Thursday, June 28

11:51 AM
30

ஒரு சமுதாயம் படித்த ஆண்களையும் படிக்காத பெண்களையும் கொண்டிருந்தால் முன்னேற்றம் அடைவதென்பது இயலாத காரியம். பெண் கல்வியே சமுதாய முன்னேற்றத்திற்கு சிறந்த வழி - பாரதியார்


மொத்த மக்கள்தொகையில் பாதிக்குபாதி இருக்கும் பெண்கள் கல்வி அறிவில் முன்பை விட இப்போது முன்னேற்றமான நிலையில் இருக்கிறார்கள் என முழுமையாக நிறைவு கொள்ள இயலவில்லை...காரணம் கல்வி நிலையங்களில் மாணவிகள் அனுபவிக்கும் சங்கடமான ஒரு பிரச்சனை. வெளியே பேசவே கூடாத ஒன்று  என்ற நிலை என்று மாறும் தெரியவில்லை...!!


2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக்கணக்கின் படி இந்தியளவில் படித்த பெண்கள் 65%. இது 2001 ஆம் ஆண்டு இருந்ததை விட 12% அதிகமாகும். அதே சமயம் 8 ஆம் வகுப்பில் படிப்பை விட்டு விலகும் பெண்களின் எண்ணிக்கை அதிகம். இதற்கு குடும்ப சூழ்நிலை மட்டும் காரணம் அல்ல பள்ளியில் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பான கழிப்பறையும், தண்ணீர் வசதியும் இல்லாதது !!? இந்தியாவில் உள்ள அரசு சார்ந்த அனைத்து வகையான பள்ளிகளிலும் 51% பள்ளிகளில் டாய்லெட் வசதியே  இல்லை. 74% பள்ளிகளில் தண்ணீர் வசதி இல்லையாம். இதனாலேயே 7 & 8 ஆம் வகுப்பு மாணவிகளில் (வயதுக்கு வந்துவிடுவதால்) 7% மாணவிகள் பள்ளியை விட்டு நின்று விடுகிறார்கள் என்ற காரணத்தை ஒரு செய்தியாக எண்ணி கடந்து போக முடியவில்லை.

பள்ளிகளில் கழிப்பறை எவ்வளவு இன்றியமையாதது என்பதில் சிறிதும் அக்கறை இன்றி இருக்கின்றன பள்ளி நிர்வாகமும், அரசும்...!  கிராம, நகர  தெருவோரங்கள் அசிங்கப்படும் அவல நிலைக்கு முக்கிய காரணம் ஆரம்ப பள்ளியில் கழிப்பறை பற்றிய கவனத்தை,விழிப்புணர்வை மாணவர்கள் மனதில் பதிய வைக்க தவறியதே...??!! கழிப்பறை இல்லாத அல்லது இருந்தும் சுகாதாரமற்ற பள்ளிகள் எவ்வாறு மாணவ, மாணவிகளுக்கு இதை பற்றிய விழிப்புணர்வை போதிக்கும்...?! நல்லவைகளின் ஆரம்பம் பள்ளி என்பது திரிந்து சமூக ஒழுங்கீனங்களின் ஆரம்பம் பள்ளிகள் என்றாகிவிட்டதோ...??!

ஏற்படும்  பிரச்சனைகள்

இன்றைய தினத்தில் நாள் ஒன்றுக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்...ஆனால் பள்ளி செல்லும் நம் குழந்தைகளோ சுகாதாரமற்ற கழிவறை பக்கம் போக தயங்கியே நீர் அருந்துவதில்லை...காலையில் வீட்டில் இருந்து கிளம்பும் அவர்கள், மீண்டும் வீடு வந்தபின்னே சிறுநீர் கழிக்கிறார்கள்...இவ்வாறு சிறுநீர் வெளியேறாமல் இருப்பதால் கிட்னி பாதிப்படைய கூடிய வாய்ப்பு இருக்கிறது...தண்ணீர் அருந்தாமல் தவிர்ப்பதால் வயிற்று கோளாறுகளுக்கு ஆளாக்கி விடுகிறார்கள். சுகாதாரமற்ற கழிப்பறையை பயன்படுத்துவதின் மூலம் நோய்தொற்று ஏற்பட்டு கருப்பப்பை பாதிப்படைவதுடன் வெள்ளைபடுதல், மலட்டுத்தன்மை உள்ளிட்ட அது தொடர்பான பல்வேறு துன்பங்களையும் அனுபவிக்க நேரும் என சொல்கிறார்கள்.
.
பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் போது இதை பற்றி அவசியம் விசாரிக்கவேண்டும்...சங்கடமின்றி 'அந்த மூன்று நாட்களை' கடந்து போக கூடிய அளவிற்கு அங்கே பாத்ரூம் வசதி இருக்கிறதா ?! அது சுத்தமாக இருக்கிறதா? இன்னும் சொல்ல போனால் தாய் அந்த இடத்திற்கு சென்று பார்த்து வரலாம்...அங்கே ஏதும் சரியில்லை என்றால் பள்ளி நிர்வாகத்திடம் சரி பண்ண சொல்ல வேண்டும். 

அரசின் இலவச சானிடரி நாப்கின்

தற்போது தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் வளர் இளம் பெண்களுக்கு சானிடரி நாப்கின் கொடுப்பதாக அறிவித்திருக்கிறது. பாராட்டப்பட வேண்டிய நல்ல விஷயம்...அதே நேரம் பெண்கள் பள்ளிகளில்/கல்லூரிகளில்  கழிப்பறை வசதி சரியான விதத்தில் இருக்கிறதா என அரசு கவனித்து நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும். கட்டாயம் எடுத்தாக  வேண்டும் !!

மாணவிகளின்  தவறு அல்ல !

மாணவிகள் உபயோகித்தப் பின் சானிடரி நாப்கின்களை நல்ல முறையில் டிஸ்போஸ் பண்ண வேண்டும். ஆனால் சரியான முறைப்படி செய்ய இயலாததால் டாய்லெட் மற்றும் கழிவு நீர் செல்லும் குழாய்களில் அவை அடைத்து கொண்டு பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடுகிறது...அகற்றுவதற்கு ஆள் கிடைப்பதில்லை. அடைத்து கொண்டதை அகற்ற தாமதமாகும் ஒவ்வொரு மணி நேரமும் சுகாதார கேடு  அதிகரிக்கிறது.

பள்ளி நிர்வாகம் இது குறித்து மாணவிகளிடம் கண்டிக்கும் நிலையில் அவர்கள் அந்த நாட்களில் பள்ளிக்கு செல்வதையே தவிர்த்துவிடுகிறார்கள்...இங்கே தவறு மாணவிகளிடம் இல்லை, பள்ளி நிர்வாகத்திடம் இருக்கிறது.


பள்ளி மாணவிகளை பொறுத்தவரை மாதம் தோறும் அல்லாமல் 2, 3, வெகு சிலருக்கு 5 மாதங்களுக்கு ஒரு முறை தான் மாதவிடாய் நிகழுகிறது...அது போன்ற சமயத்தில் அதிக அளவில் ரத்தபோக்கு இருக்கலாம். கிராமத்து மாணவிகளை பொறுத்தவரை துணியை பயன்படுத்துவார்கள், அதிகபடியான ரத்தபோக்கால் பெரும் அவதிப்பட நேரும். ஒரு நாள் முழுவதும் துணி அல்லது நாப்கின் மாற்றாமல் வகுப்பில் இருப்பது வெகு சிரமம். பிறருக்கு தெரியும் படி ஒருவேளை இருந்துவிட்டால் அதனால் ஏற்படக்கூடிய அசுயை, அவமானம் (?) போன்றவை அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும். உடல் ரீதியிலான பாதிப்புகளுடன் உளவியல் பாதிப்புக்கும் ஆளாகிறார்கள்...

உபயோகித்த நாப்கின்களை அகற்ற சரியான வழிவகை செய்தாக வேண்டும்.

என்னதான் வழி?!

2011 ஆம் ஆண்டு திருப்பூர்  ஜெய்வாபாய் நகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திரு. A.ஈஸ்வரன் என்பவர் மாணவிகள் சந்திக்கும் இத்தகைய பிரச்னைக்கு என்ன வழி என தீர யோசித்து ஒரு வழிமுறையை கண்டுபிடித்து வெற்றியும் பெற்று இருக்கிறார். பலரின் பாராட்டையும் பெற்று உள்ளார். இப்படியொரு வித்தியாசமான முயற்சியை பாராட்டி 1997 ஆம் ஆண்டு மங்கையர் மலர், மகளிர் சிந்தனை, மாலை மலர் போன்ற பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. செய்தி கேள்விப்பட்ட திருப்பூர் பகுதிகளில் உள்ள மில் கல்லூரிகளில் இருந்து வந்து இதை பார்வை இட்டு சென்று தங்கள் இடங்களிலும் அமைத்துள்ளனர். தற்போது தொழில் ரீதியாக மின்சாரம், எல்.பி.ஜி கேஸ் போன்றவை பயன்படுத்தி தயாரித்து பெண்கள் கல்லூரி பள்ளிகளுக்கு விற்று வருகிறார்கள்...!

அப்படியென்ன  கண்டுபிடிப்பு ?!

பழைய இரும்பு டிரம்மை சில மாற்றங்கள் செய்து புகை போக்கியுடன் கூடிய பாய்லராக வடிவமைத்து வைத்து அதன் இரு புறமும் 2 பாத்ரூம்களை கட்டி இருக்கிறார். பாத்ரூம் செல்லும் மாணவிகள் சிலிண்டரில் உள்ள சிறிய திறப்பானைத் திறந்து உபயோகபடுத்திய துணியை/நாப்கினை போட்டு விடலாம். பள்ளி முடிந்த மாலை நேரம் பாய்லரின் கீழேயுள்ள கதவைத்திறந்து மண்ணெண்ணெய் சிறிது ஊற்றி எரித்து விடலாம். புகை போக்கி மூலமாக புகை வெளியேறி விடும்...!


மத்திய அரசின் RMSA திட்டம் மூலமாக பெண்கள் பள்ளிகளில் கழிப்பறை கட்ட பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்...வெறும் கழிப்பறை மட்டும் கட்டுவதை விட இது போன்ற பாய்லர்களையும் சேர்த்து கட்ட தமிழக அரசும், கல்வித்துறையும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


ஆணென்ன ? பெண்ணென்ன ?

மாணவன் , மாணவி யாராக இருந்தாலும் வீட்டில் இருப்பதை விட பள்ளிகளில் தான் அவர்களின் பெரும்பாலான நேரம் கழிகிறது. அவர்களின் ஆரோக்கியத்திலும் பள்ளிகள் அக்கறை காட்டவேண்டும். ஒரு நாளைக்கு பள்ளி செல்லும் சிறுமி/சிறுவன் இரண்டு கிளாஸ் நீர் அருந்துவதே அதிகம். பெற்றோர் கொடுத்துவிடும் தண்ணீரையும் குடிக்காமல் மீதம் எடுத்து வருகிறார்கள்...கேட்டால் தண்ணீர் குடிக்க டைம் இல்ல, ஏதாவது ஒரு சாக்கு. இதை பெற்றோர்கள் நாம் கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாது. குழந்தைகளை தயங்காமல் தண்ணீர் அதிகம் குடிக்க சொல்லுங்க...பள்ளியில் இருக்கும் கழிவறை சம்பந்தப்பட்ட பிரச்னையை குழந்தைகள் சொல்ல மாட்டார்கள் நாம் தான்  அக்கறை எடுக்கவேண்டும்...தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளை அணுகி கழிவறை வசதிகள் எவ்வாறு இருக்கிறது என விசாரித்து கவனியுங்கள்.

பெண் குழந்தைகள் என்றால் மேற்கூறிய பாய்லர் பற்றி பள்ளிகளுக்கு எடுத்து கூறுங்கள். படிப்பில் மட்டும் அக்கறை கொள்ளாமல் அவர்களின் ஆரோக்கியத்திலும் சிறிது கவனம் கொள்ளுங்கள்.

                                                                  * * * * * * * * *

 தகவல்,படங்கள்  உதவி 

- நன்றி திரு. A. ஈஸ்வரன்,
  http://jaivabaieswaran.blogspot.in/2010/04/blog-post_14.html
                                   
  மற்றும் இணையம் Tweet

30 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...