திங்கள், மார்ச் 2

11:10 AM
7

'பிறந்துவிட்டோம் அதனால் வாழ்கிறோம்' என்று நாட்களை கடத்திக் கொண்டிருந்தாலும் 'அடடா ஏன் இப்படி, வாழத்தானே வாழ்க்கை' என்று  கையை பிடித்து இழுத்து வந்து எங்கே சிரிங்க எங்கே ரசிங்க என்று உற்சாகப் படுத்துபவர்கள் சூழ வாழ்வது வரம். அதே வரம் இரட்டிப்பாய் கிடைத்தால் எப்படி இருக்கும் இப்படித்தான் இருக்கும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் எனது குழந்தைகள்.  அரிதாய்  கிடைத்த இந்த வாழ்க்கையின்  ஒவ்வொரு  நிமிடத்தையும்  பெற்றோரை அனுபவிக்க  வைத்து   ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்  !!   

முதல் வரம் 

பிளஸ் 2 படிக்கும் எனது மூத்த மகன் பள்ளியில் 'பிரிவு உபச்சார விழா'விற்காக A Tribute to Teachers  என்ற ஆறு நிமிட வீடியோ ஒன்றை தயாரித்தான். மூன்று நண்பர்களுடன் ஆலோசனை செய்து  கம்ப்யூட்டர் சம்பந்தமான வேலைகளை இவன் செய்து முடித்தான்.சும்மா செய்து பார்ப்போமே என்று செய்த இவனது முதல் முயற்சி  ஸ்கூல் பிரின்சிபால் , ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரின் பாராட்டையும் பெற்றதில் அம்மாவா எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. வீடியோ ரெடி  ஆகும் வரை நாலுபேரை தவிர வேறு யாருக்கும் தெரியாமல் இவர்கள் மறைக்கப் பட்ட பாட்டை நேரில் பார்த்து சிரித்துக் கொண்டே இருப்பேன். ஸ்கூல் எதிரில்  தான் எங்களின் வீடு என்பதால் பசங்க வருவதும் போவதுமாக இருக்கும்.  ஆசிரியர்களின் போட்டோக்களை பழைய குரூப் போட்டோக்களில் இருந்தும்  மாணவர்களின் போட்டோக்களை அவர்களின்  பேஸ்புக்(!) ப்ரோபைலில் இருந்தும் சம்பந்தப்பட்ட இசை, காட்சிகளை நெட்டில் எடுத்தும் இணைத்திருந்தான். தங்களின் போட்டோக்களை பார்த்தவர்களுக்கு ஒரு ஆச்சர்ய சந்தோசம் கூடவே மனதை தொட்ட கான்செப்ட்,  இவனது கையை பிடித்து வாழ்த்தி சந்தோஷத்தில் கத்தி தீர்த்துவிட்டார்கள்.

ஒரு வாரத்தில் பப்ளிக் எக்ஸாம் , அந்த டென்ஷனை குறைக்க இந்த வீடியோ தயாரிப்பு  உதவும் என்பதை போல அவனும் ஜாலியாக இந்த வீடியோ பண்ணிய விதம் எனக்கு ரொம்ப பிடிச்சது. முதலில் சிலைட் ஷோ பண்ண போவதாக இருந்தான், பிறகு என்ன நினைத்தானோ ஒரு கான்செப்டுடன் ஆறு நிமிட விடியோவானது. அதில் புகைப்படம் கிடைக்காமல் விடுபட்ட ஆசிரியர்களுக்கு  சாரி சொன்ன விதம், மூன்று நண்பர்களின் பெயரை சேர்த்தவன் தனது பெயரை (சந்தோஷ்) போடாமல் sam workshop என்று முடித்திருந்தான். காரணம் கேட்டதற்கு 'எதுக்குமா  பேரு, பண்ணினது யாருன்னு யோசிக்கட்டுமே' என்று சிரித்தான்.

 ஸ்கூல்ல ஒரு டீச்சர்,  'பப்ளிக் எக்ஸாம்  வச்சிட்டு இதை பண்ண வீட்டுல எப்டி அலோ பண்ணினாங்க' னு கேட்டதுக்கு 'என் பக்கத்துல உக்காந்து என்கரேஜ் பண்ணுனதே எங்க அம்மாதானே' என்றதும் டீச்சர் அப்படியே சைலென்ட்.  you tube யில் வீடியோவை ராத்திரி  அப்லோட் செய்த மறுநாள் எழுதிய கெமிஸ்ட்ரி மாடல் எக்ஸாமில் 93 சதவீத மதிப்பெண். சந்தோசமாக பரிட்சையை எதிர்க் கொள்ளனும் என்பதற்கு இதை விட வேறென்ன உதாரணத்தை நான் சொல்ல.:-) வீடியோவில்  பப்ளிக் எக்ஸாம் பற்றிய இடத்தில் விஜய் டயலாக் வர சிரிப்பை என்னால் கண்ட்ரோல் பண்ண முடியல. அந்த இடத்திற்கு பொருத்தமாக இருந்தது என்பதை விட அவனது மனநிலை அது என்பது எனக்குதானே தெரியும் :-) (ஒரு வருசமா இந்த பரீட்சையை சொல்லியே  ஸ்கூல் கொடுக்குற டார்ச்சரால எப்படா முடிச்சு தொலைப்போம்னு இல்ல இருக்கிறான்) :-)

நேரம் இருப்பின் வீடியோ பாருங்க.
இன்றைய குழந்தைகளின் ஆர்வம் ஈடுபாடு அலாதியானது தான். அதிலும் நம் பிள்ளை செய்கிறது என்றால் உலகத்திலேயே அதுதானே  ரொம்ப ரொம்ப பெரிசு இல்லையா :-)

இரண்டாவது வரம்

கடந்த வெள்ளிகிழமை(20/2/15)பிறந்தநாள் அன்று ஹாஸ்டலில் நண்பர்கள் போட்டிப் போட்டு பரிசுகள் கொடுத்து வாழ்த்தியதும் சந்தோஷத்தில்  கண் கலங்கி அழுதிருக்கிறான் எங்களின் இளைய மகன் விஷால். கிப்ட்ஸ்  எதையும் பிரிக்காமல் அப்படியே வீட்டுக்கு எடுத்துவந்தவன் என் முன்னால் வேகவேகமாக பிரித்தான். ஒவ்வொரு கிப்டும் வெள்ளை காகிதத்தால் சுற்றப்பட்டு சிகப்பு நிற ரிப்பனால் கட்டப்பட்டிருந்தது.  டியர் விஷால், ஹேப்பி பர்த்டே என்று எழுதி இருந்தவை அனைத்தும் ஓவியம்.  பேக்கிங்கின் உள்ளே இருந்தவை வெறும் பொருளாக எனக்கு தெரியவில்லை ... அங்கே சில பொருட்களின்  வடிவில் அமைதியாக உட்கார்ந்திருந்தது  நேசம் !!  நட்பிற்கு உருவம் கொடுத்தால் அது இப்படி இந்த புகைப்படத்தில் இருப்பதைப் போலத்தான்  இருக்கும் !!

ரெசிடென்சியல் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பரிசு பொருள்கள் வாங்க  கடைகளுக்கு எவ்வாறு செல்ல முடியும். ஆனாலும் தங்களின் நேசத்தை இவ்வாறேனும்  வெளிப்படுத்துவோம் என்று  தங்களிடம் இருக்கும் பொருட்களில் கையில் அகப்பட்டதை எல்லாம் எடுத்து பேக்கிங் செய்து பரிசளித்த அச்சிறு குழந்தைகளின் முன்னால் பெரிய மால்களில் இருக்கும் பொருள்கள் கட்டாயம் தலைகுனிந்துதான் ஆகவேண்டும்.  கிப்ட் கொடுத்ததும் என் மகன் அழுததின் காரணம் எனக்கும் புரிந்தது. ஹாஸ்டலில் இருந்தால் என்ன  நண்பனுக்கு பரிசளித்தே ஆகணும் என்று ரகசியக்கூட்டம் போட்டு முடிவு செய்தபின்னர் என்ன பொருளை கொடுக்க என்றெல்லாம் அதிகம் யோசிக்கவில்லை அவர்கள்... மூன்று நாளாக  அதுவும் என் மகனுக்கு தெரியக்கூடாது சஸ்பென்சாக இருக்கணும் என்று ஒளிந்திருந்து பேக் செய்திருக்கிறார்கள்.

மகன் விடுமுறை முடிந்து ஹாஸ்டலுக்கு சென்றபின் தான், இந்த பொருட்களை  மறுபடி எப்போது பார்த்தாலும்  அழகிய அத்தருணம் அவனுக்கு நினைவுக்கு வருமே என்று போட்டோ எடுத்தேன்.  முன்பே இந்த யோசனை இருந்தால் பிரிக்கும் முன்பே எடுத்திருக்கலாம்.பேக்கிங்கை அவ்வளவு அழகாய் நேர்த்தியாய் செய்திருந்தார்கள்   ஆறாவது  மட்டுமே படிக்கும் அச்சிறு குழந்தைகள் !!

ஹாஸ்டலுக்கு ஒவ்வொரு திங்கள்கிழமை மாலையும் போன் செய்து நமது குழந்தையுடன் பேசலாம்...   அவ்வாறு என் மகனுடன் பேசும்போதெல்லாம் தவறாமல் இரண்டு எண்களையாவது கொடுத்து 'இந்த நம்பருக்கு போன் பண்ணி அவங்க பையனுக்கு உடனே போன் பண்ண சொல்லுங்க, ரொம்ப நேரமா வெயிட் பண்றான் என் பிரெண்ட்' என்பான் அக்கறையுடன். பொருள் தேடும் அவசரத்தில் ஹாஸ்டலில் இருக்கும் குழந்தையிடம் பேசணும் என்பதையே மறந்துவிடுகிறார்களே பெற்றோர்கள்.

பொருளின் பின்னே ஓடி ஓடி ஒருநாள் திரும்பிப் பார்க்கும் போது அங்கே நம்  குழந்தைகள் இருக்க மாட்டார்கள், நம் குழந்தைகளின்  சாயலில் வளர்ந்த ஒரு இயந்திரம் அங்கே  இருக்கும், கூடவே முதியோர் இல்லத்திற்கான முகவரியும்...!!  இதை புரிந்துக் கொண்டால் குழந்தைகளுடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் கொண்டாடுவோம். நமது குழந்தைகளுடன் இருக்கும் நேரத்தை எவ்வளவு விலை  கொடுத்தாலும் மீண்டும்  வாங்கவே  முடியாது.  நமது எல்லா வேலைகளையும் விட மிக மிக முக்கியம் குழந்தைகளுடன் நாம் செலவழிக்கும் கொஞ்சம் நேரம்  மட்டுமே.

'இருபது பேருக்கு மேல் இருக்கும், உங்க மகனுக்கு வந்த பரிசுகளைப் போல இங்க வேற யாருக்கும் இப்படி நடக்கல' என்று ஹாஸ்டல் வார்டன் என் கணவரிடம் ஆச்சர்யப் பட்டதை அறிந்ததும்  இத்தனை பேரின் அன்பை சம்பாதித்த மகனை இழுத்து அணைத்துக் கொண்டேன்.  சக மனிதர்களை நேசிக்கும் இந்த ஒரு பண்பு போதும் படிப்பு பணம் புகழ் அனைத்தும் தானாகவே  அவனிடம் மண்டியிட்டு விடும்.  

பையனின் பிறந்தநாளுக்கு நான் எழுதிய போஸ்ட் பார்த்து  கமெண்ட்ஸிலும் பேஸ்புக் இன்பாக்சிலும் போன் செய்தும் வாழ்த்திய நட்புகளின் அன்பில் நெகிழ்ந்து விட்டேன். அதிலும் போனில் அழைத்து  'போஸ்ட்ட  காலைல போடுறத விட்டுட்டு, போடவா வேண்டாமான்னு சாயங்காலம் வரைக்கும்  யோசிச்சி போட்டிங்களாக்கும்' என்று  என் தலையில் நறுக்குனு குட்டிய அன்பு நண்பர், எனது மகனின் வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து அவனை வாழ்த்தி மகிழ்ந்த அன்பு நண்பர் கே.ஆர்.பி.செந்தில்   போன்றவர்களை பெற்றிருக்கிறேன் என்பதை விட இந்த வாழ்க்கையில் சந்தோசம் வேறென்ன இருக்கப் போகிறது.அன்புள்ளங்கள் சூழ வாழ்வது வரம் !! ஆம்... வாழ்தல் இனிது !!!


பிரியங்களுடன்
கௌசல்யா ...

Tweet

7 கருத்துகள்:

 1. இனிமை...

  எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
 2. வீடியோ சூப்பர்...உங்க மகனுக்கு எனது வாழ்த்துக்கள்...கொடுத்து வைத்த ஆசிரியர்கள் ...

  ரொம்ப கியூட் gift ...மகிழ்வான தருணங்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழி...

   நீக்கு
 3. அன்புள்ள சகோதரி,

  பிளஸ் 2 படிக்கும் தங்களின் மூத்த மகன் பள்ளியில் 'பிரிவு உபச்சார விழா'விற்காக A Tribute to Teachers என்ற ஆறு நிமிட வீடியோ ஒன்றை தயாரித்ததைக் காணொலிக் காட்சியில் கண்டு வியந்து போனேன். தங்கள் மகனை ஊக்குவித்த உங்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். காணொளிக் காட்சி மிகவும் நன்றாக அமைந்திருந்தது! செல்வன் SAM -மிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  வீடியோவை ராத்திரி அப்லோட் செய்த மறுநாள் எழுதிய கெமிஸ்ட்ரி மாடல் எக்ஸாமில் 93 சதவீத மதிப்பெண்.... பிள்ளைகளின் விருப்பத்திற்கு இடம் கொடுத்தால் அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் படிப்பில் கவனம் செலுத்துவார்கள் என்பதற்குத் தங்களின் மகன் ஓர் உதாரணம். நம் பிள்ளை செய்கிறது என்றால் உலகத்திலேயே அதுதானே ரொம்ப ரொம்ப பெரிசு இல்லையா ... கண்டிப்பாக... உண்மை...உண்மை!

  ‘ பிறந்தநாள் அன்று ஹாஸ்டலில் நண்பர்கள் போட்டிப் போட்டு பரிசுகள் கொடுத்து வாழ்த்தியதும் சந்தோஷத்தில் கண் கலங்கி அழுதிருக்கிறான் எங்களின் இளைய மகன் விஷால்’- இதுதான் ஆனந்தக் கண்ணீர்!

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆழ்ந்த வாசிப்பிற்கும் வருகைக்கும் என் அன்பான நன்றிகள் சகோதரரே

   நீக்கு
 4. தாமதமாகததான் வருகிறேன் என்றாலும்
  “ஈன்றபொழுதில் பெரிதுவக்கும்..“
  நன்றி.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...