புதன், மார்ச் 4

11:24 AM
16


பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை சுற்றிலும் இருக்கிறவங்க  ஏன் இப்படி கொலைவெறி புடிச்சு அலையுறாங்கனு நிஜமாவே எனக்கு புரியல. எந்த பேப்பரை பிரிச்சாலும் டிசைன் டிசைனா அறிவுரைகள்  ஆலோசனைகள் !  வேர்ல்ட் கப் கிரிக்கெட் பைனல், இந்தியா பௌலிங்க்னு வச்சுகோங்க, ஒரு விக்கெட் விழுது அந்த நேரம் நம்மாளுங்க வலது கைல ரிமோட் இருந்துச்சுனு வைங்க , மேட்ச் முடியுற வரை கை வலிச்சாலும் ரிமோட்ட கையை மாத்தாம கீழ வைக்காம இருக்குறது... கூப்டாலும் திரும்பாம சேர்ல கம் போட்டு ஒட்டுன மாதிரி அசையாம இருக்குறது......அப்டி இப்டி ஏகப்பட்ட  short time சென்டிமென்ட்ஸ் இருக்கும்.  அதுக்கு சிறிதும் குறைந்ததில்லை.... இன்றைய மாணவர்களை எல்லோரும்  படுத்தும் பாடு. 




தேர்வை தைரியமாக எதிர்க் கொள்ள வழிமுறைகள் என்று  ஒரு பெரிய லிஸ்ட்... இந்த வழிமுறைகளை பின்பற்றினால் டன் கணக்கில் தைரியம் கிடைச்சு மலையை பொறட்டி தூக்கி அடுத்தவன் தலைல  போட்டுடலாம்னா பார்த்துக் கோங்க என்பதை போன்ற ஓவர் பில்டப்க்கள் !! 

அப்புறம் பெற்றோர்களே இது உங்களுக்கு நல்லா கவனியுங்க -  இருக்குற அத்தனை காய்கறியையும் முக்கியமா பாவக்காய விட்டுடக்கூடாது அப்டியே அரைச்சு உப்பு மிளகு போட்டு பசங்க காலைல எழுந்ததும் கொடுங்க... குடிச்சதும் மூளை அப்டியே ஜிவ்னு உஷாராகி போன ஜென்மத்து ஞாபகத்தையே கொண்டு வரும் அப்புறமென்ன சும்மா ஒரு டைம் வாசிச்சு விட்டா போதும் மூளை அப்படியே கபால்ன்னு புடிச்சுக்கும்.  அப்புறம் காரத்தை சுத்தமா குறைங்க... எண்ணெய் 2 ஸ்பூனுக்கு மேல நோ நோ தான், ஆவில வேக வச்சதுனா பெட்டர்  -  தேர்வு நேர சமையல் குறிப்புகள் என்று  ஒரு லிஸ்ட். 

மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்வது எப்படி  என்ற மனநல மருத்துவரின் அறிவுரைகள் ஆலோசனைகள் வேறு. யோகா தியானம் எதையும் விட்டுடக் கூடாது...  இப்படி பொதுத்தேர்வை மையப் படுத்தி பக்கம்பக்கமாக எழுதி இருக்கிறார்கள்... அப்பப்பா தலை உடம்பு எல்லாம் சுத்தறது!  ஏற்கனவே பெற்றோர்கள் ஒரு வருஷமா பிபி மாத்திரையும் கையுமா இருக்காங்க, அது போதாது என்று இந்த ஊடகங்கள் வேறு பீதியை கிளப்பி பெற்றோர்களை அதிக மன உளைச்சலுக்கு ஆளாக்க அவங்களும் அதை அப்படியே தங்களின் குழந்தைகளின் மீது காட்ட பிள்ளைகளின் நிலையோ மனநோய் பீடித்த நிலை. 

இதெல்லாம் விட ஒரு பெரிய கொடுமை என்னனா மாணவ மாணவிகளை மொத்தமா கோவில்ல  உக்கார வச்சு, லிட்டர் கணக்குல நெய்யை ஹோம குண்டத்துல கொட்டி யாகம் வளர்க்குறாங்க... இந்து பேப்பரில் வந்த  போட்டோவை பார்த்தால் மாணவிகளின் கண்களில் பக்தியை விட பயம்தான் தெரிகிறது. மிரண்டு போய் இருக்கிறார்கள். அப்புறம் ஒரு கூட்டம் மாணவ மாணவர்களை நிக்கவச்சு கண்ணை மூட சொல்லி பரிசுத்த ஆவியை நேரா அவங்க மேல இறக்குறாங்க ... இன்னொரு பக்கம் சர்வ மத பிரார்த்தனை என்று ஊர் ஊருக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதை போல நடந்துக் கொண்டிருக்கிறது.  

இப்படி சுத்தி சுத்தி ஆளாளுக்கு மாணவர்களுக்கு பயத்தை, பதட்டத்தை வரவழைச்சுட்டு  கடைசியா அசால்ட்டா கொடுப்பாங்க பாருங்க ஒரு லெக்சர், பரிட்சையில் தோல்வி அடைந்தாலும் தற்கொலை செய்துக் கொள்ளாதீர்கள்...  படிப்பு ஒன்றுதான் வாழ்க்கை இல்லை என்று அப்டியே ஒரு பல்டி! இவ்வளவு நாள் நீங்களாம் எங்கடா இருந்திங்க, தேர்வுக்கு முன்னாடியே ஊர் உலகத்தை கூப்ட்டு மேடை போட்டு இதை சொல்லவேண்டியதுதானே . அப்பலாம் விட்டுட்டு ஒரு உயிர் போனதும் உண்மையை இப்டி கொட்டுறிங்களே என்று கத்த தோணும். சரி இப்போவாவது தெளிஞ்சுதேனு சந்தோசப்பட முடியாது... மறுபடி அடுத்த வருஷம் பழையபடி முதல்ல இருந்து ஆரம்பிப்பாங்க......

இந்த ஆர்பாட்டங்களை எல்லாம் பாக்கறப்ப எனக்கு நாலு தடவை விஷம் குடிச்சு ஆறு தடவை தூக்குல தொங்கி பத்து தடவை ரயில முன்னாடி பாய்ஞ்சுனு  மாத்தி மாத்தி தற்கொலை பண்ணிக்கணும் போல இருக்கு. ஏ சமூகமே ஏ பள்ளிக்கூடமே ஏ அரசே ஏ அவனே ஏ இவனே என் இந்த குழந்தைகளை இவ்ளோ கொடுமைப்படுத்துரிங்க. பாவம் விட்டுடுங்க இன்றைய மாணவர்களை !!! பிளஸ் 1 பாடமே நடத்தாமல் பிளஸ் 2 பாடத்தை இரண்டு வருடமாக படிக்க வைத்து எப்போது பொதுத் தேர்வு வரும், முடித்துத் தொலைக்க என அவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் ...

ஒரு நிறுவனத்தில் உயர் அதிகாரியா வேலை பாக்குற என் தோழி தனது பிளஸ் 2 மகளின் தேர்வை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு முன்னாடியே லீவ் போட்டு மகளின் அருகில் அமர்ந்து படி  படி என்றபடி  இருக்கிறாள். மாற்றாந்தாய் கொடுமைனு  சொல்வாங்களே அதை இப்ப  என் தோழியின்  வீட்டில்  பார்க்கலாம்.

பள்ளிக்கூடமும், வீடு, சமூகமும் கொடுக்கும் மன அழுத்தங்களால் ஒவ்வொரு மாணவனும் ஒரு மனநோயாளிப் போலவே காட்சியளிக்கிறார்கள். மாணவிகள் ஓரளவு பரவாயில்லை, மௌனமாக சமாளித்து விடுகிறார்கள் ஆனால் மாணவர்கள் நிலைதான் மிக பரிதாபம்.  வீட்டில் இருந்து மூச்சுத்திணறி வெளியே வந்தால் தெருவில் போற வர்றவங்க எல்லாம் அட்வைஸ் கொடுக்க ஆரம்பிச்சுடுறாங்க.... மூணு பேர் சேர்ந்து நின்றாலே படிக்குற பசங்களுக்கு ரோட்ல என்ன வேலை என விரட்டப் படுகிறார்கள்...  வீடு பள்ளி சமூகம் எல்லாம் துரத்த வேறு எங்கே செல்வார்கள் ... யோசிங்க !?

நேத்து பேப்பரில் பார்த்தேன். பொதுத்தேர்வு நடக்குற பள்ளிக் கூடங்களில் நடமாடும் மருத்துவக் குழு ஒன்று சகல ஏற்பாடுகளுடன் தயாராக நிற்குமாம். இந்த காட்சியை பார்த்துட்டு உள்ள போற மாணவி வினாத்தாளை கையில் வாங்கியதும் மயங்கி விழாமல் இருந்தால் ஆச்சர்யம் !! 

பெற்றோர்களே !

எல்லாம் என் குழந்தைகளின் நல்லதுக்கு தானே என்று உங்களின் பைத்தியக்கார செயலுக்கு நியாயம் கற்பித்துக் கொள்ளாதீர்கள்... இந்த ஒரு வருடத்தில் அவர்கள் தொலைத்த குழந்தைத்தனம் சந்தோசம் நிம்மதியை உங்களால் திருப்பிக் கொடுக்க முடியுமா? கண்ணுக்கு தெரியாத எதிர்காலத்திற்காக நிகழ்கால ஜடங்களாக மாற்றிவிடாதீர்கள். 

இதோ நாளை தேர்வு... இப்போதும் இத படிச்சியா அத நோட் பண்ணிக்கோ என்று ஆளாளுக்கு படுத்தி எடுக்காதீர்கள் பிளீஸ்... இத்தனை நாளா அவங்களை வளைச்சு வளைச்சு  கண்காணிச்சுட்டு இருந்தது போதும்...  இனிமேலாவது  சுதந்திரமா  விடுங்க ... இறுக்கம் தவிர்த்து  பிரீயா மூச்சு விடட்டும்... அப்போதுதான் படித்தவரை  சரியாக எழுதமுடியும்... தேர்வை விட நமக்கு நம் குழந்தைகள் முக்கியம் மறந்துவிடாதீர்கள் !!!   

நாளைக்கு பிளஸ் 2 தேர்வை எழுதப் போகும் மாணவர்களுக்கு நாம் சொல்லக் கூடியது ஒன்றே ஒன்றுதான்... 

'படிச்சிருக்கிறோம் எக்ஸாம் எழுதப் போறோம்' என்ற மனநிலையோடு  மட்டும் சந்தோசமாக தேர்வை  எதிர்க் கொள்ளுங்கள் ... என் அன்பு வாழ்த்துக்கள் !!! 



Tweet

16 கருத்துகள்:

  1. பெயரில்லா11:51 AM, மார்ச் 04, 2015

    well said, our days we never given like this

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா5:18 AM, மார்ச் 05, 2015

    அதுவும் அனைவரும் கச்சை கட்டிக் கொண்டு Feb மாதத்தில்தான் ஆரம்பிப்பார்கள். எல்லா தொலைக் காட்சிகளும் இப்போதுதான் நிகழ்ச்சிகள் தருகிறார்கள்.மாணவர்களும் இப்போதுதான் எதை படிக்கலாம் என்று கேட்கிறார்கள்.
    ஒரு முன்னாள் ஆசிரியை என்ற முறையில் நான் அனைவரிடமும் சொல்லி விட்டேன்.
    இந்த நிகழ்ச்சிகளை August , December என்ற மாதங்களில் நடத்துங்கள்.அதை விட கொடுமை, வருபவர்கள் தவறான விளக்கங்களை சொல்கிறார்கள். கல்வித் துறை கலர் ச்கெட்ச் பயன்படுத்தக் கூடாது.கட்டம், பார்டர் கட்டக் கூடாது என்றெல்லாம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஒரு ஆசிரியை ஒரு பிரபல சேனலில் ஆஹா தாராளமாக highlight செய்யலாம் கலரில் கட்டம் கட்டலாம் என்று சொல்கிறார்.
    ஒரு மாணவனை 10 கணக்குகள் மட்டும் மனப்பாடம் செய்ய வைத்து 200 மதிப்பெண்கள் பெற வைத்திருக்கிறோம். ஆனால் அவன் கிண்டி கல்லூரியில் படித்தான். மேற்கொண்டு என்ன நடந்திருக்கும் என்று புரிந்து கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. அதானே ஆளாளுக்கு ஒன்றை சொன்னால் என்னதான் செய்வார்கள்...

      கல்வித்துறையிலும் பள்ளிகளிலும் நிறைய குழப்பங்கள் நிறைய தவறுகள் ......இவை என்று சரியாகும் என்று தெரியவில்லை.

      மிக்க நன்றி உங்களின் கருத்தை இங்கே பகிர்ந்ததுக்கு ...

      நீக்கு
  3. அருமையாக... சரியாக... மிகச் சரியாகச் சொன்னீர்கள்...

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான தொகுப்பு ...தேர்வு என்பதை போர் என மாற்றி விட்டனர் ...........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போரிலாவது எதிரி யாரென்று தெரியும்... ஆனால் இன்றைய தேர்வுகளில் கல்வித்துறை, பள்ளி, பெற்றோர் , சமூகம் என்று ஏகப்பட்ட மறைமுக எதிரிகள் !!

      நன்றி தோழி.

      நீக்கு
    2. வருத்தமான உண்மை ...........

      நீக்கு
  5. அருமை சகோதரியாரே
    இன்றைய கல்வித் துறையானது
    தவறான திசையில்
    மதிப்பெண்ணே இலக்கு என்ற
    இலட்சியத்துடன்
    தவறான பாதையில்
    மிக வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது
    ஓடி விளையாடு பாப்பா என்று பாடுவான் பாரதி
    ஏது நேரம்?
    மகிழ்ச்சியைத் தொலைத்து விட்டு மதிப்பெண்ணைப் பெற்று
    என்ன பயன்

    பதிலளிநீக்கு
  6. அருமை. ஆலோசனை அறிவுரைகள் என்ற பெயரில் மாணவர்களை படாத பாடு படுத்துகிறார்கள். முன்பு நன் தேர்வு பரபரப்பை வைத்து ஒரு பதிவு எழுதி இருந்தேன்
    அதற்கு நீங்கள் போட்டிருக்கும் இதே படத்தைதான் போட்டிருந்தேன்
    தேர்வு வந்துடிச்சி! டென்ஷன் ஏறிடிச்சி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ அப்படியா? அவசியம் படிக்கிறேன்.

      வருகைக்கு நன்றிகள்

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...