புதன், மார்ச் 18

11:58 AM
9

வீட்டுத்தோட்டம் போடுவதே ரசாயன உரத்தில் இருந்து தப்புவதற்கு தான். அதனால் காய்கறி தோட்டத்துக்கு வேதி உரம் எதையும் வாங்கி போட்டுடாதிங்க. உரம், மருந்து , வளர்ச்சி ஊக்கி என அனைத்தையும் இயற்கை முறையில் நாமே தயாரிக்கலாம்.

இயற்கை உரம் என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது மாடு!! அடடா சிட்டியில் மாட்டுக்கு எங்க போகனு கேட்கிறீங்களா? மாட்டின் பயன்பாடு  தெரிந்துவிட்டால் எங்கே கிடைக்கும் என்று அந்த இடங்களை தேடிச் சென்று விடுவீர்கள். அவை கிடைக்கும் வாய்ப்பு பெற்றவர்கள் அது தொடர்பான முறைகளையும் இயலாதவர்கள் அது தவிர்த்த வேறு முறைகளை கையாளலாம், அதில் ஒன்றுதான் சமையலறை  கழிவுகள்  உரம். இந்த வீட்டுத்தோட்டம் தொடர் 'சுலபமாக' தோட்டம் போடுவதை பற்றியது என்பதால் கையில்/அருகில்  கிடைப்பதை வைத்தே சிறப்பாகச் செய்ய முயற்சி செய்வோம். 

Compost bin - Khamba
கிச்சனில் சேரும் காய்கறிக் கழிவுகளை இதில் போடவேண்டும். மூன்று பாகமாக இருக்கும் இதில் முதலில் மேலே உள்ள பாகத்தில் செய்தித்தாளை விரித்து அதன் மீது கழிவுகளை போட்டு வாருங்கள். கழிவுகள் போடப் பட்டதும் மற்றொரு செய்தித்தாளை கழிவுகளின் மேல் விரித்து khamba மூடியை மூடுங்கள். ஒரு பாகம் நிரம்பியதும் அப்படியே தூக்கி கீழ் பாகமாக வைத்துவிட்டு காலியாக இருப்பதை மேலே வைத்து இப்போது இதில் கழிவுகளை சேகரியுங்கள். மிச்ச இரண்டும் நிரம்புவதற்குள் முதலில் போடப்பட்டது உரமாகியிருக்கும்.  பொதுவாக உரமாக மாற  மூன்று  மாதம் ஆகும்.

khamba இல் காய்ந்த இலைச் சருகுகள், காய்கறிக்  கழிவுகள் போன்றவற்றை போடலாம்.  முடிந்தால் வாரம் ஒரு முறை ஒரு சிறிய குச்சியால் கழிவுகளை கிளறிவிடுங்கள். கழிவுகளில் maggot எனப்படும் சிறு புழுக்கள் உருவாகும், இவைகள் தான் கழிவுகளை மக்க வைப்பவை. உரமாகியதும் இவை பெரும்பாலும் மடிந்துவிடும் அல்லது flies ஆக மாறி வெளியேறிவிடும். kampa முறையில் காய்கறிக்கழிவுகளை உரமாக்குவதால் bad smell ஏதும் இல்லை.Khambaவில் உரம் தயாரிக்க  சில டிப்ஸ்

* மரத்தூளும் தேங்காய் நார் கழிவும்(coco peat)  காய்கறிக்கழிவில் உள்ள  அதிக நீரை எடுத்துக் கொண்டு உரமாவதை துரிதப் படுத்தும். எனவே இவற்றில் எது கிடைத்தாலும் வாங்கி கழிவுகளின் மீது தூவி விடுங்கள்.

* உரமாவதை துரிதப் படுத்த புளித்த தயிர் / பஞ்சகவ்யா/ தண்ணீரில் கரைத்த சாணம் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

* maggots அதிகம் இருந்தால் அதன் உற்பத்தியை கட்டுப்படுத்த சிறிதளவு வேப்பந்தூள் அல்லது மிளகாய்த் தூளை தூவலாம்.

* உரம் அதிக ஈரமாக இருந்தால் நிழலான இடத்தில் இரண்டுநாள் உலர்த்தலாம்.

* கழிவுகளை மேல் விளிம்பு வரை போட்டு அடைக்கக் கூடாது, காற்று செல்ல வசதியாக சிறிது இடம் இருக்க வேண்டும்.

* உரத்திற்கு நைட்ரஜன் (சமையலறை கழிவுகள்) கார்பன்(காய்ந்த இலைகள்) இரண்டும் தேவை... இலைகள் கிடைக்கவில்லைஎன்றால் பழைய செய்தித்தாள் (கிழித்து தண்ணீரில் நனைத்தது) உபயோகிக்கலாம்.

* காய்கறி, பழக் கழிவுகளை அப்படியே போடாமல் பெரிய துண்டுகளை சிறிதாக்கி போடுங்கள்.  

மூன்று மாதம் கழித்து உரம் தயாராகியதும் கடைகளில் கிடைக்கும் vegitable basket(துளைகள் உள்ளது) வைத்து  உரத்தை சலித்து எடுத்து சேமித்து வைத்து தேவைப்படும்போது உபயோகிக்கலாம். Khamba கிடைக்க வாய்ப்பில்லாதவர்கள் மண் பானையை பயன்படுத்துங்கள். அதில் காற்று உள்ளே செல்ல சிறு துளைகளை கவனமாக ஏற்படுத்தவேண்டும். இரண்டு துளைகள் போடமுடிந்தாலும் போதும். (சந்தேகம் இருந்தால் கமெண்டுங்க அல்லது மெயிலுங்க)

செடிகள்  செழிப்பாக  வளர ...

* காலாவதியான மாத்திரைகளை தூள் செய்து போடலாம். உபயோகம் இல்லாத டானிக், சிரப் போன்றவற்றை தண்ணீரில் கரைத்து ஊற்றலாம்.(பூச்செடிகளுக்கு மட்டும்)


* வீட்டில் சேகரமாகும் டீத்தூள் தவிர அருகில் டீக்கடை இருந்தால் அவர்களிடம் ஒரு பிளாஸ்டிக் பக்கெட் கொடுத்து அதில் உபயோகித்த டீத்தூளை போடச்சொல்லுங்கள். (கடைக்காரர் நண்பராக இருந்தால் வசதி) :-)

* அதே  மாதிரி பரோட்டா கடையில் ஒரு பிளாஸ்டிக் பையை கொடுத்து வைத்தால் முட்டை ஓடுகளை வாங்கிக்கொள்ளலாம். இதை தூள் செய்து போடலாம்.கால்சியம் சத்து செடிகளுக்கு அவசியம். 

முள்ளங்கி  

* வாழைப்பழத்தோல் சிறந்த உரம். காயவைத்து துண்டுகளாக கட் பண்ணி மிக்ஸியில் போட்டு தூளாக்கி செடிகளுக்கு தூவலாம். முக்கியமாக தக்காளிக்கு அவசியம் போடவேண்டும். செடிகளுக்கு தேவையான  பொட்டாசியம் சத்தை இது கொடுக்கும்.

* அரிசி ஊறவைத்த/கழுவும் நீரையும், சாதம் வடித்த நீரை ஆறவைத்தும்   ஊற்றலாம். 

* கடைகளில் கடலைப் பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு என்று கிடைக்கும். அதை வாங்கி அப்படியே நொறுக்கி போடலாம், ஊறவைத்து கரைத்தும்  போடலாம். ஒரு செடிக்கு ஒரு ஸ்பூன் அளவு என்று வைத்துக் கொள்ளுங்கள்.

* ஒவ்வொரு செடிக்கும் ஒரு ஸ்பூன் எப்சம் சால்ட்டை தண்ணீரில் கரைத்து ஊற்றலாம். இந்த சால்ட் மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

மீன்கழிவில் இருந்து வளர்ச்சி ஊக்கி

மீனை  சுத்தப்படுத்தியதும் வீணாகும் மீன் கழிவை சேகரித்து  (கடைகளில் கிடைக்கும்) அதே அளவிற்கு வெல்லம் சேர்த்து ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் போட்டு அதன் மூடியால்  டைட்டாக  மூடி விடுங்கள். இரண்டு நாள் கழித்து திறந்து லேசாக கிளறி விடுங்கள். பிறகு மறுபடியும் நன்றாக மூடி அப்படியே வைத்துவிடுங்கள். bad smell இருக்கவே இருக்காது.  இருபது நாட்கள் கழித்து எண்ணெய் போன்று மேலே மிதப்பதை வடித்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். மீன் வளர்ச்சி ஊக்கி ரெடி.  ஒரு லிட்டர் வளர்ச்சி ஊக்கி, பத்து லிட்டர் தண்ணீர் (1:10) சேர்த்து செடிகளுக்கு தெளிக்கவும், செடி அருகில் ஊற்றவும் செய்யலாம். தேவைப் படும்போது தயாரித்து பயன்படுத்துங்கள்.

பிளாஸ்டிக் கவரில் முட்டைகோஸ் 
படித்ததை அனுபவத்தில் அறிந்து, பயன்பெற்று இங்கே பகிர்கிறேன். எல்லோருக்கும் எல்லாம் வசதி படவில்லை என்றாலும், வீட்டுத்தோட்டம் தொடரில் சொல்லப்பட்டிருப்பதில் உங்களுக்கு சௌகரியப்படுவதை மட்டும் பார்த்துக்கொண்டால் போதுமானது.

நேரம் இருந்தால் வீட்டுத் தோட்டம் பற்றிய இந்த வீடியோ பாருங்க...
   
http://www.youtube.com/watch?v=FBmLZ0zwu88

நான் Khamba வை கோயம்புத்தூரில் வாங்கினேன். இதை பற்றிய விவரங்கள் தேவையென்றால் கோவை தெலுங்குப் பாளையத்தை சேர்ந்த திரு. ராஜேந்திரன் அவர்களை தொடர்புக் கொள்ளுங்கள் அவரின் மொபைல் எண் : 9944309603.

ஆன்லைனில் வாங்க பிளீஸ் கிளிக் - www.dailydump.org

Happy Gardening ...


பிரியங்களுடன்
கௌசல்யா
mail id : kousalyaraj10@gmail.com

படங்கள் - எங்கள் பால்கனி தோட்டத்தில் எடுத்தவை Tweet

9 கருத்துகள்:

 1. மிகவும் பயனுள்ள + பசுமையாக மனதில் பதியும் அழகான பதிவு. பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 2. பார்க்கவே பரவசம்... உங்களின் ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 3. பயனுள்ள பதிவு. தொடரட்டும் சேவை மேன்மேலும். நன்றி

  பதிலளிநீக்கு
 4. Thanks madam. I try the suitable one and contact you with you feed back.

  பதிலளிநீக்கு
 5. நல்ல தகவல். தகவலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...