங்கள்... ஆலோசனைகளையும் தாருங்கள் .

      வருகைக்கும் வாசிப்பிற்கும் என் அன்பான நன்றிகள்!

      நீக்கு
  3. மிகவும் பயனுள்ள தொடர்
    தொடருங்கள் சகோதரியாரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசிப்பிற்கும் தமிழ்மண வாக்கிற்கும் என் அன்பான நன்றிகள்!

      நீக்கு
  4. ****பாலியல் பற்றிய எனது முந்தைய கட்டுரைகளில் எப்படிங்க ஒரு பெண்ணா தைரியமா இதை எழுதுறிங்க, உங்க துணிச்சலை பாராட்டுகிறேன் என்ற ரீதியில் வரும் கேள்விகள் கோபத்தையும் சிரிப்பையும் ஒன்றாக வரவழைக்கும். உண்மையில் இதற்கான பாராட்டை ஒரு அவமானமாக உணருகிறேன். இயற்கையாக ஆணைவிட அதிக மன தைரியம் கொண்ட பெண் தன் சம்பந்தப்பட்ட பாலியலை பேசுவதற்கு ஏன் தயங்க வேண்டும். பெண்ணின் உணர்வுகள் உணர்ச்சிகள் பெண்ணால் சொல்லப்படும்போது தான் முழுமை பெறும்.***

    டாக்டர் ஷாலினினு ஒரு மனமருத்துவர், பெண்தான். அவர் கட்டுரைகள் வாசிச்சு இருக்கீங்களா? "காமம்" பற்றி பெண்களுக்குளேயே பலதரப்பட்ட கருத்துக்கள் உண்டு என்பதே என் புரிதல். பெண் பேசிவிட்டால் அதற்கு தீர்வு வந்துவிடும் என்று சொல்லுமளவுக்கு காமம் ஒரு சாதாரண பிர்ச்சினை இல்லை. "கன்சர்வேடிவ்" அறியாமையில் வாழ்கிறார்கள் என்றால் "லிபெரல்" என்ன செய்றாங்க? காமத்தை புரிந்துகொண்டு நல்ல தம்பதிகளாக வாழ்கிறார்களா? அதுவும் கெடையாது. இருவரும் ம்யூச்சுவல் அக்ரிமெண்ட் வுடன் தவறான வாழ்வு வாழத்தான் ஆசைப்படுறாங்க. I still believe, you need to draw a boundary line when you discuss about "sex". The line you draw would be said as "correct" by some people but alsi "incorrect" as by some other people. I dont think there is any "perfect line" you could draw, or a perfect solution for this! However you can certainly educate some people and confuse some other people to jump only half-way and let them fall in the "well"! It is a dangerous lesson you try teach through "online" imho!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வருண்...

      பெண்கள் எழுத முன் வரணும் என்று நான் சொன்னதற்கு காரணமே - பல்வேறுப் பட்ட கருத்துகள் புரிதல்கள் வெளி வரும் என்பதற்காகத்தான். நெருங்கிய தோழிகள் இரண்டு பேரின் கருத்தே ஒன்னுக்கு ஒன்னு முரணா இருக்கும் என்பது தெரியும் தானே , அதுதான் பெண் ! :-)

      தம்பி ஒருத்தன் ஷாலினி கலந்துக் கொண்ட 'நீயா நானா' ஷோவின் youtube லிங்க் அனுப்பினான். அப்போதுதான் ஷாலினி யார்னு தெரியும்... அந்த ஷோவில் மேக்கப் பற்றிய விவாதத்தில் ' பெண் மேக்கப் செய்வதே ஆண்களை உடலுறவிற்கு அழைப்பதற்குத்தான், கண் மை, லிப்ஸ்டிக் போடுவதெல்லாம் நான் செக்ஸ்க்கு தயார் என்று பெண் விடுக்கும் சிக்னல்' என்ற அரிய கருத்தை கூறி பெண்களை இழிவுப் படுத்தி ஆண்களையும் அசிங்கப்படுத்தி இருந்தார். அப்போது பக்கத்தில் நான் இருந்திருந்தால் ஓங்கி நாலு அறை விட்டிருப்பேன், என் மனசாவது கொஞ்சம் ஆறி இருக்கும் :-) இவர் மனநல மருத்துவராம், அவரை நாடி செல்பவர்கள் ஐயோ பாவம் ! (இதை லிப்ஸ்டிக் போட்டுவந்து ஏன் சொன்னார் என்பதுதான் கடைசிவரை எனக்கு புரியவேயில்லை) :-)

      செக்ஸ் பற்றியது என்றதும் ஒரு சகோதரரும் ஷாலினியை மட்டுமே குறிப்பிட்டார், அப்படி என்றால் வேறு பெண்கள் யாரும் இதை பற்றி எழுதவில்லையா அல்லது ஷாலினி அளவிற்கு சென்று சேரவில்லையா ? ஒரு மருத்துவரின் பார்வையை விட housewife பெண்களின் பார்வை மிக முக்கியம், அவற்றில் தான் உணர்வு ரீதியிலான உண்மைத்தன்மை அதிகம் இருக்கும் என்பது என் கருத்து.

      காமம் என்றில்லை எல்லாவற்றிலுமே நல்லவை , கெட்டவை இரண்டு பக்கமும் விவாதிக்கப் படவேண்டும். காமம் தவறு என்பது மட்டும் மிகுந்திருப்பதுதான் ஆபத்து !!!

      இது பற்றி இன்னும் நிறைய பேசலாம்... பேசுவோம் !!

      உங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி வருண்

      நீக்கு
    2. மனநல மருத்துவர் ஷாலினியின் கருத்தெல்லாமே அப்படித்தான் இருக்கும்ங்க. மொத்தத்தில் ஷாலினி ஆண்களை இல்லைனா பெண்களை இல்லைனா ஆண்களையும் பெண்களையும் சேர்த்து அவமானப்படுத்துவார்.

      நீங்க நாலு அறைவிடணும்னு சொல்லீட்டீங்க! இதையே நான் சொல்ல முடியாது பாருங்க! ஏன்னா நான் ஆம்பளையாப் போயிட்டேன்! பொலிட்டிகல்லி இன்கரெக்ட் ஆக ஆகிவிடுமே! :-)))

      நீயா நானாவில் இன்னொரு ஷோவில் சிறப்பு விருந்தாளியாக/நடுவராக வந்தார். அப்போது கொஞ்சம் ஒழுங்காக பேசினார். பரவாயில்லையே மாறிவிட்டாரா? என்று ஆச்சர்யப்படுமளவுக்கு! :)

      நான் அவரை இங்கே மென்ஷன் பண்ணியதற்கு காரணமே செக்ஸ் அவேர்னெஸ் பற்றி பேசும்போது உங்க அனுகுமுறையும் அவருடையதும் ஜஸ்ட் ஆப்போஸிட்டாக இருப்பதுபோல் தோன்றியது. உங்க பதிலுரை அதை ஊர்ஜிதம் செய்துவிட்டது. :)

      சரி, தொடருங்கள்!

      நீக்கு
    3. புரிதலுக்கு நன்றி வருண்...

      நீக்கு
  5. சூட்சமம் இருக்கிறது என்கிற அவரவர் புரிதலே மாறுபடுகிறது...

    எதற்கும் அளவில்லை என்றால்....? அளவோடு அடக்குவதே வெற்றியின் குணம்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எதற்கும் அளவில்லை என்றால்....? அளவோடு அடக்குவதே வெற்றியின் குணம்...!//

      உண்மை !! கருத்திட்டமைக்கு நன்றிகள் தனபாலன் சார்.

      நீக்கு
  6. சகோதரி,

    உங்கள் துணிவு வரவேற்க்க தக்கது.
    பெண்ணின் அங்கங்களை வர்ணித்து பல பெண் கவிஞர்கள் கவிதைகள் எழுத்துகிறார்கள் என்பதை இங்கே பதிவு செய்கிறேன்.

    அதே நேரத்தில் எந்த ஒரு விசயமும் வலிந்து செய்ததாக இருந்தால் stereotypeகிவிடும். .

    http://aarurbass.blogspot.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பெண்ணின் அங்கங்களை வர்ணித்து பல பெண் கவிஞர்கள் கவிதைகள் எழுத்துகிறார்கள் என்பதை இங்கே பதிவு செய்கிறேன்.//

      பெண்கள் ஆண்களை வர்ணித்து கவிதை எழுதி இருந்தால் எனக்கு கொஞ்சம் தெரியப் படுத்துங்கள் ...

      வருகைக்கும் வாசிப்பிற்கும் எனது நன்றிகள் சகோதரரே ...

      நீக்கு
  7. நல்ல எளிமையான தெளிவான தொடக்கம்..
    அனைத்து தரத்தினருக்கும் புரியும் வகையில்.
    GA

    பதிலளிநீக்கு
  8. இந்தப் பதிவில் இதுவரை பெண்கள் யாரும் கருத்திடவில்லை என்பதே அவர்களை காமம் என்பது பேசக்கூடாத ஒன்று என்ற நிலையில் வைத்திருப்பது புரிகிறது. குடும்பம் முதலான குற்றம் என்பதைவிட பல்வேறு மன அழுத்தங்களுக்கு காரணமாய் இந்தக் காமம் அமைந்திருப்பதை உணர்கிறேன்... உங்கள் எழுத்தின் வழி இன்னம் அறிய நினைக்கிறேன்.. வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பல்வேறு மன அழுத்தங்களுக்கு காரணமாய் இந்தக் காமம் அமைந்திருப்பதை உணர்கிறேன்//

      உண்மை . இந்த மன அழுத்தங்களின் பாதிப்பினால் தான் பல தவறுகள் குற்றங்கள் சமூக அவலங்கள் இன்னும் பிற ஏற்படுகின்றன. குறிப்பாக குடும்பத்தில் மன அழுத்தங்கள் எவரெல்லாம் ஏற்படும் என்பதையும் இந்த தொடரில் வெளி கொணரலாம் என என்பதே எனது நோக்கம் தோழி.

      //காமம் என்பது பேசக்கூடாத ஒன்று என்ற நிலையில் வைத்திருப்பது புரிகிறது// இருக்கலாம் தோழி, ஆனால் தற்போது நிலை கொஞ்சம் மாறி இருக்கிறது என நினைக்கிறேன் .

      தொடர்ந்து தொடரை வாசியுங்கள், உங்களின் கருத்துக்கள் கேள்விகள் தகவல்கள் ஏதும் இருப்பின் தெரிவியுங்கள் , தொடரை நன்றாக எழுத இவை உதவும்.

      அன்புடன் நன்றி எழில்.

      நீக்கு
  9. ஆஹா, தொடருங்கள் சகோ, தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. Hi, mam Neenga soldramadhiri indhamari pesavey koochapaduranga..athanalaye oru pennuku nadakum problem, aasaigal sollama poidaranga... Nan Rommba thitti ketaapram en friend enkita atha sonnal.. avaluku age 27 Avaloda chithipayanku 19 than .. Renduperum ooruku ponal onnagathan thoonguvangalam... avaluku thookam varatham.udala yetho oru matram nadakumnu soldranga. But avaluku Vera place la poi thoonglamnum thonatham.. oru naal ava thoongitaapram andha payan avalai touch panirkan... Aval Ethum teriyathapol thoongaramari nadichirka.. Enakku ketathum aruverupa irundhuchu.. irundhalum pavam ethum sollala Nan.. ava rommba sensitive so.. Avalala atha yethukavum mudila athey samyam avaluku athu pidichurkunu thonuthu.. Aval sonnal ... muslim la chithi ,perima pasangala marriage panipanga... Nan marriage ah pandrom... Enakku thappa terilanu.. Avaluku terilanu ivanum touch panitu irukan... ival ethum sollama thooongugiral.. Enakku teriyathamariye nan katikolgiren engiral.... please Ethathu solution sollunga... ithu sari illanu thonuthu sister

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...